ரகசிய கள்வர்கள், பிளேடு கத்தியில்லாமல் திருட்டு, தடுமாறும் காவற்துறை அங்கங்கு சிக்கும் ஏ.டி.எம்.திருடர்கள்..
இப்போ தெரிகிறதா இவர்கள் யாரென்று?
பேருந்து, தொடர்வண்டி கூட்ட நெரிசலிலோ அல்ல பொது இடங்களில் அலைமோதும் கூட்ட நெரிசலிலோ பர்ஸில் பணம் வைத்தால் 'பிக்பாக்கெட்' அடித்துவிடுவார்கள் என பர்ஸில் நூறோ, ஐநூறோ வைத்துக்கொண்டு பணம் தேவைப்படும் பொழுது ஏ.டி.எம்.பணப்பரிவர்த்தனை சேவை மையங்களை பயன்படுத்துபவர்களே அதிகம். படித்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஏ.டி.எம் சேவையை பயன்படுத்துகின்றனர் என்றால் அதை மறுக்கவே இயலாது.
காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் மாற அச்சுழற்சியில் நாமும் பயணப்படுவது தவறல்ல. ஆனால் ஒரு சேவை தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாம், அதை பாதுக்காப்பான முறையில் எப்படி பயன்படுத்துவது என்ற அறிய முற்படுவதில்லை. இதுவே டிஜிட்டல் களவாணிகளுக்கு சாதகமாக மாறி நமக்கு பாதகமாக ஆகிவிடுகிறது. இது போன்று 'ஏ.டி.எம்' சேவை மட்டுமல்லாது அனைத்து பணப்பரிவர்த்தனை தொழில்நுட்ப சேவைகளை எப்படி பாதுக்காப்பாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே இது போன்ற டிஜிட்டல் களவாணிகளிடம் நாம் நம் பணத்தை காத்துக் கொள்ள முடியும்.
ஏ.டி.எம் சேவை இயந்திரத்தை உடைத்து பணம் திருடுவது, ஆளில்லாத ஏ.டி.எம்.களில் தங்கள் கைவரிசையை காட்டுவது, இரவு நேரம் பணம் எடுப்பவர்களை நோட்டமிட்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, இந்த திருட்டு முறை எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது 'டிஜிட்டல் களவாணிகள்'பயன்படுத்தும் டிஜிட்டல் திருட்டு முறைகள் லெபானிஸ் லூப் ( LEBANESE LOOP ),கார்ட் ஸ்கிம்மிங் ( CARD SKIMMING ), பிசிங் ( PHISHING ) போன்றவை தான்.
'லெபானிஸ் லூப்' என்ற முறையில் நீங்கள் ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஏ.டி.எம்'அட்டையை சொருகும் இடத்தில் ஒரு கருவியை வைத்து விடுவார்கள், வழக்கம் போல் நீங்கள் பணமெடுக்க 'ரகசிய குறியீட்டு எண்ணை (பாஸ்வோர்ட்) அடித்து இவ்வளவு பணம் தேவை என்றால் பணமும் வராது,அட்டையும் வராது. உடனே படபடப்பாகி என்ன செய்யலாம் என்று விழித்து கொண்டுள்ள தருணத்தில் முன்பின் அடையாளம் தெரியாதவன் உதவி செய்வதை போல் வந்து பேச்சுக்கொடுத்து உங்கள் 'ரகசிய குறியீட்டு எண்ணை'அறிந்துக்கொண்டு நீங்கள் மன குழப்பத்துடன் 'ஏ.டி.எம்'மையத்திலிருந்து கிளம்பியதும்,அந்தக் கருவியை எடுத்துவிட்டு மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுவான் உங்களுக்கு உதவ வந்த டிஜிட்டல் களவாணி.
'கார்ட் ஸ்கிம்மிங்'முறையில் ஒரு போலி 'ஏ.டி.எம்'இயந்திரத்தை நிறுவிவிட்டு அதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ள பணம் எவ்வளவு,ரகசிய குறியீட்டு எண்,ஏ.டி.எம்.அட்டையின் எண் என அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்ட 'இணைய வழி (ஆன்லைன்) பணப்பரிவர்த்தனை ' வழியிலோ அல்லது போலி ஏ.டி.எம் அட்டையை தயாரித்து அதன் வாயிலாகவோ சுருட்டி விடுவார்கள் அதிநவீன கள்வர்கள்.
அடுத்து குறிப்பிடும் முறை 'டிஜிட்டல் களவாணிகளின்'புதிய முறை மட்டுமல்லாது இது இந்த திருடர்களின் 'அப்டேடெட்' திருட்டு முறை. இது உட்கார்ந்த இடத்திலிருந்தே மின்னஞ்சல் மூலம் உங்கள் வங்கி கணக்கின் ரகசிய விவரங்களை உங்களிடமிருந்தே உருவும் எளிய முறை.எப்படி என்கிறீர்களா ? வங்கியிலிருந்து மின்னஞ்சல் அனுப்புவது போல் இந்த திருடர்கள் மின்னஞ்சலில் உங்கள் வங்கி கணக்கின் விவரங்களை கேட்பார்கள், நீங்கள் அதை நம்பி விவரங்களைக் கொடுத்தால் அவ்வளவுதான். எளிதாக வெற்றி பெறும் அவர்கள் களவு வேலை.
அடுத்தது திருட்டு முறையெல்லாம் இல்லை 'ஆன்லைன் பேங்கிங்' என்ற பணப்பரிவர்த்தனை சேவை வழியாகவே ஆட்டைய போட்டுவிடுவார்கள். அதுவும் உங்கள் தவறாலே நிகழக்கூடியது. இந்த சேவையை 'பிரௌசிங் சென்டரில்' நீங்கள் பயன்படுத்தினால் 'கீ லாக்கர்' என்ற மென்பொருள் மூலம் அட்டை எண், ரகசிய குறியீட்டு எண்களை எடுத்து விடுவார்கள் இல்லையெனில் ரகசிய குறியீட்டு எண்களை நினைவில் வைத்துக்கொள்ள அந்த இணைய உருளையில் (இன்டர்நெட் பிரௌசர்) அமைப்புகளை உங்களுக்கு தெரியாதவாறு மாற்றி வைத்திருப்பார்கள்.
இப்போ புரிகிறதா நீங்கள் செய்யும் தவறு என்னவென்று ?
இந்த டிஜிட்டல் களவாணிகளிடம் இருந்து தப்புவது தான் எப்படி? இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள் :
பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆளில்லாத அநாந்தர ஏ.டி.எம்-மை பயன்படுத்துவதை தவிருங்கள்.பெரும்பாலும் உங்கள் ஏ.டி.எம் அட்டையை மற்றவர்களிடம் கொடுத்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதை தவிர்க்க பாருங்கள்.
விளையாட்டாக நண்பர்களிடமோ அல்லது அலைபேசியிலோ ரகசிய குறியீட்டு எண்களை பொது இடங்களில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடன் பயணிப்பவர்கள் / உங்கள் அருகில் இருப்பவர்கள் கூட டிஜிட்டல் களவாணிகளாக இருக்கக்கூடும்.
ஏ.டி.எம்.இயந்திரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு அட்டை மாட்டிக் கொண்டால் விட்டுவிட்டு வேற அட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று கிளம்பிவிடாதீர்கள். அங்குள்ள ஏ.டி.எம் காவலாளியை அணுகி உடனுக்குடன் வங்கிக்கு இப்பிரச்னையை தெரிவித்து அந்த அட்டையை முடக்கச் சொல்லுங்கள். இரவு நேரங்களில் இப்படி ஏதேனும் பிரச்னை ஏற்படுமாயின் வங்கியின் '24 மணிநேர சேவை தொலைபேசி எண்ணுக்கு (டோல் ப்ரீ நம்பர்)'தொடர்பு கொள்ளுங்கள். இந்த டோல் ப்ரீ தொலைபேசி எண் ஏ.டி.எம். இயந்திரத்திலேயே ஒட்டப்பட்டிருக்கும்.
நீங்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது யாராவது உங்களை பின்புறம் வரிசையில் நிற்பதுபோல் நோட்டமிட்டால் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை ஏ.டி.எம்.யில் பதிவு செய்யும்போது முகம் தெரியாத நபர்கள் அருகில் இருப்பதை கவனத்துடன் தவிர்த்து விடுங்கள்.
அதிகமாக 'ஏ.டி.எம்'மை பயன்படுத்துபவர்கள் வாரம் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றிக் கொண்டே இருங்கள். இதனால் உங்கள் அட்டை திருடு போனால் கூட பாதுகாக்கும் வழியுண்டு. உங்கள் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தினால் உங்கள் அலைபேசிக்கு(மொபைல்) குறுஞ்செய்தி வரும்படி உள்ள சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரகிசய குறியீட்டு எண்ணை அமைக்கையில் வங்கி அறிவுறைத்தது போல் 'நம்பர்ஸ்,சிம்பல்ஸ்,லெட்டர்ஸ்' எல்லாம் கலந்து அமையுமாறு மாற்றிக்கொள்ளுங்கள். இது 'இணைய வங்கிசேவை( ஆன்லைன் பேங்கிங்)' உபயோகிப்பவர்களுக்கு மிக மிக அவசியம் என்பதை உணருங்கள்.
மேலும் இது போன்று வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். எந்தவொரு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த தெரிந்தால் மட்டும் போதாது அதையும் அதன் சூட்சமைங்களையும் அறிந்தால் மட்டுமே இது போன்ற டிஜிட்டல் களவாணிகளிடம் இருந்து தப்ப முடியும். நாம் எதார்த்தமாக செய்யும் தவறே அவர்களுக்கு வரம் ஆகிவிடுக்கூடும்.
ஜாக்கிரதையாக இருந்தால்.. உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்.. உழைத்த பணம் உங்களிடத்தில்.!
|
No comments:
Post a Comment