Thursday, December 30, 2010

கூகிள் வாய்ஸ் அறிமுகம்

மிகவும் உபயோகமான பல்வேறு சேவைகளை இணையத்தில் வழங்கி வரும் கூகுளின் மற்றுமொரு சேவைதான் கூகிள் வாய்ஸ் (Google Voice).அது குறித்து ஓரளவுக்கு அறிமுகம் கொடுக்கும் வண்ணமே இந்த இடுகை.  உங்களிடம் உள்ள தொலைபேசிகளை ஒருங்கிணைத்து பல சிறந்த வசதிகளை இந்த சேவை வழங்குகிறது. 

ஒப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ஜிமெயில் போன்றதொரு சேவைதான். மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியை குரல் வழி அனுப்ப முடியும். உங்களிடம் உள்ள பல தொலை பேசிகளுக்கு ஒரே எண்ணை கூகிள் வாய்ஸ் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் இந்த சேவையில் உண்டு. 

செய்திகளை உங்கள் குரல்வழி பதிவு செய்து மெயிலாக அனுப்பலாம். அனுப்பபடுகிற வாய்ஸ் மெயில்களை கேட்கலாம். தரவிறக்கலாம். வாய்ஸ் மெயில்கள் எழுத்துகளாக transcript செய்யப்பட்டு அவற்றை மெயில் போன்று வாசித்து கொள்ளவும் முடியும். இவை உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ்சாக வந்து சேரும்படியும் அமைத்து கொள்ளலாம்.


இதனை உபயோகிக்கும் போது உங்களுக்கென்று தனியே போன் நம்பர் போன்று கூகிள் வாய்ஸ் எண் பெற்று கொள்ள முடியும். இதனை உங்கள் தொலைபேசி, மொபைல் போன்களுடன் தொடர்பு படுத்தி கொள்ள முடியும்.உதாரணத்திற்கு உங்களை தொடர்பு கொள்வதற்கு வீட்டு தொலைபேசி, அலுவலக தொலைபேசி, மொபைல் என்று மூன்று எண்கள் இருப்பதாக கொள்வோம். இந்த மூன்று எண்ணையும் உங்கள் கூகிள் எண்ணுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடியும்.

உங்களை அழைப்பவர் உங்கள் கூகிள் எண்ணுக்கு அழைக்கும் போது உங்களுக்கு உள்ள மூன்று போன்களிலும் ரிங் அடிக்கும். அல்லது உங்கள் கூகிள் எண்ணில் தொடர்பு கொண்டால்  காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை உங்கள் அலுவலக போனில் அழைப்பு (Ring) வரும்படியும், மற்ற நேரங்கள் உங்கள் வீட்டு போனில் தொடர்பு (Ring) கொள்ளும்படியும் உங்கள் கூகிள் எண்ணில் செட்டப் செய்து கொள்ளலாம்.

உங்கள் நண்பர்கள் அழைக்கும் போது மட்டும் மொபைல் எண்ணில் அழைப்பு வரும்படி அமைத்து கொள்ளலாம். வேண்டாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை நிரந்தரமாக தடை செய்துகொள்ளும் வசதியும் உண்டு. உங்கள் மூன்று போன்களில் எந்த போன் வழியாகவும் கூகிள் வாய்ஸ் மூலம் மற்றவர்களை அழைத்து கொள்ள முடியும்.

நாம் எப்போதும் ஒரே தொலைபேசி எண்ணை வைத்திருப்போம் என்று உறுதியாக கூற முடியாது. தொலைபேசி நிறுவனங்கள் சலுகையுடன் சிறப்பான சேவை வழங்கும் போது அடிக்கடி எண்ணை மாற்றி மற்றொரு சேவைக்கு மாறி கொண்டிருப்போம். இதனால் நமக்கு நிரந்தர தொடர்பு எண் என்பது இயலாத விஷயம். இதற்கும் ஒரு தீர்வு கூகிள் வாய்ஸ் எண்.

நீங்கள் ஆயுளுக்கும் நிரந்தர எண்ணாக கூகிள் வாய்ஸ் எண்ணை வைத்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் தொலைபேசி எங்களை மற்றும் போது அவற்றை கூகிள் வாய்சில் மாற்றினால் போதுமானது. உங்கள் கூகிள் வாய்ஸ் எண்ணுக்கு அழைக்கும் அழைப்புகள் உங்கள் கொடுத்துள்ள புதிய தொலை பேசி எண்ணுக்கு தானாக மாற்றி விடப்படும்.

கூகிள் வாய்ஸ் மூலம் உலகமெங்கும் தொலைபேசிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து கொள்ள முடியும். உங்கள் கூகிள் எண் மூலம் இலவச எஸ்எம்எஸ் அனுப்ப, பெற முடியும். தொலைபேசி பேச்சுக்களை பதிவு (Record) செய்து ஆன்லைனில் சேமித்து கொள்ள முடியும்.

தொலைபேசிகளில் உங்களை அணுக முடியாதபோது 'I am Mr.X .. Please leave your message' என்று அழைப்பவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி பொதுவாக அமைத்து கொள்ள முடியும். ஆனால் கூகிள் வாய்ஸ் மூலம் ஒவ்வொரு அழைப்பாளருக்கும் ஏற்றபடி தனிப்பட்ட செய்தியை தெரிவிக்கும்படி உங்களால் அமைத்து கொள்ள முடியும்.

கூகிள் வாய்சை உங்கள் கணினி மூலமும், இணைய இணைப்பு உள்ள மொபைல் போன் மூலமும் உபயோகித்து கொள்ள முடியும். கூகிள் வாய்ஸ் வசதிகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோக்களை பாருங்கள்.


தற்சமயம் கூகிள் வாய்ஸ் பொது பயன்பாட்டுக்கு வழங்கப்பட வில்லை. சிறப்பு அழைப்பு (Invite) மூலமாகவே நீங்கள் அதனை சோதித்து கொள்ள முடியும். அதுவும் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இப்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. கூகிள் வாய்ஸ் அழைப்பு (Invite) பெற இந்த சுட்டிக்கு செல்லவும். 

தரை - ஒரு விமானப் பார்வை



முதலில் ரேடார் ( RADAR, Radio Detection And Ranging) தொழில்நுட்ப வல்லுநர்கள். வான் போக்குவரத்து நிலைமை மற்றும் மேககூட்டங்களின் அடர்த்தி குறித்து ரேடார் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருட்கள் உதவியுடன் நொடிக்கு நொடி ஒரு படம் போல் தருவித்து கொடுப்பவர்கள்.



அடுத்து அப்படத்தின் உதவியுடன் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள் வான்பரப்பில் எத்தனை விமானங்கள் ப்றந்து கொண்டிருக்கின்றன, எவையெல்லாம் தங்கள் வான்பரப்பைக் கடந்து வேறு இலக்குக்குப் பயணிக்கப் போகின்றன, எவையெல்லாம் தரையிறங்கப் போகின்றன, அவ்வாறு தரையிறங்கப் போகும் விமானங்களுக்கு ஓடுபாதையை ஒழுங்குபடுத்தி கொடுப்பது மற்றும் விமான நிலையத்தில் இருந்து வெளிக்கிளம்பும் விமானங்களுக்கு மேலெழும்பும் வண்ணம் அவர்களுக்கு ஓடுபாதை வழங்குவது என அனைத்து வேலைகளையும், நேரம் கடத்தாமல் செய்து முடிப்பவர்கள் 'வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள்' (Air Traffic Control- ATC officers ).

விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறையாலோ, விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாலோ அல்லது சமீபத்தில் வாசிம் அக்ரமின் மனைவிக்கு விமானத்தில் பறக்கும் போது உடல்நிலைக் குறைவால் அவசர சிகிச்சைத் தேவைப்பட்டது போன்ற சூழ்நிலைகளிலோ விமானிகள் முதலில் தொடர்பு கொள்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தான். இது போன்ற அவசர கால சூழ்நிலைகளைத் தெரிவிப்பதற்கென்றே குறியீட்டு எண்கள் உள்ளன (emergency squawk code) விமானிகள் முதலில் இந்த குறியீட்டு எண்களைத் தெரிவித்ததுமே கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளைக் கையாள்வார்கள்.

ஒவ்வொரு நாட்டுக்கும் நிலப்பரப்பில் எல்லைகள் இருப்பது போல வான்பரப்பிலும் எல்லைகள் உண்டு. அவற்றுக்கு வரைபடங்களும் உண்டு, அதில் நிலவரைபடத்தில் உள்ளது போல ஓவ்வொரு இடங்களுக்கு பெயர்கள் உண்டு. பெரும்பாலும் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும் (Navigation Points), அந்த இடங்களை இணைக்கும் கோடுகள் தான் வான் வழிகள் (air routes). இந்த Navigation pointகளின் பெயர்களுக்கு நிலப்பரப்பில் இருக்கும் பெயர்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இல்லாதிருக்கும், அவற்றைக் கடக்கும் விமானங்கள் இந்த கோடுகளிலேயே பயணிக்கும். உலக அளவில் இவற்றைக் கண்காணித்து நெறிப்படுத்தும் பணியினை மேற்கொள்ள International Air Transport Association (IATA) என்ற அமைப்பு உள்ளது.ஓவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலுள்ள விமான நிலையங்களின் விபரங்கள் அவற்றின் குறியீட்டுப் பெயர்கள் (உ.தா. chennai - MAA) ம்ற்றும் தங்கள் வான்பரப்பின் வரைபடங்களை Navigation points & Air routes விபரங்களோடு IATA விடம் சமர்ப்பித்து, அவர்களின் அனுமதியோடு அந்தந்த நாடுகளில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும்.


மேற்கூறிய அனைத்து விபரங்களையும் ஒன்றுபடுத்தி வான் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளுக்கு அடிப்படை ரேடார் மற்றும் வானில் உள்ள போக்குவரத்து நிலைகளைக் காட்சிப்படுத்தி தரும் சிறப்பு மென்பொருட்களைக் கொண்ட கணினிகளும் தான்.



சராசரியாக இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும். இவை விமான நிலையத்திற்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு கோபுரத்திற்கும் வெகு அருகில் நிறுவப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும்பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (வானூர்திகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது விமானங்களின் இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இத்தகவல்களனைத்தையும் ஒருங்கிணைத்துப் படமாகத் தருவது Operational Control Program எனப்படும் மென்பொருள். இந்த மென்பொருளில் குறிப்பிட்ட விமான நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வான்பரப்பின் வரைபடம் (navigation points & air routes) , ஒடுபாதைகள், இடங்களின் பெயர்கள் ஆகியவை உள்ளிடப்பட்டிருக்கும். இந்த வரைபடத்தில் ரேடார் தரும் தகவல்களின் படி விமானங்கள் அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கில் பறந்து கொண்டிருப்பது போன்ற காட்சியினை அளிக்கும். இவற்றை மொத்தமாக பார்க்கும் காட்சி தான் மேலே உள்ள படம் (படத்தைக் க்ளிக்கி பெரிது படுத்திப் பார்த்தால் விமானங்களின் நகர்வுகளைக் காணலாம்).



ஒவ்வொரு விமானத்திற்கும் தனக்கென பிரத்யேகமாக அழைப்புக் குறியீடு (Call Sign - உ.தா. BAW10H) இருக்கும். இந்த அழைப்புக் குறியீடு, தான் தரையிறங்க வேண்டிய இடம், அவசர கால குறியீட்டு எண்கள் போன்றவற்றை வானலைகள் மூலம் ஒலிபரப்பி விமான நிலையத்தின் ரேடாருக்கு அனுப்பும் வேலையைச் செய்வது ACARS Aeronautic Communications and Reporting System. இதன் மூலம் தான் ஒரே விமானத்தை ஒவ்வொரு சுற்றிலும் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ரேடார் அடையாளம் கண்டுகொள்கிறது.

இவற்றைத் தவிர விமானத்தில் அவசர காலத் தொடர்பிற்கு செய்மதி தொலைபேசி SATCOM (Satellite communications to a land based telephone system) , அருகிலிருக்கும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தைத் தொடர்பு கொள்ள மிக உயர்நிலை வானொலித் தகவல் தொடர்பு சாதனங்கள் (VHF Radios), வானில் சக விமானங்களோடு மோதிக் கொள்ளாமல் தவிர்க்க Traffic alert and Collision Avoidance System (TCAS) எனப்படும் சிறிய ரேடார் ஒன்றும் செயல்பாட்டில் இருக்கும்.

விமானிகள் விமானத்திலுள்ள ரேடியோ கருவிகள் மூலம் அருகாமையிலுள்ள விமானங்களுக்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கும் தொடர்பு கொண்டு பேச முடியும். இந்த உரையாடல்கள் அனைத்தும் மற்றும், விமானத்தின் உயரம், அகலாங்கு, நெட்டாங்கு, தட்பவெட்ப நிலை, அனைத்துக் கருவிகளின் இயங்குநிலை ஆகியவை cockpit voice recorder மற்றும் flight data recorder (famously referred as blackboxes which are either red or yellow in color) ஆகியவற்றில் பதிவாகிக் கொண்டே இருக்கும். அதேபோல ஒவ்வொரு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்திலும் அனைத்து அதிகாரிகளின் உரையாடல்களும் 24 மணி நேரமும் பதிவாகிக் கொண்டே இருக்கும், பணியில் தவறு செய்பவர்கள் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை.

Operational Control Program எனப்படும் மென்பொருளை உபயோகிக்கும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தாங்கள் விரும்பும் விமானங்களை தேர்வு செய்து கொண்டு வழிநடத்துவார்கள். ஒரு அதிகாரி தேர்வு செய்ததும், மற்றவர்களுக்கு அந்த விமானத்தை தேர்வு செய்த விபரம் கணினியில் தெரிவிக்கப்படும். ஒரு விமானத்தை ஒரே நேரத்தில் இருவர் தேர்வு செய்ய முடியாது. இவர்களுக்கு ஆங்கிலப் புலமை அத்தியாவசியம். விமானிகள் நமிதாவின் தமிழ் போன்ற ஆங்கிலத்தில் பேசினால் கூட புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர விமான நிலையம் இருக்கும் இடத்தின் பூர்வீக மொழி விமானி மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி இருவருக்கும் தெரிந்திருந்தால் பேச அனுமதியுண்டு.

கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமானிகளின் வேலைக்குத் தேவையான வசதிகளுக்கோ அல்லது கவனத்திற்கோ சிறு பாதிப்பு வந்தாலும் விளைவு, நூற்றுக்கணக்கான உயிர்கள். உதாரணத்திற்கு 1996ல் தில்லி விமான நிலையம் அருகே சவுதி அரேபியாவின் விமானமும், கசகசஸ்தான் விமானமும் நேருக்கு நேர் மோதி 300க்கும் மேற்பட்ட பயணிகள்,விமானிகள் என அனைவரும் மரணமடைந்தனர். பெரும்பாலும் விமானப் போக்குவரத்து ஒரளவுக்கு அதிகம் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும், மேலெழும்புவதற்கு தனித்தனி வான்பகுதியை உபயோகப்படுத்துவர். இப்போதும் கூட சில சமயங்களில் விமானம் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு எதிர் திசையில் மேலேழும்பி, குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் அப்படியே விமானம் திரும்பி பறப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் அப்பொதைய கால்கட்டத்தில் தில்லி விமான நிலையம் ஒரே ஒரு வான் பகுதியை தரையிறங்கவும், மேலெழும்பவும் பயன்படுத்தி வந்தது, காரணம் பெரும்பான்மையான வான்பகுதி விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதன் காரணத்தால் மேலெழும்பிய சவுதி அரேபிய விமானமும், தரையிறங்க வந்த கசகசஸ்தான் விமானமும் ஒரே வான் பகுதியில் சந்தித்து கொண்டன.

கட்டுப்பாட்டு அதிகாரிகள் இரண்டு விமானங்களும் 14 மைல்கள் தொலைவில் இருக்கும் போதே நிலைமையை உணர்ந்து இரண்டு விமானிகளுக்கும் தெரியப்படுத்தினார்கள். இதில் ச்வுதி அரேபிய விமானி எச்சரிக்கப்பட்டவுடன் தனது பறக்கும் உயரத்தைக் குறைத்தார், இருந்தாலும் ஆங்கிலம் புரியாத காரணத்தால் கசகச்ஸ்தான் விமானியும் உயரத்தைக் குறைக்க, கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குக் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனது போல் தெரிந்தும் விபத்தைத் தடுக்க முடியாமல் போனது. எல்லாம் நடந்து முடிந்த பின்னர் இந்தியா வழக்கம் போல விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து தில்லி விமான நிலையத்தை விரிவு படுத்தி ரேடார்களை நவீனப்படுத்தியது. ரேடார்களை நவீனப் படுத்தியதற்குக் காரணம் பொதுவாக ரேடாரில் Primary & Secondary என்னும் இரு ரேடார் கருவிகள் இருக்கும். இதில் secondary radar தான் விமானங்களின் உயரத்தை துல்லியமாகக் கணிக்கும். விபத்து நடந்த காலம் வரைக்கும் நம்து தில்லி விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெறும் primary radar மட்டுமே வைத்துக் கொண்டு, எதிரே பெரிய லாரி வரும் போது "என்ன மஞ்சள் கலரு கொடியே புடிச்சிக்கிட்டு ஒரே கூட்டம் கூட்டமா போறாய்ங்கெ"ன்னு ஒரு குத்துமதிப்பாகவே தங்கள் வேலையைச் செய்தது விசாரணையில் அம்பலமாகி விபத்துக்கு அதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.



கடந்த இரண்டு பதிவுகளில் ஓரளவுக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் விடுபடாமல் சொல்லியிருக்கிறேன் என நம்புகிறேன். எனவே அடுத்த முறை விமானப்பயண்ம் போகும் போது என்ன விமானத்தில் பறக்க போகிறீர்கள், அந்த விமானத்தில என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன, ஏறும் மற்றும் இறங்கும் விமான நிலையங்களின் ரேடார் விபரங்கள், எத்தனை வான்பகுதிகள், ஓடுபாதைகள் உபயோக்கின்றார்கள் இப்படி பலதரப்பட்ட விவரங்களைத் திரட்டிக் கொண்டு மனதளவில் தயாராகப் பயணிக்கவும்.

தங்கள் எதிர்கால விமானப்பயணங்கள் அனைத்தும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.
--

தேடுபொறிகள் (SEARCH ENGINES) எப்படி செயல்படுகின்றன?.

இணையம் என்பது கிட்டத்தட்ட மேல்திருப்பதி மாதிரி. நாம் தேடும் மொட்டைத்தலையைக் கண்டுபிடிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அந்த கஷ்டமான வேலைக்குத் தோள் கொடுக்கும் தோழன் தான் தேடுபொறிகள் (search engines). தேடுபொறிகள் (SEARCH ENGINES) எப்படி செயல்படுகின்றன?. தேடுபொறிகள் தங்களுக்கென பிரத்யேகமான அட்டவணையைப் பராமரித்து வருகின்றன. அந்த அட்டவணையில் இணையத்தளங்களின் உரல்களும், அவற்றின் குறிச்சொற்கள் மற்றும் பொதுத்தகவல்கள் ஆகியவை சேமிக்கப்பட்டிருக்கும். நாம் தேடுபொறிகளில் தேடும் போது பயன்படுத்தும் சொற்கள் எந்தெந்த இணையத்தளத்தின் குறிச்சொற்களுடன் ஒத்துப்போகிறதோ அவற்றைத் தான் நாம் தேடல் முடிவுகளாகக் காண்கிறோம்.

இந்த தேடல் முடிவுகள் ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் தான் அளிக்கப்படுகின்றன. எப்படி? ஒவ்வொரு இணையத்தளத்தையும் தேடுபொறிகள் மதிப்பீடு (site rank) செய்து வரிசைப்படுத்துகின்றன. இந்த மதிப்பீடு ஒரு இணையத்தளத்தின் சராசரி வருகையாளர் எண்ணிக்கை, பக்கங்களின் கட்டமைப்பு, குறிச்சொற்களுக்கும் பக்கங்களின் தகவல்களுக்கும் உள்ள தொடர்பு, மற்ற தளங்களில் இருந்து தொடர்புக்கு கொடுக்கப்படும் உரல்கள் ஆகியவற்றை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. sms ஜோக்குகளுக்கு நடிகர் விஜய் எவ்வளவு முக்கியமோ அதைவிட இணையத்தளங்களுக்கு வருகையாளர்கள் முக்கியம். இன்றைய இணையப்பயன்பாட்டில் பெரும்பாலான வருகைகள் தேடுபொறிகள் மூலமே கிடைப்பதனால் இணையத்தில் குறிச்சொற்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

தேடுபொறிகள் பார்வையில் ஒரு இணையத்தளம் எவ்வாறு தெரியும்?. உரல்களும், குறிச்சொற்களும் சேர்ந்த ஒரு கலவையாக மட்டுமே பார்க்கப்படும். அதனால் தான் ஒவ்வொரு இணையத்தளத்திற்கும் குறிச்சொற்கள் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பொருட்களைச் சந்தைப்படுத்தும் இணையத்தளங்களுக்கு இவைதான் உயிர். இணையத்தளத்திற்கு சரியான குறிச்சொற்களைத் தேர்ந்தெடுத்தல், இணையத்தளத்தின் பக்கங்களுடைய தொடர் கட்டமைப்பு (sitemap) மற்றும் தேடுபொறிகளின் முடிவுகளில் முதல் இடத்தை அல்லது குறைந்த பட்சம் முதல் பக்கத்திலாவது இடம்பிடிப்பது போன்ற வேலையைச் செய்வதற்கென்றே ஒரு துறை இருக்கிறது (search engine optimization).

இங்கு இணையத்தளங்கள் என்று குறிப்பிடப்படும் வார்த்தையில் ப்ளாக்கர் பதிவுகளும் அடங்கும். அம்மா என்றால் அன்பு என்பது போல தேடுபொறி என்றால் முதலிடத்தில் கூகுள் இலகுவாக வந்து நிற்பது தவிர்க்கமுடியாத ஒன்று. கூகுள் இணையத்தளம் ஒரு நாள் முடக்கப்பட்டால் இணைய உலகம் உடுக்கை இழந்தவன் கைபோல் தவித்துப் போய்விடும் அளவுக்கு இணையத்தில் கூகுளின் வீச்சு அதிகம். ஒரு ப்ளாக்கர் பதிவராக உங்கள் பதிவுகளும் தேடுபொறிகளில் நல்ல இடத்தைத் துண்டு போட்டு பிடிக்க என்ன செய்வது? முக்கியமாக கூகுளின் பார்வையில் உங்கள் பதிவுகளை மேம்படுத்துவது எப்படி?.

முதலில் ப்ளாக்கர் இணையத்தளத்தில் பதிவைத் துவங்குவதன் மூலமாக உங்கள் பதிவின் பெயர் தேடுபொறியில் குறிச்சொல்லாக சேர்க்கப்பட்டு விடுகிறது. மேலும் நீங்கள் இணைந்து கொள்ளும் திரட்டிகளின் வாயிலாக உங்கள் பதிவின் தலைப்புகள் மற்றும் லேபிள்கள் குறிச்சொற்களாக சேர்க்கப்படுகின்றன. இருந்தாலும் தேடுபொறிகள் மூலம் பெறப்படும் வருகையாளர்களுக்கு உங்கள் பதிவுகளுக்கு திரட்டிகளின் மூலமாகவோ அல்லது ப்ளாக்கர் தளத்தின் மூலமாகவோ சேர்க்கப்படும் குறிச்சொற்கள் நீங்கள் எழுதும் தகவலகளை எந்த அளவுக்கு சம்பந்தப்படுத்திக் காட்டும் என்பது நிச்சயமில்லை. தரமான குறிச்சொற்களின் மூலம் தேடுபொறிகளின் மூலம் உங்கள் பதிவுகளைத் தேவையான பயனாளர்களுக்கு எளிதாக சேர்க்கலாம்.


கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் - 2


தேடுபொறிகள் எப்படி செயல்படுகிறது, வலைத்தளங்களை எப்படி தரப்படுத்துகிறது, SEO அப்படின்னா என்ன போன்ற வறட்சியான விஷயங்களை போன பகுதியில் விரிவாகப் பார்த்து விட்டதால் இந்த ப்குதியில் ஒரு ப்ளாக்கர் பதிவை எப்படி தேடுபொறியின் பார்வையில் மேம்படுத்திக் காட்டுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

முதலில் தேடுபொறிகள் ஒரு ப்ளாக்கர் பதிவைத் தரப்படுத்துவதற்கு ஆராயும் போது எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை புரிந்து கொண்டாலே மற்ற வேலைகள் மிக மிக எளிது. உங்கள் பதிவின் தலைப்பு  ஓவ்வொரு இடுகைக்கும் அளிக்கும் தலைப்பு, இடுகைகளில் வழங்கும் படங்கள், எத்தனை பேர் உங்கள் பதிவுக்கு வருகை தருகிறார்கள், எத்தனை பேர் உங்கள் பதிவினை தொடர்கிறார்கள், நீங்கள் எத்தனை பேரைத் தொடர்கிறீர்கள், பெறும் பின்னூட்டங்கள், சீரான கால இடைவெளியில் புதுப்புது பதிவுகள் வெளியிடப்படுகிறதா மற்றும் அதன் தனித்தன்மை, உங்கள் பதிவுக்கு மற்ற தளங்களில் இருந்து உரல் மூலம் தொடர்புப் படுத்தப்பட்டு இருக்கிறதா, உங்கள் பதிவின் meta tags மூலம் நீங்கள் வழங்கியிருக்கும் குறிச்சொற்கள், இவையனைத்தும் தேடுபொறிகள் உங்கள் பதிவைத் தரப்படுத்துவதற்குக் காரணியாக விளங்குவதில் முக்கியமான விஷயங்கள்.

பெரும்பாலான பதிவர்கள் தங்கள் பதிவின் தலைப்பைப் (blog title) பெரும்பாலும் தாங்கள் எழுதும் விஷயங்களுக்கு தொடர்புப்படுத்தி வைப்பதில்லை, அதிகமாக எண்ணங்கள், கிறுக்கல், பிதற்றல், உளறல், வாந்தி, மயக்கம், தூக்கமின்மை, மன உளைச்சல் போன்ற தலைப்புகளை ஆங்காங்கே காணப்பெறலாம். ஆகவே முதலில் செய்ய வேண்டிய விஷயம் உங்கள் தலைப்பில் நீங்கள் எழுதும் விஷயங்களோடு தொடர்பு உள்ளதாக வைத்துக் கொள்வதை மற்றவர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. அதே போல் ஓவ்வொரு இடுகைக்கும் வைக்கும் தலைப்பும் (post title) மிக முக்கியம். சிறுகதை, கவிதை எழுதும் பதிவர்கள் தங்கள் தலைப்பின் இறுதியில் சிறுகதை அல்லது கவிதைப் போன்ற வார்த்தைகளைச் சேர்த்தால் தேடுபொறிகளில் சிறுகதை, கவிதை போன்ற குறிச்சொற்களைத் தேடும் அன்பர்களுக்கு உங்கள் பதிவின் தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெறுவார்கள்.


பின்னூட்டங்கள், பதிவினைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் நீங்கள் தொடரும் எண்ணிக்கை, மற்ற பதிவுகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ உங்கள் பதிவிற்கு தொடர்பு உரல்கள் ஆகியவை உங்கள் பதிவின் நம்பகத்தன்மையினை அதிகரிக்கும் காரணிகள். இங்கு பின்னூட்டங்கள் என்பது தனித்துவமாக எத்தனை பதிவர்கள் பின்னூட்டங்கள் வழங்குகிறார்கள் என்பதாகும்.. ஒரே நபரோ அல்லது குழுவோ செய்யும் பின்னூட்டக்கும்மிக்கு எந்த பயனும் இல்லை. மேலும் பளாக்கர் தளம் கிட்டத்தட்ட ஆர்குட் போல ஒரு சமூக வலையமைப்புத் தளம் என்பதனை நினைவில் கொள்ளவும். உங்கள் பதிவு எத்தனை மற்ற பதிவுகளைத் தொடர்கிறது மற்றும் எத்தனைப் பதிவுகள் உங்களைத் தொடர்கின்றன, அவ்வாறு தொடர்புகளை இணைக்கப்பட்டிருக்கும் பதிவுகளின் உள்ளடக்கம் (content) எவ்வாறு உங்கள் பதிவின் உள்ளடக்கத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது போன்ற இன்னபிற விஷயங்களின் அடிப்படையில் உங்கள் பதிவின் தரம் எடை போடப்படும். இந்த விஷயத்தில் தான் தேடுபொறிகளின் பார்வையில் சாதரண இணையத்தளங்களிலிர்ந்து பதிவுகள் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு நீங்கள் கவிதை எழுதும் பதிவு வைத்திருந்தால், மற்ற கவிதைகள் எழுதும் பதிவுகளோடு தொடர்பு படுத்தப் பட்டிருப்பின் சிறப்பு. அவ்வாறு தொடர்புப் படுத்தப்பட்டிருக்கும் பதிவுகள் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் உங்கள் பதிவினை விட சிறப்பானதாக இருந்தால் மிகமிகச்சிறப்பு.

அடுத்து ஒரு பதிவராக உங்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது (active blogger) . எத்தனை நாளைக்கு ஒரு முறை உங்கள் பதிவில் புது இடுகைகள் பதிவேற்றப்படுகிறது, எத்தனை பின்னூட்டங்கள் போன்ற விஷயங்களும் கணக்கில் கொள்ளப்படுகிறது. தரப்படுத்துதலில் மிகவும் சக்திவாய்ந்த காரணியாகக் கருதப்படுவது மற்ற தளங்கள் அல்லது பதிவுகளில் இருந்து உங்கள் பதிவுக்குக் கொடுக்கப்படும் சுட்டிகள் அல்லது உரல்கள் தான். சில தொழில்முறைப் பதிவர்கள் தேடுபொறியின் தரப்பட்டியலில் முன்னேறும் பொருட்டு நட்பு முறையில் அவருக்கு இவரும், இவருக்கு அவரும் சுட்டிகள் கொடுத்துக் கொள்வது வழக்கம். ஏதாவது ஒரு விஷயத்திற்கு மதிப்பதிகம் என்று அறிந்தால் அன்றே அதைச் சந்தைப்படுத்தி காசு பார்ப்பது தான் கண்ணுக்கும், பர்சுக்கும் அழகென்பதால், பணம் வருடச் சந்தா செலுத்தினால் உங்களின் சுட்டியை தங்கள் தளத்தில் வெளியிடும் தளங்கள் நிறைய உள்ளன. தேடுபொறிகளைச் சார்ந்து இருக்கும் பல தொழில்களில் இதுவும் ஒன்று.

அடுத்துப் பார்க்கப் போவது பதிவுகளில் படங்கள் வழங்குவது மற்றும் meta tags. பொதுவாக தேடுபொறிகள் உங்கள் பதிவினை ஆய்வு செய்யும் போது படங்களை அவற்றின் கோப்புப் பெயர் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட குறிச்சொற்களையுமே எடுத்துக் கொள்ளும். எனவே படங்களை இணைக்கும் பொழுது கோப்பின் பெயர் படம் விளக்கும் சங்கதியை ஒத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். படங்களை இணைத்த பிறகு EDIT HTML பகுதிக்கு சென்று கீழ்காணும் முறையில் அப்படத்திற்கானக் குறிச்சொற்களை வழங்கலாம்.

< src="test.gif" width="25" height="25" alt="Place your keyword list here">

அதே போல் meta tag மூலம் உங்கள் பதிவிற்கு பொதுவாக என்னென்ன குறிச்சொற்கள் கொடுக்க விரும்புகிறீர்களோ அதனை வழங்கலாம். meta tag மூலம் கொடுக்கப்படும் குறிச்சொற்களுக்கு முக்கியத்துவம் கொஞ்சம் கம்மி என்றாலும், அவற்றையும் தேடுபொறிகள் அலசுவதால் கீழ்காணும் முறையில் dashboard -> layout -> edit html சென்று < /head >முன்பாக வழங்கி மகிழலாம்.

< equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
< name="DESCRIPTION" content="meta description goes here which appears in search results ">
< name="KEYWORDS" content="your keywords,go here,separated by a comma,but not a space">


இவ்வளவும் செய்தாலும் எப்போது உங்கள் தளமோ அல்லது பதிவோ தேடுபொறிகளின் தரப்பட்டியலில் மேலே வரும் என்பது தேவரகசியம். சிலவாரங்கள், மாதங்கள், சமயத்தில் வருடங்கள் கூட ஆகலாம். பொறுமையாக கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றும் வேலையைச் செய்து கொண்டே காத்திருக்க வேண்டியது தான். தேடுபொறிகள் ப்ளாக்கர் பதிவுகளை விட இணையத்தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சரியாக மேம்படுத்துதல் மற்றும் உங்கள் தகவல்களின் தனித்துவத்தாலும் தேடுபொறிகளின் தரப்பட்டியலில் இணையதளங்களைத் தாண்டி பதிவுகள் முன்னெறுவது மிக எளிது உ.தா: வகுப்பறை, டொரண்ட் போன்ற குறிச்சொற்களை வைத்து கூகுளில் தேடிப் பாருங்கள்.

இணையத்தில் இருக்கும் எண்ணற்ற தளங்களை, பதிவுகளை தேடுபொறிகள் எப்படி ஆய்வு செய்வது சாத்தியமாகிறது?. ஓவ்வொரு தேடுபொறிக்கும் crawler எனப்படும் நிரல் இருக்கும். இந்த நிரல் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் அட்டவணையில் இருக்கும் தளங்களுக்கு வருகை தந்து தரப்படுத்தத் தேவையான தகவல்களைத் திரட்டிச் செல்லும். கூகுளின் crawler நிரல்களின் செய்ல்பாட்டை எப்படி அறிவது? எப்போதெல்லாம் உங்கள் தளத்திற்கு வந்து செல்கிறது, என்னென்ன குறிச்சொற்கள் மூலம் உங்கள் பதிவை தேடுபொறிகள் மூலம் வருகையாளர்கள் வந்தடைகிறார்கள் போன்றவற்றையெல்லாம் அறிந்து கொள்வது உங்கள் பதிவினை தேடுபொறிகளின் பார்வையில் மேம்படுத்த மிகவும் உதவிகரமாக இருக்கும். 

கூகுள் பார்வையில் ப்ளாக்கர் பதிவுகள் -3 (முற்றும்)


இணையத்தில் இருக்கும் ஒவ்வொரு தளமும், பதிவுகளும் கிட்டத்தட்ட மேலே படத்தில் இருக்கும் கண்ணாடி அறை போலத்தான். வருகையாளர்கள் உங்கள் படைப்புகளைப் பார்க்க முடியுமே தவிர உள்ளிருக்கும் உங்களை அல்ல. உங்களால் வருகையாளர்கள் எவற்றைக் கவனிக்கிறார்கள், எந்தப் படைப்புகள் பெரும்பாலோனோரை ஈர்க்கிறது, எங்கிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு உங்கள் தளமோ/பதிவோ குறித்து எப்படி தெரிந்து கொண்டார்கள் ஆகியவற்றை உங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ளாமலே கண்டுகொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பதிவினைப் பார்ப்பவர்களின் பார்வையினை அலசிக் காயப்போட்டு நீங்களே தங்கள் பதிவினை சுயப்பரிசோதனை செய்து சலவை செய்து வெளுப்பாக்கிக் கொள்ள முடியும்.

இப்படி தங்கள் பதிவைப் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. முதலில் முக்கியமான ஒன்றான, உங்கள் பதிவுக்கு தங்கள் தளங்கள்/பதிவுகளில் உரல் கொடுத்துள்ள நல்ல உள்ளங்கள் யார், யார் என்பதை எப்படி அறிவது?, கூகுளுக்குச் சென்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் "link: yourblogname. blogspot.com" என்று மனு போட்டால் மறுகணம் தகவல்களைப் பெறலாம்.

இவற்றைத் தவிர நமக்கு உதவும் பொருட்டு கூகுள் இலவசமாக வழங்கும் இரண்டு சேவைகள் குறித்து பார்ப்போம். உங்கள் தளத்தின் உள்கட்டமைப்பு எப்படி உள்ளது, கூகுளின் crawler நிரல் உங்கள் பதிவுக்கு வந்து போன விவரம் ஆகியவைக் குறித்து அறிந்து கொள்ள google webmasters மற்றும் வருகையாளர்கள் குறித்தான அலசலுக்கு google analytics.

Google webmaster சேவையினைப் பயன்படுத்த உங்கள் ப்ளாக்கர் பதிவின் dashboard -> tools and resources -> webmaster tools -> enable webmaster tools என்ற இடத்திற்கு சென்று உங்கள் பதிவை இணைத்துக் கொள்ளலாம். அல்லதுhttp://www.google.com/webmasters/ என்ற உரலுக்குச் சென்று adding a site -> verfiy through meta tags வசதியின் மூலமும் உங்கள் பதிவினை இணைத்துக் கொள்ளலாம். பின்னர் அதிலுள்ள வசதிகள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்து பார்த்து சில நாட்கள் விளையாண்டால் ஓரளவு அனைத்து விவரங்களும் கைவரப்பெறலாம்.

அதே போல் google analytics சேவையினைப் பயன்படுத்தhttp://www.google.com/analytics/ என்ற உரலுக்குச் சென்று add new website profile என்பதைத் தேர்வு செய்து உங்கள் பதிவின் உரலை உள்ளிடவும். உடனே உங்கள் பதிவுக்கான நிரல் ஒன்று வழங்கப்படும். நிரலுக்கு அருகில் 'one domain with multiple subdomains' என்பதைத் தேர்வு செய்து விட்டு அதன் பின் நிரலை பிரதியெடுத்து உங்கள் பதிவின் 'dashboard -> layout -> edit html' என்ற இடத்திற்கு சென்று < / body > என்ற இடத்திற்கு முன்பாக உள்ளிட்டு சேமித்து விட்டால் வேலை முடிந்த்தது. 24 மணி நேரம் கழித்து google analytics சென்று பார்த்தால் வருகையாளர்க்ள் புருவம் உயரும் வண்ணம் விவரங்கள் காணலாம்.

மேற்சொன்ன இரண்டு சேவைகளுமே இலவசம் மற்றும் உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலமே பதிவு செய்து கொள்ள முடியும் என்பது தனிச்சிறப்பு. இவற்றைப் பயன்படுத்தி வீடுபேறு அடைந்தவர்கள் தங்கள் அனுபவத்தைப் பின்னூட்டத்தில பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி அல்லது வழக்கம் போல் மவுனமாகப் பயனடைந்தால் மிகமிக மகிழ்ச்சி.

கடைசியாக google sandbox effect குறித்து ஒரு சிறு அறிமுகம் (நன்றி: புதுவை சிவா).தேடுபொறிகள் தரப்படுத்தப் பயன்படுத்தும் நிரல்களே அவர்களின் தொழில்ரகசியம். அவற்றைப் பற்றி எப்போதும் வெளிப்படையானத் தகவல்கள் காணக் கிடைப்பதில்லை. உதாரணத்திற்கு ஒருவர் பல தளங்களை நடத்தி வருகிறார். மேலும் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். புதிய தளத்தினை தேடுபொறிகளின் தரப்பட்டியலில் குபீரென்று மேலே கொண்டு செல்ல புதிய தளத்தின் உரல்களைத் தன் வசமுள்ள தளங்கள் அனைத்திலும் இடுகிறார். இவ்வாறு திரைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே மாபெரும் வெற்றி என விளம்பரங்கள் வருவதைப் போல குறுகிய கால அவகாசத்தில் தரப்பட்டியலில் அசாதரணமாக முன்னேறும் தளங்களை கூகுள் வேண்டுமென்றே 3 முதல் 6 மாதங்கள் வரை அடக்கி வைக்கிறது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது, அதற்கு பெயர் தான் sandbox effect. இதில் இருந்து தப்பிக்க பொறுமையாக 6 மாதம் பார்க், பீச் என்று ஊர்சுற்றி விட்டு வந்தால் தவிர வேறு வழியில்லை. எல்லா தளங்களுக்கும் இது போல நிகழ்வதில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கூகுள் 'எங்களின் நிரல்களின் செயல்பாட்டில் சிலக் குறிப்பிட்ட துறைகள் சம்பந்தப்பட்ட தளங்களுக்கு இவ்வாறு நேர வாய்ப்பிருக்கலாம், இது குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்' என்று பட்டும் படமாலும், தொட்டும் தொடாமலும் பொறுப்பாகப் பதில் சொல்லியிருக்கிறது.


ஒரு கருப்புப்பெட்டி (BLACK BOX) கதை சொல்கிறது



கருப்புப்பெட்டி (Blackbox) என்பது விமானங்களின் தொழில்நுட்ப நிலைகளைப் பதிவு செய்ய விமானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு தகவல் சேமிப்பு கருவி. விமானத்தில் கருப்புப்பெட்டி பொருத்துவதென்பது ஓவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக முயற்சிக்கப் பட்டு மேம்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக 70 வருடங்களுக்கு முன்னால் பிரான்ஸில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதே இதன் ஆரம்பம். வரலாறு ரொம்ப சொன்னா கொட்டாவி வரும் ஆபத்திருப்பதால், நாம் கருப்புப் பெட்டிக்குள் நுழைவோம்.


கருப்புப்பெட்டி ஒரு சுவாரஸ்யமான கருவி, அதன் குணாதிசயங்கள் ஆச்சர்யமானவை. 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 60 நிமிடங்களுக்கு மேலாகவும், அழுத்தம் மிகுந்த கடல் நீரில் நான்கு வாரம் வரைக்கும், சுமார் முப்பாதாயிரம் அடி உயரத்தில் இருந்து தரையில் வீழ்ந்தாலும், 2000 கிலோ வரையிலான சுமையைத் தாங்கினாலும் எந்த சேதாரமும் இல்லாமல் அமைதியாய் இருக்கும். எப்படி? முதலில் அலுமினியம், பின்னர் உலர் சிலிகா, அதன் பின்னர் டைட்டானியம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு மிக மிக உறுதியான கொள்கலனுக்குள் வைக்கப் பட்டிருப்பது தான் எதையும் தாங்கும் இதயமாக கருப்புப்பெட்டி இருக்கக் காரணம். இவ்வளவு பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்டாலும், எல்லா சம்பவங்களிலும் கருப்புப்பெட்டி சேதமின்றி கிடைப்பதில்லை. இந்தக் கருப்புப்பெட்டி கருப்பு வண்ணத்தில இருக்காது, சிவப்பு அல்லது அடர்மஞ்சள் வண்ணத்தில் இரவிலும், பகலிலும், தண்ணீருக்கடியிலும் எளிதில் அடையாளங்காணும் வகையில் இருக்கும். இருந்தாலும் ஏன் கருப்புப்பெட்டி என்று பெயர் வந்தது?, ஆரம்ப காலத்தில் photosensors (தமிழில்?) பயன்படுத்தித் தான் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவந்தது, அதனால் ஒளி ஊடுருவ இயலாத வகையில் பெட்டி வடிவமைக்கப்பட்டதால் blackbox கருப்புப்பெட்டி என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் photosensors நீக்கப்பட்டு மின்காந்த நாடாக்கள் (Electromagnetic tapes) அதன் பின் மெமரி போர்டுகளாக மாற்றம் பெற்றது.

கருப்புபெட்டி பெரும்பாலும் விமானத்தின் வால்பகுதியிலேயே பொருத்தப்பட்டிருக்கும், சில சமயங்களின் மேற்கூரையிலும் பொருத்தப்படுவதுண்டு. காரணம் அந்த பகுதிகளில் தான் விபத்தின் போது ஏற்படும் அதிர்வுகள் குறைந்து இருக்கும், மேலும் அனேகமாக கடைசியாக விபத்தினால் பாதிக்கப்பட போகும் இடமாகவும் இருக்கும். கருப்புப்பெட்டியில் இரண்டு பகுதிகள் உண்டு, விமானிகளின் கட்டுப்பாட்டு அறையில் எழும் அனைத்து ஒலிகளையும் பதிவு செய்ய cockpit voice recorder (CVR) மற்றும் விமானத்தின் பறக்கும் உயரம் உட்பட இயந்திர பாகங்களின் செயல்பாட்டு நிலைமை அனைத்தையும் பதிவு செய்ய flight data recorder (FDR). பெருவாரியான விபத்துகள் அத்துவானக் காடுகளிலோ அல்லது கடல்பகுதியிலேயோ தான் நடைபெறுகின்றன. விபத்து குறித்துத் தகவல் கிடைத்தவுடன் மீட்புப்பணிகள் ஒருபுறம் நடந்தாலும் அதைவிட பரபரப்பாக விசாரணை அதிகாரிகளின் கருப்புப்பெட்டித் தேடல் வேலையும் நடந்து கொண்டிருக்கும்.


FDR மற்றும் CVR தவிர beacon எனப்படும் ultrasonic ஒலிக்கருவியும் கருப்புப்பெட்டியில் இருக்கும். ஒருவேளை விபத்துகள் கடல்பகுதியில் நடந்தால், தண்ணீரில் மூழ்கிய மறுகணம் ஒவ்வொரு நொடியும் beacon கருவி ultrasonic ஒலியலைகளை சுமார் 14000 அடி வரை பரப்பும். தேடல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் sonar கருவிகள் மூலம் ஒலியலைகளை இனம் கண்டு கடலுக்கடியில் இருக்கும் கருப்புப்பெட்டியைக் கண்டுபிடிப்பார்கள். இந்த beacon கருவி கருப்புப்பெட்டியை மட்டுமின்றி விமான விபத்து நடந்த கடல்பகுதியையும் கண்டுபிடிக்க உதவி செய்து, அதன் மூலம் யாரேனும் தப்பிப்பிழைத்திருந்தால் அவர்களையும் கூடுமானவரை விரைவில் மீட்டெடுக்க உதவி புரிகிறது.

விபத்துக்கான சரியான காரணங்கள் பற்றியும், அதனைத் தவிர்ப்பதற்கான விமானிகளின் கடைசி நிமிட போராட்டங்கள், அவர்கள் கையாண்ட உத்திகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமின்றி எதிர்காலத்தில் அது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க விமானிகளுக்கு சிறப்புப் பயிற்சி அல்லது விமான வடிவமைப்பில் அதிக நவீனப்படுத்தப்பட்ட மாற்றம் ஆகியவற்றின் தேவை குறித்து முடிவெடுக்கவும் கருப்புப்பெட்டியே மூலாதாரம்.

கருப்புப்பெட்டி குறித்து ஓரளவு அறிமுகம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த பகுதியில் கருப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்களை எவ்வாறு மீட்டெடுப்பது, மீட்டெடுக்க்ப்படும் பணியில் உள்ள சிக்கல்கள், எந்தெந்த நாடுகளில் கருப்புப்பெட்டித் தகவல்களைப் படிக்கும் வசதி உள்ளது ஆகியவைக் குறித்துப் பார்க்கலாம்.


ஒரு விமானத்தின் கருப்புப் பெட்டி அந்த விமானத்தை இயக்கும் நிறுவனத்தின் சொத்து. அதில் உள்ள தகவல்கள் குறித்து அந்த விமான நிறுவனத்துக்கும் விபத்து நடந்த நாட்டைச் சேர்ந்த விசாரணைக்குழுவுக்குமே முழு அதிகாரம் உண்டு. அவர்கள் விரும்பினால் வெளியிடலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, காக்கா மோதியதால், மோசமான வானிலை காரணமாக என்று மிளகாய் அரைக்கப்படலாம். அவை விபத்துக் காரணங்களில் உள்ள வில்லங்கத்தைப் பொறுத்தது. விமான விபத்து என்பது பெரும்பாலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கருப்புப்பெட்டித் தகவல்கள் அதிமுக்கியம் வாய்ந்தவையாக கருதப்படும்.

ஒரு கருப்புப்பெட்டி எந்த ஒரு நிலையிலும் கடந்த 25 மணி நேர விமானத் தகவலும், 30 நிமிட விமானி அறையின் உரையாடல்களையும் கொண்டிருக்கும். கருப்புப்பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஒன்றுகளும், பூஜ்யங்களுமாகவே இருக்கும் (Binary Format). கருப்புப்பெட்டியில் இருக்கும் மெமரி, data frame எனப்படும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த data frame பகுதிகளில் தகவல் சேமிப்பதற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கும். உதாரணத்திற்கு ஒரு data frame என்பது 48 bits கொண்ட ஒரு binary word ஆக இருக்கும். இதற்கும் மேலாக இந்த data frame தன்னிடத்தில் சேமித்து வைத்திருக்கும் ஒன்றுகளும், பூஜ்யங்களும் விமானத்தகவல்களில் எதைக் குறிக்கின்றன, எந்த வரிசையில் குறிக்கின்றன (உயரம், நேரம், இயந்திரங்களின் நிலைகள்) இவையெல்லாம் பற்றிய தகவல் கோர்வையே data frame layout என்று அழைக்கப்படுகிறது. கருப்புப்பெட்டி மெமரியின் data frame layout பற்றித் தெரியாமல் ஒருவர் அதிலுள்ள தகவல்களைப் பார்த்தால் வெறும் ஒன்றுகளும் பூஜ்யங்களுமாகத் தான் தெரியும்.

கருப்புப்பெட்டி உலகில் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனங்கள் சர்வதேச வரைமுறைகளின் படி தயாரித்தாலும். data frame layout என்பது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். எனவே எந்த ஒரு விமான சேவை நிறுவனமும் தாங்கள் இயக்கும் அனைத்து விமானங்களிலும் இருக்கும் கருப்புப்பெட்டி குறித்தான தகவல்கள் மற்றும் அவற்றின் data frame layout ஆகியவ்ற்றை உயிரினும் மேலாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். விபத்து நடந்த பின் கருப்புப்பெட்டித் தகவல்களின்றி தலை சொரியும் விமான சேவை நிறுவனங்கள் தங்கள் உரிமத்தைக் கூட இழக்க நேரிடும்.

எப்பொழுதுமே இந்த கருப்புப்பெட்டி செய்திகளில் அடிபடும் போதெல்லாம் கூர்ந்து கவனித்தால் விபத்து குறித்த தகவல்கள் தெரிவிக்க பத்து நாட்களாகும், ஒரு மாதமாகும் என்று சொல்லுவார்கள். ஏன்?. உண்மையில் கருப்புப்பெட்டியில் இருக்கும் தகவல்கள் கணினிகளில் சில நிமிடங்களில் மேலே படத்தில் உள்ள கருவி (Blackbox readout interface module) மூலம் சேமிக்கப்படும். மற்ற ஒன்பது நாட்களும் சேமித்த தகவல்கள் அனைத்தையும் மீள்கட்டமைப்பு (decoding) செய்வதிலே தான் செலவாகும். இந்த தகவல்களை மீள்கட்டமைப்பு செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. அதைச் செய்ய ஒரு குழு அமைக்கப்படும். விபத்துக்குள்ளான விமானத் தயாரிப்பு நிறுவனம், விசாரணைக் குழு, விமானத்தின் உரிமையாளர்/நிறுவனம் இவர்கள் அனைவரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் தான் தகவல்களை மீள்கட்டமைப்பார்கள். தொழில்நுட்ப ஆலோசனைகளை உடனுக்குடனே பெறவும், தகவல் பறிமாற்றம் எளிதாக நடக்கவுமே இந்த ஏற்பாடு.



இவை அனைத்துக்கும் மேலே கருப்புப்பெட்டி விபத்துக்குப்பின் கண்டுப்பிடிக்கப்படும் போது உள்ள நிலையும் தாமதத்திற்குக் காரணமாக அமையும். பெரும்பாலும் அடிவாங்கிய சொம்பு போல தான் கருப்புப்பெட்டி கிடைக்கும். சில சமயங்களில் மெமரி போர்டுகளும் பாதிப்படைவதுண்டு. தண்ணீருக்குள் இருந்து கண்டெடுக்கப்படும் கருப்புப்பெட்டிகள் ஆய்வு மையங்களுக்கு அனுப்பப்படும் போது beacon கருவியை நீக்கிவிட்டு ஒரு தண்ணீர் நிரப்பிய பாலிதீன் பையில் வைத்தே அனுப்புவது வழக்கம். ஈரம் உலர்வதால் ஏற்படும் ரசாயன மாற்றங்களைத் தவிர்க்க இந்த ஏற்பாடு. ஆய்வு மையத்தை அடைந்ததும் கருப்புப்பெட்டித் திறக்கப்பட்டு மெமரி போர்டுகளுக்கு முதலுதவி அளித்து, பாதிக்கப்பட்ட உதிரி பாகங்களை மாற்றி தகவல்களை மீட்டெடுப்பார்கள்.

இந்த கருப்புப்பெட்டி ஆய்வகம் அமைப்பதென்பது எளிதானது தான் என்றாலும் அதற்குரிய நிபுணர்கள் உலகளவில் மிகக்குறைவு. மேலும் அனுபவமிக்க நிபுணர்கள் மிகமிகக் குறைவு. மேலும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் நிபுணர்கள் அவ்வப்போது கருப்புப்பெட்டித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி எடுத்து நாங்களும் யூத்து தான் என்று சொல்ல முடிந்தால் மிக நன்று. இந்த ஆய்வக வசதிகள் உலகில் எந்தெந்த நாடுகளில் உள்ளன?

நைஜீரியா,தென்னாப்பிரிக்கா,ரஷ்யா, இந்தியா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், தைவான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா, தென் கொரியா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, சால்வடர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பிரேசில் மற்றும் கொலம்பியா என கோபால் பல்பொடி கிடைக்கும் அனைத்து நாடுகளிலும் கருப்புப்பெட்டி ஆய்வகங்களும் இருப்பது தனிச்சிறப்பு.

மற்ற நாடுகள் தங்கள் நாட்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மேற்கூறிய நாடுகளில் ஒன்றுக்கு அனுப்பி விசாரணையைத் தொடங்குவார்கள். அதுபோக கைப்பற்றப்பட்டக் கருப்புப்பெட்டியின் நிலைமை, ஆய்வக வசதி இருந்தாலும் அந்நாட்டின் நிபுணர்களின் அனுபவம், மெமரி போர்ட் பாதிப்புகள் ஆகியவற்றைப் பொருத்து அனுபவமிக்க நாடுகளுக்கு அனுப்புவதும் உண்டு. கருப்புப்பெட்டி விபத்து மர்மங்களுக்கு அருமருந்தாக இருப்பதை அனுபவத்தில் உணர்ந்து கார் தயாரிப்பாளர்கள் பல உயர்ரக கார்களிலும் கூட கருப்புப்பெட்டி பொருத்தத் துவங்கினர் உ.தா. pontiac sunfire.

 எதிர்வரும் காலங்களில் கருப்புப்பெட்டி அல்லது விமான விபத்துகள் பற்றிய செய்திகளை நீங்கள் எதிர்கொள்ளும் போது உங்களின் பார்வை மாறியிருக்கும். அப்படி மாற்றுவதே இப்பதிவின் நோக்கம். ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கு நன்றி கூறி இத்தொடர்