கோலிவுட்டை 'ஜாலிவுட்’ ஆக வைத்து இருக்கும் கிச்சுகிச்சு காமெடியன்கள் பற்றிய மினி சினி பயோடேட்டா இங்கே...
முத்துக்காளை:ராஜபாளையம் பக்கம் திருக்கோவில்புரம் கிராமம்தான் என் சொந்த ஊர். 1990-ல் சென்னை வந்து ஏழு வருஷப் போராட்டத்துக்குப் பிறகு, யூனியனில் ஃபைட்டர் ஆகச் சேர்ந்தேன். ஸ்டன்ட் சிவா மாஸ்டர்கிட்ட 40 படங்களுக்கு மேல் வேலை பார்த்தேன். நான் யார்கிட்டயும் சிரிச்சுக்கூடப் பேச மாட்டேன். ஆனா, 'இந்த உருவம் வேணும்’னு சொல்லி, டைரக்டர் எஸ்.பி.ராஜ்குமார் சார் 'பொன்மனம்’ படத்தில் ஒரு நடிகனா என்னை அறிமுகப்படுத்தினார். 'செத்துச் செத்து விளையாடுவோமா’னு வடிவேலுவோட காமெடி பண்ணதுதான் என் விசிட்டிங் கார்டு.
இப்போ வரை சோறு போடுறதும் அதான். 100 படங்கள் நெருங்கிட்டேன். 'கண்டேன்’ல சாந்தனுவும் சந்தானமும் என்னைத் துரத்திட்டு வருவாங்க. நான் தப்பிப்போய் சகதியில விழணும். இதுதான் ஸீன். ஃபைட்டர்ங்கிறதால உண்மையிலேயே தாண்டி சேத்துல விழுந்தேன். கண்ணுல மண்ணு போய் இப்பவும் மருந்து போட்டுட்டு இருக்கேன். ஏதோ ஒரு ஸீன்லயாவது என் ஃபைட்டிங் திறமையைக் காண்பிச்சு 'ஃபைட் மாஸ்டர்’ ஆகணுங்கிறதுதான் என் ஆசை. யார் யார்னு பேர் சொல்ல மாட்டேன். ஆனா, இப்போ பெரிய ஸ்டாரா இருக்கிற ஹீரோக்கள் பலருக்கு நானும் நண்பர் கோவை பார்த்தசாரதியும் ஜிம்னாஸ் டிக்ஸ், ஸ்டன்ட் பயிற்சிகள் கொடுத்திருக்கோம். நாம பெரிய ரேஞ்சுக்கு வந்த பிறகுதான், அதை அவங்க வெளியே சொல்வாங்கபோல. அக்கா பொண்ணு மாலதியைக் கல்யாணம் முடிச்சேன். ஒரே மகன் வாசன் முரளி. எல்.கே.ஜி. படிக்கிறான். சான்ட்ரோ கார் வெச்சிருக்கேன். ஆனா, தேவைன்னாதான் காரை எடுப்பேன். மத்த நேரம்லாம் கைனடிக் ஹோண்டாதான். பாண்டிச்சேரி சபாநாயகர் ஸ்கூட்டர்ல போனா, 'சிம்பிளா இருக்காருப்பா!’னு கொண்டாடுறாங்க. ஆனா, இந்த முத்துக்காளை பைக்ல போனா, 'இல்லாதவன்’, 'கருமி’ன்னு கடுப்படிக்கிறாங்க. அது ஏண்ணே?''
'அல்வா’ வாசு: ''நம்ம ஒரிஜினல் பேரு ரொம்ப நல்ல பேருண்ணே. வாசுதேவன். 'அமைதிப் படை’ படத்தில் கஸ்தூரிக்கு அல்வாக்குள் அபின் வெச்சுக் கொடுத்ததால், 'அல்வா’ வாசு ஆகிட்டேன். சொந்த ஊர் மதுரை. வீட்டுக்கு ஒரே பையன். எக்கச்சக்க செல்லம். பொத்திப்பொத்தி வளத்தாக. அமெரிக்கன் காலேஜ்ல பி.ஏ. முடிச்சேன். வீட்ல ஓவர் செல்லம் தாங்காம ஃப்ரெண்டோட பாண்டியன் எக்ஸ்பிரஸ் பிடிச்சு மெட்ராஸ் வந்தேன். பீச், பூங்கானு சுத்திப் பார்க்கலாம்னுதான்பிளான். ஆனா, சென்னையில் கால் வெச்சதுமே நேரா வாகினி ஸ்டுடியோ போய் நின்னார் நம்ம நண்பர். காலேஜ்லயே மிமிக்ரி, பாட்டு, நாடகம்னு பட்டையைக் கிளப்பினவய்ங்கதானே நாம. அப்படியே சினிமா எக்ஸ்பிரஸ் ஏறிட்டேன். முதல்ல மணிவண்ணன் சார்கிட்ட 'கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் உதவி இயக்குநரா சேர்ந்தேன்.
'வாழ்க்கை சக்கரம்’ படத்துக்கு ஹீரோ, வில்லன் கூடவே டிராவல் பண்ற நக்கல் கேரக்டருக்கு யாரை நடிக்கவைக்கலாம்னு மணிவண்ணன் சார் பயங்கரமா யோசிச்சுட்டு இருந்தப்ப, 'பேசாம நீயே நடிச்சிடுய்யா’ன்னு என் பக்கம் பார்த்துச் சொன்னார் சத்யராஜ் சார். 'அட... கைக்குள்ளயே ஆளை வெச்சுக்கிட்டு, ஊரெல்லாம் தேடிட்டு இருந்திருக்கேனே’னு மணிவண்ணன் சாரும் ஓ.கே. சொன்னார். இப்போ வடிவேலுகூட சேர்ந்து ஏகப்பட்ட படங்கள் பண்ணியாச்சு. சினிமா, டி.வி, கோயில் திருவிழா, காது குத்து, கல்யாணம், வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகள்னு வாழ்க்கை பரபரப்பா ஓடிட்டு இருக்குண்ணே. வீட்டுக்காரம்மா அமுதா. ஒரே பையன். சந்தோஷமா இருக்கேண்ணே!''
சிவநாராயண மூர்த்தி: '' 'வேலாயுதம்’ ஷூட்டிங் ஸ்பாட்ல நம்ம நண்பர் ஒருத்தர் பிரியத்துல கொழுக்கட்டை, மட்டன், சிக்கன்னு வந்து இறக்கிட்டார். நானும் ஆர்வத்துல அள்ளி அப்பிட்டேன். ஏற்கெனவே ஷ§கர் இருக்குறதால, உடம்பு அப்படியே மசமசன்னு மசக்கை கணக்கா ஆகிடுச்சு. அப்ப நம்ம கேமராமேன் ப்ரியன்தான், 'க்ரீன் டி குடிங்கண்ணே சரியாயிடும்’னார். அன்னிக்கு க்ரீன் டீ குடிக்க ஆரம்பிச்சவன்தான். இன்னிக்கும் அதுதான் நமக்கு. நீங்களும் ஃபாலோ பண் ணுங்க தம்பி!'' என்கிற சிவநாராயண மூர்த்தி, சமீப காலமாக தமிழ் சினிமாவின் போலீஸ் டிபார்ட்மென்ட் டில் நிரந்த இடம் பிடித்து விட்டவர்!
''பட்டுக்கோட்டை பக்கத்துல அணைக்காடு சொந்த ஊர். பெரிய பண்ணையாருப்பா நானு. வீடு, வயல் வரப்புன்னு பத்துப் பன்னெண்டு கோடிக்கு சொத்து தேறும். ஆசை வெக்கம் அறியாதுன்னு சொல்ற மாதிரி, சினிமா ஆசையும் வசதி வாய்ப்பு பார்த்து வர்றது இல்லை. 1997-ல் களஞ்சியம் சார் 'பூந்தோட்டம்’ படத்துல அறிமுகப்படுத்தினார். அதுல ஆரம்பிச்சு, இப்போ விஜய் தம்பியின் 'வேலாயுதம்’ வரை ஆசை மட்டுப்படவே இல்லை. சம்சாரம் புஷ்பவள்ளி. ரெண்டு பையன். ஒரு பொண்ணை சிங்கப்பூர்ல கட்டிக் கொடுத்திருக்கேன். உள்ளூர் மந்திரிமாரைக்கூடத் தெரியாத தமிழ் மக்கள் என்னை மாதிரியான காமெடியனை எங்கே போனாலும் அடையாளம் கண்டுக்கிறாங்க. இதுதான் சினிமா பவரு தம்பி. எங்கே போனாலும் கையெழுத்து வாங்குறாங்க. கூட நின்னு போட்டோ எடுத்துக்கிறாங்க. வேற என்ன தம்பி வேணும்?''
'போண்டா’ மணி: ''கொழும்பு மன்னார்தான் என் சொந்த ஊர். சினிமாவில் நடிக்கிற ஆசையில் ஏஜென்ட்டுக்குக் காசு கொடுத்து சிங்கப்பூர் போனேன். மூணு வருசம் வீணாப்போனதுதான் மிச்சம். பிறகு, அகதியா இந்தியா வந்து மெட்ராஸ் ராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ்ல சித்தாள் வேலை பார்த்தேன். மறுபடியும் மூணு வருஷம் வேஸ்ட். 88-ல் மறுபடி சிலோனுக்குப் போய் கடைவெச்சு முதலாளி பந்தாவோட இருந்தேன். ஆனா, அதுவும் நிலைக்கலை. கால்ல குண்டடிபட்டு மறுபடியும் அகதியா ராமேஸ்வரம் வந்தேன். சேலம் கேம்ப்புல தங்கி இருந்தப்ப, 'பவுனு பவுனு’ ஷூட்டிங்ல பாக்யராஜ் சார்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டேன். விடாம 20 நாள் அலைஞ்சேன். ஒருநாள் அவர் தங்கி இருந்த ரூமுக்கு ராத்திரி ரெண்டு மணிக்குப் போய் நின்னு, 'எனக்கு வாய்ப்பு கிடைக்குமா... கிடைக்காதா?’னு கோபமாக் கேட்டேன். ஊர்ல வாழ்ந்த வாழ்க்கையில அப்படித் தோரணையாப் பேசிப்புட்டேன். சட்டுனு சிரிச்சவர், 'சிலோன் தமிழரே... உங்களுக்கு சினிமாபத்தி புரியலை. இங்க வருஷக் கணக்குல கஷ்டப்படுறவன்லாம் இருக்கான். சரி, நாளைக் குக் காலையில நடிக்கிறீங்க!’னு சொல்லி, கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளையா நடிக்கவெச்சார். மு.மேத்தா, இனியன் சம்பத், நெல்லை சிவானு ஏகப்பட்ட பேர் உதவியில் இப்போ சினிமாவில் காலம் ஓடிட்டு இருக்கு. மன்சூர் அலிகான் அண்ணன் ஆபீஸ் மாடிதான் என் அட்ரஸ். அவரோட போன்தான் எனக்கு பி.பி. போன். அவர்தான் எனக்கு மேனேஜர்.'மைனா’ ஹீரோ விதார்த்தை நான்தான் அப்போ மன்சூர் அண்ணன்கிட்ட டிரைவரா சேர்த்துவிட்டேன்.
'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ படத்துல கவுண்டமணி அண்ணன், செந்தில்கூட பெரிய காம்பினேஷன். அப்பதான் டைரக்டர் எம்.என்.ஜெயசுந்தர், 'கேதீஸ்வரன்’ங்கிற என் பேரை 'போண்டா மணி’னு மாத்தினார். நான் போண்டா நிறைய சாப்பிடுவேன். அந்த போண்டாவையும், கவுண்டமணியில் உள்ள மணியையும் பிச்சி எனக்குப் பேர்வெச்சார். நான் அப்ப ரவுண்டா வெட்டுத் தட்டு மாதிரி முடி வெட்டி இருந்தேன். அதைப் பார்த்துட்டு கவுண்டமணி அண்ணன், 'அட நாயே... நாயே! தெருவுல போற கண்ட நாய்கிட்டலாம் மண்டையைக் கொடுத்தா, இப்படித்தான் நக்கிவிட்ரும்’னு முதல் நாளே ஏக கலாட்டா பண்ணிட்டார்.
'கண்ணும் கண்ணும்’ படத்துல வடிவேலுகிட்ட 'அண்ணே! போலீஸ்காரங்க என்னை விரட்டிட்டு வர்றாங்க. உங்ககிட்ட நான் எங்கேன்னு கேட்பாங்க. எதையும் சொல்லிப்புடாதீங்க. அடிச்சும் கேட்பாங்க. அப்பயும் சொல்லிப்புடாதீங்க’ன்னு காமெடி பண்ணது இப்பவும் என்னைப் பரபரப்பா ஓடவெச்சுட்டு இருக்கு. என்கூடப் பிறந்தவங்க மொத்தம் 16 பேர். குடும்பம் குட்டி என்னாச்சுன்னு ஊருக்குப் போய் பாக்கலாம்னா, எனக்கு இன்னும் இந்திய பாஸ்போர்ட் தர மாட்டேங்கிறாங்க. ஜே.கே.ரித்தீஷ் சார்தான் பாஸ்போர்ட் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கார். சிங்கமுத்து, ராதாரவி, விஜயகாந்த் அண்ணன்மார்களின் உதவியால் நடிகர் சங்கத்துலவெச்சே எனக்குக் கல்யாணம் நடந்தது. இப்போ ரெண்டு பசங்க. வாழ்க்கை சந்தோசமா இருக்குண்ணே!''
ஷாம்ஸ்: ''என் பேரு சுவாமிநாதன். சொந்த ஊர் திருச்சி. டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சேன். ஒரு கம்பெனியில் சூப்பர்வைசர் வேலை பார்த்துட்டு இருந்தப்பவே, நான் கலகல பேர்வழி. சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து நொந்து நூலாகி, அந்து அவலாகி, 'காதல் மன்னன்’ படத்தில் ஒரே ஒரு பாஸிங் ஷாட் நடிச்சேன். அதுக்கே வாய்ல நுரை தள்ளிடுச்சு. அப்படியே 'கிரேஸி’ மோகன் சார் டிராமா ட்ரூப்ல 10 வருஷம் செட்டில் ஆகிட்டேன். அதுதான் என் குருகுலம். அப்புறம் பிரபு சாலமன் சாரோட 'கிங்’ பட வாய்ப்பு கிடைச்சு, அப்புறம் சின்னதும் பெருசுமா நடிச்சு, இப்போ 'பயணம்’ என் அம்பதாவது படம். 'அறை எண் 320-ல் கடவுள்’ பட சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கேரக்டர்ல நம்ம மேல ஹெலிகாப்டர் லைட்டே பாய்ச்சிருச்சு. சினிமாவில் ஏற்கெனவே சில சுவாமிநாதன்கள் இருந்ததால், 'ஷாமா’ன்னு பேரைச் சுருக்கினேன். ஆனா, எல்லாரும் 'சாமான்... சாமான்’னு சொல்லி டார்ச்சர் பண்ணினதால், 'ஷாம்ஸ்’ங்ற செல்லப் பேரையே நிரந்தரமா வெச்சுக்கிட்டேன். என் மனைவி உமா மகேஸ்வரி, ஸ்கூல் டீச்சரா இருக்காங்க. அஸ்வத்னு ஒரு பையன். அக்ஷயானு ஒரு பொண்ணு. ஷாம்ஸ் சந்தோஷமா இருக்கான் சார்!''
ஷங்கர்: ''ஒரு தடவை சிட்டி பஸ்ல போயிட்டு இருந்தப்ப, பக்கத்துல இருந்தவர் செல்போன் காணலைன்னு கத்த ஆரம்பிச்சுட்டார். நானும் பதற்றமாகி 'நம்பர் சொல்லுங்க... கால் பண்ணுவோம். பக்கத்துல இருக்குற யாராவதுதான் எடுத்திருக்கணும்’னு என் செல்போனைக் கையில் எடுத்தேன். உடனே, பக்கத்துல போதையில் நின்னுட்டு இருந்தவர், 'டேய்... இந்தச் சின்ன வயசுல உனக்கேதுடா செல்போன். நீதான்டா திருடி இருக்கே!’னு சண்டைக்கு வந்துட்டாரு. கண்டக்டர்தான் 'யோவ்... தம்பி நம்ம ரெகுலர் கஸ்டமர்யா!’னு சொல்லிக் காப்பாத்தினார். இந்தத் தொல்லையே வேணாம்னு இப்ப டி.வி.எஸ். 50 வாங்கிட்டேன்!''- சிரிக்கும் சங்கர் என்கிற சங்கர நாராயணனின் வயசு 22.
''சொந்த ஊர் மதுரை பக்கத்துல திருமங்கலம். 'சினிமாவில் நடிக்க ஆசை உள்ளவர்கள் அணுகவும்’னு நியூஸ் பேப்பர் விளம்பரத்தை வெட்டி எடுத்துட்டு சென்னைக்கு ரயில் ஏறிட்டேன். திருவொற்றியூர் பக்கத்துல பாத்ரூம் சைஸ்ல ஒரு ரூம் போட்டு காசு வசூல் பண்ணிட்டு இருந்துச்சு ஒரு கும்பல். '500 ரூபாய் கொடுங்க. பிறகு, உங்க பையன் கையத் தூக்கினாலும், காலைத் தூக்கினாலும் காசு கொட்டும்’ னாங்க. டுபாக்கூர் பார்ட்டிங்கன்னு தெரிஞ்சு தப்பிச்சு, பாக்யராஜ் சார் ஆபீஸ்ல போய் நின்னேன். பாக்யா பத்திரிகையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அங்கே என்னைப் பார்த்த லிங்குசாமி சார் மூலமா 'ஜி’ பட வாய்ப்பு கிடைச்சது. ஆரம் பத்துல சினிமா ரீச் எனக்குப் புரியலை. ஆனா, இப்போ எங்கே போனாலும் நம்மளைக் கண்டுக்குறாங்க. 'அம்பாசமுத்திரம் அம்பானி’யில் முழு நீள காமெடி கேரக்டர். விகடன்லயே என்னைப் பாராட்டி எழுதி இருந்தாங்க. பாக்யராஜ் சார், இயக்குநர் குருநாத், கருணாஸ் இவங்க எல்லாருக்கும் நன்றி!''
|