Monday, November 28, 2011

மழை, குளிர் காலம் தரும் அவஸ்தைகள்......

மழை, குளிர் காலம் தரும் அவஸ்தைகள் ஏராளம். சளி, தும்மல், இருமல், தலைவலி என்று பாடாய்படுத்தி விடும். குளிர் காற்று காதில் நுழைந்து தொண்டையில் அமர்ந்து செய்யும் சேட்டைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள சில வழிகளைச் சொல்லட்டுமா?

குளிர் காற்று அதிகாலையில் வீட்டில் வேலைகளைத் துவங்கும் பெண்களை அதிகம் தாக்குகிறது. அதிகாலை எழுந்து விடும் அனைவரையும் குளிர் தாக்கும். குளிர் காலங்களில் அதிகாலை நேரத்தில் வெளியில் நடமாட நேர்ந்தால் உல்லன் துணிகளால் காதுகளை நன்றாக மூடி கட்டிக் கொள்ளலாம். [ஜாக்கிரதை முகமூடித் திருடனென முக்கில் நிர்க்கும் போலீஸ் சந்தேகத்தில் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.] பஸ், பைக்கில் பயணிக்கும் போதும் இதை கடைபிடிப்பது சிறந்தது. 

காதுத் தொற்று நோய்களின் மூலம் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். காதுத் தொற்று ஏற்படும் போது உடனடியாக மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஜலதோஷம் உள்ளிட்ட சுவாசத் தொற்றுகளின் வழியாகவே காது பாதிப்புக்கு உள்ளாகிறது. சளி காரணமாக எலும்புக் குழி மற்றும் யூஸ்டேச்சியன் குழல்களில் உள்ள படலங்களில் அழற்சி ஏற்பட்டு வீக்கம் உண்டாகும். குறிப்பாக குழந்தைகளின் யூஸ்டேச்சியன் குழல் பெரியவர்களைக் காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும். இதனால் அழற்சி ஏற்படுத்தும் தொற்றுகளினால் அவை உடனடியாக அடைபடும் வாய்ப்பு உள்ளது. அதனால் குழந்தைகளின் விஷயத்தில் கவணம் கொஞ்சம் அதிகமாக இருக்கனும்.
நடுக்காதில் திரவ தேக்கம் ஏற்பட்டு பாக்டீரியாக்கள் பல்கி பெருகும் சூழல் குளிர்காலத்தில் அதிகம் இருக்கும். இவற்றை தடுக்க காதில் வலி ஏற்பட்ட உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். சளித் தொல்லையின் அடுத்தகட்ட வளர்ச்சி இருமல். 

இருமல் மூலம் சுவாசப் பாதையில் அடைபட்டிருக்கும் சளி வெளியேற்றப்படுகிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி இருமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தொடர் இருமலால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். அதே போல் சுவாசப்பாதையான மூக்கில் வைரஸ் தொற்றின் மூலம் சளி மற்றும் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகும். 

இந்த தொற்றின் அடுத்த கட்டமாக குரல் வளையில் வீக்கம் ஏற்பட்டு குரல் கரகரப்பதுடன் பேச முடியாத நிலை ஏற்படும். குளிர்காலத்தில் தூசு அலர்ஜி மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டியது மிகவும் அவசியம். இல்லை எனில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும். குளிர்கால நோய்கள் காது, மூக்கு, தொண்டையை உடனடியாக பாதிக்கும் வாய்ப்புள்ளதால் அவற்றை தடுப்பதற்கான பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். சிறிய பிரச்னை வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியதும் அவசியம். 

சரி இதுக்கெல்லாம் என்ன ரெசிபி? இயற்க்கையான சில தீர்வுகள் சில சொல்கிறேன்..... 

1. வெண்டைக்காய் சூப்: 

6 வெண்டைக்காய்களை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வெறும் வாணலியில் வழவழப்பு போக வறுத்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, தக்காளி 1 ஆகியவற்றை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். இத்துடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பருப்பு வேக வைத்த தண்ணீர் இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் இரண்டு வெட்டிப் போடவும். சீரகம், மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இறக்கும் போது நான்கு சொட்டு எலுமிச்சை சாறு, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து இறக்கவும். குளிருக்கு குடிப்பதற்கு இதமாக இருக்கும். 

2. காலிபிளவர் சப்ஜி: 

பெரிய காலிபிளவர் பூ ஒன்றை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் சின்ன வெங்காயம் ஒரு கப், தக்காளி 2, அரை மூடி துருவிய தேங்காயில் இருந்து எடுத்த தேங்காய்ப்பால், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், தக்காளி சாஸ் 1 டீஸ்பூன், தேவையான அளவு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கவும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூளை சேர்க்கவும். காலிபிளவரையும் சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கடைசியில் தேங்காய்ப்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் தக்காளி சாஸ், உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். இதுவும் குளிரைத் தாங்கும் ஆற்றலைக் கொடுக்கும். 

3. அரிசி போண்டா: 

இட்லி மாவு இரண்டு கப் எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் நிலக்கடலையை மிக்சியில் பொடி செய்து இந்த மாவுடன் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கொட்டவும். இத்துடன் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைக்கவும். அரை மணி நேரம் மாவு ஊறிய பின்னர் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதுவும் சக்தியான குளிருக்கேற்ற சுவையான உணவுதான்.

சில உணவுக்கட்டுப்பாடுகள். (டயட்)


குளிர் காலத்தில் ஏற்படும் காது, மூக்கு, தொண்டை பிரச்னையைத் தவிர்க்க என்ன சாப்பிடலாம்? 

குளிர் காலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த காற்றே இருப்பதால் சுவாச பிரச்னைகள் இருக்கும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களை சுவாச பிரச்னைகள் எளிதில் தாக்கும். மேலும் சரியான உணவுப்பழக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையும் குளிர்கால நோய்கள் உடனடியாக தாக்கும். குளிர்காலத்தில் டான்சில் பிரச்னையை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே குளிர்ச்சியான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை (குறிப்பாக வெளிநாட்டில் தனியாக வாழும் ஆட்களுக்கு) வைத்து சாப்பிடுவதை தவிர்க்கவும். மீறி சாப்பிட்டே ஆக வேண்டுமென்ற கட்டாயத்திலிருப்பவர்கள் ஃபிரிட்ஜில் வைத்திருந்த உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரம் முன்பு வெளியில் வைத்திருந்து நன்றாக சுட வைத்து சாப்பிடவும். ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். பழங்கள் மற்றும் கீரை வகைகளை குறைவாக உணவில் சேர்க்கவும். குளிர் காலத்தில் ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பதால் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதுவே சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் வருவதற்கு காரணம். குளிர் காலத்தில் நோய்த் தொற்று ஏற்படும் நபர்கள் உணவு வகைகள் சூடாக எடுத்துக் கொள்வது அவசியம். மசாலா வகை உணவுகள் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவுகள் தான் இந்த காலத்துக்கு ஏற்றது. பருப்பு வகைகள், முட்டை, மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். பாலில் குறைந்தளவு சர்க்கரை மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் குடிப்பதன் மூலம் தொண்டை சார்ந்த பிரச்னைகள் குறையும். உறையும் தண்மையுடைய கொழுப்பு எண்ணை மற்றும் உணவுகளைத் தவிர்க்கவும்.

இதேபோல் நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி சத்து உள்ள பழங்கள், காய்கள் சாப்பிட வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி, தக்காளி, முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்ட சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தமிழ்ப் பெண்ணாயிருந்து விட்டு பாட்டி வைத்தியம் சொல்லாமல் போவதா? இதோ சில பாட்டி வைத்தியம்..

* ஆடா தொடை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு, தலைவலி குணமாகும். 

* ஆடா தொடை வேர், கண்டங்கத்திரி வேர், திப்பிலி மூன்றையும் ஒன்றாக பொடி செய்து சாப்பிட்டால் இருமல் நிற்கும். 

* ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும். 

* ஆகாயத் தாமரை இலைச்சாறுடன் பன்னீர், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாகும். 

* அவரை இலைச்சாறை துணியில் நனைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலை வலி, தலைபாரம், சைனஸ் பிரச்னைகள் சரியாகும். 

* ஒரு பிடி அருகம்புல்லை இடித்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி, சைனஸ் ஆகியவை சரியாகும். 

* அதிமதுரம், ஆடாதொடை இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும். 

* அகில் கட்டை, திப்பிலி, சுக்கு, சித்தரத்தை அனைத்தையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல், சளி, இருமல், நுரையீரல் நோய்கள் குணமாகும். 

* அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப் பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடித்தால் தொடர் தும்மல் நிற்கும்.


குறிப்பு- 

ஆடா தொடை, கண்டங்கத்திரி, அகில் கட்டை, திப்பிலி, சுக்கு, அதிமதுரம் இவைகள் எல்லாம் பக்கத்திலிருக்கும் நாட்டு மருந்துக் கடையில் கேட்டால் கிடைக்கும்.

கனிமொழியுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தேன்: கருணாநிதி

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மாநிலங்களவை உறுப்பினரும், தன்னுடைய மகளுமான கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்தார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார் உள்பட 5 பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் மகிழ்ச்சி தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, "கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நீதிமன்றம் ஜாமீன் உத்தரவு பிறப்பித்தவுடனே என்னிடம் அவர் தொலைபேசியில் பேசினார். இவரும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டோம்," என்றார். 
சென்னையில் கனிமொழிக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள் என்றவரிடம், கனிமொழிக்கு கட்சியில் புதிய பதவி ஏதேனும் அளிக்கப்படுமா என்று கேட்டதற்கு, "நான் முடிவு செய்ய முடியாது. கனிமொழிக்கு புதிய பதவி அளிப்பது பற்றி கட்சி தான் முடிவு செய்யும்," என்றார். 

முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோருவாரா என்பது பற்றி கேட்டதற்கு, தன்னிடம் ராசா பேசினால், அவரது ஜாமீன் பற்றி ஆலோசிக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார். 

2ஜி வழக்கில், கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துள்ளதில், திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கடந்த மே 20-ல் இருந்து 6 மாத காலமாக, திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் டாப் 10 படங்கள் - ஓர் அலசல்

தமிழ்நாட்டில் எம் ஜி ஆருக்கு அடுத்ததாக மக்களிடையே பிரம்மாண்டமான வரவேற்பு பெற்றவர் யார் என்பதில் யாருக்குமே கருத்து வேற்றுமை இருக்க முடியாது.கரிஷ்மா எனப்படும் ஆகர்ஷ்ண சக்தி ரஜினிக்கு உண்டு.வேறு எந்த நடிகருக்கும் இந்த அளவு ரசிகர்களும் இல்லை. ரஜினியின் தோல்விப்பட வசூல் மற்ற ஒரு நடிகரின் வெற்றிப்பட வசூலுக்கு நிகர் என்றால் ரஜினியின் வெற்றிப்பட வசூல் எவ்வளவு இருக்கும் என சொல்லத்தேவை இல்லை.

10. நினைத்தாலே இனிக்கும். - கே பாலச்சந்தரின் படங்களில் மிக ஜாலியான படம்.கதை ஒரே வரியில் சொல்லி விடலாம்.படத்தின் ஹீரோ கமல் என்றாலும் ரஜினி இதில் செம கலக்கலாய் பண்ணி இருப்பார்.படம் முழுக்க சம்போ என்ற பஞ்ச் அடிக்கடி சொல்வார்.அந்தக்காலத்தில் அது ஃபேமஸ்.சம்போ சிவ சம்போ சிவனே மந்திரம் பாட்டுக்கு ரஜினியின் எக்ஸ்பிரஸ்ஸன் மார்வலஸ்.இதில் உதட்டில் ஸ்டைலாக சிகரெட் தூக்கிப்போடும் சீன் செம ஹிட்.பந்தயம் வைத்து கடைசி தடவை தூக்கிப்போடும்போது அவருக்கு கை நடுங்கி போட்டியை கேன்சல் பண்ணுவது செம காமெடி.

9. முள்ளும் மலரும் -ஸ்டைலுக்கு மட்டும்தான் ரஜினி,ஃபைட் தவிர அவருக்கு வேறு சரக்கில்லை என்று கதை கட்டிக்கொண்டிருந்தவர்களின் வாயை அடைக்கும் வண்ணம் பிரமாதமான குணச்சித்திர நடிப்பை வாரி வழங்கி இருப்பார்.நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாட்டு செம ஹிட் மேலும் அந்தப்பாட்டுக்கு ரஜினியின் இன்வால்மெண்ட் அருமை.

8. தில்லுமுல்லு - ரஜினிக்கு முதல் முழு நகைச்சுவைப்டம் தம்பிக்கு எந்த ஊரு என பலர் நினைத்துக்கொண்டு உள்ளனர்.ஆனால் தில்லுமுல்லுதான் அவருக்கு செம ஹிட் காமெடி படம்.மீசை இல்லாமல் ஒரு ரஜினி ,மீசையுடன் ஒரு ரஜினி என நம்ப வைத்து கோல்மால் பண்ணுவது ,தேங்காய் சீனிவாசன் ஏமாறுவது இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது.

7.வேலைக்காரன் - பொதுவாக ரஜினி சிகை அலங்காரத்தில் அவ்வளவாக அக்கறை காண்பிக்க மாட்டார்.கலைந்த முடிதான் அவருக்கு அழகு,அதை ஸ்டைலாக ஓரம் ஒதுக்கும் அவர் ஸ்டைலுக்கு விசில் அடிக்க தமிழ்நாட்டில் கூட்டம் காத்துக்கொண்டிருக்கும்.அவரே மிக அக்கறை எடுத்து அழகாக தலை சீவி வந்தார் என்றால் அது வேலைக்காரன்தான்.கோல்டு ஃபிஷ் என வர்ணிக்கப்பட்ட அமலா அவருக்கு ஜோடி என்பது ஒரு காரணம்.இந்தப்படத்தில் ரஜினி இங்கிலீஷ் பேசும் ஸடைல் செம ஹிட்,இதற்குப்பிறகு வந்த பல படங்களில் அப்படி இரு சீன் வைக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் கேட்டு வாங்கினர்.தொடர்ந்து 3 படங்கள் சரியாக ஓடாத நிலையில் இந்தப்படம் மெகா ஹிட் ஆகி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

6.அண்ணாமலை - இந்தப்படத்தில்தான் முதன்முதலாக டைட்டிலில் ர , ஜி ,னி என ஒவ்வொரு எழுத்தாக வந்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றது.இந்தப்படத்திலிருந்துதான் அதே ஸ்டைல் தொடரப்பட்டது.நான் பாட்டுக்கு என் வழில போய்ட்டிருக்கேன்,வீணா என்னை சீண்டாதீங்க என அவர் பேசிய பஞ்ச் டயலாக் செம ஹிட்.இந்தப்படம்தான் அவரது ரசிகர்களிடம் அவர் அரசியலுக்கு வரப்போறார் என எதிர்பார்க்கவைத்த படம்.ஓப்பனிங்க் சாங்கில் வந்தேண்டா பால்காரன் பாட்டு ரஜினியின் அறிமுகம் செம கலக்கல்.

5. மாப்பிள்ளை - சவால் விடும் கேரக்டர் எப்போதும் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்தமானது.இதில் மாமியாருடன் சவால் விட்டு ஜெயிப்பது சூப்பராக இருக்கும்.உன்னைத்தான் நித்தம் நித்தம் அக்கம் பக்கம் பாட்டுக்கான் டான்ஸ் வித்தியாசமான ஸ்பீடு ஸ்டெப்ஸ் கலக்கி இருப்பார்

4.மன்னன் - ஒரு சூப்பர் ஸ்டார் கன்னத்தில் அறை வாங்குவது மாதிரி நடிக்க ஒப்புக்கொண்டதே அவர்து பெருந்தன்மையை காண்பிப்பது.விஜயசாந்திக்கு சரி சம கேரக்டர்.இருவரும் மோதிக்கொள்ளும் ஒவ்வொரு சீனும் தூள்.இதில் ரஜினி கூலிங்க் கிளாஸ் உடன் தொன்றும் முதல் சீன் கலக்கல்.மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ பாட்டில் ரஜினி ராஜா கெட்டப்பில் ஒரு நடை நட்ப்பாரே ,சோ க்யூட்.

3. தளபதி - மணிரத்னம் ரஜினி இணைந்த இந்தப்படம்தான் முதன்முதலாக ரஜினி நடித்த படங்களில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளானது.ஈரோடு அபிராமி தியேட்டரில் பால்கனி டிக்கெட் ரூ 6 க்கு விற்கப்பட்ட டைமில் இந்தப்பட டிக்கெட் ரூ 90 க்கு விற்கப்பட்டது.ரேஷியோ அடிப்படியில் பார்த்தால் இது எந்திரன் டிக்கெட் ரேட்டை விட அதிகம்.(எந்திரன் ரூ 50 டிக்கெட் ரூ 250க்கு விற்கப்பட்டது) தளப்தி பட டிக்கெட் 15 மடங்கு அதிகமாக விற்கப்பட்டது.

இந்தப்படத்தில் ரஜினி படம் முழுக்க ஒரு இறுக்கமான முகத்துடன் நடித்துஇருப்பார்.அடி ராக்கம்மா கையைத்தட்டு பாட்டுக்கு அவரது உற்சாகத்துள்ளல் டாப்
1.தேவா உயிர் பிழைச்சுடுவான்
யார்?டாக்டர் சொன்னாரா?
இல்லை ,தேவாவே சொன்னான்.

2. வெறும் பணம்.

3. தப்பு செஞ்சான் ,அடிச்சேன்,போயிட்டான்.

4. உன் தம்பின்னு தெரிஞ்சுமா நீ எனக்கு சப்போர்ட்டா இருக்கே?ஏன்? ஏன்?

ஏன்னா நீ என் நண்பன்.

இந்த டயலாக் பேசும்போது ரஜினியின் முக உணர்ச்சிகளும் ,ரசிகனின் ரசிப்புத்தன்மையும் அட்டகாசம்.

2.படையப்பா - இந்தப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியக்காரணம் ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் வில்லி என்பது மட்டும் அல்ல ,அவர் ஜெயலிலிதா மாதிரி சித்தரிக்கபட்டதும் ஒரு காரணம்.ரஜினி ரம்யாவை எதிர்த்து டயலாக் பேசும்போது ஜெவையே எதிர்ப்பதாய் ரசிகர்கள் ஆரவாரம் இட்டனர்.ரம்யா சேர் போடாமல் அவரை நிற்க வைத்து அவமானப்படுத்தும்போது தோளில் இருந்த துண்டால் ஊஞ்ச்லை இறக்கி அமர்வது ஒரிஜினல் ரஜினியின் அக்மார்க் முத்திரை.

1.பாட்ஷா - இது போல் ஒரு படம் இதுவரை வந்ததும் இல்லை,இனி வரப்போவதும் இல்லை.கமிஷனர் ஆஃபீசில் தம்பியின் போலீஸ் வேலைக்காக ரஜினியை பார்க்க அழைக்கப்பட ரஜினி ஒரு நடை நடந்து வருவாரே...வேறு எந்த நடிகராலும் நடக்கவே முடியாது.அதே போல் தங்கைக்கு காலேஜில் சீட் கேட்கும் சீனில் பிரின்சில் ரூமில் அவர்து ஸ்டைல் செம.வெளியே வந்ததும் சீட் எப்படி கிடைச்சது?என்ன சொன்னே? உண்மையை சொன்னேன் என தெனாவெட்டாக ரஜினி சொல்லும்போது கைதட்டல் தியேட்டரை குலுக்கும்..இடைவேளை வரை பொறுமைகாக்கும் ரஜினி தங்கை உதட்டில் ரத்தம் பார்த்ததும் பொங்கி பாய்வது தூள்.அவர் காக்கிச்சட்டையை இடதும் வலமுமாக இழுத்து விட்டு ஸ்டைலாக நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்ற வசனம் பேசும் ஸ்டைல் சரித்திரப்பிரசித்தி பெற்றது.

பெண்கள் தனி அறையில் வைத்து இணையதளங்களை இயக்க அனுமதிக்க கூடாது ?

சமூக வலைதளங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவியரை குறிவைத்து மோசடி செய்யும் வக்கிர கும்பல்களின் செயல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் மாணவியர் மட்டுமின்றி, பெற்றோரும் உஷாராக இருக்க வேண்டும்.


இன்றைய நவீன உலகில், மக்களின் அடிப்படை தேவைகளில், மொபைல்போன் மற்றும் இன்டர்நெட்டும் இடம்பிடித்துள்ளன. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள இன்டர்நெட் உதவுகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் சாதகம், பாதகம் இரண்டும் கலந்திருக்கும்.
அந்த வகையில் பல்வேறு சிறப்பம்சங்களை இன்டர்நெட் கொண்டுள்ள போதும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடக்க இது முக்கிய காரணமாக உள்ளது.பிறருடன் பேசவும், எஸ்.எம். எஸ்., அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது இன்டர்நெட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது; வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, தினமும் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அதன் மூலம் தங்களின் அன்பை பரிமாறி கொள்வதை வழக்கமாக கொண்டு பலர் செயல்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பு வயதினரிடமும் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக, மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) எஸ். எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.



"பேஸ்புக்' 'டிவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் தங்களின் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பதிவு செய்வதன் மூலம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு பகுதிகளிலுள்ள தங்களுடைய நண்பர்கள்,உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இதன் காரணமாக மொபைல் போன்களிலிருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பும் முறைக்கு பலர் "குட் பை' சொல்ல துவங்கிவிட்டனர்.சமூக வலைதளங்களில் தங்களின் விபரங்களை ஒருவர் பதிவு செய்யும் போது, தகவல்களுடன் சேர்த்து தங்கள் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். வலைதளங்கள் மூலம் ஒருவருடன் நண்பர்களாக வேண்டும் என்றால், தங்களின் விருப்பத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு குறுந்தகவலாக அனுப்ப வேண்டும்; மறுமுனையில் சம்பந்தப்பட்ட நபர் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இருவரும் வலைதளத்தில் நண்பர்களாகி கொள்ளவும், தங்களின் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடவும், உறவுகளை இணைக்கும் பாலமாகவும் உதவி வரும் சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவியருக்கு எதிரான சைபர்கிரைம் குற்றங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.



சமூக வலைதளங்களில் பெண்களின் பெயர்களை டைப் செய்தால், குறிப்பிட்ட பெயருக்கு 25க்கும் மேற்பட்டவர்கள் குறித்த முழு விபரங்கள் போட்டோக்களுடன் வெளியிடப்படுகின்றன. இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆசாமிகள், அறிமுகமில்லாத பெண்களுக்கு தாங்களாகவே, "நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்' என தெரிவிக்கும் தகவல்களை அனுப்புகின்றனர். தங்களுக்கு தெரியாத நபர்கள் அனுப்பும் இத்தகைய வேண்டுகோளை ஏற்காமல் நிராகரிக்கும் பெண்கள் எவ்வித ஆபத்திலும் சிக்காமல் தப்பிவிடுகின்றனர். எனினும் தங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் பெண்களிடம் நல்லவர்களை போல் சில நாட்கள் நடித்து அவர்களின் மொபைல்போன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர். நாளடைவில் நேரில் சந்திப்பது, பொது இடங்களுக்கு சென்று வருதல், பண பரிமாற்றம் என துவங்கி, ஏமாறும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றியும், அவர்களிடமிருந்து பணம்,நகை, "லேப்டாப்' உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தும் சென்றுவிடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் பலர்,போலீசில் புகார் தெரிவிக்க முன்வருவதில்லை.

கோவை மாநகர சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கம்ப்யூட்டர்களில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்தும்போது, அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை பெண்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தங்களின் அந்தரங்க தகவல்கள் குறித்து நெருங்கிய தோழிகளுடன் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது. பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளின் இணையதள பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். தனி அறையில் வைத்து அவர்கள் இணையதளங்களை இயக்க அனுமதிக்க கூடாது' என்றனர்.

பெற்றோர், ஆசிரியர், உடன்பிறப்புகள், உறவினர்கள் உள்ளிட்டவர்களின் அறிவுரை ஒருபுறமிருந்தாலும், இன்டர்நெட் பயன்படுத்தும்போது பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.