Thursday, April 7, 2011

போய் வா பிரவுசரே! போய் வா!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பிரவுசரைப் பயன்படுத்தக் கூடாது என்று மக்களைக் கேட்டுக் கொள்வதற்காக, ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா! உண்மை அதுதான். http://ie6count down.com/ என்ற தளம் அதைத்தான் செய்கிறது. "பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிரவுசர் ஒன்று பிறந்தது. அதன் பெயர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6. இப்போது அதற்கு விடை கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற வாசகத்துடன் இந்த தளம், மக்களை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 6லிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறது. உலக அளவில் தற்போது 12% பேர், இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை எப்பாடு பட்டாவது 1% ஆகக் குறைக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது.
இந்த தளத்தில், இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதனால் என்ன என்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று எச்சரிக்கப்படுகிறது. ஏன் பிரவுசரை அப்கிரேட் செய்து, பின்பு வந்த பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விவரமாக எடுத்துச் சொல்லப்படுகிறது.
இந்த அறிவுரைகளைப் பல மொழிகளில் மைக்ரோசாப்ட் எடுத்துரைக்கிறது. ஏனென்றால், ஆங்கிலம் அல்லாத மொழி பேசும் நாடுகளில் தான் இந்த பிரவுசர் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் இந்த பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் 34.5% பேர். தென் கொரியா, இந்தியா, தைவான், சவுதி அரேபியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் 10% பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

நீங்கள் எப்படி? நவீனமான பிரவுசரா? பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரரா? பதிப்பு 6 என்றால் தயவு செய்து விட்டுவிடுங்கள்.

இணையத்தில் யார் அதிக நேரம்!

இணைய தளப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் காம்ஸ்கோர் நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, இணையத்தில் யார் அதிக நேரம் உலா வருபவர்கள் தெரியுமா? அமெரிக்கர்களா? பிரிட்டிஷ்காரர்களா? சீன அல்லது இந்தியக் குடிமக்களா? இவர்கள் யாரும் இல்லை. கனடா நாட்டு மக்கள் தான் அதிக நேரம் இணையத்தில் உள்ளனர். 2010 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒவ்வொருவரும் சராசரியாக 43.5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். இது பன்னாட்டளவிலான சராசரி நேரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானவர் களின் வயது 55க்கும் மேல் என்பது இன்னொரு வியத்தகு செய்தி. 2009 ஆம் ஆண்டிலும் இதே பெருமையை கனடா தட்டிச் சென்றது. தற்போது கனடாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர்.
இதே காலத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 35.5 மணி நேரமும், பிரிட்டிஷ் நாட்டவர் 32.3 மணி நேரமும், தென் கொரியாவினைச் சேர்ந்தவர்கள் 27.7 மணி நேரமும் இணையத்தில் இருந்துள்ளனர்.
இந்திய இணையம் குறித்து இங்கே பார்க்கலாமா!

மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது. மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன.
காம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர். இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். யு ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன. 78 கோடி தடவை இவை காணப்படுகின்றன.
பேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி@ய ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர்.

பூமிக்கு அப்பால் உயிரினம்


விண்வீழ்கற்களில் புதையுண்ட நுண்ணு யிரிகளைத் தாம் கண்டறிந்துள்ளதாக  அமெரிக்காவின் நாசா விஞ்ஞானி ரிச்சார்ட் ஊவர் தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நுண்ணுயிர்கள் பூமியில் இருப்பவற்றுக்கு ஒத்ததாக இருக்க வில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவ்வாய்வு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், பூமியில் மட்டுமல்லாமல் பேரண்டத்தில் உயிரினங்கள் பரவலாக வாழ்வதும், சூரிய மண்டலத்தில் உலாவும் வால்நட்சத்திரம், நிலாக்கள் மற்றும் விண்பொருட்களில் இருந்து பூமிக்கு உயிரினம் வந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. நாசா விஞ்ஞானி ரிச்சார்ட் ஊவரின் இவ்வாய்வு பற்றிய அறிக்கை அண்டவியல் ஆய்வேட்டில் (Journal of Cosmology) வெளி யிடப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிர்கள் உண்மையில் வெளியுலக உயிரா என்பது முழுமையாக நிரூபிக்க முடியாததெனிலும் இது ஒரு முக்கிய ஆய்வாகக் கருதப்படுகிறது.  மிகவும் அரிதான சிஐ1 சார்பனேசசு கொண்ட் ரைட்ஸ் (CII Carbonaceouts chondrites என அழைக்கப்படும் விண்வீழ்கற்கள் (meteorites ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவ்வகையான ஒன்பது விண் வீழ்கற்கள் பூமியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதர அறிவியலாளர்கள் இது பற்றிய இன்னும் சில ஆய்வுகளும் ஆழ விசாரணைகளும் தேவை எனக் கூறி உள்ள னர். ""இவ்வாறான அறிக்கைகள் இதற்கு முன்னரும் வெளிவந்துள்ளது,'' என நாசாவின் ஏமெஸ் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி டேவிட் மொராயசு தெரிவித்தார். ""இது ஒரு அசாதாரண ஆய்வு முடிவு. இவ்வாறான முடிவுகளுக்கு உறுதிப் படுத்தக்கூடிய சான்றுகளை எதிர்பார்க்கிறேன்,'' என்று மேலும் அவர் கூறினார்.



குளோரி விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் கலிலிபோர்னியாவில் இருந்து அனுப்பப்பட்ட குளோரி என்ற விண்கலம் ஏவிய சில நிமிட நேரத்தில் குறித்த இலக்கை அடையாமல் பசிபிக் பெருங்கடலிலில் வீழ்ந்தது. காலநிலை (ஹங்ழ்ர்ள்ர்ப்) தாக்கத்தினை அறிவதற்காக இந்த விண்கலம் உருவாக்கப் பட்டது. இதன் தோல்வியினால் நாசாவிற்கு 424 மில்லிலியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ள தாகக் கணிக்கப்பட்டுள்ளது.

விண்கலம் புறப்படுவதற்கு முன்னர் எவ்வித கோளாறும் இருக்கவில்லை என நாசா அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனாலும் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் இழுவைக் குறைப்பமைவு (fairing) எனப்படும் விலகல் இடம்பெறவில்லை. ""கோள்பாதையில் செலுத்த தங்களால் முடிய வில்லை எனவும் விண்கலம், அதனைக் கொண்டு சென்ற ஏவுகணையும் பசிபிக்  கடலிலின் தென்பகுதியில் ஏதோ ஒரு இடத்தில் வீழ்ந்திருக்க வேண்டும் என நம்புகிறோம்,'' என அவர் கூறினார்.  

டிஸ்கவரி விண்கலம் 

அமெரிக்காவின் டிஸ்கவரி விண்கலம் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு சென்ற மாதம் ஏவப்பட்டது.

எஸ்டிஎஸ்-133 என்ற டிஸ்கவரியில் ஆல்வின் ட்ரூ, நிக்கோல் ஸ்டொட், எரிக் போ, ஸ்டீவன் லின்ட்சி, மக்கல் பாரட், ஸ்டீவ் போவன் ஆறு விண்வெளி வீரர்களுடன் இது புறப்பட்டது. 11 நாட்கள் விண்ணில் தங்கி யிருக்கும் இவ்விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு புதிய களஞ்சிய அறை ஒன்றையும், உயர் தொழில்நுட்ப எந்திரன் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளது. 

1984-ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்ணுக்கு ஏவப்பட்ட டிஸ்கவரிக்கு இது 39-ஆவது பயணம் ஆகும். இப்பயணத்துடன் இது மொத்தம் 230 மில்லிலியன் கிமீ தூரம் பறந் திருக்கிறது. இந்த 39-ஆவது பயணத்திற்கு எஸ்டிஎஸ்-133 (STS-133) எனப்பெயரிடப் பட்டுள்ளது. நாசாவின் விண்கலங்கள் அனைத்தும் இவ்வாண்டு இறுதிக்குள் ஓய்வெடுக்க இருக்கின்றன. அதன் பின்னர் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் செல்லத் திட்ட மிடப்பட்டுள்ளது. "ஆஸ்டிரோயிட்' எனப் படும் சிறுகோள்களை நோக்கி மனிதர்களை அனுப்புவது நாசாவின் அடுத்த திட்டங்களில் ஒன்றாகும். 

வெண்கலக் கால மனித எலும்புகள்

ஸ்காட்லாந்தில் வெண்கலக் கால மனித எலும்புகள் அடங்கிய இரண்டு ஜாடிகள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆங்கசு என்ற பிரதேசத்தில் உள்ள கிரிமுயர் என்ற நகரில் உடைந்த கற்பாறை ஒன்றின் கீழே இந்தச் ஜாடிகள் தொல்லிலியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதைகலங்களும் 4, 000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வகையான கலங்கள் வெண்கலக் காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியைச் சேமிக்கப் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. இக்கலங்களில் ஒன்று 4 அங்குல விட்டமுடையதென்றும், மற்றென்று 8 அங்குலம் எனவும் தொல்லிலிய லாளர்கள் தெரிவித்துள்ளனர். ""வெண்கலக் காலத்தில் இறந்தவர்கள் விறகுகளைக் கொண்ட அடுக்குகளில் வைத்து எரிக்கப்பட்டு பின்னர் அவர்களின் எலும்புத்துண்டுகள் சேகரிக்கப்பட்டு இவ்வாறான ஜாடிகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன,'' என மசெல் பரோவைச் சேர்ந்த தொல்லிலியலாளர் மெலனி ஜோன்சன் தெரிவித்தார். கண்டெடுக்கப்பட்ட கலங்களில் பெருமளவு எலும்புத்துண்டுகள் காணப்பட்டதாகவும், இவற்றைக் கொண்டு அந்த எலும்புகளுக்குரியவரின் பால், வயது, அவர்கள் எவ்வகையான நோய்களால் பாதிக்கப்பட்டனர் போன்ற விபரங்களைக் கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

11 கோடி ஆண்டு டைனோசர்

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் 1994-ஆம் ஆண்டு, சுரங்கம் தோண்டும்போது சில எலும்புகள் கிடைத்தன. அதுபற்றி தொல்பொருள் ஆய்வு துறையினர், விலங்கியல் நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி நடத்தினர். ஆய்வில் இரண்டு விலங்குகளின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. இது           டைனோசர்களிலேயே மிகவும் வலிமையுடன் காணப்பட்ட பிரான் டோமொஸ் வகையைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் பிரான்டோ மொஸ் என்பது "இடிபோன்ற தொடை' என்பதைக் குறிக்கும். இவை 11 கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்தவை. ஒன்று தாயும் இன்னொன்று அதன் குட்டியுமாக இருக்கலாம். இவற்றின் கால்களும் தொடை களும் பலம் வாய்ந்ததாக இருந்துள்ளன. இரைகளைப் பிடித்து உண்ணும் வகையில் இவை பயன் பட்டிருக்க வேண்டும். டைனோசர் வகை யிலேயே வலுவானதாக, மற்ற விலங்கினங் களை மிரட்டும் வகையில் இவை இருந்திருக்க வேண்டும். இந்த இனம் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்திருக்கலாம் என்று தெரிகிறது.
சந்திரனில் பதுங்கு குழியை சந்திராயன் கண்டுபிடித்தது

நிலாவில் விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்வதற்கு ஏற்றவகையில் 1 கி.மீ. நீளமும் 6 மீட்டர் ஆழமும் கொண்ட குகை வடிவிலான மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழி இருப்பதை சந்திராயன் கண்டு பிடித்துள்ளது. எந்தவித சேதமும் இல்லாமல் மிக நேர்த்தியாகவும் குகை வடிவிலும் உள்ள அந்த பதுங்கு குழியானது நிலாவில் ஏற்படும் கதிரியக்கம் உள்ளிட்ட இயற்கை பருவ மாற்றங்    களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருக்கிறது. 

நிலாவில் அதிகபட்ச மாக 130 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருப்பது வழக்கம். ஆனால் இந்த பதுங்கு குழியை பொருத்தவரை சராசரியாக மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும், ஏராளமான அறிவியல் ஆராய்ச்சி கருவிகளையும் அங்கு வைத்துக் கொள்ள முடியும்.

ஆர்டிக் பனிகட்டிகளுக்கு அடியில் உயிரினங்கள்

ஆர்டிக் பனிக்கடல் பகுதிகளுக்கு அடியில் கடல்சார் உயிரினங்கள் இருப்பதை கடல்சார் உயிரின ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது பனித்துருவத்திற்கு கீழே வேறு ஒரு புதிய உலகம் இருப்பதை எடுத்துக்காட்டும் இந்த ஆய்வு, பல ஆச்சரியமான, அற்புதமான கண்டு பிடிப்பாகவுள்ளது. கடல்சார் உயிரினஆய்வாளர் அலெக்சாண்டர் செமேனோவ் ஆர்டிக் பகுதிக்கு கீழே உள்ள உயிரினங்கள் குறித்து 2 ஆண்டுகள் ஆய்வு செய்தார். மிக அபாயகர மானச் சூழலில், புறக்கதிர்கள், பின் தங்கிய வொயிட் சீ பயாலஜிகல் நிலையத்தில் இந்த ஆய்வினை நிகழ்த்தினார். ஆர்டிக் கடல் பனிக் கட்டியை துளைத்து தண்ணீருக்கு அடியில் மைனஸ் டிகிரி வெப்பநிலையில் அந்த ஆய்வினை மேற்கொண்டார். ஆர்டிக் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் இதற்கு முன்னர் பார்த்த உயிரி னங்கள் ஒத்ததாக இல்லை என அலெக்சாண்டர் கூறினார். நீருக்கு அடியில் முதன்முறையாக பயணித்தபோது, வேற்று கிரகத்தை போன்று கண்டு அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்தார். 

2011-12 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்



              யில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி  2011-12  ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை பிப்ரவரி 25-ஆம் தேதியன்று மக்களவையில் சமர்ப்பித்தார்.

இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணங்களில் மாற்றம் ஏதும் செய்ய வில்லை.   ரயில்வேக்கு ரூ.57,630 கோடி திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய வழித்தடங்கள் ஏற்படுத்த ரூ.9,583 கோடி ஒதுக்கீடு, 1,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இருப்புப்பாதை, 867 கிலோ மீட்டர் இருப்புப்பாதை இருவழிப் பாதைகளாக மாற்றம், 1,017 கிலோமீட்டர் தூரம் இருப்புப் பாதை அகலவழிப் பாதை யாக மாற்றம்,  56 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 3 புதிய சதாப்தி, 9 துரந்தோ ரயில்கள் அறிமுகம், புதிய சூப்பர் குளிர்சாதனவசதி பெட்டிகள் அறிமுகம் போன்றவை சிறப்பான அறிவிப்புகள் ஆகும்.

கணினி முறை பயணச்சீட்டுப் பதிவுக்கு புதிய இணையதளம், பான்-இந்தியா பல்முனை ஸ்மார்ட் கார்டு பயன்பாடு ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். 236 ரயில் நிலையங்கள் மாதிரி ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தவும், மும்பையில் 47 புறநகர் ரயில் சேவைகளும், கொல்கத்தாவில் 50 புதிய புறநகர் ரயில் சேவைகளும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. அதேபோல கேரளாவில் இரண்டு புதிய பயணிகள் ரயில் முனையங்களும், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட ரயில் போக்குவரத்து சிரமங்களை கணக்கில் எடுத்துக் கொண்டார் அமைச்சர். அதன்படி பாஸஞ்சர் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 முதல் 200 கிலோமீட்டர் அதிகரிப்பது, 8 ரயில்வே மண்டலங்களிலும் மோதலைத் தடுப்பதற்கான கருவி அமைத்தல், பனி மூட்டம் காரணமாக ஏற்படும் சேதத்தைத் தடுக்க கணினி முறை யிலான பனிமூட்ட பாதுகாப்பு கருவி, முதலியவை துவங்கப்படும். ஆளில்லாத 3 ஆயிரம் ரயில்வே கிராசிங்கு களை அகற்றவும்  அகில இந்திய அளவில் பாதுகாப்பு உதவிக்காக ஒரே எண்ணைக் கொண்ட பாதுகாப்பு உதவி தொலைபேசி அமைக்கவும் உத்தேசித்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த 7 ஆண்டுகளில் சிக்கிம் தவிர அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் தலை நகரங்கள் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்படுமெனவும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாலங்களுக்கான தொழிற்சாலை ஒன்றும் ஜம்முவில் பாலம் மற்றும் குகை பாதைகள் அமைப்பதற்கான கழகம் ஒன்றும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மணிப்பூரில் டீசல் என்ஜின்களுக்கான மையம், ஜலிங்காம் மற்றும் நியூ பொங்கை காம் ஆகிய இடங்களில் ரயில் தொழிற்சாலை பூங்காக்கள், நாக்பூர், சண்டிகர் மற்றும் போபால் ஆகிய இடங்களில் துணிகளை தூய்மைப்படுத்துவதற்கான நிலையங்கள், மகாராஷ்டிராவில் தக்குர்லி என்ற இடத்தில் 700 மெகாவாட் திறனுள்ள எரிவாயு மின் நிலையம் போன்றவை அமைக்கப்படும்.
அதேபோல 2011-12-ஆம் ஆண்டில் 18 ஆயிரம் ரயில் பெட்டிகள் வாங்கப்படும். பிரதம மந்திரி ரயில் விகாஸ் திட்டத்தின்படி, சமூகத்திற்கான பயனுள்ள திட்டங்கள் துவக்கப்படும். மும்பை, சீல்டா, சிலிகுரி, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் ரயில் பாதைகளுக்கு அருகே வசிப்பவர்களுக்காக 10 ஆயிரம் தங்குமிடங்கள் முன்னோடித் திட்டமாக அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது. உடல் ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் சலுகைகள் ராஜதானி, சதாப்தி ரயில்களிலும் விரிவு படுத்தப்படும் என சமூக அக்கறையுடன் பட்ஜெட்டில் சில சலுகைகள் தெரிவிக்கப்பட்டன.        

பத்திரிகையாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை அளிக்கப்படும் 50 சதவிகித சலுகைக் கட்டணம் இருமுறை வழங்கப்படும். மூத்த குடிமக்களுக் கான சலுகைக் கட்டணம் 30 சதவிகிதத் திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்படும். 

நிரப்பப்படாமல் உள்ள எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான காலியிடங்கள் உட்பட சி மற்றும் டி பிரிவில் காலியாக உள்ள 1.75 லட்சம் பணியிடங்களை நிரப்பப்படும்.. விளையாட்டுக்கான சிறப்பு பிரிவு ஒன்று அமைக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2011-12 ஆம் ஆண்டை அனுசரிக்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை 6.4 சதவிகித மாகவும்,  சரக்குகள் போக்குவரத்து 993 மெட்ரிக் டன்னாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து வருவாய் ரூ.1,06,239 கோடியாக உயரும் என்றும் முதல் முறையாக ரூபாய் ஒரு லட்சம் கோடி என்ற அளவை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடைமுறை செலவுகள் ரூ.73,650 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது என ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார்.

மக்கள் தொகை-அதிகரிக்கும் பிரச்னைகள்!


  1. மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தகவல்கள் சில மகிழ்ச்சிகளையும் சில கவலைகளையும் ஒன்றாக முன்வைத்துள்ளன. மகிழ்ச்சி கொள்வதற்கான காரணம், மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் குறைந்துள்ளது. எழுதப்படிக்கத் தெரிந்தவர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கவலையடைவதற்கான காரணம், ஆறு வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.இந்திய மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலக மக்கள் தொகையில் 17.5 விழுக்காடு இந்தியர்கள் என்கிறபோது மகிழ்ச்சியாக இருந்தாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் சீனாவைக் காட்டிலும் அதிக மக்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்கிற கணிப்பு, உணவு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த அச்சத்தை உருவாக்குகிறது.மக்கள் தொகை அதிகரிப்பு 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 21.54 விழுக்காடாக இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்த வேகம் குறைந்துள்ளது. 17.64 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது. அதாவது 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். மாநிலங்களைப் பொறுத்தவரை, மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களின் வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 6 விழுக்காடுதான் தமிழக மக்கள் தொகை. அதிகபட்சமாக 16 விழுக்காடு மக்கள் உத்தரப்பிரதேசத்தில் வாழ்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு 15.6 விழுக்காடுதான். தேசிய அளவைக் கணக்கிடும்போது இது குறைவு. இதுபோன்று கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையிலும்கூட தமிழகம் குறிப்பிடும்படியான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. கல்வியறிவு பெற்ற பெண்கள் தமிழகத்தில் 73 விழுக்காடாகவும், ஆண்கள் 86 விழுக்காடாகவும் இருப்பதே இதற்குச் சான்று. தேசிய அளவில் ஏழு வயதுக்கு மேற்பட்டோரில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74 விழுக்காடு. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அனைவரும் கவலை தெரிவித்துள்ள புள்ளிவிவரம் பெண் குழந்தைகள் குறித்தது. ஆறு வயதுக்குள்பட்ட சிறுவர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, 1000 சிறுவர்களுக்கு 914 சிறுமியர் மட்டுமே உள்ளனர் என்பதுதான். இந்தியாவில் இந்த அளவுக்குக் குறைவாக இருந்தது இல்லை என்பதுதான் இந்தக் கவலைக்குக் காரணம். 1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 1000 சிறுவர்களுக்கு 978 சிறுமியர் இருந்தனர். இந்த விகிதாசாரம் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 927- ஆகக் குறைந்தது. இப்போது 914 ஆகக் குறைந்துள்ளது. தற்போது இந்தியாவில் சிறுவர்களின் எண்ணிக்கையே 15.88 கோடிதான். இது 2001 கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 0.5 விழுக்காடு குறைவு. இது மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்து வருவதற்கான அடையாளம் என்று மகிழ்ச்சி அடையும் அதேவேளையில், சிறுமியர் எண்ணிக்கை குறைந்துவருவது ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்காது. அதற்காகத்தான் அனைவரும் கவலைப்படுகிறார்கள். இருப்பினும், பொதுவாக ஆண்- பெண் விகிதாசாரத்தைக் கணக்கிடும்போது 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் இருக்கின்றனர். 2001 கணக்கெடுப்பில் 933 பெண்கள் மட்டுமே. ஆகவே, பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது. அப்படியானால் சிறுமியர் எண்ணிக்கை மட்டும் குறைந்திருப்பது ஏன்?இந்த நிலைமை இயற்கையாக ஏற்பட்டது அல்ல என்பதும், பெண்சிசுக்கள் வேண்டாம் என்கிற மனநிலை பொதுவாக இந்தியா முழுவதிலும் பீடித்திருக்கிறது என்பதும்தான் சிறுமியர் விகிதாசாரம் குறைவதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. நகர்ப்புறங்களில் பெண்சிசுக் கருக்கலைப்பு அதிகரிப்பதும் கிராமங்களில் பெண்குழந்தைகளை கொன்றுவிடுவதுமான நடைமுறைகள்தான் சிறுமியர் விகிதம் குறைவதற்கான காரணம் என்று கூறுகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்சிசுக் கொலை என்பதை தடுப்பதில் அதிமுக, திமுக இரு அரசுகளும்ம தீவிரமாகச் செயல்பட்டன. அதன் விளைவு பெண்சிசுக் கொலைகள் குறைந்துவிட்டன. இப்பாதகச் செயலை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு அறிமுகம் செய்த தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தொடக்கத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் வந்தாலும், தற்போது தொட்டில் குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்துவிட்டது என்பதே, மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தைக் காட்டுகிறது.கருவிலேயே பெண்சிசுவைக் கண்டறியும் மருத்துவச் சோதனைகளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் நகர்ப்புறங்களில் இத்தகைய சோதனைகள் தடையற்று நடைபெறுவதாகவும், பெண்குழந்தைகளை சுமையாகக் கருதும் குடும்பங்கள் கருக்கலைப்பு செய்வது தொடர்ந்து நிகழ்வதும்தான் இவ்வாறு சிறுவர் சிறுமியர் விகிதாசாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் என்பது மகளிர் நல அமைப்புகள், களப்பணியாளர்களின் கருத்தாக இருக்கிறது. சிறுமியர் எண்ணிக்கை எந்தெந்த மாநிலங்களில் குறைந்துள்ளதோ அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அரசின் கடமை.இந்திய அரசியல்வாதிகளின் ஊழல், அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக பணக்காரர், ஏழைகள் இடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. விவசாயம் செய்வோர் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 121 கோடி மக்களின் உணவுத் தேவையை இந்தியா எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதுதான் இப்போது எழுகின்ற கேள்வி. இந்தியாவில் வறுமையும் உணவுப்பஞ்சமும் அதிகரிக்குமானால், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் குற்றங்களும் அதிகரிக்கவே செய்யும். மக்கள் தொகை அதிகரிக்கும் வேகம் குறைந்துவிட்டது என்று மெத்தனமாக இருக்காமல் அரசு செயல்படுவதோடு, இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற எச்சரிக்கை உணர்வுடன் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

தாய்ப்பால் தராதது காரணம் குழந்தை படிப்பில் பின்தங்கியிருக்கிறதா?


ஐக்கிய நாடுகள் ஆதரவில் இயங்கும் யுனிசெப் அமைப்பும், இந்திய பிரஸ் இன்ஸ்டியூட்டும் இணைந்து, சென்னையில் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கில் குழந்தைகள் நலன் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கும் இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது. குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் ஆகியோருக்கு என, யுனிசெப் இலக்குகளை முன்னிறுத்தி தொடர்ந்து செயல்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் ஓரளவு பின்பற்றுகின்றன. மருத்துவத் துறை, சமூகநலத் துறைகள் ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றும் பலர் இதில் பங்கேற்று கூறிய கருத்துக்கள், நாம் சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் குழந்தைகளின் நலனில் மிகவும் பின்தங்கியிருக்கிறோமோ என்று கருத வைக்கிறது. இது தேர்தல் நேரம். இலவசங்களைப் பற்றி அதிகமாக பேசும் அளவுக்கு இவைகளை யார் சிந்திக்கப் போகின்றனர்.
அக்கருத்தரங்கில் கூறப்பட்ட சில தகவல்கள்
*குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் தர வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப் பால் கட்டாயம் தேவை. மூளை செல்கள், குறிப்பாக அறிவுத்திறன் வளர்க்கும் செல்களை வளரச் செய்யும் காலம் அது. அதை வளரச் செய்யும் அபூர்வ இயற்கையின் கொடை இது.
* தாய்ப்பால் தருவதை நிறுத்தி விட்டு, அப்புறம் பள்ளியில் படிப்பும் திறன் குறைவதாக கூறி மருத்துவ ஆலோசனை, கூடுதல் ஊட்டச்சத்து எதற்கு? அதற்காகும் செலவு எவ்வளவு? தவிரவும் மிகவும் ஏழ்மையில் இருக்கும் தாய் கூட முதல் ஆறு மாதங்களுக்கு தன் குழந்தைக்கு தேவைப்படும் பாலை தர திறன் பெற்றவர்.
* ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்போது பிரசவ வசதி இருப்பதால், வீட்டில் பிரசவம் என்பது மிகவும் குறைவு. ஆனால், கேரளாவை ஒப்பிடும் போது தமிழகத்தில் குழந்தை பிறப்பிற்கு பின் இறக்கும் தாய் எண்ணிக்கை அதிகம். ஆரம்ப சுகாதார நிலையங்களை முன்னணிப்படுத்தி தமிழக அரசு அக்கறை காட்டுவது நல்லது. ஆனால், தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் சரியாக இயங்குவதில்லை.

* இங்கே டாக்டர்கள் நியமித்தாலும் அவர்கள் பணியில் இருப்பதில்லை. இந்த நிலையை மாற்றினால் தான், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்க்கப்படும் கர்ப்பிணிகள் அடுத்த கட்ட மேல் சிகிச்சையை அபாயமின்றி மேற்கொள்ள முடியும். இந்த கட்டத்தில் தமிழகத்தில் நிலை பின்தங்கியிருக்கிறது.
* தற்போது கிராமங்களில் குழந்தைகளுக்கு தரப்படும் உணவு போதிய ஊட்டச்சத்து நிரம்பியதாக இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் சராசரி வருமானம் உடைய குடும்பத்தில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு ஏற்பட்டு, அதிக நோய்களுடன் பலர் வாழ நேரிடும்.
* பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் இருப்பதைப் போல, கிராமப்புறப் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை என்பதால், மாணவியர் கல்வி பாதியில் விடுபட்டுப் போகிறது. அது மட்டுமின்றி, பள்ளிகளில் மாணவியருக்கு பாலியல் பலாத்காரம் என்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. பள்ளிக் கழிப்பறையில் ஒரு சிறுமி குழந்தை பிரசவித்த செய்தி, அதன் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இவ்விஷயத்தில் முன்கூட்டியே அக்கறை காட்டாத தன்மையை வெளிப்படுத்துகிறது.
* ஒருங்கிணைந்த அணுகுமுறையால் விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டால், 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் யுனிசெப் இலக்கை அடைவது சிரமம். அது ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக்கும் செயலுக்கு தடையாகும்.

சிறுநீர் பரிசோதனையின் அவசியம்!


உடல் இயக்கம் சீராக நடைபெற காரணமாக இருக்கும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவு செரிமானமானவுடன் உருவாகும் கழிவுப்பொருட்களில் இருந்து சிறுநீரையும், கார்பன் டை ஆக்சைடையும் பிரித்தெடுத்து வெளியேற்றும் முக்கியமான வேலையை செய்வது சிறுநீரகம்.
நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன வகையான நோய் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.
சில நேரங்களில் வலியில்லாமலும் சிவப்பு நிறத்திலும் சிறுநீர் வெளியேறும். அதற்கு காரணங்கள்:
* சிறுநீர் உருவாகும் பாதை அல்லது சிறுநீரகத்தில் நீண்டநாளாக நோய் இருப்பது.
* சிறுநீரகத்தின் சிறுநீர் உருவாகும் பாதையில் உள்ள கிரானுலோமேட்டஸ் பகுதியில் தொற்று நோய் உருவாதல்.
* சிறுநீரகத்தில் பெனின் நியோபிளாஸ்டிக் மற்றும் மாலிக்னன்ட் நியோபிளாஸ்டிக் போன்றவற்றில் புண் உண்டாதல்.
பால் போன்ற சிறுநீர் உருவாதல்:
கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலோ அல்லது நிணநீர் சுரப்பதில் குறைபாடு இருந்தாலோ பால்போன்ற சிறுநீர் வெளியேறும்.
மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற சிறுநீர் உருவாதல்:
இதற்கு காரணம் செரிமானம் சீராக இல்லாமல் இருத்தல், காய்ச்சல் அதிகமாக இருப்பது, பைலிருபின் அதிகரித்து இருப்பது.

மேகம் போன்ற சிறுநீர் உருவாதல்:
பாஸ்பேட், கார்பனேட், யூரேட், லியுகோசைட், ஸ்பெர்மட்டோசோவா மற்றும் பிராஸ்டேட்டிக் திரவத்தில் மாற்றம் உண்டாகி இருந்தால், மேகம் போன்ற சிறுநீர் வெளியேறும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு:
நீரிழிவு நோய் காரணமாக, சிறுநீரில் அதிகளவு கலோரி சத்து வெளியேறுவதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்படும். உடல் மெலிந்து காணப்படுவர்.
நீலம் கலந்த பச்சை நிற சிறுநீர்:
சியுடோமானஸ் என்ற ஒருவகை பாக்டீரியா தொற்றுநோய் ஏற்பட்டு இருந்தால் நீலம் கலந்த பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும்…


விரல் நகங்களை மிக நீளமாக வளர்த்து வைத்திருப்பது நல்லதல்ல. நகங்களுக்கு கீழுள்ள இடத்தில் அழுக்கும், நோயை உண்டாக்கும் கிருமிகளும் தங்கியிருக்கும். நாம் சாப்பிடும் போது, நகத்திலிருந்து சாப்பாட்டுடன் சேர்ந்து இவைகளும் வாய்க்குள் போய் விடும். அதே போல, நகத்தைக் கடிப்பதும் நல்ல பழக்கமல்ல. சிலருக்கு நகத்தைக் கடிப்பது, நிறுத்த முடியாத ஒரு பழக்கமாக ஆகி விடுகிறது. இது தவறு.
நகத்தை வளர வளர வெட்டிக்கொண்டே இருந்தால், நகத்துக்கடியில் கிருமி சேர வாய்ப்பே இல்லை. தினமும் வளர்ந்து கொண்டிருக்கும் நகம், நாம் உயிரோடிருக்கும் வரை வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அதை தடுக்க முடியாது. நாம் தான் அதை ஒழுங்காக, வளர, வளர, வெட்டி விட்டுக் கொண்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் வயல்களில் வேலை செய்பவர்களின் விரல் நகங்களில், வேலை பார்க்கும் போது மண், அழுக்கு முதலியவை உள்ளே போய் சேர்ந்து, கறுப்பாக, பார்க்கவே அசிங்கமாக இருக்கும். இவர்களெல்லாம் வேலையில்லாமல் சும்மா உட்கார்ந் திருக்கும் போது, நகத்துக்கடியில் இருக்கும் அழுக்கை, தென்னங்குச்சியை வைத்து நோண்டி சுத்தம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். வேலை பார்க்கும் போது நகத்துக்கடி யில் மண், அழுக்கு முதலியவை சேருவது மிகவும் சகஜம். இதை தவிர்க்க முடியாது. ஆனால் இவர்கள் முதலிலேயே விரல் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருந்தால், வேலை பார்க்கும் போது மண்ணோ, அழுக்கோ சேர வாய்ப்பில்லை அல்லவா!

கால் விரல்களிலும் நகங்களை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கால் நகங்கள் வாய்க்கு வரவேண்டிய வேலை இல்லை. அதனால் விட்டு விடலாம், எனவே கைவிரல் நகங்களைப் பற்றித் தான் அதிகமாக கவலைப்பட வேண்டும். இடது கை விரலில் நகங்கள் வளர்ப்பது இன்னும் மோசம். காலைக் கடன்களுக்கு இடது கைதான் அதிக மாக உபயோகப்படுகிறது. எனவே இடது கை விரல் நகங்கள் மிக மிக சுத்தமாக எப்பொழுதும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கை, கால் விரல் நகங்களை உரசி விட்டு, ஒழுங்காக, அழகாக, வெட்டி விட்டு சுத்தம் செய்து, நெயில் பாலிஷ் போட்டுவிட்டு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்படி செய்ய அழகு நிலைங்கள் தற்போது நிறைய இருக்கின்றன. கை விரல் நகங்களுக்கு ரூ.150 லிருந்து ரூ.300 வரையிலும், கால் விரல் நகங்களுக்கு ரூ.250 லிருந்து ரூ.600 வரை யும் வாங்குகிறார்கள். இப்படியிருக்கும் போது, நகத்தை வளர்க்கக் கூடாது. வெட்ட வேண்டும் என்று சொன்னால் நகம் வளர்ப்பவர்களுக்கு கோபம் தான் வரும். என்ன செய்வது! நல்ல விஷயத்தை சொல்லித்தானே தீர வேண்டும். விரல் நகங்கள் நூறு சதவிகிதம் சுத்தமாக இருக்காது என்பதனால் தான், தற்பொழுது வெளிநாடுகளில் உணவு தயாரிக்கும் இடத்திலும், உணவு பரிமாறும் இடத்திலும் ரோபோக்களை பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதேபோல் அழுக்கான நகம், செத்துப் போன நகம், காய்ந்து போன நகம், நோயினால் பாதிக்கப்பட்ட நகம்- இம்மாதிரி பார்ப்பதற்கு நன்றாக இல்லாத நகம் உடையவர்களுக்காகவே, தற்பொழுது `செயற்கை நகம்’ வந்து விட்டது. இயற்கை நகத்துக்கு மேலே, இந்த செயற்கை நகத்தை `க்ளிப்’ போல மாட்டிக் கொள்கிறார்கள்.
நகங்களை ஒழுங்காகவும், சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள வேண் டும். நகங்களுக்குக் கீழே அழுக்கு சேர விடக்கூடாது. கொஞ்சம் நகம் வளர்ந்தாலே, உடனே வெட்டி விட வேண்டும். நகங்களை வெட்டுவதற்கு `நக வெட்டிகள்’ பலவித மான மாடல்களில் கிடைக்கின்றன. நகத்தை வெட்டுகிறேன் என்று சொல்லி விட்டு, சிலர் நகத்தோடு சேர்த்து சதையையும் வெட்டிக்கொள்வார்கள். அந்த இடம் வீங்கி, சிவந்து, புண்ணாகி ஆறுவதற்கு ஒரு வாரம் ஆகும். அதிலும் சர்க்கரை வியாதி இருக்கிறவர்களுக்கு சில நேரத்தில் விரலையே எடுக்கும்படி ஆகி விடும். ஆகவே கவனமாக வெட்டுங்கள். வெட்டுவதற்கு முன்பும், பின்பும், வெந்நீரில் கைகளையும், நகவெட்டியையும் நன்கு கழுவிவிட்டு, அதற்குப் பின் வெட்டுங்கள்.
`நகச்சுத்து’ என்று சொல்வார்களே, அதுவும் இந்த மாதிரி காரணங்களினால் ஏற்படுவது தான். ஒருவர் உபயோகிக்கும் நகவெட்டியை, இன்னொருவர் உபயோகித்தால் கூட, ஒருவருடைய நகத்திலிருக்கும் `பங்கஸ் நோய்’ அடுத்தவருக்கு மிகச் சுலபமாக வர வாய்ப்புண்டு. வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனியாக நக வெட்டியை வைத்துக் கொள்ள முடியாது. எனவே நகவெட்டியை உபயோகப்படுத்துவதற்கு முன்பு, வெந்நீரில் போட்டு, எடுத்து அதற்குப் பின் உபயோகியுங்கள். அதே மாதிரி நகங்களை வெட்டு வதற்கு முன் கை, கால்களை `டெட்டால்’ போன்ற கிருமி நாசினியை வெந்நீரில் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும்.

நகம் வெட்டுவதற்காக அழகு நிலையங்களுக்கெல்லாம் போக வேண்டிய தேவை யில்லை. வீட்டிலேயே பொறுமையாக அழகாக வெட்டிக் கொள்ளலாம். நன்கு நீளமாக வளர்ந்த பிறகு வெட்டலாம் என்று நினைப்பதை விட, ஞாயிற்றுக்கிழமைகளில், வாரத் திற்கொரு முறை எவ்வளவு அதிகமாக வளர்ந்திருக்கிறதோ, அவ்வளவு நகத்தையும் வெட்டி விடுங்கள். வலது கையால், இடது கைவிரல் நகங்களை வெட்டுவது சுலபம். அதே நேரத்தில் இடது கையால், வலது கை விரல் நகங்களை வெட்டுவது சற்று கடினம். பார்த்து செய்யுங்கள்.
நகங்களை வெட்டிய பின், வெட்டிய பாகங்களை நன்றாக தேய்த்து பாலீஷ் செய்து விடுங்கள். அடுத்தவர்களை விட்டு நகங்களை வெட்டச் சொல்லாதீர்கள். அவர்கள் நகத்தோடு, சதையையும் சேர்த்து வெட்டிவிட வாய்ப்புண்டு.
சிறிய குழந்தைகளுக்கு நகத்தை வெட்டிவிடும்போது, மிகவும் ஜாக்கிரதையாக செய்யுங்கள். கைகளை அடிக்கடி கழுவும் பழக்கமுள்ளவர்கள், அதிக ஸ்ட்ராங் இல்லாத லோஷன் அல்லது சோப்பில் கழுவ வேண்டும். அதிக நேரம் துணியுடனும், சோப்புடனும், பாத்திரத்துடனும் இருப்பவர்கள், கையில், கையுறை போட்டுக் கொள்ள வேண்டும். அதே மாதிரி சமையல்காரர்கள், பெயிண்ட் அடிப்பவர்கள் கையுறை போட்டுக் கொள்வது நல்லது. நெயில் பாலிஷ் போடுவது நல்லது என்று சிலர் சொல் வதுண்டு. நகங்கள் உடைவதற்கு நெயில் பாலிஷ்தான் காரணம். இயேசு பிறப்பதற்கு முன்பிருந்தே, நகங்களுக்கு பாலிஷ் போடும் பழக்கம் இருந்ததாக கூறுவதுண்டு. நெயில் பாலிஷ் ரிமூவர் உபயோகிப்பதும் நல்லதல்ல.
இதைப் படிப்பவர்களில் சிலருக்கு, கையால் சாப்பிடுவதை விட்டு விட்டு, ஸ்பூனில் சாப்பிடலாமே என்று தோன்றும். கையில் சாப்பிடும் திருப்தி, ஸ்பூனில் கிடைக்குமா!
சற்று நீள நகங்கள், தொழில் ரீதியாக சிலருக்கு உபயோகப்படத்தான் செய்கிறது. இருப்பினும் அந்த நகங்களுக்கு உள்ளே, அழுக்கும், கிருமியும் வேண்டாதவைகளும் சேர வாய்ப்பு அதிகம் என்பதால், நகம் வளர்ப்பதை விட, வளர்க்காமல் இருப்பதே நல்லது.
சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும் நன்றாக கைகளை கழுவுங்கள். சோப்பை உபயோகித்து, அடிக்கடி விரல்களையும், நகங்களையும் கழுவுங்கள். பச்சைக்காய்கறி கள், பழங்கள், கேரட், பால், மீன் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நகங்கள் ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய அனைத்தும் நல்லவையே.
கின்னஸ் சாதனைக்காக சிலர் நகங்களை வளர்க்கிறார்கள். இது சாதனைக்கு மட்டும்தான் உபயோகப்படுமே தவிர, வேறு எதற்கும் உபயோகப்படாது. ஹோட்டல்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கையுறை எதுவும் போடாமல்தான் மாவைப் பிசைகிறார்கள். காய்கறிகளை வெட்டுகிறார்கள். இன்னும் சமையலறையில் நிறைய வேலைகளில், கரண்டிக்குப் பதிலாக, கைகள்தான் உபயோகத்தில் இருக்கின்றன. அவர்கள் இவ்வாறு வெறும் கைகளை சமையலுக்கு உபயோகிக்கும் போது, அந்த கைவிரல் நகங்களுக்கு உள்ளேயிருக்கும் அழுக்கும், கிருமியும், அந்த சமையலிலும் போய்ச் சேருமல்லவா! இது நல்லதா! எங்கெல்லாம் வெறும் கையில் உணவு தயாரிப் பதை நீங்கள் பார்க்கிறீர்களோ, அங்கெல்லாம், நீங்களே உடனடியாக அவர்களை `கையுறை’ போட்டு வேலை பார்க்கச் சொல்லுங்கள். நகம் வளர்ந்திருந்தால் உடனே வெட்டச் சொல்லுங்கள். அடுத்தவர்களை சொல்வதற்கு முன்பு, முதலில் நீங்கள் விரல் நகங்களை சுத்தமாக வைத்திருங்கள். வீட்டில் உள்ளவர்களையும் வாரா வாரம் நகத்தை வெட்டச் சொல்லுங்கள். குழந்தைகளுக்கு சிறிய வயதிலிருந்தே இந்தப் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அதிகமாக வளர்க்கப்படும் விரல் நகங்கள், நோய்க்கிருமிகளை சுமந்து கொண்டிருக்கும் ஒரு வேண்டாத பொருள் தானே தவிர, அழகுப் பொருள் அல்ல.

வெஸ்டல் வழங்கும் இ-ரீடர் சாதனங்கள்


சிங்கப்பூரில் இயங்கும் வெஸ்டல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான வெஸ்டல் என்டர்பிரைசஸ் நிறுவனம், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் நூல்களை விரும்பிப் படிப்பவர் களுக்கு உதவிட இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் இயங்கும் இந்நிறுவனப் பிரிவு, LeAF Basic, LeAF Mega, LeAF Galore, LeAF Touch, LeAF Touch Pro, LeAF Access and LeAF Android Tablets என்ற பெயர்களில் பல மாடல்களாக, இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை யும், டேப்ளட் பிசிக்களையும் வெளியிட்டுள்ளது.
நூல்களைப் படிப்பதில் ஒரு டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு வருகிறது. அச்சில் மட்டுமின்றி, நூல்கள் இப்போது டிஜிட்டலாகவும் இணைய வலைகளில் வெளியாகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில் இவற்றை டவுண்லோட் செய்து இ-ரீடர் என்னும் சாதனத்தில் பதித்துப் படிக்கலாம். பல நூல்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன. கைக்கு அடக்கமாக இயங்கும் இந்த சாதனத்தில் பல்லாயிரக் கணக்கான நூல்களைப் பதித்து வைத்து, எங்கும் எளிதாக எடுத்துச் சென்று, தேவைப்படும்போது படிக்கலாம். இதனால் ஒரு நூலகமே நம் கைகளுக்குள் அடங்கிவிடுகிறது. இந்த நூலகத்தில் நம் விருப்பப்படி நூல்களைப் புதிதாகச் சேர்க்கலாம். படித்தவற்றை நீக்கி, இன்னொரு இடத்தில் பத்திரப்படுத்தலாம்.
அச்சில் நூல்களைப் படிக்கையில், அதன் பக்கங்களில், உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை எழுதி வைக்கிறீர்களா! அப்படியானல் இதில் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு, இதிலும் பக்கங்களில் கருத்துக்களை, மிக எளிமையாகவும், வேகமாகவும் எழுத வசதிகள் செய்து தரப்படுகின்றன.
இந்த சாதனங்கள் அனைத்தும் 6 மற்றும் 9 அங்குல திரைகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. கிரே கலரிலும், பல வண்ணங்கள் கொண்ட டிஸ்பிளே திரைகளுடனும் உள்ளன. வழக்கமான திரை, தொடுதிரை, குவெர்ட்டி கீ போர்டு, 3ஜி மற்றும் வை-பி தொழில் நுட்பம் எனத் தேவைக்கேற்ற வகையிலும், வாங்குபவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற நிலையிலும் இவை வடிவமைக்கப்பட்டு விற்பனை யாகின்றன. சில மாடல்கள் எம்பி3 ஆடியோ பைல்களையும் இயக்கு கின்றன. குறைந்த பட்சம் 2 ஜிபி மெமரி தரப்படுகிறது. இதனை 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள வசதியும் உண்டு. இந்த சாதனங்களின் தொடக்க விலை ரூ.8,999.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இ-டைரியில் பேப்பர் நோட்புக், டிஜிட்டல் பேனா மற்றும் பிளாஷ் மெமரி கொண்ட ஒரு சிறிய சாதனம் உள்ளது. தாளில் எழுதப்படும் குறிப்புகள் மெமரியில் வாங்கப்பட்டு, அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற்றப் படுகின்றன. பின்னர் இவற்றை அப்ளிகேஷன் புரோகிராம்கள் மூலம், கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட்டாக மாற்றிக் கொள்ளலாம்.
இந்த சாதனங்கள் அனைத்தும், சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் ஆய்வு மையத்தில், இந்திய வாடிக்கை யாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன. குறிப்பாக,நூல்கள் படிப்பவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்கள், அலுவலகங் களில் பணிபுரிபவர்கள், வழக்குரைஞர் கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரின் தேவை களையும் இந்த சாதனங்கள் நிறைவேற்று கின்றன. இந்த மையமே, இச்சாதனங் களை இயக்குவதற்கான உதவி மற்றும் விற்பனைக்குப் பின் பராமரிப்பினையும் தருகிறது.
பதினெட்டு இந்திய மொழிகளை இவை சப்போர்ட் செய்கின்றன என்றும் இவற்றின் மெனுக்களும் அந்த அந்த மொழிகளில் தரப்பட்டுள்ளன என்றும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த வகை சாதனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் படிப்போரிடையேயும், கற்போரிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது. முதல் முதலாக இந்தியச் சூழ்நிலைகளுக்கேற்ப இவை வடிவமைக் கப்பட்டு வழங்கப்படுகின்றன. ஒருமுறை இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள், தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். தொடக்க நிலையிலேயே ஆண்டுக்கு 50,000 இ-ரீடர் சாதனங்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மொபைல் போனுக்கு அடுத்தபடியாக, இ-ரீடர் சாதனங்கள் மக்களிடையே பரவும் வாய்ப்பு உள்ளது என கணேஷ் நாராயணன் கூறுகிறார்.
இந்த சாதனங்கள் குறித்து மேலும் தகவல்களை அறிய http://www.leafreader.com/main.php?page=lreaders என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.சென்னையில் இந்நிறுவனத்தை 24342833 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி


பவானிக்கு அருகில் உள்ள பள்ளிப்பாளையத்தில் தயாரிக்கப்படும் பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி கொஞ்சம் வித்தியாசமானது.
தேவையானவை:
எலும்புடன் கூடிய சிக்கன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் – 100 கிராம்
மிளகாய் வற்றல் – மூன்று
மிளகாய் பொடி – 10 கிராம்
(காரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்)
இஞ்சி, பூண்டு விழுது – 10 கிராம்
தேங்காய் எண்ணெய் – சிறிதளவு
தேங்காய் சில் – ஒன்று
மஞ்சள் பொடி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
முந்திரிபருப்பு – 10 கிராம்
சீரகம் – கால் ஸ்பூன்
சோம்பு – கால் ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
பட்டை – ஒன்று
கிராம்பு – மூன்று
செய்முறை: தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நேர் வாக்கில் நறுக்க வேண்டும். சீரகம், சோம்பு, மிளகை தனித்தனியாக வறுத்து பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்க வேண்டும்.
சிக்கனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் விட்டு அரைவேக்காட்டில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து சின்னவெங்காயத்தை வதக்க வேண்டும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் சேர்த்து வதக்க வேண்டும். கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது, சிறிதளவு உப்பு, இறைச்சியை சேர்த்து வதக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்க வேண்டும். தேங்காய் எண்ணெயில் தேங்காய் துண்டுகளை வதக்கி மேலே தூவி, மல்லிதழையால் அலங்கரிக்க வேண்டும்.
சமையல் நேரம்: 25 நிமிடம்.

உப்பு… சில சிறப்புத் தகவல்கள்!



முற்காலத்தில், உப்பெடுக்கும் உப்பளங்கள் நிறைந்த `ஒஸ்டியா’ என்ற பகுதியில் இருந்து ரோமுக்கு உப்புக் கொண்டுவர ஒரு பெரிய சாலையையே ரோமானியர்கள் அமைத்திருந்தனர். அந்தச் சாலைக்கு `வயசாலரியா’ என்று பெயர். மேலும், முன்பு ரோமானியப் படை வீரர்களுக்கு ஊதியமாக உப்போ அல்லது அதை வாங்கத் தகுந்த அளவு பணமோதான் கொடுத்தனர். அந்தப் பணத்துக்கு `சாலரியம் அர்ஜெண்டம்’ என்று பெயர். அது மருவித்தான் `சாலரி’ (சம்பளம்) ஆயிற்று.
நட்புக்கு உப்பை அடையாளமாகக் கொண்டிருந்தனர் அரேபியர்கள். உப்பே கிடைக்காத நாடுகளில் உப்பு வைத்திருப்பவர்கள் பணக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். இஸ்ரேலில் உப்பு வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. நம் நாட்டிலும் நவக்கிரகங்களில் ஒன்றுக்கு உப்பு நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.
சீனர்களும், இந்தியர்களும், எகிப்தியர்களும் நீண்ட காலத்துக்கு முன்பே உப்பைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தனர். டிராய் நகரில் கி.மு. 13-ம் நூற்றாண்டில் மீன்களை உப்புப் போட்டுக் காயப்போடும் வழக்கம் இருந்திருக்கிறது.
உப்பு, உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று. உணவு செரிக்க, நரம்புகளின் செயல்திறனை அதிகரித்து உமிழ்நíர் சுரக்க உப்பு உதவி செய்கிறது. உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உப்பு தேவைப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இது அவசியமாகிறது.
நமது உடலை `உப்புக் கடல்’ என்று சொல்வது பொருத்தமாகவே இருக்கும். நமது உடல் சுரக்கும் சில நீர்களிலும், ரத்தத்திலும் உப்பு கலந்திருக்கிறது. கண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் ஆகியவற்றிலும் உடலுக்குப் போக மீதியாகும் உப்பு கலந்து வெளியேறுகிறது. உடலில் உள்ள நீரோட்டத்தையும், ரத்த ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்துவது இதுதான்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல உடலில் உப்பு அதிகமானால் வியாதி வரும். அதேபோல் உப்பின் அளவு குறைந்தாலும் நோய் தோன்றும்.

ஆரோக்கிய சுற்றுலா – நெஞ்சம் மகிழும் மேகமலை!


மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயராம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு.
தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேகமலை. அடிவாரத்தில் இருக்கும் சிறிய முருகன் கோயில் படுபிரசித்தம். மலை அடிவாரம் வரை கருங்கூந்தல்போல் விரிந்து நீண்டு கிடக்கும் சாலை, போகப் போக 20 அடியாகக் குறைந்து போகிறது. அதனால் பஸ்கள் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்கின்றன. போகிற வழியெங்கும் இயற்கை தன்னை கொஞ்சமாக பிய்த்துப் போட்டிருக்கிறதோ என்கிற உணர்வு ஏற்படுவது நிச்சயம். காரணம்… அடர்த்தியான மரங்கள். முகம் காட்ட மறுக்கும் குயில் போல மரங்களுக்கு இடையே அமர்ந்து கிறீச்… கிறீச்… என சத்தமிடும் பறவைக் கூட்டம். நம்மை வரவேற்கிறது.
சாலையின் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறது குரங்குகள் கூட்டம். மெதுவாய் போகலாமே என சாலையில் நடந்து சென்றால் போச்சு. கையிலிருக்கும் பொருட்களைப் பிடுங்கும் குரங்குகளின் அன்புத் தொல்லை நிச்சயம். சாலை இருபது அடியாக இருப்பதால், எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட்டால் மட்டுமே மலை ஏற முடியும். முழுவதும் பனிமூட்டம். சூரிய வெளிச்சம் உள்ளே வராது. அதனால் மலையில் லேசான இருட்டு. ஆங்காங்கே சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து செல்கிறார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் குறைவுதான்.
மேகமலையில் டீ, காபி தோட்டங்கள் நிறைய. அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரும் பஸ்சை நம்பி இருப்பதில்லை. மாறாக ஆண்களும், பெண்களும் குறுக்கு வழியில் மலையில் ஏறுகிறார்கள். எட்டு மணி நேர வேலைக்காக பதினாறு மணி நேரம் அவர்கள் மேலும் கீழுமாய் நடப்பது ஆச்சரியம்!

அதிகாலையில் மலை ஏறுபவர்கள் வேலை முடிந்து மாலை நான்கு மணிக்கு கீழே இறங்குகிறார்கள். வீடு வந்து சேரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிடுமாம்.
ஆமார் மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் வருகிறது மேகமலை. வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில் கூட “ஸ்வெட்டர்’ தேவைப்படும். குளிர் தாங்கிக் கொள்ளலாம்.
“மேகமலையில் அவசரத்துக்கு டீ குடிக்க வேண்டும் என்றால் கூட வழியில்லை. ஒன்றிரண்டு “ரிசார்ட்டுகள்’ மட்டுமே உண்டு. மதிய உணவு அங்கே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் விலை சற்று அதிகம். குடும்பத்தோடு செல்பவர்கள் கையோடு உணவு கொண்டு செல்வது நல்லது!’ என்கிறார் அங்கே ஒரு “புராஜக்ட்’டுக்காக வந்திருக்கும் தர்மசந்துரு என்பவர்.
வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள். எல்லாப் பருவநிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது உண்டாம். தண்ணீர் அத்தனை குளிர்ச்சி. வாவ்…!
இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை சுத்தம். அங்கே திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு. அவை தண்ணீர் அருந்துவதை தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் வருகிறது கம்பன் பள்ளத்தாக்கு. இடையிடையே மலைகளிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சியில் ஒரு சில பயணிகள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். சபரிமலை சீஸனின்போது அங்கே ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அப்போதெல்லாம் அங்குள்ள காட்டு விலங்குகள் இடம் பெயர்ந்து பெரியார் அணைக்கட்டு, மேகமலைப் பகுதிகளுக்கு வந்துவிடுமாம். இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? அந்த விலங்குகள் மனிதர்கள் யாரையும் இன்றுவரை தாக்கியது இல்லை என்பதுதான்.
காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்)… என விலங்குகளின் நடமாட்டம் அமோகம். முடிந்தவரை வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் சென்றால், இடங்களின் சிறப்பு பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.
எப்படிப் போகவேண்டும்?
பஸ்ஸில் சின்னமனூரிலிருந்து நேராகச் செல்லலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பஸ் வசதி உண்டு. கட்டணம் 20 ரூபாய். காரில் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம்.
தங்கும் வசதி!
சிறிய, பெரிய “ரிசார்ட்டுகள்’ உண்டு. தங்குவதற்கு சில ஆயிரம் செலவாகும். இருந்தாலும் குடும்பத்துடன் செல்பவர்கள் மாலைக்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது.

கூகுள் குரோம் பிரவுசர் 10

கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தன் பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. மூன்று வார சோதனைத் தொகுப்பு காலத்திற்குப் பின் இது வெளியாகியுள்ளது. ஆறு வார காலத்திற்கு ஒருமுறை குரோம் பிரவுசர் புதுப்பிக்கப்படும் என்ற கூகுள் நிறுவனத்தின் உறுதி மொழி மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு புதிய வசதிகளுடனும் மாற்றங்களுடனும் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில், குரோம் பிரவுசர் முதல் முறையாக வெளிவந்தது. பலர் இந்த பிரவுசரின் வேகத்தைப் பார்த்து, பயன்படுத்த முனைந்தனர். பின்னர், பழகிப்போன சில வசதிகளுக்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரையும் பயன்படுத்தினர். ஆனால் இந்த புதிய குரோம் 10 பயன்படுத்தத் தொடங்கினால், மற்றவற்றை நாட மாட்டார்கள் என்ற பொதுக் கருத்து இப்போது நிலவுகிறது. இந்த புதிய குரோம் பிரவுசரின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.
முதல் அம்சமாக, மீண்டும் அதன் வேகத்தைக் கூறலாம். முதல் முதலாக வந்த குரோம் பிரவுசரைக் காட்டிலும் இதன் வேகம் பத்து மடங்கு கூடுதலாக இருப்பதாக, இதனைச் சோதித்துப் பார்த்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Crankshaft JavaScript இதற்குத் துணை செய்கிறது. குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டினை மேற்கொண்ட போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு 1,184 மில்லி விநாடிகளில் இணையப் பக்கத்தினை இறக்கிக் காட்டியது. அதே சோதனையை மற்றவற்றில் நடத்திய போது, பயர்பாக்ஸ் (பதிப்பு 3.6.15) 945 மில்லி செகன்ட்ஸ், ஆப்பிள் சபாரி 422.1 மில்லி செகண்ட்ஸ், பயர்பாக்ஸ் (பதிப்பு 4 பீட்ட 12) – 388 மில்லி செகண்ட்ஸ், புதிய குரோம் (பதிப்பு 10)321 மில்லி செகண்ட்ஸ் வேகத்தைக் காட்டின.


இந்த பதிப்பில், குரோம் பிரவுசரின் செட்டிங்ஸ் அனைத்தும் டேப்களில் தரப்பட்டுள்ளன. இதனால், இவற்றைக் கையாள்வது எளிதாகிறது. செட்டிங்ஸ் மாற்ற, வலது மேல் மூலையில் உள்ள பைப் ரென்ச் ஐகானில் கிளிக் செய்தால், முன்பு போல் ஒரு பாப் அப் விண்டோ பெறப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, செட்டிங்ஸ் டேப்கள் நிறைந்த புதிய பக்கம் திறக்கப்படுகிறது. இதனால், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கம் நம் கட்டுப்பாட்டிலிருந்து மறைவதில்லை. செட்டிங்ஸ் எப்படி, எங்கு உள்ளது என்று உடனடியாகத் தெரியவில்லை என்றால், அதற்கென ஒரு தேடல் வசதியும் தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக cookies குறித்து ஒரு செட்டிங்ஸ் மாற்ற வேண்டும் என எண்னினால், சர்ச் பாக்ஸில் cookies என டைப் செய்து என்டர் தட்ட, குக்கீஸ் குறித்த அனைத்து செட்டிங்குகளும் தனியே ஒரு டேப்பில் காட்டப்படும்.
இந்த குரோம் பிரவுசரில் உள்ள புக்மார்க்குகளை, உங்களின் எந்த கம்ப்யூட்டரிலும் இணைத்துச் செயல் படுத்தலாம். லினக்ஸ், மேக் ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் என எந்தக் கம்ப்யூட்டரிலும் இவை இணைந்து செயல்படும். இதுவரை எக்ஸ்மார்க்ஸ் (Xmarks fromwww.xmarks.com) என்னும் ஆட் ஆன் புரோகிராம்தான் இவ்வாறு புக்மார்க்ஸ் மற்றும் பாஸ்வேர்ட்களை அனைத்து வகை இயக்கத்திற்கும் ஏற்ற வகையில் இணைத்து செயல்படும் வகையில் தந்து வந்தது. அந்த செயல்பாடு திறன், இப்போது குரோம் பிரவுசரில் தரப்பட்டுள்ளது. ஒரு நாளில் பலவகைக் கம்ப்யூட்டர்களில், பல கம்ப்யூட்டர் களில் மற்றும் லேப் டாப்களில் பணிபுரிவோருக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளது.
பொதுவாக கூகுள் தன் சாதனங்களில், பாதுகாப்பினை மிக அருமையாக பலப்படுத்தும். இந்த பிரவுசரில் பிளாஷ் பிளேயர் இணைந்து தரப்படுகிறது. பொதுவாக பிளாஷ் பயன்பாடு மூலம் தான், மால்வேர் மற்றும் வைரஸ்கள் ஊடுருவி பெர்சனல் கம்ப்யூட்டரைக் கெடுக்கின்றன. இதனை மனதில் கொண்டு, கூகுள் தன் சேண்ட் பாக்ஸ் (Sandbox) பாதுகாப்பினை, பிளாஷ் பிளேயருள்ளாக அமைத்துள்ளது. எனவே ஏதேனும் வைரஸ் இந்த வழியைப் பின்பற்றினால், அது இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ விடாமல் தடுக்கப்படுகிறது. விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில், இந்த சாண்ட் பாக்ஸ் தடுப்பை யாரேனும் உடைக்க முடியும் என்று காட்டினால், அவர்களுக்கு 20 ஆயிரம் டாலர் தருவதாக கூகுள் தன்னம்பிக்கையுடன் அறிவித்துள்ளது.
மேலும் குரோம் பிரவுசர், ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ள தால், பாதுகாப்பில் ஏதேனும் சிக்கல் தென்பட்டால், யார் வேண்டு மானாலும் அதற்கு தீர்வு காணலாம்.
இந்த பிரவுசர் எச்.264 (ஏ.264) வீடியோ பார்மட்டினை சப்போர்ட் செய்வதில்லை என்று பலர் குற்றம் சாட்டி உள்ளனர். பொதுவாகவே, எந்த ஒரு வீடீயோ பார்மட்டிற்கும் பிளாஷ் பிளேயர் ஈடு கொடுப்பதால்,இதனைப் பற்றி கூகுள் அக்கறை கொள்ளவில்லை. மேலும் பாதுகாப்பு மற்றும் வேகம் ஆகிய இரண்டினைத்தான் பொதுவாக அனை வரும் எதிர்பார்க்கின்றனர் என்பதால், இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரியவில்லை.குரோம் பிரவுசரை இலவசமாகhttp://www.google.com/ chrome என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பேனை விரட்ட வழி தெரியவில்லையா?


குழந்தைகளின் தலையில் பேன் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சர்வதேச அளவில், இது பெரிய பிரச்னையாக உள்ளது. எத்தகைய முயற்சி செய்தாலும், இதற்குத் தீர்வு காண முடியவில்லை. எள் அளவே உள்ள இந்தப் பூச்சி, எந்த உயிரியின் உடலிலும் உட்புகாமல், வெளியிலேயே வாழும் தன்மை கொண்டது. ஆறு கால்கள் கொண்டது. மனித பேன்கள், பூனை, நாய், பறவை ஆகியவற்றின் மீது வாழாது. தலையில், பிறப்புறுப்பில், அதிக முடி கொண்ட உடல் பகுதிகளில் இவை வாழும். இதன் வாழ்நாள், 30 நாட்கள். உடலிலிருந்து உதிர்ந்து விட்டாலும், ஆடைகள், சீப்புகள், வியர்வை நிறைந்த ஹெல்மெட்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணைகளில், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும். ஒரு ஜோடி (இரண்டு) பேன்கள், தங்கள் வாழ்நாளில், 100 முட்டைகள் இடும்.
பள்ளிச் சிறுவர், சிறுமியருக்கு தலையில் பேன் வளர்வது வாடிக்கையாக உள்ளது. 5 முதல் 11 வயது வரையிலான, 60 சதவீத பெண் குழந்தைகளின் தலையில் பேன் உள்ளது. சுய சுத்தமின்மை, வசதி இன்மை, பெற்றோர் கவனிப்பு குறைவு ஆகியவை, இதற்குக் காரணங்களாகக் கூறப்படுவது தவறு.
பேன் உள்ள ஒரு சிறுமியின் தலையுடன் ஒட்டி உறவாடினாலே, மற்றவருக்கும் பேன் வந்து விடும். பேனுக்கு பறக்கும் தன்மையோ, குதிக்கும் தன்மையோ கிடையாது. ஒருவர் தலையிலிருந்தோ, உடையிலிருந்தோ, தலையணை, படுக்கையிலிருந்தோ மற்றவருக்குப் பரவும். ஒருவர் தலையில் ஏறிய உடனேயே கடித்து, ரத்தத்தை உறிஞ்சத் துவங்கி விடும். வாயிலிருந்து வெளியேறும் ரசாயனம் தான், நமக்கு அரிப்பை உண்டாக்குகிறது. இதன் மூலம் உருவாகும் பாக்டீரியாவால், தலையில் தொற்றும் ஏற்படுகிறது. நாளமில்லா சுரப்பிகளில் நெறி கட்டி, கழுத்தில் வீக்கம் ஏற்படுகிறது. பேன்கள் தானாகவே தொற்று உருவாக்குவதில்லை.

பேனை விரட்ட, வீட்டு வைத்தியங்கள் உண்டு. பேன் சீப்பு போட்டு, தலையை வாரலாம். இரண்டு, மூன்று மாதங்களுக்கு, தினமும் பேன் சீப்பால் தலையை வார வேண்டும். ரசாயனங்கள், எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றைப் பூசினால் பேன் போகும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், மண்ணெண்ணெயை தலையில் தடவி, தலையில் ஒரு துண்டைக் கட்டி விட்டு, 2 – 3 மணி நேரங்கள் ஊறினால், பேன் செத்து மடியும். எனினும், மண்ணெண்ணெய், தீப்பற்றிக் கொள்ளும் எண்ணெய் என்பதால், இந்த முறை, ஆபத்தானது. பேன் நீக்கும் ஷாம்பூக்கள், களிம்புகள் உள்ளன. அவற்றில், மாலத்தியான், லிண்டேன், பெர்மெத்ரின் ஆகிய ரசாயனங்கள் உள்ளன. இவை பேனைச் செயலிழக்கச் செய்து, 2 – 3 மணி நேரத்திற்குக் கட்டுப்படுத்தும். இவற்றைப் பூசி, இரண்டு மணி நேரத்திற்குள், தலையை வாரி விடலாம் அல்லது நீரால் அலசி விடலாம். அப்போது,செயலற்றுக் கிடக்கும் பேன்கள் உதிர்ந்து விடும். எனினும், இந்த முறையில், அனைத்துப் பேன்களும் போய்விடும் எனக் கூற முடியாது. மூலிகை மருந்துகளும் பேன்களை முழுமையாக ஒழிக்க வல்லவையாக இல்லை.
ஐவர்மெக்டின் என்ற மாத்திரையை உட்கொள்வதன் மூலம் பேனை விரட்டலாம். இந்த மாத்திரையை, மருத்துவர் ஆலோசனை இன்றி உட்கொள்ளக் கூடாது. உடல் எடைக்கு ஏற்றாற்போல், இந்த மாத்திரை உட்கொள்ளும் அளவும் மாறுபடும். 15 கிலோ எடைக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு இதைக் கொடுக்கக் கூடாது. ஒரு முறை சாப்பிட்டதும், எட்டாம் நாளில் மீண்டும் சாப்பிட வேண்டும். உயிருள்ள பேன்களுக்கு எதிராக இந்த மாத்திரை செயல்படும்.இந்த முறை, வசதியானது; வலியில்லாதது; சுலபமானது.

இளநீர்… ஆப்பிள்… சாத்துக்குடி..!


தென் இந்தியாவில் ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாட்டின் ஓர் அங்கமாக உள்ளது இளநீர். கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் அதிக அளவில் இளநீர் அருந்த ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு மருத்துவமனை வாசலிலும் இளநீர் விற்பனை செய்யும் தள்ளு வண்டிகளைப் பார்க்கலாம். தூய்மையானது, கலப்படம் இல்லாதது என்பதால் அறுவை சிகிச்சை முடிந்த நோயாளிகளுக்கும் இளநீர் பாதுகாப்பான பானம்.
இளநீரைப் போன்றே மற்றொரு பாதுகாப்பான பானம் சாத்துக்குடி. மருத்துவமனைகளில் நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள் தவறாமல் பைகளில் சாத்துக்குடிகளுடன் வரு வதைப் பார்க்கலாம். வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்தது சாத்துக்குடி. இதை சாறாகவும் பருகலாம். பழமாகவும் உண்ணலாம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க் கும் போதும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்லும் போதும், ஆப்பிள்களைக் கொடுப்பது வாடிக் கையான விஷயம்.
நோய் அழுத்தம் தொடர்பாக உடலில் உயிரி ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு சோடியம் சத்து நோயாளிகள் உடலில் அதிகம் சேரும். எனவே இதைச் சரி செய்ய அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும் போது பொட்டாசியம் சத்து அதிகம் தேவைப்படும்.
மேற்கண்ட மூன்று உணவுகளிலும் கணிச மான அளவில் பொட்டாசியம் சத்து இருப்ப தால் உடலைச் சமச்சீராக வைத்துக் கொள்ள இவை உதவும். எனவே தான் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நோயாளிகளைப் பார்க் கும் போது இவற்றை எடுத்துச் செல்கிறோம்.
உயிர்வளியேற்ற எதிர்ப்பியாக விளங்கும் வைட்டமின் சி உடலில் ஏற்படும் கூடுதல் உயிர்வளியேற்றத்தைத் தடுக்க உதவுகிறது. மனஅழுத்தம் உள்ளவர்களின் உடலில் அதிக உயிர் வளியேற்றம் காணப்படும். எனவே பாதிக்கப்பட்ட திசுக்களைக் குணப்படுத்த வைட்டமின் சி சத்துள்ள சாத்துக்குடிச் சாறு அவர்களுக்கு அவசியம். இது அவர்கள் உடலில் ஏற்படும் அதிக உயிர்வளியேற்றத்தை தடுக்கும்.
சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சில சிறுநீரக நோயாளிகளுக்கு திரவக் கட்டுப்பாடும், சிலருக்கு பொட்டாசியம் கட்டுப்பாடும், சிலருக்கு சோடியம் கட்டுப்பாடும் அவசியப்படும். எனவே சிறுநீரக நோயாளிகளைக் காணச் செல்லும் போது மட்டும் மேற்கண்ட பழங்களைக் கொடுப்பதில் மிகுந்த கவனம் தேவை.
சிறுநீரகக் கோளாறு இல்லாத பட்சத்தில் நீரீழிவு நோயாளிகள் தாராளமாக இளநீர் அருந்தலாம். ஆனால் இளநீருடன் சேர்ந்து உள்ளே இருக்கும் வழுக்கைத் தேங்காயை மறந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாது. சாத்துக்குடியைப் பழமாகவோ, சாறாகவோ கொடுக் கலாம். நாளொன்றுக்குத் தேவைப்படும் மொத்த கலோரிக்கள் எண்ணிக்கையைப் பொறுத்து ஆப்பிள்பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கொலைகார மீன்!


உலகத்தில் புலி, சிங்கம், வெள்ளைச்சுறா, முதலை போன்ற பிராணிகள் மனிதர்களைக் கொல்கிறவை என்ற கெட்டபெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால், தென் அமெரிக்காவின் ஆறுகளிலும், ஏரிகளிலும் காணப்படும் `பிரானா’ என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை.
பார்ப்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை, அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.
அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும்.
வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருந்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் வெண்ணையைக் கத்தி வெட்டுவது போல வெட்டிவிடும்.

பிரானா என்ற பெயருக்கே `பல்லை ஆயுதமாகக் கொண்ட மீன்’ என்றுதான் அர்த்தம். அது கடித்தால், ஒரு ரூபாய் அளவுக்குச் சதை துண்டாக வந்துவிடும். அமேசான் நதிக்கரையில் வாழும் பல மீனவர்கள் தங்கள் விரல்களை பிரானாவிடம் இழந்திருக்கிறார்கள்.
பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். அவற்றின் அழிப்புத்திறன் பயங்கரமானது. ஒருமுறை நீரில் தவறி விழுந்துவிட்ட ஒரு குதிரையைச் சில நிமிஷங்களுக்குள் பிரானாக்கள் எலும்புக்கூடாக்கிவிட்டன. 1976-ம் ஆண்டில் உருபு என்ற ஆற்றில் ஒரு படகு கவிழ்ந்தபோது அதிலிருந்த 35 பயணிகளையும் பிரானாக்கள் தின்று தீர்த்தன.
ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றிய பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள். பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.
பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால், கோடைக் காலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன.
பிரானாக்களுக்குக் கண் பார்வையும், மோப்ப சக்தியும் கூர்மையானவை. தண்ணீரில் தோன்றும் அதிர்வுகளிலிருந்து அவை தமது இரையைக் கண்டுபிடிக்கின்றன.
பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவை. சிவப்பிந்தியர்கள் ஒரு தாவர நஞ்சைத் தண்ணீரில் கலந்து பிரானாக்களை மயக்கமடையச் செய்து அவற்றைப் பிடிக்கிறார்கள். பிறகு அவற்றை நெருப்பில் சுட்டுத் தின்கிறார்கள்

மாசுக்களைப் பார்த்தால் மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள்

குருவே, எனக்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“அப்படியா, என்ன பிரச்னைகள் வருகின்றன?’
“அவர்கள் யாருமே உண்மையாக இருக்கவில்லை. எல்லோரிடமும் எதாவது கெட்ட குணம் இருக்கு. என்னால யார் கிட்டயுமே சரியா பழக முடியல.’
சொன்னவனின் சிக்கல் குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.
ஆண்ட்ரூ கார்னகி என்று அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரர். அமெரிக்காவின் முதல் பணக்காரர்களில் அவரும் ஒருவர். ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறி தொழில் துவங்கி, பெரும் பணக்காரர் ஆனவர்.
ஒருமுறை அவரிடம் இன்னொரு தொழிலதிபர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.
“எப்படி உங்களால் இவ்வளவு முன்னேற முடிந்தது. நானும் உங்களை மாதிரிதான் தொழில் துவங்கினேன். ஆனால் என்னால் வளர முடியவில்லையே?’ என்று கேள்வியைக் கேட்டார்.
“என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்னுடைய ஊழியர்கள். அவர்கள் இல்லாமல் என்னால் இந்த அளவு உயர்ந்திருக்க முடியாது’ என்ற கார்னகி பதிலளித்தார்.
“உங்களுக்கு மட்டும் எப்படி நல்ல ஊழியர்கள் கிடைத்தார்கள். எங்கள் நிறுவனத்துக்கு அப்படிப்பட்ட ஆட்கள் கிடைக்கவில்லையே. நானும் எத்தனையோ பேரை முயற்சி செய்து பார்த்துவிட்டேன்!’
அதற்கு கார்னகி அந்த தொழிலதிபருக்கு ஒரு உதாரணத்தைச் சொன்னார்.
“தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கிறவர்களை கவனித்திருக்கிறீர்களா? அவர்களுடைய ஒரே இலக்கு தங்கத்தை சேகரிப்பதாகத்தான் இருக்கும். அப்படி தங்கத்தை எடுக்கும் போது வரும் மாசுக்களை பொருட்படுத்துவது கிடையாது. மாசுக்கள் நீக்கினால் தங்கம் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் நான் மனிதர்களிடத்தில் இருக்கும் நல்ல திறமைகளை மட்டுமே பார்க்கிறேன். அவற்றை மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன். மாசுக்களை பொருட்படுத்துவதில்லை.’
கார்னகியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை குரு சொன்னதும் வந்தவனுக்கு தன்னிடம் உள்ள குறை புரிந்தது. அப்போது குரு, அவனுக்கு சொன்ன WINமொழி:
மாசுக்களைப் பார்த்தால் மனிதர்கள் கிடைக்க மாட்டார்கள்.

வேர்ட் டிப்ஸ்-வேர்ட் டேபிள் வரிசை நகர்த்த



வேர்ட் டேபிள் வரிசை நகர்த்த
வேர்டில் பலவகையான தகவல்களைக் கொண்டு டேபிள் ஒன்றை அமைக்கிறீர்கள். பின்னர், சிறிது நேரம் கழித்து, அந்த டேபிளில் டேட்டா அமைக்கப்பட்டிருக்கும் வரிசை சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டாவது படுக்கை வரிசை, மூன்றுக்கும் ஐந்திற்கும் இடையே வைத்திட எண்ணுகிறீர்கள். நான்காவ தனை இறுதியாகக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று விரும்பு கிறீர்கள். அல்லது நெட்டு வரிசையிலும் இதே போல மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டமிடுகிறீர்கள். மாற்றங்கள் அதிகம் தேவைப்படுவதால், புதிய டேபிள் ஒன்றை உருவாக்கி, அதில் படுக்கை மற்றும் நெட்டு வரிசைகளைக் காப்பி செய்து பேஸ்ட் செய்திட எண்ணலாம். அல்லது, இருக்கின்ற டேபிளிலேயே வரிசைகளைக் காப்பி செய்து மேலும் கீழுமாக மாற்றலாம். ஆனால் இவற்றில் குழப்பம் தான் மிஞ்சும். மேலும் காப்பி அண்ட் பேஸ்ட் செய்வதில் தவறு ஏற்பட்டால், மொத்த வேலையும் வீணாகும்.
இதற்குப் பதிலாக, வேர்ட் ஓர் எளிய வழியைத் தருகிறது. நகர்த்த வேண்டிய படுக்கை அல்லது நெட்டு வரிசையினை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அதில் கர்சரை வைத்து அழுத்தியவாறு எங்கு அந்த வரிசை அமைய வேண்டுமோ, அந்த இடத்தை நோக்கி இழுக்கவும். இப்போது வரிசையோ அல்லது அதில் உள்ள டேட்டாவோ நகராது. அதற்குப் பதிலாகச் சற்றுப் பெரிய கர்சர் ஒன்று நகர்ந்து செல்வதனைப் பார்க்கலாம். மவுஸ் கர்சரை விட்டவுடன், குறிப்பிட்ட வரிசை, கர்சரை எங்கு இழுத்துச் சென்றீர்களோ, அங்கு அதன் டேட்டாவுடன் அமைக்கப் படுவதனைப் பார்க்கலாம். படுக்கை வரிசையினை நகர்த்துகையில், தேர்ந்தெடுத்த பின்னர், அதன் இடது ஓர செல்லில் கர்சரை வைத்து இழுக்கவும். வேறு செல்லில் கர்சரை வைத்து இழுக்கையில், டேட்டா மட்டும் வரிசையின் இறுதி செல்லுக்கு எடுத்துச் செல்லப்படும்.
மெனுவிலிருந்து எஸ்கேப்: 
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட் டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனு மீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

பாரா காப்பி:
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.
இருவகை அடிக்கோடு:
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட அவற்றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழுமையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl +U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடு வரையப்படும்.
ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl+Shft+W) கண்ட்ரோல்+ ஷிப்ட்+ டபிள்யு.
வேர்டில் டேட்டா சார்ட்டிங்: ஒரு சிலர், வேர்டில் அமைந்துள்ள தகவல்களை வகைப்படுத்த, குணிணூtடிணஞ் செய்திட, அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று, பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டும் பழக்கத்தினைக் கொண்டுள் ளனர். இது தேவையே இல்லை. வேர்ட் புரோகிராம் இதற்கான வசதியைக் கொண்டுள்ளது.
வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப் படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப் படுத்தலாம்.
தொடக்கங்களுக்குச் செல்ல: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத்திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!
இப்படியும் டேபிள் உருவாக்கலாம்
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க என்ன செய்கிறீர்கள்? டேபிள் மெனு சென்று இன்ஸர்ட் — டேபிள் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பின் தகவல்களை அதில் டைப் செய்திட வேண்டும். இதற்குப் பதிலாக படுக்கை வரிசைத் தகவல்களை ஒரு கமா இட்டு அடிக்க வேண்டும். இதே போல நெட்டு வரிசைகளையும் வரிசையாக அமைக்க வேண்டும். பின் இவற்றை செலக்ட் செய்து “Table > Insert Table”. செலக்ட் செய்து கிளிக் செய்தால் டேபிள் உருவாகி நீங்கள் டைப் செய்த தகவல்கள் எல்லாம் அந்த டேபிளில் அமர்ந்திருக்கும். அகலத்தினை சுருக்கலாம்; நீட்டலாம். இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் “Table > Table Autoformat” என்ற பிரிவில் கிளிக் செய்தால் பல வகை டேபிள்கள் உங்களுக்குக் கிடைக்கும். இதில் தேவையான டேபிள் அமைப்பைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
எழுத்துக்களின் அளவு
வேர்ட் டாகுமெண்ட்டில் எழுத்து வகையின் அளவு அமைப்பதுபற்றி பார்ப்போம். [Ctrl][Shift]P அழுத்தினால் கர்சர், பாண்ட் பெயர் இருக்கும் கட்டம் அருகே உள்ள அதன் அளவு கட்டத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பின் அம்புக் குறியைப் பயன்படுத்தி, அதனைக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு நீங்கள் விரும்பும் எழுத்து வகையின் சைஸ் அளவு தெரியும் என்றால், அந்த எண்ணை அப்படியே டைப் செய்திடலாம். 1 முதல் 1638 வரை இதன் அளவை அமைக்கலாம். எழுத்தின் அளவை அரை மாத்திரை கூட கூட்டலாம். எடுத்துக் காட்டாக 11.5, 12.5 என்று கூட அமைக்கலாம்.
எழுத்தின் அளவினை அமைக்க, அதன் கட்டத்தில் கர்சரை எடுத்துச் செல்லாமலும் அமைக்கலாம். இதற்கு [Ctrl][Shift]> என்ற கீகளை அழுத்தினால், எழுத்தின் அளவு கட்டத்தில் அளவு அதிகமாவதைக் காணலாம். நீங்கள் விரும்பும் அளவு வந்தவுடன் அப்படியே விட்டுவிடலாம். இதனையே குறைக்க வேண்டும் என்றால் [Ctrl][Shift] என்ற கீகளை அழுத்தலாம்.
எழுத்தின் அளவை ஒரு பாய்ண்ட் அதிகரிக்க Ctrl+] என்ற கீகளை அழுத்த வேண்டும். இதனையே குறைக்க எனில் Ctrl+[ என்ற கீகளைப் பயன்படுத்தவும்.