Thursday, April 7, 2011

ஆரோக்கிய சுற்றுலா – நெஞ்சம் மகிழும் மேகமலை!


மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயராம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு.
தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேகமலை. அடிவாரத்தில் இருக்கும் சிறிய முருகன் கோயில் படுபிரசித்தம். மலை அடிவாரம் வரை கருங்கூந்தல்போல் விரிந்து நீண்டு கிடக்கும் சாலை, போகப் போக 20 அடியாகக் குறைந்து போகிறது. அதனால் பஸ்கள் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்கின்றன. போகிற வழியெங்கும் இயற்கை தன்னை கொஞ்சமாக பிய்த்துப் போட்டிருக்கிறதோ என்கிற உணர்வு ஏற்படுவது நிச்சயம். காரணம்… அடர்த்தியான மரங்கள். முகம் காட்ட மறுக்கும் குயில் போல மரங்களுக்கு இடையே அமர்ந்து கிறீச்… கிறீச்… என சத்தமிடும் பறவைக் கூட்டம். நம்மை வரவேற்கிறது.
சாலையின் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறது குரங்குகள் கூட்டம். மெதுவாய் போகலாமே என சாலையில் நடந்து சென்றால் போச்சு. கையிலிருக்கும் பொருட்களைப் பிடுங்கும் குரங்குகளின் அன்புத் தொல்லை நிச்சயம். சாலை இருபது அடியாக இருப்பதால், எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட்டால் மட்டுமே மலை ஏற முடியும். முழுவதும் பனிமூட்டம். சூரிய வெளிச்சம் உள்ளே வராது. அதனால் மலையில் லேசான இருட்டு. ஆங்காங்கே சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து செல்கிறார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் குறைவுதான்.
மேகமலையில் டீ, காபி தோட்டங்கள் நிறைய. அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரும் பஸ்சை நம்பி இருப்பதில்லை. மாறாக ஆண்களும், பெண்களும் குறுக்கு வழியில் மலையில் ஏறுகிறார்கள். எட்டு மணி நேர வேலைக்காக பதினாறு மணி நேரம் அவர்கள் மேலும் கீழுமாய் நடப்பது ஆச்சரியம்!

அதிகாலையில் மலை ஏறுபவர்கள் வேலை முடிந்து மாலை நான்கு மணிக்கு கீழே இறங்குகிறார்கள். வீடு வந்து சேரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிடுமாம்.
ஆமார் மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் வருகிறது மேகமலை. வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில் கூட “ஸ்வெட்டர்’ தேவைப்படும். குளிர் தாங்கிக் கொள்ளலாம்.
“மேகமலையில் அவசரத்துக்கு டீ குடிக்க வேண்டும் என்றால் கூட வழியில்லை. ஒன்றிரண்டு “ரிசார்ட்டுகள்’ மட்டுமே உண்டு. மதிய உணவு அங்கே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் விலை சற்று அதிகம். குடும்பத்தோடு செல்பவர்கள் கையோடு உணவு கொண்டு செல்வது நல்லது!’ என்கிறார் அங்கே ஒரு “புராஜக்ட்’டுக்காக வந்திருக்கும் தர்மசந்துரு என்பவர்.
வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள். எல்லாப் பருவநிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது உண்டாம். தண்ணீர் அத்தனை குளிர்ச்சி. வாவ்…!
இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை சுத்தம். அங்கே திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு. அவை தண்ணீர் அருந்துவதை தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் வருகிறது கம்பன் பள்ளத்தாக்கு. இடையிடையே மலைகளிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சியில் ஒரு சில பயணிகள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். சபரிமலை சீஸனின்போது அங்கே ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அப்போதெல்லாம் அங்குள்ள காட்டு விலங்குகள் இடம் பெயர்ந்து பெரியார் அணைக்கட்டு, மேகமலைப் பகுதிகளுக்கு வந்துவிடுமாம். இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? அந்த விலங்குகள் மனிதர்கள் யாரையும் இன்றுவரை தாக்கியது இல்லை என்பதுதான்.
காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்)… என விலங்குகளின் நடமாட்டம் அமோகம். முடிந்தவரை வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்துச் சென்றால், இடங்களின் சிறப்பு பற்றி நன்கு தெரிந்துகொள்ளலாம்.
எப்படிப் போகவேண்டும்?
பஸ்ஸில் சின்னமனூரிலிருந்து நேராகச் செல்லலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பஸ் வசதி உண்டு. கட்டணம் 20 ரூபாய். காரில் செல்பவர்கள் ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து நேராக மேகமலை போகலாம்.
தங்கும் வசதி!
சிறிய, பெரிய “ரிசார்ட்டுகள்’ உண்டு. தங்குவதற்கு சில ஆயிரம் செலவாகும். இருந்தாலும் குடும்பத்துடன் செல்பவர்கள் மாலைக்குள் மலையிலிருந்து இறங்கி விடுவது நல்லது.

No comments:

Post a Comment