Thursday, February 10, 2011

பழம்பெரும் நடிகை சாவித்ரிக்கு ஸ்டாம்ப் வெளியிடுகிறது தபால்துறை


பழம்பெரும் நடிகை சாவித்ரிக்கு ஸ்டாம்ப் வெளியிட்டு அவரை கவுரவப்படுத்துகிறது தபால்துறை.

நடிகர் திலகம் என்று பெயர் பெற்றவர் நடிகர் சிவாஜி ‌கணேசன். அதுபோல நடிகையர் திலகம் என்று பெயரெடுத்தவர் சாவித்ரி. இவர் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மனைவி ஆவார். 1950 முதல் 70வரை நடிப்பில் கொடிகட்டி பறந்த சாவித்ரி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த "களத்தூர் கண்ணம்மா", "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "நவராத்திரி", உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலம். நடிப்பில் சாதித்த சாவித்ரி சில படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். சாவித்ரி தன்னுடைய 47வது வயதில் மறைந்தார். இவருக்கு விஜய சாமூண்டேஸ்வரி, சதீஷ் குமார் என இரண்டு பிள்ளைகள் உள்ளன.

இந்நிலையில் நடிகை சாவித்ரியை கவுரவப்படுத்தும் விதமாக அவர் பெயரில் ஸ்டாம்ப் வெளியிட, மத்திய தபால்துறை முடிவு செய்துள்ளது. டில்லியில் வருகிற பிப்ரவரி 13ம் தேதி நடக்கும் விழாவில், பிரபல நடிகை வை‌ஜெயந்திமாலா பாலி சாவித்ரியின் ஸ்டாம்ப்பை வெளியிடுகிறார்.  

10 வினாடிக்கு ரூ. 24 லட்சம்! *எகிறும் உலக கோப்பை விளம்பர கட்டணம்


உலக கோப்பை தொடருக்கான விளம்பர கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இந்திய அணி "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வசூலிக்க, ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்' அதிரடியாக திட்டமிட்டுள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்.,19 முதல் ஏப்., 2 வரை நடக்க உள்ளது. இதில், மொத்தம் 49 போட்டிகள் நடக்கின்றன. இதற்கான ஒளிபரப்பு உரிமையை ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்' ரூ. 9 ஆயிரத்து 126 கோடி கொடுத்து பெற்றுள்ளது. லீக் போட்டிகளின் இடையில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு 10 வினாடிகளுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளது. 

பன்மடங்கு அதிகரிப்பு:

இந்திய அணி லீக் சுற்றை கடந்து, "நாக்-அவுட்' முறையிலான காலிறுதியை எட்டும்பட்சத்தில், உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அப்போது விளம்பர கட்டணத்தை 6 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதன்படி 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வரை வசூலிக்கப்பட உள்ளது.
இது குறித்து ஈ.எஸ்.பி.என்., விளம்பர பிரிவு துணை தலைவர் சஞ்சய் கைலாஷ் கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டை பொறுத்து விளம்பர கட்டணம் நிர்ணயிக்கப்படும். "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினால், விளம்பரங்கள் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்படும். அந்த நேரத்தில், தற்போது வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து 5 முதல் 6 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்படும்,''என்றார்.

தூர்தர்ஷன் ஒப்பந்தம்:

ஈ.எஸ்.பி.என் சேனலுடன் சேர்ந்து தூர்தர்ஷனும்("டிடி') உலக கோப்பை போட்டியை ஒளிபரப்ப உள்ளது. ஹீரோ ஹோண்டா, பார்லே, ஜெய்பி சிமென்ட், ரிலையன்ஸ் மொபைல், பெப்சி, டாடா மோட்டார்ஸ், போன்றவை தூர்தர்ஷனுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து ரூ. 75 கோடி வரை ஈ.எஸ்.பி.என்., சேனலுக்கு வழங்கப்பட உள்ளது.

வருமானம் உயரும்:

பிரபல "ஜெனித் ஆப்டிமீடியா' விளம்பர நிறுவனத்தின் துணை தலைவர் நவீன் கேம்கா கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இம்முறை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், புதிய நிறுவனங்கள் விளம்பரம் கொடுக்க முன்வரும். அப்போது "டிமாண்ட்' அதிகரிக்கும். இதனை முழுமையாக பயன்படுத்தி, தனது விளம்பர வருவாயை ஈ.எஸ்,பி.என்., சேனல் அதிகரித்துக் கொள்ளும்,''என்றார்.

இந்தியாவில் ஊழலை ஒழிக்க உடனடி சிகிச்சை தேவை: அப்துல் கலாம்


 "இந்தியாவில் ஊழல் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. புற்று நோய் போல் வேகமாக பரவி வருகிறது. புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுவதைப் போல், ஊழலை ஒழிக்க, அரசியல், அரசுத்துறை மற்றும் நீதித் துறைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி: இந்தியாவில் ஊழல் நடவடிக்கைகள் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அரசியல், அரசுத் துறை மற்றும் நீதித் துறைகளில் இந்த ஊழல் ஊடுருவியுள்ளது. புற்று நோய் போல் வேகமாக பரவி வரும், இந்த பிரச்னையை ஒழிக்க, புற்று நோய்க்கு கதிரியக்க சிகிச்சை அளிப்பதைப் போல், இத்துறைகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். அதாவது, இந்த மூன்று துறைகளிலும், ஊழலை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவது. மிகப் பெரிய சவாலான விஷயம். இளைய சமுதாயத்தின் செயல்பாடுகள் மூலம் மட்டுமே, இதைச் செய்ய முடியும். அனைவரும் ஒருங்கிணைந்து, இதைச் சாதிக்க வேண்டும். ஊழல் அதிகரிப்பதால், நாட்டு மக்களுக்கு ஜனநாயத்தின் மீதான நம்பிக்கை குறையும். எனவே, இதை தடுக்க சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊழல் நடவடிக்கைகள் தொடர்ந்தால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை தடுக்க முடியாது. இதன் மூலம் பெரிய அளவிலான விளைவு ஏற்படும். அந்த போராட்டத்தை நாடு தாங்காது. இந்தியாவின் வளர்ச்சிக்கும் அது பெரிய இடையூறாக இருக்கும். இவ்வாறு அப்துல் கலாம் கூறியுள்ளார்.

இலவசத்தால் வந்த பலன் : தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது


தமிழக அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.

இதுதவிர,
மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆச்சு?

கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் துவக்கப்படவே இல்லை. பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.தமிழக அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்தது. இதில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ள முக்கிய திட்டங்கள் வருமாறு:
* நவீன முறையில் தூய்மையாகவும், துரிதமாகவும் பாலை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், கோவை ஆவின் நிறுவனம், 27 கோடி ரூபாயில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
* தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை.
* இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
* மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, "ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி', வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.
* மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.
* திருவண்ணாமலையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை.
* வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
* வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம், 1,800 கோடி ரூபாயில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி. பணிகள் துவக்கப்படவில்லை.
* யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்றவற்றை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத உதவித் தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும் பணி ஏதும் துவக்கப்படவில்லை.இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி


புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார். அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை

விபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்



இரண்டு சக்கர வாகனங்கள் என்றாலும் நான்கு சக்கர வாகனங்கள் என்றாலும் அவர்களது மிகப்பெரிய கவலை டிராபிக்ஜாம். 15 நிமிடங்களில் கடக்க வேண்டிய இடங்களை யெல்லாம் ஒன்றரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய நிலைமை.
அவசரமாக அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை. மோட்டார் கண்டுபிடித்த காலங்களில் வாகனத்தை அதிசயமாக மூக்கின் மீது விரல் வைத்து பார்த்த மக்கள் அதில் பயணம் செய்யவே பயபட்டார்கள். எங்கேயாவது மோதி விடுமோ? கவிழ்ந்து விடுமோ? என்ற அச்சம். விமானத்தில் செல்லவே பயப்பட்டார்கள். சிலர் இதனாலேயே வெளிநாட்டுப் பயணத்தையே தவிர்த்துவிட்டார்கள். விமானம் என்றாலே எங்கேயாவது மோதி சிதறிவிடும் என்றுதான் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நகரில் இருக்கும் வாகன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு ஹெலிகாப்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நெருக்கடி மிகுந்த நகரில் தரையிறங்குவது மிகக் கடினம்.
இம்மாதிரியான நிலைமைகளை தவிர்ப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சியை மேற்கொண்டுதானிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் பெர்க்லி நகரில் இருக்கும் லிபோர்னியா பல்கலைக்கழகம் ரோபோ காப்டர்ஸ் என்றழைக்கப்படும் USRA MAXIMA-2 என்ற விபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்களை தயாரித்துள்ளார்கள். இதன்மூலம் எதிர்காலத்தில் விபத்தை தவிர்க்கும் விமானங்கள் கண்டுபிடிக்க முடியும். இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால், LASER RANGER FINDER  என்ற உணரி மூலம் எதிரே வரும் அல்லது எதிரே இருக்கும் பொருளை இந்த உணரியின் மூலம் கண்டுபிடித்து தன்னுடைய திசையை மாற்றிக்கொள்ளும். இது திசை மற்றும் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டுக் கருவிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு விமானம் அல்லது ஹெலிகாப்டர் ஒரு இடத்திற்கு சென்றால் அது செல்லக்கூடிய பாதை எப்படிப்பட்டது? அதன் தன்மை, சீதோஷ்ண நிலை எவ்வாறு இருக்கும்? என்று ஆராய்ந்து பிறகு சென்றிறங்கக் கூடிய இடம் எப்படிப்பட்டது? என்றெல்லாம் ஆராய்ந்து பின் அதற்கேற்ற சாதகமான நிலை இருந்தால் மட்டுமே விமானம் பயணம் செய்யும். இல்லாவிட்டால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடுமையான மூடுபனி காலங்களில் விமானம் மலைகளில் மோதி நொறுங்க வாய்ப்புள்ளது. இவையெல்லாம் எதிர்பாராத விதமாகவோ அல்லது விமானியின் கவனக்குறைவாகவோ இருக்கலாம்.
இல்லாவிட்டால் விமானம் செல்லும் பாதையில் மற்றொரு விமானமோ அல்லது பறவைகளோ பறந்தால்கூட விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பறவை மோதி விமானத்தில் கோளாறால் திடீரெனதரையிரங்கியது. இவையெல்லாம் எதிர்பாராது நடக்கக் கூடியதுதான்.
இந்தவகை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏரோபாட் திட்டத்தில் (aEROBOT pROJECT) USRA MAXIMA-2 ) என்ற இந்த ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. எத்தனையோ நிறுவனங்கள் இந்த விபத்து தவிர்க்கும் விமானங்களை கண்டுபிடித்தாலும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஏரோபாட் நிறுவனம் எல்லாவற்றிற்கும் முதன்மையாக விளங்குகிறது. 12 அடி நீளமுள்ள ரோபோ காப்டர்ஸ்  என்றழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் தன் எதிரே வரும் விமானம் அல்லது ஹெலிகாப்டர் இவைகளை லேசர் கதிர் உணரியால் கண்டறிந்து தன்னுடைய பாதையை மாற்றிக்கொள்ளும் அல்லது திசையை திருப்பிக்கொள்ளும்.
அதாவது எதிரே பொருட்கள் தட்டுப்பட்டால் லேசர் உணரியால் ஒளிக்கற்றைகளை பாய்ச்சும். இதனால் எதிரே இருக்கும் பொருளிலோ அல்லது விமானத்திலோ
மோதாமல் விபத்தை தவிர்த்துவிடும். எந்தவித முன் அனுபவமில்லாத இடத்திலும் அல்லது நெருக்கடியான நகரிலும் பறக்கக்கூடிய வல்லமைக் கொண்டது.
வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. எதிர் காலத்தில் வான் போக்குவரத்து நெருக்கடி, விபத்து இவைகளை தவிர்க்கும் பொருட்டு நவீன யுத்திகள் கொண்ட விமானங்கள் உருவாக்கப்படுவது நிச்சயம்.

உடையில் ஒழுக்கம்


இன்று:

பளிங்குபோல் மின்னும்
பளபளப்பு சன்மைக்கா
ஆளுயரக் கண்ணாடி
அதைச்சுற்றிப் பூவேலை
பக்குவமாய் இழைத்த
பகட்டான டிரெஸ்ஸிங் டேபிள்
மேஜையின் மேலே
மேனாட்டு சென்ட்வகைகள்
மேனி எழில்கூட்டும்
மேக்கப் சாதனங்கள்
பாரின் ஸார்ஜெட்டில்
பளபளத்தாள் பாக்கிரா!
ஏற்கனவே தங்கநிறம்
எழுமிச்சை தோற்றுவிடும்!
இருந்தாலும்…..,
பேர் அன்ட் லவ்லி என்று
பேன் ஸி கிரீம் வகைகள்!
பான்ட்ஸ் பேஸ்பவுடர்
பாரின் லிப்ஸ்டிக்கு
கைக்குப் பத்தாக
கனத்த வலையல்கள்
கழுத்துக் கொள்ளளவும்
கச்சிதமாய்ச் சங்கிலிகள்
எடுத்து அணிந்தாள் – தன்
எழில்கண்டு பூரித்தாள்
அறைக்குள் நுழைந்த
அவள் அம்மா ஆயிஷா
“எதுக்கும்மா, இவ்வளவு?
ஏற்பாடு? நல்லதில்லே!
வீட்டு ஆம்பிள்ளைங்க
வெளிநாட்டில் இருக்கயிலே
அலங்காரம் கூடாது!
அதுநம்ம வழக்கமில்லே!”
சொல்லி முடிக்கவில்லை
சோகம் மகள் முகத்தில்!
“அம்மாடி!அம்மாடி!
அம்மாவா, நீஎனக்கு?
வந்து வாச்சியே
வாயாடி நாத்துனாவா!
ஒவ்வொருத்தி தம்புள்ள
உடுத்தி கழிக்கனும்னு
ஓயாம துஆகேட்டு
ஓஞ்சிங்கே போறாக!
என்னயக் கரிச்சுக்கொட்ட
இங்கேயே ஒருசனியன்!’
ஒப்பாரி வைத்தாள்
ஓடிவந்தார் அவள் அத்தா!
“ஏண்டி, அறிவிருக்கா?
என்னடி சொன்னே நீ?
சின்னஞ்சிறிசுகள
சீண்டுறத விடுவேண்டி
இந்த வயசுலயும்
அனுபவிக்க உடாட்டா
எப்பத்தான் செய்யிறது?
இழுத்து மூடு உன்வாயை!
அவர்போட்ட சத்தத்தில்
அடங்கினாள் ஆயிஷா!
அதுகண்ட பாக்கிரா
அகமகிழ்ந்து துள்ளினாள்!
“அத்தான்டா அத்தாதான்!
அவருக்கிணை அவரேதான்”
அலங்காரப் பையெடுத்து
அன்ன நடை நடந்து
அடுத்த தெரு விசேசத்துக்கு
அப்போதே புறப்பட்டாள்!
அழகுத் தேரொன்று
அசைந்து நகருவதை
அத்தெருவின் கண்களெல்லாம்
ஆசையுடன் வெறித்தனவே!
அன்று:
நாயகத்திருமேனி(ஸல்)
நடுவில் வீற்றிருக்க
நாயகத் தோழர்கள்
நயமுடன் சூழ்ந்திருந்தார்
வாழ்க்கை நடைமுறையில்
வரும் சந்தே கம்களைய
வள்ளள் பெருமானார்
விளக்கம் தந்தார்கள்
அப்போதோர் மூதாட்டி
அவ்வழியே சென்றார்கள்
அண்ணலெம் பெருமானின்
அவ்வீட்டுள் நுழைந்தார்கள்!
யாரவர் என்பதனை
நாயகமும் அறியவில்லை
யாறென்று விசாரிக்க
எண்ணமும் கொண்டார்கள்
வீட்டுக்குள் நுழைந்தார்கள்
வெளியாட்கள் யாருமில்லை!
“அம்மா பாத்திமா!
அருமைச் செல்வமே
நம்வீட்டுள் சற்றுமுன்
நுழைந்த அம் மூதாட்டி
யாரம்மா? என்றார்கள்
நபிமகளார் சிரித்தார்கள்!
“நாந்தான் வாப்பா!
நானன்றி யாருமல்ல!
வெட்ட வெளியில்
வீதியில் நடக்கயிலே
வீணாக அழகை
விற்பது தவறன்றோ?
ஆகையினால் நானும்
அழகை மறைத்துவிட்டு
மூதாட்டி போல
வேஷமிட்டேன்” என்றார்கள்!
அந்த பதிலில்
அகமகிழ்ந்த நபியவர்கள்
“அம்மா செல்வமே
அறிவின் பிரகாசமே
அகிலத்துப் பெண்டிற்கு
அழகிய முன்மாதிரி நீ”
என்றார்கள்; நெகிழ்ந்தார்கள்
என்னவொரு காட்சி இது!
அந்த பாத்திமாவும்..
இந்த பாக்கிராவும்…
சொந்த பந்தம்தான்..
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள் …..
என்ன செய்வது?

107 போயிங் விமானங்களுக்கு ஏர் இந்தியா ஆர்டர்!

பெங்களூர்: ஏர் இந்தியாவுக்கு 37 போயிங் ட்ரீம்லைனர் மற்றும் 70 வழக்கமான விமானங்களுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது.










ன்று பெங்களூரில் துவங்கிய ஏரோ இந்தியா 2011 கண்காட்சியில் இத் தகவலை போயிங் நிறுவனம் வெளியிட்டது.

இவற்றில் முதல் விமானம் இந்த ஆண்டு இறுதிக்குள் டெலிவரி செய்யப்படும் என போயிங் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் தினேஷ் கேஷ்கர் தெரிவித்தார்.

அடுத்த 10 ஆண்டுகளில் 37 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா சார்பில் ஆர்டர்கள் கிடைக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார். இனி வரும் காலங்களில் பயணிகள் எண்ணிக்கை உயர்வு மற்றும் ராணுவத் தேவைகளுக்காக மிக அதிக அளவு விமானங்களுக்கு ஆர்டர் கிடைக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

நீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா ?



உலகில் எந்த ஒரு பொருளும் இயங்காமலோ அல்லது பயன்படுத்தப்படாமலோ இருந்தால், நிச்சயம் கெட்டுவிடும் அல்லது செயலற்றுவிடும். நாம் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள பலவிதமான பயிற்சிகளை மேற்கொள்கிறோம். சீரிய இயக்கத்தையும், முறையான ஓய்வையும் உடம்பிற்கு அளித்து, அதை சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்ள முயல்கிறோம்.
புத்திசாலி ஆக வேண்டுமெனில், உடம்பிற்கு கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவமானது, சிந்தனை மற்றும் பரிணாமத்தின் மையமாய் இருக்கும் மூளைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
மூளைக்கு பயிற்சியே கொடுக்காமல் இருந்தால், அது ஆற்றல் இழந்து, சோர்ந்து போய்விடும். மூளை சோர்ந்து போனால், நினைவாற்றல், கடினமானதை படித்து புரிந்துகொள்ளும் திறன், பகுப்பாய்வு திறன், படைப்பாற்றல், கணக்கிடும் திறன், முடிவெடுக்கும் திறன், சாமர்த்தியம் உள்ளிட்ட பலவித முக்கிய திறன்கள் மங்கி போய்விடும். எனவே மூளையை பட்டை தீட்டி வைத்திருக்க வேண்டியது இன்றைய வாழ்க்கை சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இல்லையெனில், நாம் முக்கியத்துவம் அற்ற மனிதராய் கருதப்பட்டு நமது சமூக மதிப்பை இழந்துவிடுவோம். மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருப்பதற்கான சில வழிமுறைகளை இங்கே தருகிறோம்.
தரமான புத்தகங்களை படித்தல்:
படிப்பதில் பொதுவாக பலருக்கும் ஆர்வம் உண்டு. படித்து புரிந்துகொள்ளும் நடவடிக்கையால் மூளை சுறுசுறுப்படைகிறது. ஆனால் நாம் படிக்கும் புத்தகங்கள் எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பது இங்கே முக்கியம். சாதாரண பொழுதுபோக்கு நாவல்கள், ஜனரஞ்சக பத்திரிகைகள், மிக சாதாரண விஷயங்களைப் பற்றி மேலோட்டமாக எழுதப்பட்ட புத்தகங்கள் போன்றவைகள் மூளையின் வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும் துணைபுரியாதவை. அவற்றை சிறிதுநேரம் பொழுதுபோக்காக வேண்டுமானால் படிக்கலாம்.
மாறாக, உங்களுக்கு பிடித்த துறையிலிருந்து எழுதப்பட்டிருக்கும் ஆராய்ச்சி புத்தகங்களையோ, அல்லது வேறு துறைகளை சேர்ந்த பகுப்பாய்வு புத்தகங்களையோ படிக்கலாம். படிப்பதோடு இல்லாமல், ஏதாவது பத்திரிக்கைகளுக்கு தரமுள்ள கட்டுரைகளும் எழுதி அனுப்பலாம். படித்த விஷயங்களை யாரிடமாவது விவாதிக்கலாம். பொது அறிவு புத்தகங்களை படித்து விஷயங்களை மனனம் செய்து பழகலாம். பள்ளி மாணவர்களுடன் அது சம்பந்தமான வினாடி-வினா போட்டியில் ஈடுபடலாம். ஆங்கில மொழியின் வார்த்தைகளையும், அதன் அர்த்தங்களையும் படித்து மனனம் செய்யலாம். இதுபோன்று பலவித பயன்மிகுந்த செயல்பாடுகளால் மூளையானது சுறுசுறுப்பாகவும், திறன் மிக்கதாகவும் மாறும்.
டி.வி. பார்ப்பதை தவிர்த்தல்:பொதுவாக நம்மை சாந்தப்படுத்திக்கொள்ள டி.வி. பார்ப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளோம். அதை ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ எடுத்துக்கொண்டாலும், டி.வி. பார்ப்பதால் உங்களின் மூளைத்திறன் மேம்பாடு அடையாது. டி.வி. பார்ப்பதில் உங்களின் சக்தி பெருமளவு செலவழிக்கப்படுகிறது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். டி.வி. பார்ப்பதற்கு பதிலாக ஏதாவது முக்கிய பத்திரிக்கைகளை படிக்கலாம் அல்லது நல்ல நண்பர்களுடன் அமர்ந்து பயனுள்ள விவாதங்களில் ஈடுபடலாம்.
ஒரு புதிய மொழியை கற்றல்:மொழியை கற்கும் செயலானது மூளையின் திறனை அதிகரிப்பதிலும், அதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பயனுள்ள வகையில் ஒரு வெளிநாட்டு மொழியை தேர்வுசெய்து அதை கற்க தொடங்க வேண்டும். அதன்மூலம் நமக்கு இரட்டை நன்மை கிடைக்கிறது.
மூளைக்கான பயிற்சி:மூளைக்கு பயிற்சி கொடுத்தலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, உடல்ரீதியிலான பயிற்சி மற்றும் பகுப்பாய்வு ரீதியிலான பயிற்சி. உடல்ரீதியிலான பயிற்சியில் யோகா உள்ளிட்ட சில உடற்பயிற்சிகள் அடங்கும். மூளைக்கு ஆக்சிஜனும், ரத்த ஓட்டமும் மிகவும் முக்கியம். எந்தளவிற்கு இந்த இரண்டும் கிடைக்கிறதோ அந்தளவு மூளை சக்திவாய்ந்ததாக மாறும். மேற்சொன்ன பயிற்சிகள் இந்த இரண்டையும் அதிகளவில் மூளைக்கு தருகின்றன. எனவே முறையான நபர்களின் ஆலோசனைகளைப் பெற்று அந்த பயிற்சிகளை செய்ய தொடங்கவும்.
பகுப்பாய்வு ரீதியான பயிற்சி என்பது, படம் வரைதல், வண்ண வேலைபாடுகளில் ஈடுபடுதல், எண் விளையாட்டுக்களில் ஈடுபடுதல், தோட்டம் வளர்த்தல், கைவினைப்பொருள் தயாரிப்பில் ஈடுபடுதல், நுணுக்கமான வேளைகளில் பங்கெடுத்தல் போன்று பலவகைப்படும். இவற்றில் நமக்கு பிடித்தமானவற்றிலோ அல்லது வாய்ப்பிருந்தால் அனைத்திலுமோ ஈடுபடலாம்.
மேற்கூறிய பயிற்சிகளையும், வழிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றும்போது, நமது மூளை புதிய சக்திபெற்று, நாம் புத்திசாலி என்ற பெயரை வாங்கலாம்.

சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா?



`காத்ரீனா’, `ரீட்டா’, `வில்மா’ இதெல்லாம் ஏதோ பிரபல டென்னிஸ் வீராங்கனை பெயர்கள் போல் எண்ண தோன்றுகிறதா?. அதுதான் இல்லை. இவைகளெல்லாம் சமீபத்தில் அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடிய சூறாவளிகள். `ஊரை அடித்து உலையில் போடவேண்டும்’ என்று சொல்வது இதற்குத் தான் பொருந்தும். இந்த துக்கத்திலிருந்து மீள்வதற்குள் அடுத்த பேரிடியாக பாகிஸ்தான், காஷ்மீர் பூகம்பங்கள்.
உலகின் அனுதாபப் பார்வை நியூ ஆர்லியன்ஸிலிருந்து ஆசியாவின் பக்கம் திரும்பி விட்டன. முன்பெல்லாம் ஒரு இயற்கை பேரழிவிற்கும் மற்றொரு இயற்கை பேரழிவிற்கும் நீண்ட இடைவெளி இருக்கும். எப்பொழுதாவதுதான் நடக்கும். எல்லாமே கொரில்லா தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துவிட்டன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியுமா? சூறாவளி, புயல் இவைகள் மனிதனுடைய உடைமைகளை அப்படியே விழுங்கிவிடும் ஒரு ராட்சத அரக்கன்.
நிலவில் காலடி வைக்க முடிகிற நம்மால் ஏன் இதை நிறுத்த முடியாது அல்லது இதன் வேகத்தையாவது கட்டுப்படுத்த முடியுமா ? அல்லது குறைந்தபட்சம் குறைக்க முடியுமா? என்று விஞ்ஞானிகளின் கேள்வியாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக விஞ்ஞானிகள் இயற்கை சீற்றமான சூறாவளியை எப்படி தடுக்கலாம் அல்லது குறைந்த பட்சம் எப்படி அதன் தீவிரத்தைக் குறைக்கலாம் என்று பல்வேறு ஆராய்ச்சி முறைகளை கண்டறிந்து வருகிறார்கள்.
1906-ம் ஆண்டு கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோ நகரத்தை 7.8 ரிக்டரில் உலுக்கியது பூகம்பம். ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாயின. கிட்டத்தட்ட 3ஆயிரம் மக்கள் இறந்தனர்.
1944-ம் ஆண்டு இத்தாலியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரபலமான விசுவையஸ் எரிமலை குமுறியதில் சுமார் 150 பேர் இறந்து போனார்கள். கடந்த வருடம் ஜனவரி மாதம் ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய நில அதிர்வு பலம் வாய்ந்த கட்டிடங்கள் தரைமட்டமானதோடு பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
சுமத்ரா தீவின் கடற்பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் 30 அடி உயர சுனாமிக்கு வித்திட்டது. பல லட்சக்கணக்கானோர் உயிரி ழந்தனர். உலகின் ஒட்டுமொத்த கவனமும் சுனாமி பாதித்த பகுதிகளை நோக்கி நகர்ந்தன.
இவ்வளவு அறிவியல் வளர்ந்தும் நாம் இன்னும் இதுபோன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள இயலாத, சக்தியில்லாதவர்களாகத்தான் இருக்கின்றோம். கடந்த நூற்றாண்டுகளாக உலகின் மக்கள் தொகை பல மடங்காக உயர்ந்திருக்கிறது. 1906-ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் பூகம்பம் ஏற்பட்டபோது உலகின் மொத்த மக்கள் தொகை 160 கோடி தான்.
இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது நம்மை தாக்கி கொண்டே இருக்கிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களில் வாழும் மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு மாறினால் தவிர இத்தகைய பேராபத்து களிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள முடியாது. ஆனால் இது நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியமாகுமா? என்பதுதான் கேள்விக்குறி.
வேறு என்னதான் மாற்றுவழி. சமீப பத்தாண்டுகளாக சில நவீன யுத்திகள் விஞ்ஞானிகளின் அறிவு பார்வையில் இதற்கான வழிமுறைகள் தென்பட்டு வருகின்றன.
விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வமுள்ள வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானிகள் ஏராளமான திட்டத்தை கண்டறிந்தார்கள். இதில் விண்வெளியிலிருந்து வெப்பக்கதிர்களை சூறாவளி கடக்கும் கடற்கரையின் பாதையில் இராட்சத காற்றாலை எந்திரங்களின் மூலம் பாய்ச்சுவது. ஆனால் இதில் உறுதியான நிலை தென்பட வில்லை.
அமெரிக்க அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதாவது விமானங்களிலிருந்து வெள்ளி அயோடைடுகளை சூறாவளி வீசப்போகும் இடங்களிலுள்ள கருமேக மண்டலங்களில் தூவ வேண்டும். இதன்மூலம் வெப்பச்சலனம் ஏற்பட்டும் சூறாவளியை பலவீனமடையச் செய்து விடுகிறது. 1961ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகள் 4 முறை இந்த முறையை மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் சூறாவளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் ஹப் வில்லோபி ஒரு திட்டத்தை வகுத்தார். உட்க்ஞுஹஙீஙீ தக்சிஙீஹஷக்ஙுக்ஙூஞ் என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் சூறாவளியின் தீவிரத்தை நிலைகுலையச் செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றார். இம்முறையைப் பயன்படுத்தி டெக்சாஸ் மாநிலத்தை நோக்கி படையெடுத்த ரீட்டா சூறாவளியை பலவீனமடையச் செய்தார்கள். ஹப் கூறுகையில், “இந்த முறைக்கு 50 மில்லியன் டாலர்கள் செலவாகியது”, என்கிறார்.
மற்றொரு அணுகுமுறையான கடற்பஞ்சுகளை ஜெட் விமானங்கள் மூலம் வீசச் செய்வது. இம்முறையின் மூலம் சூறாவளியின் வேகத்தை தகர்க்க முடியும். மற்றொரு முறையில் வடதுருவப் பிரதேசத்திலிருந்து பெரிய பனிப்பாறைகளை உஷ்ண பிரதேசத்திற்கு இழுப்பதன் மூலம் அப்பிரதேசத்தை குளிரடையச் செய்ய முடியும். இதன் மூலமும் கடும் சூறாவளியை கட்டுக்கு கொண்டுவரலாம்.
தேசிய இயற்கை பேரழிவு மையத்தின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் சிம்ப்ஸன் எண்ணெயை விமானங்கள் மூலம் தெளிப்பதன் மூலம் அதன் வேகத்தை வலுவிழக்கச் செய்யமுடியும் என்பதை கண்டறிந்தார். 1970-ம் ஆண்டு ரஷ்யாவில் இந்தமுறை சோதிக்கப்பட்டது. அதனால் எதுவும் பலன் ஏற்பட்டதா என்பதை அறியமுடியவில்லை.
பத்து ஆண்டுகளாக அனைத்து முறைகளையும் கேட்டறிந்த வில்லோபி, அவர் “கட்டிட நூலிழைக் கண்ணாடியின் மூலம் கடல் மேற்பரப்பிலுள்ள நீரை உறிஞ்சுவதன் மூலம் வளைகுடா பகுதியை குளிரடையச் செய்யவேண்டும். இதுவும் சூறாவளியைக் கட்டுப்படுத்தும் என்ற வழிமுறையாகக் கண்டறிந்தார்.
புயல், சூறாவளியினால் பூமியினுடைய வெப்பப் பிரதேசத்தில் இருக்கும் அதிக வெப்பத்தை வெளியேற்றுகிறது. மேலும் மாசுவையும் கட்டுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் மாஸாசூஸ்ஸட் மாகாணத்திலுள்ள ஒரு தனியார் ஆராய்ச்சிக் கழகத்தின் வான்மண்டல ஆய்வாளர் ராஸ் ஹோப்மேன் தன்னுடைய ஆராய்ச்சியில் கண்ணாடிகளின் உதவியுடன் செயற்கைக் கோள்களின் மூலம் சூரியக் கதிர்களை பாய்ச்சுவதன் மூலம் சூறாவளியின் மற்றும் புயலின் தன்மையை மாற்றிவிடலாம் என்கிறார்.
MIT-யின் வேதியியல் பொறியியல் வல்லுனர் ராபர்ட் லேஞ்சர் ஒரு திட்டத்தை அறிவித்தார். அதாவது சூறாவளி உருவாகும் பிரதேசத்தில் நீராவியை எந்திரத்தின் மூலம் உறிஞ்சுவதன் மூலம் தடுக்கமுடியும் என்று தனது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். இது சிம்ப்ஸனின் எண்ணெய் தெளிக்கும் முறைக்கு மாற்றுமுறையாகும்.
வில்லோபி வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு முறையை பரிசீலனை செய்தார். அதாவது சூறாவளி நகரும் பாதையில் ராட்சத துணிகளை இழுத்துக் கட்டுவதன் மூலம் கட்டுப்படுத்தும் முறை. ஆனால் இம்முறைக்கு கொலம்பியா மாவட்டத்தின் அளவைப் போல் 10 மடங்கு துணி தேவைப்படுகிறது.
இயற்கை சீற்றங்களை முழுவதும் முறியடிக்க இயலாவிட்டாலும் ஓரளவு அதற்கான சாத்தியக்கூறுகளை நவீன விஞ்ஞான வளர்ச்சியை பயன்படுத்தி எவ்வாறு குறைக்கலாம். எந்தத் தன்மையில், சூழ்நிலைகளில் உருவாகிறது? அதற்கான மாற்றுவழி என்ன? இயற்கை வளம் மற்றும் இயற்கை சூழ்நிலைகளில் அறிவியலை திணிப்பதால் புவியின் சீற்றத்திற்கு ஆளாகிறோமா? என்பதை கண்டறிய வேண்டும்.
எது எப்படியிருந்தாலும் இயற்கை சீற்றங்கள் எல்லாம் பூமியின் பழிவாங்கும் நடவடிக்கையல்ல. இயற்கையாகவே நிலையற்ற தன்மையில் உள்ள பூமியில் வாழ்வதற்கு நாம் கொடுக்கும் விலையே இயற்கை. மனிதன் ஆதிகாலத்தில் இயற்கையாக வாழ்ந்து அனுபவித்தான்.
ஆனால் இன்றைய நவீன உலக மனிதன் இயற்கையினை தன் வசப்படுத்த முயலும்போது இயற்கையினை, பூமியினை, கடலினை மற்றும் இயற்கை அம்சங்களை துளைத்து, வருத்தி பல சாகசங்களை, அதிசயங்களை செய்யும்போது இயற்கை பூகம்பம், சூறாவளி, புயல், காற்று, மழை, சுனாமி, பஞ்சம் போன்ற தன்னுடைய இன்னொரு (கோர) முகத்தை காண்பிக்கிறது. இவையனைத்திற்கும் காரணம் இயற்கையினை கையகப்படுத்த மனிதனின் எல்லையில்லா முயற்சியே!
செவ்வாய் கிரகத்தால் பூமிக்கு ஆபத்தா?

வானவியல் நிபுணர்களின் கருத்துபடி, செவ்வாய் கிரகம் பூமியை நெருங்கி வருவதாக கருத்து நிலவுகிறது. கடந்த ஆண்டிலிருந்தே உலகில் இயற்கை சீற்றங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உதாரணமாக டிசம் பர் 2004-ம் ஆண்டு ஆசிய நாடுகளை துக்க நாடாக்கிய சுனாமி மற்றும் அதை தொடர்ந்து அமெரிக்காவில் சூறாவளி மற்றும் இன்று பாகிஸ்தான் பூகம்பம் போன் றவற்றை குறிப்பிடலாம்.
இயற்கை சீற்றங்களின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடல் அலைகளும் முன்புபோல் சீரான நிலையில் இல்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் செவ்வாய் கிரகம் பூமியை நோக்கி வருவதும் கூட இதன் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்கா போன்ற பிரபல நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 55.7 மில்லியன் (5 கோடியே 57 லட்சம்) கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

திடீரென நான் மௌத்தாயிட்டா!


நடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி, ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்கல்வி மட்டுமே படித்திருந்த தன் மனைவியிடம் ஒருநாள், “திடீரென்று நான் மௌத்தாயிட்டா நீ என்ன செய்வே?” என்று கேட்க, பதறிப் போனார் மனைவி!

“ஏன் இப்படி அமங்கலமாப் பேசுறீங்க?” என்று அவர் பாசத்துடன் கடிந்துகொள்ள, மனைவியை சமாதானப் படுத்திய அவர், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்!
“மௌத் மனிதனுக்கு எந்த நேரத்திலும் நேரலாம்… அதை எதிர்கொள்ள ஒரு முஸ்லிம் எல்லா வகையிலும்- எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் …குடும்பார்த்தக் கடமைகளை ஒத்தி போடாமல், முடிந்தவரை முடித்துக் கொள்ள வேண்டும் …நம்முடைய தொழிலை உருவாக்க நான் பட்ட கஷ்டத்தை நீ அறிவாய் ! அந்தத் தொழில் எனக்குத் திடீரென ஏதாவது நிகழ்ந்துவிட்டாலும் தொடர்ந்து நடக்க வேண்டும்! திறம்பட நிர்வகிக்கப் பட வேண்டும் – அதனால்தான் கேட்கிறேன்… அப்படியான ஒரு சந்தர்ப்பம் நேரிட்டால், நீ என்ன செய்வாய்?”
“என்னால் என்ன செய்ய முடியும்? போதிய படிப்பில்லை….. உலக அனுபவம் இல்லை… செல்வச் சூழலில் செல்லமாய் வளர்க்கப் பட்டவள்… உங்களுக்கு வாழ்க்கைப் பட்டபிறகும் அதே மகிழ்ச்சியான – வசதியான வாழ்க்கைச் சூழ்நிலை… என்னால் ஒன்றும் செய்ய முடியாது…. குழந்தைகளும் சிறியவர்கள் …… ஊருக்குப் போய்விட வேண்டியதுதான் ..” அந்தக் குடும்பத் தலைவி கலக்கத்துடன் சொன்னார்.
ஆயிரம் முறை அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மானசீகமாக இறைவனிடம் இறைஞ்சிக்கொண்டார்.
“அப்ப இந்தத் தொழில்…? ரத்தம் சிந்தி உருவாக்கிய தொழில்..? உடனே சரிந்து போவதா? கூடாது! அதை அனுமதிக்கக் கூடாது!”
“எப்படி?”
“வழியிருக்கிறது – அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன் இன்ஷா அல்லாஹ்! அதற்கு நீ ஒத்துழைக்க வேண்டும்”
புரியாமல் கனவணையே உற்றுப் பார்த்தார் அவர்.
“ஏன் இவர் இப்படிப் பேசுகிறார்? என்னால் எப்படி இந்தத் தொழிலைக் காப்பாற்ற முடியும்? எனக்கு என்ன அனுபவங்கள் இருக்கின்றன?”
அவருக்கு அழுகை அழுகையாக வந்தது!
கணவர் விவரித்தார்.
குஜராத்தின் மொத்த வியாபாரிகளிடமிருந்து அவர் குழந்தைகள் – பெண்களுக்கான உடைகளை மொத்தமாக ஜித்தாவுக்கு இறக்குமதி செய்கிறார். அவற்றிற்கு ஜித்தாவிலேயே எம்பிராய்டரி – நீடில் வொர்க் டிஸைன்களை சீஸனுக்கு ஏற்றபடி செய்துகொள்கிறார். அதற்காக ஒவ்வொரு பீஸுக்கும் 15 முதல் 20 ரியால் வரை செலவழிக்கிறார். பிறகு விற்பனை செய்கிறார்.
“அந்த 15- 25 ரியால் ஏன் பிறருக்குச் செல்ல வேண்டும்? நான் உனக்கு அந்தத் தொழிலின் நுணுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறேன் … உதவிக்கு ஆட்களை நியமிக்கிறேன்…. கடல் போன்ற பெரிய வீடு இருக்கிறது…. நீ இங்கிருந்தே இதைச் செய்யலாம்! அந்தத் தொகையை நான் உனக்குத் தந்து விடுவேன்…செலவு, உதவியாளர்கள் சம்பளம் போக மீதியை நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்… வீட்டுச் செலவுக்கும் உனக்கான செலவுகளுக்கும் வழக்கம் போல் தந்து விடுவேன்…இது உன் தனிப்பட்ட சம்பாத்தியம்”
“இது சாத்தியமா? … கேட்க நன்றாகத்தான் இருக்கிறது…என்னால் இதைச் செய்ய முடியுமா?”
மனைவியின் சந்தேகம் நீங்குவதாக இல்லை!ஆனால் கணவர் விடவில்லை!
அவரை ஒப்புக்கொள்ள வைத்து திட்டத்தைச் செயல்படுத்தினார்!
அன்று பயந்து நின்ற மனைவி இன்று தன்னம்பிக்கை நிறைந்த குடும்பத்தலைவியாய் ஏராளமான சேமிப்புடன் தலை நிமிர்ந்து நிற்கிறார்! தஞ்சை மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் கிராமத்தில் சராசரியாக செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்த பெண், ஒரு சிறந்த “பெண் தொழில் முனைப்பாளர்”ஆன உண்மைக் கதை இது!
அந்த புத்திசாலி – யதார்த்தம் உணர்ந்த குடும்பத் தலைவர் மனைவியுடன் நிற்கவில்லை! +2 படித்த மூத்த மகளை தன் கணக்கு வழக்கு அத்தனையையும் பொறுப்புடன் நிறைவேற்றும் அக்கௌண்டண்டாக உருவாக்கி, அதற்காக நியமிக்கப் பட்டிருந்த பணியாளரை நிறுத்திவிட்டு அந்த ஊதியத்தை தன் மகளுக்கே வழங்கினார்!
ஆறாவது, ஏழாவது படிக்கும் தன் பிஞ்சு மகன்களையும் விட்டுவிடவில்லை அவர். ஆயத்த ஆடைகளுக்கான விலைச்சீட்டை பின் பண்ணும் பனியை ஓய்வு நேரத்தில் வழங்கினார். அதன் காரணமாக அவர்களின் சேமிப்பும் பெருகியது. ஜித்தாவில் இந்த வித்தியாசமான குடும்பத்தைச் சந்தித்த பிறகு பல இடங்களில் இது பற்றிப் பேசியிருக்கிறேன்.
சிலர் இந்த வழியில் தாங்களும் சிறக்க அல்லாஹ் வழியமைத்தான்! இதோ ஊற்றுக்கண் வாசகர்களுக்கும் அந்த உண்மைக் கதை! அந்தப் புத்திசாலி குடும்பத்தலைவராய் நாம் ஒவ்வொருவரும் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கவே இருக்கிறது!
நமக்கு வேண்டியதெல்லாம் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையில் கொஞ்சம் மாற்றம்!- தெளிவான சிந்தனை!
குறுகிய வட்டத்தை விட்டு கொஞ்சமும் வெளிவராமலே – குடும்பத்துக்குச் ‘சுமை”ஆகிப் போகாமல் தற்சார்புள்ள குடும்பத் தலைவிகளை – பெண்குழந்தைகளை உருவாக்கும் வலுவான திட்டம்!
அவரவர் வசதிப்படி – சூழ்நிலைகளுக் கேற்ப தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்!
ஒரு புதிய முஸ்லிம் சமுதாய வாழ்வியலை உருவாக்கலாம், இன்ஷா அல்லாஹ்!

சந்தூக் பிறந்த கதை


இன்று:

காதரும் மனைவியும்
கடைக்குச் சென்றனர்
காஸ்மடிக் வகைகள் 
கலை நுணுக்க வளையல்கள்
வேண்டிய அளவுக்கு
விரும்பி வாங்கினர்!
மனைவியின் விருப்பம்
மதிப்பது கடனென
அமைதியாய் காதர்
அனுமதி வழங்கினான்!
பரீதா கேட்ட
பட்டு வகைகளும்
பக்குவ மாக
பார்த்து வாங்கினான்!
“மெல்லிய ஸார்ஜெட்
மினுக்கும் நைலெக்ஸ்
நல்ல தில்லையே”
நினைத்தான் காதர்!
உடலம் தெரிய
உடுத்துதல் தவறு
உண்மை முஸ்லிம்
உணர்வது கடமை!
“இதுவேண் டாமே”
என்றான் மெதுவாய்!
“ஏன் என விளித்தாள்
இறுக்கமாய் பரீதா!
“உடம்பு தெரியுமே
அதனால் வேண்டாம்
அடுத்துப் பார்ப்போம்
தடிப்பமாய்” என்றான்!
வந்ததே கோபம்
வானலி எண்ணெயாய்!
“அல்லா அல்லா
என்விதி இதுவா?
இந்த வயதில்
இது உடுத்தாமல்
எந்த வயதில்
உடுத்திக் களிப்பதாம்?
பத்தாம் பசலியாய்:
படித்தும் மடயனாய்
இருக்கும் கணவனை
எள்ளினாள்; இகழ்ந்தாள்!
கடையென்றும் பார்க்காமல்
கண்ணைக் கசக்கினாள்!
சுற்றி நின்றவர்
சுறுசுறுப் பாயினர்!
இலவச மாக
இங்கொரு நாடகம்
அரங்கேறுவதை
இழத்தலும் கூடுமோ?
பார்த்தான் காதர்
படக்கென மாறினான்!
“சும்மா சொன்னேன்
சோதிச்சுப் பார்த்தேன்!
உன்விருப் பம்போல்
உடுத்திக்கோ ” என்றான்!
கோபம் மறைந்தது
குதூகலம் பிறந்தது!
ஒன்றுக்கு இரண்டாய்
உருப்படி வாங்கினாள்!
அன்று
அண்ணலெம் பெருமானின்
அருமைப் புதல்வி!
சொர்க்கத்துப் பேரொளி
சுடர்மிகு பாத்திமா
அந்திமக் காலம்
அவரை அடைந்தது!
முகத்தில் சோகம்;
மூச்சும் சிரமம்!
கண்களில் கண்ணீர்;
காய்ச்சலோ நெருப்பு!
அருகில் இருந்த
அஸ்மாபிந்த் உமைஸ்
அன்புடன் பண்புடன்
அவருக்க் குதவினார்!
“நாயகச் செல்வமே
நற்குண நங்கையே!
கண்களில் பொங்கும்
கண்ணீர்த் துளிகளின்
காரணம் யாதோ?
கரைவீர்” என்றார்!
“மௌத்து என்பது
மகிழ்ச்சியின் மொத்தம்!
அதை எதிர்கொள்ள
ஆசைதான்; ஆனால்,
இறந்த பின்னால்
இவ்வுடல் தன்னை
ஒருதுணி மூடி
எடுத்துச் செல்லுவர்!
மெல்லிய துணியால்
மேனி முழுதையும்
மறைத்திட முடியுமா?
மாண்புரு தோழியே?
அங்க வளைவுகள்
அழகுகள் அனைத்தும்
அடுத்தவர் கண்பட
அனுமதிக் காத நான்
ஜனாஸா வானபின்
ஜனங்களின் பார்வையில்
படுவது நலமோ?
பதைக்கிறேன் தோழியே”
அஸ்மா நெகிழ்ந்தார்;
அவர்கண் பனித்தது!
குரைஷியர் கொடுமை
கூடிய போது
அபிஸீனி யாவில்
அடைக்கலம் தேடிய
அனுபவம் அப்போது
அவருளம் வந்தது!
ஈச்சமட்டையை
வில்போல் வளைத்து
இருபது முப்பதை
இழுத்துக் கட்டி;
கூடையின் மூடிபோல்
குவித்துக் கட்டி
அந்த மூடியால்
உடலை மூடி
அதற்கு மேலே
துணியைப் போர்த்தி
எடுத்துச் செல்லுவர்
ஏற்புடை முறை அது!
அப்படி உங்கள்
அருமை உடலை
அடக்கம் செய்ய
எடுத்துச் செல்லவா?”
என்றனர் அஸ்மா;
ஏற்றனர் பாத்திமா!
உயிருக்குப் பின்னரும்
ஒழுக்கம் பேணுதல்
சிறப்பென உணர்த்தும்
சீர்மிகு கதை இது!
‘சந்தூக்’ பிறந்த
சரித்திரம் இதுவே!
அந்த பாத்திமாவும்..
இந்த பரீதாவும்…
சொந்த பந்தம்தான்…
சோதர முஸ்லிம்கள் தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள்……
என்ன செய்வது?

மூளையில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சி



மனிதர்களாக பிறந்த யாவரும் `தான்’ என்று சொன்னாலே அது கண்டிப்பாக ஆன்மாவுடன், மூளையுடன், தனிமனிதனுடன் தொடர்புடையதுதான். இப்பொழுது திரைப்படங்களில் மனநிலை சம்பந்தப்பட்ட கதைகளை பற்றித்தான் பார்க்கிறோம். `பன்மடங்கு ஆளுமை முறையின்மை’, `அம்னீஷியா’  எனப்படும் மறதி நோய் இப்படிப் பலவகைகளில் ஏதோ காரண காரணியங்களால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளன. இதுமட்டும் தான் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இதைப்பற்றி அறிவியல் அறிஞர்கள் தீவிரமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பற்பல புதுப்புது தகவல்களை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். `தான்’ என்பதை சாதாரணமாக விட்டுவிட முடியாது. இதனைப் பற்றி டார்மூத் பல்கலைக் கழக மனோதத்துவ விஞ்ஞானி டாட் ஹெதர்டன் பல ஆண்டுகளாக சக அறிவியல் அறிஞர்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். தான் என்பது எப்படி மூளையுடன் சிந்தனையுடன் தொடர்புடையது என்பதைப் பற்றி பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர். எப்படி தான் என்பது மூளையிலிருந்து வெளிப்படுகிறது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்க மனோதத்துவ நிபுணர் வில்லியம் ஜேம்ஸ் இதனைப் பற்றி தன்னுடைய “மனோதத்துவக் கோட்பாடுகள்”  என்ற புத்தகத்தில் இதனுடைய விளக்கங்களை எழுதியுள்ளார். விஞ்ஞானிகள் சில சம்பவங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் தான்  என்ற உணர்விற்கும் சுய நினைவிற்கும் வேறுபாடுகளை கண்டறிந்துள்ளனர். 19-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு விபத்தின் மூலம் பினியஸ் கேஜ் என்பவருக்கு மூளையில் ‘தான’  பகுதியில் ஏற்பட்ட பாதிப்பை பற்றி விளக்குகின்றனர். ரெயில்வே கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த இவருக்கு டைனமைட் வெடித்ததன் காரணமாக இரும்பு துகள்கள் காற்றின் மூலமாக அவரது தலையில் பலமாக ஊடுருவியது. ஆனால் அதிசயமாக உயிர் தப்பினார். இந்த விபத்திற்கு பிறகு கேஜ் உடைய நண்பர்கள் அவரது தன்மையில், நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்டனர்.
இதற்கு முன் கேஜ் ஒரு திறமையான ஊழியராகவும், திறமைமிக்க தொழில் முனைவோராகவும் கண்டனர். ஆனால் விபத்திற்கு பின் மிகவும் உணர்ச்சியற்றவராகவும், எதிலுமே விருப்பம் இல்லாதவராகவும், விபத்திற்கு முன் எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களிடம் அன்பு, மரியாதை செலுத்தினாரோ அந்த அளவிற்கு அவரிடம் குணங்கள் காணப்படவே இல்லை யாம். மாறாக இக்குணங்கள் குறைபாடுள்ளவராக இருந்தாராம். அவருடைய நண்பர்கள் கூறுகையில், “பழைய கேஜ் நம்மிடம் இல்லை” என்றனராம்.
இதிலிருந்து தெளிவாக புரிவது என்னவென்றால், சுயநினைவிழப்பது  தான்  என்ற நிலை இழப்பது. இவை இரண்டும் வெவ்வேறானவை. சுயநினைவிழக்காமலேயே நல்ல திடகாத்திரமானவன் தன்னுடைய நிலையை இழக்கலாம். மூளை பாதிப்பிலிருந்து தெரிவது என்னவென்றால் தன்னிலை என்ற அமைப்பு சிக்கலான வகையிலேயே அமைந்திருக்கிறது. சான்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின்  ஸ்டான் பி. க்லென் தன்னுடைய சக நிபுணர்களுடன் 2002ல் நடந்த மற்றொரு சம்பவத்தின் ஆய்வில் அம்னீஷியா  என்ற மூளையில் ஏற்படும் பாதிப்பை பற்றி விளக்குகின்றனர். 75 வயதுடைய ஒரு வருக்கு மாரடைப்பினால் மூளையில் அம்னீஷியா என்ற பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இவர் தன்னுடைய பழைய நினைவுகள் மற்றும் கடந்த காலத்தில் தான் செய்த அனைத்து நடவடிக்கைகள் மற்றும் கடந்தகால சம்பவங்கள் அனைத்தையும் மறந்தார்.  ஆனால் மற்ற இயக்கங்களை திரும்பப் பெற்றாலும் சுய நினைவை இழக்கவில்லை. நினைவகத்தில் உள்ள கடந்த கால நினைவுகள் எல்லாம் கம்ப்யூட்டர்  விவரங்கள் அழிந்தது போல் ஆகிவிட்டது. சமீப காலமாக விஞ்ஞானிகள் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் பல அரிய தகவல்களை அளித்து வருகின்றனர்.
நம்முடைய நிலைமையைப் பற்றி அறிவது, நம்முடைய ஒவ்வொரு அங்கங்களின் அசைவு மற்றும் நடவடிக்கைகள் எப்படி மூளையிலிருந்து கட்டளையிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்ற விவரங்களை அளிக்கின்றன. லண்டனிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் எவ்வாறு நாம் நம் உடலைப் பற்றி அதனுடைய உணர்வுகளை அறிய முடிகிறது என்று கண்டறிந்துள்ளனர். அப்பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் சாரா ஜெய்னி பிளாக்மோர் கூறுகையில், “இது மிகவும் அடிப்படையான விஷயம் என்றும், தன்னிலையின் முதல் கட்டமாகும்” என்கிறார். நம்முடைய மூளை ஒரு நடவடிக்கையை அல்லது ஒரு பணியை செய்வதற்கு இரண்டு சமிக்ஞைகளை அனுப்புகிறது. ஒன்று குறிப்பிட்ட அப்பணியை செய்வதற்கு மூளையிலுள்ள எந்தவொரு குறிப்பிட்ட பகுதி கட்டுப்படுத்துகிறதோ அல்லது கண்காணிக்கிறதோ அப்பகுதிக்கும், மற்றொன்று பணியை செய்யும் அங்கம் அல்லது உடலின் அப்பகுதிக்கு சமிக்ஞையை அனுப்புகிறது. பிளாக்மோர் கூறுகையில், “இது மின்னஞ்சலில் ஒரே தகவலை இரண்டு நபர்களுக்கு அனுப்புவது போன்றதாகும். அதாவது நகல் அஞ்சல் மற்றொருவருக்கு அனுப்புவது போன்றதாகும்.” என்கிறார். உதாரணமாக நாம் டி.வி யை ஆன் செய்கிறோம் என்றால் ஒரு சமிக்ஞை, கைக்கும் மற்றொன்று மூளையில் இப்பணியை செய்வதற்காக கண்காணிக்கும் பகுதிக்கும் செல்கிறது. மனிதன் தன்னைப்பற்றி அறிவதற்கு அல்லது தன் உணர்ச்சிகளை அறிவதற்கு நான் யார்? நாம் என்ன செய்கிறோம்? எங்கு இருக்கிறோம்? என்ன செயலை செய்கிறோம்? இப்படி சுய நிலையை அறிவதற்கு மூளையின் ஒரு பகுதி திட்டமிடுகிறது, கண்காணிக்கிறது, செயல்படுத்துகிறது. இது மனிதன் நான் யார்? என்பதை இழக்காமல் பார்த்துக்கொள்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பகுதியும் செயல்படுகிறது. பழைய கடந்த கால நடவடிக்கைகளை, சம்பவங்களை, வரலாறுகளை மறுபடியும் அசைபோடுவதற்கு உதவி புரிகிறது.
 நவீன விஞ்ஞான வளர்ச்சியில் இந்த அரிய கண்டுபிடிப்புகள் மூலம் மூளையின் செயல்பாடுகள், மூளையின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாதிப்பால் மனிதனிடம் எந்த ஒரு குறை ஏற்படுகிறது. எதனால் பழைய நினைவுகளை மறக்கிறான். அப்பகுதியை மறுபடியும் சீரமைத்தால் குணமாகிவிடுமா? எப்பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் தான் சுய உணர்வை இழக்கின்றான். அதாவது தன்னையே மறந்துவிடுவது. அறிவியலின் அதிவேக வளர்ச்சியின் உதவியால் மட்டுமே மனநிலைக் கோளாறு, மூளையில் ஏற்படும் கோளாறுகள் பிரிக்கப்பட்டு இன்னென்ன மனநிலைக் குறைபாடுகள் மூளையின் குறிப்பிட்ட பகுதியின் பாதிப்பால் ஏற்படுகிறது என்றெல்லாம் கண்டறியப்பட்டு அதற்கேற்ற சிகிச்சைகள் மேற்கொள்ள முடிகிறது.
உதாரணமாக இன்றைய காலத்தில் மின்சாரம் அதிர்ச்சியூட்டும் சிகிச்சை முறை  போன்றவையாகும். இன்னும் அதிநவீன முன்னேற்றத்தால் மூளையில் ஏற்படும் பலவித குறைபாடுகள் அறுவை சிகிச்சை இல்லாமலேயே ஊசி, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும் என்கிற அளவிற்கு எளிதாகிவிடும் என்பது உறுதி!

தனியே ஒரு குரல்


பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பதுண்டு. அந்தக் குரலுக்கு பிற்கால சமூகம் செவி சாய்ப்பதுண்டு. அப்போது அந்தத் தனிக்குரல் சரித்திரம் படைக்கிறது. மனித குலத்தின் மகத்தான அத்தனை முன்னேற்றங்களுக்கும் இது போன்ற தனிக்குரல்களே மூல காரணமாக இருந்திருக்கின்றன.

பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒலித்த அப்படிப்பட்ட ஒரு தனிக்குரல் கலிலியோ கலிலி(Galileo Galilei) என்ற அறிஞருடையது. கி.பி 1564 ஆம் ஆண்டு பிறந்த கலிலியோ எதையும் மிக நுணுக்கமாக கவனிப்பவராக விளங்கினார். கிறித்துவக் கோயிலுக்கு அவர் சென்றிருந்த ஒரு சமயத்தில் தொங்கு விளக்கு ஒன்று காற்றால் ஆடிக் கொண்டு இருந்தது. காற்று வேகமாக வீசுகையில் விளக்கு வேகமாகவும், வேகம் குறைவாக வீசும் போது விளக்கு குறைவான வேகத்துடனும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்த கலிலியோவுக்கு அதில் மாறாத ஒரு விஷயம் இருப்பது கவனத்தைக் கவர்ந்தது.
தன் நாடியைப் பிடித்து அந்த விளக்கின் அசைவுகளை கலிலியோ ஆராய்ந்தார். வேகமாக அசையும் போதும் சரி, நிதானமாக அசையும் போதும் சரி அந்த விளக்கு ஒவ்வொரு முறையும் போய் திரும்பி வர ஒரே கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது அவருக்கு வியப்பை அளித்தது. அந்தக் கண்டுபிடிப்பு ஊசல் விதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் கடிகாரங்களை உருவாக்க உதவியது. அவர் அந்த ஊசல் விதி கண்டு பிடித்த போது அவருக்கு வயது இருபது.
அரிஸ்டாட்டில் சொன்ன விதி ஒன்று யாராலும் கலிலியோவின் காலம் வரை சரியா என்று ஆராயப்படாமலேயே இருந்தது. அது ‘எடை கூடிய பொருள்கள் எடை குறைந்த பொருள்களை விட வேகமாய் கீழே விழக் கூடியவை’ என்பது தான். கலிலியோவிற்கு அது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே அவர் பல வித எடைகளில் இரும்புக் குண்டுகளை எடுத்துக் கொண்டு பைசா கோபுரத்தின் மேலே சென்று ஒவ்வொன்றையும் கீழே போட்டுப் பார்த்தார். எல்லாம் கீழே விழ ஒரே நேரத்தை எடுத்துக் கொண்டன. இதன் மூலம் அது வரை நம்பப்பட்டு வந்த அரிஸ்டாட்டிலின் அந்த குறிப்பிட்ட விதி தவறென்று கலிலியோ நிரூபித்துக் காட்டினார்.
கலிலியோ பல்கலைக் கழகப் படிப்பை நிறைவு செய்யவில்லை. காரணம் அவருக்கு கல்வியில் கணிதம் தவிர வேறெந்த துறையிலும் ஈடுபாடு இருக்கவில்லை. அவருடைய காலத்தில் ஒற்றர் கண்ணாடி (spy glass) என்றழைக்கப்பட்ட ஒரு விதக் கண்ணாடி வெகு தொலைவில் இருப்பதையும் அருகில் இருப்பதாகக் காட்ட வல்லது என்றும் அதை ஒரு டச்சு கண்ணாடித் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் என்றும் கலிலியோ கேள்விப்பட்டார். அதுவரை அந்தக் கண்ணாடியைக் கண்டிராத அவர் அந்த சாத்தியக் கூறால் கவரப்பட்டு கேள்விப்பட்ட சில விஷயங்களையும் தன் உள்ளுணர்வுகளையும் வைத்து அது போன்ற ஒரு கண்ணாடியை உருவாக்கினார். அதன் சக்தியை அதிகரித்துக் கொண்டே போய் மிக சக்தி வாய்ந்த கண்ணாடியை உருவாக்கினார். அது தான் பிற்காலத்தில் டெலஸ்கோப் என்று அழைக்கப்பட்டது.
அதை வெனிஸ் நகர செனெட்டில் கொண்டு போய் கலிலியோ காட்டினார். அது செனெட்டின் பேராதரவைப் பெற்றது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அதோடு அவர் நிறுத்தியிருந்தால் அவர் புகழோடும், செல்வத்தோடும் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பெயர் சரித்திரத்தில் சிறிதாகத் தான் எழுதப்பட்டிருக்கும். அவர் தன் அறிவியல் ஆராய்ச்சியின் அடுத்த கட்டங்களுக்குச் சென்றார். அது அவருடைய பிரச்னைகளுக்கு அஸ்திவாரம் போட்டது.
அந்த டெலஸ்கோப்பால் சந்திரனைப் பார்த்தார். சந்திரன் மிக அழகாக சமதளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதில் பாறைகளும், மலைகளும், மேடு பள்ளங்களும் இருப்பது வியப்பாய் இருந்தது. தன் டெலெஸ்கோப்பின் சக்தியை மேலும் பன்மடங்கு கூட்டி ஜனவரி 7, 1610 அன்று அந்த டெலஸ்கோப்பை ஜூபிடர் கிரகம் பக்கம் திருப்பினார். ஜூபிடர் கிரகம் அருகில் மூன்று நட்சத்திரங்கள் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கையில் அந்த நட்சத்திரங்கள் இடம் மாறி அதே போல் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். அப்போது தான் அவை ஜூபிடரின் உபகிரகங்கள் என்றும் அவை ஜூபிடரைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கின்றன என்றும் அவர் முடிவுக்கு வந்தார். அந்த சித்தாந்தத்தை மேலும் சிந்தித்துப் பார்த்த போது கோபர்நிகஸ் பூமியைப் பற்றி சொன்னது உண்மை என்ற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸ் பூமியைச் சுற்றி சூரியன் சுழல்வதில்லை., சூரியனைச் சுற்றியே பூமி சுழல்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தார்.
கலிலியோ கோபர்நிகஸ் சொன்னது சரியே, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதுடன் அந்த கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக கிபி 1610ல் வெளியிட்டது அவருக்கு வினையாயிற்று. கி.பி.1600ல் கியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno) என்ற நபர் இதை நம்பியதற்கும், பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கான கோள்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று சொன்னதற்கும் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தார். பைபிளில் சொல்லி இருப்பதற்கு எதிர்மாறாக அவன் சொல்வதாகக் காரணம் சொல்லி அவனை எரித்தவர்கள் கலிலியோவையும் விடவில்லை. அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இனி கோபர்நிகஸ் சொன்னதை பிரபலப்படுத்தக் கூடாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார்கள்.
கலிலியோ தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். அவர் மேலும் கண்ட உண்மைகள் அவரை சும்மா இருக்க விடவில்லை. தன் ஆய்வுகளை “Dialogue” புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் இவரது கருத்துகளை அறிவுபூர்வமாகப் பேசுவது போலவும், ஒரு கதாபாத்திரம் முட்டாள்தனமாக எதிர்ப்பது போலவும், இன்னொரு கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றை பரிசீலிப்பது போலவும் எழுதினார். உடனடியாக அந்த நூலைத் தடை செய்து, அவரைக் கைது செய்து அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
68 வயதாகி இருந்த கலிலியோவிற்கு கண்பார்வையும் மங்க ஆரம்பித்திருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். இந்த நிலையில் அவரை சித்திரவதைப் படுத்துவோம் என்று அதிகாரவர்க்கம் அச்சுறுத்தவே தான் சொன்னது எல்லாம் தவறென்று கலிலியோ பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். பூமி அசையாமல் இருந்த இடத்தில் இருக்க சூரியனே அதைச் சுற்றி வருகிறது என்று பூமியைப் பற்றிச் சத்தமாகச் சொன்ன அந்த நேரத்தில், கடைசியில் “ஆனாலும் அது நகர்கிறது” என்று முணுமுணுத்ததாக சிலர் சொல்வதுண்டு. வீட்டு சிறையிலேயே தன் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்க வேண்டி வந்த கலிலியோ இந்த வானவியல் ஆராய்ச்சிகளை விட்டு மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தன்னை மரணம் வரை ஈடுபடுத்திக் கொண்டார்.
கோபர்நிகஸின் கண்டுபிடிப்பு சரியே என்பது பிற்காலத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் 1822 ஆம் ஆண்டு அவருடைய “Dialogue” நூலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பின்னர் சில நூற்றாணடுகள் கழித்து வாடிகன் 1992 ஆம் ஆண்டு பகிரங்கமாக கலிலியோ குற்றமற்றவர் என்றும், அவரை விசாரித்து சிறைப்படுத்தியது தவறு என்றும் ஒத்துக் கொண்டது.
சில நேரங்களில் உண்மை என்று உணர்வதை வெளியே சொல்லும் போது அது அக்கால கட்டத்தில் இருப்போரின் அந்த சூழ்நிலைக்கு ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் உண்மை அப்படி தனியாகவே ஒரு குரலில் ஒலித்தாலும், பிற்காலத்தில் அந்த தனிக்குரல் உண்மையென்று அனைவரும் உணரும் நிலை வருவது நிச்சயம்.
எனவே சில நேரங்களில் தனிக்குரலாக உங்கள் கருத்து ஒலிப்பதில் வெட்கம் கொள்ளாதீர்கள். அக்குரல் உங்களை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் குரலாகக் கூட இருக்கலாம்.