Wednesday, December 22, 2010

நிர்வாணப்பார்வை 3: எத்னோ செண்ட்ரிஸம்….

குழந்தைகளுக்கும் பெருசுகளுக்கும் அறிவு விஷயத்தில் இருக்கும் மிக பெரிய வித்தியாசம் என்ன தெரியுமா? குழந்தைகள் உலகை புதிய கண்களோடு பார்க்கிறார்கள், அதனால் அவர்களுக்கு எல்லாமே அதிசயமாகவும், ஸ்வாரசியமாகவும் தோன்றுகின்றன. எதையுமே முன் அபிப்ராயம் இல்லாமல் ஃப்ரெஷ்ஷாக பார்க்கும் போது, எல்லாவற்றையுமே ஒரு தெளிந்த கண்ணோட்டத்துடன் பார்க்க அவர்களால் முடிகிறது. இதனால் தான் குழந்தைகளால் மிக வேகமாக, மிக திறமையாக பல புதிய விஷயங்களை கிரகித்துக்கொள்ள முடிகிறது. நம்மால் பதிலே சொல்ல முடியாத கேள்விகளை சளைக்காமல் கேட்டு துளைக்கிறார்கள்.

இதற்கு நேர்மாறாக பெரியவர்கள். எதை எடுத்தாலும் “அது தான் எனக்கு தெரியுமே, “ என்கிற முன் அபிப்ராயத்தோடே உலகை பார்ப்பதால், அவர்களால் எதையும் முழுமையாக புரிந்துக்கொள்ள முடிவதில்லை. காரணம் இந்த முன் அபிப்ராயமே அவர்கள் மனதை பெரும் அளவிற்கு நிரப்பிவிடுவதால், அவர்கள் உலகை பார்பதே மீதமுள்ள அறை குறை மனசுடன் தான். இப்படி அறையும் குறையுமாய் உலகை பார்ப்பதினால் தான் அவர்கள் பல விஷயங்களை கவனிக்கவே தவறிவிடுகிறார்கள். அதனால் தான் பெரியவர்களுக்கு எதையும் கிரகித்துக்கொள்ளுதல் போக போக கடினமாகிக்கொண்டே போகிறது.

அதனால் தான் எதையும் புரிந்துக்கொள்வதற்கு முன்னால் குழந்தையின் blank slate என்கிற நிலைக்கு வருவது உசிதம். இப்படி நிர்வாணப்பார்வையில் உலகை அளந்தால் தான் எல்லா ஞானமும் சாத்தியம்…. இதை பல காலமாக சமண பௌத துறவிகள் சொல்லிக்கொண்டே வந்திருந்தாலும், அறிவியல் ரீதியாக இந்த நிர்வாணப்பார்வையின் முக்கியத்துவத்தை விளக்கியவர் மானுடவியல் நிபுணரான பிரானிஸ்லா மேலினாஸ்கீ

மெலினாஸ்கீ போலாந்தை சேர்ந்த ஒரு மானுடவியல்காரர். உலக போரின் போது இவர் ஆஸ்திரேலியா பக்கமாய் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் போலாந்துக்காரர் என்பதால் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட ஆஸ்திரேலியாவில் அவர் நடமாடுவது சட்டபடி குற்றமாக கருதப்பட்டது (காரணம் போலாந்துக்கு எதிராக இங்கிலாந்து போர் புரிந்துக்கொண்டிருந்தது) அதனால் அவரை டிராப்ரியண்டு தீவுக்கு நாடு கடத்திவிட்டார்கள். அந்த தீவு முழுக்க வெறும் ஆதிவாசிகள் தான் வசித்துக்கொண்டிருந்தார்கள். அந்த ஆதிவாசிகளுடன் வருடக்கணக்கில் தங்கி மானுடவியல் ஆய்வுகளை நடத்தினார் மெலினாஸ்கீ.

இப்படி ஒரு புதிய கலாச்சாரத்தை முதன் முதலில் பார்த்த போது மெலினாஸ்கீ ரொம்பவே திண்டாடி போனாராம்…..”இவங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க? ஏன் இப்படி பேசுறாங்க? ஏன் இதை எல்லாம் சாப்பிடுறாங்க?” என்று ஆரம்பத்தில் அவருக்கு பல கேள்விகள் எழுந்து மக்களுடன் சகஜமாய் பழக விடாமல் தடுக்க, போக போக அவருக்கே புரிந்தது, “நான் என்னையும், நான் வளர்ந்த ஊரையும், அங்கு இருக்கும் மரபுகளையும் உசத்தி என்றே நினைக்கிறேன். அதை எப்போதுமே ஒப்பிட்டு பார்த்து தான் இவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறேன்….இப்படி நான் என்னை உசத்தி பிறரை மட்டம் என்று நினைத்துக்கொண்டே இருந்தால், இவர்களை இவர்களது பின்புலத்தோடு என்னால் புரிந்துக்கொள்ளவே முடியாது. அதனால் என்னுடைய “எங்க வழக்கம் மாதிரி வர்றாது” என்கிற இந்த எத்னோ செண்ட்ரிக் நினைப்பை எல்லாம் ஏறக்கட்டினால் தான் இவர்களை சரியாக புரிந்துக்கொள்ள முடியும்” என்று முடிவு கட்டினார். தன் மனதில் தன்னை பற்றியும் தன் பாரம்பரியத்தையும் பற்றி இருந்த பதிவுகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, புதிதாய் பூமிக்கு வந்தவனை போல ஒரு நிர்வாணப்பார்வையுடன் அத்தீவு மக்களை கவனித்தார்…..அப்போது தான் அவருக்கு மானுடவியல் ஞானமெல்லாம் ஒவ்வொன்றாய் உதயமானது.

ஆக இந்த “எங்க ஊர்/இனம்/மொழி/மதம்/மரபு/நம்பிக்கை/பாரம்பரியம் தாம் பெஸ்ட். மத்ததெல்லாம் வேஸ்ட்” என்று தன்னை முன்னிலை படுத்தி சிந்திக்கும் இந்த எத்னோ செண்ட்ரிஸம் இருக்கிறதே….இது நம் பார்வையை சுருக்கிவிடும். அறிவியலில் சுயத்துக்கு வேலையே கிடையாது என்பதால் இந்த சுயபிரதாப தன்மை விட்டு ஒழிந்தால் தான் தெளிந்த ஞானமே சாத்தியம்.

உதாரணத்திற்கு இந்தியாவில் வாழும் நாமெல்லாம், மாட்டு இறைச்சி சாப்பிட்டால் மத குற்றம் என்று நினைக்கிறோம். (இதே இந்திய வேதங்கள் தொட்டதற்கெல்லாம் யாகம் வளர்த்து, அதில் கோ பலி செய்து, அதன் மாமிசத்தை பிரசாதமாய் எல்லோருக்கும் விண்ணியோகமும் செய்தது ஒரு தனி கதை) ஆனால் ஐரோப்பாவில் வாழும் எல்லோருமே ஸ்பஷ்டமாய் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆஃப்ரிக்காவில் உள்ளவர்கள் புழு, பூச்சு, வண்டு மாதிரியானவற்றை சாப்பிட்டு கொள்கிறார்கள். சீனாவில் வாழ்பவர்கள் நாய், எலி, கறப்பாண்பூச்சி, பாம்பு, பல்லி மாதிரியானவற்றின் இறைச்சியை சாப்பிடுகிறார்கள். தாய்வானின் உள்ளவர்கள் அபார்ஷன் செய்யப்பட்ட மனித சிசுக்களையே உணவாக சாப்பிடுகிறார்கள்…..இதை எல்லாம் கேட்ட உடன் கூசி சிணுங்கி, “சீச்சீ, இப்படி எல்லாமா தின்பார்கள்? என்ன கேவலமான மனித ஜென்மங்கள்” என்று நீங்கள் முகம் சுளித்தால், போச்சு, நீங்கள் ரொம்பவே எத்னோ செண்டிரிக்கான மனிதர்……உங்கள் கலாச்சாரத்தை தவிற பிற மனிதர்களை சமநோக்கோடு பார்க்கும் பக்குவம் உங்களுக்கு இன்னும் வரவில்லை என்று அர்த்தம்.

அதற்கு மாறாக, “அது சரி, அந்தந்த ஊர்ல என்னென்ன புரத சத்து கிடைக்குதோ அதை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துக்குறாங்க….that that people, that that protein” என்று உணர்ச்சி வசப்படாமல், சகிப்புத்தன்மை சொட்ட சொட்ட, சமநோக்கோடு யோசிக்கிறீர்களா? வெரி குட். உங்களுக்கு எத்னோ செண்ட்ரிஸம் இல்லை. உங்களுக்கு எல்லா ஞானமும் இனி சாத்தியம்!

பெண்களை ஹாண்டில் செய்வது எப்படி?

அன்பார்ந்த ஆண்களே,

இந்த வலை பதிவில் ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி என்ற தலைப்பில் வரும் சமாசாரம் எல்லாமே, முழுக்க முழுக்க பெண்களுக்காக எழுத படும் மேட்டர் மட்டுமே. அதை ஆண்கள் படிக்கவே கூடாது:)

கருவில் வசித்த முதல் ஆறு வாரத்திற்கு ஆண்களும் பெண்களாய் தானே இருந்தோம், அதனால் ஒரு வகையில் பார்த்தால் எல்லா ஆண்களும் அடிப்படையில் பெண்களே, அந்த அடிப்படையில் எங்களுக்கும் படிக்க உரிமை உள்ளதாக்கும் என்று நீங்கள் தர்கம் செய்வதாக இருந்தால்....வாட் டு டூ, யூ ஆர் ரைட்....ஆனால் ஒரு நிபந்தனை, இதை படிக்கும் போது உங்களை முழுக்க முழுக்க ஒரு பெண்ணாய் தான் பாவித்துக்கொள்ள வேண்டும், ஆண் மனப்பான்மையை தற்காலீகமாய் ஆஃப் செய்துவிட வேண்டும். அப்படி ஆண்மையை ஆஃப் செய்துவிட்டு பெண் பாலாய் இதை படிக்க முடிந்தால் தாராளமாய் நீங்கள் இதை படிக்கலாம்.

அப்படி செய்ய முடியாதவரா நீங்கள்?

டோண்ட் ஒர்ரி, உங்களுக்காகவே பெண்களை ஹாண்டில் செய்வது எப்படி என்று ஒரு புத்தகத்தை ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறேன்....ஆளை அசத்தும் 60 கலைகள், நக்கீரன் பதிப்பகம்....அது முழுக்க முழுக்க ஆண்களுக்கான மேட்டர். நீங்கள் இதை படித்து நேரத்தை வீணடிப்பதை விட நேராக அதை படித்து ஆளை அசத்த கற்றுக்கொள்ளலாமே?!

அந்த பெண்ணின் உடலை நோட்டம் விட்டுக்கொண்டே .....

ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அவளுக்கு மஞ்சள் நீராட்டி, புது உடைகள் அணிய கொடுத்து, பிட்டு சுற்றி, ஒரு வைபவமாய் அதை கொண்டாடுவது தான் பாரம்பரியமாய் நம்மூர் கலாச்சாரமாக இருந்து வருகிறது.
இப்படி ஒரு பெண் வயதிற்கு வரும் இந்த சம்பவத்தை நம்மூரில் பூப்பெய்தல், ருதுவாகுதல், வயதிற்கு வருதல் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கிறோம். மருத்துவத்திலும் இதற்கு ஒரு தனி பெயர் உண்டு. மெனார்கீ, (Menarche) பெண்ணின் மகபேற்று உருப்புக்கள் முதன்முதலாய் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதன் அறிகுறியாய், அப்பெண்ணின் ஜனன குழாயிலிருந்து உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிப்பதை தான் மெனார்கீ என்கிறோம்.
இந்த உதிர போக்கு எங்கிருந்து எதற்காக வருகிறது தெரியுமா? ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, அவள் அடி வயிற்றில் ஒரு பிஞ்சு கருப்பை + இரண்டு, சினைபைகளுடன் தான் ஜனிக்கிறாள். இந்த சினை பையினுள் அவளுடைய வாழ்நாளில் அவள் வெளியேற்ற வேண்டிய அத்தனை கருமுட்டைகளும் ஒதுங்கி இருக்கும். ஆனால் இவை எதுவுமே இயங்காமல் சிக்னலுக்காக காத்துக்கொண்டு, இருக்கும் இடமே தெரியாமல் கப் சிப் என்று அசைவற்று இருக்கும்.
இந்த பெண்ணின் மூளையில் பிட்யூட்டரி என்று ஒரு சுரபி உண்டு. இந்த சுரபி, அந்த பெண்ணின் உடலை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். அவள் ரத்ததில் ஊரும் சத்து, அவள் உடம்பில் உள்ள கொழுப்பளவு, அவளது உயரம், மாதிரியான வளர்ச்சி குறிகளை இந்த பிட்யூட்டிரி பரிசோதித்துக்கொண்டே இருக்கும். அவள் போதுமான உயரத்தை எட்டி விட்டாள், அவள் ரத்தத்தில் போதுமான அளவு சத்துக்கள் ஊறத்தான் செய்கின்றன என்று பிட்யூட்டரிக்கு உரைத்தால் போதும், உடனே அது துரிதமாய், FSH, என்கின்ற சினைவளர்ப்பு ஹார்மோனை நேரடியாக ரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹார்மோன் அந்த பெண்ணின் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவை தூண்டினால், உடனே அது, ஈஸ்டிரஜன், என்கின்ற இன்னொரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இந்த ஈஸ்டிரஜன் அந்த பெண்ணின் உடம்பு முழுக்க பறவி, அவளை மேலும் உயரமாக்கி, மார்பகங்களை வளர்விக்கிறது. அது வரை ஒடிசலாய் எலும்பும் தோலுமாய் இருக்கும் பெண், திடீரென்றூ பளிச்சென்றூ மின்ன ஆரம்பித்து, முக பருவெல்லாம் வர, உடம்பு பருமனாக, வளைவு, நெளிவுகளை பெற துவங்குகிறாள்.
இந்த மாற்றங்களை தூண்டும் அதே ஈஸ்டிரஜன் தான், அந்த பெண்ணின் சினைகளை முதிர்ச்சி அடைய செய்கிறது. இப்படி சினை முதிர்ச்சி அடைந்தால், அது டப் பென்று வெடித்து, சூல் கொள்ள தயாராகி விடும். சுலை சுமந்து போஷக்களிக்கவே கர்பப்பை என்கிற ஒரு பிரத்தியேக உருப்பிருக்கிறதே.
இந்த உருப்பின் வேலை, சினை பையிலிருது வெடித்து வெளியேறும், முட்டையை அப்படியே லாவகமாக கைபற்றி, தன்னுள் கொண்டு வந்து பதுக்கி பாதுகாப்பது தான். இப்படி பாதுகாக்கப்படும் முட்டையோடு ஆணின் விந்தணு கலந்துவிட்டால், கரு உருவாகி விடும். இப்படி உருவாகும் கருவிற்கு போஷாக்கு வேண்டுமே. நிறைய போஷாக்கு இருந்தால் தானே, கரு ஜம்மென்று சத்துக்களை உள்வாங்கி, ஸ்பஷ்டமாய் வளர்ந்து குழந்தையாய் வந்து இந்த பூலோகத்தில் அவதரிக்கும்.
மனித உடலில் போஷக்கு என்பது உதிரத்தில் இருந்து தானே கிடைக்கிறது. அதனால் கர்ப்பப்பையின் உள் தோளில் உள்ள ரத்த குழாய்கள் எல்லாம் ஸ்பான்ஞ் மாதிரி உப்பி, பெருத்து, புடைத்துக்கொள்ளும். இதனால், கரு உருவானல் அது சவுகரியமாய் சஞ்சரிக்க மெத்தையும் தயார். கருவிற்கு போஷக்களிக்கும் அதிக பட்ச ரத்த ஓட்டமும் தயார்!
இப்படி கர்பப்பை ரத்தமெத்தை ரெடி என்று சமிஞ்சை தந்ததும், டாண் என்று சினை பை முட்டையை வெளியேற்ற, உடனே முட்டையை லபக்கென்று பிடித்துக்கொண்டு வந்து தன் மெத்தையில் பத்திரமாக கிடத்திக்கொள்ளும் கர்பப்பை!
இப்படி மெத்தையின் மேல் முட்டை வசதியாய் சாய்ந்து, தன்னோடு கூடிவிட விந்தணு வருகிறதா என்றூ காத்துக்கொண்டிருக்கும். விந்தணு வந்து முட்டையோடு சேர்ந்து கருவுருவானால் சரி. இல்லாவிட்டால், முட்டை காலாவிதியாகி, சூம்பிப்போய், சிதைய ஆரம்பித்துவிடும். இப்படி முட்டை வீணாகி போனால், ஒரு வேளை அது கருவானால் அதற்கு போஷக்கு அளிக்க அதுவரை தயார் படுத்தி வைத்த ரத்த மெத்தையும் வீண் தானே. அதனால் முட்டையோடு, அந்த ரத்த மெத்தையிம் உரிந்து, வழிந்து வெளியேறி விடும். இப்படி முதல் முதலில் வெளியேரும் உதிரத்தை கண்டு தான், “ஓகோ, அப்படினா, இவ முட்டைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிட்டா, இவளுடைய இனபெருக்க உருப்புக்கள் பூப்படைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டன” என்று அதை கொண்டாடத்தான் விழா மாதிரியான வைபவங்களை நடத்துகிறார்கள் நம்மூர்காரர்கள்.
மனிதர்களை போல, நம்முடைய மிக நெருங்கிய பந்துக்களான, சிம்பான்சி, பொனோபோ ஆகிய மற்ற மனிதகுரங்குங்களுக்கும், இப்படி பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. என்ன, இந்த மிருகங்களுக்கு இந்த முதிர்ச்சி வந்த உடனே அவை துணை தேட ஆரம்பித்துவிடும். சட்டு புட்டு என்று இனபெருக்கத்தில் ஈடுபட்டு, வம்சத்தை விருத்தி செய்யும்.
ஆரம்பகால மனிதர்களிலும் இதே போக்கு தான் இருந்தது. பெண் பூப்படைந்து விட்டாள், அவள் அந்த பிரதேசத்தில் இருக்கும் தோதான ஆணோடு கூடி, குலம் வளர்த்தாள். அதற்கு மேல், இந்த உதிர போக்கை யாரும் பெரிது படுத்தவில்லை. இது அசுத்தம், இந்த சமயத்துல வீட்டுக்கு தூரமா தான் இருக்கணும், மதம் சார்ந்த சமாச்சாரங்களை பங்கேற்க்கக்கூடாது என்றெல்லாம் ஆரம்பகால மனிதர்கள் கருதி இருக்கவில்லை.
இன்றூம், உலகின் பல ஓரங்களில் வாழும் பழங்குடி மனிதர்களிடையே இந்த தன்மை இருந்து வருகிறது. அவர்கள் பெண் வயதிற்கு வருவதை தங்கள் வம்சா விருத்திக்கு உதவக்கூடிய ஒரு சந்தோஷ நிகழ்சியாக மட்டுமே கருதுகிறார்கள்.
ஆதிகால குடியானவ கலாச்சாரங்களில், இந்த மாதவிடாய் உதிரத்தை சேகரித்து, விவசாயத்திற்கான விதைகளை அதில் கலந்து ஊரவைத்து, பிறகு விதைகளை தூவினால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இருந்ததாம்.
தாய் வழி சமூகமாய் மனிதர்கள் வாழ்ந்த காலம் வரை, மாதவிடாய் உதிரபோக்கை பற்றி யாரும் பெரிய அபிப்ராயங்கள் கொண்டிருந்ததாய் தெரியவில்லை.
ஆனால் ஆண்கள் ஆட்சி பொருப்பிற்கு வந்த பிறகு, பெண் வெறும் போக பொருளாகவும், பிரசவ யந்திரமாகவும் பயன்படுத்த படலானள். இந்த காலகட்டத்தில் தான் மனித கலாச்சாரத்தில் புது மாறுதல்கள் தலை தூக்க ஆரம்பித்தன.
பெண் நேரடியாக தன் துணைவனை தேர்தெடுக்கும் மரபு மாறி, அவள் பெற்றோர், தங்களுக்கு பிடித்த ஒருவனுக்கு அவளை ஒரு பொருளை போல கன்னிகாதானம் செய்து தரும் வழக்கம் உருவாக ஆரம்பித்தது.
இப்படி பெற்றோர், தங்கள் மகளை இன்னொருவனுக்கு தானமாய் தரும் பழக்கம் வந்த பிறகு, “என் மக வயசுக்கு வந்துட்டா!” என்று அறிவிக்கும் வைபவங்களும் நடைமுறைக்கு வந்தன. இப்படி புதிதாய் பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி, புத்தாடை அணிவித்து, அலங்காரமெல்லாம் செய்து, “இந்த பெண் இப்போது இனபெருக்க தகுதியை அடைந்து விட்டாள்” என்று அறிவித்தால், அடுத்த முகூர்த்ததிலேயே, புதிதாய் பூப்படைந்த பெண்ணை கல்யாணமே செய்து கொடுத்து விடலாம். சின்ன ஊர்களில், குட்டி குட்டி இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், முறைப்பையன் வந்து ஓலை கட்டி, சீர் செய்து, பெண்ணை ”புக்” செய்துக்கொள்ளும் மரபுகளும் இருந்தன.
ஆஃப்ரிகா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பருவம் அடைந்த உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியை கட்டி பறக்க விடுவார்களாம். அந்த கொடியை கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.
இப்படி பெண் பூப்படைந்த உடனே திருமணமும் ஆகி, திருமணமான உடனே கருவும் உற்று விட்டால், பிறகு அவளுக்கு கர்பகாலம், முழுக்க மாதவிடாயே ஏற்படாது. குழந்தை பிறந்த பிறகு தான் மீண்டும் உதிரபோக்கு ஏற்படும். அதன் பிறகு அவள் குழந்தைக்கு பால் கொடுக்கும் அத்தனை மாதமுமே மாதவிடாயே ஏற்படாது. மகபேற்று காலத்தில் இல்லாமல், மற்ற காலத்தில் மட்டும் இருந்து தொலைத்ததால், மாதவிடாய் “இவள் இன்னும் கருவுரலை, பிள்ளை பெக்கலை” என்பதன் அறிகுறியாக கருதப்பட்டது.
அந்த கால மனிதர்களை பொருத்தவரை, பெண் என்றால் வெறும், பிரசவ யந்திரம் மட்டுமே. பெண்ணின் ஒரே பிறவிப்பயனே பிள்ளை பெற்று போடுவது தான் என்று மனிதர்கள் நினைத்த காலம் அது என்பதால் அவள் பிள்ளை பெறாமல் இருந்த காலம் எல்லாமே வீண் என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் மாதவிடாயை ஒரு வித மகபேற்று இயலாமையாகவே அவர்கள் கருதினார்கள்.
அதுவும் போக அந்த காலத்தில் மாதவிடாய் உதிரத்தை உரிஞ்சி உட்படுத்தும் வஸ்துக்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. பழங்குடி பெண்கள் சும்மாவே ஆடை அணியமாட்டார்கள். அதனால் மாதவிடாய் உதிரத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அப்படியே விட, “காலில் சிகப்பு கோடு கொண்டவள்” என்றே கன்னிப்பெண்களை அந்த கலாச்சாரத்தில் கூப்பிடுவார்களாம்.
ஆனால், யூதர்கள், பாரசீகர்கள், சமனர்கள், பௌதர்கள், ஹிந்துக்கள் மாதிரியான தந்தைவழி நாகரீகத்தில் எல்லாம், மனிதர்கள் அனைவரும் உடை அணிந்திருந்தார்கள், வீடுகளில் வசித்தார்கள். இந்த இன பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், எல்லா இடத்தையும் ரத்தக்கரை ஆக்க வேண்டாமே, பிறகு சுத்தம் செய்வது கடினம். பேசாமல் உதிரம் நிற்கும் வரை ஒரே இடமாய் உட்கார்ந்து கிடக்கலாம், என்று இந்த இன பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தம் கருதி பிறர் புழங்காத ஓரத்தில் கிடக்க ஆரம்பித்தார்கள். உதிர உரிஞ்சான்கள் இல்லாத அந்த காலத்தில் இதுவே சுகாதாரமான சுலபமான யுத்தியாகவும் இருந்திருக்கும். சதா வேலை என்று பம்பரமாய் சுற்றிய பெண்களுக்கு இது ஒரு சவுகரியமான ஓய்வுக்காரணமும் ஆகிவிட, பெண்கள் எல்லாம் மிக சாமர்த்தியமாய், “நான் தூரம்” என்று விடுப்பு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஆண்களும் தங்கள் பங்கிற்கு “பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் மதம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக்கடவது!” என்று முடிவு செய்தார்கள்.
இதெல்லாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைவரம். 1960களில் பெண்களில் இனபெருக்க உருப்புக்கள் பற்றிய பல புது தெளிவுகள் ஏற்பட, பெண்களுக்கென்றே பிரத்தியேக உதிர உரிஞ்சான்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உபயத்தால், அசுத்தமாகி விடும், என்ற அச்சமே இன்றி, பெண்கள் தம் பாட்டிற்கு உரிஞ்சானை மாட்டிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற சுதந்திரத்தை பெற்றார்கள். இந்த சுதந்திரம் கிடைத்த அரை நூற்றாண்டிலேயே பெண்கள் மாபெரும் சாதனைகள் பலவற்றை புரிந்து பெண்மை ஒரு ஊனமல்ல என்பதை நிருபவித்தார்கள்.
இதற்கிடையில் மனித ஜனத்தொகையும் முன்பு எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டு நிற்க, பூப்படைந்த உடனேயே பிள்ளைகளை பெற்று போட்டு, ஜனதொகையை மேலும் பெருக்கி தள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் படித்தவர்கள் மத்தியில், “என் மக வயசுக்கு வந்துட்டா, அவ இனபெருக்கத்திற்கு தயார்” என்று அறிவிக்கும் வைபவங்கள் செல்வாக்கை இழந்தனர்.
அதுவும் போக உறவிற்குள்ளேயே திருமணம் செய்தால் இந்த கலப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்துவிடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட, முறை பையன் என்று ஒரு சொந்த காரன் வந்து பரிசம் போடும் நடைமுறையும் மாறலானது. கிராமங்களில் சின்ன குலங்களாய் வாழ்ந்த காலம் போய், நகர் புறத்தில் முற்றிலும் அன்னியர்களோடு வாழ்வது நடைமுறையான பிறகு, மகள் வயதிற்கு வந்ததை பிறரிடம் போய் சொல்லிக்கொள்வது, கொஞ்சம் அநாகரீகமாகவும் கருதப்பட, பூப்படைந்த பெண்களுக்கு பெரிய விழா எடுக்கும் தன்மை நகரங்களில் குறைய ஆரம்பித்து விட்டது. அதை போல, சேனிடரி நேப்கின்களின் உபயத்தால், பெண்களை மாதவிடாய் காலத்தில் ஓரம்கட்டும் மரபும் மாறிவிட்டது.
இத்தனை இருந்தும், இன்னும் சில பழம் பஞ்சாங்கள், “மாதவிடாய் உதிரம் அழுக்கு. தீட்டு, கோயிலுக்கு போயிடாதே” என்று சொல்லத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் சேனிடரி நேப்கின் இல்லாத கால்ததின் லாஜிக், இப்போது தான் கம கம சேனிரரி நேப்கின் வந்துவிட்டனவே, இதை மாட்டிக்கொண்டு பெண்கள் எல்லாம் வெளி கிரகத்திற்கே போய் வருகிற போது, ஆஃப்டரால் மனிதன் கட்டிய கோயிலுக்கு போககூடாதா? ”கூடாது, கோயிலில் சாமி இருக்கிறது” என்று தர்க்கம் செய்தாலும் ,இந்த கால பெண்கள் மிக சமர்த்தாக கேட்கிறார்கள், “கோயில்ல மட்டும் தான் சாமி இருக்கா?” என்று. அப்படியும் கன்வின்ஸ் ஆகாத பழைமைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுயமாக யோசித்து சுதந்திர முடிவிற்கு வர முடியாத அறிவியல் அறியாதவர்கள் பாவம். ஆனால் அவர்களை விட ரொம்ப பாவம் யார் தெரியுமா? ஆண்கள்!
பெண்களுக்காவது வயதிற்கு வந்தவுடன், “இது இது, இப்படி இப்படி” என்று பெரிய பெண்கள் எல்லாம் ஒன்று கூடி, கூச்சம், நாச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள். ஆனால் ஆண்கள் வயதிற்கு வந்தால், அவர்களை சட்டை செய்ய கூட நாதி இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு தாங்கள் வயதிற்கு வந்ததே தெரிவதில்லை. அப்புறம் எங்கே கொண்டாடுவது.
இத்தனை காலம் தான் பெண்கள் வயதிற்கு வருவதை பெரிய வைபவமாய் கொண்டாடினோமே. இது தான் பாலியல் சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!

ஆணின் அபரிமிதமான நான்காம் யுத்தி

எந்தவித உணர்ச்சிவசப்படலுமே இல்லாமல், மனித ஆண் என்கிற உயிரினத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போகும் ஒரு உயிரியல் மாணவி என்ற மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக் கொண்டாயிற்றா? அடக்கி வாசித்து, உங்கள் குறிக்கோள் வெளியே தெரியாதபடி இருக்கப் பழகி வருகிறீர்களா? ஆண்களை ஓட்டை உடைச்சல், சொத்தை, வெத்து, தேறுவது தேறாதது என்று அனாவசியமாய் பாகுபடுத்தாமல், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அக்செப்டென்ஸ் என்கிற பக்குவத்தை அடைந்துவிட்டீர்களா? பார்வை விலக்கி, ஆணின் அபரிமிதமான கூச்சத்தைப் போக்கி, அவனை ஊக்குவிக்கும் வித்தையைப் பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? வெரிகுட், அப்படியானால் நான்காம் யுத்தியைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.

இந்த நான்காம் யுத்தியைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால், ஆண் - பெண் பழகுமுறையைக் கொஞ்சம் ஆராய்வோம். உங்களுக்குப் பிடித்த ஆணிடம் நீங்கள் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதைக் கவனியுங்களேன். அது உங்கள் மகன், மாணவன், சகா, காதலன், கணவன், கொழுந்தன், மாமனார், மச்சினர் என்று யாராக இருந்தாலும், உங்களுக்கு அவர்களைப் பிடித்திருந்தால், அவர்களைப் பார்த்த உடனே உங்களை அறியாமலேயே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அட, அவர்கள் ஆணாக இருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை, உங்களுக்குப் பிடித்த பெண்ணை, அல்லது பிடித்த நாய் குட்டி, பூனை குட்டி, அல்லது பொம்மை அல்லது ஏதாவது பொருளைப் பார்த்ததுமே என்ன செய்கிறீர்கள்?

``அய்'' என்று உங்களையும் அறியாமல் உங்கள் முகம் மலர்ந்து ஒரு புன்முறுவல் பூத்துவிடுகிறீர்கள்தானே? உங்கள் மனதிற்குப் பிடித்தவர், பிடித்தது என்றதுமே உங்கள் மூளை குஷியாகிவிடுகிறது. உடனே குஷி ரசாயனங்களைச் சுரக்கிறது. அகத்தின் இந்த குஷி முகத்திலும் உடனே தெரிந்துவிட, முகம் இறுக்கம் இன்றி, தளர்ந்து, விரிந்து, கண்கள் மலர்ந்து பிரகாசிக்கின்றன.

இப்படி முகம்மலர்ந்து ஒருத்தி இருந்தால், இந்த புன்முறுவலை பார்த்த உடனே, எதிராளிக்கு என்ன தோன்றும்? ``ஆஹா, என்னைப் பார்த்தவுடன் இவளுக்கு இவ்வளவு சந்தோஷம் என்றால், இவளுக்கு என் மேல் ரொம்பவே ஆசை போலிருக்கிறதே! இவளுக்கு என் மேல் இவ்வளவு ஆசை ஏற்பட என்ன காரணம்? நான் ரொம்ப ஓஹோ என்று இருக்கிறேன் போல், அதனால்தான் என்னைக் கண்டதுமே இவளுக்கு இத்தனை பரவசம் ஏற்பட்டு விடுகிறதுபோல!'' என்று எதிராளிக்கு தன் சுய அபிப்ராயம் சட்டென அதிகமாகி விடுகிறது.

உங்களின் சிரித்த முகம் அவர்களைப் பற்றிய கூடுதல் சுய மதிப்பீட்டை ஏற்படுத்துவது ஒரு பக்கம் என்றால், உங்களின் இந்த முகத் தோற்றம், உங்களைப் பற்றிய சில அபிப்ராயங்களையும் அநிச்சையாக ஏற்படுத்தும். ``இத்தனை சிரித்த முகமாக இருக்கிறாளே, அப்படியானால் இவள் உண்மையிலேயே மனுஷி தான்'' என்பதுதான் முதல் அபிப்ராயம். என்ன, சிரிக்கிறதுக்கும், இதுக்கும் என்னங்க சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? ரிமெம்பர் சிநேகிதி, ஒட்டுமொத்த மிருக ஜாதியில் சிரிக்கவல்ல ஒரே மிருகம் மானிடர்தான். ஆக நீங்கள் புன்னகை பூப்பதே மனித வர்க்கம் என்பதன் மிக முக்கியமான அடையாளம்தான்.

இந்த முதல் அபிப்ராயம் போக, சிரித்த முகத்தைப் பார்த்தால், இன்னொரு அபிப்ராயமும் தானாக ஏற்படும், ``புன்னகை பூக்கிறாள், ஆக மனுஷிதான். மனுஷி மட்டும் அல்ல, சந்தோஷமானவளும்கூட...'' என்று உடனே உங்கள் பக்கம் அந்த நபரை வசீகரித்து இழுக்கும் தன்மையும் இந்தச் சிரிப்புக்கு உண்டு.

சிரிப்பு ஏன் வசீகரிக்கிறது என்கிறீர்களா? மனிதர்கள் மற்றவர்களின் உணர்ச்சி நிலைகளை மிகத் துரிதமாக கிரகித்துக் கொள்ளக்கூடியவர்கள். சந்தோஷம், சோகம், கோபம், மோகம், பயம், பதட்டம், ஆசை, நிராசை என்று எல்லா உணர்ச்சிகளுமே நம்மை ஆட்கொள்ள வல்லவைதான். அதனால்தான் திரையில் ஓடும் யாரோ ஒருவரது உருவத்தைப் பார்த்து, சிரிக்கிறோம், அழுகிறோம், கோபிக்கிறோம், மகிழ்கிறோம். வேறு யாருக்கோ ஏற்படும் உணர்வுகள்கூட நம்மைத் தொற்றிக்கொள்ள வல்லவை. இப்படி உணர்ச்சிகளுக்கு தொற்றும் தன்மை இருப்பதினால், மிக கவனமாக நாம் மனிதர்களை பரிசீலினை செய்கிறோம். யாரிடமிருந்து நமக்கு சந்தோஷ உணர்ச்சி தொற்றிக்கொள்கிறதோ, அவர்களை நாம் விரும்பிவிடுகிறோம். அதனால்தான், சினிமா ஹீரோ, ஹீரோயின், காமெடி நடிகர்களுக்கு இத்தனை மவுசு ஏற்பட்டிருக்கின்றது.

இதுவே யாராவது நம்மில் சோகமான, குரோதமான, மோசமான உணர்வுகளை தொற்ற வைத்தால், அவர்களோடு இருக்க நமக்குப் பிடிப்பதில்லை. சதா ஒப்பாரி வைக்கும் பெண், சதா மூஞ்சை தூக்கி வைத்திருக்கும் ஆண், சதா நை நை என்கிற திரிகிற பெரிசு...

இவர்களைக் கண்டதும், நாம் டபக்கென தப்பி ஓடிவிட முயல்வதே இந்த நெகடிவ் உணர்ச்சி தொற்றலில் இருந்து தப்பிக்கத்தான்!

ஆக, பாஸிடிவ் உணர்ச்சி வெளிப்படுத்தும் ஆட்களை விரும்பி நாடுவது, நெகடிவ் உணர்ச்சி ஆசாமிகளைக் கண்டால் ஒதுங்கி விலகுவது, இதுதான் மனித நடைமுறை. இப்போது சொல்லுங்கள். சிரித்த முகமாக இருக்கும் பெண்ணைப் பார்த்தால், அவளோடு நேரம் செலவிடத் தோன்றும்தானே!

சிரிப்பு பொதுவாக எல்லோரையுமே ஈர்க்கும். அழும் குழந்தையைவிட, சிரித்த முக குழந்தையைக் கொஞ்சத் தான் எல்லோரும் விரும்புவார்கள். சிடுமூஞ்சி பெண்களைவிட சிரித்த முக பெண்களைத் தேர்ந்தெடுத்து, மாடலாக்கினால்தான் வியாபாரம் ஓடும். ஆக சிரித்த முகம் கூடுதல் வசீகரம், இதுதான் பொதுவிதி.

இந்த பொதுவிதி போக, பெண்ணின் சிரிப்புக்கு இன்னொரு முக்கியமான பணி உண்டு. பெண் சிரித்தால், ``அருகே வா'' என்கிற அழைப்பு மணி கேட்டுவிடும் சில ஆண்களுக்கு. இவளின் வெறும் இந்த புன்முறுவலாலே, உடனே அவள் அருகில் வந்துவிடும் உந்துதல் ஏற்பட்டுவிடும் ஆணுக்கு.
பெண்ணின் சிரிப்பு, ஆணுக்கு அத்தனை போதை ஏற்படுத்தும் தன்மை உண்டு.

``உன் ஒரு சிரிப்புக்காக ஊரையே தரலாமே'' என்கிற சினிமா வசனமாகட்டும், ``ஏன் உம்முனு இருக்கே, சிரிச்சா முத்தா உதிர்ந்திடும்'' என்று கெஞ்சும் காதலனாகட்டும், ``வீட்டுக்குப் போனா அவ மூஞ்சை தூக்கி வெச்சிருப்பா, பார்க்கும் போதே பத்திக்கிட்டு வரும்' என்று புகாரிடும் கணவர்களாகட்டும், எல்லாமே பெண்ணின் புன்னகை எத்தனை வலிமையான ஆயுதம் என்பதைச் சொல்லும் உதாரணங்களே.

இவ்வளவு வலிமையான ஆயுதம் என்பதினால் தான், ``பொம்பளை சிரிச்சாப் போச்சு!'' என்பது மாதிரி கட்டுப்பாடுகளை ஆணாதிக்க சமுதாயங்கள் முக்கிய கோட்பாடாகவே முன்வைக்கின்றன. ``இவப் பாட்டுக்கு சிரிச்சு வெச்சு, எவனாவது இவ பின்னாடியே வந்து தொலைச்சான்னா, எப்படிச் சமாளிக்கிறது?'' என்று பெண்களை அடக்கி ஆளும் போக்கும், அவர்களை கெடுபிடியாய் நடத்தும் போக்கும் இதனாலேயே ஏற்பட்டன. யார் என்ன கட்டுப்படுத்தினாலும், பெண்கள் தொடர்ந்து இயற்கை ஏவிய வழிகளில் இயங்கிக்கொண்டேதான் இருந்தார்கள் என்பது வேறு விஷயம்.

சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். உங்கள் ஆணை ஹேண்டில் செய்ய நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது, அவனைப் பார்த்து புன்னகை பூத்திடுங்கள். உங்களுக்கு அவனை உண்மையிலேயே பிடித்திருந்தால், நீங்கள் முயலாமலே தானாகவே உங்கள் முகம் புன்னகையில் மலர்ந்து விடுமே. முசுடு பாஸ், மோசமான கணவன், மூடியான மகன் இவர்களிடம் வலுக்கட்டாயமாகவேணும், ஒரு புன்னகையைப் பொழிந்து வையுங்கள். உடனே, உங்களை அவர்கள் நடத்தும் விதமே மாறிவிடும்.

இதே சிரிப்பென்னும் அஸ்திரத்திற்கு இன்னொரு ஆபத்தான முனையும் உண்டு. பெண்களைக் கவருகிறேன் பேர்வழி என்று எசகு பிசகாக உளறிக்கொட்டும் ரோட்டோர ரோமியோ, ஜொள்ளு விட்டே பிராணனை வாங்கும் சகா, மேலதிகாரி என்ற மிதப்பில் பெண்களிடம் தவறாக நடக்க முயலும் சீப்பான ஆசாமிகள், பெண்ணைப் பார்த்ததுமே தன் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லிப் பீற்றிக்கொண்டே தீருவது என்று குறியாய் இருக்கும் மொக்கைகள்... இப்படிப்பட்ட ஆசாமியாக இருந்தால் மறந்தும்கூட சிரித்து வைத்து விடாதீர்கள். அப்புறம் அவ்வளவுதான்... ஏகத்துக்கு குஷியாகி ஓவராய் வழிந்து கொட்டி உங்களைத் திணறடித்து விடுவார்கள். ``ஏன்யா உனக்கு இந்த வேண்டாத வேலை?'' என்று யாராவது கேட்டால், ``நான் சும்மாதான் இருந்தேன். அவதான் என்னைப் பார்த்துச் சிரிச்சா, அதனாலதான் பேசினேன்'' என்பார்கள்.

நீங்கள் என்னதான் ``பாவம் பார்த்துச் சிரித்தேன், சும்மா சிரிச்சேன், வேறு யாரையோ பார்த்துச் சிரித்தேன்'' என்று சொல்லி நழுவ முயன்றாலும், அநாவசிய வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடும்.

அதனால் அஸ்திரம் நம்பர் நாலான இந்த சிரிப்பு, ரொம்பவே கூரானது என்பதை உணர்ந்து, அதை பிரயோகிக்கப் பழகுவதே உங்களுக்கான இந்த வார ஹோம் ஒர்க். இந்த அஸ்திரத்தைத் திறமையாக உபயோகிக்க நீங்கள் பழகிவிட்டீர்கள் என்றால், அடுத்த பாடத்தைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயார்.

ஆண்குறி போட்டியும், பெண்வழி சமுதாயமும்

பெண்கள் காலத்திற்கேர்ப்ப வரையறைகளை மாற்றி கலவியல் தேர்வு செய்தார்கள், இதை அணுசரித்து கெட்டிக்கார ஆண்களும் தங்கள் தன்மையை மாற்றிக்கொண்டே வந்தார்கள். இப்படி மாறி வந்த ஆண்களின் மரபணுக்கள் பரவின, மாறாத ஆண்களின் சுடவே மறைந்து போனது. இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம்? என்கிறீர்களா? அதில் தான் ஸ்வாரஸ்யமே இருக்கிறது………..

குரங்கில் இருந்து மனிதர்கள் தோன்றிய அந்த ஆரம்ப காலத்தில், பெண்கள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிந்தார்கள். பெண்கள் வேட்டைக்கு போனார்களா? அது ஆண்களின் வேலையல்லவா என்று ஆட்சரியப்படாதீர்கள்? எல்லா விலங்குகளிலும் ஆணை விட பெண் தான் அதிக வேட்டுவ தன்மை கொண்டிருக்கும். கொசுவை எடுத்துக்கொள்ளுங்கள், ஆண் அனோஃபிலீஸ் அப்புராணி, கடிக்காது, ஆனால் பெண் துரத்தி துரத்தி நம்மை கடித்து மலேரியாவை பரப்பும். காரணம், பெண்ணுக்கு தான் தன் குட்டிகளை கட்டிக்காக்க வேண்டிய கடமை இருக்கிறது. இதனாலேயே இயற்கை பெண்களுக்கு அதிக மோப்பத்திறன், அதிக பார்வை கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித்திறன், அவ்வளவு ஏன் துரித கதியின் ஸ்பரிசத்தை உணரும் தன்மை ஆகியவற்றை தகவமைத்திருக்கிறது. இந்த புலன் நுணுக்கத்தினாலேயே ஆணை விட பெண் அதிக திறம்பட வேட்டையாடவல்லதாகிறது.

மனிதர்களிலும் இந்த பொது விதி இயங்கியதால், ஆதி கால மானுட பெண்களும் வேட்டையில் சிறந்து விளங்கினார்கள். மக்கள் எல்லோருமே நாடோடிகளாய் இறை தேடி அலைந்தார்கள். இப்படி அலைந்த மானுட கூட்டங்களை பெண் தலைவிகளே வழி நடத்தி சென்றார்கள். ஆக பெண்கள் ஆண்களை எதற்குமே நம்பி வாழாத காலமது.

இப்படி ஒரு காலம் இருந்ததா? இதற்கு என்ன ஆதாரம்? என்கிறீர்களா?

ஆதாரம் ஒன்று: காங்கோ நதிக்கரையோரமாய் இன்றும் வாழ்ந்து வருகிறது பொனோபோ என்கிற வானர இனம். இந்த பொனோபோக்கள் அச்சு அசல் அப்படியே மனிதர்களை போலவே நடந்துக்கொள்பவை. இவை தமக்குள் பேசிக்கொள்கின்றன. பயிற்றுவித்தால் செய்கை மொழியில் மனிதர்களுடனும் சம்பாஷிக்கின்றன. இவற்றுக்கு சிரிப்பு, அழுகை, வேடிக்கை, விளையாட்டு எல்லாமே உண்டு. இவை எல்லாவற்றையும் விட விசேஷம்: இவை கலவி கொள்ளும் விதம் அப்படியே மனிதர்களை போலவே இருக்கிறது.

மனிதர்களை போலவே என்றால் என்ன அர்த்தமாம்? மிருக கலவிக்கு மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. எல்லா மிருகங்களும் முகமே பாராமல், முன்னுக்கு பின் தான் கூடி புணரும். அதுவும் இனபெருக்க காலத்தில் மட்டும். எந்த வித சுகமுமே உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்பு சப்பில்லாத சம்பிரதாயமாய். ஆனால் முகம் பார்த்து, இன்னாருடன் புணருகிறோம் என்று அறிந்து, பருவகாலம் மட்டுமல்லாமல், தனக்கு பிடிக்கும் போதெல்லாம் ஆசைக்காக புணரும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்கு தான் உண்டு. ஒன்று மானுடம், இன்னொன்று பொனோப்போ. நடத்தையிலும், மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறதென்றால், மரபணுக்களில்? என்று பரிசோதனை செய்து பார்த்தால், ஆட்சர்யம் ஆனால் உண்மை…..பொனோப்போக்களின் மரபணு புரதங்கள் கிட்ட தட்ட 98% மனிதர்களை போலவே இருப்பதை கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள். மரபணு நெருக்கத்தில் பார்த்தால் மனிதர்களும் பொனோப்போக்களும் சகோதர இனங்கள். இவற்றுக்குள் இனகலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்க கூட வாய்ப்பிருக்கிறதென்றால் பாருங்களேன்.

ஆனால் இதை எல்லாம் விட மிக பெரிய ஆட்சர்யம் என்ன தெரியுமா? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய் வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. இவை மட்டும் அல்ல, நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பான்ஸீகளும் தாய்வழி சமூக அமைப்பில் தான் வாழ்கின்றன. அப்படியானால் மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூக முறையை கடைபிடித்திருப்பார்கள் என்று தானே அர்த்தம்.

ஆதாரம் இரண்டு: இன்றும் மனிதர்களுக்கு அம்மா செண்டிமெண்ட் தான் பலமாக இருக்கிறது. அப்பா செண்டிமெண்ட் அத்தனை பலமானதாய் இருப்பதில்லை.

ஆ 3: தொல்காப்பியம் மாதிரியான பண்டைய இலக்கண நூல்களும் மனிதர்கள் ஆரம்ப காலத்தில் தாய் வழி சமூகமாய் தான் வாழ்ந்தார்கள் என்கிறது.

ஆ 4: தொண்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளன…..இவற்றுக்கு நிகரான தந்தை தெய்வங்கள் இருந்ததில்லை…..உதாரணத்திற்கு தமிழர்களின் ஆரம்ப கால தெய்வமான கொற்றவை. இவள் வன தெய்வமாகவும், வேட்டுவ தெய்வமாகவும் வழங்கப்பட்டாள். சிலப்பதிகார காலம் வரை இவள் தான் பிரதான கடவுளாக இருந்திருக்கிறாள். அதன் பிறகு இவள் வனகாலியாக மாறி, வேலனுக்கு தாயாகி, அப்புறம் சிவனின் மனைவியாகி போனதெல்லாம் காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாமம்.

அதெல்லாம் சரி, நம்ம சங்கதிக்கு வருவோம். கொற்றவை காலத்து பெண் ஒருத்தியை உதாரணமாய் எடுத்துக்கொள்வோம். இவள் வேட்டைக்கு தானே போய்க்கொள்வாள். பெண் வழி சமூகமாய் வாழ்ந்ததால் இவள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவளுக்கு சொத்துக்கள் எதுவும் கிடையாது. ஆக எதற்க்காகவும் ஓர் ஆணை அண்டிப்பிழைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இவள் இல்லை. இப்படி வாழும் இந்த பெண் எதற்க்காக ஒரு ஆணை நாடுவாள்?

சிம்பிள்…..அந்த ஆணினால் அவளுக்கு ஏற்படும் கலவியல் கிளர்ச்சிக்காக மட்டுமே. அந்த காலத்தில் தனி சொத்து என்கிற சமாசாரமே இல்லை, அதனால் கற்பு என்கிற நம்பிக்கையே ஏற்பட்டிருக்கவில்லை. அதனால் பெண்கள் தமக்கு பிடித்த ஆண்கள் பலரோடு கூடி மகிழ்ந்துக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு பெண் பல புருஷர்களோடு கூடிக்கொள்ளும் இந்த முறையை தான் பாலிஆண்டரி, polyandry என்போம்.

இப்படி பாலிஆண்டிரி புரியும் போது, பல ஆண்களோடு கூடி, தனக்கு அதிக சுகத்தை தருகிறவன் யார் என்பதை கண்டுகொள்ள வாய்ப்பு பெண்களுக்கு இருந்ததால், அவளை மகிழ்விக்க தெரிந்தவனையே அவள் மீண்டும் மீண்டும் நாடி கூடினாள். இதனால் பெண்களை மகிழ்விக்க தெரிந்தவனின் மரபணுக்கள் மட்டுமே பரவின. மகிழ்விக்க தெரியாதவர்கள் மரபணு ஆட்டத்திலிருந்த நீக்க பட்டன. ஆனால் ஒரு கூட்டத்தில் பல ஆண்களுக்கு பெண்ணை மகிழ்விக்க தெரிந்திருந்தால், இவர்களுக்குள் போட்டி ஏற்படுவது இயல்பு தானே. அதனால் ஒருவரை அடுத்தவர் மிஞ்சிட ஆண்கள் முயல், இதனால் காலப்போக்கில் மனித ஆண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

ஆண்குறி சின்னங்கள்

மனித பெண்கள் தமக்கு அதிக சுகத்தை தரும் ஆண்களை மட்டும் தேர்ந்தெடுத்த காலத்தில், ஆண்களுக்குள் எக்க செக்க போட்டி தலைதுக்க ஆரம்பித்தது. ”அதிக சுகத்தை தர வல்லவன் நான்” என்பதை விளம்பரப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஆண்களுக்கு ஏற்பட, இதற்குண்டான கருவியின் வளர்ச்சி விகிதத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.


நீளமான தந்தத்தை கொண்ட கடாவை மட்டுமே தேர்ந்தெடுத்து பெண்யானைகள் கூடும், இதனலேயே ஆண் யானைகளுக்குள், தந்தத்தின் அளவை வைத்து ஒரு போட்டி நடைபெறுகிறது. அதே போலத்தான் மயில். மிக நீளமான தோகையை கொண்ட சேவல் மயிலோடு தான் பெண் மயில் சேர விரும்பும்….இதனால் சேவல் மயில்களுக்குள்,

“யாருக்கு நீண்ட தோகை?” என்கிற போட்டி நடக்கிறது. மிகவும் இனிமையாக பாடத்தெரிந்த ஆண் குயிலோடு தான் பெண் கூடும், இதனால் குயில் ஆண்களுக்குள் பாட்டு திறமையில் போட்டி நடப்பது உண்டு……….இப்படி உலகில் எல்லா ஜீவராசியிலும் பெண்ணை கவர ஆண் சில பாகங்களையோ, திறமைகளையோ விளம்பரமாய் வெளிபடுத்துவைதை போலவே, மனித ஆண்களும் தங்கள் இனபெருக்க உறுப்பை ஒரு “வீரிய விளம்பரமாய்” வெளிபடுத்த ஆரம்பித்தார்கள்

இதனால் மனித ஆணின உறுப்பின் நீளம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றுள்ள வானர இனங்களிலேயே மனித அணின் உறுப்பு தான் மிகவும் நீளமாக இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது. இத்தனைக்கும் மனித பெண்ணின் ஜனன குழாய் என்னவோ எல்லோருக்குமே அதே பத்து செண்டிமீட்டர் தான், இதனுள் சென்றடைய அதே பத்து செண்டிமீட்டர் நீளமுள்ள கருவி இருந்தாலே போதும், ஆனால் போட்டி என்று வந்து விட்டால், வளர்ச்சி விகிதம் மாறித்தானே போகும். இதனால் மனித ஆணின உறுப்பு நீளத்தில் பல வேறுபாடுகள் ஏற்பட, இத்தனை வேறுபாடுகள் இருப்பதால் ஆண்களுக்குள் இது குறித்த ஒரு போட்டி மனப்பாண்மை உண்டானது.

ஆடைகளே இல்லாத அந்த காலத்தில், மிக சுலபமாய் தூரத்தில் இருந்தே ஒரு ஆணின் அளவுகளை கணக்கிட்டு, அவனை தரம் பிரித்திருக்க முடியும். பெண்கள் இதை எல்லாம் சட்டை செய்கிறார்களோ, இல்லையோ. ஆனால் ஆண்கள் மத்தியில் யாரும் சொல்லித் தராமலேயே இந்த ஒப்பீடு ஆரம்ப காலம் துவங்கி இன்று வரை நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. தன் நீளத்தை நினைத்து கவலைபடும் ஆண்கள் இன்றும் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றும் பெரும்பாலான ஆண்களின் சுயமதிப்பீடே அவர்களின் இந்த அளவை பொருத்து தான் இருக்கிறது. இதனால் சில ஆண்களுக்கு இது குறித்த தாழ்வு மனப்பாண்மையே ஏற்படுவதும் உண்டு. ”அளவை அதிகரிக்க ஒரு மாயஜால வைத்தியம்” என்று யாராவது போலி டாக்டர் பொய்யாக, ஒரு பிட் நோட்டீஸ் ஆடித்து ஒட்டினாலும் உடனே அதை நம்பி, இதற்காக பணத்தையும் நேரத்தையும் செல்விட தயாராக இருக்கிறார்கள்.

ஆடை இல்லாத அந்த காலத்தில் பெண்களும், அவர்களை விட அதிக மும்முரமாய் ஆண்களும், வெறும் பார்வையை வைத்தே எதிரில் இருக்கும் ஆணை மிக துல்லியமாய் அளவிட முடிந்தது, அதனால் அதில் போலித்தனங்கள் இருந்திருக்க வாய்பில்லை. ஆனால் ஆடை அணியும் கலாச்சார மாற்றம் ஏற்பட்ட உடனே, “யாருக்கு தெரிய போகுது, பேராண்மை மிக்கவனாகத்தான் காட்டிக்கொள்வோமே” என்ற போக்கு தலை தூக்க ஆரம்பித்தது. அவரவர் ஊரில் இவ்வடிவில் ஏதாவது வஸ்து தென்பட்டால் போதும், உடனே ஆண்கள் எல்லாம் அதை தேடிப்பிடித்து, எடுத்து, வந்து மிக சரியாக தங்கள் இடுப்பில் செருகி வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் குச்சி, காய், கொம்பு, மரவுறி மாதிரியான phallic symbolsசை அணிய ஆரம்பித்த ஆண்கள், வேட்டையில் இன்னும் தேர்ச்சி பெற ஆரம்பித்ததும், பிற மிருகங்களின் பல், தந்தம், தோகை, நகம், உலர்ந்த உடல் பாகம் என்று பலதையும் அணிய ஆரம்பித்தார்கள். இந்த சின்னம் அணியும் போக்கிலும் போட்டிகள் தலைதூக்க, அதிக சமூக அந்தஸ்து இருப்பதாக காட்டிக்கொள்ள முயல்பவன் இருப்பதிலேயே மிக நீளமான இந்த phallic symbolலை அணிய யத்தனித்தான். உலோகம் கண்டுபிடிக்கபிட்ட பிறகோ, கத்தி, வாள், அரிவாள், அதற்கு அப்புறம் வந்த காலத்தில் துப்பாக்கி, ரைஃபில், பிஸ்டல், என்று இந்த சின்னங்களை இடுப்பில் மாட்டிக்கொண்டார்கள் ஆண்கள்.

இந்த சின்னங்களை எல்லாம் கண்டு பெண்கள் உண்மையிலேயே மயங்கி போனார்களா என்பது கேள்விக்குறி தான், ஆனால் மிக வலிமையான சின்னங்களை அணிந்த ஆண்களை கண்டு பிற ஆண்கள் அடங்கிபோனதென்னவோ உண்மை தான். ஆனால் கலாச்சாரம் வளர வளர, இப்படி பகிரங்கமாய் விளம்பரபடுத்துவது அநாகரீகம் என்கிற கருத்து வலுபெற்றது. அதனால் நார்மலான ஆண்கள் இப்படி அப்பட்டமாய் வெளிபடுத்துவதில்லை. ஆனால் மனநலம் குன்றிய நிலையில் பல ஆண்கள் இதில் அப்பட்டமாய் ஈடுபடுவதை பார்க்கலாம். இவர்களை தவிற மற்ற ஆண்கள் எல்லோரும், மிக நாசூக்காக தங்கள் திறமைகளை கொண்டு தங்கள் பேராண்மையை வெளிபடுத்த முயல்வதையும் மனித வரலாறு முழுக்க காணலாம். கற்களை செதுக்கும் ஆற்றலை பெற்றதுமே ஆண், மிக பெரிய ஆணின உறுப்பு வடிவங்களை செதுக்கி வைத்தான்…………இன்றும் இது போன்ற பல புராதன ஒபிலிஸ்க் சிற்பக்கற்களை எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம் மாதிரியான நாடுகளில் பார்க்கலாம்.

இதன் பிறகு பெருமதங்கள் தோன்ற ஆரம்பிக்க, சமன துறவிகள், நிர்வாண கோலமாய் இருப்பதையே ஒரு மகத்தான் ஆண்மீக முக்திநிலை என கருதினார்கள். அதனால் ஆணின் நிர்வாணம் மீண்டும் அவன் பேராற்றலை பறைசாற்றுவதாக கருதப்படலானது. கிட்ட தட்ட 700 ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் வேறு மூலைகளில் கிறுத்துவ பெருமதம் பரவ ஆரம்பித்தது. சமணம், நிர்வாணத்தை மேம்பட்ட ஒரு சாதனையாக கருதிய காலம் போய், ஆடை இல்லாத நிலையை “மஹாபாவம்” என்று கருதும் மனநிலைக்கு மனிதர்கள் மாறி இருந்தார்கள். அதனால் கிறுத்துவ தேவாலயங்கள் நிர்வாணத்தை தடை செய்தன. ஆனாலும் மனித ஆணின் ஆரம்பகால குணம் மாறி இருக்கவில்லை………..விவிலியக் கதைகள், தேவாலய வடிவமைப்பு, சிற்பம், ஓவியம் ஆகியவற்றில் ஆணின சின்னங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிபட ஆரம்பித்தன.

அதற்குள் இந்தியாவிலும் சமய மாற்றம் ஏற்பட்டிருந்தது, சமணம் தோற்று, சைவம் ஓங்க ஆரம்பித்தது. சமணத்தில் முழு ஆணின் நிர்வாணம் வணக்கத்திற்குரியதாய் போற்ற பட்டிருந்தது. சைவத்திலோ இது இன்னும் நுணுக்கமாகி, ஆண் உடலில் மற்ற பாகங்களை நீக்கிவிட்டு, வெறும் அவனுடைய இனக்குறியை மட்டும் வழிபாட்டிற்கு உரியதாக கருதும் மனநிலை உருவாகியது. லிங்க வழிபாடு பரபலமாக, தன் வீரியத்தையும் ஆற்றலையும் செல்வாக்கையும் காட்டிக்கொள்ள முயன்ற ராஜ ராஜ சோழன் மாதிரியான அரசர்கள், இருப்பதிலேயே மிக பெரிய அளவு ஆணினச் சின்ன லிங்கத்தை ஸ்தாபித்து, தங்கள் பேராண்மையை வெளிபடுத்த முயன்றார்கள். இன்றும் பல நாடுகள் தங்கள் பேரந்தஸ்த்தை காட்டிக்கொள்ள, மிக பெரிய கோபுறம், என்று மெனக்கெட்டு ஆணினக்குறி வடிவில் கட்டுவதை பார்க்கிறோமே. அவ்வளவு ஏன், இன்று, ”வல்லரச நாடாக்கும்” என்று தன் பராக்கிரமத்தை காட்டிக்கொள்ளும் அரசுகள் உருவாக்கும் ராக்கெட், அணுஆயுதம் மாதிரியான வஸ்துக்கள் எல்லாம் மிக வெளிப்படையாகவே ஆணினச்சின்ன வடிவமைப்பில் இருப்பதை காணலாம்.

இப்படி எல்லாம் ஆணினச்சின்னங்களை விஸ்தாரமாய் விளம்பரபடுத்தினால் மற்ற ஆண்கள் பயந்து போட்டியில் இருந்து விலகிக்கொள்வார்கள்; பெண்கள் சுலபமாய் மயங்கி மடியில் விழுவார்கள் என்று ஆண்கள் கணக்கிட, பெண்களோ, இதற்கு ஒரு படி மேலே போய் யோசிக்க ஆரம்பித்தார்கள்

அடக்கி வாசித்தல்.


ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா? இது காலங்காலமாய் பெண்கள் பயின்று வந்த ஒரு மிகப் பெரிய சாஸ்திரம். ஆனால் ரொம்பவே சீக்ரெட்டான ஒரு சாஸ்திரம்.

எதற்கு இவ்வளவு ஒளிவு மறைவு என்று கூட நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இந்த ரகசியத் தன்மைக்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. தன்னை ஒரு பெண் ஹேண்டில் செய்யப் போகிறாள் என்று தெரிந்தாலே... அட, ஆண்களை விடுங்கள்... குட்டிக் குட்டி குழந்தைகள் கூட பெரிதாக முரண்டு பிடித்து எப்படியாவது நழுவி தப்பித்துவிட முயலும் போது, இத்தனை வலிய, பெரிய ஆண், அப்படிச் செய்ய மாட்டார்களா? ஆகவே, ஆண்களை சமாளிக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான முதல் அஸ்திரமே இந்த ஒளிவு மறைவுதான்.

காட்டில் வாழும் மிகக் கொடிய விலங்குகளில் ஒன்று சிங்கம். சாதாரணமாக, சிங்கத்தைப் பார்த்தால் மனிதர்கள் ஓடிப் பதுங்கிக் கொள்வார்கள். மற்றபடி சிங்கம் மனிதர்களை மருந்துக்குக் கூட மதிக்காது. முடிந்தால் மிதித்துக் கடித்துக் குதறி தின்றுவிடும். ஆனால் அதே சிங்கத்தை சர்க்கஸில் சேர்த்து அதை ஒரு நெருப்பு வளையத்தினுள் குதிக்க வைக்க அதே மனிதனால் முடிகிறதே. எப்படி?

சாதாரண சிங்கம் நெருப்பைக் கண்டால் ஒதுங்கும். மனிதர்களைக் கண்டால் தாக்கும், இது தான் அதன் இயல்பு. ஆனால் இந்த சர்க்கஸ் சிங்கம் மட்டும் எப்படி மனிதன் சொன்னதைக் கேட்டு நெருப்பு வளையத்தினுள் குதிக்கிறது?

அதுதான் மனிதனின் சாதுர்யம். தன்னை விடப் பல மடங்கு வலிமையும், ஆக்ரோஷமும் கொண்ட ஒரு விலங்கை வெறும் சில உபாயங்களைக் கொண்டு அடக்கி, வழிக்குக் கொண்டு வருவதுதான் மனிதனின் சாமர்த்தியம்.

மனித ஆணும், மனிதப் பெண்ணை விட வலிமையானவன். ஆக்ரோஷம் மிக்கவன், அபாயகரமானவன். ஆனால், அந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அதே சாதுர்யத்தை சாதாரணப் பெண்களும் பயன்படுத்த பழகிக்கொண்டால், மனித ஆணும், சிங்கத்தைப் போலவே சாந்தமாய் மாறிப்போவான்.

அதெல்லாம் சரி. இந்த சர்க்கஸ்காரி உபயோகிக்கும் அந்த சாதுர்யம்தான் என்ன? எடுத்த எடுப்பில் எந்த சர்க்கஸ் காரியும், ``ஏய் சிங்கமே, உன்னை நான் என்ன செய்கிறேன் பார். உன்னை ஹேண்டில் செய்ய கற்றுக் கொண்டு இதோ தெரிகிறது பார், இந்த நெருப்பு வளையம், அதன் உள்ளே உன்னைக் குதிக்க வைக்கப் போகிறேன்... தெரிந்துகொள்!'' என்று தன் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாய் போட்டு உடைப்பதே இல்லை. அதற்கு மாறாய் நெருப்பு என்று ஒன்று இருப்பதாகவும், அதை ஒரு வளைய வடிவில் வைத்திருப்பதாகவும் இந்த ஏற்பாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அவள் காட்டிக் கொள்வதே இல்லை.

அதற்குப் பதிலாய் சிங்கத்திடம் சாதாரணமாய் பழகுகிறாள். அதன் பராமரிப்பில் கவனம் செலுத்துகிறாள், வேளா வேளைக்கு தன் கையாலேயே உணவு பரிமாறுகிறாள். அதன் பக்கத்திலேயே இருந்து பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். இப்படி ஆரம்பித்து, அப்புறம் சிங்கத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வரை காத்திருந்து பிறகு மெல்ல மெல்ல அதைப் பழக்கி, முதலில் சாதா வளையம், பிறகு சிவப்பு நிற வளையம், அப்புறம் தூரத்தில் கொஞ்சம் நெருப்பு, பிறகு பக்கத்தில் நெருப்பு, பிறகே வளைவில் நெருப்பு என்று மிகவும் நிறுத்தி நிதானமாகத் தானே செய்கிறாள்.

இவ்வளவு செய்யும் போதும் எந்தக் கட்டத்திலுமே தன் நோக்கத்தை அவள் சிங்கத்திடம் தெரிவிப்பதே இல்லை. அதனால்தான் சிங்கமும் தன் கெடுபிடியைத் தளர்த்தி, அவள் மனம் போல நடக்கப் பழகிக்கொள்கிறது.

இதற்கு மாறாக இவள் ஆரம்பத்திலேயே ``வா சிங்கம்... இந்த நெருப்பு வளையத்தினுள் போய் குதித்துவிடு'' என்று மிகவும் ஓப்பனாய் தன் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தால், சிங்கம் அவளை அங்கேயே சிங்கிள் லபக்கில் விழுங்கியிருக்குமே.

அதனால் ஆண்களை ஹேண்டில் செய்யும் அரிய அஸ்திரங்களை கற்றுக்கொள்ள நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் பழக வேண்டிய கலை, உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்று வெளியே காட்டிக் கொள்ளாத ரகசியம் காக்கும் திறமை.

``
அதெல்லாம் முடியாது. என்னால் இப்படி எல்லாம் ரகசியம் காத்துக் கொண்டிருக்க முடியாது. நான் எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். மனசுல பட்டதை பட்டு பட்டுனு செய்துதான் பழக்கம். இப்படி எல்லாம் ஒளிவு மறைவா என்னால் இயங்க முடியாது,'' என்று நீங்கள் நினைத்தால், வெல் அண்ட் குட், நீங்கள் நீங்களாகவே இருக்கலாம், உங்களை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் ஆண்களை எப்படி ஹேண்டில் செய்வது என்ற இந்த கலையை கற்றுக்கொள்ளும் அடிப்படை தகுதி உங்களுக்கு இல்லை, அதனால் நீங்கள் இந்த ஆட்டத்திலிருந்து விலகிவிடுவதே நல்லது.

இல்லை. இந்தக் கலையை நான் கற்றுக்கொள்ளத் தான் விரும்புகிறேன். ஆனால் உள்நோக்கம் மறைத்துப் பழக்கமில்லை. எப்படிச் செய்வது என்று தெரியாது என்று தயங்குகிறீர்கள் என்றால் டோன்ட் ஒர்ரி. இது ரொம்ப சுலபம் தான். உதாரணத்திற்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று வையுங்களேன். அந்தக் குழந்தைக்கு ஜுரம் என்று மருந்து தர வேண்டியுள்ளதென்றால் அதை எப்படிச் செய்வீர்கள்? ``இந்தா புடி, மருந்தைக் குடி'' என்று நேரடியாகவா சொல்வோம்? அப்படிச் சொன்னால்தான் குழந்தை முழு சவுண்டில் சைரனை ஆரம்பித்துவிட்டு அங்கிருந்து ஜகா வாங்கி விடுமே!

தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளக் கூடிய பெரிய குழந்தை என்றால் உண்மையைச் சொல்லி குடிக்க வைக்கலாம். மிகவும் சின்னக் குழந்தை என்றால், எதுவுமே பேசாமல் குழந்தையை மடியில் போட்டு, எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த சங்கு நிறைய மருந்தை டபக் என்று குழந்தை வாயில் ஒரேயடியாக ஊற்றி, உடனே பாலைக் கொடுத்து குழந்தையை அப்படியே சமாதானப்படுத்துகிறவள்தான் சாமர்த்தியமான தாய்.

இப்படி அந்தத் தாய் குழந்தைக்கு தன் நோக்கத்தைத் தெரிவிக்காமல் மடார் என்று காரியத்தைச் செய்து முடிப்பது அந்தக் குழந்தைக்கு நன்மை தானே? அதைப் போலத்தான் இந்த `யுத்தி நம்பர் ஒன்று'ம், நீட்டி முழக்கி, விளக்கி, விவாதித்து முன்னறிவிப்புக் கொடுத்து எல்லாம் ஆண்களை நீங்கள் ஹேண்டில் பண்ண முடியாது. நீங்கள் பாட்டிற்கு இயல்பாக ஆண்களை அணுகுங்கள், உங்கள் உள்நோக்கம் வெளியே தெரியாதபடிக்கு. எப்படியும் ஆண்கள், ``இவள் வெறும் ஒரு பெண் தானே... இவளுக்கு அப்படி என்ன பெரிதாகத் தெரிந்து விடப் போகிறது'' என்று அஸால்ட்டாகத் தான் இருப்பார்கள். அநேக ஆண்களுக்குத் தான் தெரியாதே, எல்லா ஜீவராசிகளையும் போல், மனித வர்க்கத்தில் பெண் தான் ஆணை விட ரொம்ப பொல்லாதவள். என்று...

இந்த ``ஆஃப்டர் ஆல் பெண் தானே'' என்கிற அஜாக்கிரதையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால்தான் பெண்களுக்கு அட்வான்டேஜ் என்பதனால், `ஆண்களை ஹேண்டில் செய்யும் இந்தக் கலையின் முதல் பாடம் : `அடக்கி வாசியுங்கள்.' நீங்கள் ஹேண்டில் செய்யப் போகும் ஆணுக்கு கடைசிவரை தெரியவே கூடாது, அதுதான் ஆரம்பத்திலிருந்தே உங்கள் உள்நோக்கம் என்று.

எங்கே இந்த முதல் பாடத்தை வெற்றிகரமாய் கடைப்பிடித்து, ஏதாவது சில ரகசியங்களை பத்திரமாய் காப்பாற்றிக் காட்டுங்கள், பார்ப்போம். `சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம்' என்பதை மட்டும் நீங்கள் பொய்ப்பித்துக் காட்டிவிட்டீர்கள் என்றால், நீங்கள் இந்த முதல் டெஸ்டில் பாஸ் என்றும், இனி வரும் அடுத்தடுத்த அஸ்திரங்களை கற்றுக் கொள்ள தகுதியானவர் என்றும் அர்த்தம். பார்த்துவிடலாமே, நீங்கள் பாஸா இல்லையா என்று