Friday, December 31, 2010

தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட்

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம் . இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம் , வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம் . ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது .


த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம் 

ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது . ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது .

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது. 

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை 

‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.

பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.


தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.

என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.

யாருக்கும் வெட்கமில்லை...- ஞாநி

ரத்தம் கொதித்தது - நவம்பர் 18ஆம் தேதி மதுரையில் கருணாநிதியின் பேரன் கல்யாணத் திருவிழா நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்த்தபோதும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்.

 

பள்ளிகளுக்கு விடுமுறை. பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மதுரையின் இளவரசர் என்று அழகிரி மகனைப் போற்றி விளம்பரப் பலகைகள். தாம் மேற்கொண்ட அதே பகுத்தறிவு லட்சியத்தைத் தம் குடும்பமே பேரன், பேத்திகள் வரை பின்பற்றுவதைப் பற்றிப் பெருமைப்படுவதாக மேடையில் கருணாநிதியின் ஓர் அப்பட்டமான பொய்ப் பேச்சு... எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தமாதிரி திருமணத்துக்கு வந்த ஆங்கில வாழ்த்துச் செய்திகளைப் படித்து நன்றி கூறியது தயாநிதிமாறன். பக்கத்தில் அழகிரி.

இவர்களின் சண்டையினால் தானே மதுரை தினகரன் அலு வலகத்தில் மூன்று அப்பாவி மனிதர்கள் செத்தார்கள். தீ வைத்தவர்கள் எல்லாம் கல்யாணப் பந்தலில் விருந்தினர்களாக...

கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாளிலிருந்து தயாநிதி வரை எல்லோரும் எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்கள் என்பது அன்றைக்கு மேடையில் தெரிந்தது. அடுத்த சில நாட்களில் வெளிவந்த அவுட்லுக் இதழில் அம்பலப் படுத்தப்பட்ட நீரா ராடியா ஃபோன் பேச்சு டேப்களைப் படித்தபோதுதான், அவர்களின் நடிப்புத் திறமையின் முழுப் பரிமாணமும் புரிந்தது. சிவாஜி கணேசன் முதல் தனுஷ் வரை பத்மினி, சாவித்திரி முதல் த்ரிஷா வரை அத்தனை நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிற திறமையுடன் ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே என்று வியப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது.மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை, உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதி மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை. இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள் தான் என்ன?

1. ‘கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ). இனிமேல் தானும் ஸ்டாலினும் தான் கட்சியை நடத் திச் செல்லப் போகிறோம். காங்கிர ஸார் என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப் பாட்டில் தான் இருப்பார்’ என் றெல்லாம் தயாநிதிமாறன் தில்லியில் சொல்வதாக நீரா ராடியா, ஆ.ராசாவிடம் சொல்கிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என காங்கிரஸார் மனத்தில் விதைத்தது யாரென்று தமக்குத் தெரியும் என ராசா சொன்னதுக்குதான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட் டேன். அவர் தலைவரிடம் போய்ச் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்னை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் ஃபோனில் சொல்ல வைக்கும்படி ராசா, நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்கிறார். பாலுதான் பிரச்னை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தம்மைத்தான் தி.மு.க சார்பில் தில்லியில் காங்கிரஸாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பி இருப்பதாக தயாநிதி மாறன் தில்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்வதாகவும் பொய்களைப் பரப்புவதாகவும் கனிமொழி, நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.வி.காரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லோரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தம்மிடம் சி.என்.என்.ஐ.பி.என். சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி, பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப் போவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாகக் கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டி யதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தமக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்குச் சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தம்மிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்ட தாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நமக்கு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்கப்போகிறேன். அவருக்கு அனில் அம்பானியைத் துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா, நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகட்டிவாக எழுதினால் உடனே விளம் பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதைச் செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேரா சைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வி.யின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் - தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தாம் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தாம் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இரு வருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.

15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குனர் வீர் சிங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சிங்வி, தாம் தொடர்ந்து சோனி யாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாகச் சொல்கிறார். அமைச்சர் இலாக்கா பங்கீட்டுப் பிரச்னை காங்கிரஸ்-தி.மு.க பிரச்னை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தம் சார்பில் என்று ஒரே ஒருவரைத் தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி, குலாம் நபி ஆசாதை அடிக்கடி கூப்பிட்டு நான் தான் அதிகாரபூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்கப் பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம்? தயாநிதி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும், செல்வியும் நிர்ப் பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.

இப்படியாகத் தமிழ் நாட்டின் மானத்தை தில்லியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பம் நாறடித்துக் கொண்டிருக்கும் கதை தொடர்கிறது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது...

மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில் லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படி யாவது காரியத்தை முடித்துவிடவேண்டு மென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை, எல்லாம் தம் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை களையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.
 
 
கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந் தெடுப்பது யார்? பிரதமரா? தொழிலதி பர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன் மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தமக்கு வேண்டுமென்று அலைகிறார்கள்? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம் பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறை கேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியா காரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்கத் தெருத் தெருவாக இனி வருவார்கள் ?

பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு துளியை, கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா

அருந்ததி ராய்

The God of Small things என்று தலைப்புக் கொடுக்க மனம் வராமல் அதை எழுதியவரின் பெயரையே தலைப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஒரு புத்தகம் ஏதாவது விருது பெற்றதும் அதற்கு ஒரு தனிப் புகழ் கிடைத்து விடுகிறது. புக்கர் பரிசு கிடைக்கா விட்டால், புத்தகக் கடையில் இப்படி ஒரு தலைப்பில் இப்படி ஒருவர் எழுதிய புத்தகத்தைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். அதே போலத்தான் ஆஸ்கர் விருது பெற்று விட்ட திரைப்படங்கள்.

1990களின் இறுதிகளில் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு, இருபுறமும் இறக்கைகள் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்த நாட்களில் ஏதோ ஒரு விமான நிலைய புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். படிக்க ஆரம்பித்ததும் இதுக்கு என்ன விருது என்றுதான் தோன்றியது. விடாப்பிடியாகப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பாதி புத்தகத்துக்கு மேல் போக முடியவில்லை.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'தலைசிறந்த கதைகளில் ரகசியம் எதுவும் இருப்பதில்லை. அத்தகைய கதைகளை நீங்கள் ஏற்கனவே கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்க விரும்புவீர்கள். கதையின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து ஒட்டிக் கொள்ளலாம். கதகளி கலைஞர்கள் அதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.'

அதை அருந்ததி ராயும் புரிந்து கொண்டு தனது கதைக்கு கொண்டு வந்திருக்கிறார். கதையின் முதல் அத்தியாயத்திலேயே என்னென்ன நடந்தது, எதைப் பற்றிப் படிக்கப் போகிறோம் என்று அறிவுப்புகள், எச்சரிக்கைகள் கிடைத்து விடுகின்றன. அம்மு விவாகரத்து ஆகி அம்மா வீடு வருவது, சோஃபி மோள் தண்ணீரில் மூழ்கி இறந்து விடுவது, எஸ்தா அபிலாஷ் தியேட்டரில் ஆரஞ்சு லெமன் டிரிங்க் ஆளிடம் படுவது, எஸ்தா, rahel இருவரின் வாழ்க்கையும் இலக்கில்லாமல் போவது என்று எல்லாமே முதலிலேயே தெரிந்து விடுகிறது.

அதன் பிறகு விபரங்கள்தான். இந்த நாவலுக்கு விமரிசனம் எழுதிய எல்லோருமே குறிப்பிடுவது details. கேரளாவின், சிரியன் கிருத்தவ, மேல்தட்டு குடும்பம் ஒன்றின் பார்வையில் உலகின் இண்டு இடுக்குகள் எல்லாம் உயிர் பெறுகின்றன. கதா பாத்திரங்கள் எதுவும் எதற்குள்ளும் ஒளிந்து கொள்ள முடிவதில்லை.

கதை சொல்வது ஆசிரியரா அல்லது ரஹேலா என்று குழப்பம் வருவது குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ரஹேலின் சின்ன வயது உலகப்பார்வைவை, வளர்ந்து 31 வயதில் அனுபவப் பார்வையுடன் கலந்து கதை சொல்லப்படுகிறது. குடும்பம் கோட்டயத்துக்குக் காரில் போகும் போது வியட்நாமில் நடக்கும் சண்டையைப் பற்றியும் நாட்டின் பெயர் குறிப்பிடாமல் தொட்டுச் செல்கிறார் கதை சொல்லி. 31 வயது ரஹேல் 7 வயதில் நடந்த சம்பவங்கள் எப்படி அன்றைய கதாபாத்திரங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று உருவகித்து சொல்வது போலக் கதை.

என்ன பெரிய கதை! குழந்தைகள் வயிற்றுக்கு இல்லாமல் வாடுகிறார்களா! படிப்பதற்கு வசதியில்லையா? சமூகத்தால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? அப்படி எதுவும் இல்லை. மிகவும் நுண்ணிய ஒரே ஒரு குடும்பத்தில் மட்டும் நடந்திருக்கக் கூடிய சம்பவங்களின் தொகுப்பு. கேரள சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டை இந்தக் கதைக் கண்ணாடியில் படம் பிடித்துக் காட்டுகிறார் அருந்ததி ராய். செம்மீன் திரைப்படத் தாக்கம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் தாக்கம், தொழிற்சங்க இயக்கம், நம்பூதிரி பாடின் தலைமையில் கம்யூனிஸ்டு அரசு ஏற்பட்டது, மத அரசியல்கள், வேதிப் பொருட்களால் ஆறுகள் மாசு படுவது, தீண்டாமை.

எஸ்தா நடந்து போகும் போது முதலில் 'அவர்களது தாத்தா தீண்டத்தகாதவர்களுக்காக கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடம்' என்று சொல்லி விட்டு அடுத்தடுத்து மற்ற காட்சிகளை விவரித்து விட்டு, இன்னொரு பள்ளியைக் குறிப்பிட்டு 'அது தீண்டத்தகுந்தவர்களுக்கு' என்று சொல்லும் சொற்கூர்மை நாவல் எங்கும் விரவிக் கிடக்கிறது. தீண்டத் தகுந்த காவல் அதிகாரிகள், தீண்டத்தகாத பறவனை மிதித்தே உடைக்கும் போது சாட்சிகளாக எஸ்தாவும், ரஹேலும் மட்டும் இருக்கிறார்கள். அவன் செய்த தவறு, தீண்டத் தகுந்த அம்முவுடன் உறவு வைத்துக் கொள்வது.

அந்த ரகசிய உறவு வெளிப்பட்ட பிற்பகலில் அம்மு குழந்தைகளை வார்த்தைகளால் நோகடித்து துரத்தி விடகுழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப் போகத் தீர்மானிக்கிறார்கள். இலண்டனில் வந்திருக்கும் அவர்கள் மாமா சாக்கோவின் இங்கிலாந்து (முன்னாள்) மனைவி மூலமான குழந்தை சோஃபி மோளும் சேர்ந்து கொள்கிறாள். முன்னிருட்டே நேரத்தில் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த படகில் ஏறி ஆற்றைக் கடக்க முயற்சிக்கும் போது படகு கவிழ்ந்து விடுகிறது. எஸ்தாவும், ரஹேலும் வழக்கம் போல நீந்தி அக்கரை சேர்ந்து விடுகிறார்கள். சோஃபி மோளுக்கு நீந்தத் தெரியாது.

டட்டடாய்ங் என்று இசை எழுப்பாமல், பெரிய பதற்றம் இல்லாமல் சோஃபி மோள் ஆற்றோடு போய் விடுகிறாள். மற்ற இரண்டு குழந்தைகளும் அக்கரையில் ஒரு கைவிடப்பட்ட வீட்டு திண்ணையில் படுத்துத் தூங்குகிறார்கள். அதுதான் அவர்கள் ஓடிப் போக வைத்திருந்த இடம்.

அம்மாச்சி வெளுத்தாவை திட்டி காரித்துப்பி அனுப்ப, அவனும் ஆற்றை நீந்திக் கடந்து அதே வீட்டுக்கு வருகிறான். அம்முவை அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

பேபி அத்தை கொடுத்த புகாரின் பேரில் தீண்டக் கூடிய காவலர்கள் படகேறி அடுத்த நாள் காலையில் அக்கரை வந்து வெளுத்தாவை மிதித்து துவைத்து குற்றுயிராக்கி விடுகிறார்கள். சோஃபி மோளின் பிணம் ஆற்றில் கிடைக்கிறது. வெளுத்தா குழந்தைகளைக் கடத்தியதாக எழுதி கேசை முடிக்கிறார்கள்.

இந்தக் குழந்தைகள் சரியில்லை என்று எஸ்தாவை கொல்கத்தாவுக்கு அனுப்பி விடுகிறார்கள். ரஹேலின் படிப்பை மட்டும் அம்மாச்சி பார்த்துக் கொள்வாள். அம்மு வேலை தேடி போகிறாள். 'நல்ல வேலை கிடைத்து நாம மூணு பேரும் சேர்ந்து இருக்க அளவுக்கு வருமானம் ஏற்பட்டதும் உங்களை அழைத்துக் கொள்கிறேன்' என்கிறாள். அது நடக்காமலே போய் அம்மு 31 வயதில் ஒரு லாட்ஜில் செத்துப் போகிறாள். எஸ்தா பள்ளிப் படிப்போடு நிறுத்தி விட்டு பேசாமல் அமைதியாகி விடுகிறான். ரஹேல் தில்லியில் வரைகலைப் பட்டம் படிக்கப் போய், ஒரு அமெரிக்கரை திருமணம் செய்து அமெரிக்கா போய் விடுகிறாள்.

எஸ்தாவின் தந்தை ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரப் போவதால் எஸ்தாவைத் திருப்பி அனுப்புகிறார். எஸ்தா திரும்பி வந்து விட்டதை பேபி அத்தை ரஹேலுக்குக் கடிதம் எழுதித் தெரிவிக்க ரஹேல் ஊருக்கு வந்து சேருகிறாள். ஊரில் வந்த பிறகு அவள் திரும்பிப் பார்ப்பதாக கதை வளர்கிறது.

ஜெனிஃபர்

 Rage of Angels

ஷிட்னி ஷெல்டன் எழுதிய "Rage of Angels"ன் அருமையான தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் ரா.கி. ரங்கராஜன். முன்பு குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. எங்கள் வீட்டில் பைண்ட் பண்ணி வைத்திருக்கிறார்கள். எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தபொழுது, இதை முதல் முறை படித்தேன். என் அண்ணன் இப்பவே ஜெனிஃபர் படிக்க ஆரம்பித்துவிட்டான் என்று கிண்டல் செய்தது ஞாபகம் இருக்கிறது.

ஜெனிஃபர் பார்க்கர், ஒரு இளமையான, புத்திசாலியான சட்டப் பட்டதாரி. படிப்பை முடித்த கையோடு நியூ யார்க்கின் தலைமை அரசாங்க வக்கீலான டிஸில்வாவிடம் உதவியாளராக சேர்கிறாள். முதல் நாளே அவள் செய்யும் ஒரு சிறிய தவறினால், கோர்ட்டில் டிஸில்வாவினால் தண்டனை வாங்கித் தரப்பட வேண்டிய, அமெரிக்காவின் மிகப்பெரிய மாஃபியா கும்பலின் தலைமை வாரிசாக உருவெடுத்து கொண்டிருக்கும் மைக்கேல் மாரெட்டி தப்பி விடுகிறான். அதனால் ஏற்பட்ட கடுங்கோபத்தில், டிஸில்வா ஜெனிஃபர் மீது குற்றஞ்சாட்டி, அவள் வக்கீல் தொழிலையே மேற்கொள்ள முடியாத நிலைக்கு, அவளை தள்ள நினைக்கிறார்.

மனம் வெறுத்து போயிருக்கும் நிலையில், அவளை விசாரிக்க வரும் ஆடம் வார்னர், அவள் ஒரு அப்பாவியென்று முடிவு செய்து, கருணை கொண்டு வழக்கிலிருந்து அவளை விடுவிக்கிறான். வழக்கிலிருந்து விடுபட்டாலும், வாழ்க்கையை ஓட்ட போதுமான வருமானமில்லாமல் கஷ்டப்படுகிறாள். யாரும் உதவியாளராக சேர்த்துக் கொள்ளாததால், அவளே ஒரு அலுவலகத்தை அமைத்து வக்கீல் போர்டை மாட்டிக் கொள்கிறாள்.

இதற்கிடையில் வார்னர் வந்து அவளை அடிக்கடி சந்திக்க, இருவருக்குமிடையில் காதல் மலரத் துடிக்கிறது. ஆனால் வார்னர் ஏற்கனவே திருமணமானவன். விருப்பமின்றி செய்து கொண்ட திருமணம். அதனால், அவனால் ஜெனிஃபர் மீதான காதலை தவிர்க்க முடியவில்லை.

ஒரு நாள் ஜெனிஃபருக்கு ஒரு கேஸ் கிடைக்கிறது. கொஞ்சம் கூட வலுவில்லாத கேஸ். ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லை என்ற நிலையிலும் ஒத்துக் கொள்கிறாள். இவள் ஒரு கேஸில் அஜராகிறாள் என்று தெரிந்த டிஸில்வா, கோபத்துடன் வேண்டுமென்றே எதிர்தரப்பில் ஆஜராகிறார். ஆனால் கடைசி நிமிட புத்திசாலித்தனங்களால் அந்த கேஸில் ஜெனிஃபர் ஜெயித்து விடுகிறாள். அரசாங்க வக்கீலான டிஸில்வாவையே தோற்கடித்ததால் கொஞ்சம் பெயர் கிடைத்து, கொஞ்சம் கேஸ்கள் வர ஆரம்பிக்கிறது.

வார்னருக்கும், ஜெனிஃபருக்குமான காதல் முற்றி கொண்டிருக்கும் வேளையில், ஜெனிஃபரும் ஒரு வெற்றிகரமான வக்கீலாக உருவெடுத்து கொண்டிருக்கிறாள். வார்னருக்கு ஸெனட் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. வார்னரின் மனைவி, தான் விட்டுக்கொடுத்து விவாகரத்து கொடுத்து விடுவதாக கூறி, ஜெனிஃபரை நம்பச் செய்து, தேர்தல் முடியும் வரை பொறுக்குமாறு கூறுகிறாள். ஆனால் இடையிலேயே, வார்னரின் ஒரு வீக் மொமன்ட்டில், அவனை மயக்கி, கர்ப்பம் தரித்து விடுகிறாள். அதனால் வார்னர் ஸெனட்டர் பதவியை தக்க வைத்து கொள்ள, ஜெனிஃபரை துறக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். ஆனால் ஜெனிஃபரும் அந்த நேரத்தில் கர்ப்பம் தரிக்கிறாள்.

யாருக்கும் தெரியாமல் குழந்தையை பெற்று, தனது வளர்ப்பு பையன் என்ற போர்வையில் வளர்க்கிறாள். இதற்கிடையில், மைக்கேல் மாரெட்டியும், ஜெனிஃபரின் வெற்றிகளை கவனிக்கிறான். அவளை தனது மாஃபியா கும்பலின் வக்கீலாக்குவதற்கு முயன்று தோல்வியடைகிறான்.

ஜெனிஃபரால் கைவிடப்பட்ட ஒரு குற்றவாளி, அவள் பையனை கடத்திவிட, அந்த நேரத்தில், வார்னரை உதவிக்கு அழைக்க முயன்று முடியாமல் கலங்கும்பொழுது, மாரெட்டியின் நினைவு வருகிறது. அவனும் எளிதாக குழந்தையை காப்பாற்றி கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனது மாஃபியா வலைக்குள் தெரிந்தே மாட்டிக்கொள்கிறாள். மாரெட்டியும் அவளை விரும்புகிறான். ஒரு நேரத்தில் அவள் குழந்தையும் ஒரு விபத்தில் இறந்து போகிறது.

இதற்குள், வார்னர் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து விடுகிறான். அதற்குள் மாரெட்டியின் மாஃபியா கும்பலின் நடவடிக்கைகளை ஒடுக்க வார்னர் முயல, மாரெட்டி வார்னரை கொல்ல திட்டமிடுகிறான். அது தெரிந்த ஜெனிஃபர் வார்னரை காப்பாற்ற கடைசி நொடியில், தன்னுடலில் தோட்டாவை வாங்கி சாய்கிறாள்.

அவள் பிழைத்து எழும்பொழுது வார்னர் ஜனாதிபதியாகிவிட, தனது வக்கீல் வாழ்க்கையை தொடர வெறுமையுடன் கிளம்புகிறாள்.






கேஸ்களில் ஜெயிப்பதற்கு ஜெனிஃபர் கையாளும் தந்திரங்கள், மிகவும் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, ஒரு கேஸை குறிப்பிட்ட காலத்துக்குள்தான் அப்பீல் செய்ய முடியும் என்பதை பயன்படுத்த எதிர்தரப்பு வக்கீல், அவளை சந்திப்பதை இழுத்தடித்து கொண்டே போக, கடைசி நாளில் ஜெனிஃபர் நேர வித்தியாசத்தை பயன்படுத்தி கேஸை அப்பீல் செய்வது, மிகவும் சுவாரஸ்யமான திருப்பம்.

ஷிட்னி ஷெல்டனின் கதைகளில் நான் படித்தவற்றுள், இது ஒரு வித்தியாசமான கதை

காதைக் கொடுங்கள்

(Seven Habits - 5)

எதிராளியைப் புரிந்து கொள்ள முயல்வோம்.

எல்லோருமே மனம் நிரம்பி வழியும் கவலைகளோடு உலாவுகிறோம். யாராவது நம்மைக் காது கொடுத்து கேட்டாலே மனது திறந்து விடுகிறது. இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அவர் கூடப் பேசினால் நேரம் போவதே தெரியாது என்று சொல்லும் நேரங்களில் எல்லாம் நாம்தான் அதிகம் பேசியிருப்போம். எதிராளி கேட்டுக் கொண்டிருந்திருப்பார்.

கேட்பது என்பது காது கொடுப்பது மட்டும் இல்லை.

பேசுபவரின் பொருளில் மனதை ஊன்றிக் கொள்ள வேண்டும். அவரது அனுபவத்தில் நாமும் மூழ்கிப் போய் அவரது உணர்வுகளை அனுபவிக்க வேண்டும். பொதுவாக ஒருவர் பேச ஆரம்பித்ததுமே, நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதிலேயே மூழ்கியிருக்கிறோமே ஒழிய அவரது பேச்சில் கவனம் இருப்பதில்லை.

அப்படிக் காதையும் மனதையும் கொடுத்து எதிர் தரப்பின் எண்ணங்களைக் கேட்டு விட்டாலே உறவுக்கான அடித்தளம் அமைந்து விடுகிறது.

நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்புமுடிவிலிருந்து தொடங்குதல
நேரத்தின் மதிப்பு
உறவுகளின் அடித்தள

சுவர்க்கத்துக்கு வழி

h2g2

ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம். The Hitch Hiker's Guide To The Galaxy (H2G2) எனப்படும் "அண்டத்தைச் சுற்ற ஊர்சுற்றிக்கு வழிகாட்டி" என்ற புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பு, அதைப் படித்த பின்பு என்று.

1.
நிகழ்ச்சி:
சென்னையில் 42 டிகிரி வெயில். இரு சக்கர வண்டியில் சாலை நிறுத்தத்தில் காத்திருந்து அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறோம். முன்னால் போகும் வண்டியின் சொதப்பலால் சிவப்பு வரும் முன்னால் கடக்க முடியாமல் இன்னும் 120 விநாடிகள் வெயிலில் நிற்க வேண்டியதாகி விட்டது.

H2G2க்கு முந்தைய வாழ்க்கை:
செம கடுப்பாகி முன்னே நிற்கும் வண்டி ஓட்டியை சபித்தபடி, முடிந்தால் இறங்கி நாக்கைப் புடுங்கிக்கிறது போல நான்கு கேள்வி கேட்டு, கொதித்துப் போக வேண்டும்.

H2G2க்கு பிந்தைய வாழ்க்கை:
விடை கீழே.

2.
நிகழ்ச்சி:
இந்துத்துவா இயக்கங்களின் அடாவடி என்று பதிவு எழுதி, அதற்கு வரும் பின்னூட்டங்களில் தாக்குதல்கள், பதில் எழுதி எழுதி கை வலி, ஒத்த கருத்து சொன்னவர்கள் மீது பாசம், எதிர்க் கருத்து சொன்னவர்கள் மீது இன்னொரு வகையான பாசம் என்று ஓடும் நாட்கள்

H2G2க்கு முந்தைய வாழ்க்கை:
ஒரே பரபரப்பு. எப்படியாவது சண்டை ஓய்ந்து விட வேண்டும் என்று தவிப்பு. அடுத்த பகுதியில் என்ன எழுத வேண்டும் என்று குறுகுறுப்பு. தூங்கப் போகும் போதும், எழுந்திருக்கும் போதும் ஒரு முறையாவது இதைப் பற்றி நொந்து கொள்வது.

H2G2க்கு பிந்தைய வாழ்க்கை:
விடை கீழே.

3.
நிகழ்ச்சி:
மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் வன்முறை. ஸ்டாலின் வாரிசாவாரா! கலைஞரின் வயதான பிறகும் குறைந்து விடாத குறும்பு(!) பேச்சுக்கள்

H2G2க்கு முந்தைய வாழ்க்கை:
என்ன அரசியல், என்ன நாடு, என்ன கட்சிகள் என்று சலித்துப் போய் மனமே தளர்ந்து போகிறது.

H2G2க்கு பிந்தைய வாழ்க்கை:
விடை கீழே.

4.
நிகழ்ச்சி:
அமெரிக்காவுக்கு அடிபணிய மாட்டோம் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தீரம். ஈரானிலிருந்து இயற்கை வாயு குழாய் அமைப்பதில் அமெரிக்கா மூக்கை நுழைக்க அனுமதிக்க மாட்டோம் என்று முரளி தியோரா முழக்கம்.

H2G2க்கு முந்தைய வாழ்க்கை:
ஆகா, என்ன வீரம். கொஞ்சம் முதுகெலும்பும் மிச்சமிருக்கிறதோ என்று நிறைவு.

H2G2க்கு பிந்தைய வாழ்க்கை:
விடை கீழே.

டக்ளஸ் ஆடம்ஸ் என்ற பிரித்தானியர் எழுதிய அறிவியல் புனைகதை இருபத்தைந்து ஆண்டுகளாக, 'ஏன் என்று கேள்வி கேட்கும் மக்களை' எல்லாம் மயக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறது. வானொலி தொடர், கதைப் புத்தகம், திரைப்படம் என்று பல வடிவங்கள் எடுத்த இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, வானமே இடிந்து விழுந்தாலும் புறங்கையால் ஒதுக்கிப் போட்டு விட்டுப் போய்க் கொண்டிருக்கும் புரிதல் கிடைத்து விடும்.
  1. பூமி எப்படி உருவானது?
  2. பூமியில் மனித இனம் மூன்றாவது புத்திசாலி இனம். முதலிரண்டு இடம் யார் யாருக்கு?
  3. இந்த உலகம், வாழ்க்கை, நடப்புகளுக்கு என்னதான் பொருள்?
  4. உலகத்தின் இறுதியில் என்ன இருக்கிறது?
இப்படி பெரிய பெரிய கேள்விகளுக்கெல்லாம் விடை அள்ளிக் கொடுக்கும் புத்தகத்தைப் படித்து, வாழ்க்கையின் மறுபக்கத்தையும் ஒரு தடவை எட்டிப் பார்த்து விடுங்கள்.

விடை:
மனதுக்குள் சின்ன சிரிப்பு சிரித்து விட்டு, அடுத்தது என்ன என்று வேலையைப் பார்க்கப் போய் விடுவோம்

கரித்துண்டு

மு வரதராசனார்

நான் முதல் முதலில் படித்த முழு நீள புத்தகம் மு.வ. வின் கரித்துண்டு. அதுவரை ஆனந்த விகடன் துணுக்குகள், சிறுகதைகள், குமுதம் ஆறு வித்தியாசம், ராணியில் சிறுவர் தொடர்கதை என்று போய்க் கொண்டிருந்த வாசிப்பு அனுபவத்துக்கு, கரித்துண்டு புதுக் கதவைத் திறந்து விட்டது. மதிய வேளையில் கண்ணயர விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்த என்னை வாய் மூட வைக்க அம்மா கையில் கொடுத்தது இந்தப் புத்தகம்.

அதில் கையாளப் பட்டிருந்த உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் அப்போது முழுவதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் தூய தமிழ்நடை, சேர்ந்தே ஒலித்த முற்போக்குப் பொதுவுடமைக் கருத்துக்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. தமிழில் எந்தக் கருத்தையும் பிறமொழிக் கலப்பின்றி இயல்பான சொற்களுடன் சொல்ல முடியும் என்று அவ்வளவாக சிந்திக்கத் தெரியாத வயதிலேயே பதித்து விட்டதற்கு முவவுக்கும் கரித்துண்டுக்கும் நன்றி.

ஏதோ, தெருவில் கரித்துண்டால் ஓவியம் வரைந்து காசு திரட்டும் ஓவியர், அவரைப் பார்த்துக்கொள்ளும் பொன்னி, அவளது குழந்தைகள், மழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் அவர்களது குடிசைப் பகுதி, இதையெல்லாம் கதை சொல்லும் திருவேங்கடம், அலுத்துக் கொள்ளும் அவர் வீட்டு அம்மா, திருவேங்கடம் சந்திக்கச் செல்லும் பேராசிரியர், திருவேங்கடத்தின் நண்பன் கம்யூனிச இயக்கத்தில் தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுவது, பேராசிரியரின் சீர்திருத்தக் கருத்துக்கள, முடிச்சுகளுக்கெல்லாம் முடிச்சாக பேராசிரியரின் துணைவிக்கும் கால் இல்லாத ஓவியருக்கும் இருக்கும் முன்கதைத் தொடர்பு என்று விரியும் கதையில் சின்ன வயதில் படிக்கப் பொறுமையில்லாத நீளமான பத்திகள்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு படித்துக் கதையைப் புரிந்து கொள்ள முயல்வேன். படித்த புத்தகத்தைப் புரியா விட்டால் திரும்பத் திரும்பப் படிக்கும் வழக்கமும் உண்டு. படிக்க வேறு ஒன்றும் கிடைக்காமல் மறு சுழற்சியில் படித்த புத்தகத்தின் முறை வருவதாலும் இருக்கலாம்.

எங்க அம்மாவைத் தவிர கரித்துண்டை முழுவதாகப் படித்த ஒரே உயிர் எங்கள் வீட்டில் நானாகத்தான் இருக்கும். ஏதாவது வரியை விட்டு விட்டால் ஏதாவது தவறி விடுமோ என்று மாய்ந்து மாய்ந்து படித்தது.

இந்த நூல் ஊட்டிய தமிழ்ப்பாலும், சமவுடைமை கொள்கைகளும் ஆழமாகப் பதிந்து விட்டன என்று தோன்றுகிறது. மோகன் என்ற ஓவியரின் முன்கதைப் பெயரிலான வாழ்க்கையில் கல்கத்தாவில் நடந்ததாக கடைசியில் வரும் நீளமான மடலில் விவரிக்கப்படும் உறவுகள் கதைக்கு வெறும் பின்னணி மட்டுமே, ஆசிரியரின் சமூக அக்கறையும், தமிழ்ச் சமூகத்தின் பிணிகளைத் தீர்த்து விட வேண்டும் என்ற ஆர்வமுமே நூலில் விஞ்சி நின்றதாக நினைவு

வெற்றிக்கு ஏழு பழக்கங்கள் - 4

Seven Habits 3 - Stephen Covey

சமூகத்தில் பிறருடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு முதலில் தன்னை சுதந்திர மனிதனாக, பிறரைச் சாராதவனாக உருவாக்கிக் கொள்வது அடிப்படைத் தேவை. சமூக வாழ்க்கை என்பது பிறரைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணியாக இல்லாமல், பிறருடன் சேர்ந்து செயலாற்றும் கூட்டு வாழ்க்கையாக அமைய வேண்டும்.

அதற்கு முதல் மூன்று படிகள் மூலம், நமது நோக்கங்களைத் தெளிவாக்கிக் கொண்டு நேரத்தை சரியான வழியில் செலவளிக்கப் பழகிக் கொள்கிறோம்.

அடுத்த மூன்று படிகளில் உறவினர்கள், நண்பர்கள், தொழில் சார்ந்த உறவினருடன் எப்படி உறவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகளைத் தெரிந்து கொள்வோம்.

4. இரண்டு தரப்பும் வெற்றி பெறும் வழியைப் பார்க்க வேண்டும்.
5. முதலில் அடுத்தவரைப் புரிந்து கொள்ள வேண்டும்.
6. 1+1 > 2
  • 'எதிராளி எப்படி வேண்டுமானாலும் போகட்டும், எனக்கு வேண்டியது கிடைத்தால் போதும்' win-lose
  • 'என்னை எல்லோரும் இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள். என் தலைவிதி இவ்வளவுதான், அவனே எல்லாம் எடுத்துக்கட்டும், நான் இப்படியே இருக்கிறேன்' lose-win
  • 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அவனுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும். கோர்ட்டில் வழக்கு போட்டு அவனை ஒரு வழி பண்ணி விடுகிறேன்' lose-lose
என்ற மூன்று வகை அணுகுமுறைகளும் நம்மைப் பின்னுக்கு இழுத்துப் போய் விடும்.

இரண்டு தரப்பினர் சேர்ந்து ஒன்றை செய்யும் போது இருவரும் அதில் தமக்கு நல்லது நடக்கிறது என்று நம்ப வேண்டும். win-win

எந்த சூழலிலும் இரண்டு தரப்புக்கும் நன்மை தரும் வழியைக் காண முயல வேண்டும். பேச ஆரம்பிக்கும் முன்னரே, 'இப்படி இரண்டு பக்கமும் நிறைவளிக்கும் வழி கிடைக்காவிட்டால், இந்த ஒப்பந்தமே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்வோம்' என்ற புரிதலையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது போல உறவுகளை ஏற்படுத்தும் முறைதான் நீண்ட கால நோக்கில் உதவும்.

மந்திரக் கம்பளம்

வாண்டு மாமா

நான் படித்த குழந்தைகளுக்கான கதைகளில் மிகச் சிறந்த கதை வாண்டு மாமா எழுதிய மந்திரக் கம்பளம் என்ற கதை. எங்கள் அப்பா கிராமம், மருங்கூரில் இருக்கும் சண்முகானந்தா நூலகத்தை முற்றுகை இட்டு ஒரு கோடை விடுமுறையில் அங்கு இருந்த, அந்த உயரப் பையன் படிக்கக் கூடியது, என்ற புத்தகங்கள் தீர்த்து விட்ட போது மாட்டாமல் பிறிதொரு காலத்தில் கிடைத்தது, கெட்டியாக அட்டை போடப்பட்ட இந்தப் புத்தகம்.

யாரோ செய்து குளறுபடியால் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புத்தகம் எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டிருந்தது. இந்தக் கதையை எத்தனை முறை படித்திருப்பேன் எனறு கணக்கே கிடையாது. சிறுவர்களுக்காக எழுதுகிறேன் என்று மழலை மொழியில், உயரத்திலிருந்து கொண்டு கதை சொல்லும் பாணி என்றுமே பிடித்ததில்லை. இந்தக் கதையில் முழு சிந்திக்கும் மனிதர்களாக குழந்தைகளை மதித்து எழுதியிருப்பார் வாண்டு மாமா.

நாட்டு நடப்புகளையும், மாயமந்திரக் காரர்களையும் கலந்து செய்து கதை. மந்தஹாச மஹாராஜா கோழை, சாப்பாட்டுப் பிரியர், சோம்பேறி. அவரது இளவயதில் எப்படி ஒரு இளவரசியை மந்திரவாதியின் பிடியிலிருந்து விடுவித்து கைப்பிடித்தார் என்பதிலிருந்து பிடிக்கும் விறுவிறுப்பு, கீர்த்தி வர்மன் தனது புத்திசாலித்தனத்தை மறைத்து வாழ வரம் கேட்கும் கடைசிப் பக்கம் வரை தளராமல் போகும்.

எல்லாப் பாத்திரங்களையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி, அவர்களது இயல்புகளுக்கு காரண காரியங்களைக் கற்பித்திருப்பார். வேட்டை என்ற பெயரில் போய் பயந்து கொண்டு குகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த மந்தஹாசரை, உள்ளே புகுந்த கொடுவிலங்கு தொந்தரவு செய்து முத்தம் கேட்க, தூங்க விட்டால் போதும் என்று கண்ணைத் திறக்காமலேயே முத்தம் கொடுத்து சாபத்தால் விலங்காகத் திரிந்து கொண்டிருந்த இளவரசியை மணம் பிடிக்கிறார். அதற்கு முந்தையவர்கள் உருவத்தைப் பார்த்துப் பயந்து உயிரிழக்கிறார்கள்.

ராணிக்கு இளம் பருவ அனுபவத்தால் மாயமந்திரங்கள் பிடிப்பதில்லை. பல நாளுக்குப் பிறகு கீர்த்திவர்மன் என்ற குழந்தை பிறக்கிறது. அழையாமலேயே சுற்றியுள்ள மந்திரவாதிகள், முனிவர்கள் வந்து ஆசீரவதித்துப் பரிசுகள் வழங்கிச் செல்ல, எல்லாவற்றையும் மூட்டை கட்டி அறையில் அடைத்து விடுகிறாள் ராணி. இளவரசன் கீர்த்திவர்மன் ஆசிகள் பெற்ற புத்திசாலியாக மிகத் திறமைசாலியாக வளர்ந்து மந்தஹாசருக்குக் கடுப்பேற்றுகிறான்.

அடுத்து இரண்டு தம்பிகள் வழக்கமான இளவரசர்களாக வளருகிறார்கள். தேவதைக் கதைகளில் அரக்கனைக் கொல்லச் சென்ற மூத்த மகன்கள் உயிரிழந்து இளைய மகன் வெற்றி வாகை சூடுவதை அறிந்த மன்னர் கீர்த்திவர்மனுக்காக அழிக்க ஒரு அரக்கனைச் சுட்டுகிறார். அதே காரணத்தைச் சுட்டிக் காட்டி தான் போக மறுத்து இளைய தம்பியை அனுப்பி விடுகிறான்.

ஒவ்வொரு கட்டத்திலும் கதையை வளர்த்திக் கொண்டு போகும் நேர்த்தி உயர் தர இலக்கியப் படைப்புகளுக்கு நிகரானது. இரண்டு தம்பிகளும் போய்த் திரும்பாமலிருக்க அப்போதும் கீர்த்திவர்மன் நகர மாட்டேன் என்கிறான். மன்னர் கோபம் கொண்டு வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு முடிவு எடுத்து நகரையே காலி செய்து கொண்டு கீர்த்திவர்மனை தனியே விட்டுக் கொண்டு போய் விடுகிறார்கள். வேறு யாருக்குமே அவனைப் பிடிப்பதில்லையாதலால் எதிர்ப்பு அதிகம் இல்லை. எல்லோரையும் தன் அறிவுக் கூர்மையால் வாட்டி எடுக்கும் பழக்கம்.

தனியே அரண்மனையில் ஒவ்வொரு அறையாகச் சுற்றிப் பார்த்து மந்திரப் பொருட்கள் அடைபட்டிருந்த அறையிலும் புகுந்து பொருட்களை அணிந்து கொண்டு குளறுபடிகள் நடந்து, பக்கத்து நகரில் பெண் சிநேகிதியைச் சந்தித்து, கடைசியாக தீரப் பயணம் மேற்கொண்டு குளிர் / தழல் அரக்கர்களை மோத விட்டுக் கொன்று வாகை சூடி வந்த பிறகு குட்டித் திருப்பத்துக்குப் பிறகு, தம்பிகளும் உயிர் பெற்று கதை சுபமாக முடிகிறது.

ஒரு நாள் குழந்தைகள் தூங்குவதற்காக இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்து, அவர்கள் தூங்கி விடக் கதையை நிறுத்தினால் பெரிய குழந்தையிடமிருந்த ஊம் சத்தம் வந்தது, கதையை முடித்து விடும்படி. பெரியவர்களுக்கும் கருத்தைக் கவரும் வண்ணம் எழுதப்பட்ட சிறுவர் கதைகள்தாம் உலக இலக்கிய வரலாற்றில் அழியா இடம் பெற்றுள்ளன. தமிழிலிருந்து வாண்டுமாமாவின் இந்தக் கதைக்கு அந்த மதிப்பு கிடைக்கும். ஆங்கிலத்தில் சரிவர மொழிபெயர்த்து வெளியிட்டால் ஒரு அலைஸ் இன் வொண்டர்லேன்டு போலவோ, டாம் சாயரின் குறும்புகள் போலவோ தனக்குரிய இடத்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இந்தக் கதைக்கு உண்டு

தரையில் இறங்கும் விமானங்கள்

இந்துமதி.

தொலைக் காட்சியில் தொடராக வந்தது பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அப்போது சென்னையில் படித்துக் கொண்டிருந்த அக்கா அந்தக் கதையையும் ரகுவரனின் நடிப்பையும் வெகுவாகப் புகழ்ந்து சொல்லியிருந்தாள். அப்போது எங்க ஊரில் சென்னைத் தொலைக்காட்சி வருவதில்லை. இப்படி ஒரு கதை இருக்கிறது, அது நன்றாக இருக்கும் என்று மட்டும் பதிந்திருந்தது.

சென்னைக்குப் படிக்க வந்து நூலகத்தில் அதன் பிரதி கிடைத்தது. தாம்பரம் காமராசர் நூலகம்தான் என்று நினைவு. நூறு பக்கங்களுக்குள் அடங்கி விடும் குறுநாவல் அளவுதான். மென்மையான மனதை வருடும் நடையில் படித்து முடித்து வேலை தேடும் இளைஞனின் தேடல்கள் அவன் வேலையில் அமர்வதோடு முடியும்.

விஸ்வம், அண்ணா, தம்பி ராம்ஜி, தங்கை அகிலா. அண்ணன் பள்ளிப் படிப்பை முடித்ததும் மேலே படிக்க வைக்க வசதி இல்லாமல் அவனது கனவுகளைக் குலைத்து தட்டச்சுப் பயில வைத்து கீழ்நிலை வேலையில் அமர்த்தி விடுகிறார் அப்பா. அவன் அத்தோடு முடங்கி விடுகிறான். தம்பிகளுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும் என்று தன்னைத் தேய்த்துக் கொண்டு படிக்க வைக்க அப்பாவுக்கு ஆதரவு தருகிறான்.

அவனைப் பார்த்து விஸ்வத்துக்கு ஒரு பரிதாபம். இப்படி ஒரு மனிதன் செக்குமாடாக, அன்றாட கட்டாயங்களுக்குப் பணிந்து இருக்க முடியுமா? அண்ணனுக்குப் பெண் பார்க்கப் போய் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்தில் அண்ணியாக வரப்போகிறவளைப் பார்த்ததும் விஸ்வத்தின் மனதில் இடி. இவ்வளவு அழகான ஒரு பெண்ணை இந்த முசுடுக்கு கட்டி வைத்தால் அந்த பெண் எப்படி வாழும். என்று கோபம் கோபமாக வருகிறது.

அண்ணி இலக்கியம் படிப்பவளாக எல்லோரையும் அன்பால் கட்டிப் போடுபவளாக வந்து விட, அம்மா மாரடைப்பில் போய் விடுகிறாள். அண்ணனின் ஆதரவில் விஸ்வம் நண்பர்களுடன் சுற்றுதல், குட்டைச் சுவரில் உலக இலக்கியங்களை துவைத்துக் காயப் போடுதல் என்று தவறாமல் செய்கிறான். அண்ணியுடன் நட்பு மலர்கிறது. இப்படி எல்லாம் பேசத் தெரிந்த இந்த அண்ணியை அண்ணன் வேலை வேலை என்று கண்டு கொள்வதே இல்லையே என்று மீண்டும் மனக்குமுறல்.

நண்பர்கள் சேர்ந்து இலக்கிய இதழ் கொண்டு வருகிறார்கள். அண்ணனுக்கு பூனாவுக்கு மாற்றல் வந்து விடுகிறது. 'விஸ்வம்தான் இனி வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். 'ஒம் மீது பாரத்தை இறக்கி விடக்கூடாது' என்று நினைத்தேன் என்று அண்ணன் உருகுகிறான். 'நான் பார்த்துக்கிறேன். அப்பா பார்த்து வைத்த வேலையில் சேர்ந்து கொள்கிறேன். நீ பூனாவிலாவது அண்ணியைக் கொஞ்சம் கவனி' என்கிறான் விஸ்வம்.

அண்ணன் முதலில் கிளம்பிப் போன பிறகு அண்ணி தன் குறையைச் சொல்கிறாள். 'உங்க அண்ணாவுக்கு நான் ஏதோ வானத்தில் இருந்து இறங்கி விட்டதாக நினைப்பு. உருவம் மட்டும்தான் அழகா. உங்க அண்ணனைப் போல அழகான மனம் எத்தனை பேருக்கு இருக்கும்' என்று சொல்லி விட்டு பூனே ரயிலேறிப் போகிறாள்.

இடையில் விஸ்வத்தின் ஆதரிசக் கொள்கைகளுக்கு முரண்படும் காதலி ஜமுனா.

நடுத்தர வர்க்க இளைஞனின் மனதுக்குள் புகுந்து எழுதியது போல இந்துமதி செய்து மாயாஜாலம் இது. அவரது பிற கதைகளைப் படித்தால் இவரா அவற்றை எழுதினார் என்று தோன்றும் அளவுக்கு பல படிகள் உயர்ந்து நிற்கும் கவிதை தரையில் இறங்கும் விமானங்கள்.

மோகமுள்

தி ஜானகிராமன்

  • 'பிள்ளைப் பருவ அறியாமைகள் கலைந்து நடைமுறை வாழ்க்கையாக எழுதப்பட்ட அரிய எழுத்தை முதல் முதலில்் சந்தித்தது, அதிலேயே கட்டுண்டு போனது' ஜானகிராமனின் மோகமுள்ளில்.
  • நல்லவன், கெட்டவன், நன்மை தீமை என்று கதைகள் இல்லாமல் மனிதர்களாக வடிக்கப்பட்ட கதைகளில் உணர்ந்து முதலில் படித்தது மோகமுள்.

அதற்கு முன்பே ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் போல படித்திருந்தாலும், அதெல்லாம் எங்கோ வேறு ஒரு உலகில் நடப்பதாக உருவகித்துக் கொண்டு படிப்பேன்.

மோகமுள்ளில்தான், கும்பகோணம் புழுதி பறக்கும் தெருவில் குடும்பக் கிளைகள் தேடும் சாஸ்திரிகளில் ஆரம்பித்து, பாபு என்ற 'சின்ன்னப்' பெயரைக் கொண்ட நாயகனின் மன ஓட்டங்களில் மாட்டிக் கொண்டு மிதந்து போன அனுபவங்கள் மறக்க முடியாதவையாக மனதில் உறைந்து போயின.

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பட்ஸ் போஜன் உணவு விடுதி கட்டிடத்தில் மாடியில் ஒட்டுக் குடித்தனமாக இருந்த / இருக்கும் காமராசர் நினைவு நூலகம்தான் கல்லூரியில் படிக்கும் போது இந்த நூலை முதலில் மடியில் போட்டது. அப்புறம் வேலைக்குப் போய் சொந்தப் பிரதி வாங்கி நினைக்கும் போதெல்லாம் கைக்கு வந்த பகுதியைப் பிரித்துப் படிக்கும் போதும் ஒவ்வொரு முறையும் ஜானகிராமனின் எழுத்து கட்டிப் போடும்.

கும்மோணம் கல்லூரியில் படிக்கும் பாபு, அவன் தோழன் ராஜம், பாபநாசத்தில் இருக்கும் அப்பா, அம்மா, அக்கா, பக்கத்து வீட்டு இரண்டாம்தார இளம்பெண்ணுடனான உறவு, ஜமுனா எனப்படும் யமுனாவின் மீதான காதல், அக்கா கணவர், அக்கா பெண், ராஜத்தின் அப்பா, பாட்டு ஆசிரியர் என்று யாரையும் விட்டு விட முடியாது. கூடப் படிக்கும் வெங்கட் ராமன் என்ற எழுத்தாள நண்பனிலிருந்து, சென்னையில் குடியிருக்க வீடு கொடுத்த வீட்டுக்காரர், நாக்கைத் துருத்திக் கொண்டு படம் போடும் விளம்பர நிறுவன ஓவியக் காரர், பகல் பொழுதில் தூங்கும் மகளிர் விடுதித் தலைவி என்று ஒரே கட்டம் வந்து போகிறவர்கள் கூட முழு மனிதர்களாக உருப்பெறுவார்கள் இந்தக் கதையில்.

சங்கு என்ற பெரியப்பா பிள்ளை, யமுனாவைப் பெண் பார்க்க வரும் வரன்கள், தரகர், பிரபல பாடகராக விளங்கும் குருவின் சிஷ்யன் ராமு அண்ணா, மராத்தி பாடகர்கள் என்று மனிதர்களால் நிரம்பிய எழுத்து இந்த மோகமுள்.

திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன். அதைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. தேடிப் போகவும் துணிவில்லை. கதை பின்னிய சித்திரங்களைக் குலைத்து விடாது என்று உறுதியாகத் தெரிந்தால் பார்க்கலாம். ஐந்திணைப் பதிப்பகத்தின் வெளியீட்டில் படங்கள் கூ டச் சேர்க்காமல் சொந்தக் கற்பனையிலேயே படித்த முகங்கள் மோகமுள்ளின் மனிதர்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்தம். சிலருக்கு அம்மா வந்தாள்தான் மிகச் சிறந்தது. என்னைப் பொறுத்த வரை மோகமுள்தான் ஜானகிராமனின் மாஸ்டர்பீஸ். நாடகத்தன்மை இல்லாமலேயே உலக இயல்புக்கு மாறுபட்ட நடப்புகளை சொல்லிக் கொண்டு போய் விடுவார் அவர்.

பாபு விளம்பர நிறுவன வேலையை விட்டு விடும் போதும், கச்சேரி செய்வதை நினைத்துப் பார்க்கக் கூட மறுக்கும் போது, சங்கீத ஆசிரியரின் மனைவிக்கு பணம் அனுப்பும் போதும், கடைசிக் கட்டமாக எல்லாவற்றையும் உதறி விட்டு மகாராஷ்டிரம் போய் குரலைப் பண்படுத்தக் கிளம்பி விடும் போதும், யமுனாவுடன் காஞ்சிபுரத்தில் சுற்றும் போதும், ஆரம்பக் கதையில் பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் தொடர்பு கொள்ளும் போதும் கதை என்ற உயரத்தை உடைத்து சாதாரண வாழ்வில் நிகழ்ச்சிகளைக் கொடுத்து செல்வார் ஜானகிராமன்.

தமிழுக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் தனது குறிக்கோள் என்று கவிஞர் வைரமுத்து சொல்வார். தமிழில் நோபல் பரிசு வாங்கும் தகுதியோடு எழுதப்பட்ட எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் ஜானகிராமன். அத்தகைய படைப்புகளில் முதல் இடம் மோகமுள்ளுக்கு நிச்சயமாக உண்டு.

ஒரு உண்மை மனிதனின் கதை

பரீஸ் பலவோய்

சின்ன வயதில் படித்த தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சோவியத் ரஷ்யக் கதை. நாயகனின் பெயர் கூட அரைகுறையாகத்தான் நினைவிலிருக்கிறது. அலெக்ஸெய் என்ற பெயர்.

எங்கள் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளியிருந்து கல்லூரி பேராசிரியரின் குட்டி நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்து படிப்பேன். அதில் இது கிட்டத்தட்ட என் புத்தகமாக மாறி விட்டது போல எத்தனை முறை படித்திருப்பேன் என்று கணக்கே இல்லை. கடைசியில் ஒரு முறை மூச்சைப் பிடித்துக் கொண்டு உரிய இடத்தில் சேர்த்து விட்டேன்.

சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்கள் சேர்ப்பு இளகி தாளாக வந்து விடுவது சீக்கிரம் நடக்கும். கடைசியாக நான் படித்தது தாள் தாளாகத்தான். வளர்ந்து புத்தகம் வாங்கும் வசதி வந்த பிறகு நியூ செஞ்சுரி புத்தகக் கடையில், இணையத்தில் எங்கும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. நூலின் ஆசிரியரின் ஆங்கிலப் பெயர் தெரியாததும் ஒரு பிரச்சனை. இதை எழுதவதற்காகத் தேடியபோது அமேசானில் கிடைத்தே விட்டது :-)

அலெக்ஸெய் இரண்டாவது உலகப்போரின் போது சோவியத் விமானப் படையில் விமான ஓட்டியாக இருக்கிறான். கதையின் ஆரம்பமே அவனது விமானம் அடிபட்டு காட்டில் விழுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. மனித நடமாட்டமே இல்லாத பனிக்காட்டில் குளிர் காலத்தில் இவன் உயிர் மட்டும் பிழைத்து காலில் பலத்த அடிபட்டு மாட்டிக் கொள்கிறான்.

அடுத்த பதினைந்து நாட்களுக்கு (என்று பின்னால் கணக்கு தெரிகிறது) ஊர்ந்து ஊர்ந்து கடுங்குளிரில் உணவு இல்லாமல், எதிரிப் படைகளைத் தவிர்த்து நகர்ந்து கொண்டே இருக்கிறான். வழியில் சாப்பிட எறும்புகள், கொட்டைகள் என்று கையில் கிடைத்ததை சாப்பிடுகிறான். குடிக்கத் தண்ணீர் சூடு பண்ண முடியாமல் பனி நீரைக் குடிக்கிறான்.

கால்கள் மட்டும் கவலை தருகின்றன. நம்பிக்கை எல்லாம் இழந்த நிலையில் சிறிய கிராமத்து சிறுவர்கள் அவனைப் பார்த்து அந்த கிராமத்து மக்களால் எடுத்துச் செல்லப்படுகிறான். கொடிய வறுமைக்கிடையேயும், நாட்டுப்பற்றுடன் கிராமத்தார் அவனுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். விமானப்படை விமானம் வந்து அவனை மாஸ்கோ அழைத்துச் செல்கிறது.

மாஸ்கோ மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை நடக்கிறது. கால்கள்தான் கவலை தருகின்றன. கடைசியில் வேறு வழியில்லாமல் இரண்டு கால்களையும் துண்டித்து விட மருத்துவர் முடிவு செய்கிறார். விமானம் ஓட்டுவதே ஒரே கனவாக இருக்கும் அலெக்ஸெய்க்கு வாழ்வே இருண்டு விடுகிறது.

இதற்கிடையில் சோவியத் மக்களின் தீரம், வீரம் பற்றிய கிளைக் கதைகள் ஓடுகின்றன. கால்கள் போய் விட்டன. அவனை ஆறுதல் படுத்த, சக நோயாளி ஒருவர், முதலாம் உலகப் போரில் ஐரோப்பாவில் செயற்கை பாதத்துடன் விமானம் ஓட்டிய விமானியைக் குறித்த செய்தியை எடுத்துச் சொல்லி, நீயும் மீண்டும் விமானி ஆகலாம் என்று நம்பிக்கை தரப் பார்க்கிறார். (சுதா சந்திரன் நடித்த மயூரி படம் போல்)

'அவருக்கு ஒரு பாதம் மட்டும்தான் இல்லை, ஓட்டியதோ டப்பா வகை விமானம், இரண்டு காலும் இல்லாத நான் இன்றைய நவீன விமானங்களை ஓட்டுவது நடக்கிற ஒன்றா?'

'நீ சோவியத் வீரனாச்சே, அவர் பாதம் இல்லாமல் சின்ன விமானம் ஓட்டினால், ஒரு சோவியத் வீரன் கால்கள் இல்லாமல் சண்டை விமானம் இயக்க நிச்சயம் முடியும்'

நம்பிக்கை பிறந்து மரக்கால்களுடன் விமானம் ஓட்டலாம் என்று முடிவு செய்கிறான். மரக்கால்களைப் பொருத்திக் கொண்டு அடி மேல் அடியாக, வலி பொங்க பழகுவது, மருத்துவமனையில் எல்லோரும் அவனை ஊக்குவிப்பது, அவனைப்பற்றி உயர்வான பரிந்துரை கடிதம் கொடுப்பது, படைவீரர் உடல் தேர்ச்சி பெறும் மையத்துக்குப் போவது, அங்கு ஒவ்வொன்றாக நண்பர்களைப் பெற்று அவன் உறுதியை எல்லோரும் உணர்வது, நடனம் ஆடுவது முதல் படி என்று நடன வகுப்பில் சேர்வது, நடன ஆசிரியை இவனுக்காக சிறப்பு உதவிகள் செய்வது என்று ஒவ்வொரு கட்டத்திலும் நினைத்த குறிக்கோளை, மலை போன்ற இடையூறுகளை தாண்டி அடைந்து விடுவது என்ற அலெக்ஸெயின் உறுதி வெளிப்படுகிறது.

கால்கள் போய் விட்டதை கிராமத்தில் இருக்கும் தன் அம்மாவுக்கும் காதலிக்கும் எழுதாமலேயே இருந்து விடுகிறான். மீண்டும் சண்டை விமானம் ஓட்ட முடிந்து பிறகு அவர்களுக்கு தெரிந்தால் பழுதில்லை என்று சமாதானப் படுத்திக் கொள்கிறான்.

இவனது உறுதி தெரிந்தாலும், ஒரு விரல் மட்டும் இல்லாமலிருந்தாலே சேர்த்துக் கொள்ளாத படை வீரர் தேர்வில் இவனுக்கு என்ன வாய்ப்பு என்று எல்லோரும் அவநம்பிக்கைப் படுகிறார்கள்.

அலுவலகம், அலுவலகமாக ஏறி இறங்கி பல அதிகாரிகளைச் சந்திக்கிறான். யாருக்கும் இல்லை என்று சொல்ல மனமில்லாமல் அடுத்த நிலைக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் தனது உறுதியையும் மரக்காலால் நடனம் ஆட முடிவதையும் கூட காட்டுகிறான். கடைசியில் முடிவு எடுக்கக் கூடிய ஒரு அதிகாரி இவன் நச்சரிப்பு தாங்காமல் விமானப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவில் கையெழுத்திடுகிறார்.

அங்கும் தடைகளை மீறி பயிற்சி விமானத்தில் ஏறி விடுகிறான். ஓட்டும் போதுதான், என்னதான் இருந்தாலும் மரக்கால் மூலம், மனிதனும் இயந்திரமும் ஒன்றாக உணரும் வசதி கிடைக்கவில்லை என்று உணர்கிறான். ஓட்டி இறங்கும் போது மற்றவர்கள் இவனை ஊக்குவிக்க பாராட்டினாலும், எல்லோருக்கும் குறை தெரிந்தே இருக்கிறது.

எரிபொருள் பற்றாக்குறையான அந்தப் போர்க் காலத்திலும் இவனுக்காக கூடுதல் பயிற்சி வழங்க உத்தரவிடுகிறார் (சோவியத் பெரிய மனம்). தினமும் ஓட்டி ஓட்டி, ஒரு நாள் பறக்கும் போது, மரக்காலின் ஊடே பறவையுடன் இணைப்பை உணர்ந்து விடுகிறான். அன்றைக்கு வாழ்க்கையின் கொண்டாட்ட நாள் அவனுக்கு.

சண்டைப் படைக்கு அனுப்பப்பட்டு தீவிர விமானச் சண்டையில் ஈடுபட்டு எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தி, வீரதீரம் காட்டி தான் முழுமையான விமானி என்று நிலைநாட்டி விடுகிறான்.

நினைத்ததை அடைவதற்கு எந்தத் தடையும் இடையூறாக இருக்க முடியாது. மன உறுதியும் விடாமுயற்சியும் இருந்து விட்டால் கனவுகள் நனவாவது நடந்தே தீரும்.

உரை வடிவம் இணையத்தில்

போரும் அமைதியும்

லியோ டால்ஸ்டாய்

'இது நாவலா, தத்துவ நூலா, வரலாற்று நூலா, ஆராய்ச்சிக் குறிப்பா?' என்ற கேள்விக்கு, எதிலுமே சேராத ஒரு புது இனம் என்று அதன் ஆசிரியராலேயே சொல்லப்பட்ட படைப்பு போரும் அமைதியும் என்ற வரலாற்று நிகழ்ச்சிகளை ஒட்டிய வாழ்க்கைக் கதை. உண்மைச் சம்பவங்கள் எங்கு முடிந்து கதை எங்கு ஆரம்பிக்கின்றது என்று சொல்ல முடியாத இயல்பான நூல் இது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த லியோ டால்ஸ்டாய்அதே நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் நடந்த நிகழ்ச்சிகளை அந்த ஆண்டுகளில் வாழ்ந்த உயர்தட்டு குடும்பங்களையும் பின்பற்றி எழுதிய இந்த நூலில் பண்ணையார் டால்ஸ்டாய் என்று ஆசிரியரின் தாத்தா ஒருத்தரும் ஓரிரு கட்டங்களில் தலை காட்டுகிறார்.

  • போர் நடத்தப்படும் முறைகள், போர் முனையில் நிலவும் குழப்பங்கள், ஏதோ நடந்தது என்று குழம்பி அறிக்கை தயாரிக்கும் போது எப்படி நடந்திருக்கும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறதோ அதை அறிக்கையாக அளித்து விடுவது, அதை அடிப்படையாகக் கொண்டு திட்டம் தீட்டும் வாய்ச்சொல் வீரர்கள் என்று போர்க்கலையை வெளுத்து வாங்குவது ஒரு பக்கம்.
  • இளம்பெண்களுக்கு திருமணம் நடக்கும் வழிமுறைகள், இள வயது ஆண்களின் வாழ்க்கை முறை, அடிமைகள் (வேலைக்காரர்கள்) என்பவர்கள் ஏதோ விலங்குகள் போல ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத கதை ஓட்டம், திருமண உறவுகள், அரண்மனை அரசியல்கள் என்று சமூகத்தின் இரண்டாம் பக்க விவகாரங்கள் இன்னொரு பக்கம்.
  • பண்ணையார் மகள் நடாஷாவின் குடும்பத்தின் மூலம், குந்தித் தின்னும் தந்தை, யாரை நோவது என்று தெரியாத தாய், படையில் உயர் அதிகாரியாகச் சேர்ந்து போர்முனையில் பணிபுரியும் மூத்த மகன், பதினைந்து வயதிலேயே சண்டைக்குப் போய் உயிரை தேவையில்லாமல் விடும் கடைக்குட்டிச் செல்ல மகன், வீட்டிலேயே வளரும் ஏழை உறவுப் பெண் இவர்களின் நண்பர்கள் மூலம் பல்வேறு முனைகளையும் இயல்பாக படம் பிடித்துக் காட்டுவது பிறிதொரு கோணம்.
  • குண்டாக கண்ணாடி போட்டுக் கொண்டு அசடாக ஆனால் அதிகமாக யோசிக்கும் பீட்டர். வட்டார ஆட்சிப் பதவிக் குடும்பத்தின் ஆண்ட்ரூ போல்கோன்ஸ்கி, அவனது தந்தை வயதாகி அரைக்கிறுக்காகி விட்ட செல்வாக்கு நிறைந்த முன்னாள் படைத்தலைவர், ஆண்ட்ரூவின் தங்கை அழகற்ற மேரி என்று இன்னொரு குடும்பத்தையும் இணைத்து நான்காவது கோணத்தில் கதையை நகர்த்துகிறார்.
  • இதற்கிடையில் ஜார் மன்னர் அலெக்சாண்டர், நெப்போலியன் போன்ற வரலாற்றுப் பாத்திரங்களையும் மனிதப் பிறவிகளாக கதைக்குள் கொண்டு வந்து ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிய முத்துக்களாக அள்ளிக் கொடுக்கும் அற்புதமான படைப்பை விட்டுச் செல்கிறார் டால்ஸ்டாய்.
அன்னா கரெனினா, புத்திசாலித்தனமாக திட்டமிடப்பட்டு எழுதப்பட்ட நாவல். போரும் அமைதியும் ஆசிரியரின் மூலம் தானே எழுதிக் கொண்டது போல் இயல்பாகப் பாய்ந்து ஓடும் நூல்.

தமிழில் கல்கி அலைஓசை எழுதியது போல வரலாற்று நிகழ்ச்சிகளுடன் கதையின் பாத்திரங்களையும் கலந்து எழுதிய நூல் இது. சீதாவும், சூர்யாவும், தாரிணியும் கற்பனையிலா வாழ்ந்தார்கள்! அதே போல், நடாஷாவும் மேரியும், பீட்டரும், சோனியாவும் வாழ்ந்த கதை, படிக்கப் படிக்க அலுக்காத ஒன்று.

  • ஆண்ட்ரூவுடன் நிச்சயம் ஏற்றுக் கொண்டு, அரைக்கிறுக்கு கிழவரால் வற்புறுத்தப்பட்ட ஓராண்டு பிரிவில் மனம் குழம்பி, அனடோல் என்ற போக்கிரியின் வலையில் விழவிருந்து, ஆண்ட்ரூவின் மரணப் படுக்கையில் மீண்டும் மனமிணைந்து, அவன் மரணத்துக்குப் பிறகு பீட்டரைக் கடைசியாக வாழ்க்கைத் துணையாகக் கைப்பிடிக்கிறாள் நடாஷா.
  • முதல் முறை படிக்கும் போது, அவளது பிள்ளைப் பருவத்துக் காதலன் போரிஸ்தான் கதையின் நாயகனோ என்று விறுவிறுப்பாகப் படித்தால் குடும்பப் பெருமை போதுமான அளவு இல்லாத அவனுக்கு அந்த நாள் உயர் சமூகத்தில் இடமே இல்லை. அதே போல் நடாஷா வீட்டில் வளரும் ஏழை உறவு சோனியா நடாஷாவுக்கு இளைத்தவளாகவே எப்போதும் இருக்கிறாள்.
  • நடாஷாவின் அக்கா வேரா, பெர்க் என்ற ரஷ்யப் பணியில் இருக்கும் ஜெர்மன் படைஅலுவலரை மணக்கிறாள். அவர்களது வீட்டில் ஏற்பாடு செய்யும் மாலை விருந்தைப் பற்றி டால்ஸ்டாய் எழுதியிருப்பது இன்றைக்கும் நடக்கும் எலிப் போட்டிகளுடன் சரியாக ஒத்துப் போகிறது.
கடைசியில் பிற்சேர்க்கை என்ற பெயரில் சுபம் போட்டு முடித்து விட வேண்டிய கட்டத்தையும் தாண்டி நடாஷா-பீட்டர், நிக்கோலஸ்-மேரி தம்பதிகளின் மகிழ்ச்சியான குடும்பச் சூழலையும், அதை ஒட்டி அன்றைய அரசியல் நிலவரங்களையும் சொல்ல கதையை ஒரு சுகமான ஆச்சரியமாக வளர்த்துப் போவார். கடைசியில் மனித வரலாற்றின் ஓட்டத்தை அலசிப் பிழிந்து காயப் போடும் தத்துவ விசாரணையோடு நூல் நிறைவு பெறும்.

இது போன்ற நூல்களின் சரியான மொழிபெயர்ப்பைப் படிப்பது என்று கவனமாக இருக்க வேண்டும். ஒரே மூல கதையை அதன் உயிரெல்லாம் விட்டு விட்டு சக்கையாக மொழிபெயர்த்தவர்களுக்கிடையே, மொழிபெயர்ப்பும் காலம் கடந்து நிற்பதாக இருக்க வேண்டும்.

எக்காலத்துக்கும் பொருந்தும், மனித இனம் தோன்றிய நாளிலிருந்து கூத்தாடும் வன்முறை, காதல், மகிழ்ச்சி, உழைப்பு, பாசம், வலி, கண்ணீர், பயம் என்ற உணர்ச்சிகளை அடையாளம் காட்டும் இந்த நூல் காலத்தால் அழியா வரம் பெற்ற படைப்புகளின் வரிசையில் இடம் பெறுகிறது.

விளையாட்டு கணிதம்

யா.பெரல்மான்

என் சிறுவயதிலிருந்தே இந்த புத்தகம் எங்கள் வீட்டிலிருக்கிறது. "Mathematics Can Be Fun" இதன் ஆங்கில மொழியாக்கம் என்று நினைக்கிறேன். "Arithmetic for entertainment" ஆகவும் இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை. ரஷ்ய மூல நூலின் பெயர் தெரியவில்லை.

கணிதத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டதற்கு இந்த புத்தகம் மிக முக்கிய காரணம். இந்த புத்தகம் கணிதம் சொல்லித் தரவில்லை. மாறாக உணர வைத்தது.

முதல் அத்தியாயத்தில் பன்னிரெண்டு கணிதப் புதிர்கள் சுவாரஸ்யமான கதைகளாக சொல்லப்பட்டிருக்கும். அவற்றுக்கான விடைப் பகுதியில், இப்பொழுது வரும் கணித புத்தகங்கள் போல விடைகள் மட்டுமில்லாமல், எப்படி அந்த விடைகள் வரும் என்ற விளக்கமும் எளிமையாக புரியும்படி இருக்கும். தேவையான இடங்களில் அழகான கோட்டுச்சித்திரங்கள், நம்மை அந்த கணித உலகுக்குள் ஒரு பிரமிப்புடன் இட்டுச் செல்லும். எண்கணிதம், வடிவகணிதம், சாத்தியக்கூறு என்று கணிதத்தின் பல பிரிவுகளையும் தொட்டுச் செல்கிறார் பெரல்மான். இதில் அசுர எண்கள் என்ற தலைப்பின் கீழ் வரும் கதைகளும், உதாரணங்களும் மிக மிக சுவையானவை.

இப்பொழுது அடிக்கடி நடக்கும் ஆட்களை சங்கிலியில் இணைக்கும் வியாபாரம் போல, அப்பொழுதே ரஷ்யாவில் நடந்த ஒரு விவகாரத்தை குறிப்பிட்டு, அதற்கு சின்னதாய் ஒரு கணக்கும் போட்டு, இந்த மாதிரி சங்கிலித் தொடர் வியாபாரம் எவ்வளவு பெரிய மோசடி வேலை என்று விளக்கியுள்ளார். இதை படித்திருந்ததால், கல்லூரி பயிலும் பொழுது, இது போன்ற ஒரு வியாபாரத்திலிருந்து தப்பித்திருக்கிறேன்.

இந்த புத்தகத்தில் எனக்கு புரியாதது இரண்டாவது அத்தியாயம்தான். இந்த அத்தியாயத்தில் ரஷ்யாவிலும், சீனாவிலும் புகழ்பெற்ற விளையாட்டான டொமினோ ஆட்டம் குறித்த புதிர்களும், விளக்கங்களுமாய் இருக்கும். இந்த ஆட்டம் பற்றி நமக்கு தெரியாதாகையால், அந்த அத்தியாயம் இன்றுவரை எனக்கு புதிராகவே இருக்கிறது.

முன்னேற்ற பதிப்பகத்தார் பதிப்பித்த இந்த புத்தகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வாங்கப்பட்டதென்று, அதிலிருந்த முத்திரை மூலம் ஊகித்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக இந்த புத்தகத்தை நீங்கள் இப்பொழுது வாங்க முடியாது. ஏற்கெனவே யாரிடமாவது இருந்து, அவர்களிடமிருந்து கடன் வாங்கினால்தான் உண்டு! எதாவது நூலகத்தில் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம். இணையத்தில் நான் தேடிப்பார்த்த வரையில் கிடைக்கவில்லை.ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு அமேசானில் கிடைக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பு உங்களுக்கு கிடைத்தால் எனக்கு தெரிவிக்கவும். ஏனென்றால் எனது பிரதியும் எங்கோ தொலைந்து போய்விட்டது

ஜெனிஃபர்

Rage of Angels

ஷிட்னி ஷெல்டன் எழுதிய "Rage of Angels"ன் அருமையான தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் ரா.கி. ரங்கராஜன். முன்பு குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. எங்கள் வீட்டில் பைண்ட் பண்ணி வைத்திருக்கிறார்கள். எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தபொழுது, இதை முதல் முறை படித்தேன். என் அண்ணன் இப்பவே ஜெனிஃபர் படிக்க ஆரம்பித்துவிட்டான் என்று கிண்டல் செய்தது ஞாபகம் இருக்கிறது.

ஜெனிஃபர் பார்க்கர், ஒரு இளமையான, புத்திசாலியான சட்டப் பட்டதாரி. படிப்பை முடித்த கையோடு நியூ யார்க்கின் தலைமை அரசாங்க வக்கீலான டிஸில்வாவிடம் உதவியாளராக சேர்கிறாள். முதல் நாளே அவள் செய்யும் ஒரு சிறிய தவறினால், கோர்ட்டில் டிஸில்வாவினால் தண்டனை வாங்கித் தரப்பட வேண்டிய, அமெரிக்காவின் மிகப்பெரிய மாஃபியா கும்பலின் தலைமை வாரிசாக உருவெடுத்து கொண்டிருக்கும் மைக்கேல் மாரெட்டி தப்பி விடுகிறான். அதனால் ஏற்பட்ட கடுங்கோபத்தில், டிஸில்வா ஜெனிஃபர் மீது குற்றஞ்சாட்டி, அவள் வக்கீல் தொழிலையே மேற்கொள்ள முடியாத நிலைக்கு, அவளை தள்ள நினைக்கிறார்.

மனம் வெறுத்து போயிருக்கும் நிலையில், அவளை விசாரிக்க வரும் ஆடம் வார்னர், அவள் ஒரு அப்பாவியென்று முடிவு செய்து, கருணை கொண்டு வழக்கிலிருந்து அவளை விடுவிக்கிறான். வழக்கிலிருந்து விடுபட்டாலும், வாழ்க்கையை ஓட்ட போதுமான வருமானமில்லாமல் கஷ்டப்படுகிறாள். யாரும் உதவியாளராக சேர்த்துக் கொள்ளாததால், அவளே ஒரு அலுவலகத்தை அமைத்து வக்கீல் போர்டை மாட்டிக் கொள்கிறாள்.

இதற்கிடையில் வார்னர் வந்து அவளை அடிக்கடி சந்திக்க, இருவருக்குமிடையில் காதல் மலரத் துடிக்கிறது. ஆனால் வார்னர் ஏற்கனவே திருமணமானவன். விருப்பமின்றி செய்து கொண்ட திருமணம். அதனால், அவனால் ஜெனிஃபர் மீதான காதலை தவிர்க்க முடியவில்லை.

ஒரு நாள் ஜெனிஃபருக்கு ஒரு கேஸ் கிடைக்கிறது. கொஞ்சம் கூட வலுவில்லாத கேஸ். ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லை என்ற நிலையிலும் ஒத்துக் கொள்கிறாள். இவள் ஒரு கேஸில் அஜராகிறாள் என்று தெரிந்த டிஸில்வா, கோபத்துடன் வேண்டுமென்றே எதிர்தரப்பில் ஆஜராகிறார். ஆனால் கடைசி நிமிட புத்திசாலித்தனங்களால் அந்த கேஸில் ஜெனிஃபர் ஜெயித்து விடுகிறாள். அரசாங்க வக்கீலான டிஸில்வாவையே தோற்கடித்ததால் கொஞ்சம் பெயர் கிடைத்து, கொஞ்சம் கேஸ்கள் வர ஆரம்பிக்கிறது.

வார்னருக்கும், ஜெனிஃபருக்குமான காதல் முற்றி கொண்டிருக்கும் வேளையில், ஜெனிஃபரும் ஒரு வெற்றிகரமான வக்கீலாக உருவெடுத்து கொண்டிருக்கிறாள். வார்னருக்கு ஸெனட் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது. வார்னரின் மனைவி, தான் விட்டுக்கொடுத்து விவாகரத்து கொடுத்து விடுவதாக கூறி, ஜெனிஃபரை நம்பச் செய்து, தேர்தல் முடியும் வரை பொறுக்குமாறு கூறுகிறாள். ஆனால் இடையிலேயே, வார்னரின் ஒரு வீக் மொமன்ட்டில், அவனை மயக்கி, கர்ப்பம் தரித்து விடுகிறாள். அதனால் வார்னர் ஸெனட்டர் பதவியை தக்க வைத்து கொள்ள, ஜெனிஃபரை துறக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். ஆனால் ஜெனிஃபரும் அந்த நேரத்தில் கர்ப்பம் தரிக்கிறாள்.

யாருக்கும் தெரியாமல் குழந்தையை பெற்று, தனது வளர்ப்பு பையன் என்ற போர்வையில் வளர்க்கிறாள். இதற்கிடையில், மைக்கேல் மாரெட்டியும், ஜெனிஃபரின் வெற்றிகளை கவனிக்கிறான். அவளை தனது மாஃபியா கும்பலின் வக்கீலாக்குவதற்கு முயன்று தோல்வியடைகிறான்.

ஜெனிஃபரால் கைவிடப்பட்ட ஒரு குற்றவாளி, அவள் பையனை கடத்திவிட, அந்த நேரத்தில், வார்னரை உதவிக்கு அழைக்க முயன்று முடியாமல் கலங்கும்பொழுது, மாரெட்டியின் நினைவு வருகிறது. அவனும் எளிதாக குழந்தையை காப்பாற்றி கொடுக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனது மாஃபியா வலைக்குள் தெரிந்தே மாட்டிக்கொள்கிறாள். மாரெட்டியும் அவளை விரும்புகிறான். ஒரு நேரத்தில் அவள் குழந்தையும் ஒரு விபத்தில் இறந்து போகிறது.

இதற்குள், வார்னர் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து விடுகிறான். அதற்குள் மாரெட்டியின் மாஃபியா கும்பலின் நடவடிக்கைகளை ஒடுக்க வார்னர் முயல, மாரெட்டி வார்னரை கொல்ல திட்டமிடுகிறான். அது தெரிந்த ஜெனிஃபர் வார்னரை காப்பாற்ற கடைசி நொடியில், தன்னுடலில் தோட்டாவை வாங்கி சாய்கிறாள்.

அவள் பிழைத்து எழும்பொழுது வார்னர் ஜனாதிபதியாகிவிட, தனது வக்கீல் வாழ்க்கையை தொடர வெறுமையுடன் கிளம்புகிறாள்.






கேஸ்களில் ஜெயிப்பதற்கு ஜெனிஃபர் கையாளும் தந்திரங்கள், மிகவும் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, ஒரு கேஸை குறிப்பிட்ட காலத்துக்குள்தான் அப்பீல் செய்ய முடியும் என்பதை பயன்படுத்த எதிர்தரப்பு வக்கீல், அவளை சந்திப்பதை இழுத்தடித்து கொண்டே போக, கடைசி நாளில் ஜெனிஃபர் நேர வித்தியாசத்தை பயன்படுத்தி கேஸை அப்பீல் செய்வது, மிகவும் சுவாரஸ்யமான திருப்பம்.

ஷிட்னி ஷெல்டனின் கதைகளில் நான் படித்தவற்றுள், இது ஒரு வித்தியாசமான கதை!

பன்னிரண்டாம் இரவு

ஷேக்ஸ்பியர்


ஆங்கிலத் துணைப்பாட நூலாக நாம் படித்த Twelfth Night என்ற நாடகம் பற்றி எம் ஆங்கில ஆசிரியர் திரு.விவேக் நமச்சிவாயம் அவர்கள் அருமையாக விவரித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது, நான் முன்பே படித்திருந்த அதன் தமிழ் மொழிபெயர்ப்பு.
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில், ஏதோ ஒரு போட்டிக்காக வாங்கிய பரிசு தான் அப்புத்தகம். பொற்கிழிக்கவிஞர் திரு. அரு. சோமசுந்தரம் அவர்கள் மொழிபெயர்த்தது.
மூல நூல் ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதியது.கதை அனைவருக்கும் நினைவிருக்கும். இருப்பினும் நாளும், இரவும் கணிணி முன் கடுமையாக உழைப்பவர்கள் மறந்திருக்க வாய்ப்புள்ளதால் முன்கதை மட்டும் கூறுகிறேன். பின்னதை புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படித்துத் தெரிக அல்லதுமுழு நாடகமும் / கதைச்சுருக்கம்.
இரட்டையர்களான அண்ணன், தங்கை இருவரும் பயணித்த கப்பல் கடலில் கவிழ்ந்து, பயணித்த அனைவரையும் வேறோர் தேசத்தில் சேர்க்கிறது. தங்கையும், அண்ணனும் பிரிகின்றனர். தங்கை இருப்பியல் பிரச்னைகளால் ஆண்வேடம் புனைந்து, நாட்டு அரசனிடம் பணியாளாகச் சேர்கிறாள். மன்னன் அவளை தன் நேசிக்கும் அழகியிடம் தன் காதலைத் தெரிவிக்குமாறு சொல்கிறான். ஆனால் அரசனிடம் காதல்வயப்பட்ட தங்கை, ஆண் வேடத்தில் இருப்பதால் அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறாள்.
ஆயினும் அழகியிடம் தன் மன்னனின் காதலைத் தெரிவிக்கிறாள். தடால் திருப்பமாக மன்னனின் காதலை நிராகரித்த அழகி, ஆண் வேடத்தில் இருக்கும் தங்கையின் மேல் காதல் கொள்கிறாள்.
அழகியின் மேல் மன்னன் கொள்ளும் காதல். அழகிக்கோ தூதன் மீது காதல். தூதன் வேடத்தில் இருக்கும் பெண்ணிற்கோ மன்னன் மீது காதல், ஆனால் ஆண் வேடத்தில் இருப்பதால் தன் காதலைத் தெரிவிக்க முடியாமல் தவிக்கிறாள்.
இப்படியாகச் செல்லும் பாக்யராஜ் டைப் கதை, கடலில் விழுந்த அண்ணனைத் தான், தான் காதலித்தவன் என்று நினைத்து அழகி காதலை வெளிப்படுத்துகையில், சூடுபிடித்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் பறக்கிறது.
மொழிபெயர்ப்பாளருக்கு எதனால் 'பொற்கிழிக் கவிஞர்' என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த நூலின் மொழிபெயர்ப்பைப் படித்தவர்கள், அவர் இந்தப் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதை உணர்வர். இனிய மொழியாக்கம். சில உவமைகள், நாம் தினசரி வாழ்வில் உபயோகிப்பவை.
முன்பே பலமுறை இந்த தமிழாக்கத்தைப் படித்து விட்டதால், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில், பன்னிரண்டாம் இரவு துணைப்பாடம் மனனம் செய்வதற்கு, இயல்பாகச் சிந்தித்துப் பதிலுரைத்தலுக்கு, முக்கியமாக பாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கு மிக்க உதவி புரிந்தது.
இனி, அந்த நாடகத்திலிருந்து, ஒரு பகுதி. ஆண் வேடத்திலிருக்கும் தங்கை, தன் மன்னனின் காதலை அழகியிடம் உரைப்பதற்குச் செல்கிறாள்/ன் (அப்போதெல்லாம் இந்தப் பாழாய்ப் போன பாலியல் தேர்வு இல்லை போலும்).அவ்விடம் நடக்கும் உரையாடல்.
களம் - 1 காட்சி - 5
இடம் : ஒலிவியா நங்கையின் வீடு
..................
மால்வாலியோ : அம்மா! அங்கே நிற்கும் வாலிபன் உங்களோடு பேச வேண்டும் என்று உறுதியாக நிற்கிறான். நீங்கள் பிணிவாய்ப்பட்டிருப்பதாகச் சொன்னேன். நம்ப மறுத்தான். தூங்குகிறீர்கள் என்றும் சொன்னேன். அதையும் தூக்கி எறிந்து விட்டான். அவனே வரப் போகிறான். இனி நான் என்ன சொல்லட்டும்? என்ன சொன்னாலும் ஏற்க மறுக்கிறான்.
ஒலிவியா : அவனோடு பேச முடியாது என்று சொல்.
மால்வாலியோ : சொல்லி விட்டேன். அவன் நீதிபதி வீட்டு வாசலில் தூண் போலவும், நாற்காலி கால் போலவும் நிற்பதாகவும், தங்களுடன் பேசாமல் நகர முடியாதெனவும் சொல்கிறான்.
ஒலிவியா : அவன் எப்படிப்பட்டவன்?
மால்வாலியா : மனிதனைப் போன்றவன்!
ஒலிவியா : எத்தகைய மனிதன்?
மால்வாலியா : கெட்ட மனிதன்! அவன் தங்களுடன் பேசாமல் போக மாட்டான். நீங்கள் பேசுவீகளா? மாட்டீர்களா?
ஒலிவியா : அவன் தோற்றம் எத்தகையது? வயது என்ன?
மால்வாலியா : மனிதன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வயதானவனுமில்லை; பையன் என்று சொல்லக் கூடிய அளவிற்குச் சிறியவனும் இல்லை. அவன் காயுமில்லை; பழமுமில்லை; வெள்ளமுமில்லை; பொய்கையுமில்லை; மனிதனுமில்லை; பையனுமில்லை; அவன் பார்க்க அழகாகவும், பட்டிமன்றப் பேச்சாளனாகவும் இருக்கின்றான். அவன் பால்குடி மறக்காத பாலகன் என்று பார்த்தவுடனேயே சொல்லி விடலாம்.
ஒலிவியா : அவன் வரட்டும். வேலைக்காரியை அழையுங்கள்.
மால்வாலியா : வேலைக்காரியே! அம்மா உன்னை அழைக்கிறார்கள்.
(போகிறான்)
[மேரியா மீண்டும் வருகிறாள்]
ஒலிவியா : எனது முகத்திரையைத் தா... வா.. அதனை என் முகத்தின் மேல் மூடு. ஆர்சினோ மன்னனின் தூதனை மீண்டும் சந்தித்து அவன் வார்த்தைகளைக் கேட்போம்.
[வயோலாவும், அவனது பணியாளர்களும் வருகின்றனர்.]
வயோலா : இந்த அரண்மனையில் ஆட்சிக்குரிய மங்கையர் யார்?
ஒலிவியா : என்னிடம் பேசுங்கள். அவளுக்காக நான் பதில் சொல்வேன். உங்களுக்கு என்ன வேண்டும்?
வயோலா : தண்ணொளியும், தன்னிகரில் அழகும் தவழக் காண்கிறேன். சொல்லுங்கள். உங்களை மன்றாடிக் கேட்கிறேன். இந்த மாமனையின் அழகுத் தேவதை நீங்கள் தானா? சரிவரத் தீட்டப்பட்டு உள்ள திரை ஓவியத்தைக் கண்டதும் என் வார்த்தைகள் அடங்குகின்றன. இந்த ஓவியத்தை மனனம் செய்யப்பெரும் பாடு பட்டுவிட்டேன். அழகின் எல்லை! நான் உணர்ச்சிவசப் படுகிறேன். அதனால் உளறிவிடலாம்.
ஒலிவியா : நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்?
வயோலா : நான் அறிந்ததற்கு மேல் யாதொன்றும் சொல்ல மாட்டேன்.அம்மணி! நீங்கள் தான் இந்த மனையின் மாண்புமிக்க தலைவி என்று கூறுங்கள். அதன்பின் நான் பேச்சைத் தொடர்கிறேன்.
ஒலிவியா : நீங்கள் ஒரு நகைச்சுவைப் பேச்சாளரா?
வயோலா : இல்லை. நான் விளையாடவில்லை. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உறுதியாகப் பேசுகிறேன். நீங்கள் தான் இந்த இல்லத்தின் தலைவியா?
ஒலிவியா : என்னுடைய உரிமையை நானே பறித்துக் கொள்ளாவிட்டால், நான் தான் இந்த இல்லத்தின் தலைவி!
வயோலா : நிச்சயம்! நீங்கள்தான் தலைவியானால் உங்கள் உரிமையை நீங்களே பறித்துக் கொள்கிறீர்கள். கொடுக்க வேண்டிய உங்கள் உரிமையை நீங்கள் வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் இது என் கடமை, உங்களைப் புகழ்வேன். பிறகு நான் கொண்டு வந்துள்ள செய்தியைக் கூறுவேன்.
ஒலிவியா : முக்கிய செய்தியைக் கூறுங்கள். புகழ்ச்சியை மன்னிக்கிறேன்.
வயோலா : கடவுளே! அதை உணர மிகவும் அரும்பாடுபட்டேன். அது கவிதையாக அல்லவா இருக்கிறது!
ஒலிவியா : அது கற்பனை! அதை வைத்துக் கொள்ளுங்கள். என் வீட்டு வாசலில் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக அறிந்தேன். கட்டாயப்படுத்தி உள்ளே வந்தீர்கள். அதன்மூலம் உங்கள் வார்த்தைகளைக் கேட்பதைவிட உங்களைக் கண்டு ஆச்சரியப்படும்படி நடந்து கொண்டீர்கள். உங்களுக்குப் பைத்தியம் இல்லாவிட்டால் போய் விடுங்கள்; பகுத்தறிவு இருந்தால் சுருக்கமாகச் சொல்லுங்கள். வசனம் பேசுவதற்கு வான நிலவு தவழும் நேரமல்ல இது!
மேரியா : அய்யா! பாய்மரத்தில் பாய்கள் பறக்கட்டும்! உங்கள் நடையைக் கட்டுங்கள். இதுதான் பாதை....
வயோலா : முடியாது. கப்பலைத் தூய்மைப்படுத்துபவளே! நான் இன்னும் சற்று நேரம் இங்கு மிதக்க வேண்டும். தலைவியாரே! உங்களது குட்டித் தேவதையைச் சற்று அமைதிப்படுத்துங்கள். உங்கள் மனதைச் சிறிது வெளிப்படுத்துங்கள். நான் ஒரு தூதுவன்.
ஒலிவியா : உண்மை தான். நீங்கள் சொல்ல வந்த செய்தியைச் சொல்லலாம்.
வயோலா : நீங்கள் மட்டும் அதைக் கேட்க வேண்டும். அது ஒன்றும் போர் பற்றிய திட்டமன்று; புகழத்தக்க மரியாதையினை எதிர்பார்க்கும் செயலுமன்று. நான் அமைதிச் சின்னத்தை (ஆலிவ்) கையில் வைத்திருக்கிறேன். என் வார்த்தைகள் சமாதானம் பற்றியவை.
ஒலிவியா : இருந்தும் நீங்கள் ஆரம்பித்த முறை கடுமையானவை. நீங்கள் யார்? உங்கள் விருப்பம் என்ன?
வயோலா : உங்கள் சேவகர்கள் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதால் நானும் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. நான் யார்? நான் சொல்ல வந்து என்ன? எல்லாம் தங்களிடம் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.
ஒலிவியா : மற்றவர்கள் போகலாம். இவர் சொல்லும் புனிதமான வார்த்தைகளைக் கேட்கப் போகிறேன். (மேரியாவும், மற்ற பணியாளர்களும் செல்கின்றனர்) ஐயா! நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லலாம்.
வயோலா : அழகும் இனிமையும் வாய்ந்த நங்கையே!
ஒலிவியா : அதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வர்ணிக்கலாம். நீங்கள் சொல்ல வந்த செய்தி எங்கே இருக்கிறது?
வயோலா : ஆர்சினோ மன்னரின் இதயத்தில் இருக்கிறது!
ஒலிவியா : அவருடைய இதயத்திலா? அப்படியானால் எந்த அத்தியாயத்தில் இருக்கிறது?
வயோலா : முதல் அத்தியாயத்தில் இருக்கிறது.
ஒலிவியா : ஓ! அதை நான் படித்திருக்கிறேன். அது பொய்! வேறொன்றும் சொல்ல வேண்டியது இல்லை.
வயோலா : அம்மணி! உங்கள் முகத்தை நான் பார்க்கலாமா?
ஒலிவியா : என் முகத்தைப் பார்க்குமாறு உங்கள் தலைவர் ஆணையிட்டாரா? உங்கள் தூதுக்கு இது அப்பாற்பட்டது! இருந்தாலும் முகத்திரையை நீக்கி ஓவியத்தைக் காட்டுகிறேன். பாருங்கள்...முகம் நன்றாக இல்லையா?
[முகத்திரையினை நீக்குகிறாள்]
வயோலா : கடவுள் அற்புதமாகப் படைத்திருக்கிறார்.
ஒலிவியா : அது இயற்கை! அது காற்றையும், காலத்தையும் கடந்து நிற்கும்!
வயோலா : அழகின் அற்புதக் கலவை! இயற்கையின் எழிற்கரங்கள் சிவப்பையும், வெள்ளையும் வியப்புறத் தீட்டியிருக்கின்றன. அம்மணி! உயிர் வாழ்பவர்களில் நீங்கள் மிகவும் கொடூரமானவர்கள்! நீங்கள் தனித்து வாழ்ந்து, தாயாகாமல் உங்கட்குப் பின், உங்களைப் போன்ற அழகிய பிரதியினை (குழந்தையை) உலகத்திற்கு வழங்காமல் போனால் நீங்கள் கொடுமையானவர்கள் தான்!
ஒலிவியா : ஐயா! நான் அவ்வளவு கொடிய இதயம் கொண்டவள் அல்லள். நான் என் அழகைக் கணக்கிட்டுப் பட்டியல் போட்டு வைப்பேன். செம்பவள உதடுகள் இரண்டு, மூடிய இமையோடு கருவிழி இரண்டு, கழுத்து ஒன்று, முகவாய் ஒன்று, இவ்வாறெல்லாம் உயிலில் எழுதி வைப்பேன்...என்னைப் புகழ்வதற்காகத் தான் நீங்கள் இங்கு அனுப்பப் பெற்றீர்களா?
வயோலா : நீங்கள் யார் என்பதைக் காண்கிறேன். நீங்கள் மிகவும் கர்வம் பிடித்தவர்கள். நீங்கள் பிசாசாக இருந்தாலும் பேரழகு படைத்தவர்கள். என் தலைவர் உங்களை நேசிக்கிறார். அவரது அன்பு பரிசளிக்கப்பட வேண்டியதாகும். நீங்கள் ஈடு இணையற்ற அழகி என்று முடிசூட்டப் பெற்றாலும் அவரது நேசத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒலிவியா : அவர் என்னை எவ்வாறு நேசிக்கிறார்?
வயோலா : சபதங்கள் செய்தும், கண்ணீர் வடித்தும், இடியெனப் பெருமூச்சு விட்டும், நெருப்பென உயிர்த்தும் உங்களை நேசிக்கிறார்.
ஒலிவியா: உங்கள் மன்னர் என் மனதை அறிவார். நான் அவரை நேசிக்க முடியாது. அவர் உயர்ந்த பண்பாடும், பெருந்தன்மையும், வளமிகு சொத்தும், இளமை எழிலும், கனிந்த குரலும், கல்வியும், வீரமும், தோற்றப் பொலிவும் பெற்றிருந்தாலும் நான் அவரை நேசிக்க முடியாது. அவருக்கு என் முடிவு முன்பே தெரிந்ததே!
வயோலா : என் தலைவரைப் போல நானும் உங்களை நேசித்திருந்தால், அவ்வளவு துயரங்களை அனுபவித்து நடைப்பிணமாக மாறியிருந்தால், உங்களது மறுப்பின் அர்த்தத்தைக் காண முடியாது, அதை என்னால் புரிந்து கொள்ள முடியாது.
ஒலிவியா : ஏன்? நீங்கள் என்ன செய்வீர்கள்?
வயோலா : உங்கள் வாசலில் இழந்த காதலின் சின்னமாக என்னை நிறுத்துங்கள். என் ஆன்மாவை (ஒலிவியாவை) வீட்டிற்குள் அழையுங்கள். புறக்கணிக்கப்பட்ட காதலைப் பற்றிக் கவிதை எழுதுங்கள். அவற்றை நள்ளிரவில் உரக்கப் பாடுங்கள். எதிரொலிக்கும் மலையடிவாரங்களில் "ஒலிவியா" என்ற உங்கள் பெயர் விண்ணுக்கும் மண்ணுக்கும் எதிரொலிக்கட்டும். நீங்கள் ஓய்வு கொள்ளக் கூடாது. ஆனால் என்மீது நீங்கள் இரக்கப்பட வேண்டும்.
ஒலிவியா : நீங்கள் நிறையச் செய்வீர்கள். உங்கள் பெற்றோர் யார்? என்ன செய்கின்றார்கள்?
வயோலா : என் நிலையைவிட என் பெற்றோர் உயர்ந்தவர்கள். என் நிலையும் பரவாயில்லை. நான் ஒரு நல்லவன்.
ஒலிவியா : உங்கள் மன்னனிடம் சொல்லுங்கள். நான் அவரை நேசிக்க முடியாது. அவர் இனித் தூதர்களை அனுப்ப வேண்டாம். அவர் என் பதிலை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார் என்பதை நீங்களே வந்து என்னிடம் சொல்லலாம். வணக்கம். நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமத்திற்கு நன்றி. செலவிற்கு இதை வைத்துக் கொள்ளுங்கள்.
வயோலா : அம்மணி! நான் பொருளுக்கு அமைந்த தூதன் அல்லன். பரிசோ, அன்போ தங்களிடம் வேண்டுவது என் மன்னரே ஒழிய நான் அல்லன்; நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ அவரது இதயத்தைக் காதலானது பாறாங்கல்லாக்கட்டும். என் மன்னரைப் போல நீங்களும் தோல்வியில் துவள வேண்டும். அழகிய கொடிய நங்கையே! வருகிறேன்.[போகிறான்]
ஒலிவியா : உங்கள் பெற்றோர் யார்? "என் நிலையைவிட என் பெற்றோர் உயர்ந்தவர்கள். என் நிலையும் பரவாயில்லை. நான் ஒரு நல்லவன்" என்றெல்லாம் கூறினாரே! நீங்கள் உண்மையிலேயே நல்லவர்தான்! உங்கள் நாக்கு, உங்கள் முகம், உங்கள் கை, உங்கள் செயல், உங்கள் உணர்வு முதலியன உங்கள்து பெருந்தன்மையை அறிவிக்கின்றன. பெருவேகம் இல்லை. மென்மை! மென்மை! இவரே தலைவராக இருப்பாரோ! இவ்வளவு விரைவில் நேச உணர்சசியை ஒருவர் தூண்ட முடியுமா? இவரது முழுமை என் கண் வழிப் பாய்ந்து இதயத்தைக் கவர்ந்து விட்டது. இருக்கட்டும். வா மால்வாலியோ!
(மால்வாலியோ வருகிறான்)
மால்வாலியோ : அம்மா! என்ன செய்ய வேண்டும்?
ஒலிவியா : முடிமன்னனின் தூதுவனாக வந்து முணுமுணுத்துச் சென்ற இந்த இளைஞனின் பின்னே ஓடு. அவனது இந்த மோதிரத்தை நான் விரும்பினேனோ இல்லையோ, போட்டுப் போய் விட்டான். அதனால் எனக்குப் பயனில்லை என்று அவனிடம் சொல்லிவிடு. அவனது மன்னருக்கு எந்த நம்பிக்கையும் ஊட்ட வேண்டாம் என்றும் சொல். நான் அவரை விரும்பவில்லை. இந்த தூதன் நாளை இந்தப் பக்கம் வந்தால் அதற்குரிய காரணத்தைச் சொல்வேன். போ. மால்வாலியோ!
மால்வாலியோ : அம்மா! அப்படியே செய்கிறேன்.
[போகிறான்]
ஒலிவியா : (தூதன் மீது காதல் உணர்வு கொண்டு) நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. என் கண்கள் என் இதயத் தீர்மானத்தை இடித்து நொறுக்கிவிட்டன என்று அஞ்சுகிறேன். விதியே உன் வலிமையைக் காட்டு! நாம் நினைத்தபடி எது நடக்கிறது? எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். இதுவும் அப்படியே நடக்கட்டும்.
[போகிறாள்]
புத்தகம் : பன்னிரண்டாம் இரவு.
புத்தக வகை : மொழிபெயர்ப்பு.
மூல நூல் : Twelfth Night - ஷேக்ஸ்பியர்.
ஆசிரியர் : 'பொற்கிழிக் கவிஞர்' அரு.சோமசுந்தரம்.
பதிப்பகம் : பொன்முடி பதிப்பகம், 123, முத்துபட்டினம் IIIst, காரைக்குடி - 623 001.