Friday, December 31, 2010

ஆர்தர் ஹீலி

ஆர்தர் ஹீலி ஒவ்வொரு துறையைப் பற்றி ஆராய்ச்சி செய்து அவற்றை சார்ந்து எழுதிய புனைவுகள் மிகவும் சிறப்பானவை.

1. Wheels என்று அமெரிக்க கார் உற்பத்தி மற்றும் விற்பனைத் துறை பற்றிய புனைவு. மூன்று பெரிய நிறுவனங்களுக்கு வெளியே நான்காவதாக ஒரு கற்பனை நிறுவனத்தை பின்னணியாக வைத்து
  • வடிவமைப்பிலிருந்து,
  • உற்பத்தித் தளத்தில் நடக்கும் அரசியல்கள், குழப்பங்கள்,
  • சந்தைப்படுத்தும் அணுகுமுறைகள்,
  • விற்பனை முகவர்கள் செயல்பாடு
என்று எல்லா பகுதிகளையும் தொட்டுச் செல்லும்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பாத்திரத்தை உருவாக்கி, எல்லா பாத்திரங்களும் உறவாடும்படியாக அமைத்து, அந்த உறவாடல்களின் உணர்ச்சி ததும்பல்களுக்கு நடுவே துறையைப் பற்றிய விபரங்களை தூவிக் கொண்டே போவார்.

மருந்துக்கு சர்க்கரை பூசி கொடுப்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்டு சொல்ல முடியாது. நிறைய தகவல்களை நமது மூளை கிரகித்துக் கொள்ளும் படி கதையோடு கதையாக ஊட்டி விடுவார்.

2. அடுத்ததாகப் படித்தது, Airport என்று ஒரு அமெரிக்க நகரத்தின் விமான நிலையத்தில் நடக்கும் பதற்றங்களைப் பற்றிய நாவல். 200 பக்கங்களுக்கும் அதிகமான இந்தக் கதை ஒரு மாலையில் ஆரம்பித்து அந்த இரவிலேயே முடிகிறது.

  • விமான நிலைய நிர்வாகம்,
  • விமான நிறுவனங்கள்,
  • பயணிகள்,
  • விமான நிலையத்துக்கு அருகிலான குடியிருப்பு,
  • விமானத்தில் குண்டு வைத்து காப்பீட்டுத் தொகை சம்பாதிக்க முனையும் தோல்வியடைந்து தொழில் முனைவர் ஒருவர்,
  • விமான கட்டுப்பாட்டு அறையில் நிலவும் அழுத்தம்,
  • விமான விபத்து
என்று ஒரு விமான நிலையத்தை மையமாக வைத்து பறக்கும் துறையின் சிக்கல்களை விளக்கமாகச் சொல்வார்.

இங்கும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் அழுத்தமான உணர்ச்சி வடிவம் கொடுத்து அவர்களின் உறவாடலில் சிக்கல்களைக் காட்டி, அவர்கள் மூலமாகவே பல விபரங்களை தெரிவித்து விடுவார். பனிப்புயலினால் செயல்பாடு பாதிக்கப்பட்ட அந்த மாலையில் குண்டு வெடித்து ஒரு விமானம் திரும்பி வந்து இறங்குவது வரையிலான சில மணிநேரக் கதை.

3. இன்னொரு கதை In High Places என்று கனடாவின் அரசியல், அரசாங்கம் பற்றிய கதை.

  • கனடா நாட்டின் பிரதம மந்திரி,
  • எதிர்க் கட்சித் தலைவர்,
  • பத்திரிகைகள், நீதிமன்றம்,
  • அமெரிக்க குடியரசுத் தலைவர்,
  • பிரிட்டிஷ் அரசி,
  • குடியேற்றக் கொள்கை,
  • அரசாங்கத்துக்குள் அரசியல்
என்று விறுவிறுப்பான நாவலாக உருவான ஒன்று. இங்கும் ரத்தமும் சதையும், உணர்வுகளும் கலந்து உருவான பாத்திரங்களின் உணர்வு பொங்கல்களுக்கு நடுவே கனடா நாட்டின் அரசியல் சூழலையும் அதன் வெளியுறவுக் கொள்கை செயல்பாடுகளையும் நோகாமல் உரித்து வாசகருக்குக் கொடுத்து விடுகிறார்.

4. நான்காவதாக, The Money Changers என்று வங்கித் துறை பற்றிய கதை.

இதுவும் அமெரிக்காவின் சின்ன ஊர் ஒன்றில்
  • அந்த ஊரின் வங்கித் தலைமையகம்,
  • அதன் பிரதான கிளை,
  • அதில் பணிபுரியும் மேலாளர்களுக்கிடையேயான அரசியல்,
  • வங்கி கடன் கொடுப்பதில் இருக்கும் அரசியல்,
  • சமூக உணர்வுள்ள கடன், பெருநிறுவனக் கடன்களுக்கு இடையேயான இழுபறிகள்,
  • வங்கித் துறை செயல்படும் முறைகள்
என்று வங்கித் துறைக்கு ஒரு பறவைப் பார்வையாக புத்தகத்தை உருவாக்கியிருப்பார்.

வங்கியின் தலைவர் ஆரம்ப அத்தியாயத்தில், தான் சில மாதங்களில் இறக்கப் போவதாக அறிவிப்பதோடு கதை ஆரம்பிக்கிறது.
  • வங்கியின் மூத்த தலைமை அதிகாரிகளுக்கான அதிகாரப் போட்டி,
  • யார் தலைவர் ஆகப் போகிறோம் என்று நடக்கும் இழுபறிகள்,
  • பிரதான கிளையில் பணம் திருடு போய் அதைக் கண்டு பிடித்து தொடர்புள்ள ஊழியர் சிறைக்கு அனுப்பப்படுவது,
  • நலிவுற்ற பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டத்துக்கான பண வசதியைக் குறைக்கும் வங்கியின் நடவடிக்கைக்கு எதிரான போராட்டம்,
  • பெரிய நிறுவனத்துக்குக் கடன் கொடுப்பதற்கு போட்டி போட்டு கடைசியில் அது பூதாகரமாக வந்து வங்கியின் கழுத்தை நெரிப்பது,
  • அதன் பின்விளைவுகளை சமாளிப்பது
என்று பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யம் குறையாமல் கதை நகரும்.

வங்கித் தலைவர் போட்டியின் ஒரு தலைமை அதிகாரி அலெக்ஸ் வாண்டர்வூத், அவரது மனைவி மன நிலை சரியில்லாமல் காப்பகத்தின் வசிக்கிறார், அவரது பெண்தோழி வழக்கறிஞராக போராடுபவர், வங்கிக்கு எதிராகவும் போராட்டம் நடத்துகிறார்.

இன்னொரு தலைமை அதிகாரி ரோஸ்கோ SuNatCo என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு கடன் கொடுக்கும் வகையில் வங்கியை ஈடுபடுத்துகிறார். அலெக்ஸ் சிறு சேமிப்பாளர்களிடமிருந்து சேமிப்பு நிதி திரட்டும் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிக்கிறார்.

வங்கியின் பிரதான கிளையின் தலைமை மேலாளர் கிளையில் நிகழ்ந்த திருட்டை சரிவரக் கையாண்டு பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட தென்அமெரிக்கப் பெண்ணை மாட்ட வைக்க முயற்சித்த கெட்டிக்கார மேலாளரை சிறைக்கு அனுப்புகிறார்கள். அவன் சிறையில் அடிபட்டு, உதைபட்டு, நொந்து நூலாகி வெளியில் வந்து கள்ள நோட்டு, கள்ள கடனட்டை உருவாக்கி சுழற்சியில் வெளிவிடும் கும்பல்களை பின்தொடரும் வேலையில் இறங்க வைக்கப்படுகிறான்.

இப்படியே கதை சூடு பிடித்து உணர்வு பூர்வமான நிகழ்வுகளுடன் தொடர்ந்து, அலெக்சின் அணுகுமுறைகள் வெற்றி பெற்று அவர் வங்கியின் தலைவர் ஆவதாக முடிகிறது.

5. ஐந்தாவதாக Hotel என்று தங்கும் விடுதி பற்றிய கதை.

  • பல நகரங்களில் இயங்கும் ஓட்டல் தொடர்களில் ஐக்கியமாகி விடாமல் தன்னியல்புடன் இயங்கும் ஒரு விடுதியில் ஏற்பட்டுள்ள பண நெருக்கடி,
  • அதன் உரிமையாளருக்கும் மேலாளருக்கும் இடையேயான இழுபறி,
  • வேலை பார்க்கும் ஊழியர்களின் மோசடிகள்,
  • பண நெருக்கடியைப் பயன்படுத்தி அதை வாங்க வந்திருக்கும் ஓட்டல் தொடர் முதலாளி,
  • ஓட்டலில் தங்க வந்திருப்பவர்களின் விபரங்கள் - ஓட்டல் திருடன், ஓட்டலில் கேளிக்கை நடத்தும் இளைஞர்கள், ஆண்டு தோறும் வரும் முதியவர்,
  • இங்கிலாந்தை சேர்ந்த மேற்குடி தம்பதியினர், அவர்களால் நிகழ்ந்து விடும் சாலை விபத்து, அதை மறைக்க அவர்கள் ஆடும் நாடகம்,
  • சரியாக பராமரிக்கப்படாத மின்தூக்கி,
  • விடுதி கைமாறுவதில் நிகழும் நாடகங்கள்,
  • தெற்கு அமெரிக்க மாநிலங்களின் நிறவெறிக் கொள்கையால் ஏற்படும் நெருக்கடி
இவற்றுக்கிடையே ஒரு தங்கும் விடுதியின் நடைமுறைகளை இட்டு நிரப்பியிருப்பார். கடைசியில் மின்தூக்கி ஒன்று அறுந்து விழுந்து பலர் உயிரிழக்கும் இறுதிக் கட்டம்.

6. ஆறாவதாக, overload என்று மின்சாரம் உற்பத்தி செய்து வினியோகிக்கும் நிறுவனம் ஒன்று சந்திக்கும் பிரச்சனைகள், அது சார்ந்த அரசியல்கள்.

மின்சாரம் உற்பத்தி மற்றும் வினியோகம் தனியார் துறையில் ஒரே நிறுவனத்தின் ஏகஉரிமையாக இயக்கப்படுகிறது. அவர்கள் என்ன கட்டணம் வசூலிக்கலாம் என்பது மேற்பார்வைக் குழுவால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. புதிய மின் உற்பத்தித் திட்டங்களை சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவினர், கம்யூனிச குழுக்கள் எதிர்க்கின்றன. மின்சாரம் தட்டுப்பாட்டினால் மின்வெட்டுகளை செயல்படுத்தும் கட்டாயம்.

விபத்துக்கள், மின்தடை, மின்சாரத் திருட்டு, மின்சார நிறுவன அரசியல் இவற்றுக்கிடையே மின்வினியோகத் துறை குறித்து தனது ஆராய்ச்சியில் திரட்டிய தகவல்களை தளும்பத் தளும்பத் தந்திருப்பார்.

7. ஏழாவதாக Strong Medicine என்று மருந்துத் துறை குறித்த கதை.

மருந்து ஆராய்ச்சி, மருந்து விற்பனை, நிறுவன அரசியல், மருந்து பயன்படுத்துவதில் சில மருத்துவர்கள் செய்யும் முறைகேடுகள் என்று அமெரிக்க மருந்து நிறுவனத்தை களமாக வைத்து கதை பின்னியிருப்பார்.

8. எட்டாவதாக The Final Diagnosis என்று மருத்துவமனை நிர்வாகம், அரசியல், நோயாளிகளுக்கு சேவை அளிப்பது என்று ஒரு நாவல்.

பகுப்பாய்வுத் துறையில்தான் இறுதி முடிவுகள் தெரிகின்றன என்பதுதான் Final Diagnosis என்று குறிப்பிடப் படுகிறது. நோயாளியின் மரணத்துக்குப் பிறகான பகுப்பாய்வு, நோய்க்கிருமி அடையாளம் காணுதல், புற்றுநோய் திசுக்களை உறுதிப்படுத்துதல், மருத்துவமனையின் சாப்பாட்டுக் கூடத்தில் தூய்மை பேணப்படுகிறதா என்று கண்காணித்தல் என்று மருத்துவமனையின் அதிமுக்கிய பணிகள் pathology என்று பொதுமக்கள் கண்ணில் படாத சோதனைக் கூடங்களில் நடைபெறுகிறது.

==========

1. Airport என்ற கதையைத் தழுவி தமிழில் பயணிகள் கவனிக்கவும் என்று பாலகுமாரன் ஒரு நாவல் எழுதியிருந்தார். ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து அதன் பிறகு புத்தகமாகவும் பதிப்பிடப்பட்டது.
  • விமான கண்காணிப்பு கோபுரம்,
  • கடமை தவறிய குற்றவுணர்வால் மனநிலை பாதித்த ஊழியர்,
  • விமான நிலைய பாதுகாப்பு, விமான சேவை நிறுவனம், விமான நிலைய நிர்வாகம் இவர்களுக்கு இடையேயான இழுபறிகள்
  • இவற்றுக்கு நடுவே காதல், கண்ணீர், சோகம், பதட்டம்
என்று கதை பின்னியிருப்பார். தமிழ்க் கதையில் பெரும்பாலான நிகழ்வுகள் சென்னையில் பொருந்தும்படி பாலகுமாரனின் கதை சொல்லும் திறனில் மிளிரும். ஆர்தர் ஹீலியுடன் ஒப்பிடும் போது விபரங்களை விட கதை ஓட்டத்தின் வீதம் அதிகமாக இருக்கிறது. தமிழ்க் கதையில் விபரங்கள் அதிகமாகச் சொன்னால் மக்கள் படிப்பார்களா என்று ஒரு தயக்கம் இருந்திருக்கலாம்.

2. சூரியன் என்ற பெயரில் என் கதையுலகம் என்ற பதவில் டி பி ஆர் ஜோசப் எழுதிய தொடர், தென் மாநிலங்களில் இயங்கும் தனியார் வங்கி ஒன்றை மையமாகக் கொண்டு வங்கித் துறை நடைமுறைகளை நிறைய பேசியது. 200 இடுகைகளாக வெளியிடப்பட்ட இந்தத் தொடரின் அடுத்த பாகங்கள் இனிமேல் வெளிவரும் என்று எதிர்பார்ப்போம்

No comments:

Post a Comment