காபூலில் ஒளிபரப்பாகும் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தால், ஆப்கானிஸ்தானில் நிலைமை தற்போது லேசாக மாறி இருப்பதைப் போல காணப்படுகிறது. பாராளுமன்ற கூட்ட நிகழ்வுகளை பெண்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். ஆணுக்கு சமமாக பெண்கள் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். ஆண்களுடன் வாதாடவும் செய்கிறார்கள்.
என்னதான் பெண்கள் டி.வி.யில் தோன்றினாலும், தீக்குளித்த பெண்களின் (அல்லது தீக்குளிக்க வைக்கப்பட்ட பெண்கள்) பற்றிய செய்திகளும், நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெண்கள் மட்டும் அல்ல, அனைத்து ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரே வழி, கல்விதான் என்பதை கிட்டத்தட்ட அனைவருமே ஒப்புக் கொள்கிறார்கள். நீண்டகால யுத்தம், ஆப்கானில் ஒரு தலைமுறையையே கல்வி விஷயத்தில் பின்தங்க வைத்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் படித்தவர்கள் இருந்தார்கள். வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் கற்றவர்கள் இருந்தார்கள். ஆனால், யுத்த காலத்தில் எல்லோரும் வெளி நாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். யுத்தம் நடைபெற்றபோது ஆப்கானைவிட்டு வெளியேறியவர்களில் மிகச் சிரிய சதவீதமானோரே, திரும்பி வந்திருக்கிறார்கள். மற்றையவர்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகி விட்டார்கள்.
இதுதான், ஆப்கானில் படித்தவர்களுக்கான பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்போது நாடு ‘ஓரளவுக்கு’ சுமுகமான நிலையில் உள்ளதால், ஐ.நா.வின் கிளை அமைப்புகள் ஆப்கான் மக்களின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்துகின்றன. பள்ளிக்கூடங்கள் கட்டுதல், பாட புத்தகங்களை அச்சடிப்பது, ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களே கற்றுக் கொடுப்பது, பெண்களுக்கான வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்வது போன்ற கல்வி பணிகளில் ஐ.நா.சபை ஈடுபட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தற்போது ஆண்களும் பெண்களுமாக 50 லட்சம் குழந்தைகள் படிக்கிறார்கள்.
கிராமப்புறங்களை காட்டிலும், நகர்ப்புறங்களில்தான் அரிதான குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். காபூல் நகரில் 85 சதவீத குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். சில கிராமங்களில் 10 சதவீத குழந்தைகள்கூட பள்ளிக்கு செல்வதில்லை.
காபூல் நகரில் அதிகமான குழந்தைகள் படித்தாலும்கூட, இன்னமும் 60 ஆயிரம் குழந்தைகள் படிக்காமல், தெருவில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். தெருவில் கூவி விற்பவர்களாகவும், குப்பை பொறுக்குபவர்களாகவும், பிச்சைக்காரர்களாகவும், ஏன் திருடர்களாகவும் கூட இவர்கள் திரிகிறார்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற காட்சிகளை காணலாம். இது புதிதல்ல. ஆனால், இந்த எண்ணிக்கை ஆப்கானில் மிக அதிகமாக உள்ளது.
ஆப்கானிஸ்தான் என்றாலே, வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு மிகச் சில விஷயங்கள்தான் தெரியும். தெரிந்த விஷயங்கள் இவைதான்: தலிபான்களின் துப்பாக்கி ஆட்சி, கடுமையான இஸ்லாமிய சட்டங்கள், பெண்களுக்கு எதிரான அடக்குமுறை, தீவிரவாதம். போதை பயிர் உற்பத்தி.
அது, கடந்த 15 வருட கால ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தானுக்கு வேறு ஒரு முகமும் இருந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை மன்னர்கள் முதல் கம்யூனிஸ்டுகள் வரை பலரும் ஆட்சி செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை தீர்க்கவும், கல்வியை முன்னேற்றம் அடையச் செய்யவும், இவர்களில் பலர் முயற்சிகளை மேற்கொண்டும் இருந்திருக்கிறார்கள்.
மீண்டும் தலிபான்களிடம் நாடு வரும்போது...
1970களிலும் 1980களிலும் காபூல் நகரில் பெண்கள் சுதந்திரமாக நடமாடினார்கள். அதுவும் ‘பர்தா’போன்ற அங்கிகள் இல்லாமலேயே நடமாடி இருக்கிறார்கள். அப்போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அலுவலங்கள் ஆகியவற்றில்கூட, பெண்கள் வேலை செய்துள்ளனர். மேற்கத்திய நாட்டவர்களை போல ஆடை அணிந்திருந்தார்கள். வெளிநாடுகளுக்கும்கூட பெண்கள் சென்று வந்தார்கள்.
ஆப்கானை ஆண்ட கம்யூனிஸ்டுகள்கூட, தங்களது ஆட்சிக்காலத்தில் பெண்கள் உட்பட எல்லோருக்கும் கல்வி கற்க வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் சில மாகாணங்களில் இருந்த பழமைவாதிகள், “பெண்களுக்கு கல்வியா?” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன்பின் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.
இந்த எதிர்ப்புக் குரல்கள் தலிபான்களிடம் நன்றாகவே எடுபட்டன. பழமைவாதிகளை பின்பற்றி பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் கொண்டு வந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் பள்ளிக்கூடங்களை தலிபான்கள் குண்டு வைத்தும் இடித்தும் தகர்த்தனர்.
ஆசிரியர்களை தலிபான்கள் படுகொலை செய்தார்கள். குறிப்பாக மாணவிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியைகளை கொன்று குவித்தார்கள். தலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் மட்டும் மொத்தம் இருந்த 748 பள்ளிக்கூடங்களில் 380 பள்ளிக்கூடங்களை தலிபான்கள் தரைமட்டமாக்கி விட்டனர். இந்த 380 பள்ளிக்கூடங்களும் பெண்களுக்கானவை.
கடந்த (செப்டம்பர்) மாதம்கூட, கந்தகார் நகரில் பெண்கள் உரிமைக்காக பாடுபடும் மாகாண அலுவலக பெண் அதிகாரி ஒருவரை, தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு மாகாணங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் பெண்களும், இளம் பெண்களும் இப்போது வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே பயந்துபோய் இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் அமெரிக்காதான் காரணம் என்கிறார் தலிபான் தளபதி ஒருவர். 2001ம் ஆண்டுவரை தலிபான்களின் ஆட்சி பீடமாக விளங்கிய தெற்கு மாகாணங்களில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலால்தான் எல்லாச் சிக்கல்களும் வந்தன என்று அவர் கூறுவது தலிபான்களின் கோணம்.
இந்தக் கோணம், “சமுதாயத்தில் பெண்களுக்கென விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்கர்கள் மற்றுகிறார்கள். அதை ஆப்கான் பெண்களும் ஏற்று, சமூகத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மதிக்காமல் வீட்டுக்கு வெளியேயும், பொது இடங்களிலும் நடமாடுகிறார்கள். அவர்களை மீண்டும் பழைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்ல சில கொலைகள் தவிர்க்க முடியாது உள்ளன” என்பதே.
ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளில் இருந்து அமெரிக்கா ஒதுங்கத் தொடங்கிவிட்டது. மறு நிர்மாணப் பணிகளை கடந்த ஆண்டு நேட்டோ நாடுகளிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்டது. தற்போது பிரிட்டன், கனடா நாடுகளின் அமைப்புகள்தான் ஆப்கானில் நடைபெறும் புனரமைப்பு பணிகளை மேற்பார்வை பார்க்கிறார்கள்..
இதுதான், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம்!
அமெரிக்காவின் படையெடுப்புக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு குடிமக்கள், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள், தலிபான்கள் என்று சுமார் 8000 பேர் பலியாகியுள்ளனர்.
தலிபான்களை தேடி அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் தாக்குதல் ஒருபுறம், பாகிஸ்தான் ஆதரவுடன் தலிபான்கள் நடத்தும் தாக்குதல் இன்னொரு புறம் என்று ஆப்கான் அரசு திணறிக்கொண்டு இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் இப்போது குளிர்காலம் தொடங்கப் போகின்றது. இதனால் போரிடுவதற்கு தலிபான்களுக்கு இது தருணமல்ல.
ஆனால் வசந்தகாலம் வந்துவிட்டால் போதும், தலிபான்கள் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்தச் சமயத்தில், அமெரிக்கா தனது படைகளை வாபஸ் வாங்கத் தொடங்கவுள்ளது.
நேட்டோ படைகள் உள்ளபோதே, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஆதரிக்கும் தலிபான்கள், அதற்காக சில கொலைகளையும் செய்யும் தலிபான்கள், நேட்டோ படைகள் விலகியபின் சும்மா இருப்பார்களா?
“பெண்களுக்கு உரிமை என்பது அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டும் அல்ல. அவர்களை சமுதாயத்தில் சம அந்தஸ்துடன் வாழ விடுவது” என்று நேட்டோ படைகளின் பிரிட்டிஷ் தளபதி ஒருவர் கூறினார்.
இதைக் கூறிய பிரிட்டிஷ் தளபதி , அடுத்த ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு, பிரிட்டிஷ் படைகளுடன் வெளியேறிவிடுவார்.