Wednesday, November 23, 2011

என் தூக்கத்தைக் கெடுத்த மூன்று பெண்கள்

ஒரு சம்பவத்தை நேரிலோ அல்லது புகைப்பட்த்திலோ பார்ப்பதற்கும், வீடியோவில் காண்பதற்கும்,வித்தியாசம் இருக்கிறது. ஒவ்வொன்றும் நம்மிடம் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் ஆளுமைக்குத் தக்கவாறு மாறுபடும்.சிலரது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நேரில் அவர்களது வார்த்தைகளில் அறியும்போது நாம் பாதிக்கப் படுகிறோம்.

சினிமாவில் மற்றவர்களது துயரங்களைப் பார்த்து அழுபவர்கள் இருக்கிறார்கள்.நெருங்கிய உறவினர் இறப்புக்கும் கதறாத ஆளுமை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.விபத்து,கற்பழிப்பு,கொடுந்துயரம் என்று எத்தனையோ நெஞ்சை உருக்கும் நிகழ்வுகளை படிக்கிறோம், தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.சில நிமிட உணர்வுகளை தூண்டிவிட்டு அவை மறைந்துவிடுகின்றன.அடுத்த விஷயத்துக்கு தாவி விடுகிறோம்.
துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு பஞ்சமில்லை. அதிகம் வாசிக்கப்படாத எனது இடுகை ஒன்றில் இருந்தாலும் அதன் உளவியல் பகுதிகளை அறிவதற்காக மீண்டும் அவற்றைத் தருகிறேன்.

பட்டம் பெற்ற ஒரு பெண்ணை விலை உயர்ந்த டி.வி,வாசிங் மெஷின்,சகல வசதிகளோடும் உள்ள ஒரு வீட்டிற்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமணமாகி ஆறுமாதம் கழித்து மருத்துவரிடம் அழைத்து வந்தார்கள் .அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்தது. .சிறு நீர் வெளியேறுவதுதெரியவில்லை.நனைந்தபின்னர்வெகு நேரம் கழித்து தெரியவரும்.

பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சிறுநீர் மண்டலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கண்டறிந்தார். விசாரித்தபோது தாய்வீட்டில் உள்ளபோது அத்தகைய தொந்தரவுகள் எதுவும் இல்லை. கணவன் வீட்டில் தாங்க முடியாத மனஅழுத்தத்திற்கு ஆளாவதுதான் காரணம் என்று முடிவு செய்து மன நல மருத்துவரிடம் பரிந்துரை செய்தார் மருத்துவர்.

.மனதில் ஏற்படும் அழுத்தங்கள் அளவு மீறும்போது உடல் மீது வீசிவிடுகிறது என்கிறது உளவியல் .உடலில் ஏற்படும் பல நோய்கள் மனம் தொடர்புடையதாக இருக்கலாம். கணவன் ,மாமியார் ,நாத்தனார் ஆகியோர் செய்யும் கொடுமைகளை கொட்டிய பின்னர் அவரது தாய்கூறினார், ''எங்கள் வீட்டுக்கே வந்து விடுமாறு கூறுகிறேன் ,ஆனால் வரமாட்டேன் என்கிறாள்''.அந்தப்பெண்ணின் பதில்,"என் தங்கை வேறுஇருக்கிறாள்,அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும் ?வாழாவெட்டி வீட்டில் இருக்கும்போது யார் வருவார்கள்? .

இரண்டாவது தென் மாநிலம் ஒன்றிலிருந்து இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்ற பெண் பணிக்காக மும்பை சென்றார். உயர்சாதியை சார்ந்தவர்.தமிழ் நாட்டை ச்சார்ந்த ராணுவ வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.வேலையையும்,பெற்றோரையும் விட்டு விட்டு காதலனுடன் வந்துவிட்டார்.கணவன் வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்ததுஅவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது

.கர்ப்பமானது தெரிந்தவுடன் கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்திகலைக்கப்பட்டு விட்டது.-ஏற்கனவே குழந்தைகள் இருக்கிறார்கள் ,மேலும் தேவையில்லை-. ரேஷன் கார்டில் அவரது பெயர் இல்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.தற்போது தீராத நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறார். வசதியான குடும்பத்தில் பிறந்து,கல்வி கற்றும் அடையாளமற்று !

மூன்றாவது,கற்பழிப்பிற்கு சட்டத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.தனது மகள் கற்பழிக்கப்பட்டதற்கு தாயால் தண்டனை தரப்பட்டால்?நாளிதழ்களிலோ ஊடகங்களிலோ இவையெல்லாம் வருவதில்லை.அந்தப்பெண்ணுக்கு பதினைந்து வயது.தூங்கிக் கொண்டிருக்கும்போது அவளது அக்காவின் கணவன் கற்பழித்தான்.

ரொம்பவும் மிரண்டு போய்அம்மாவிடம் அழுதுகொண்டே கூறியபோது அம்மாவுக்கும் ஆத்திரமாக வந்தது. பின்னர் அம்மாமகளின் கண்ணைத்துடைத்தவாறு கூறியது "யாரிடமும் சொல்லாதே".

நேரம் கழித்து தனது மருமகன் வீட்டிற்கு வந்தபோது சமையல் செய்து கொண்டிருந்த தாய் கையிலிருந்த கரண்டியை சுவற்றில் சத்தம் வருமளவுக்கு வீசினாள்.கோபத்தில்,"வருகிறவர்கள் ஒழுங்காக இருந்து விட்டு போகவேண்டும் ".கற்பழிப்பு குற்றவாளிக்கும் சேர்த்துதான் அடுப்பு எரிந்துகொண்டிருந்தது.ஒருதாய் அவ்வளவுதான் தண்டனை தர முடியும்.அவளுக்கு இரண்டு பெண்கள்

மனிதனின் சமூகமயமாக்கல் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது.ஏழுவயதிற்குள்ளாகவேமனப்பாங்கில் பெரும்பாலானவை உருவாகிவிடுகிறது.ஆளுமை உருவாக்கத்தில் மிக அதிகமாக தன்தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறான்.முதல் ஆசிரியராக மதிப்பீடுகளை உருவாக்குவது அன்னையன்றி வேறு யாருமில்லை.எனவே தொடர்ந்து பெண்களையும்,சமூக பிரச்னைகளையும் இணைத்தே கவனிக்க வேண்டும்.

நாம் சிந்திப்போம் தோழர்களே .....

சமூகத்தில் எப்போதும் இரண்டாந்தர இனமாக வாய்ப்புகளற்று,தேவையான கல்வியற்று,அங்கீகாரமும் இல்லாதபெண்கள் மனதளவிலும் உடலளவிலும் சமூகத்திற்கு மனிதனைஉருவாக்கி வழங்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.வீட்டில் சிறுநீர் கழிப்பது தெரியாமல் மனஅழுத்தத்தில் முடங்கிக்கிடக்கும் பெண் தனது குழந்தைகளுக்கு எதை சொல்லித்தருவாள் ?

அனைத்து சமூகப்பிரச்னைகளுக்கும் பலியாடுகளாக இருப்பதுபெண்கள்தான். வறுமையில்,மதுவின் போதையில், பாலியல் தொழிலில், மனக்கோளாறு நிலைகள்தரும் வலியில், வரதட்சிணை பேரத்தில்,என்று அனைத்து சிக்கல்களிலும் , நோய்க்கூறுகளிலும் சிதைக்கப்படுவது பெண்கள்தான்.அவள் எப்படிநல்ல மனிதர்களை சமூகத்திற்கு வழங்கமுடியும்?

பணியிடங்களில் ,வீட்டிற்கு வெளியே, நேரும்ஆத்திரங்களையும்,சேரும் உமிழ் நீரையும் மனைவியிடத்தில் கொட்டுகிறான்.உடல் இச்சை தீர்ந்தபின் மாதவிலக்கு துணியாய் இருட்டில் வீசி எறிகிறான்.குரலின்றி ஊமையாய் தன்னிலை இழந்த பெண் கற்பிக்கும் பணியை செய்கிறாள்.அவள் சமூகத்துக்கு வழங்கப்போவது மன வலிமையுள்ள மனிதனையா?

கருவில் நசுக்கிக்கொன்றோம், பாலியல் தொழிலாளிகளாக தெருவில் அலையவிட்டோம்,வரதட்சிணை கேட்டு கொளுத்தினோம்,உடலை காட்ட வைத்து பணம்சம்பாதித்தோம்,அறிவு பெறாமல் முடக்கினோம்,கேலிப்பொருளாக்கி,போகப்பொருளாக்கி விலை பேசி தூக்கி எறிந்தோமே அவள்........அன்னையன்றி வேறு யார்?



பத்திரிகையும், டி.வி.யும் தற்கொலையைத் தூண்டுகிறதா?

அடுத்தடுத்த தற்கொலைகள் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது.ஒரு கல்லூரி மாணவி,இரண்டு பள்ளி மாணவிகள் தூக்கிட்டும்,தீக்குளித்தும் தங்களை மாய்த்துக் கொண்டார்கள்.இதெல்லாம் உங்களுக்கு தெரிந்த செய்திதான்.தற்கொலைகள் பரபரப்பாக ஊடகங்களில் இடம் பிடித்த்து.தலைப்பு செய்திகளில்!தமிழகத்தில் இதைப் பற்றி பேசாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் மனச்சோர்வுதான் என்கிறது உளவியல். வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி,துயரம்,இழப்பு போன்றவை ஒருவருக்கு மனதில் பாதிப்பை உருவாக்கி மன அழுத்த்த்தை ஏற்ப்படுத்தி விடுகிறது.தொடர்ந்து வாழ்வில் ஈடுபாடு கொள்ளாமல் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்யலாம்.பெரும்பாலான தற்கொலைகள் நன்கு திட்டமிட்டே நடக்கும்.
மாணவிகள் அனைவரும் ’டீனேஜ்’.மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும்,தான் மதிக்கப்படவேண்டும்,பேசப்படவேண்டும் என்பதற்காக எதெதையோ செய்யும் வயது.அதிலும் பெண்களுக்கு ஒரு அவமானமென்றால்?.நமது சமூகம் திருடனை ஏற்றுக் கொள்ளும்,திருடியை ஏற்றுக் கொள்ளாது.தனது ’இமேஜ்’ பாதிக்கப் படுவதை வாழ்க்கை முடிந்து போய் விட்ட்தாகவே உணர்வார்கள்.

ஒரு குடும்பத்தில் ஏற்கனவே அக்குடும்பத்தின் உறுப்பினர்களோ,உறவினர்களோ தற்கொலை செய்து கொண்ட வரலாறு இருந்தால் அக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் மனச் சோர்வால் பாதிக்கப் படும்போது தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.ஏன்? மனச்சோர்வு சிலருக்கு மரபணுக்கள் காரணமாகவும் வரலாம் என்கிறார்கள்.இன்னொரு விஷயம் இருக்கிறது.

இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற ஒருவரை நிபுணர் ஒருவர் ஆலோசனைக்கு உட்படுத்தினார்.முடிவில் அவர் கண்டறிந்த்து,தற்கொலைக்கு முயன்றவரின் சிறு வயதில் அவரது தம்பி இறந்து விட்டார்.குடும்பம் முழுதும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நேரம்.பாவம் அந்த பையனை யாரும் கண்டுகொள்ளவில்லை.பசியைக்கூட யாரும் கவனிக்கவில்லை.எல்லோரும் இறந்து போனவனைப் பற்றித்தான் பேசினார்கள்.

அந்த இளம் வயதில் சிறுவனுக்குத் தோன்றிய எண்ணம்-என்னை பிறர் கவனிக்க வேண்டும் என்றால் நான் சாக வேண்டும்.இந்த எண்ணம் பெரியவர் ஆன பின்னும் அவரிடம் தற்கொலை எண்ணத்தை தூண்டியவாறே இருக்கிறது.சினிமாவில் பார்த்திருப்பீர்கள்-ஜோதிகாவை நினைத்துக் கொள்ளுங்கள்-சிறுவயது அனுபவங்கள் மனதில் எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை.

இப்போது உங்களுக்கு தலைப்பின் பொருள் புரிந்திருக்கும்.ஒரே கிராமத்தில்,ஒரே குடும்பத்தில் தொடர் தற்கொலைகளை கவனித்திருக்கிறேன்.கல்லூரி மாணவி பற்றிய செய்திகள்,இரண்டு பள்ளி மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன்.மற்ற இரண்டு மாணவிகளின் வயது பதிமூன்று,பதினான்கு தான்.

நாம் கல்லூரி மாணவி போல பேசப்படுவோம் என்று நினைத்திருக்கலாம்,ஆசிரியையை பழி வாங்கியது மாதிரியும் இருக்கும்.ஆனால் மாணவிகள் தற்கொலை பரபரப்பான செய்தி! ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க முடியுமா?ஏற்கனவே விவசாயிகள் தற்கொலை பற்றிய பதிவிடும்போதே சிந்தித்தவை.இவை.விட்டு விட்டேன்.என்ன செய்யப் போகிறோம்?

காலில் மாட்டிக் கொண்ட பெண் உடைகள்.

காதலிக்கும் பெண் பயன்படுத்தும் பொருட்களை சேமித்து வைக்கும் காதலர்களை திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.உடைகளை திருடுபவர்கள் கூட உண்டு.Fetishism என்று முறையற்ற பழக்கம் ஒன்று இருக்கிறது.பெண்ணின் உடைகள்,பொருட்கள் போன்றவை அவர்களுக்கு பாலுறவு திருப்தியைத் தந்துவிடும்.

உடன் பணியாற்றும் நண்பன் ஒருவனை பார்க்க போயிருந்தேன்.அவனே சமைப்பதுண்டு.சுவையாக சமைப்பதில் கை தேர்ந்தவன்.நான் விருந்தாளியாக போய்விட்டால் சிறப்பு உணவுகள் இருக்கும்.அன்று வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அவனுடைய அறையிலேயே தூங்கிவிட்டேன்.

விழித்துக் கொண்டபோது காலில் ஏதோ மாட்டிக்கொண்டிருப்பதை பார்த்தேன்.பெண்களின் உடைகள் அவை.பத்து துணிகளுக்கு மேலிருக்கும்.எனக்கு குழப்பம்.நண்பன் திருமணமாகாத பிரம்மச்சாரி.அவனும் அறையில் ஆள் இல்லை.வெளியே வந்து பார்த்தால் லேசான தூறல்.
செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் அறையிலேயே மணிச் சத்தம்.எடுத்துப்போகாமல் விட்டு விட்டு போய்விட்டான்.எனக்கு குழப்பம் அதிகமாகிக் கொண்டிருந்த்து.ஒருவேளை உடனடி திருமணம் ஏதாவது செய்து கொண்டிருப்பானோ? அப்படியும் என்னை அழைக்காமல் எப்படி?

நாளிதழ்களில் படித்திருக்கிறேன்.காதலி,காதலன் வீட்டுக்கே சென்று போராட்டம் நட்த்துகிறார்கள்.எந்த பெண்ணாவது நேரடியாக இவனைத் தேடி வந்திருக்குமோ? எனக்கு தெரிந்து அவனுக்கு காதல் இருந்தமாதிரி தெரியவில்லை.இதிலெல்லாம் யாரையும் நம்பவும் முடியாது.

கீழே ஏதோ சத்தம் கேட்கிறமாதிரி இருந்த்து.எட்டிப் பார்த்தேன்.பக்கத்து வீட்டு முன் இருபது பேருக்குமேல் நின்றிருந்தார்கள்.அவர்கள் பேச்சை கவனித்த்தில் ஏதோ திருடு போயிருக்கவேண்டும்.ஒரு பாட்டி வந்து சத்தமிட்டுக் கேட்ட்து.என்னாச்சு? கூட்ட்த்தில் இருந்த ஒருவர் பதில் சொன்னார்.”யாரோ துணிகளை திருடிக் கொண்டு போய் விட்டார்கள்’’

எனக்கு படபடப்பு அதிகமாகிவிட்ட்து.பாவி எங்கே போனான் என்று தெரியவில்லை.துணிகளை திருடும் அளவுக்கு கேவலமானவன் என்று என்னால் நம்பமுடியவில்லை.துணிகளை எடுத்துப் போய் கொடுத்துவிடலாமா?.எப்படி உன்னிடம் வந்த்தென்று கேட்டால்? தர்ம சங்கடமாக இருந்த்து.இனி இந்த அறைக்கு வரவே கூடாதென்று முடிவு செய்தேன்.

வெளியே பார்ப்பதும்,அறைக்குள் வருவதுமாக சிரமத்துடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன்.கூட்டம் கலைந்து விட்டிருந்த்து.வெகுநேரம் கழித்து எங்கிருந்தோ வந்தான்.”தூங்கி எழுந்தாச்சா? என்றான் சிரித்துக் கொண்டே! பாவி,என்னென்னவோ செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவன் போல் பாவனை காட்டுகிறான்.

அறைக்குள் நுழைந்தவன் துணிகளை அள்ளி எடுத்தான்.உடலோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு வேகமாக கீழே இறங்கினான்.மாடியில் நின்று அவனை கவனித்துக் கொண்டிருந்தேன்.பக்கத்து வீட்டில் நுழைந்தான்.மீண்டும் கூட்டம் கூடி விட்ட்து.அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.வெட்கப்பட்டுக் கொண்டே வந்தவன் “இல்ல,மழை வர மாதிரி இருந்த்து.நனைஞ்சிடும்னு எடுத்து வச்சேன்”

பெண்கள் ஏன் அவற்றை எதிர்ப்பதில்லை?


பணியாளர்களுக்கான ஆரம்ப பயிற்சி வகுப்பு.பதினொன்று பெண்களும்,பதினான்கு ஆண்களும் அப்பயிற்சி வகுப்பில் இருந்தோம்.ஒரு வார முகாமில் எங்களது மூத்தவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.நடுநடுவே விளையாட்டும்,நகைச்சுவையும் உண்டு.ரிலாக்ஸ் ப்ளீஸ் வகை.


இருபத்தைந்து பேரும் முதுநிலை பட்ட்தாரிகள்.சிலர் அதற்கு மேலும் படித்திருந்தார்கள்.அவ்வப்போது ஜோக்குகள் சொல்லவேண்டும்.அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்தான் தெரியும் என்றார் ஒருவர்.பரவாயில்லை என்றார்கள் நண்பர்கள்.அவரது நகைச்சுவை அவ்வளவு ஆபாசமாக இல்லை.




அடுத்தடுத்து இது தொடர்ந்து கொண்டிருந்த்து.எல்லையை தாண்டி போய்க்கொண்டிருந்த்து என்று சொல்ல வேண்டும்.நான் பெண்களை கவனித்தேன்.அவர்களில் சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.அல்லது தலையை குனிந்து கொண்டார்கள்.சிலர் முறைத்தார்கள்.அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.


பெண்களில் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.உணவு இடைவேளையில் ஜோக் சொன்னவன் முகத்தை பார்த்து பலர் பேச மறுத்தார்கள்.யாரும் முறையிடவில்லை.சகஜமானது போல காட்டிக் கொண்டார்கள்.அவர்கள் பட்ட்தாரிகள் இந்த மாதிரி எவ்வளவோ சந்தித்திருப்பார்கள்.



உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கம்போல ஜோக்க ஆரம்பித்தபோது,நான் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தேன்.(நீ ரொம்ப நாளாவே இப்படித்தானா?)சில ஆண்கள் என்னை அற்பமாக பார்த்தார்கள்.ஆனால்,அந்த வகை காமெடிகள் நின்று போய் விட்ட்து.அடுத்த நாள் ஏதோ நிகழ்வின்போது “நமக்கெல்லாம் வயதாகிவிட்ட்தா?” என்று பயிற்சியாளர் கேட்டார்.நான் பதில் சொல்லவில்லை.


பணியிடங்களில் பெண்கள் விருப்பத்துக்கெதிரான பாலியல் சொற்களோ,சைகையோ,காட்சிப்படமோ தண்டனைக்குரிய குற்றம் என்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.புகார் செய்ய முடியும்.பல இடங்களில் அப்படிப்பட்ட குழுக்கள் இல்லை என்பது துரதிர்ஷ்டம்.பணி புரியும் பட்ட்தாரி பெண்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் வாய் மூடி மௌனமாக இருந்தார்கள்?



ஏனென்றால், அவர்கள் இரண்டாந்தர பாலினம் என்று சொல்லியே வளர்க்கப்பட்டார்கள்.ஆணுக்கெதிராக பேசக்கூடாது என்று சொல்லித்தந்தார்கள்.தங்களுக்கு குரல் இல்லை,அது எடுபடாது என்று அப்பெண்கள் நினைத்தார்கள்.ஒரு பெண் நியாயத்தை பேச முடியும் என்று அவர்களுக்கு சொல்லித்தரவில்லை.


ஏனென்றால்,தங்களது தாயும்,பாட்டியும் அப்பாவையோ,தாத்தாவையோ எதிர்த்து பேசி அவர்கள் பார்த்த்தில்லை.பொது இடங்களில் சத்தமிட்டு பேசுவதோ,சிரிப்பதோ ஏளனமாக பார்க்கப்பட்ட்து.தங்களது பிரச்சினைகளை,ஆதங்கங்களை தாயிடமோ,இன்னொரு பெண்ணிடமோ மட்டும் ரகசியக்குரலில் தெரிவிப்பதுதான் வழக்கம்.


ஏனென்றால்,’ஆம்பளைங்களே அப்படித்தான்”அவர்களிடம் எதற்கு வீண்பேச்சு என்று கருதினார்கள்.எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்ணைப் பற்றி அவதூறு கிளப்பக்கூடும் என்று அஞ்சினார்கள்.அவர்களுக்கு கல்லூரியில் அவர்களது உரிமைகளை கற்றுத்தரவில்லை.


எனக்கு முழுமையாக தெரியவில்லை.உங்களுக்குத் தெரியுமா?

குடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் குத்தாட்டம் போட்ட பெண்.

சேலம் பேருந்து நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்று.ஒரு பெண் மித மிஞ்சிய போதையில் கலாட்டா செய்து கொண்டு,வழியில் எதிர்படும் பேருந்துகளை நிறுத்திக் கொண்டு ரகளையில் ஈடுபட்டிருக்கிறார்.நடுநடுவே குத்தாட்டம் வேறு.

நாளிதழில் படித்தவுடன் நண்பனின் கணிப்பு அவர் பாலியல் தொழிலாளியாக இருக்க்க் கூடும் என்பது.பெரும்பாலான பாலியல் தொழிலாளிகள் குடிப்பவர்கள் என்பதும்,புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறவர்கள் என்றும் தொடர்புடைய தொண்டு நிறுவன பணியாளர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
குற்ற உணர்வு என்பது தவறு செய்து விட்டோம் அல்லது செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு.சமூகம் பாலியல் தொழிலையும்,அவர்களிடையே குற்ற உணர்வையும் சேர்த்தே வளர்த்து வந்திருக்கிறது.குற்ற உணர்வை தாங்கிக் கொள்ளவே குடிக்கிறார்கள் என்பது நிஜம்.

பேருந்து நிலையங்களில் போதையில் கமெண்ட் அடித்து ஆட்களை தேடிக்கொண்டிருக்கும் பெண்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் மீது இரக்கமும் அனுதாபமுமே ஏற்பட்டிருக்கிறது.தேசம் சமூக மேம்பாட்டில் தோல்வியடைந்த்தன் அடையாளம் அவர்கள்.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு மறுவாழ்வு தரும் வகையில் ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது.சட்ட பாதுகாப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.பாலியல் தொழிலை சமூகத்தில் இருந்து அகற்றிவிட முடியாது என்று பலரும் வாதிடுகிறார்கள்.

பல தொண்டு நிறுவன்ங்கள் பாலியல் தொழிலாளிகளுக்கு பணியாற்றி வருகின்றன.அவர்களிடம் பட்டியல் இருக்கிறது.இதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு பணியை ஏற்படுத்த வேண்டும்.வெற்றிபெறுமா என்பதில் வாதப்பிரதிவாதங்கள் இருக்கின்றன.

மனைவியை இழந்தவர்கள்,வீட்டை விட்டு பிரிந்திருப்பவர்கள்,திருமணமாகாமல் தனித்திருப்பவர்கள்,ஆர்வம் கொண்டுள்ள இளம் வயதினர்,பணி காரணமாக நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் ஆகியோர் இவர்களது வாடிக்கையாளர்கள்.

தொடர்ந்து வாடிக்கையாளர்கள் குடிக்க வற்புறுத்தும்போது அல்லது எளிதில் கிடைப்பதால் சில நேரங்களில் அதிகம் குடிப்பது தவிர்க்க முடியாமல் போகிறது.போதையில் தாறுமாறாக நடந்து கொள்வதும்,பொது மக்களுக்கு இடையூறு நேர்வதுமாக ஆகி விடுகிறது

கன்னிப்பெண்ணைப் பிடித்துக் கொண்ட வாலிப பேய்.

வயசுப் பெண் என்றால் தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.திருத்தமாக உடை உடுத்தி,யாராவது பார்த்தால் மனைவியாகவோ,மருமகளாகவோ கொள்ள மனம் வரவேண்டும்.அந்த பெண் அப்படியில்லை.சமீப காலமாக சரியாக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை.எந்த வேலை சொன்னாலும் ஈடுபாட்டுடன் செய்வதில்லை.

அப் பெண்ணின் தாய்க்கு பாட்டி யோசனை கூறினாள்.’’போய் அந்த சாமியிடம் குறி கேட்டுவிட்டு வா”.அம்மா குறி கேட்டு விட்டு வந்து சொன்னது:’’அவளுக்கு பேய் பிடித்திருக்கிறதாம்” இரவு குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்தார்கள்.பேய் ஓட்டுபவனை அழைத்து வர வேண்டும்.அண்ணனுக்கு தெரியும்.
அண்ணன் காலையிலேயே பேய் ஓட்டுபவனை காண கிளம்பிச் சென்றார்.திரும்பி வந்து,”பேய் ஓட்ட பவுர்ணமிக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்.இதுல இருக்கிற பொருளெல்லாம் தயார் செய்ய வேண்டும்.எலுமிச்சம்பழம்,விபூதி,குங்கும்ம்,வேம்பு இலை,ஆணி,சாட்டை,போன்ற பொருட்கள் முக்கியமாக அதில் இருந்த்து.

இதெல்லாம் என் வீட்டிலிருந்து பத்தடி தூரம் உள்ள ஒரு வீட்டில் நடந்தவை.எங்கள் வீட்டிலும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு பேய் ஓட்டுவதை பார்க்கவேண்டுமென்று ஆசை.அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.அம்மாவிடம் அனுமதி கேட்டேன்.உடனே மறுக்கப்பட்டுவிட்ட்து.

பவுர்ணமி வந்து விட்ட்து.காலையிலிருந்து எனக்கு பரபரப்பு.எப்படியாவது அதை பார்க்கவேண்டும்.அப்பாவிடம் போய் கேட்டேன்.”அது இரவு பத்து மணிக்கு மேல்தான்!அவ்வளவு நேரத்துக்கு நீ அங்கெல்லாம் போக முடியாது”.என் முகம் போன போக்கை அம்மா கவனித்து விட்டாள்.இன்னொரு அண்ணனை பாதுகாப்புக்கு துணை சேர்த்து அனுமதி கிடைத்து விட்ட்து.

இரவு பத்து மணிக்கு மேல் முழு நிலவு இரவென்ற எண்ணத்தை தராமல் போய்க் கொண்டிருந்த்து.சாமியாருடன் சேர்த்து ஏழெட்டு பேர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.”நீ எதுக்கு வர?” என்றார்கள் யாரோ என்னைப் பார்த்து!குடியிருப்பிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல்போய் விட்டோம்.

கல்லுக்கு நீர் தெளித்து சாமியாக்கி பூசைகள் ஆரம்பமானது.பேய் ஓட்ட வந்திருந்தவர் பாட்டொன்றை பாட ஆரம்பித்தார்.அந்த அக்கா தலையை வேகமாக ஆட்டி ஆட ஆரம்பித்த்து.”யார் நீ? சொல்? என்று உறுமினார் வேப்ப இலையை தலை மீது அடித்தார்.வேம்பு சக்தி.கடவுள்.பேய் அலறி ஏதோ ஒரு பெயரை கூறியது.

”நான் நினைத்தேன்’ என்றார் ஒருவர்.”கல்யாணமாகாமல் தூக்கு போட்டுக் கொண்டு செத்துப் போனானே அவன் தான்”.கடவுளின் அருள் தாங்காமல் பேய்,”நான் போய் விடுகிறேன் என்று ஒப்புக் கொண்ட்து.எழுந்து ஓடு என்று சாமி உறும அந்த அக்கா எழுந்து ஓட ஆரம்பித்த்து.

இருவர் இரு புறமும் பிடித்துக் கொண்டு ஓட,என்னால் முடியவில்லை.துணைக்கு வந்தவரின் பெயரை சத்தமாக்க் கூறிக்கொண்டே நானும் ஓடிக் கொண்டிருந்தேன்.முடிந்த பிறகுதான் போய் சேர்ந்தேன்.புளிய மரமொன்றில் அக்காவின் தலை முடி கொஞ்சம் இருக்குமாறு ஆணி அடித்திருந்தார்கள். முடிகள் தொங்கிக் கொண்டிருந்த்து.

புளிய மரம் பேய் குடியிருக்குமிடம் என்பது கிராமப்புற நம்பிக்கை.புளிய மரத்தின் கீழே உறங்க்க் கூடாது.அக்கா அமைதியாக காணப்பட்டார்.அவரது தந்தை கனிவுடன் விசாரித்தார்.”இப்போ நல்லா இருக்காம்மா? பேயை புளிய மரத்தில் விட்டு விட்டு நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.பேய் பிடித்தல் மன நல பாதிப்புதான் என்பதை பிறகு தெரிந்து கொண்டேன்

ரஜினி ரசிகர் மன்றம் எதற்காக துவங்கினார்

ரசிகர் மன்றங்கள் பற்றி விவாதங்கள் இருக்கின்றன.நல்ல காரியங்கள் செய்யும் மன்றங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.நடிகர்கள் பின்னால் திரள்வதன் காரணம் என்ன? தன்னை அடையாளம் காட்டும் பொருட்டா?

ரஜினிகாந்த் திரைப்பட வாழ்வில் பஞ்சு அருணாசலத்திற்கு முக்கிய இடம் இருப்பதாக கருதுகிறேன்.அநேகமாக குருசிஷ்யன் பட்த்திலிருந்துதான் ரஜினி நடிப்பில் நகைச்சுவை கூட்டப்பட்ட்து என்று நினைக்கிறேன்.இந்த அணுகுமுறை மேலும் ரஜினியை ரசிகர்களால் விரும்பவைத்த்து.

வளரிளம் பருவத்தில் ஒருவர் யாருடைய ரசிகன் என்பது முக்கியமான கேள்வி.ஏதோ ஒரு வகையில் அது ஒட்டிக்கொண்டுவிடும்.எண்பதுகளின் இறுதியில்தான் எனக்கு சினிமா அறிமுகம்.அப்போது ரஜினி அல்லது கமல்தான் இளையோர்களின் தேர்வு.நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
எனக்கொரு கடிதம் வந்த்து.பள்ளியில் உடன் பயிலும் நண்பன் அனுப்பியிருந்தார்.அஞ்சல் அட்டை.விடுமுறை நாட்கள் தவிர தினமும் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம்.நேரில் பேசிக்கொண்டாலும் அந்த விஷயத்தை அவன் சொல்லவில்லை.அதிக தூரம் இல்லை.பக்கத்து கிராம்ம்.

அஞ்சல் அட்டையில் கண்ட விஷயம் என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.ஆமாம்.நண்பர்கள் குழு சேர்ந்து ரஜினிக்கு ரசிகர்மன்றம் ஆரம்பிக்கப் போகிறோம்.அதற்கு நான் செயலாளராக இருக்க வேண்டும் என்பது அவனுடைய கோரிக்கை.என் தகுதிக்கு பொறுப்பு தானாக தேடி வந்த்து.

எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுவிட்ட்து.ரசிகர்மன்றம் ஆரம்பித்து என்ன செய்யப்போகிறோம் என்பதெல்லாம் தெரியாது.படிப்பு மறந்து ரஜினி பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.கடிதம் அனுப்பிய நண்பன் மீது பாசமும்,நட்பும் அதிகமாகிவிட்ட்து.

அடுத்த நாள் பள்ளியில் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.தர்மத்தின் தலைவன் பெயர் வைத்த்தாக நினைவு.இருபதுபேர் சேர்ந்தாகிவிட்ட்து.நண்பனின் சகோதரன்ஒருவன் ஓவியம் நன்றாக வரைவான்.அவரிடம் தெரிவித்து ரஜினி படம் வரைந்து,கீழே மன்றத்தின் பெயர்,ஊர்,எங்களுடைய பெயர் எல்லாம் போட்டு ரஜினி படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டருக்கு தரவேண்டும்.

பழைய நாளிதழில் சுற்றிய பிரேம்போட்ட ஓவியத்துடன் ஒரு சனிக்கிழமை கிளம்பி தியேட்டருக்கு போனோம்.வெளியில் நின்றிருந்த காவலாளி என்ன விஷயம் என்று கேட்டார்.உள்ளே அனுப்பிவிட்டார்.திரையரங்க மேலாளரை பார்த்தோம்.நன்றாக இருக்கிறதென்று பாராட்டினார்.டீ வாங்கிக் கொடுத்தார்.எங்கள் அன்பளிப்பை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

ரஜினி படம் முதல் காட்சிக்கு எங்களுக்கு டிக்கெட் தரவேண்டும் என்று நண்பன் கேட்டான்.அவர்”நிச்சயமாக என்று உறுதியளித்தார்.”மாவட்ட தலைவரைபோய் பாருங்கள்’’என்று முகவரி தந்தார்.முகவரி தேடி கண்டுபிடித்துபோனால் அவர் வீட்டில் இல்லை.இன்னொரு நாள் பார்க்கலாம் என்று திரும்பி விட்டோம்.ஆனால் அதற்குப் பிறகு அவரை சந்திக்கவேயில்லை.

எங்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட்து.ரசிகர் மன்றத்தை மறந்து போய்விட்டோம்.ஆனால்,சினிமா பார்ப்பதை மட்டும் விடவேயில்லை.இப்போதெல்லாம் குறைவான படங்கள்தான் பார்க்கிறேன்.அதுவும் விமர்சன்ங்களையெல்லாம் படித்துவிட்டு நன்றாக இருக்கும் என்று நம்பினால் மட்டும்

தமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா?

மக்கள் தொகை பெருக்கல் விகித்த்தில் அதிகரிக்கும்போது உணவு உற்பத்தி கூட்டல் விகித்த்தில் அதிகரிக்கும் என்றார் பொருளாதார அறிஞர் மால்தஸ்.ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கையும், திரையரங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டேபோகிறது.

தமிழ் சினிமா வெள்ளிவிழாக்களை தொலைத்து விட்ட்து.இளைய தலைமுறைக்கு வெள்ளிவிழா என்றால் என்னவென்றே தெரியாது.திரையரங்குகளில் உள்ள பழைய வெள்ளிவிழா கேடயங்களை காட்டி விளக்க வேண்டியிருக்கும்.தொழில் தேய ஆரம்பித்து வருடங்கள் கடந்துவிட்ட்து.

“மண்டபமாக மாற்றி விடலாம் என்றால் என் பையன் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறான்’’ என்கிறார் தியேட்டர் அதிபர் ஒருவர்.”கொஞ்ச நாள்ள அவரும் ஒத்துக்குவார்”என்றேன் நான்.’’பெரும்பாலும் இளஞ்சோடிகள்தான் படம்பார்க்க வருகிறார்கள்.அவர்களும் முடியும் முன்பே கிளம்பி விடுகிறார்கள்’’ என்கிறார்.”தியேட்டரை வேலை செய்யலாம் என்றால் கூட வரும் பணம் போதவில்லை.

சி.டி.யை காரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அது முழுதும் உண்மையல்ல! சி.டி.கூட ஓரளவு நல்ல திரைப்படங்களின் சி.டி.தான் விற்பனையாகிறது என்கிறார்கள்.ரசனையில் மாற்றம் வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. நல்ல கதை, திரைக்கதையின்றி புதுமையின்றி, உழைப்பில்லாமல் எடுக்கப்படும்  சினிமாவும் ஒரு காரணம்.


மோசமான சினிமாக்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்து சினிமா ரசிகர்கள் தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.பணத்தை வாங்கிக்கொண்டு தரமற்றதை தலையில் கட்டுவது ஒரு மோசடியும்கூட.குத்துப்பாட்டு,நாலுஃபைட்,ஆறு பாடல்கள் இருந்தாலே படம் ஓடி விடும் என்ற மூடநம்பிக்கை தமிழ் சினிமாவுக்கு வெந்நீர் ஊற்றிவிட்ட்து.


ஒரு படம் வெளியானவுடன் பிரபல நடிகராக இருந்தால்,அவரது ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.மற்றவர்கள் நல்ல விமர்சனம் கேள்விப்பட்டே சினிமாவுக்கு போகிறார்கள்.பிரபல நடிகர்கள் இல்லாத நல்ல கதையம்சம் உள்ள சினிமாக்கள் ஓரிருவார இடைவெளியிலேயே வரவேற்பு பெறுவது ஒரு உதாரணம்.



தியேட்டர்களின் லட்சணம்,மூட்டைப்பூச்சி,சமூக விரோதிகள் தொல்லை போன்றவையும் சி.டி. வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்கிறார்கள்.ஆனால் கிடைக்கும் வருவாயில் பராமரிப்பு செய்ய முடியவில்லை என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்.அதிக விலை என்றாலும் யாரும் வருவதில்லை.


டி.வி. ஒரு முக்கிய விஷயம்.மோசமான படமென்றால் விரைவில் சின்னத்திரைக்கே வந்துவிட்டுப் போகிறது என்ற நம்பிக்கையும் காரணம்.சீரியல்களுக்கு அடிமையாகிக் கிடப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.இதற்கு மோசமான சினிமாவே பரவாயில்லை.



அதிகம் பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளருக்கு இது ஒரு சூதாட்டம்.நடிகர்,நடிகைகளுக்கும் கவலையில்லை.மிஞ்சிப்போனால் சீரியல்கள் இருக்கிறது.திரைப்பட தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலைதான் பரிதாபம்

மனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?

எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகிறோம்.ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது.எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும்.மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும்.இப்படிப்பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அவரவர்களுடைய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும்.சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது.இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.இவர்களுக்கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன.அல்லது அவற்றை வளர்த்துக் கொண்டார்கள்.

அவை 

எதிலும் நம்பிக்கை கொண்டிருப்பது.(confidence)


நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.என்னால் முடியக்கூடிய ஒன்றுதான் என்ற நம்பிக்கையை எப்போதும் மனதில் தாங்கி இருக்கிறார்கள்.தனக்கு திறன் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
தன்னைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள்.
சுய மதிப்பு .(self esteem)

நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம்மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமும் ,யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணமும் இருக்கிறது.


கடுமையாக உணர்வதில்லை.(sense of control)

பெரிய தீர்க்க முடியாத பிரச்சினையாக எதையும் நினைப்பதில்லை.கடிவாளத்தை கையில் வைத்திருக்கிறார்.உணர்ச்சிகளில் சிக்கி அலைக்கழிக்கப் படுவதில்லை.

நல்லதே நடக்கும் (optimism)

தனது முயற்சிக்கு நல்ல விளைவுகளை எதிர்நோக்குகிறார்.இந்த நம்பிக்கை தடுமாற்றமில்லாமல் செயல்பட வைக்கிறது.


நேர்மறை எண்ணங்கள்.(positive thinking)

அவர் நேர்மறையாக சிந்திக்கிறார்.எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறார்.

மேலே சொல்லப்பட்டவை நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள சொல்லப்பட்டவைதான்.இந்த தகுதிகள் நமக்கு இருக்கிறதா என்று பார்க்கவும்,இல்லாவிட்டால் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.

பொதுமக்கள் பெரும்பாலானவர்களும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் பேருந்துகள் தொடர்பானது.சுத்தம் இல்லாத பேருந்துகள்,ஓட்டை உடைசல்,மழை வந்தால் உள்ளே கொட்டும்.தூசு அலர்ஜி உள்ள நோயாளிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.அப்புறம் விலை ஏறினாலும் ஏறாவிட்டாலும் எப்போதும் தீராத பிரச்சினை சில்லறை பிரச்சினை.

ஒரு ரூபாய்,50 பைசாவெல்லாம் நட்த்துனர்களுக்கு பணமே கிடையாது.யாராவது கேட்டுவிட்டால் அற்பமான புழுவைப்போல பார்ப்பார்கள்.ஆனால் ஒரு ரூபாய் குறைவாக கொடுத்தால் பேருந்தை விட்டு இறக்கி விட்டு விடுவார்கள்.நட்த்துனர்கள் மனப்பாடம் செய்துவிட்ட வார்த்தை’’ மீதி சில்லறை அப்புறம் தருகிறேன்”.சரியான சில்லறை வைத்துக்கொள்ளுங்கள்,என்னிடம் சில்லறை இல்லை!”
50 பைசா சில்லறை தராத காரணத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு.அடி வாங்கிய,சண்டையை சந்தித்த நட்த்துனர்களும் உண்டு.ஆனால் எல்லோருக்கும் வழக்கு தொடுக்கவும்,சண்டை பிடிக்கவும் நேரம் இருப்பதில்லை.நாம் இதை சில்லியாக எடுத்துக்கொண்டு நகர்ந்துவிடுகிறோம்.
நானும் நண்பரும் வெளியூர் பயணத்திற்காக பேருந்து நிலையத்தில் இருந்தோம்.புத்தகம் வாங்கச்சென்று திரும்பினால் நண்பர் வயதான் ஒருவருக்கு பணம் தருவதை பார்த்தேன்.பாட்டி பணம் வாங்கிக் கொண்டு கும்பிடுவிட்டு சென்றார்.பார்த்தால் பிச்சை எடுப்பவர் போல தெரியவில்லை.விசாரித்த பிறகு தெரியவந்த விஷயம்.
பாட்டிக்குநான்கு ரூபாய் சில்லறை தரவேண்டும். கண்டக்டர்,சில்லறை இல்லை பேருந்துநிலையத்தில் தருகிறேன் என்று சொல்லிவிட்டார்.பேருந்து நின்ற பிறகு இறங்கிப் பார்த்தால் கண்டக்டர் ஆளையே காணோம்.நகரப்பேருந்து பிடித்து கிராமத்துக்குப் போக வேண்டும்.இரண்டு ரூபாய் குறைவாக இருக்கிறது.காத்திருந்து பார்த்துவிட்டு யாரையாவது கேட்கலாம் என்று கேட்டு விட்டார்.
எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.திருப்பத்தூர் சென்றுவிட்டு கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.நூறு ரூபாய்க்கு மீதி சில்லறை பஸ் ஸ்டாண்டில் தருகிறேன் என்று சொல்லிவிட்டார் கண்டக்டர்.இறங்கிப்பார்த்தால் மனிதர் கிடைக்கவில்லை.இறங்கியவுடன் சாப்பிடப் போய்விட்டு அரைமணி கழித்து வந்தார்.கடைசி பஸ்ஸை தவற விட்டுவிட்டேன்.
நாங்கள் மட்டும் சில்லறைக்கு எங்கே போவோம் என்று கேட்கிறார்கள்.பயணம் செய்யும் அத்தனை பயணிகளும் எப்போதும் சரியான சில்லறையுடன் செல்ல வேண்டுமா? சாத்தியமான ஒன்றா? புதியதாக ஒரு ஊருக்குப் போகும்போது எவ்வளவு கட்டணம் என்று கேட்டுவிட்டு சில்லறை மாற்றி ஏற முடியுமா? சில இடங்களுக்கு ஒரு மணி,அரைமணி நேர இடைவெளியில்தான் பஸ் இருக்கும்.அவசரத்தில் கடைக்கு ஓடி சில்லறை வாங்கிக் கொண்டிருப்பது கஷ்டம்.
கண்டக்டர் தனி நபர் அல்ல.அரசு நிறுவனத்தில் பணியாற்றுபவர்.அரசு வங்கியில் இருந்து பெற்று இவர்களுக்கு சிலநூறு ரூபாய்களுக்கான சில்லறையை வழங்க முடியும்.பேருந்து நிலையத்தில் உள்ள கிளை அலுவலகம் மூலமாகவே வழங்கலாம்.தவிர அரசுப் பேருந்து என்பது அதிக மக்கள் பயன்படுத்தும் விஷயம்.மாதம்தோறும் நுகர்வோர்,அதிகாரிகள் கூட்டங்களை நட்த்தினால் எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்.

பிரபல பதிவர்கள் ஏன் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்?

பதிவுலகில் ஒரு கருத்து இருக்கிறது.பிரபலமாக இருப்பவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.அவர்களுக்கு வாசகர்கள் குறைந்து விடுகிறார்களா?சிலர் எழுதாமல் நிறுத்தி விடுகிறார்கள்.மதுரை குணா ஒருமுறை சொன்னார்.திருத்தணி போய் வந்தேன்,வீட்டுக்கு வந்தவுடன் அந்த அனுபவத்தை எழுதாமல் இருக்க முடியவில்லை.ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.அப்புறம் கிழித்துப் போட்டுவிட்டேன்.

எளிதாகவே இருக்கிறது.சொல்வதற்கு ஏதாவது இருக்கும்போது எழுதாமல் இருக்க முடியாது.உள்ளே இருப்பதை வெளியில் கொட்டித்தான் ஆக வேண்டும்.ஏதோ ஒரு ஊடகம்.அது வலைப்பதிவாக இருக்கலாம்,பேப்பரில் இருக்கலாம்.பேஸ்புக்கிலும் இருக்கலாம்.மனிதன் வெளியே கொட்டுவதற்கு வசதியாக இருப்பதால்தான் இவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது.
சில காலம் எழுதாமல் போய்விட்டவர்கள் மீண்டும் பதிவிடுவது தவிர்க்க முடியாது.ஆனால் வெளிப்பாட்டுத்திறன் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.சிலர் போனில் நண்பர்களிடம் கதை,கதையாக பேசி விடுவார்கள்.கொஞ்சமும் வாசிப்பு பழக்கம் இல்லாமல் மற்றவர்களை பார்த்து வலைப்பதிவு ஆரம்பிப்பவர்கள் காணாமல் போனால் மீண்டும் வருவது சாத்தியமல்ல!இவை பெரும்பாலும் வெட்டி ஒட்டுதலையும்,செய்தியையும் அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
புதிய பதிவர்களின் வருகையும் பிரபலங்கள் மாறிக்கொண்டேயிருக்க காரணமாக சொல்ல முடியும்.தவிர வலைப்பதிவுகளில் வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் பொருளும் இன்னொரு காரணம்.அரசியல்,சினிமா,தனி மனிதனுக்கு பயன் தரும் செய்திகள் போன்றவைதான் அதிகம் படிக்கப்படுகின்றன.இவற்றையெல்லாம் குறிப்பிட்ட ஒருவர் என்றில்லாமல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும்.துறை சார்ந்த ஒருவர் எழுதும்போது கொஞ்சம் அழுத்தம் இருக்கும்.
கதை,கவிதை உள்ளிட்ட புனைவுகளுக்கு அதிக வரவேற்பில்லை.கதையில் சில விஷயங்களை அழுத்தமாக மனதில் நிற்குமாறு சொல்ல முடியும்.சிலவற்றை கவிதையில் சொல்ல முடியும்.நிஜமான தனித்திறமை என்பது புனைவுகளில் இருக்கிறது.ஒருவரது சிறுகதை,கவிதை போன்றவற்றை படிக்க நேரும் வாசகர் பிடித்துப்போனால் அவரை எப்போதும் பின் தொடர்கிறார்.
இன்னொன்று பதிவுகளைப்பொருத்தவரை ஒரு பதிவை வெற்றியடையச் செய்வது வாசகர்கள் அல்ல! சில பதிவுகளைத்தவிர்த்து பெரும்பான்மையாக பதிவர்களை சார்ந்திருக்கிறது.வாக்கு,கருத்துரைகளில் பங்கேற்பவர்கள் பதிவர்களே! இதில் பொறாமை,அரசியல் எல்லாம் பிரபலங்களை சுற்றியே இருக்கின்றன.மெயில் அனுப்பி,சாட் செய்து அரசியல் செய்வதை ஒரு சிலர்தான் விரும்புவார்கள்.
சினிமாவைத்தான் சூதாட்டம் என்பார்கள்.வலைப்பதிவுகளும் அப்படித்தான் இருக்கின்றன.எந்த பதிவு ஹிட்டாகும்,எது ஆகாது என்பது யாருக்கும் தெரியாது.நண்பர் ஒருவர் “பதிவு போட்டிருக்கிறேன் ஹிட்டாகும்” என்றார்.ஆனால் இருபது பேர் கூட படிக்கவில்லை.தவிர முப்பது வயதில் ஒருவர் பார்த்த,கேட்ட சுவையான விஷயங்களை எத்தனை பதிவுகள் எழுத முடியும்?தினம் தினம் நமக்கு ஏற்படும் அனுபவங்களை எழுதினாலும் ஒருவருடைய பார்வை ஒன்றுதான்.
அரசியல் பதிவென்றால் சீரான கொள்கை வேண்டும்.இப்போது தி.மு.க வை விமர்சித்து எழுதினால் அதிகம் படிக்கப்படும் என்று சொல்ல முடியாது.தேர்தல் நேரத்தில் அரசியல் தொடர்பான இடுகைகளே அதிகம் படிக்கப்பட்ட்து.ஒருவரது பிரபலத்தை காலமும் தீர்மானிக்கலாம்.தவிர இதில் என்ன இருக்கிறது என்ற சலிப்பும் நேரலாம்.விட்டுப்போனதை நண்பர்களும் சொல்ல்லாம்

மனைவிக்கு கணவன் மீது வரும் சந்தேகம்.

நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.ரொம்ப நாள் ஆகிவிட்டது போலவும் தோன்றுகிறது.மகாராணி என்று சொல்லவேண்டும்.இன்னும் மேலாக ஏதாவது சொல்லலாம்.எப்படித்திரும்பினாலும் ஆனந்தம்.அந்த நாட்களிலேயே ஒருவரால் வாழ முடிந்தால் எப்படி இருக்கும்?

சின்னப் பையன் முதல் கிழங்கள் வரை அவளை பார்த்தால் அப்படி ஒரு இதம்.வீதியில் நடந்து போகும்போது பசங்கள் எதையாவது உளறுவார்கள்.சந்தோசமாக இருக்கும்.சில நேரங்களில் உடல் உதறும்.ஓடிப்போய் வீட்டில் அடைந்து கொள்ளத் தோன்றும்.


காதல் அது இது என்று என்னென்னவோ சொல்கிறார்கள்.அப்படித்தானா என்று நிச்சயமாக தெரியவில்லை.பிடித்திருந்தது.வீட்டைக் கடக்கும்போது சைக்கிளில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்.மனம் இருப்புக் கொள்ளாமல் துள்ளும்.ஆனால் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
ஒருநாள் வெளியே வந்து பக்கத்து வீட்டு அண்ணியை அழைத்தாள்.அவரது குழந்தையை தூக்கி முத்தமிட்டாள்.அண்ணி முகத்தை சுளித்து சொன்னது ஒரே வார்த்தைதான்.அதெல்லாம் நமக்கு ஒத்துவராது! அதே நொடியில் மனம் விழுந்து விட்டது.அதற்குப்பிறகு சைக்கிள் மணியைக் கேட்டால் குறுகுறுவென்று இருக்கும்.சில சமயம் வெறுப்பாக இருக்கும்.

ஒருவேளை அவனை காதலித்திருந்தால் நாம் சந்தோசமாக இருந்திருப்பேனோ! என்று தோன்றுகிறது.எதிர் வீட்டில் ஒரு கிழவி இருப்பாள்.பெரிய மகராசன்தான் உனக்கு மாப்பிள்ளையாக வருவான் என்பாள்.புள்ளைக்கு சுத்திப்போடு என்று அம்மாவிடம் சொல்வாள்.அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

பல பேர் பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.எதிர்பார்த்த மாதிரி இல்லாவிட்டாலும் சுமார்தான்.ஒரு வழியாக கல்யாணம் ஆகிவிட்டது.மகிழ்ச்சியான நாட்கள் முடிந்து போய்விட்டது போல தோன்றுகிறது.இப்போதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது.

நீ தனியாக எங்கும் போகவேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.காலையில் கடைக்கு போகவேண்டும் என்றால் "ஏன் உன்னால் தனியாக போக முடியாதா? என்று கேட்கிறார்.அம்மாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.திரும்ப திரும்ப குழந்தை பற்றியே கேட்கிறாள்.எரிச்சல்தான் மிச்சம்.

திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது.ஒருவேளை அப்படி இருக்குமோ? தொலைக்காட்சி தொடர்களும்,கேள்விப்பட்ட கதைகளும் நினைவுக்கு வந்தன.வேறு யாராவது?! உடல் வியர்த்துவிட்டது.இருதயத்துடிப்பு காதில் கேட்டது.அவனுடைய மேசையை திறந்து சோதிக்கத் தோன்றியது.உடலெங்கும் பரபரப்பு! சிறுநீர் கழிக்கவேண்டும் என்று தோன்றியது.

அப்படியே படுக்கையில் சாய்ந்தபோது " போன் செய்தால் என்ன என்று தோன்றியது! அலுவலக நேரங்களில் போன் செய்து பழக்கமில்லை.உடனே எடுத்துவிட்டான்.என்ன? " சாப்பிட்டீங்களா? நேத்து தலை வலின்னு சொன்னீங்க! குட்டிப்பாப்பா உங்க போட்டோவ காட்டி வேணும்னு கேட்கறா!" மூச்சு விடாமல் பேசி விட்டாள்.

அவசரமாக லாட்ஜில் ரூம் எடுத்து செக்ஸ்-ஒரு பரிதாபம்.

ஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள்ள வேண்டும்.எப்போதாவது உங்களை மாதிரி இருக்கும் நண்பரிடம் பேசலாம்.இம்மாதிரி வாழ்க்கையை உலகில் சுமார் 5சதவீத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் தங்களுடைய பழக்கங்களை,ஆர்வங்களை வெளியே பேசினால் கேவலமாக பார்ப்பார்கள். 

அவர்கள் தனது ஜோடியுடன் அவசரமாக லாட்ஜில் ரூம் எடுப்பார்கள்.சில நேரம் குழுவாக! போலீஸ் பயம் வேறு.அப்படி ஒரு பழக்கம்.ரகசிய உலகத்தில் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் ஆணும்,பெண்ணும் அல்ல! ஆணும் ஆணும்! ஆமாம்,அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள்.

நகரில் ஒரு பெரிய வீட்டில் குடும்பம் நட்த்திக் கொண்டிருந்த அந்த பிரபல அரசியல் புள்ளி கொலை செய்யப்பட்டார்.செல்போனில் கடைசியாக கொல்லப்படும் முன்பு தொடர்பு கொண்டிருந்த எண்ணை துருவினார்கள்.அது அவரது ஆண் ஜோடியின் செல்போன் எண் என்பது கண்டுபிடித்தார்கள்.
மேலே கண்ட அரசியல்வாதியை போல பலர் இருக்கிறார்கள்.அவர்கள் ஆர்வம் ஆணிடம்தான் என்றாலும் வெளியே சொல்ல முடியாமல் திருமணம் செய்து கொள்வார்கள்.மனைவியிடம் ஈடுபாடு அதிகம் இருக்காது.வெளியில் மட்டும் மற்றவர்களைபோலவே குடும்பம் நட்த்துவார்கள்.இவர்களை bisexual என்பார்கள்.


பரம்பரை கூறுகள் காரணமாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறினாலும் அறியாத வயதில் ஓரினச்சேர்க்கை நபர்களால் பழக்கத்துக்கு உள்ளாகி விட முடியாமல் போய்விட்டவர்கள்தான் அதிகம்.விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம்.ஆணுடன் ஆண் சேர்க்கையில் பழகுவது,போதை சிகரெட் போன்றவற்றுக்கு அடிமையாவது போலவேதான்.

குற்ற உணர்வு,வெளியே தெரிந்து விடுமோ என்ற பயம்,விளைவுகள் பற்றிய கலக்கம்,தன்மீது சுயமதிப்பு குறைந்து அதிகம் சமூக ஒட்டுதலின்றி வாழவேண்டும்.கிட்ட்த்தட்ட வாழ்நாள் முழுக்க நரகம் போலவே!சமூகம் கேவலமாக பார்க்கும்.இப்போது நீதிமன்றங்கள் ஓரளவு ஆதரவு நிலை எடுத்து வருகின்றன. அவர்கள் இப்படிப்பட்ட பழக்கத்திற்கு உள்ளாகும் சூழல் எதிர்பாராமல் நடக்கும் ஒன்று. 


கல்லூரி விடுதியில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அவனுக்கு முதல் அனுபவம்.பிறகு அதுவே பழக்கமாகிப் போனது.இன்று அவன் ஆணுடன் ஆண் உறவு கொள்ளும் Homosexual.அவனுக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை.பால்வினை நோய்கள் வேறு இருக்கிறது.வீட்டில் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துகிறார்கள்.மன உளைச்சலில் அலைந்து கொண்டிருக்கிறான்.பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல,ஆண் குழந்தைக்கும் வெளியில் ஆபத்து இருக்கிறது என்கிறார் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர்.

மேலே தெரிவித்த்து போல உலக மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் வரை இருக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள்.சிலருக்கு குறிப்பிட்ட சதவீதம்வரை பெண் தன்மை இருக்கலாம்.அவர்களில் பணத்திற்காக தொழில் செய்பவர்களும் உண்டு.அவர்கள் கண்டிக்கத்தக்கவர்களோ,பாவிகளோ அல்ல!பரிதாபத்துக்குரியவர்கள்.சக மனிதப்பிறவிகளாக மதிக்கப்பட வேண்டியவர்களே!

என் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்

அவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள்.

உங்கள் நண்பர்களைப் பற்றி கூறுங்கள்.அவர்களும் பதிவர்களா?

அவர்களும் பதிவர்களே!ஒரு முறை பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் எழுதிக் கொண்டிருக்கும்போது “நண்பேண்டா” என்று குரல் கேட்ட்து.திரும்பினால் இரண்டு பேர் சிரித்துக்கொண்டு என்னைத் தழுவிக் கொண்டார்கள்.அப்போது முதல் மூவரும் ஒருவரானோம்.அவர்களும் எழுத்தாளர்கள்தான்.அவர்களை நான் அதிகம் சிந்திக்கவிடுவதில்லை.என்னுடைய பதிவை காபி,பேஸ்ட் செய்து கொள்வார்கள்.நான் லிங்கும் கொடுத்திருக்கிறேன்.எனக்கு ஓட்டும்,ஆளுக்கு பத்து கமெண்டும் போடுவார்கள்.இப்போது என்னால் தியேட்டர்,பஸ் ஸ்டாண்ட் என்று கழிப்பிடம் பக்கம் போக முடிவதில்லை.அவர்களை அனுப்புகிறேன்.

வலைப்பதிவுதான் இருக்கிறதே,ஏன் கழிப்பிடத்தில் எழுதவேண்டும்?

உங்கள் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.நான்கு நாட்கள் ஆகிவிட்டாலே பதிவை யாரும் தேடி படிக்க மாட்டார்கள்.பொதுக்கழிப்பிடம் அப்படி அல்ல! கட்டிட தரம் பொறுத்து 100 ஆண்டுகள் கூட வாழும்.தானாக இடிந்து போகும்வரை நம்முடைய எழுத்துக்கள் இருக்கும்,அதுவரை சுத்தமும் செய்யமாட்டார்கள்.நாங்கள் ஒருவித அழியாத மையை கண்டுபிடித்திருக்கிறோம்.


ஆனால் உங்களுடைய பெயர் முன்னணி பதிவர்கள் பட்டியலில் வருவதில்லையே?

அது தொழில் நுட்ப கோளாறு.எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தால் சாதிக்க முடியாது.முதுகிலும்,தொடையிலும் அரித்துக்கொண்டே இருக்கிறது.சொரிவதற்கு உங்கள் தொழில்நுட்பம் ஒரு கருவியை கண்டுபிடித்த்தா?

உங்கள் மனைவியை அழைத்துவர முடியாதா? ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள்.

நான் உங்களுக்கு தெளிவாக சொல்லிவிட்டேன்.என் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை.தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.ஒன்பது நாட்கள் பாக்கி இருக்கிறது.அவருக்கு கோபம் அவ்வளவுதான்.நாட்டின் எதிர்காலத்திற்காக சிலதை விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும்.தவிர பதிவு போட ஒருமணி நேரம் தாமதமானால்கூட இருநூறு மெயில் வருகிறது.


ஒரு வேளை எழுதாததற்கு நன்றி தெரிவித்து இருக்குமோ?

அந்த மெயிலை படிக்க எனக்கு நேரமில்லை.கிண்டலுக்காக பேட்டி எடுப்பதாக இருந்தால் தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.இதில் தேசத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்டிருக்கிறது.கேலி,கிண்டல் செய்தே நாட்டை நாசம் செய்து கொண்டிருக்கிறோம்.கொஞ்சம் கூட சீரியஸாக சிந்திக்கத் தெரியவில்லை.

காதல் மனைவி புத்தி சொன்னால் கேட்பதில்லையே ஏன்?

அவர் வருத்த்த்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார். எத்தனையோ முறை அறிவுரை சொல்லி பார்த்தாகிவிட்ட்து சார்! கொஞ்சம் கூட மண்டையில் ஏறுவதேயில்லை! திரும்பத் திரும்ப அதையேதான் செய்து கொண்டிருக்கிறாள்!’’ மனைவியால் மனசுக்கு கஷ்டம்தான் பாவம்.வீட்டை எதிர்த்து பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்.பின்னர் அவரது பெற்றோர் ஆனது ஆகிவிட்ட்து என்று வரவேற்பு வைத்தார்கள்.

இன்றைய மனைவி காதலியாக இருந்தபோது அவரது உதட்டசைவுக்காக தெருமுனையில் படபடப்பாக நின்றவர் அவர்.அப்போது காதலியைத் தவிர யாரும் முக்கியமில்லை.இப்போது மற்றவர்களும் முக்கியமாக தெரிகிறார்கள்.அதனால் புத்தி மேல் புத்தியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.பலன் மட்டும் இல்லை.

உலகத்தில் மிக எளிதாக கிடைக்கும் பொருள் அறிவுரை.யாரோ சலிப்புடன் கூறியது நினைவுக்கு வருகிறது” மூணு வயசு புள்ள கூட புத்தி சொல்லும்,அப்படி நடப்பதுதான் கஷ்டம்”உண்மையான விஷயம்.யார் வேண்டுமானாலும் புத்தி சொல்லிவிடலாம்தான்.ஆனால் உலகத்தில் யாரும் விரும்பாத ஒன்றும் அறிவுரைதான்.எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப் பட்டுவிடும்.
அறிவுரை என்பது சொல்பவரை உயர்ந்தவராகவும்,கேட்பவரை தாழ்ந்தவராகவும் இருக்கச் செய்கிறது.இது மனித மனத்தின் அடிப்படைக்கே எதிரானது.உற்வினர்,அப்பா,அம்மா என்று தவிர்க்க முடியாதவர்கள் ஆனாலும் எரிச்சலுடன் வாதிடுவார்கள்.இல்லாவிட்டால் அமைதியாக கேட்டுக்கொள்வார்கள்.சொல்வதைக் கேட்டு நடப்பது கஷ்டம்தான்.

அறிவுரை சொல்லும்போதே உனக்கு மூளை இல்லை என்பதையும் சேர்த்தே சொல்கிறோம்.அடுத்த்து இது பெரும்பாலும் உத்தரவாக இருக்கும்.”அதைசெய்! இதைச்செய்!!” இன்னொரு விஷயம் உத்தரவுகளும் யாருக்கும் பிடிக்காது.பலர் புத்தி சொல்லும்போது எரிச்சலான குரலிலும்,முகத்தை சுளித்துக்கொண்டே பேசுவார்கள்.இதெல்லாம் ஒருவர் மீதான அன்பைக்காட்டுவதில்லை.வேறுபடுத்தியே உணரத் தோன்றும்.

எதிரில் இருப்பவர் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவே மாட்டார்கள்.ஒருவரை புரிந்து கொள்ளூம் நோக்கம் அறிவுரை சொல்வதில் இருப்பதில்லை.தன்னைப் பற்றி விளக்கி பேச ஆரம்பித்தாலும் அதற்கு வாய்ப்பு கிடைக்காது.” நீ வாயை மூடு,உனக்கு ஒன்றும் தெரியாது என்பதாக இருக்கும்.ஒருவரே காட்சியை நட்த்திக் கொண்டிருப்பார்.


அறிவுரை கேட்பவரின் கருத்துஎன்னை யாரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதாக இருக்கும்.உண்மையான பிரச்சினையும் இதுதான்.ஒவ்வொருவரும் வேண்டுவது என்ன?நமக்கு ஏற்றவாறு நாம் விரும்பியவாறு நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.ஆனால் இன்னொரு மனிதன் எந்திரம் அல்ல!கணவன்,மனைவி,பிள்ளைகள் யாரும் வெறும் உடல் அல்ல!

மனைவியின் செயல் அல்லது கணவனின் செயல் பற்றி அதன் நன்மை,தீமைகளை பொறுமையாக விளக்குவது ஒரு வழிமுறை.அன்பான வார்த்தைகளில் கூறப்படும் எதுவும் புரிதலை உருவாக்கும் வாய்ப்புண்டு.முடிவை நாமாக திணிப்பது அறிவுரை.அவர்களாக முடிவெடுக்கத் தூண்டுவது ஆலோசனை.பல நேரங்களில் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியாமல் போய் விடுகிறது.
பேசும் ஆட்களைப் பொருத்தும்,தொனியிலும் கூட நல்ல ஆலோசனை அறிவுரையாக மாறும் ஆபத்து இருக்கிறது.மிக எளிமையான விஷயம்.அதிகம் பேசுபவர்கள் அவர்களாக இருக்க வேண்டும்.பொறுமையாக கேட்டு பிரச்சினையை அலச முடிந்தால் விளைவு நன்றாகவே இருக்கும்.

பெண்களின் தந்திரங்களும் குழந்தையும்

பெண்களின் இப்படிப்பட்ட தந்திரங்களை கவனித்திருக்கிறீர்களா? அலுவலகத்தில் சண்டையாகி விட்டது.பெண் ஊழியர் ஒருவர் கொஞ்சம் சூடாக சண்டை போட்டு விட்டார். வார்த்தை தடித்து சரமாரியாக கத்தி விட்டார். நெருக்கமாக இருந்த தோழிகள் கூட கோபம் கொண்டு விட்டார்கள். சங்கடமான சூழ்நிலை. மதிய உணவு நேரத்தில் சாப்பிடுவதை விட்டுவிட்டு எங்கோ கிளம்பி போய்விட்டார்.வந்தவர் தனது ஒரு வயது குழந்தையுடன் வந்தார். அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

குழந்தை என்றால் உலகில் பிறந்த அத்தனை பேருக்கும் கொள்ளை ஆசை.மழலைச் சொல்லிவிட மனிதனை மயக்குவது ஏதுமில்லை.ஒவ்வொருவராக குழந்தையை கொஞ்ச அறைக்குள் நுழைந்தார்கள்.சங்கடங்கள் கரைய ஆரம்பிக்க இணக்கமான சூழ்நிலை மறுபடியும் வந்து விட்டது.தான் சொன்னால் கணவரோ, மாமியாரோ,மற்றவர்களோ கேட்க மாட்டார்கள் என்று அப்பெண் நினைக்கிறார். குழந்தையிடம் சொல்லி குழந்தையின் விருப்பமாக சொல்ல வைக்கிறார்.எளிதாக வெற்றி கிட்டி விடுகிறது.
காதல் திருமணத்தால் முறைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் உறவுகளும் குழந்தை பிறந்தது தெரிந்தவுடன் பரவசமாகி ஓடுகிறார்கள்.சில குடும்பங்கள் குழந்தைகளுக்காக பிரியாமல் இருக்கின்றன. குழந்தை நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கிறது.ஏனெனில் குழந்தைகள் உலகம் மகத்தானது.நண்பர் ஒருவரின் பையன் ஏதோ பேச்சுக்கு கோபமாக பேச ஆரம்பித்தான்.பேசிய அனைத்து வார்த்தைகளும் தொலைக்காட்சி தொடரில் ஒருவர் பேசியது.

தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் அதே போல பேசுவதையும் ,நடிப்பதையும் கவனித்துப் பாருங்கள்.இவை நல்லவற்றை கற்றுத்தரும் என்று நான் நம்பவில்லை.தொடர்களில் வரும் பாத்திரங்கள் அமைதியற்ற குணங்களை கொண்டிருக்கின்றன.குழந்தைகளிடம் இத்தகைய குணங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் சொல்கின்றன.இருவரும் சம்பாதிக்க ஓட வேண்டிய நெருக்கடியான சூழலில் குழந்தைகள் நலமே பலியாகிறது.பாட்டியிடம் அல்லது வேலைக்காரர்களிடம் விட்டுவிட்டு போகிறார்கள்.குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான நெருக்கம் குறைகிறது.

அன்பு என்பது தாயிடம் மட்டுமே குழந்தைகள் அதிகளவு உணர்கின்றன.ஒரு தாய் குழந்தையின் முதுகில் அடித்துவிட்டு நகர்ந்தால் தாயை பின்தொடர்கிறது.அழுதுகொண்டு அம்மாவிடமே ஓடும்.அப்பா அடித்தாலும் அம்மாவிடம் ஓடுகிறது.வயது அதிகரித்தால் அப்பாவிடமும் மற்றவர்களிடமும் போய் நிற்கும்.காலையில் அவசரமாக எழுந்து பரபரப்பாக தயாராகி ,அரைகுறையாக விழுங்கி விட்டு புத்தகப் பையுடன் நடக்கும் குழந்தையின் முகத்தில் குழந்தையை பார்க்க முடியவில்லை.
என்னுடைய பாகவதமும் பைபிளும் இடுகையில் இருந்து சில வரிகள்.சிறுவர்களுக்கு தற்போது நல்ல விஷயங்கள்,கதைகள் சொல்ல ஆட்கள் இல்லை என்பது பெரும் சீர்கேடாக நான் பார்க்கிறேன்.குழந்தைகளின் கற்பனையை வளர்க்க கதை சொல்லி பாட்டிகள் தற்போது இல்லை.நகர அவசர வாழ்க்கையும்,கூட்டுக்குடும்ப சிதைவும் நன்னெறி கதைகளை விடுத்து கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலும்,கார்ட்டூன்களிலும் கொண்டு சேர்த்திருக்கிறது.இன்றைய குழந்தைகளின் கற்பனை வறட்சி அவர்களது வளர்ச்சியை சிக்கலாக்கவே செய்யும்.

சக பெண் ஊழியர் ஒருவர் தொலைபேசியில் பேசும்போது சொன்னது," பெரியவனை எங்காவது விடுதியில் சேர்த்துவிடலாம் என்றிருக்கிறேன்.குறும்பை தாங்க முடியவில்லை.சின்னப் பையன் அப்படியில்லை,அமைதி!" அவருக்கு நான் சொன்னது,"சின்னப் பையனை விடுதியில் சேர்த்து விடுங்கள்,பெரியவன் வேண்டாம்.குழந்தை அமைதியாக இருந்தால் அது பொம்மை.குறும்பு செய்தால் அது குழந்தை.

கூரியர் சர்வீஸ்-இப்படியும் நடக்கலாம்.

கூரியர் சர்வீஸ் வந்து பெருவெற்றி பெற்றது எனக்கு ஆச்சர்யமாக இருந்த்து.ஒரு நாட்டின் அரசு நிறுவனத்தையே பின்னுக்கு தள்ளிவிட்ட்து.தபால் துறையை விட மக்கள் அதிகமாக இவற்றை நாடினார்கள்.குறைந்த பணியாட்களை வைத்துக்கொண்டு நாம் எதிர்பார்க்கிற மாதிரி சேவையை வழங்கியது.இப்படி கூரியர் சர்வீஸ் நட்த்தும் சிலரை எனக்குத் தெரியும்.

நண்பர் ஒருவர் உறவினருக்கு புதிய சட்டை ஒன்றை அனுப்பினார்.விலை உயர்ந்த பிரபல கம்பெனியின் சட்டை அது.ரகசியமாக இருக்கட்டும் என்று அவருக்கு சொல்லவில்லை.பிறந்தநாள் வாழ்த்து கவிதையும் உள்ளேயே வைத்து விட்டார்.அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.பொறுக்காமல் போன் செய்து விசாரிக்க அப்படி எதுவும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
கூரியர் சர்வீஸில் போய் விசாரித்தால் தொடர்புள்ள கிளையை விசாரித்திருக்கிறார்கள்.டெலிவரி செய்யும் பையன் இரண்டு நாள் போய்விட்டேன்.வீடு பூட்டியிருந்த்து.அங்கேயே ஒரு கடையில் வைத்திருக்கிறேன் என்று பதில் வந்திருக்கிறது.ஒரு வழியாக சட்டை போய் சேர்ந்துவிட்ட்து.ஆனால் அழுக்காக! தெரியாத விஷயம்: பையன் நான்கு நாட்கள் போட்டுக்கொண்டு சுற்றிவிட்டு பிறகு பொட்டலம் கட்டி கொண்டு போய் கொடுத்திருக்கிறார்.

இன்னொருவர் பத்து பனியன் அனுப்பினார்.போய் சேர்ந்த்து எட்டுதான்.டெலிவரி செய்பவர்கள் உள்ளே என்ன இருக்கிறது என்று சிலவற்றை பிரித்து பார்ப்பது அவர்களுடைய ஆர்வம்.பயனுள்ள சில காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.என்னுடைய சில கடிதங்கள் முகவரி மாறிப்போய் சரியான நேரத்துக்கு கிடைக்காமல் போயிருக்கிறது.

கூரியர் மூலம் தபாலோ,பொருளோ அனுப்பிவிட்டால் ஒருநாள் கழித்து போய் சேர்ந்து விட்ட்தா என்பதை உறுதி செய்வது எனக்கு பழக்கமாகிவிட்ட்து.யார் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்,என்பதையும் சரி பார்ப்பேன்.போன் மூலமும் உறுதி செய்வதுண்டு.அலுவலகம் என்றால் யாரிடமாவது கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.மற்றவர்கள் பிரிப்பதும் நடக்கும்.எதுவும் தெரியாத மாதிரி மீண்டும் ஒட்டி கொடுத்துவிடுவார்கள்.

ஒரு நாள் வாசலில் ஒரு பெட்டி கிடந்த்து.எடுத்துப் பார்த்தால் உறவினர் அனுப்பிய பார்சல்.எங்களிடம் கையெழுத்து வாங்கவில்லை.உறவினரை அவரை அனுப்பிய கிளையில் விசாரிக்கச் சொன்னால் என் பெயரை கையெழுத்தாக அவர்களே போட்டு பி.ஓ.டி நகலை அனுப்பிவிட்டார்கள்.போன் நம்பர் குறித்திருந்தாலும் போன் செய்யவில்லை.

சில கூரியர் சர்வீஸ்களில் போனால் கிளை இல்லாத இடங்களுக்கும் வாங்கிக் கொள்வார்கள்.ஆனால் வேறு நிறுவனம் மூலம் அனுப்புவார்கள்.தபால்கள் இதனாலும் தாமதமாகும்.சரியாக கடிதங்களை சேர்க்க முடியாமல் வழக்கை சந்தித்த நிறுவன்ங்களும் உண்டு.நஷ்ட ஈடு வழங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.

அரசு அதிகாரிகளுக்கு,நிறுவன்ங்களுக்கு தபால்துறை மூலம் அனுப்பவதே சரியானது.அதிகாரிகளிடம் கூரியர் சர்வீஸை சேர்ந்தவர்கள் நேரடியாக தர உள்ளே விடமாட்டார்கள்.வேலைக்கான விண்ணப்பங்களை பல ஆணையங்கள் கூரியர் சர்வீஸ் ஆட்களிடம் நேரடியாக வாங்குவதில்லை.பெட்டியில் போட்டுவிட்டு போகச் சொல்வார்கள்.
பெரும்பாலும் சரியாகவே சேர்ந்துவிடுகிறது என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் நாம் உறுதி செய்யவேண்டும்.பொருளை உரியவரிடம் சேர்க்கப்பட்டு விட்ட்தா என்பதை கிளையில் அணுகி உறுதி செய்து கொள்ளலாம்.உறவினர்களாக இருந்தால் போன் மூலமும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களிடம் ரகசியம் தங்காது

திருமணமான சில நாட்களில் நண்பன் புலம்பினான்.எதுவுமே சொல்வதற்கில்லை.எப்படித்தான் நம்பி ஒரு விஷயத்தை சொல்வது? உடனே வெளியே போய்விடுகிறது.எனக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும் என்று சொல்ல,அந்த முழு வார்த்தையும் அதே ஏற்ற இறக்கங்களுடன் அக்காவிடம் போய் விட்ட்து.சில நேரங்களில் அம்மாவிடம் போய்விடுகிறது.புது மாப்பிள்ளை பற்றி தெரிந்துகொள்ள சுற்றத்தினர் ஆர்வமாக இருப்பார்கள்.

ரகசியம் என்பதே நம்மிடம் மட்டும் இருப்பதுதான்.இரண்டாவது நபரிடம் அது தங்குமானால் அவர் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும்.இன்று நாளிதழில் போட்டிருப்பதாக நண்பர் கூறியது” அரை மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்” ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள்.இது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைதான்.

வழக்கமாகவே பெண்கள் உணர்வு சார்ந்து இயங்குபவர்கள் ஏன்ற கருத்து உண்டு.இப்போது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது வேறு விஷயம்.நீங்கள் ஒரு கருத்தை கூறும்போது அதைப்பற்றி சிந்திக்க முடியாதவர்கள் வெளியே சொல்வார்கள்.மற்றவர்கள் கருத்தை அறிவதும்,அது சரியானதா என்று பார்ப்பதே நோக்கம்.ஆண்களும் இப்படி உண்டு.
புதிய ஒன்றை கேள்விப்படும்போதும் இப்படி நடக்கும்.உதாரணமாக’’எனக்கு புரோட்டா பிடிக்காது,அது சர்க்கரை நோயைத்தரும் என்று சொல்கிறார்கள் என்று மனைவியிடம் சொல்கிறீர்கள்,உடனே அக்காவுக்கு போன் செய்து இப்படி சொல்கிறார் என்று விஷயம் போய்விடும். இதுவரை அவரது மனைவி இந்த விஷயத்தை கேள்விப்பட்ட்தில்லை.அதனால் அவர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள புதியதான, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் ஒன்று தேவை.நாம் பேசுவது நம் மீது மரியாதையை தூண்டி நம்மை முக்கியமானவராக கருதவேண்டும் என்று நினைக்கிறோம்.இதனாலேயே பல தகவல்கள் வெளியேறுகின்றன.தன்னை நேசிக்கவில்லை என்று கருதும் மனைவி கணவனின் எல்லா நடவடிக்கைகளையும் வெளியே சொல்ல வாய்ப்புண்டு.
இன்னொரு வேடிக்கை உண்டு.யாரிடமும் வெளியே சொல்லாதே! என்றால் உடனே மற்றவர்களிடம் சொல்லிவிடுங்கள் என்று அர்த்தம் என்பார்கள்.உண்மையைச் சொன்னால் நம்மிடம் மட்டும் ஏன் சொல்லவேண்டும்? அவரே ரகசியமாக வைத்திருக்கலாமே? உன்னிடம் மட்டும் எதையும் மறைக்கமாட்டேன்,நீ எனக்கு அவ்வளவு முக்கியமான ஆள் என்ற விஷயம் இதில் ஒளிந்திருக்கிறது.
ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரகசியத்தை வெளியில் சொல்வது கொடூரமானது.அன்பு கொண்ட மனிதர்கள் அதைச் செய்வதில்லை.நம் மீதான நம்பிக்கையும் சிதறிவிடுகிறது.நம்பிக்கை போய்விட்டால் அப்புறம் உறவுகளில் என்ன வேண்டிக்கிடக்கிறது?

பூக்கடைக்கும் விளம்பரம் தேவை

நகரின் பிரபலமான பகுதியில் நல்ல தொழில்.ஒரே பையன்.கல்லூரிப் படிப்பு வரை படித்திருந்தான்.கௌரவமான குடும்பம் என்று சொல்வார்களே அப்படி! கல்யாண வயது ஆகிவிட்ட்து என்று அப்போதுதான் அவர்களுடைய பெற்றோருக்கு தெரிய வந்த்து.அதே தெருவில் இருக்கும் உறவுப் பெண் ஒருவர் வந்து பேசினார்.” அந்தப் பெண்ணை உங்கள் பையனுக்கு செய்து கொள்ளுங்கள்,இத்தனை பவுன் போடுவதாக சொல்கிறார்கள்’’

எடுத்த எடுப்பிலேயே அந்த வரனை நிராகரித்துவிட்டார்கள்.காதலுடன் ஓடிப்போனவரை பிரித்து வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். அவனுடைய பெற்றோர்கள் போட்ட சத்த்த்தில் உறவுப்பெண் ஆத்திரத்தோடு கிளம்பிப் போனதோடு சரி! அப்புறம் பேச்சு வார்த்தையில்லை.இவனுக்கு பெண் தேட ஆரம்பித்தார்கள்.

இரண்டு மூன்று பெண்ணைப்பார்த்து இரு வீட்டார் சம்மதம் இருந்த பிறகும் பெண்வீட்டார் தரப்பில் தட்டிக் கழித்தார்கள்.இது தொடர்கதை ஆகிக் கொண்டிருந்த்து.ஜாதகத்தை தூக்கிக் கொண்டு சோதிடர்களிடம் ஓடினார்கள்.கோயில்கள்,பரிகாரம்,குளத்தில் நீராடுதல் என்று நாட்கள் கடந்த்தே தவிர கல்யாணம் ஆசை மட்டும் கனவாகவே இருந்த்து.
எந்தக் குறையுமில்லாத பையனுக்கு இது அசாதாரண விஷயம்.சம்மதம் தெரிவித்து வீட்டுக்கு வந்து போனவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.மனசுக்குப் பிடித்துப் போன நல்ல இடம்.பின்னர் புரோக்கர் வந்து சொன்னார்,’’பையனைப் பற்றி யாரோ தவறான தகவலை சொல்லியிருக்கிறார்கள்’’.உறவுக்காரப் பெண்ணின் வேலைதான் என்பது தெரிய வந்த்து.அவர் சொன்ன பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாத்தால் இப்படி செய்கிறார் என்று விளக்கிய பிறகும் அவர்கள் பெண் கொடுக்க முன்வரவில்லை.

ஒரு நாள் இரண்டு குடும்பத்துக்கும் பெரிய சண்டை.தெரு முழுக்க வேடிக்கை பார்த்தார்கள்.அதற்குப்பிறகு கொஞ்ச நாளில் தெருவில் பெரும்பாலான வீடுகள் இவர்களுக்கு எதிராக மாறியது.ஓடிப்போய் உதவுதல்,இனிக்க இனிக்க பேசுதல் என்று மற்ற வீடுகளுடன் நல்லுறவை வளர்க்க ஆரம்பித்தார் உறவுப் பெண்.லாபியிங்கில் நேர்மையானவர்களை விடவும் நேர்மையற்றவர்கள் உணர்ச்சிபூர்வமாக செயல்பட்டு வெற்றி பெற்று விடுகிறார்கள்.

நல்லவர்கள் நாம்தான் நல்லவர்கள் ஆயிற்றே என்று தற்பெருமையில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு எதிரானவர்கள் அப்படி இருப்பதில்லை.வேறு தெருவுக்கு குடி போகிற நிலை.ஆனாலும் கல்யாண முயற்சி மட்டும் வெற்றி பெறவில்லை.சில நேரங்களில் இப்படிப்பட்ட சம்பவங்களை கேள்விப்படுகிறேன்.அக்கம்பக்கத்தில் விசாரித்தால் நல்ல மாதிரி சொல்வதில்லை என்பார்கள்.

கல்யாண விசாரிப்புகளை பொருத்தவரை பத்து பேர் நல்லவன் என்று சொன்னாலும்,ஒருவர் வேறு மாதிரி சொன்னால் யாருக்கும் மனம் வருவதில்லை.சிலர் துப்பறியும் நிறுவன்ங்களை நாடுகிறார்கள்.நல்லவர்களைப் போல பொல்லாதவர்கள் அதிகமாகி விட்ட்தால் யாரைத்தான் நம்புவது? சிலருடைய வாழ்க்கை இப்படியும் ஆகிவிடுகிறது.

எதிலும் வெற்றிபெற நல்லவராக இருப்பது மட்டுமல்ல வேறு சில விஷயங்களும் தேவைப்படுகிறது.பூக்கடைக்கும் விளம்பரம் தேவை என்று சொல்கிறார்களே அப்படி!

வக்கிர தோழியால் அழகுப் பெண்ணுக்கு நடந்த கொடுமை

ஒவ்வொரு முறை கிராமத்துக்குப் போகும்போதும் புதியதாக ஏதேனும் சொல்வார்கள்.சில சுவையாகவும் இருக்கும்.தீபாவளிக்கு போன போது "உனக்கு தெரியுமா? அந்தப் பெண்ணின் கல்யாணம் நின்று போய் விட்டது!" எந்தப் பெண் என்று எனக்கு தெரியாது.அப்புறம் விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார்கள்.

கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த பெண் அவர்.அதே கிராமத்தில் உள்ள சுயமாகத் தொழில் செய்து கொண்டிருக்கும் பையனுக்கு காதல் வந்து விட்டது.பெண் இருக்கும் திசையிலேயே சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்.பெண்ணுக்கும் ஆர்வம் என்றாலும் பேச ஆரம்பிக்கவில்லை.

ஒரு நாள் பக்கத்து தெருவில் இருக்கும் அக்கா அழகுப் பெண்ணிடம் வந்து பேச ஆரம்பித்தார்." உனக்கு விருப்பமா? " என்று கேட்டு விஷயத்துக்கு வர இவருக்கு அக்காவை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.இருவரும் நெருக்கமாகி தோழமை கொண்டு விட்டார்கள்.அடிக்கடி வீட்டிலிருந்து சிக்கன்,மட்டன்,பலகாரம் என்று விஷேசமான சமையல் அனைத்தும் கொண்டு வந்து கொடுத்து விடுவார்.

அழகுப் பெண்ணும் அக்காவின் அன்பை நினைத்து உருகிப் போய்விட்டார்.காதலும் அவர் மூலமாகவே வளர்ந்து கொண்டிருந்தது.காதலனிடம் பேசும் ஆசை இருந்தாலும் அக்கா அறிவுரை சொன்னார்."நீ பேசாதே! அப்புறம் மதிக்க மாட்டார்கள்.ஆண்களிடம் அவ்வளவு சீக்கிரம் பிடி கொடுத்து விடக் கூடாது!" அக்காவே அவருக்கு போன் செய்து கொடுப்பார்.ஓரிரு வார்த்தைகள் பேசியதும் போதும் என்று கையாட்டி விடுவார்.

பையன் நண்பர்கள் யாருடனோ சொல்ல அவர்கள் மூலமாக அவனது பெற்றோருக்கு விஷயம் போய் விட்டது.ஓரளவுக்கு சம அந்தஸ்துள்ள குடும்பங்கள்தான்.ஒரு வழியாக இரண்டு வீட்டிலும் பேசி நான்கு மாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவாகி விட்டது.

ஒரு நாள் அழகுப் பெண்ணின் அண்ணன் வீட்டுக்கு வந்து ஒரே சத்தம்."அவன் யோக்கியன் இல்லை.அவளுடன் சினிமா தியேட்டரில் பார்த்தேன்" அவள் என்று குறிப்பிடப்பட்டவர்,அழகுப் பெண்ணிடம் தோழமை கொண்ட அக்காதான்.அந்த திருமணம் நின்று போய்விட்டது என்று சொன்னார்கள்.இரண்டு பேருக்கு காதல் மலர்வதை எப்படியோ கவனித்த அக்கா அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.தன் மீது அபாண்டமாக பழி போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நம் மீது அன்பைக் காட்டுகிறார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது.உயர் அதிகாரி ஒருவருடன் பேசிகொண்டிருந்தோம்.உடன் வந்தவர் எதையோ பேச ஆரம்பிக்க சில வார்த்தைகளிலேயே அவர் கேட்டார்! " இதை எதற்காக என்னிடம் சொல்கிறீர்கள்? பேச ஆரம்பித்தவர் திணறினார்.

ஒருவர் பேசும் வார்த்தைகளை பிரித்துப் போட்டு பார்த்தால் நோக்கம் தெரிந்துவிட வாய்ப்புண்டு." சார் அவன் சரியில்லை சார் ! " என்று சொல்பவரை கவனித்து பாருங்கள்.இன்னொருவரை மட்டம் தட்டி தன்னை உயர்த்திக்காட்டவா? நம்மை எச்சரிக்கவா என்பது புரியும்.ஆதாயத்திற்காக உறவாடுபவர்களே அதிகம்.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் சிக்கல்கள் நேராமல் தடுத்துக் கொள்ளலாம்.