நான் சிறிய அளவில் நிதி நிறுவனம் மற்றும் எஸ்.டி.டி., பூத், ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறேன். என் வயது 46. நான் ஒரு இளநிலை பட்டதாரி. எனக்கு திருமணமாகி, 21 வருடங்கள் ஆகிறது. எனக்கு, திருமணம் ஆனதிலிருந்து, ஒன்பது வருடங்களாக குழந்தை இல்லாமல், இருவரும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்ட பிறகு இப்போது, 12 வயதில் ஒரு மகன் மட்டும் இருக்கிறான். அவனை நாங்கள் உறைவிட பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். காரணம், குடும்ப சூழ்நிலை. என் அன்பு மனைவிக்கு சிறிது மனநிலை பாதிப்பு உள்ளது. இது, திருமணம் ஆன மூன்று மாதங்களுக்கு பிறகு எனக்கு தெரிய வந்தது. அதன் பிறகு, அன்று முதல் இதுநாள் வரை மனநல மருத்துவரிடம் பரிசோதித்து, மருந்துகள் உட்கொண்டு வரு கிறார். தற்மயம், மனநலம் மற்றும் உடல்நலம் பரவாயில்லை.
இப்போது, என்னுடைய பிரச்னை... நான் இருக்கும் வீட்டின் அருகில், ஒரு ரியல் எஸ்டேட் அலு வலகத்தில் வேலை செய்து வந்த பெண். இப்போது அவர் வயது, 36 இருக்கலாம். அவருக்கு, 16 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார். அவருடைய கண வன் ஏதோ ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த, 14 வருடங்களுக்கு முன், அவர், என்னுடைய கடை யின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, (அப்போது, மொபைல் போன் கிடையாது!) நான் இங்கு இருந்து, அங்கு இருந்து பேசுகிறேன் என்று பேசி, பழகி என்னிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். நானும், என் குடும்ப சூழ்நிலை காரணமாக, என் புத்தி வேலை செய்யாமல், அவரிடம் பேசி தொடர்பை ஏற்படுத்தி, இருவரும் தனிமையில் சந்தித்து, பழகி வந்தோம். இந்த உறவு, நான்கு வருடங்கள் தொடர்ந்தது. அதன்பின், சிறிது மாறுபட்ட முரண்பாடான காரணங்கள் மற்றும் என் தாயார் இறப்பிற்கு பின், நான் அவருடன் பழகுவதை தவிர்த்தேன். அப்போது, அவர்கள் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றதாக (நாடகமாடி இருப்பார் என்று நினைக்கிறேன்!) எனக்கு தெரிய வந்தது.
இப்போது மீண்டும், இரண்டு வருடங்களுக்கு முன், ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக என்னிடத்தில் தொடர்பு ஏற்படுத்தி, தனிக் குடித்தனம் வைக்கச் சொல்லி தொல்லை கொடுத்து வருகிறார். இல்லையென்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார். மேலும், என் சாவிற்கு காரணம் முழுக்க முழுக்க, நீங்கள்தான் என்றும் சொல்கிறார். இந்நிலையில், அவரிடம் தொடர்பை வைத்துக் கொண்டால், கடைசி வரை என் வாழ்க்கையில் எப்படி நிம்மதி இருக்கும். அதனால், நான் முடிவாக, "எனக்கு உன்னிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. நீயாக விருப்பப்பட்டு என்னிடம் வாழ்ந்தாய். இப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. எனக்கு குடும்பம் உள்ளது. அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும். ஆகை யால், நம் உறவை இத்துடன் முடித்துக் கொள்வோம்...' என்று எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. மேலும், நான், அவர்களிடம் பழகும் போது நான், உன்னை இப்படி வாழ வைக் கிறேன் என்று ஒரு போதும் சொன்னது இல்லை. அவர்களும் என்னுடன் பழகும் போது நீங்கள் கடைசி வரை என்னை வாழ வைப்பதாக இருந்தால் என்னை தொடுங்கள் என்று சொன்னதும் இல்லை. அன்றே அவர் அந்த வார்த்தை சொல்லி இருந்தால், வேண்டாம் இந்த வீண் விபரீதம் என்று விலகி இருப்பேன்.
ஆனால், இப்போது அவர், "நான் பணத்துக்காக உங் களிடம் பழகவில்லை. உங் களுடைய அன்பு மட்டும் எனக்கு போதும்; நீங்கள் இல்லை என்றால், எனக்கு வாழ்க்கை இல்லை. நீங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை...' என்று சினிமாத்தனமாக பேசி வருகிறார்.
அவருடைய செயல்கள் அனைத்தும் எனக்கு எரிச்சல் மற்றும் கோபத்தை உண்டு பண்ணுகிறது. நான் அவரிடமிருந்து விலக என்னுடைய மொபைல் எண் மற்றும் இதர தொலைபேசி எண்களை மாற்றினாலும், என்னுடைய அலுவலகத்திற்கு வந்து என்னை நிர்பந்தப்படுத்துகிறார். நான் என்னுடைய அலுவலகத்தை அவர் வருவார் என்று பூட்டி விட்டால், என் மனைவி வீட்டில் இருக்கும் போது, என்னுடைய வீட்டிற்கு வருகிறார். பாவம், நடப்பது அவர்களுக்கு தெரியாது. மேலும் என்னுடைய மனைவியின் தாய் மொழி தெலுங்கு. அவளுக்கு தமிழ் பேச மற்றும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சமயம் நான் வீட்டில் இல்லாமல், தோட்டத்திற்கு சென்று விட்டேன். அங்கும் என்னை தேடி வந்து விட்டார். அதுவும், 5,000 ரூபாய் செலவு செய்து.
இதை எல்லாம் பார்க்கும் போது, நான் அவரை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் முதலில் இருந்தே இல்லை.
அம்மா... எனக்கு இப்போது, நான் நல்ல படியாக, அவர்களுக்கு எந்த விதமான மனக் கசப்பும் இல்லாமல், அவர்களும் வாழ்க்கையில் நல்ல படியாக வாழவும், நான் அவரிடம் இருந்து விலகுவது எப்படி என்று ஆலோசனை கூறுங்கள்.
— இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு—
உன்னுடைய கடிதம் படித்து, விஷயங்களை அறிந்தேன்.
உன்னை திருமணம் செய்து கொள்ளும் போது, உன் மனைவி நன்றாக இருந்திருக்கிறாள். ஒன்பது வருடங்கள் குழந்தை இல்லாத கவலையிலும், 12 வருடங்கள் கணவனின் மன்மத லீலைகளை கேள்விப்பட்டு வேதனையிலும் உன் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
பனிரெண்டு வயது மகனை, அதாவது, ஏழாம் வகுப்பு படிக்கும் இளங்குருத்தை உன்னுடைய சுயநலத்துக்காக உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்திருக்கிறாயே... நியாயமா? அவன் பெற்றோர் மீது டன் கணக்கில் வெறுப்பு கொண்டல்லவா வளர்வான்?
நீ தொடர்பு வைத்திருக்கும் பெண்ணுக்கு, 16 வயதில் மகளும், சிறிய நிறுவனத்தில் வேலை செய்யும் கணவனும் இருக்கின்றனர். உன்னுடன் தகாத உறவு வைத்திருக்கும் அப்பெண், ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய அளவில் சம்பாதிப்பவர்.
பதினான்கு வருடங்களுக்கு முன், அப்பெண் தான் உன்னிடம் ராங் கால் பேசி தொடர்பானார் என எழுதியிருக்கிறாய்; அது தவறு. நீ தான் வலிய முயற்சி செய்து, தொடர்பாகி இருக்கிறாய்.
உனக்கு, பிற பெண்ணின் உடம்பு வேண்டும். பல ஆசை வார்த்தைகளை வாயால் சொல்லி, முகத்தால் காட்டி காரியம் சாதித்தவுடன், "சூ... சூ... போ போ..' என விரட்டுவாய். அவர்கள் உடனே, "சரிங்க முதலாளி...'ன்னு போய் விடுவரா என்ன?
தொட்டால் தொடரும் என்பர். குடுவைக்குள் இருக்கும் பூதத்தை திறந்து விட்டுவிட்டு, அய்யய்யோ பூதம் டார்ச்சர் கொடுக்குதேன்னு புலம்பினால் எப்படி? தெருவில் ஒரு சொறி நாய் நின்று கொண்டிருக்கும். உன் வழியில் நீ போகாமல், ஒரு கிரீம் பிஸ்கெட் போட்டாயானால் என்ன ஆகும்? அந்த நாய் வாலாட்டிக் கொண்டே வந்து உன் வீட்டில் தங்கி விடும்.
"பாவத்தின் சம்பளம் மரணம்...' என்கிறது விவிலியம்; கள்ள உறவின் சம்பளம், நாய் படாத பாடு, பேய் படாத பாடு ஆணோ, பெண்ணோ படுவதுதான்.
நான்கு வருடங்கள் அப்பெண்ணிடம் உறவு வைத்திருந்திருக்கிறாய். தாம்பத்யத்தின் போது உனக்கே தெரியாமல் என்னென்ன காதல் வசனங்களை அவள் மேல் அள்ளி வீசினாயோ... கள்ள உறவு வைப்போர் பாண்டு பத்திரத்தில், "நான் உன்னை இப்படி வாழ வைப்பேன், அப்படி வாழ வைப்பேன்...' என எழுதி கொடுப்பதில்லை; மாறாக ஹிஸ்டீரிகல் அன்பை பகிர்ந்து கொள்கின்றனர்.
உன்னுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணுக்கு பணமோ, தன் குடும்பமோ முக்கியமில்லை; உன் உறவுதான் முக்கியம். அந்த நிலைக்கு உன்னால் தள்ளப்பட்டாரா, அவராகவே தள்ளப்பட்டாரா, இறைவன் அறிவான்!
அப்பெண்ணை அழைத்து பேசு. நடந்ததற் கெல்லாம் அவள் மேல் பழி சுமத்தாதே. தவறை நெஞ்சார, மனசார நீ ஏற்றுக் கொள். "தொடர்பு நீடித்தால், இரு குடும்பங்களும் சீரழிந்து போகும். உன் மகள் வாழ்க்கையும், என் மகன் வாழ்க்கையும் பாழாகி விடும். என் மீது இருக்கும் தவறுக்கு, என்னை நாலு அறை அறைந்து விடு, மனசார திட்டி தீர்த்துவிடு. தற்கொலை செய்யும் எண்ணத்தை விடு. இந்த தகாத உறவை கத்தரிப்பதற்கு அப்பாலும் நாம் வாழ்க்கை யில் சாதிக்க வேண்டிய உருப்படியான காரியங்கள் பல உள்ளன. இரு திருடர்கள் சேர்ந்து திருடினோம். இப்போது திருட்டை விட்டு விட்டு, அவரவர் வழியில் நேர்மையாக நடப்போம். இனி, ஆயுளுக்கும் சந்திக்கக் கூடாதென முடிவெடுத்து பிரிவோம்... 'என உருக்கமாக கூறு. அவள் மனதை இரங்க வைக்க காலில் வேண்டுமானாலும் விழு.
எந்த கெஞ்சலுக்கும் அப்பெண் இறங்கி வராவிட்டால், இறுதி ஆயுதத்தை பிரயோகி.
கணவனை முறைப்படி விவாகரத்து செய்து, மகளை கணவனுடன் விட்டு, விட்டு வந்து சேர். ஊரறிய திருமணம் செய்து கொள்வோம் எனக் கூறு. அதெல்லாம் முடித்து வர, இரண்டு - மூன்று ஆண்டுகள் ஆகும். மீறி வந்தால் தலையெழுத்து என நினைத்து, மறுமணம் செய்து கொள்.
உங்களிருவரையும் கட்டுப்படுத்தும் ஊர்பஞ் சாயத்து இருந்தாலும், மனு கொடுத்து கத்தரித்து விடச் சொல்லலாம்.
எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், சம்சார வாழ்க்கையைத் துறந்து, சன்னியாசி ஆகிவிடு. சன்னியாசி ஆவதற்கு முன், மகனின் எதிர் காலத்துக்கு தேவையான வழிவகை செய்து விடு.
— என்றென்றும் தாய்மையுடன்,