மதுரை சமயநல்லூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், விசாரணைக்கு வந்த போது, மனைவி முத்துலட்சுமியை,40, கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, கணவர் கண்ணன்,43, தலைமறைவானார். கொலையை பார்த்த அதிர்ச்சியில், ஏட்டு சரஸ்வதி மயங்கினார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன். முத்துலட்சுமியுடன் 2005ல், இவருக்கு திருமணம் நடந்தது. மகன்கள் பாரதிராஜா,5, மகாலிங்கம்,4, ஜெயகுமார்,3, உள்ளனர். கணவன், மனைவி இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
ஆறு மாதங்களுக்கு முன், கணவரையும், குழந்தைகளையும் பிரிந்து, தத்தனேரியில் முத்துலட்சுமி தனியாக வசித்தார். நவ.,15ல், குழந்தைகளை தன்னுடன் ஒப்படைக்க, சமயநல்லூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அன்று, இருவரையும் விசாரித்த போலீசார், நேற்று மீண்டும் வரும்படி கூறினர்.
நேற்று காலை 10.30 மணிக்கு, இருவரும் ஸ்டேஷனிற்கு வந்தனர். எஸ்.ஐ., இல்லாததால், காத்திருக்குமாறு பெண் போலீஸ் கூறினார். ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்த போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற கண்ணன், தன்னிடமிருந்த சிறிய அரிவாளால், முத்துலட்சுமி கழுத்தை அறுத்து விட்டுத் தலைமறைவானார்.
முத்துலட்சுமியின் அலறலைக் கேட்டு வெளியில் வந்த ஏட்டு சரஸ்வதி, ரத்த வெள்ளத்தில் கிடந்தவரைப் பார்த்து, அதிர்ச்சியில் மயங்கினார். பின், சக போலீசார் முத்துலட்சுமியை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் அவர் இறந்தார்.
டி.எஸ்.பி., அலுவலகம், சமயநல்லூர் போலீஸ் ஸ்டேஷன், மகளிர் ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு அமைந்த வளாகத்தில், முத்துலட்சுமி கொலையானது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
|
No comments:
Post a Comment