Sunday, December 12, 2010

வேண்டாத விளம்பரங்களை தடுப்பது எப்படி ?




விளம்பரங்கள், விளம்பரங்கள் – நாம் இவற்றை விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. சாலையில் செல்லும்போதும், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும், மொபைல் போனிலும், தொலைபேசி யிலும், இணைய உலா செல்கையிலும் இவை நம் கவனத்தைத் திருப்பி நம்மை காய்ச்சுகின்றன. பல நேரம் இவற்றை நாம் விரும்புவதில்லை. வேண்டாத விளம்பரங்கள் எதற்காக நம் முன்னே வருகின்றன என்று எரிச்சல் அடைகிறோம்.
இதில் இணையத்தில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத விளம்பரங்கள் வேறு காட்டப்படுகின்றன. இணையத்தில் இந்த விளம்பரங்கள் வருவதனைத் தடை செய்திடும் வழிகளை பிரவுசர்கள் தருகின்றன. இங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பராவில் இந்த தடையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். இவை தவிர இலவச தடை செய்திடும் புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைத் தடை செய்திடும் முன், இவை எந்த எந்த வடிவங்களில் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். முதலாவதாக பாப் அப் வகை.இவை புதிய ஒரு விண்டோவில், நாம் பார்க்கும் இணைய தளங்களுக்கு மேலாக தோன்றுகின்றன. எதிர்பார்க்காத நேரத்தில் வந்து, மறையாமல் அடம் பிடிக்கும் இவற்றை அனைவருமே விரும்புவதில்லை. அடுத்த வகை சிறிய படங்களாக, தளங்களில் ஊடுறுவும் கட்டங்கள். இவற்றில் பெரும்பாலானவை நாம் அலட்சியப்படுத்திவிடும் வகையிலேயே இருக்கும். அடுத்த வகை பிளாஷ் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வருபவை. இவை இணைய தளங்களில் அனிமேஷன்களாக நுழைபவை.
இவற்று டன் புதியதாக ஒரு வகை இப்போது அதிகம் வருகின்றன. நம் கர்சர்களைக் குறிப்பிட்ட சொற்கள் அருகே கொண்டு செல்கையில் இந்த விளம்பரங்கள் தோன்றுகின்றன. இவை ஜாவா ஸ்கிரிப்ட் என்னும் ஆன்லைன் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. அதிக எரிச்சலைக் கொடுப்பவை இவைதான். இந்த விளம்பரக் கட்டங்களில் வலது மேல் மூலையில், இவற்றை மூடுவதற்கான அடையாளம் தரப்பட்டிருந்தாலும், அதனைக் கிளிக் செய்தாலும் மீண்டும் மீண்டும் வருகின்றன. இணையப் பக்கத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இவை தோன்றும். குறிப்பாக நாம் படிக்க விரும்பும் டெக்ஸ்ட்டக் இவை மறைப்பதால், நமக்கு பெரும் தடையாக இவை உள்ளன. இவற்றைத் தடுக்க நாம் நம் பிரவுசர்களைத் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டவையாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், டூல்ஸ் சென்று பாப் அப் பிளாக்கர் என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் Turn on Pop up Blocker என்பது தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தால், அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இதில் கிடைக்கும் Filter Level மெனுவில், தடை எந்த அளவில் அமைக்க என்று ஆப்ஷன் கேட்கப்படும். இதில் மாறா நிலையில் Medium என இருக்கும். இதனை High என அமைக்கவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான ஆட் ஆன் தொகுப்பு ஒன்று பாப் அப் விளம்பரங்களைத் தடை செய்வதற்காகவே கிடைக்கிறது. அதனை இன்ஸ்டால் செய்தும் பயன் படுத்தலாம். இதே போல பயர்பாக்ஸ் பிரவுசரிலும் பாப் அப் பிளாக்கர் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் Tools, Options, Content எனச் செல்லவும். இங்கு ஒரு டிக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Block Pop Up Windows என்று ஒரு வரி, முன்னதாக பாக்ஸ் கொண்டிருக்கும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் தரப்பட்டுள்ளது போல மீடியம், ஹை என்ற அளவு தரப்பட்டிருக்காது.
பிளாஷ் முதல் பெரும்பாலான பாப் அப் விண்டோக்களைத் தடுக்க,http://www.noscript.net/getit என்ற தளத்தில் கிடைக்கும் நோ ஸ்க்ரிப்ட் என்ற ஆட் ஆன் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். இது அனைத்தையும் தடுக்கும் என்பதால், நாம் விரும்பாத தடைகள் ஏற்படுத்தப்படலாம். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், ஏதேனும் நீங்கள் பார்க்க விரும்பும் இணையப் பக்கம் சரியாக லோட் ஆகவில்லை என்றால், பயர்பாக்ஸ் பிரவுசரின் வலது கீழ் புறத்தில், S! என்பதில் கிளிக் செய்து பிரச்னைக்குத் தீர்வு காணவும். இதில் என்ன பிரச்னை என்றால், சாதாரண இமேஜ் கொண்ட பாப் அப் விளம்பரங்களை இது தடுப்பதில்லை. அவற்றை நாமே நீக்கிவிடலாம். இருப்பினும் அதனையும் தடுக்க வேண்டும் என விரும்பினால், ஆட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus) என்ற ஆட் ஆன் தொகுப்பினை, டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். இது www.snipurl.com/eylg2 என்ற தளத்தில் கிடைக்கிறது. இது ஏறத்தாழ 99% விளம்பரங்களைத் தடுப்பதாக, இதனை இயக்கிப் பார்த்து ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர்.
ஆப்பரா பிரவுசரில் ஓர் எளிமையான விளம்பரத் தடுப்பு வசதி தரப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக இது செயல்படுகிறது. முதலில் கூறப்பட்டுள்ள இரண்டு பிரவுசர்களிலும், உங்கள் நோக்கம் நிறைவேறவில்லை என்றால், இதற்காகவே இந்த பிரவுசரைப் பயன்படுத்தலாம்.
மேலே கூறிய வழிகளின்படி, விளம்பரங்களைப் பெரும்பாலும் தடுத்துவிடலாம். ஆனால் முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். இணையத்தில் நிறைய விஷயங்கள் இலவசமாகத் தரப்படுகின்றன. எனவே தளங்களை உருவாக்கி, தகவல்களையும் வசதிகளையும் நமக்குத் தருபவர்கள், இத்தகைய விளம்பரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலமே இவற்றை இயக்கி வருகின்றனர். எனவே இவற்றை ஓரளவிற்கு நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது. டிவியில் காட்டப்படும் சினிமா, சீரியல் நாடகங்களில் எத்தனை விளம்பரங்கள் வந்து நம்மைச் சோதிக்கின்றன. பொறுமையாகத்தானே இருக்கிறோம். விளம்பரங்கள் வரும்போது அடுத்த சேனலுக்கு மாறினாலும், அங்கும் இந்த விளம்பரங்கள் வரத்தானே செய்கின்றன. தீங்கு இல்லாத விளம்பரங்களைக் கவனிப்போம். பல வேளைகளில் அவை நமக்கு உதவுபவையாகவும் இருக்கலாம்

புராணக் கதைகள் தோன்றிய இரகசியம்!


புராணங்கள்

புராணக் கதைகள் தோன்றிய இரகசியம்!

பிராமணீயத்தை எதிர்த்த அரசர்களை அச்சுறுத்தி அடக்கப் புனையப்பட்ட கட்டுக்கதைகள்:பிராமணீயத்தில் பிரம்மன் முதலிடம் பெற்றுள்ளான்; இதற்குக் காரணம் பிராமணர் தமது இனத்துக்கு முக்கியத்துவம் தரவேயாகும்.
மற்றும், பிரஜாபதி என்ற தேவனும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரஜாபதி லிங்க வரலாறு பற்றிய கதைகள் அசிங்கமாக அருவருக்கத்தக்கவையாக உள்ளன.
பிரஜாபதி என்றால் உலகை உற்பத்தி செய்யும் கடவுளெனப்படுகிறது. இதனை சில இடங்களில் 4 ஆவது தேவனென்று குறிப்பிட்டுள்ளனர். மூவுலகின் தந்தையும் சிருஷ்டி கர்த்தாவும் இந்த தேவனென வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதைப் பற்றிக் கூறப்படும் கோட்பாடுகள் ஒத்துவரவில்லை.
பிராமணர்கள், காலப்போக்கில் அரசியல் நோக்கங்களுக்காக இக்கோட்பாடுகளையெல்லாம் தோற்றுவித்திருக்கவேண்டும். அதாவது, தங்கள் ஜாதியை உயர்த்திக் காட்டவும், ஜாதி வேற்றுமைகளை நுழைக்கவும் செய்த ஏற்பாடாகவிருக்கும். பிராமண ஆதிக்கம் தலைசாயும் காலத்தில்தான் இந்த ஜாதி வேற்றுமை அதிகரிக்கப்பட்டு பிராமணர்களை உயர்த்திக்காட்ட தீவிர முயற்சிகள் செய்யப்பட்டன; இதற்காகத்தான் பிரம்மன் என்ற தேவனைக் கற்பித்து முதல் தேவனாக்கியுள்ளனர். பிற்கால வேத நூல்களில் இந்த பிரம்மனைப் பற்றிய குறிப்பே கிடையாது.
மனுவின் காலத்தில்தான் பிரம்மன் முக்கியமாக்கப் பட்டுள்ளான். அதாவது, ஜாதி வேற்றுமைகளை உண்டாக்க பிரம்மனைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். பிராமணருக்கு உயர்வு தரவே பிராமணரின் பெயரடியாகப் பிரமன் கற்பிக்கப்பட்டு, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும், தகப்பனும் மேலானவனும் என்று காட்டியுள்ளனர். பிரம்மனே தன் உடலிலிருந்து உலகை சிருஷ்டித்தானென புனைந்துள்ளனர்.
மதிப்பாரில்லை
மற்றும், இந்தப் பிரம்மன் பொன் முட்டையிலிருந்து பிறந்தானாம். ஆனால், இந்தப் பிரம்மனை யாரும் வணங்குவதோ, மதிப்பதோ இல்லை; மக்களுக்கு உலகானுபவமும் பகுத்தறிவும் வளர வளர, இந்தப் பூசாரிகளின் கொள்கைகளில் நம்பிக்கை குறையலாயிற்று. மற்றும் பல குழுவினர் தலை தூக்கி ஒவ்வொருவரும் தத்தமக்கென ஒவ்வொரு கடவுளை முக்கியமும் முதன்மையுமாக்கிக் கொண்டனர். ஆரியக் கோட்பாடுகளும் மதிப்பிழந்தன. வேதக் கடவுளுக்குப் போட்டியாக எண்ணற்ற கடவுள்கள் தோற்றுவிக்கப் பட்டன. வேதத்திற்கு வெகுநாட்களுக்குப் பின்பே சிவனும், விஷ்ணுவும் பிராமண மதத்தில் இடம் பெற்றனர்.
சிவன் என்ற கடவுளின் பெயர் வேதங்களில் இல்லை. அன்பு உடையவன், புனிதன் என்ற அர்த்தத்தில்தான் சிவன் என்ற பெயர் கையாளப்பட்டுள்ளது. அக்னியையே சிவன் என்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷ்ணுவிலும் வேதகால விஷ்ணுவிற்கும் பிற்கால விஷ்ணுவிற்கும் வேற்றுமை காணப்படுகிறது. இதுவும் இனச்சிறப்புக் காட்டும் நோக்கத்துடன்தான் கற்பனை செய்யப்பட்டதேயாகிறது.
விஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இவை நிகழ்ந்த காலம் எவை என நிர்ணயமாகத் தெரியவில்லை. இந்த அவதார வரலாறுகள் எல்லாம் பிராமணீய சிறப்பு நோக்கத்துடன்தான் இருக்கின்றன. பிராமணீய மதத்தை எதிர்த்த அரசர்களை ஒடுக்க கற்பனை செய்யப்பட்ட கதைகள்தான் அவதாரக் கதைகள்!
ஏதாவது அரசனின் அடக்குமுறையிலிருந்து மக்களைக் காக்கத்தான் விஷ்ணு அவதாரம் செய்திருக்கிறார். எனவேபிராமணீயத்தை அரச குலத்தினர் எதிர்க்கும் போதெல்லாம் பிராமணீயத்துக்கு ஆபத்து நேரிடும் போதெல்லாம் இந்த அவதாரக் கதைகள் தோன்றியிருக்கவேண்டுமென எண்ணச் செய்கிறது.
மகாபாரதமும், இராமாயணமும் பிராமணீயத்தை எதிர்த்த அரச மரபினை அச்சுறுத்தி ஒடுக்கப் புனையப்பட்டவையாகும்.
எப்படியெனில், இந்த அரச மரபினர் ஒடுக்கப் படுவதற்கு முன்பே இந்தக் கதைகள் வழக்கில் இருந்திருக்கின்றன. பிற்காலத்தில்தான் இக்கதைகளில் வரும் இராமனையும், கிருஷ்ணனையும் பிராமணர்கள் அவதாரங்களாக்கிவிட்டனர். வேதங்கள் மதிப்பிழக்கவே, பூசைச் சடங்குகளைப் பிராமணர்கள் தோற்றுவித்து, அவற்றைத் தாங்களே செய்ய வேண்டுமென ஏற்பாடும் செய்து கொண்டனர். இந்தச் சடங்குகளைச் செய்யும் உரிமை பிறருக்குப் போகக்கூடாதென்றுதான், சமஸ்கிருத மந்திரங்களைப் பிறர் படிக்கக்கூடாது, ஒப்புவிக்கக்கூடாது என்று தெய்வ சாப பயம் காட்டி அச்சுறுத்தி தடைப்படுத்தி, அவற்றைத் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டனர்.
மற்றும் ஒரு தந்திரம் செய்தனர். அதாவது, பழங்குடிகள் வணங்கியவற்றை எல்லாம் பிராமண மதத்திலும் சேர்த்துக் கொண்டு அவர்களே பூசாரிகளாயினர்.
மற்றும் இந்த பூசை சடங்குகளுக்கு மதிப்புத் தருவதற்காக சுவர்க்கம் நரகங்களையும் கற்பனை செய்தனர். ஜாதி உயர்வு தாழ்வு கற்பித்தும், பல்வேறு பிறவிகள் கற்பித்தும், பிராமண ஜாதியே உயர்ந்தது என்று கூறியும், உயர்ந்த ஜாதியை மறுபிறப்பில் தானடைய முடியுமென்றும், இதற்காக பூசைகள் சடங்குகள் செய்யவேண்டுமென்று கூறியும் தங்கள் கொள்கைகளுக்கு ஆக்கம் தேடிக் கொண்டனர். பிதுர்கள் மூதாதைகள் பூசை என்பது பிராமணர்களுக்கு மதிப்பு தேடக் கையாளும் முறையே. இதற்காகத்தான் யமன் என்ற தேவனும் கற்பிக்கப்பட்டான். பூலோகத்தில் வசித்த முதல் மனிதனே செத்தபின் யமதர்ம ராஜனானான் என வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
மோட்ச - நரக பித்தலாட்டம்
மோட்சமடைய தவம் செய்ய வேண்டுமென்ற கோட்பாடும் சூழ்ச்சியாகவே இருக்கிறது. எப்படியெனில், இந்த தவம் செய்வதில் விதிக்கப் பட்டுள்ள கடுமையான விதிகளை நிறைவேற்றி, தவத்தில் முழு வெற்றி பெற்றவர்கள் யாரும் காணோம். இந்தப் பித்தலாட்டத்தை மறைக்கவே பிற்காலத்தில் பக்தி முறை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
கபிலம் - புத்தம்
இவற்றை எல்லாம் ஆட்சேபிக்கத் தான் மீமாம்சம், கபிலம் முதலியன, தோன்றின. கபிலம் என்பது பிராமணீயப் பித்தலாட்டங்களை வெட்ட வெளிச்சமாக்கும் கோட்பாடு கொண்ட இயக்கம். இக் கோட்பாடுகள் பிராமண மதத்தினரின் கடவுள் கொள்கைக்கே வெடி வைப்பதாகவுள்ளன. பவுத்தமோ பிராமண மதக் கோட்பாடுகளை அடியோடு பொய்யாக்கும் நோக்கம் கொண்டது.
நெடுங்காலமாக மோட்ச நரகத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. புத்த மதத்தின் செல்வாக்கைக் குறைக்கவே பார்ப்பனர்கள் காம லீலைகள் மிகுந்த கிருஷ்ணாவதாரக் கதையை மக்களிடையே அதிகம் பிரச்சாரம் செய்தனர். மற்றும், இன வேறுபாடுகளும் அதிகரிக்கப்பட்டன. பவுத்த மதத்தால் செல்வாக்கிழந்த பிராமண மதத்திற்குப் புத்துயிரளிக்கத்தான் சங்கராச்சாரி பாடுபட்டார். மற்றும் சைவை வைணவ மடங்கள் தோற்றுவிக்கப்பட்டதும் பவுத்த மடங்களுக்குப் போட்டியேயாகும். சங்கராச்சாரியார் காலத்திலும் அதற்குப் பின்னரும்தான் ஜாதிப்பிரிவுகள் அதிகரித்தன. இந்த ஜாதிப் பிரிவினைகள் தொல்லையானவை என்றும், மானக்கேடானவையென்றும் ஹிந்துக்கள் உணர்வதாகக் காணோம். ஆனால் பிராமணர்கள் கருத்தோ தங்கள், இனம் ஒன்றுதான் உண்மையான சுத்தமான ஜாதி; மற்ற ஜாதியாரெல்லாம் கலப்புகள் என்பதாகும்.
இப்போது பிராமணர்களின் மதிப்பு விரைந்து நசிந்து வருகிறது. உலகத் தொடர்பு அதிகமற்ற சில கிராமாந்திரங்களிலும் நகரங்களிலும் மூடக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் வட்டாரங்களிலும் மாத்திரமே இவர்கள் கொஞ்சம் மதிக்கப்படுகிறார்.
(மேலே குறிப்பிட்டவை என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பேரகராதியில் காணப்படும் கருத்துகளாகும்.)
விஷ்ணு அவதாரம்
பரசுராமன், சத்திரியர்களை (ஆரியர்களுக்கு எதிராக இருந்த அரசர்களை) எல்லாம் கொன்று, அவர்களுடைய நாடுகளைக் கவர்ந்து, அவற்றைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்தான். அதன் பின் தன் இறுதிக் காலத்தைக் கழிக்க சிறு நிலத்தைத் தந்துதவும்படி அவன் பார்ப்பனர்களைக் கேட்டானாம். ஆனால் அந்தப் பார்ப்பனர்கள் பரசுராமன் கேட்ட சிறு நிலமும் கொடுக்க மறுத்துவிட்டனராம். இதைக் கண்டு சீற்றமடைந்த பரசுராமன் அப்பார்ப்பனர்களைப் பழி வாங்கத் திட்டமிட்டானாம். பிறகு, வருணனை அடைந்தான். தான் யாரென்பதையும், தான் வந்த காரியத்தையும் வருணன் இடம் சொல்லி, அந்தப் பார்ப்பனர் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் தண்ணீரில்லாது போகச் செய்ய உதவி புரியும்படிக் கேட்டான். வருணனும் இணங்கினான். பரசுராமன் எய்யும் அம்பு எவ்வளவு தூரம் பாய்கிறதோ, அவ்வளவு தூரம் கல் கொள்ளச் செய்யவேண்டுமென்பது ஏற்பாடு ஆயிற்று. பரசுராமன் அம்பு எய்வதற்கு முன்னிரவு அவனுடைய வில்லின் நாண் பழுதாக்கப்பட்டு விட்டது. காலையில் எய்யப்பட்ட அம்பு அதிக விசை கொண்டு பாயாது. இப்போது உள்ள மலையாள நாட்டளவுக்குப் பாய்ந்து விழுந்தது. எனவே, மலையாளக் கரைப் பகுதிக்கப்பாலிருந்த நாடெல்லாம் கடல் கொள்ளப்பட்டு விட்டதாம்.
(இது கால்வின் - புராண ஆராய்ச்சி)
ஏராளமான பார்ப்பனர் கும்பகர்ணனுக்கு ஆகாரம்
கும்பகர்ணன் தவழும் குழந்தையாக இருந்தபோது தன் கைகளை நீட்டி அக்கையில் அகப்பட்டவைகளை எல்லாம் விழுங்கிவிட்டான். ஒரு சமயம் இந்திரனுடைய காமக்கிழத்திகளில் 5000 பெண்கள், 7000 ரிஷிபத்தினிகள், ஏராளமான பிராமணர்கள், பசுக்கள் ஆகியவற்றை விழுங்கிவிட்டதாக இராமாயண வரலாறு கூறுகிறது.
(இது கால்வின் - புராண ஆராய்ச்சி)
சேது- தமிழ் மன்னன் கட்டியது
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள சேது (பாலம்) இராமாயணத்தில் வரும் அனுமானும் அவன் படைகளும் கட்டியதாகக் கூறப்படுகிறது. ஆயினும் சரித்திர ஆதாரமான ஓர் வரலாறு உள்ளது. அதாவது, மதுரை மன்னனிடம் தோற்ற மறவர் குல மன்னன் ஒருவனே இப்பாலத்தை அமைத்து, அவனும் அவனுடைய படைகளும் மதுரை மண்ணை விட்டுத் தப்பி இலங்கைக்குச் சென்றனர் என்பதாக.
(இது கால்வின் _- புராண ஆராய்ச்சி)
தெய்வலோக இறக்குமதி பித்தலாட்டம்
சிறந்த பொருள்கள், கலைகள், ஏதாவது இருந்தால் அவை தெய்வலோகத்திலிருந்து கொண்டு வரப் பட்டவையென்றும், தெய்வ வாக்கென்றும், கடவுள் அருள் பிரசாதமென்றும் கூறுவது ஹிந்துக்கள் (பிராமணர்) வழக்கம்.
(சர். வில்லியம் ஜோன்ஸ்)
அமெரிக்கர், இந்தியர் கூர்மாவதாரம்
அமெரிக்க, இரோகங் இந்தியர்களும் ஆமையைப் பற்றி ஒரு புராண வரலாறு கூறுகின்றனர்.
ஆதிகாலத்தில் ஆறு ஆண்டுகள் ஆகாச மண்டலத்திலிருந்தனர். ஆனால் பெண்கள் இல்லை. இனவளர்ச்சிக்காக ஒரு பெண்ணைத் தேடினர். தேவலோகத்தில் ஒரு பெண்ணிருப்பதாக கேள்விப் பட்டனர். ஒருவனை அங்கு அனுப்பத் தீர்மானித்தனர். ஆனால் அவ்வளவு தூரம் பறக்க முடிய வில்லை. அவன் கருடனின் உதவியை நாடினான். கருடன் அந்த ஆளைத் தேவலோகம் கொண்டு சேர்த்தான். அங்கு அவன் அந்தப் பெண்ணை மயக்கி வசப்படுத்தினான். அந்த நடவடிக்கைகளை அறிந்த பரமாத்மா சீற்றமடைந்து அப்பெண்ணையும், அவனையும் சொர்க்கலோகத்தில் இருந்து தள்ளிவிட்டார். அவர்கள் கீழே விழுவதைக் கண்ட ஓர் ஆமை அவனைத் தாங்கிக் கொண்டது.
மீன்களும், கடல் பூச்சிகளும் கடலடியிலிருந்து மண்ணை எடுத்து வந்த ஆமையைச் சுற்றிப் போட்டு மூடிவிட்டின. இவ்விதம் ஆன மண் கண்டமே உலகமாயிற்று; அப்பெண்ணிற்குப் பிறந்தவர்களே மனிதர்கள்.
(இது கால்வின்_ - புராண ஆராய்ச்சி)
பன்றித்தலை லட்சுமி
விஷ்ணு, பன்றி உருக் கொண்டது (வராகவதாரம்) பற்றி ஒரு சித்திரமுள்ளது. விஷ்ணுவின் உருவத்துடன் லட்சுமிக்கு 4 தலைகள். ஒரு தலை பன்றித் தலை. 8 ஆயுதங்கள் ஏந்திய எட்டுக் கைகள். இப்பெண்ணுருவத்தைச் சுற்றிப் பல பன்றிகள் வில்லேந்தியபடியுள்ளன.
(இது கால்வின்_ - புராண ஆராய்ச்சி)
கிரேக்க மன்னர் படையெடுப்பு வரலாறே இராமாயணம்
இராமாயணம், கிரேக்கரில் தீரேனிசால் அல்லது பஞ்சுரங்கதையே என விளக்குகிறார் சர். வில்லியம் ஜோன்ஸ். இந்த பஞ்சுரங் என்ற கிரேக்க வீரன் பெரும்படையுடன் இந்தியா முதலிய நாடுகள் மீது படையெடுத்து வந்தான். இந்தப் படையெடுப்பின் வரலாறாகவோ அல்லது அவ்வரலாற்றின் ஒரு பகுதியை ஒட்டிப் புனையப்பட்ட வரலாறாகவோ இராமாயணம் இருக்கவேண்டுமென்கிறார் இவர்.
-------------------- தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்ட ஆரியர்களின் மத வேத சாஸ்திர புராணங்களின் புரட்டுக்களை ஆதாரங்களுடன் விளக்கும் நூல் : ”புரட்டு இமாலயப் புரட்டு” - பக்கம் 66 -74

சட்டமன்றத்தில் கலைஞரின் நகைச்சுவைகள்!


இந்த 50 ஆண்டுகளில் சட்டசபையில் கலைஞர் உதிர்த்த நகைச்சுவை முத்துக்கள் பலப் பல. அவற்றில் சில முத்துக்கள் மலரும் நினைவுகளாக இங்கே!
பீர் முகம்மது: விவசாயக் கூலிகளுக்குக் கருத்தடை ஆபரேஷன்கள் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவரும் ஆபத்து இருக்கிறது. அரசு இதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்
!
கலைஞர்: கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மதுகூட அவரது தந்தைக்கு 33வது பிள்ளை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.விநாயகம்: மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?
கலைஞர்: இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும் (14.3.1969)
ஜேம்ஸ்: மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதுபற்றி ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு, ஒன் சைடெட் லவ் போலத்தான் இருக்கிறது.
கலைஞர்: ஒன் சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை! (26.2.1970).
அப்துல் லத்தீப்: கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவதுபற்றி ஆலோசிக்குமா?
கலைஞர்: ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலை கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது. (8.12.1971)
கோவை செழியன்: ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மயமாக்கிவிட்டால் பிரச்சினை இருக்காது அல்லவா?
கலைஞர்: ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்! (18.12.71)
காமாட்சி: மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை.. இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?
கலைஞர்: மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே! (14.3.73)
கலைஞர்: நாங்கள் விலைவாசி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ்காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.
அனந்தநாயகி: அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன்றைக்கு இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்?
கலைஞர்: அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம். (23.3.1973)
சோனையா: தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அரிய விரும்புகிறேன்
கலைஞர்: பல பேர்மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களைக் கூறி, உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்ட நான் விரும்பவில்லை. (27.3.73)
பி.ஹெச் பாண்டியன்: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது!
கலைஞர்: புல் என்பது புல்லா?(16.2.1989)
பி.ஹெச்.பாண்டியன்: ஹை கோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே வாங்கி விட்டால், வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல்கிறார்?
கலைஞர்: காலிகள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான்! (7.4.1989)
ஆர். சிங்காரம்: இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானே? புதிய வித்வான்களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான்கள்!
கலைஞர்: நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா? (4.5.1989)
நூர்முகம்மது: கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட-கடைக்கண் பார்வை குமரியின்மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலயை அமைக்க, முதல்வர் முன்வருவாரா?
கலைஞர்: குமரியின்மீது கடைக் கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது! (6.5.1989)
பி.வி. ராஜேந்திரன்: உப்பு உற்பத்தி மரணப் படுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து, அது சவப் பெட்டிக்குள் சென்று கொண்டு இருப்பதை உணர்கிறீர்களா?!
கலைஞர்: தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப் பெட்டிக்குள் போய்விட்டதா என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க, அதற்கும் உப்புதான் தேவை! (20.1.90)
ரகுமான்கான்: இந்திராகாந்தியைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம்கூட ஜாமீனில்தான் இருக்கிறார்கள்!
கலைஞர்: தவறான தகவல்! என்னையும் பேராசிரியரையும் அந்த வழக்கில் விடுதலை செய்து விட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக்கிறார். (9.4.90)
வி.பி. துரைசாமி: ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?
கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்! (24.4.1990).
குமரி அனந்தன்: நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர்செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு அய்யப்பாடு...
கலைஞர்: குமரி அனந்தனுக்கு அப்படியொரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம்.. அதையும் முயற்சித்துப் பாருங்கள். (7.5.1990).

இந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்திருக்கிறது?

உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில் குறிப்பாக எல்லா சமுகத்தைவிட மதசம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆட்சி செய்யும் நாடுகளும் கூட அரசுரிமையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்பவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்துவரும் இக்காலத்தில், இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது
.
நிற்க. பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதரபாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது, இருப்பது மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும் - இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும்.
மூன்றாவது, பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத்தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமுகத்தை பெரும்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட்டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம்பந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.
வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கியருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பாவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ, ஒரு சமுகத்தையோ அடியோடு கொன்று, ஒரு தேசத்தார் வாழத்துணியும் படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமுக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவுகளாகவும், ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும்.
கிறிஸ்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரிகளாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.
அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மதவிஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறிஸ்தவர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாதவர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச் சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.
இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச்சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமுகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம் முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்றார்கள்.
உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக, அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக்கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை, உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள்.
அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில், அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களைபோல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையில் மகமதியர்களையும்- மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக, நடைஉடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுப்பட்டுக் கிடந்தாலும், இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீர அரசர்களான அமீருக்கும் பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.
மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேச குடிஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங்களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின் பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால், புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலியுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள்.
இந்தியாவில் உள்ள மகமதிய சமுகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும், மற்றொரு புறம் தங்கள் சமுக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும், அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால், கூடுமானவரை அந்த சமுக நன்மை சம்பந்தமான கவலையும், ஒற்றுமையுமேயாகும். ஆனால், இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமுக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால், இதிலுள்ள மதப்பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும், ஜாதிப்பிரிவுகளும், அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும், அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும்.
இந்த உள்பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால், மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன: முதலாவது, இந்துக்களுடைய மதக்கொள்கைகளின் படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால், ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்கூடாது.
மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100-க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ, நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.
படிப்பு, மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரியான நிர்ப்பந்தம் இருப்பதோடு மாத்திர மல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதிகளாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல், காணமுடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவைகளையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீரவேண்டும் என்றும், அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.
ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குத் தக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத் தக்கதாக பதினாயிரக்கணக்கான கடவுள்களை சிருஷ்டித்து, ஆயிரக் கணக்கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத்தாருக்கு வேண்டியவைகளை யெல்லாம் அவசியமாக்கி, அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப் பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமான தென்றும், நாஸ்திகமென்றும் அப்படிப்பட்ட நாஸ்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.
இது மாத்திரமல்லாமல், யாராவது துணிந்து இக்கட்டுப்பாட்டையும், கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ்டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றையதினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும், அவைகளைக் கொண்ட புஸ்தகங்களே மத ஆதாரங்களாகவும், அவைகளை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.
உதாரணமாக, இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடை, உடை, ஆச்சாரம், போக போக்கியம் முதலியவைகளில் பழைய கொள்கைகளையும், பழைய அனுபவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்திக் கொடுத்து, அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும், ஆணவமும், இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.
உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள் பெரியோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும், ஒழிக்க வேண்டும் என்றும், அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.
உதாரணமாக, சமீபத்தில் பல இடங்களில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானித்திருப்பதும் போதுமான உதாரணமாகும்.
எனவே, இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும், இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனியம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?
எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும் என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.
எனவே, இந்தியாவில் பார்ப்பனியமற்ற மதமே இல்லை என்றும், இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும், சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லாது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாததென்றே சொல்லுவோம்.
தந்தை பெரியார்- "குடிஅரசு" துணைத் தலையங்கம் - 14.4.1929