மாதவனுக்கு கசகசப்பாய் இருந்தது. கர்சீப்பை எடுத்து கழுத்து வியர்வையை துடைத்துக் கொண்டார். நிழலான இடமாய்ப் பார்த்து நின்றிருந்தாலும், நடு ரோட்டிற்கு ஓடி வண்டியை மடக்குவது என்பது ஒரு கொடுமையான வேலை. இப்படி ஓடிச் சென்று வழிமறித்து வண்டிகளைப் பிடிப்பது ஒன்றும் சுலபம் கிடையாது. சமயங்களில் வண்டிக்காரர்கள் கட் அடித்து இடித்துவிட்டுப் போய்விடுவதும் உண்டு. என்ன தான் நம்பர் நோட் செய்தாலும் ஒன்றும் வேலைக்காகாது. மாதவன் ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள்.
வண்டிகளை மடக்குவதற்கு சரியான இடம் பார்த்து நிற்க வேண்டும். எங்கு ஃபிரீ லெப்ட் இல்லையோ அங்கு கண்களுக்கு தெரிகிறாற்போல நிற்கக்கூடாது. கொஞ்சம் உள்ளடங்கி ஓரமாய் நிற்க வேண்டும். அப்போது தான் யாருமில்லை என்ற நினைப்பில் வண்டியோட்டுபவன் “சல்”லென வண்டியை ஸ்லோ செய்து திரும்புவான். திரும்பியவுடன் வேகமெடுக்க ஆரம்பிக்கும் நேரத்தில் சட்டென இரண்டு கைகளை விரித்தபடியே குறுக்கே புகுந்து ஓரங்கட்டச் சொல்ல வேண்டும். வண்டியின் திருப்பத்திற்கும் குறுக்கே போய் நிற்பதற்கும் சரியான தூரம் வேண்டும். அது குறைவாக இருக்கும் பட்சத்தில் ப்ரச்சனைதான்.
அப்படி மடக்கியவுடன், சட்டென வண்டியின் சாவியை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாய் இளைஞர்களிடம். இல்லாவிட்டால் மயிராப் போச்சென போய்க் கொண்டேயிருப்பார்கள். அப்படி மடக்கப்படும் முகங்களில் தெரியும் கோபத்தையும், “அய்யோ மாட்டினமா” என்கிற பாவ முகமும், “த்தா.. மாட்னேண்டா” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு ஓரங்கட்டும் ஆட்களின் முகங்கள் தூக்கத்தில் கூட வரும்.
”கையில காசேயில்லை சார்.. வேணுமின்னா வண்டிய வச்சிக்க.. காசு கொண்டாந்து கொடுத்துட்டு எடுத்துட்டுப் போறேன்” என்று வண்டியை விட்டு கிளம்புபவன், “சார்.. ஒரு இருபது இருக்கு. அவ்ளதான் இருக்கு.. அசீஸ் பண்ணுங்க..” “எவ்வளோ ஃபைன்.. பில் தருவீங்களா?’ என்று அலட்சியமாய் கேட்கும் முதுகில் மார்பழுத்திய பெண்களோடு வரும் இளைஞர்கள். என பல முகங்கள். எல்லோர் முகத்திலும் ஒரு விரோதம் இருக்கும். “தேவடியாப் பய’ என மனதில் திட்டும் குரல் கேட்கும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப் பட்டால் முடியாது. சம்பளத்தைவிட இது முக்கியம்.. ஒவ்வொரு நாளும் அதுவும் இந்த வண்டிகளின் புகையின் நடுவே நின்று, வெயில் மழை என்று உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற கூலி இதுதான். சம்பளம் அல்ல.. என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டாலும் மாதவனுக்கு உள்ளுக்குள் தன்னைப் பற்றிய கழிவிரக்கம் சுரந்து கொண்டேதானிருக்கும்.
ஒருநேரம் இல்லை ஒருநேரம் மாதவனுக்கு என்ன பொழைப்பு இது என்று எரிச்சலாய்க்கூட வந்ததுண்டு. மாசம் வரும் பத்து சொச்ச சம்பளத்துடன் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் இருக்கிற விலைவாசியில் அது எங்கே போகிறதென்றே தெரியவில்லை. தினசரி குறைந்தது முன்னூறு ரூபாயாவது கல்லா கட்டவில்லையென்றால் தெனப்படிக்கு பிரச்சனைதான். கலெக்ஷன் டைமில் கூட ஆள் இருந்துவிட்டால் அதிலும் பங்கு போய்விடும். அது மட்டுமில்லாமல் சார்ஜெண்டும் இருந்துவிட்டால் அவருக்கு ஒரு பங்கு என்று எல்லாம் போக நூறு மிஞ்சினால் பெரிய விஷயம். சரவணபவன் காபி இருபது ரூபாய் விற்கும் காலத்தில் நூறு ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு இருக்கும்?. அண்ணாச்சி பரவாயில்லை.. தெனம் காபியும், டிபனும் இலவசமாய் கொடுத்துவிடுகிறார். மாதவன் வேலை பார்க்கும் ஸ்டேஷனில் பரவாயில்லை. ஒரு சில ஸ்டேஷனில் எல்லோர் கலெக்ஷனையும் சேர்த்து போஸ்டுக்கு ஏற்றவாறு பிரித்துக் கொள்கிறார்களாம். அநியாயம். அலைந்து திரிந்து மடக்கிப் பிடிப்பது நாம்.. அதில பங்கு அவர்களுக்கு.. சே.. என்னா பகல் கொள்ளை.. என நினைத்துக் கொள்வார் மாதவன்.
ஆனால் இன்னைக்கு அது கூட கிடைக்காது. மாச டார்கெட் முடித்தே ஆகவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஐயா ரொம்ப ப்ரெஷர். மாசக் கடைசியில் கேஸ் பிடிக்கவிலலையென்றால் அவருக்கு மேலிடத்தில் மண்டகப்படியுண்டு. குறைந்தது ஐம்பதாவது பிடிக்க வேண்டும். இன்றைக்கென்று பார்த்து பெரிதாய் எதுவும் மாட்டவில்லை. எல்லோரும் சரியாகவே நின்று, சிக்னல் பார்த்து வருவதாய் மாதவனுக்கு பட்டது. ஞாயிற்றுக்கிழமை வேறு... பக்கத்து தியேட்டர் காம்ப்ளக்ஸில் மேட்னி வரும் ஆட்களை விட்டால் அஞ்சு மணி வரை காத்தாடத்தான் இருக்கும். டார்கெட் முடிக்காமல் போனால் ”இதே உன் காசுன்னா பிடிக்காம வ்ருவியா.?” என்று சடுதியில் நீதிமானாய் மாறிக் கேள்வி கேட்பார் இன்ஸ்பெக்டர்.
மணி இரண்டு. மாதவன் சுறுசுறுப்பானார். வண்டியில் இரண்டு குழந்தைகளுடன் ஒரு மிடில் க்ளாஸ் தகப்பன். மாதவன் தன் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டே அந்த வண்டியின் முன் ஓட, அவன் பதறியடித்து பிரேக்கைப் பிடித்து ஓரமாய் ஒதுக்கிவிட்டு, பரிதாபமாய் மாதவனையே பார்த்தான். மாதவன் பரபரவென அந்த் வண்டியின் அருகே வந்து வண்டியின் சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு,
“இறங்குங்க.. போய் அய்யா கிட்ட சலான் வாங்கிக்கங்க..” என்று சொல்லிவிட்டு கிளம்ப யத்தனிக்க,
“சார்.. சார்..” என்றபடி பையன்களை ப்ளாட்பாரம் ஓரமாய் ”பத்திரமாய் நில்லுங்க” என்று சொல்லிவிட்டு மாதவனருகில் வந்து “சார்.. பசங்க பசிக்குதுன்னாங்க.. ஓட்டலுக்கு கூட்டிட்டுப் போறேன்.. கையில நூத்தம்பது ரூபாதான் இருக்கு.. பார்த்து செய்யுங்க சார்..” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
மாதவனுக்கு இதெல்லாம் புதிதல்ல. அவர் அவனை சட்டை செய்யாமல்
”அதெல்லாம் எனக்கு தெரியாது அய்யாவ பாரு..” என்றபடி, வேகமாய் திரும்பிய இன்னொரு வண்டியை நோக்கி இரண்டு கைகளை விரித்தபடி குறுக்கே ஓட, அந்த வண்டிக்காரன்.. கோபமாய்..
“ஓரம்போங்க..சார்.. குறுக்கே நிக்காதீங்க.. நானே நிக்கிறேன்..” என்றபடி.. வண்டியை நிறுத்தி என்ன என்பது போல மாதவனை பார்த்தான். மாதவன் வண்டியின் சாவியை எடுக்க கைவைத்த போது..
“ஹலோ..சார்.. கைய எடுங்க.. வண்டி சாவில கை வைக்கிற வேல வேணாம். எதுக்கு வண்டிய ப்ளாக் பண்ணீங்க..?”
மாதவனுக்கு இதுவும் புதிதல்ல.. இம்மாதிரி தாட் பூட்டென கேள்வி கேட்பவர்கள் எல்லாம் அடுத்தடுத்து கேட்கப்படும் லைசன்ஸ், இன்சூரன்ஸ், ஹெல்மெட், இத்யாதிகளில் சரணடைந்து விடுவார்கள். அதைவும் மீறிப் போனால் வண்டியின் நடுவில் ஒட்டும் கருப்பு ஸ்டிக்கர், நேம் போர்ட் என்று எவ்வளவோ உள்ளது.
“ஃபிரீ லெப்ட் கிடையாது இங்க. நீங்க பாட்டுக்கு வர்றீங்க.. க்ராஸ் பண்ணுறவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு..?”
“அவ்வளவு பொறுப்பு இருக்கிறவர் க்ராஸிங்க்ல நிக்க வேண்டியதுதானே..? ஓரமா ஒளிஞ்சிட்டு நிக்கிறீங்க.? போலீஸோட வேலை என்ன தெரியுமா? குற்றம் நடக்காம தடுக்கிறதுதான்.. நீங்க.. நடக்கவுட்டு பிடிக்கிறீங்க.. இதுல யாரு தப்பு செஞ்சாங்கன்னு புரியலை..?”
மாதவனுக்கு அயர்ச்சியாய் இருந்தது.. இனி தாங்காது அஸ்திரங்களை விட வேண்டியதுதான் என்று யோசித்து “ரொம்ப பேசாதீங்க..” என்று ஆரம்பிக்க..
“என்ன.. ஆர்.சி;புக், இன்சூரன்ஸ். ஹெல்மெட், வண்டியோட நேம் ப்ளேட், கருப்பு ஹெட்லேம்ப் ஸ்டிக்கர் அதானே.. எல்லாம் சரியாயிருக்கு.. வேணுமின்னா பாத்துக்கங்க.. ‘ என்றான் அலட்சியமாய்.
“மிஸ்டர்.. ராங் சிக்னல்ல வந்திட்டு ரூல்ஸ் பேசாதீங்க.. ஒழுங்கு மரியாதையா அய்யாகிட்ட போய் ஃபைன் கட்டிட்டு சலான் வாங்கிக்கங்க..”
“நான் ஏன் சார் சலான் வாங்கணும் நீங்க என்னை பிடிக்கும் போது.. எனக்கு சிக்னல் இருந்திச்சு..”
“அப்ப நான் பொய் சொல்றேனா.. த..பாரு.. இந்த சிக்னல்ல நாலு கேமரா இருக்கு அதில எல்லாம் ரெக்கார்ட் ஆவுது..”
“அப்போ பிரச்சனையே இல்லை.. அதுல பார்த்துட்டு நோட்டீஸ் கொடுங்க.. நான் கோர்டுல வந்து பைன் கட்டுறேன். ப்ரூப் பண்ணுங்க.. பண்ணாத தப்புக்கெல்லாம் நான் ஃபைன் கட்ட முடியாது.”
“அங்க என்னய்யா ப்ரச்சனை..?” என்று சார்ஜெண்ட் கேட்டார்.
“பாருங்கய்யா.. ராங் சிக்னல்ல வந்திட்டு ரொம்பத்தான் ரூல்ஸ் பேசுறாரு..” என்றதும் அந்த இளைஞன் சாவதானமாய் இறங்கி.. சார்ஜெண்டை நோக்கி நடந்து போய்.. தன் பையிலிருந்து ஒரு கார்டை எடுத்துக் கொடுத்து “இதான் என் கார்டு.. என் போன் நம்பர் எல்லாம் இருக்கு.. நான் சரியாத்தான் வந்தேன்.. அப்படி நான் ராங் சிக்னல்தான் வந்தேன்னு உங்க கேமரா மூலமா கண்டு பிடிச்சி சொல்லுங்க.. ஃபைன் கட்டுறேன். இல்லேன்னா.. நீங்க ஃபைன் கட்ட வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டு யாரையும் மதிக்காமல் வண்டியை நோக்கிப் போக, மாதவன் “என்னங்கய்யா..?” என்று அந்த கார்டை வாங்கிப் பார்த்தான். வாசுதேவன் மனித உரிமைக் கழகம் என்று போட்டிருக்க.. “சரிதான் சார்..” என்றபடி, அவன் வண்டியை எடுத்துக் கொண்டு போவதையே பார்த்துக் கொண்டிருக்க..
“சார்..சார்..” என்று தீனமான குரல் கேட்டுக் கலைந்து குரல் வந்த திசையை பார்த்தார் மாதவன். குழந்தைகளோடு வந்தவன். குழந்தைகள் வண்டியை பிடித்தபடி தன் அப்பாவையே பாவமாய் பார்த்தபடி நிற்க.. ”சார்.. கொஞ்சம் ஐயாகிட்ட சொல்லுங்க சார்.. பசங்க பசியில இருக்குதுங்க.. கையில வேற காசில்ல..” என்றவனை ஆழமாய் பார்த்தார் மாதவன். அவன் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது..
“சரி.. சரி.. ஒரு இருபது ருவா கொடுத்துட்டு கிளம்பு இனிமே இந்தமாதிரி சிக்னல் பாக்காம வரக்கூடாது என்ன..?” என்றார்.
|