''எப்படி சார் இவ்வளவு தூரம் நாளையெல்லாம் சரியா கணிச்சு வர்றீங்க. இன்னிக்கு (18.10.2010) எங்க திருமண நாள். பதினோரு வருஷத்துக்கு முன்ன... இதே நாள்லதான் சுமா, மிஸஸ் ஹாரிஸ்னு ஆனாங்க!''
- விசேஷ நாளின் சந்தோஷம், ஹாரிஸ் ஜெயராஜின் வார்த்தைகளை இன்னும் ருசியாக்கியது!
தன் வாழ்வின் வரமாக அவர் கொண்டாடும் தன் மனைவி பற்றி, 'என் மனைவி'க்காக பேசினார் ஹாரிஸ்...
''அப்போ நான் பிரபலமான கீ போர்டு பிளேயர். இந்தியாவுல இருக்கற எல்லா இசையமைப்பாளர்கள்கிட்டயும் வாசிச்சுட்டிருந்தேன். ஒருமுறை, இசையமைப்பாளர் சாதுபொக்கிலாவுக்காக வாசிக்கறதுக்கு பெங்களூரு போயிருந்தேன். அப்போ அவர், 'இவங்க சுமா... நல்லா ஹம்மிங் பாடுவாங்க ஹாரிஸ்'னு எனக்கு அறிமுகப்படுத்தினார். அவங்கதான் என்னவளா ஆகப்போறவங்கனு, அப்போ எனக்குத் தெரியாது!
முதல் தடவை சுமாவை மீட் பண்ணினப்போ, மின்னல் அடிக்கல. ஆனா, சின்னதா ஒரு மத்தாப்பு ஒளி. தொழில்ரீதியா பல பெண்களை சந்திச்சிருக்கேன். ஆனா, இவங்கள சந்திச்சப்ப மட்டும் அந்த ஒளி பரவுச்சு. அன்னிக்கு ஒரு சம்பிரதாய புன்னகையோட ரெண்டு பேரும் ஒரு வார்த்தைகூட பேசிக்காம பிரிஞ்சுட் டோம்.
சாயங்காலம் பெங்களூரு 'ஸ்டாப் அண்ட் ஷாப்'புக்கு ஷாப்பிங் போயிருந்தேன். பெண்களுக்கான பகுதியில என் தங்கைகளுக்கு பொருட்கள் வாங்கப் போனப்போ, அங்க நின்னுட்டு இருந்தாங்க சுமா. மனசுக்குள்ள ஒருவித குறுகுறு சந்தோஷம். புன்னகை மூலமா, ரெண்டு பேருமே அதை வெளிப்படுத்திக்கிட்டோம். 'சிஸ்டர்சுக்காக வாங்க வந்தேன்'னு சொன்னேன். நான் பார்த்துக்கிட்டிருந்த டிரெஸ்களை எல்லாம் வாங்கி, கீழ வெச்சுட்டு, 'நான் செலக்ட் பண்ணித் தர்றேன்'னு நிறைய நேரம் செலவழிச்சு, தேர்ந்தெடுத்துக் கொடுத்தாங்க.
ஏன்னு தெரியல... 'உங்களுக்கும் ஏதாச்சும்...'னு சொன்னேன். 'நீங்களே எடுத்துக் கொடுங்க'னு சொன்னாங்க. 'சான்சுடா ஹாரிஸ்...'னு சுதாரிச்சேன். 'ஹெச்' டாலர் போட்ட செயினை வாங்கி, அவங்க பார்க்காம 'பேக்' பண்ணி, கையில கொடுத்தேன். அடுத்த நாள்... ஸ்டூடியோவுக்கு வந்தப்போ, 'ரியாக்ஷன் என்னவா இருக்கும்?!'னு காத்திருந்தேன். வாய்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் 'ஆட்டோகிராஃப் ப்ளீஸ்'னு எங்கிட்ட வந்தாங்க. என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்ட முதல் பெண் சுமாதான். கையெழுத்தோட என் போன் நம்பரையும் சேர்த்து எழுதினேன்.
நாட்கள் உருண்டுச்சு. சுமாகிட்ட இருந்து தகவல் எதுவும் வரல. 'தக்ஷக்'னு ஒரு இந்திப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. என் செல்போனை ரஹ்மான் பக்கத்துல வெச்சுட்டு, சாப்பிடப் போயிட்டு வந்தேன். 'உனக்கு ஒரு போன் வந்தது. நான் எடுத்துப் பேசினேன். யாரோ ஒரு பெண் பேசினாங்க'னு ரஹ்மான் சொன்னார். 'என் தங்கச்சியா இருக்கும்'னேன். 'அது மாதிரி தெரியலை'னார் அவர்.
மறுபடியும் வந்தது அந்த போன். 'ஏன் எனக்கு 'ஹெச்' இனிஷியல் டாலர் கொடுத்தீங்க?'னு குரல்ல பதற்றம் இல்லாம அமைதியா கேட்டாங்க சுமா. 'சும்மாதான்!'னு சொன்னேன். அது சும்மா இல்லைனு சுமாவுக்குப் புரிஞ்சது. அப்புறம் வாரத்துக்கு ஒரு நாள், தினமும் ஒரு தடவை, தினமும் பல தடவைனு பேச்சுகள் நீண்டுச்சு. நாங்க சந்திச்ச 90 நாட்களுக்குப் பிறகு, எங்க திருமணம் நடந்தது.
நான் கிறிஸ்டியன்... என் மனைவி தெலுங்கு பிராமின். எங்க வீட்டுல சுமாவை பார்த்துட்டு, 'டபுள் ஓ.கேடா!'னு சொல்லிட்டாங்க. ஆனா, சுமா வீட்டுல நான் பாஸ் மார்க் வாங்கல போல. அந்த பதினெட்டாம் தேதி காலையில ஃப்ளைட்ல சென்னை வந்த சுமா, மாலை என் மனைவியானாங்க. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவங்க வீட்டுல யாருமே கல்யாணத்துக்கு வரல.
கல்யாணமான புதுசுல தெலுங்குப் பெண் சுமாவும், தமிழ்ப் பையன் ஹாரிசும் ஆங்கிலத்துலதான் பேசிக்குவோம். அப்புறம் மொழியில இருந்து மனசு வரைக்கும் ரெண்டு பேரும் பரஸ்பரம் பழகிக்கிட்டோம். எந்த நிர்ப்பந்தமும் இல்லாம தன் பெயரை 'ஜாய்ஸ்'னு மாத்திக்கிட்டாங்க சுமா. முழுமையான தன்னிறைவும், முழுமையான சமர்ப்பணமும் அவங்களோட ஸ்பெஷல். சர்ச் நடைமுறைகள்லகூட தன்னை இயல்பா புகுத்திகிட்ட அவங்களைப் பார்த்து நான் பலமுறை வியந்திருக்கேன், பூரிச்சிருக்கேன்.
ஒவ்வொரு கணமும் எனக்காக வாழறவங்க என் மனைவி. என் தங்கைகள் திருமணத்தை தாயைப் போல பொறுப்பேற்று நடத்தினாங்க. எங்க குடும்பத்துல எல்லாரோட பிறந்த நாளையும், திருமண நாளையும் ஞாபகம் வெச்சு கொண்டாடற அன்பு மனசுக்காரி சுமா. பெத்த தாயைவிட என்னை பூரணமா புரிஞ்சுக்கிட்டவங்க அவங்க. இதை நான் எங்கம்மாகிட்டயே பல தடவை சொல்லி பெருமைப்பட்டிருக்கேன். 'ஆமாண்டா!'னு சிரிக்கற மனசு எங்கம்மாவுக்கு.
சாப்பாடுல இருந்து டிரெஸ் வரைக்கும் நான் முழுக்க முழுக்க அவங்க கன்ட்ரோல். சமீப காலமா ஹேர்ஸ்டைல், ஆடைகள்னு நான் நிறைய மெருகேறி இருக்கறதா நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. அத்தனை பெருமையும் என் மனைவி சுமாவுக்குதான் சமர்ப்பணம்.
என்னதான் பிஸியா இருந்தாலும், கார்ல முன் ஸீட்ல அவங்கள வெச்சுட்டு டிரைவ் பண்ற நேரத்துலயாச்சும் தினமும் பத்து நிமிஷமாவது தனிமையில பேசிடுவேன். 'நேத்தி நம்ம வீட்டுக்கு வந்திருந்த கெஸ்ட்டை அருமையா ரிஸீவ் பண்ணப்பா நீ'னு தட்டிக் கொடுப்பேன். அவங்ககிட்ட சேர்க்க வேண்டிய இந்த வார்த்தைகள தவறாம சேர்க்கறதால நாம குறைஞ்சுடப் போறதில்ல. இல்லறத்தோட மந்திரம் இந்த வார்த்தைகள்தான்னு நம்பறேன் நான்.
நிக்கோலஸ், நிகிதானு ரெண்டு குழந்தைங்க. சண்டையோ, மனத்தாங்கலோ... நானும் என் மனைவியும் அதை தனியறையில முடிச்சுக்குவோம். குழந்தைகளுக்கு... எப்பவும் புன்னகைச்சுட்டே இருக்கற அப்பா, அம்மாவை மட்டுமே தெரியும். நான் வீட்டுக்கு வர்ற நேரம் என் குழந்தைங்க தூங்கிட்டு இருப்பாங்க. அவங்க ஸ்கூல் கிளம்பற வரைக்கும் நான் அயர்ந்த தூக்கத்துல இருப்பேன்.
எப்பவும் அவங்களை தவறவிட்டுட்டே இருக்கற மாதிரி வேலைச் சுமை எனக்கு. ஆனா, பாடல் கம்போஸ் பண்ண வெளிநாடு போகற சூழ்நிலை வந்ததுனா, அவங்களையும் அள்ளிட்டுப் போயிடுவேன். வெளிநாட்டுல நாலு மணி நேரம் நம்ம மூளையை செலவழிச்சு வேலை செஞ்சா போதுமானதா இருக்கும். மிச்ச நேரம் முழுக்க மனைவி, குழந்தைங்ககிட்ட கிட்டத்தட்ட அடிமையாவே கிடப்பேன். அடுத்த ஆறு மாசத்துக்கு அவங்களுக்கும், எனக்கும் அந்த நாட்கள் தாங்கும்.
எவ்வளவு வேலையிருந்தாலும் ஒரு அப்பாவா குழந்தைகளுக்கான என் பொறுப்புகள்ல எந்த சமரசமும், தாமதமும் செய்ய மாட்டேன். அவங்க ஆண்டுவிழா நிகழ்ச்சியில கடைசி வரிசையில சத்தமில்லாம என் மனைவியோட அட்டண்டன்ஸ் போட்டுடுவேன். பள்ளியைப் பொறுத்தவரைக்கும் என் குழந்தைங்களுக்கு அப்பா. அங்க நான் வேற எந்த அடையாளத்தையும் அனுமதிக்கறதில்ல.
இப்போ சுமாவோட அம்மா, அப்பாவும் எங்களை ஆசீர்வதிச்சு, வீட்டுக்கு வர ஆரம்பிச்சுருக்காங்க. குழந்தைங்கள ஆசை தீர கொஞ்சறாங்க. எல்லாமே ஆண்டவனோட கட்டளைப்படியே நடக்குது. வீட்டுல என் சுமாவோட கட்டளைகளை நான் எதிர்கொண்டு நடக்கறேன்.
நல்ல மனைவி, நல்ல குடும்பத்தோட பெரும் அங்கம். என் சுகதுக்கங்களை சுமாதான் நிர்ணயிக்கறாங்க. எங்க எல்லாரோட சுகதுக்கங்களை ஆண்டவர் நிர்ணயிக்கிறார்!