கொட்ட கொட்ட விழித்து...கெட்ட ஆட்டம் பார்த்த மந்திரிகள்
சொந்த ஊரான சாத்தமங்கலம் மீது மட்டற்ற பாசமும், சாத்தமங்கலம் மாடக்கோட்டையில் உள்ள தனது குலதெய்வமான முனீஸ்வரர் மீது மட்டற்ற பக்தியும் கொண்டவர் சென்னை கே.கே.நகர் கவுன்சிலரும் தி.மு.க. பகுதிச் செயலாளருமான தனசேகரன். வருடா வருடம் சென்னையில் இருந்து பெரிய திரை, சின்னத்திரை நாட்டியத் தாரகைகளை அழைத்து வந்து தனது ஊரில் கவர்ச்சி நடன நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்துவார் தனசேகரன். 2 வருடம் முன்பு நடிகை நமீதாவை அழைத்து வந்து ஆடவிட்டு, பஞ்சப்பிரதேசத் தின் இளைஞர் பட்டாள நெஞ்சங்களை இசை நாட்டிய கடலில் நீந்தவிட்டார்.
கெளுத்தி
இந்த ஆண்டோ... பாபிலோனா, நீபா, ஷில்பா, கீர்த்திகா, சுஜிபாலா என கவர்ச்சித் தோப்பையே இறக்குமதி செய்து சுமார் 20 ஆயிரம் மக்களை கவர்ச்சி நாட்டிய சுனாமியில் தத்தளிக்க விட்டு பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.
21.5.10 வெள்ளிக்கிழமை.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகிலுள்ள சாத்தமங்கலத் தில், கே.கே.நகர் தனசேகரனின் பங்களாவில், அமைச்சர்கள் சுப.தங்கவேலன், பெரியகருப்பன், இளையாங்குடி எம்.எல்.ஏ. மதியரசன், எம்.பி.ரித்தீஷ், வைகைப்புயல் வடிவேலு உட்பட ஏராளமான வி.ஐ.பி.களும், கட்சிக்காரர்களும், உறவினர்களும் நட்பு வட்டாரமும் குவிந்திருக்க...
நண்டு, இறால், மீன், சிக்கன், மட்டனோடு வெரைட்டியான விருந்து தொடங்கியது. பந்தி முடிந்ததும்... கூட்டம் கோயில் நோக்கிச் சென்றது.
முனியன் கோயிலருகே... சென்னை நேரு ஸ்டேடிய லெவலுக்கு மேடை, ஒளிவெள்ளம் பாய்ச்சிய மின்விளக்குகள். லேசர் விளையாட்டுகளுக்கு பிறகு டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கியது.
""பாருங்கடா... கட்சிக் கூட்டம்னா எப்பவுமே லேட்டா வர்ற நம்ம அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன்... டான்ஸ் பார்க்க அட் வான்ஸா வந்துட்டாக... பக்கத்தில யாரு? அட நம்ம அமைச்சர் சுப.தங்க வேலன்தான்... பாருங்கடா... என்னமா ரசிக்கிறாக?'' -தொண்டர்கள் பலரின் பார்வை அமைச்சர்களின் ரசனை மீதே குவிந்திருந்தது.
நாட்டிய நிகழ்ச்சியின் நடுவில் மேடையேறி மைக்கைப் பிடித்தார் வைகைப்புயல் வடிவேலு.
""என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை... என் பங்காளி தனசேகரனுக்கு இம்புட்டுச் செல்வாக்கா? தலைவர் கலைஞரோட "இளைஞன்' பட சூட்டிங்குக்காக ஊட்டிக்குப் போற கேப்புல இங்கே வந்தேன். நானும் ஒரு காலத்தில இந்த மாதிரி கூட்டத்தோட கூட்டமா உக்காந்து வேடிக்கை பார்த்தவன்தான்... இன்னக்கி... ராத்திரியில... ஜனங்க எல்லாரும் கொட்டக் கொட்ட முழிச்சிருந்து, கவலையை மறந்து சந்தோஷமா இருக்கிறதுக்கு நானும் ஒரு காரணமா இருக்கேனே... இதுக்காக ரொம்ப சந்தோஷப்படுறேன்...''.
""அண்ணே... பேசுனது போதும் பாட்டுப் பாடுங்கண்ணே!'' கூட்டத்தினர் குரல் கொடுத்தனர்.
""என்ன பாட்டுப் பாட? எம்.ஜி.ஆர். பாட்டுப் பாடவா? வேணாம்... என் பாட்டையே பாடுறேன்... எட்டணா இருந்தா எட்டூருக்கென் பாட்டுக் கேட்கும்...'' பாடலைப் பாடி பலத்த கைதட்டலைப் பெற்றுக் கொண்டு இறங்குகிறார் வடிவேல். மீண்டும் நடன அலைகள்... கிராமத்து ஜனங்களை மூழ்கடிக்கின்றன.
கிராமத்து மக்கள் மட்டுந் தானா? அமைச்சர் பெருமக்கள் இருவரும் மற்ற வி.ஐ.பி.களோடு கொட்டக் கொட்ட விழித்திருந்து... ""நடன நிகழ்ச்சி'' மங்களம் பாடிய பிறகுதான் எழுந்தார்கள்.
இந்த நடன நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, ரிக்கார்ட் டான்ஸ் கலைஞர்கள் சிலரும் வந்திருந் தனர். அவர்களில் ஒருவரான ராணியும் அவர் குடும்பத்தினரும் நம்மை நெருங்கினார்கள்.
""மிந்தியெல்லாம் திரு விழாக்கள்ல ரிக்கார்ட் டான்ஸ் வைப்பாக. எங்க மாதிரி ரொம்ப குடும்பங்கள் அதை வச்சுத்தான் அரை வயித்துக் கஞ்சிக் குடிச்சோம். ரொம்ப ஆபாசம்னு சொல்லி அதுக்கு தடை பண்ணிப்பிட்டாக.... நீங்களே சொல்லுங்க. இவுக போட்ட குத்தாட்டத்தை விடவா நாங்க அசிங்கமா ஆடுனம்? எங்களுக்கு அனுமதி இல்லை. மெட்ராஸ்ல இருந்து... டி.வி.யில, சினிமாவுல ஆடுறவுகளைக் கூட்டியாந்து ரிக்கார்ட் டான்ஸ் வச்சா... எம்புட்டு போலீஸ் பாதுகாக்கிறாக... மந்திரிய, எம்.பி., எம்.எல்.ஏ.வெல்லாம் ஈப்போறது கொடத் தெரியாம ரசிக்கிறாக!'' தனது ஆதங்கத்தை நம்மிடம் கொட்டிவிட்டுப் போனார் ராணி.
""இந்தக் கவர்ச்சி டான்சுக்கு எப்படி அனுமதியும் கொடுத்து பாதுகாப்பும் கொடுத்தீர்கள்?'' ஏ.எஸ்.பி. தலைமையில் வந்திருந்த போலீசாரிடம் கேட்டோம்.
""நாங்க கோயில் திருவிழாவுக்குத் தான் அனுமதி கொடுத்தோம். பாதுகாப்பும் கொடுக்கிறோம்!'' சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்கள்.
|
No comments:
Post a Comment