Thursday, December 8, 2011

இளம்பெண்களை மயக்கும் டாட்டூ மோகம்

தோல் சுருங்கித் தொங்கும் நம் கிராமத்துப் பாட்டிகளின் கைகளில் அன்று... பச்சை குத்திக் கிடக்கும் அவர்கள் கணவரின் பெயர், புள்ளிக் கோலம், சங்கு, மயில் என்று பல!

'ஃப்ரீ ஹேர்' காற்றில் மிதக்கும் டீன் ஏஜ் பெண்களின் புஜம், முதுகு, கழுத்து இறக்கம், இடுப்பு என்று இன்று கவ்விக்கொண்டு கிடக்கின்றன டிராகன்களும், அனகோண்டாக்களும் 'டாட்டூ'வாக! 

தாய்க்கலையான பச்சை குத்தும் கலாசாரத்துக்கும், அதன் நவநாகரிக வடிவமான 'டாட்டூ' கலாசாரத்துக்கும் இடையில் ஓடும் தொடர்பு இழையையும், அவற்றை வேறுபடுத்தும் பரிணாமத்தையும் உணர்ந்து ரசிக்க முடிகிறது... குற்றால மலைவாசி முனீஸ்வரி மற்றும் மெட்ரோபாலிடன் நகரவாசி நவீன் ஆகியோரின் வார்த்தைகளில்!

திருக்குற்றால குறவஞ்சி மலை... அட, நம் குற்றாலம்தான். சில்லென்ற அருவிக் கரையோரத்தில் ஆங்காங்கே குழுக்களாக அமர்ந்து பாசிமணிகள், தைலங்கள் விற்றுக் கொண்டிருந்த குறவர் இனப் பெண்களில் ஒருவரான முனீஸ்வரிக்கு, அவர்களின் குலத்தொழில்களில் ஒன்றான பச்சை குத்துதல் பற்றிப் பேசப் பேச, பரவசம்தான்.

"அந்தக் காலத்துப் பொண்ணுக கட்டுன புருஷன் பேரை யாராச்சும் கேட்டா, அவுக வாயால சொல்ல மாட்டாக. அதனால, புருஷன் பேரை கையில பச்சைக் குத்திக்கிட்டு, பேரைக் கேட்கறவுககிட்ட கையக் காமிப்பாக. காத்து, கருப்பு அண்டாம இருக்க வேல், அருவானு குத்திக்குவாக. அழகுக்காக சங்கு, மயிலு, கோலம், பூவுனு விதவிதமா குத்திக்குவாக.

ஆம்பளைக எம்.ஜி.ஆர்., பத்மினினு நடிகர், நடிகைங்க பேரு... வீரத்துக்காக சிங்கம், புலி, பாம்புனும் குத்திக்குவாக. முக்கியமா, அவுக விரும்பற பொண்ணு பேரை நெஞ்சுல குத்திக்குவாக. சிலரு, பேரைக் குத்தாம, 'மலரு'னா பூ உருவம், 'நாகம்மா'னா பாம்பு உருவம்னு குறிப்பால உணர்த்தற மாதிரி குத்திக்குவாக. ஆனாலும், யாரை நெனச்சு குத்துறாகளோ... அந்தப் பொண்ணையே எப்பாடுபட்டாவது கல்யாணமும் செஞ்சுக்குவாக. அப்படி முடியாம போற ஒண்ணு, ரெண்டு ஆம்பளைக, குத்தின பேரை அழிக்கணும்னு வந்து நின்னா, அது முடியவே முடியாது. அதனால, அதையே பேரு தெரியாத அளவுக்கு வேற ஏதாச்சும் வடிவமா மாத்திவிட்டுருவோம்" என்ற முனீஸ்வரி, பச்சை குத்தும் முறையையும் விளக்கினார்.

"பூவு, வேலுனு வேணுங்கற வடிவத்த மொதல்ல கையில வரைஞ்சுக்குவோம். பொறவு பச்சை குத்தறதுக்குனு நாங்க வெச்சிருக்கற மைய ஊசியில தொட்டு, புள்ளி புள்ளியா குத்தி குத்தி எடுப்போம். 'சுருக்', 'சுருக்'னு வலிக்கும். சிலருக்கு வீக்கம், காய்ச்சல்னு வரும். எல்லாம் ரெண்டு நாளைக்குத்தான். அப்புறம் அழகா கையில வடிவம் பதிஞ்சுபோயிடும். காலம் முழுக்க கெடக்கும்.


இதுல இன்னொரு சங்கதியும் இருக்கு. அந்தந்த எடம் பார்த்து பச்சை குத்தினா... வாதநீர் வெளியேறும், மூட்டுவலி, வர்மபிடிப்பு வெலகும், கை, கால் உளைச்சல் தீரும்" என்ற மாரீஸ்வரிக்கோ அவர் முன்னோர்களுக்கோ... இது, சீன மருத்துவ முறையான அக்குபஞ்சர் போலத்தான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

"குத்தற வடிவத்தைப் பொறுத்து இருபது ரூபாயில இருந்து நூறு ரூபா வரைக்கும் கேட்போம். ஆனா, கொடுக்கறத வாங்கிக்குவோம். இப்பவெல்லாம் வாரத்துக்கு ஒரு ஆளு பச்ச குத்த வர்றதே பெரிய விஷயமாத்தான் இருக்கு" என்றார் வருத்தத்துடன்!

அப்படியே கேமராவைத் திருப்பினால்... சென்னை, நுங்கம்பாக்கம்... சர்புர்ரென்று கார்கள் விரைந்து கொண்டிருக்கும் சாலையில் இருக்கிறது 'இருசுமி' டாட்டூ ஸ்டூடியோ. அதை நடத்திவரும் நவீன், சென்னை யூத்களின் டாட்டூ பிரம்மா!

"டாட்டூங்கிறது ஜப்பான் வார்த்தை. ஒரு கலாசாரமா இருந்த இந்தப் பழக்கம், இப்போ உலக அளவுல ஃபேஷனாயிடுச்சு. சென்னையில ரெண்டு வருஷமாதான் பிக்-அப் ஆகியிருக்கு" எனும் நவீன், தாய்லாந்தில் டாட்டூவை முறைப்படி கற்றுக்கொண்டு, டாட்டூவுக்கான முதல் ஸ்டூடியோவை சென்னையில் தொடங்கியவர்.


"18 வயசுலேர்ந்து 65 வயது வரைக்கும்னு எல்லாரும் டாட்டூ குத்திக்க ஆர்வம் காட்டறாங்க. இதுல காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்தான் அதிகம். பெண்கள்... ஆண்களோட பெயரையும், ஆண்கள்... பெண்களோட பெயரையும் டாட்டூ போட்டுக்கறாங்க. என்ன கொடுமைனா, கொஞ்ச நாள்லயே 'ப்ச்... வொர்க் அவுட் ஆகல...'னு டாட்டூவை ரிமூவ் பண்றதுக்காக வர்றவங்க நிறைய" என்று அனுபவம் சொன்னவர்,

"டாட்டூவை லேசர் ட்ரீட்மென்ட் மூலம்தான் அழிக்க முடியும். அதுக்கு டாட்டூ போட்டுக்கற செலவைவிட, பத்து மடங்கு அதிகமா ஆகும். வேணும்னா, அது மேலயே வேற ஒரு டிசைன் போட்டு மறைக்கலாம்" என்பவருக்கு குஷ்பூ, த்ரிஷா, ஐஸ்வர்யா போன்றவர்கள் ஸ்டார் கஸ்டமர்கள்.



"ஈரான், நேபாள், நார்வேயிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆர்ட்டிஸ்ட்டுகள் இங்க பணிபுரியறாங்க. இயற்கையான முறையில தயார் செஞ்ச 'இங்க்'தான் பயன்படுத்தறோம். ஒரு செகண்டுக்கு 150 முறை பஞ்ச் பண்ற அளவுக்கு உயர் ரக ஊசியைத்தான் பயன்படுத்தறோம். எறும்பு கடிக்கற மாதிரி ஒரு சின்ன வலி இருக்கும். நாலு மணி நேரத்துல நல்லா பதிஞ்சிடும். ஒரு க்ரீம் தருவோம். அதை மூணு நாள் அப்ளை பண்ணணும்" என்றவர்,



"இப்போ 90% பேர் முறையா கத்துக்காம டாட்டூ போட்டு விடறாங்க. சுகாதாரமற்ற சூழல், ஸ்டெர்லைஸ் பண்ணாத கருவிகள்னு டாட்டூ போடும்போது நிறைய பிரச்னைகள் வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு" என்ற நவீன், "டிஸைனைப் பொறுத்து மினிமம் ரெண்டாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை டாட்டூ போட கட்டணம் வாங்கறோம். மொத்தத்துல, இப்ப டாட்டூக்கு வரவேற்பு 'டாப்'ல இருக்கு!" என்றார் உற்சாகத்துடன்!

No comments:

Post a Comment