Thursday, November 24, 2011

சில நேரங்களில் பெண்கள் எரிந்து விழுவது ஏன்?

சில நாட்களில் அவ்வளவு திருப்தியாக நாம் உணர்வதில்லை.மனசு ஒரு மாதிரியாக இருக்கிறது.ஆனால் சொல்லத்தெரிவதில்லை.எதிலும் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.வெற்றியென்றால் சந்தோஷப்படுவதும்,தோல்வி என்றால் சங்கடமாவதும் இயல்பாக உள்ள ஒன்று.ஆனால் காரணமே இல்லாமல் மனநிலையில் மாறுபாடு ஏற்பட்டுவிடுகிறது.

இது ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பொதுவாக இருக்கும் விஷயம்தான்.ஆண்களைப்பற்றி பெண்கள் திடீரென்று இவருக்கு என்ன ஆச்சு என்று குறைபட்டுக்கொள்வது அதிகமில்லை.ஆண்களுக்கு மட்டும் எவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்தாலும் இது புரிவதேயில்லை.”அடிக்கடி இப்படி ஆயிடறா!” என்பார்கள்.
குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மன நிலையில் மாற்றம் உருவாகிறது என்பது உலகம் ஒப்புக்கொண்ட ஒன்று.குழந்தைகள்,ஆண்,பெண் அனைவருக்கும் இது பொது.பயாலஜிகல் ரிதம் என்று சொல்வார்கள்.சந்திர சுழற்சிக்கு ஏற்ப அமாவாசை,பவுர்ணமி நாட்களில் கடலில் மாறுபாடு உண்டாவது நமக்கு தெரியும்.இரவில் தூக்கம்,பகலில் விழிப்பு என்பதும் இப்படித்தான்.

நம்முடைய மனநிலை எப்போதும் நம்முடைய கையில் இல்லை.பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்புள்ள சில நாட்கள் உடலிலும்,மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது.மன நிலையில்,பசி உள்ளிட்ட உடல் செயல்களில்,நடந்துகொள்ளும் வித்த்தில் விரும்பத்தகாத மாற்றம் இருப்பது தவிர்க்கமுடியாது.இது அறிவியல் ஒப்புக்கொண்ட இயற்கையான விஷயம்.

சந்திரனை தொடர்புபடுத்தி இதைக்கூறுவார்கள்.சோதிட்த்தில் மனதுக்கும்,உடலுக்கும் உரிய கிரகம் சந்திரன்.வளர்பிறை,தேய்பிறை என்று இருப்பதுபோல மனிதர்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் மாறுபாடும் இருக்கும் என்பதுண்டு.மாத விடாய் சுழற்சி என்பது சந்திரனை போல பெரும்பாலானவர்களுக்கு 28 நாட்கள் இருக்கும்.சிலருக்கு முறையற்று இருப்பதும்,சிலருக்கு 30 நாட்களும் இருக்கும்.

வளர்பிறை,தேய்பிறை கணக்கீடு போல மாதவிலக்கிற்கு முன்பு,பின்பு என்று மனநிலையை அளவிடுவதும் இருக்கிறது.கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ள (மாத விலக்கு நாளிலிருந்து 14,15 ஆகிய நாட்கள்) நாட்கள் வரையுள்ள மனநிலைக்கும்,அதற்கு பின்பு உள்ளதற்கும் வித்தியாசம் காண முடியும் என்கிறார்கள்.16 வது நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் இருக்கலாம்.
பெண்களைப்போல இல்லாவிட்டாலும் ஆண்களுக்கும் இந்த மாறுபாடு உண்டு.ஆனால் அது வெளியே தெரிவதில்லை.அன்றாடம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை குறித்து வைத்து வந்தால் இதை கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.நான் முயற்சி செய்து பார்த்த்தில்லை.நல்ல மனநிலை நாட்களை கண்டுபிடித்துவிட்டால் அதற்கேற்ப நம்முடைய நிகழ்ச்சிகளை திட்டமிட்டுக்கொள்ளலாம்.

ஆணோ,பெண்ணோ மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானது என்று புரிந்துகொண்டால்,ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக உதவுவதும்,இம்மாதிரியான சமயங்களில் பொறுத்துப்போவதும் சாத்தியமாகிவிடும்.குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும்,அமைதிக்கும் இது அவசியமானது.

ஒன்றாம் தேதி!


மாத சம்பளம் வாங்கும் அப்பாவிற்கு பிள்ளையாக பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஒன்றாம் தேதியும் தீபாவளி தான்.

ஒன்றாம் தேதி.. அந்த நாளுக்காக எவ்வளவு காத்திருப்புகள், எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் முன்பு இருந்தது.

அந்த நாள் விடியும்போதே அப்பா வீட்டுக்கு வரும்போது என்ன அயிட்டங்கள்லாம் வாங்கி வரவேண்டும் என்று லிஸ்ட் நீளும். "சாயங்காலம் வரும்போது பப்ஸ், ஜாங்கிரி, காராபூந்தி வாங்கிட்டு வாங்கப்பா" என பிள்ளைகள் கேட்பதும், "இன்னைக்கு இட்லி மாவு காலியாகிடுச்சு அதனால ராத்திரி சாப்பாட்டுக்கு பரோட்டா வாங்கிட்டு வரீங்களா.. பிள்ளைங்க ஆசையா சாப்பிடும் " என மனைவி தன் ஆசையை பிள்ளைகள் தலையில் சுமத்தி சொல்வதும் மத்திய தர வர்க்கத்தின் சுகமான தருணங்கள்.
பிள்ளைகள் அன்று பள்ளிக்கூடம் விட்டு வந்ததில் இருந்து சாயங்காலம் ஏழு மணிக்கு வரப்போகும் அப்பாவுக்காக 6 மணி முதலே வாசலை பார்த்துக் கொண்டு இருப்பதும் பெரும்பாலான வீடுகளில் நடந்திருக்கும் சம்பவம். அன்றைய தினம் அவ்வளவு சந்தோஷமாக கழியும்.

சம்பளம் வாங்கிய பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் தான் மட்டன், சிக்கன், மீன் என வீட்டில் சாப்பாடு கமகமக்கும்.

அதெல்லாம் அப்போது. ஆனால் இன்று..? 

அப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அலுவலகத்தில் பே-ஸ்லிப் கொடுத்தால் தான் பிடித்தம் போக அந்த மாதம் எவ்வளவு சம்பளம் என தெரிந்து கொள்ளமுடிகிறது. வீட்டிற்கு எது தேவை என்றாலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கிக் கொள்கிறோம். கணவனின் ஒரு மாத உழைப்பின் வாசம் மனைவிக்கு தெரியாமல் போய்விடுகிறது ஏ.டி.எம். கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும்போது.

முன்பு, இவ்வளவு தான் சம்பளம் வரும் அதற்குள் செலவு செய்ய வேண்டும் என பட்ஜெட் போட்டு பொருட்கள் வாங்குவோம். கடைசி தேதியில் பற்றாக்குறை வந்தால் பக்கத்து வீட்டில் காபி பொடி, சர்க்கரை வாங்கும் அம்மாக்கள் இன்று கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்குவதை அதிகமாக காணமுடிகிறது. ஆனால் அதற்கு கட்டப் போகும் வட்டியைப் பற்றிய கவலையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறது மனப்பான்மை.

பணம் கணினி வழியாக கை மாறுகிறது என்பதால் கண்களால் பார்க்க முடிவதில்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நம் கையிலிருந்து செலவு செய்யும் போது கிடைக்கும் சுகம் டெபிட் கார்டு பயன்படுத்தும்போது கிடைப்பதில்லை. என்னதான் இன்றைய இளைய சமுதாயம் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி செலவு செய்து கொண்டு இருந்தாலும், நம் அப்பா வாங்கிய நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் கிடைத்த சந்தோஷம் ஏனோ நமக்கு கிடைப்பதில்லை.

நமக்கு தெரிந்த ஒன்றாம் தேதியின் மதிப்பு, அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு தெரியுமா? சம்பள பணத்தை வாங்கி சாமி படத்தின் முன் வைத்து, பின்னர் அதை எடுத்து எண்ணும் போது கிடைக்கும் சந்தோஷம் அவர்களுக்கு வாய்க்குமா?

கேள்விக்குறிகளால் நிரம்பியிருக்கிறது எதிர்காலம்.

இனி இணையவழி கள்ள உறவுகள் குறையுமா?

சமூக வலைத்தளங்கள் மூலம் கள்ளக்காதல்கள் அதிகரித்து வருவதாக சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்தேன்.இது ஆச்சர்யமான ஒன்றல்ல என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.சாட்டிங் மூலம்.மெயில் வழியாக நட்பு தோன்றி வேறுவடிவம் பெறுவது இப்போது சாதாரணமாக ஒன்றாகியிருக்கிறது.

இங்கே தடைகள் எதுவுமில்லை.எப்படியும் பேசலாம்.ஆபாச சொற்களை பயன்படுத்தி திருப்தி அடைவது பற்றி( corprolalia) உளவியல் கோட்பாடுகள் இருக்கின்றன.ஆபாச சொற்களை எழுதுவதிலும்,பேசுவதிலும் நாட்டம் கொள்பவர்கள் இவர்கள்.சில வகை மன நோயாளிகளிடம் இந்த போக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இணையம் ஒரு முக்கிய வரப்பிரசாதமாக இருந்த்து.சாட்டிங் போன்றவற்றில்,சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆர்வத்தை தீர்த்துக்கொண்டார்கள்.கணினி தெரிந்தவர்கள் ஆண்,பெண் என்றில்லாமல் ஃபேஸ்புக்,ஆர்குட்,ட்விட்டர் போன்றவற்றில் ஒரு பொழுதுபோக்குக்காக ஈடுபாடு காட்டி இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
சமீத்திய நிகழ்வு இந்த வக்கிரங்களுக்கு ஆத்திரத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.தங்களது ஆபாச சொற்களையோ,பாலியல் அணுகுமுறையையோ யாரேனும் திட்டமிட்டு ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிக்கவைத்துவிட்டால்? என்பது அவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இது பெரும் குழப்பம்.இன்னும் சிலருக்கு நம்மையும் யாராவது இப்படி வலை விரித்திருப்பார்களோ என்ற பயமும் இருக்கலாம்.

மன அழுத்தம் எப்போதுமில்லாத அளவு அதிகரித்துவருவதாக பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன.சகோதரி சாகம்பரி தனது பதிவில் இது பற்றி குறித்துள்ளார்.ஒருவரது மனநிலைக்கும்,பாலியல் குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.மேலே கண்டவாறு ஆபாச சொற்களை பயன்படுத்துபவர்கள் சிலரில் மனநோயாளிகளும் உண்டு என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.மனாழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க பாலியல் குற்றங்களும் அதிகரிக்கவே செய்யும்.

மனநோயாகட்டும்,வறுமை ஆகட்டும்,குடிப்பழக்கம்,எய்ட்ஸ் என்று எந்த சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் அதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்களும் குழந்தைகளும்தான்.சிறு குழந்தை என்றும் பார்க்காமல் தங்கள் வக்கிரத்தை தீர்த்துக்கொள்பவர்களை நாம் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
குற்றங்களை குறைக்கவும்,தடுக்கவும் ஏற்பட்ட்துதான் சட்டம்,தண்டனை போன்றவை.ஆனால் இந்திய சூழலில் பாலியல் சார்ந்த குற்றங்கள் பதிவாவது குறைவு.இதற்குக் காரணம் பெண்களிடம் விழிப்புணர்வு இல்லாத நிலைதான்.மேலும் இங்கே வெளியில் சொன்னால் அவள் நல்ல பெண்ணே இல்லை என்கிறார்கள்.


பாலியல் தொல்லைக்கு,ஆபாச சொற்களை எதிர்கொள்ளும் பெண் யாரிடமும் சொல்லாமல் ஓடிப்போய் வீட்டில் ஒளிந்து கொள்ளவேண்டும்.அதுதானே இத்தகைய ஆண்களின் எதிர்பார்ப்பு.வக்கிரங்களுக்கு பாதுகாப்பும் இதுவே. நாங்கள் அப்படித்தான் இருப்போம்,விருப்பமிருந்தால் பழகு,இல்லாவிட்டால் வெளியில் யாரிடமும் சொல்லாதே! வெளியில் சொன்னால் கெட்ட பெண்.

பாலியல் தொல்லைகள்,கற்பழிப்புகள் உள்ளிட்ட பெண்கள்,குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.பலரும் அய்ய்ய்யோ நம் மீதே திருப்புவார்களோ,உனக்கு எங்கே போச்சு புத்தி என்பார்களோ, கண்,காது மூக்கு வைத்து பேசுவார்களோ என்று பயந்து புகார் தெரிவிப்பது குறைவாக இருந்த்து.இப்போது விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.திட்டமிட்டு கவிழ்க்கிறார்கள்.இனி வக்கிரங்களுக்கு கஷ்டகாலம்தான்.

ஏழாம் அறிவு வில்லன், வில்லனானது எப்படி ?

தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் 'ஏழாம் அறிவு'. சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தா. உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார்.

'ஏழாம் அறிவு' படம் வெளியானதும் அப்படத்தில் நடித்த JOHNY TRI NGUYEN பற்றி தான் பேச்சாக இருந்தது. அவரது மிரட்டும் கண் பார்வை, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் என அனைத்து விதத்திலும் ரசிகர்களைக் கவரந்தார். சிறு குழந்தைககளுக்கும் கூட அவரை பிடித்துப் போனது.

'ஏழாம் அறிவு' படத்தில் நடிக்க இவரை எங்கு தேடி பிடித்தார்கள், ஒப்பந்தம் செய்தது எப்படி என்று விசாரித்த போது பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் நமக்கு கிடைத்தன. அத்தகவல்கள் இதோ :
'ஏழாம் அறிவு' படத்தில் JOHNY TRI NGUYEN நடிக்க முதற்காரணமாக இருந்தவர் சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன். 

பீட்டர் ஹெய்ன் 'அந்நியன்' படத்தில் செய்த சண்டை காட்சிகளை பார்த்து அவரது பேஸ்ஃபுக் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் JOHNY TRI NGUYEN. அப்படத்தில் வரும் SLOW MOTION சண்டைக்காட்சிக்களில் சுமார் 60 சண்டை கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள். இந்த காட்சியை பார்த்த JOHNY TRI NGUYEN பீட்டர் ஹெய்னிடம் நாங்கள் ஹாலிவுட்டில் இந்த சண்டைக்காட்சிகளை எல்லாம் 3Dல் தான் படமாக்குவோம் ஆனால் நீங்கள் எப்படி படமாக்கினீர்கள் என்று ஆச்சர்யப்பட்டு பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் கிடைத்த நட்பு நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். JOHNY TRI NGUYEN வியட்நாமில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர். 

உலகம் முழுவதும் உள்ள சண்டை இயக்குனர்களுக்கிடையே கொடுக்கப்படும் TAURAS STUNT AWARD என்னும் விருதினை பீட்டர் ஹெய்னுக்கு 2ம் முறை சிபாரிசு செய்தது JOHNY TRI NGUYEN தான்.

'ஏழாம் அறிவு' படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் பீட்டர் ஹெய்னிடம் கூறியவுடன் முதலில் வில்லனாக நடிக்க சொல்லி கேட்டது புகழ்பெற்ற JET LI -யிடம் தான். ஆனால் அவரோ கதை சீன நாட்டிற்கு எதிராக இருப்பதால் நடிக்க முடியாது என்று விலகி விட்டாராம். 

JETLI நடிக்க முடியாது என்ற கூறியதால் அடுத்த நிமிடமே JOHNY TRI NGUYEN-வை 'ஏழாம் அறிவு' படத்தின் வில்லனாக்கி விட்டார் பீட்டர் ஹெய்ன். இந்த சண்டைக் கலைஞர்களின் நட்பு குறித்து பெருமையாக பேசிக் கொள்கிறார்கள் மற்ற ஸ்டண்ட் கலைஞர்கள்.

கோச்சடையான் - என்ன பெயரு இது?

ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டர் இணையத்தில் இணைந்து இருப்பதால் 'ராணா' மற்றும் 'சுல்தான் தி வாரியர்' படம் குறித்து பல்வேறு தகவல்களை அதில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னர் செளந்தர்யா தனது டிவிட்டர் இணையத்தில் "சுல்தான் தி வாரியர் எனது கனவுப் படம். இடையே பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டுவிட்டன. தற்போது 'சுல்தான்' படத்தினை மீண்டும் தொடங்கி விட்டேன். படத்தின் தலைப்பையும் கதையையும் மாற்றி இருக்கிறோம். " என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செளந்தர்யா தனது டிவிட்டர் இணையத்தில் " அப்பாவுடைய அடுத்த படத்தின் பெயர் 'கோச்சடையான்'. அப்பாவை வைத்து நான் இயக்க இருக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.
'கோச்சடையான்' என்னும் இந்த 3D படத்தினை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்திற்கு இயக்குனர் மேற்பார்வை செய்ய இருக்கிறார்.

EROS நிறுவனத்துடன் இணைந்து MEDIA ONE இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது, ஆகஸ்ட் 2012 இப்படம் வெளியாக இருக்கிறது. AVATAR, TINTIN போன்ற படங்களுக்கு பயன்படுத்திய PERFORMANCE CAPTURE TECHNOLOGY-யை இப்படத்திற்கு பயன்படுத்த இருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த படத்திற்கு தான் இதனை பயன்படுத்த இருக்கிறார்கள்.

கற்பழிப்புகள் -ஒரு சமூக பார்வை.

அணுகுண்டை விட வலிமையான ஆயுதமாக எதிரிகள் கருதுவது கற்பழிப்பு.பெண்ணுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கும்,தேசத்திற்கும் மிகப்பெரும் அவமானம் என்பதால்!மானம் உயிரினும் மேலானதுஎன்பதால்!பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளில் உச்சமானது கற்பழிப்பும் அதன் விளைவான கொலையும்.தொடர்ந்து இணங்காமல் போராடும்போது கொலை செய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஒரு பெண் மீதான தீவிர,கீழ்த்தரமான ஆசைக்கு அப்பெண் மசியாதபோது கற்பழிப்புகள் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு உறவினர்களால் ,நண்பர்களால் நடத்தப்படுபவை.திடீரென்று திட்டமிடாமல் நடக்கும் கற்பழிப்புகள் குறைவு.மன நோயாளிகளால் நடப்பவையும் உண்டு.மனதிற்கும் பால் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஏதுமறியாத சிறுமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

கற்பழிப்பு குற்றங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனைகளுக்கு இடமிருந்தாலும் புகார் செய்யப்படுவது குறைவு என்று சொல்லப்படுகிறது.சமூகத்திற்கு அஞ்சி மறைக்கப்படுவதால் குற்றவாளிகள் பெருகும் வாய்ப்பு அதிகம்.குற்றத்தை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள்,காவல்,சட்ட நடைமுறைகளை தாண்டவேண்டும்.இயல்பு வாழ்க்கையை தொலைக்கவேண்டும்.மகளிர் அமைப்புகள் சில வழக்குகளுக்கு சிறப்பான பணியாற்றியிருக்கின்றன.


கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்படும் போது வழியில் அவனை சந்தித்தேன்.காவல்துறையை சேர்ந்த நண்பர் என்னிடம் "ரேப் பண்ணியிருக்கான் ,இவனபார்த்தா எப்படியிருக்கு பார் ?"எனக்கும் ஆச்சரியாமாகத்தான் இருந்தது.ஒரு வீரனைப்போல அவன் முகம் காட்டினான்.குற்றம் சுமத்தப்பட்டவன் என்று அவனிடம் கவலையோ,குற்ற உணர்வோ இல்லை.விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற கோப்பையை உயர்த்தி காட்டும் மலர்ச்சியை நான் பார்த்தேன்.யாராலும் செய்யமுடியாத காரியமா?நண்பருக்கு என்னைப்பற்றி தெரியுமாதலால் அவனை அருகில் அழைத்து பேசினேன்.

அவனது வார்த்தைகளில் சில...................................

இதுக்கு மேல யார் சார் கல்யாணம் பண்ணிக்குவான் அவள,நான் எதுவும் பண்ணல!நான் வேணும்னா பலதடவ கல்யாணம் பண்ணிக்கலாம்,லவ் பண்ணலாம்னு சொன்னேன் .அவ எதுவும் பேசல! கோவத்துல சண்ட புடிச்சப்ப அவ சொந்தக்காரன் ஒருத்தன் பார்த்துட்டான்.அதனால வூட்ல போயி சொல்லிட்டா.அவளுக்குத்தான் அசிங்கம்.எவன் வருவான்?அப்படி ஆத்தரமா இருந்தா ரோட்ல,வீதில எத்தனையோ பேர் இருக்காங்க!நான் தண்ணியடிச்சா அந்த மாதிரி பழக்கமுண்டு.ராத்திரில செகண்ட்ஷோ சினிமா போய்ட்டு வந்து அந்தமாதிரி பொம்பளைங்ககிட்ட பழகியிருக்கிரன்.இதுக்கு மேல யார் கல்யாணம் பண்ணிக்குவான்னு பார்க்கிறேன்(திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்).அன்னக்கி நான் ஒண்ணும் தண்ணியிலகூட இல்ல!நான் ஒரே பையன்,கெடச்ச கூலிக்கு போவேன்.தப்புபண்ணமாட்டேன்.எங்கப்பன் குடிச்சி குடிச்சி காச கரைக்காம இருந்திருந்தா நான் எப்படியோ இருந்திருப்பேன்.நானும் படிச்சிருப்பேன்.இவள மாதிரி ஆளுங்கல்லாம் கால் தூசு (சற்று மாறுதல் செய்யப்பட மீள்பதிவு)

மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.

அந்த பெண்ணுக்கு சுமார் இருபது வயதுதான் இருக்கும்.ஓரளவேனும் படித்திருக்கவேண்டும்.மருந்துக்கடையில் சென்று அவர் மாத்திரை கேட்கிறார்.(இதைப்பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டு விட்ட்து. இதுவே அபாயகரமான போக்கு)’. புண்ணுக்கு மருந்து கொடுங்கள்!” என்று கேட்டவுடன் கடையில் இருந்தவர் “ யாருக்கு? என்று விசாரிக்கிறார்.பெண் மாற்றி மாற்றி ஏதேதோ சொல்ல கர்ப்பிணியாக இருக்கிறாரே என்று யோசித்து கடையில் இருந்த பெண் பணியாளரை விட்டு அவரை விசாரிக்கச் செய்த்தில் ,புண் இருப்பது அவருக்குத்தான் என்பதும் ,பிறப்புறுப்பில் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

கடையில் இருந்தவர்கள் உண்மையில் அதிர்ச்சியாகி பெண்ணுக்கு விளக்கியிருக்கிறார்கள்.(கொஞ்சம் மனசு உள்ளவர்களாக இருந்த்தால்) அவர் கர்ப்பிணியாக இருப்பதால் முறையாக மருத்துவரை பார்ப்பதே நல்லது என்று அனுப்பிவிட்டார்கள்.கர்ப்பிணி என்பதால் பெரும்பாலான ஆண்டிபயாடிக் மாத்திரைகள் கூட தரக்கூடாது.தெரியாமல் தந்துவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

மேற்கண்ட விஷயம் பற்றி மருத்துவர் ஒருவர் கூறியது,

பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள் அநேகமாக பால்வினை நோயாக இருக்கலாம்.இதில் மூன்று,நான்கு வகை இருக்கிறது.சிபிலிஸ் என்ற நோயில் முதலில் புண் ஏற்படும்,மருந்து செய்யாவிட்டாலும் சில நாட்களில் தானாகவே குணமாகிவிடும்.ஓரிரு மாதங்களில் உடலில் அம்மை போன்ற கொப்புளங்கள் சிறியதாக தோன்றும்.அப்போதும் மருத்துவரிடம் போகமாட்டார்கள்.அதுவும் தானாகவே சரியாகி விடும்.ஆனால் உள்ளிருக்கும் நோய் பல ஆண்டுகளுக்கு பிறகு முடி கொட்டுவதிலிருந்து துவங்கி உடலின் இதயம்,சிறுநீரகம் உள்பட எல்லாஉறுப்புகளையும் பாதிக்கும்.

கர்ப்பிணி பெண் என்பதால் இன்னொரு பிரச்சினை,குழந்தைக்கும் பரவும்,குழந்தை இறந்து பிறப்பது,அபார்ஷன் போன்ற வாய்ப்புக்களும் அதிகம்.பெரும்பாலும் கர்ப்பமாக இருந்து மருத்துவமனை சென்றாலே இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுவிடும்.பலர் இன்னும் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொள்ளும் நிலை தொடர்கிறது.உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையும் எடுப்பதில்லை என்றார்.
இந்தியா பெண்கள் வாழத்தகுதியில்லாத நாடு (நான்காம் இடமாம்) என்று அறிவித்திருக்கிறார்களே அதற்கும்,இந்த மாதிரி அணுகுமுறைகளுக்கும் தொடர்பிருக்கிறதா? ஆம்.பிறப்புறுப்பில் புண் இருப்பதாக சொன்னால் அந்த பெண்ணை வீட்டில் இருப்பவர்கள் சந்தேக கண் கொண்டு பார்க்க வாய்ப்பிருக்கிறது.கணவனால் வந்திருந்தாலும் முதலில் இவராக பேச முடியாது.

ஆண்கள் இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்படும்போது மருத்துவர் சொன்னது போல மூடிவைத்து பெரிதாக்கிக் கொள்கிறார்கள் அல்லது அவர்கள் மட்டும் சிகிச்சை பெறுகிறார்கள்.மனைவியிடம் கூறினால்”எப்படி ஏற்பட்ட்து?” என்ற கேள்வி வரும் என்பதால் தவிர்த்து விடுவார்கள்.இது இன்னொரு முட்டாள்தனம்.இவர் நோய் தெரியும் முன்பே மனைவிக்கும் தொற்ற வைத்துவிட்டு இருப்பார்.இவர் மட்டும் குணப்படுத்திக்கொண்டாலும் மனைவியிடம் இருந்து மீண்டும் தொற்றும்.

பொய் பேசினால் இப்படியும் கண்டுபிடிக்கிறார்கள்!

திருட்டு,கொலை,கொள்ளை என்று எத்தனையோ குற்றச்செயல்கள்.புலனாய்வு செய்பவர்கள் வழக்குகளீல் பயன்படுத்தும் பரிசோதனைகளே உண்மை கண்டறியும் பரிசோதனைகள்.

கிராமங்களில் உள்ள வழக்கம் நினைவுக்கு வருகிறது.ஏதாவது திருடு போய்விட்டால் சந்தேகப்படும் ஆட்கள் அனைவரையும் அழைத்துவந்து கோவில் முன்பு நிற்க வைப்பார்கள்.அவர்களது வாயில் மாவு திணிக்கப்படும்.அநேகமாக ராகி மாவு.அதை மெல்ல வேண்டும்.யாருடைய வாயில் மாவு உமிழ்நீருடன் கலந்து கெட்டியாகவில்லையோ அவர்தான் குற்றவாளி.இதில் முக்கியமான விஷயம் இருக்கிறது.அதை பிறகு பார்க்கலாம்.
ஓரிரு வருடங்களுக்கு முன்பு காவல்துறை தொடர்புடைய வழக்கில் “நார்கோ அனாலிஸிஸ் “ என்ற வார்த்தை அடிக்கடி நாளிதழ்களில் அடிபட்ட்து நினைவிருக்கலாம்.சோடியம் பெண்ட்தால் அல்லது சோடியம் அமித்தால் ஆகிய மருந்துகளை பயன்படுத்தி உண்மையை கண்டறியும் முறை இது.கிட்ட்த்தட்ட அரைத்தூக்க நிலையில் ஒருவர் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடுவார் என்கிறார்கள்.

இன்னொன்று ”பாலிகிராப்”என்ற கருவி.பொய்யை கண்டுபிடித்துவிடும் என்று சொல்கிறார்கள். ஒருவர் பொய் சொல்லும்போது உடலில் ஏற்படும் மாற்றத்தை வைத்து இந்த கருவி செயல்படுகிறது.தொடர்ந்து சில கேள்விகள் கேட்கப்படும்போது பெரும்பாலான ஆமாம் வகை வினாக்கள் இருக்கும்.சுமார் முப்பது கேள்வி என்றால் நீங்கள் இந்த குற்றத்தை செய்தீர்களா? என்பதை நடுவில் நுழைத்துவிடுவார்கள்.

குற்றம் புரிந்தவர் அந்த முக்கியமான கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவர் குற்றவாளி என்றால் உடலில் வேதிமாற்றம் உண்டாகும்.இதுதான் அடிப்படை.இவை தவிர மூளையை படம் எடுத்து பார்க்கும் BEOS (Brain Electrical Oscillaations Signature) முறை,மூளையில் பதிந்திருக்கும் தகவல்களை அடிப்படையாக்க்கொண்டு “பிரைன் மேப்பிங் முறை”போன்றவையும் உண்டு.

மேற்கண்ட உண்மை கண்டறியும் முறையெல்லாம் மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கின்றன.இதை மட்டும் வைத்து ஒருவரை குற்றவாளி என்று தீர்மானிப்பது கஷ்டம்.ஏதேனும் துப்பு கிடைக்கும் என்று பயன்படுத்திக்கொள்கிறார்கள்.


மேற்கண்ட உண்மை கண்டறியும் பரிசோதனையில் உள்ள பொது விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.கிராமத்தில் நடக்கும் முறையை கவனியுங்கள்.குற்றம் புரிந்தவருக்கு மாவு அப்படியே இருக்கும் என்று எதைவைத்து சொல்கிறார்கள்? தவறு செய்தவருக்கு பயத்திலும்,படபடப்பிலும் உமிழ்நீர் சுரக்காது.உமிழ்நீர் இல்லாவிட்டால் மாவு அப்படியே இருக்கும்.

புலனாய்வு அமைப்புகளின் உண்மை கண்டறியும் சோதனையிலும் பொதுவான விஷயம்.நாம் பொய் சொல்லும்போது,தவறை மறைக்கும்போது நமது உடலில் வேதிமாற்றம் நிகழ்கிறது என்பதுதான்.உடல்மொழி கைவரப்பெற்றவர்கள் கூட பொய்யை கண்டுபிடித்துவிடுவார்கள்.நமது உடல் உறுப்புகளும் சில மாற்றங்களுக்கு உள்ளாகிறது

சாப்ட்வேர் இளைஞர்களை குறி வைத்து ஹை-டெக் விபச்சாரம்.

எப்போது தீர்க்கப்பட முடியாத ,காலம்காலமாய் இருந்துவரும் சமூக பிரச்சினைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது பாலியல் தொழில்.முதலாவது மது.காலத்திற்கேற்றவாறு புதுப்புது அவதாரம் எடுக்கும்.தொழில் நுட்பம் வளர்ந்தால் அதையும் பயன்படுத்திக்கொள்ளும்.இ-மெயில் ,இணையதளம் என்று பெருகிவிட்ட பின்னர் அதை பயன்படுத்தி வளர்ந்து கொண்டிருக்கிறது.

விபச்சாரம் என்றழைப்பது சரியல்ல என்று(அவர்களும் மனிதர்கள்தான்) பாலியல் தொழில் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.பிறகு அது ஆண் பாலியல் தொழிலாளர்கள்,பெண் பாலியல் தொழிலாளர்கள் என்று பிரித்து பேசியும்,எழுதியும் வருகிறோம்.ஆனால் ஹைடெக் விபச்சாரத்தை யாரும் பரிதாபத்துடன் பார்க்கவில்லை.ஏனெனில் இது திட்டமிட்டு அதிக பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக்கொண்டு நடத்தப்படும் தொழில்.
சமீபத்தில் வட இந்தியாவில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் இணையதளம் மூலம் பாலியல் தொழில் நடத்தியதாக கைது செய்யப்பட்டார்.வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்தவர் சொந்த ஊருக்கு வந்தபோது பாலியல் பெண் ஒருவருடன் ஏற்பட்ட நட்பால் இணையதள விபச்சாரத்தில் இறங்கினார்.வெளி நாட்டு வேலையை விட நல்ல வருமானம் இருந்ததால் முழுமூச்சாக இறங்கி புகழ்பெறத் தொடங்கிய பிறகு மாட்டிக்கொண்டார்.

இந்த ஹைடெக் விபச்சாரத்தை பொறுத்தவரை அவர்களது நோக்கம் சாப்ட்வேர் இளைஞர்களும்,பெரும் பணக்காரர்களும்தான் என்பதை அவர் கூறியது.மிக இளம் வயதில் பெரும்பான்மையாக தனிமையும்,கையில் புழங்கும் பணமும் சபலத்துக்கு உள்ளாக்கும் ஒரு தூண்டுகோல்.இணையதளத்தில் நேரம் செலவழிப்பதும் அதிகம்.இதில் மாட்டிக்கொள்ளும் ஆசாமிகளுக்கு இழப்பு அதிகம் இருக்கும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்!


ஆபாச இணையதளம் மூலம் சாட் செய்ய வைப்பது ,இ மெயில் மூலம் வேண்டுகோள் விடுப்பது என்ற அணுகுமுறையில்தான் சபலிஷ்டுகளை வளைக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அவர்கள் கட்டளையை கேட்பதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள்.போதைக்கு அடிமையாக்குவது,அவர்களை வைத்தே ஆபாச படம் எடுப்பது ,பிளாக் மெயில் போன்றவையும் நடக்கலாம்.

விழிப்புணர்வு,விழிப்பில்லாத உணர்வுக்கெல்லாம் பெரிய அளவு முக்கியத்துவம் இல்லை.மண்டை ஓடு படம் போட்டாலும் சிகரெட் குடிப்பவர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டுதான் இருக்கும்.சூழ்நிலைதான் வலிமை வாய்ந்தது.முடிந்தவரை பெற்றோர்கள் உடனிருக்க முயற்சி செய்யலாம்.இளமையில் தனிமை நல்லதல்ல! 


ஹைடெக் விபச்சாரத்தில் ஆண் விபச்சாரமும் உண்டு.இணைய தளம் மூலம்தான் ஆண் விபச்சாரம் முக்கிய இடத்தைப் பிடித்தது.சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது,பெண்களுக்கான இணையதளம் என்று ஆரம்பித்து சாட்டிங்,இ மெயில் மூலம் தொழிலை நடத்துவதாக சொல்கிறார்கள்.பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் முன்பு சில அடையாளங்களுடன் இருப்பதுமுண்டு.

கடையில கட்டிங் ஷேவிங் பண்ணுவீங்களா?

இப்போது நினைத்தாலும் மனசை என்னவோ பண்ணுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம். முகத்தில் ஆங்காங்கே நமைச்சல் ஏற்படுகிற மாதிரி ஒரு உணர்வு.கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டிருந்தது.நானும் அடிக்கடி தேய்த்துக்கொண்டிருந்தேன்.அடுத்த நாள் காலையில் பார்த்தபோது முகத்தில் ஆங்காங்கே வெள்ளையாக புள்ளிகள் போல இருந்தது.

வீட்டில் ஷேவ் செய்ய வைத்திருந்த ஆண்டி ஷேவ் லோஷனை எடுத்து நன்றாக தேய்த்தேன்.அப்போதைக்கு வெள்ளையாக இருந்தது மறைந்து விட்டது போல தெரிந்தது.ஆனால் கொஞ்ச நேரம் கழித்து பார்த்தபோது அதிகமாகியிருந்தது.மனசில் பயம் அப்பிக்கொண்டது.கிட்டத்தட்ட நடுக்கத்தில் இருந்தேன் என்று சொல்ல வேண்டும்.எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.முக்கியமான நண்பனின் திருமணம் .ஆனால் போகவில்லை.

தோல் மருத்துவரை பார்த்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டேன்.எங்கள் கிராமத்திலிருந்து பதினாறு கிலோமீட்டர்.ஆனால் பேருந்தில் எப்படி போவது? உடன் படித்தவர்கள் ,தெரிந்தவர்கள் என்று ஒவ்வொருவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதற்கே சரியாக இருக்கும்.முகத்திலோ,உடலிலோ ஏதேனும் இப்படி விகாரமாக இருக்கும்போது மற்றவர்களுக்கு பதில் சொல்கிறமாதிரி கஷ்டம் உலகத்தில் வேறில்லை.


நண்பன் ஒருவன் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் தோல் மருத்துவரிடம் போனேன்.நிமிடத்துக்கு நிமிடம் எனக்கு படபடப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது.மருத்துவர் என்ன சொல்லப்போகிறார் என்பதில் தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.எரிச்சலும் சிடுசிடுப்பும் வந்துவிட்டது.ஒருவழியாக மருத்துவரை பார்க்க என் முறை வர உள்ளே நுழைந்தேன்.

"பயப்படாதீர்கள்! இது சரியாகிவிடும்.ஓரிரு வாரங்கள் ஆகும்!"-கடையில ஷேவ் பண்ணீங்களா? .முடிந்தளவுக்கு வீட்டிலேயே பண்ணிக்கோங்க .உண்மையில் அப்போது எனக்கு கடவுளாகவே தோற்றம் தந்தார்.அது ஒருவகை பூஞ்சை காளான் .அவர் கொடுத்தது ஒரு ஆயின்ட்மென்ட் ,முப்பது சி விட்டமின் மாத்திரைக்களும்தான்.கொஞ்ச நாளில் சரியாகி விட்டது வேறு விஷயம்.அப்போதிருந்து நான் உஷாராக இருக்கிற

கடையில் ஷேவ் செய்யும்போது அவர்கள் வைத்திருக்கும் டவலை கொண்டு துடைக்க அனுமதிக்கவே கூடாது.கத்திரி உள்ளிட்ட பயன்படுத்தும் பொருட்கள் கிருமி நாசினியில் தொய்க்கப்படுவது அல்லது கொதிநீரில் சுத்தம் செய்யும் கடைகள் இருக்கின்றன.அதை தேர்ந்தெடுக்கலாம்.சிலர் ஷேவ் வீட்டில் செய்துகொண்டு முடிவெட்டுவது மட்டும் கடையில் செய்வார்கள்.அவர்களுக்கும்.சுற்றுப்புறம் ஷேவ் செய்யும் போது புதிய பிளேடு பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.பிளேடு ,கத்தி மூலமாக எச்.ஐ.வி. கிருமி பரவும் அபாயமும் இருக்கிறது.

அலைகடலில் அசத்திய ஐஸு - வர்ஷு!


கடல் என்றால்... ஃப்ரெண்ட்ஸ்களோடு கூட்டமாக சென்று, நிறைய ஆட்டம் போட்டு, கொஞ்சம் அலைகளைப் பார்த்துவிட்டு வருவோம். அதையும் தாண்டினால்... கணுக்கால்களை நனைத்து சின்னதாக ஒரு விளையாட்டு. அவ்வளவுதானே கேர்ள்ஸ்?!

''அட, அதோட நிறுத்திட்டா போதுமா..?!'' என்கிறார்கள், ஐஸ்வர்யா - வர்ஷா. சமீபத்தில் நடந்த 'இந்தியா இன்டர்நேஷனல் ரெகாட்டா - 2011’ பாய்மரப் படகுப் போட்டியில் '29-னெர்’ (29மீக்ஷீ - இருபத்தி ஒன்பது அடி உயர பாய்களைக் கொண்ட படகு) என்கிற பிரிவில் முதல் இடத்தைத் தட்டியிருக்கும் படகுப் பாவைகள்!

ஸ்லோவேனியா, இந்தோனேஷியா, மலேஷியா, அயர்லாந்து, இந்தியா உள்ளிட்ட ஒன்பது நாடுகள்; 15 வயது முதல் 19 வயது வரையிலான நூற்றுக்கும் அதிகமான வீரர்கள் - வீராங்கனைகள்; மொத்தம் நான்கு நாட்கள்... என்று சென்னை, துறைமுகத்தில் நடந்த போட்டிகளின் ஃபைனலில்... ஐஸ்வர்யாவும், வர்ஷாவும் கிரீடத்தோடு கரைக்கு வந்தது, 'வாரே வா’ வெற்றி!
சென்னை, நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார், ஐஸ்வர்யா. ''நாங்கதான் வின்னர்ங்கிறதை உணர்ந்த தருணம்... வாவ்! அதைவிட உலகத்துல வேறெதுவும் பெரிசு இல்லைனு தோணுச்சு. ஒரு பறவையாகி, அந்தக் கடலையே தாண்டிட்ட சிலிர்ப்பு!'' - அலை அலையாகச் சந்தோஷமானவர், 

''என் அக்கா அஸ்வினி, கடல் பத்தின சப்ஜெக்ட்டான 'ஓஷனோகிராஃபி’ படிக்க ஆசைப்பட்டு, சம்மர் கோர்ஸ் போனாங்க. ஆறாவது படிச்சிட்டிருந்த நானும் அவங்க கூடவே ச்சும்மா போனதுதான் ஆரம்பம். அதுக்குப் பிறகு 'செய்லிங் போட்’ (பாய்மரப் படகு) பயிற்சியில் ஆர்வம் பத்திக்கிச்சு. சென்னை துறைமுகத்துல இருக்கற 'தமிழ்நாடு செய்லிங் அசோஸியேஷன்’ல சேர்ந்து அஞ்சு வருஷம் பாய்மரப் படகு போட்டிக்கான பயிற்சி எடுத்துக் கிட்டேன். சென்னையில போன வருஷம் நடந்த இந்தியா- இன்டர்நேஷனல் ரெகாட்டா - 2010 போட்டியில முதன் முறையா கலந்துக்கிட்டு செகண்ட் பிளேஸ் வாங்கினேன். என்னோட ஆர்வத்துக்கு இணையா... என் பெற்றோரும், பள்ளியும் ஈடுகொடுத்து ஊக்குவிச்சதுதான்... அந்த வெற்றிக்கு முக்கியக் காரணம்!'' என்று சொல்லி ஐஸ்வர்யா நிறுத்த...

தற்போது கூட்டணியாக கைப்பற்றியிருக்கும் வெற்றிக் கோப்பை பற்றி பேச ஆரம்பித்தார் சென்னை, நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் வர்ஷா. ''எனக்கும் செய்லிங் போட் மேல ஏகப்பட்ட லவ். அப்பாகிட்ட கேட்டு நாலு வருஷத்துக்கு முன்ன தமிழ்நாடு செய்லிங் அசோஸியேஷன்ல சேர்ந்து பிராக்டீஸ் எடுத்துக்கிட்டேன். அப்பதான் எனக்கு ஐஸு (ஐஸ்வர்யா) ஃப்ரெண்ட் ஆனா. ரெண்டு பேரோட வேவ் லெங்த் இணைஞ்சுபோகவே... இந்த வருஷ போட்டிக்கு அதை யூஸ் பண்ணிக்கிட்டோம்.

ஐஸு கூட சேர்ந்து நான் முதல் முறையா களம் இறங்கின போட்டி இது. நான் கலந்துக்கிட்ட முதல் இன்டர்நேஷனல் போட்டியும்கூட. என்னோட திறமையையும், ஐஸுவோட பேரையும் காப்பாத்த வேண்டிய பொறுப்பு எனக்கு. செமையா போராடினோம். நான் டயர்ட் ஆன நேரத்துல ஜஸு சுதாரிச்சுப்பா. அவ டயர்ட் ஆகற நேரத்துல நான் டேக் கேர் பண்ணிப்பேன். அதான் இந்த இன்டர்நேஷனல் போட்டியில வெற்றி காத்தை எங்க பக்கம் திருப்பிக்க முடிஞ்சுது'' என்றார் வெற்றிப் புன்னகையோடு வர்ஷா.

''போட்டியில முக்கோணம், சதுர வடிவங்கள்ல கடலுக்குள்ள எல்லைகளை நிர்ணயிடுச்சுடுவாங்க. நமக்கு கொடுக்கப்பட்ட எல்லையை புயல் வேகத் துல தொட்டுத் திரும்பணும். ஒவ்வொரு நாளும் மூணு ரவுண்டுகள்னு, நாலு நாட்கள் போட்டி நடந் துது. முதல் நாள், டை ஆகி, நாங்களும், அடுத்த டீமும் ஒரே ரேங்க்ல இருந்தோம். ரெண்டாம் நாள் 'டாப் 3’, மூணாம் நாள் 'டாப் 2’னு முன்னேறினோம். நாலாவது நாள், 'நாமதான் வின்னர்’ங்கிற நம் பிக்கையோட களம் இறங்கினோம். செம த்ரில்லிங் கான ஃபைனல்ஸ்ல, வின் பண்ணிட்டோம்.

இன்னும் பல வெற்றிகள் குவிக்கணும்ங்கிற உத்வேகத்தோட, வர்ற பிப்ரவரியில மலேஷியாவுல நடக்கப்போற 'ஏஷியன் கேம்’ல ரெண்டு பேரும் கலந்துக்கப் போறோம். 2016 ஒலிம்பிக்லயும் எங்களுக்கு மெடல்கள் இருக்கு!''

- கட்டை விரல் உயர்த்துகிறார்கள் தோழிகள்!

பெண்கள் சிரித்தால் என்ன அர்த்தம்?

பெண் சிரித்தால் என்னதான் அர்த்தம்? இதில் என்ன பொருள் வேண்டிக்கிடக்கிறது,ஏதாவது நகைச்சுவை படித்திருப்பார்கள்,அல்லது யாராவது ஜோக் சொல்லியிருப்பார்கள்,இல்லாவிட்டால் மட்த்தனமாக நடந்துகொள்வதைபார்த்திருப்பார்கள்.வேறு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது?


அப்படியானால் ”பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரித்தால் போச்சு” என்று சொல்கிறார்களே ஏன்? புகையிலையை விற்பவர்கள் காற்று புகாமல் மூடி வைப்பார்கள்.திறந்து வைத்தால் அதன் மணமும்,காரமும் போய்விடும்.வாங்குபவர்கள் மீண்டும் கடைக்கு வரமாட்டார்கள்.

பெண் சிரித்தால் அப்படி தகுதி போய்விடுமா? நகைச்சுவை என்பதே மனிதனுக்கு மட்டும் உள்ள விஷயம்.மிருகத்தை மனிதனாக்குவது நகைச்சுவைதான்.ஆனால்,பெண் மட்டும் சிரிக்க்க்கூடாதா? ஒரு பெண் சிரித்துவிட்டாலே குணக்கேடுள்ள பெண் என்று அர்த்தமாகுமா?
ஒரு பெண் வீதியில் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்.வாலிபர்கள் சிலர் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களை கடக்கும்போதோ அல்லது சற்று தூரம் சென்று திரும்பிப்பார்த்தோ அப்பெண் ஒருவனை பார்த்து சிரித்துவிட்டு போனால் அவன் என்ன நினைப்பான்? ஆமாம் அவன் பெண் தன்னை விரும்புகிறாள் என்று நினைத்து காதலுக்கு பிள்ளையார் சுழி போடுவான்.

ஆண்களும்,பெண்களும் இருக்கும் இட்த்தில் கொஞ்சம் ஆபாசமாக பேச ஆரம்பிக்கிறான் ஒருவன்,செக்ஸ் ஜோக் சொல்ல ஆரம்பிக்கிறான்.அப்போது பெண் ஜோக் சொன்னவனை பார்த்து சிரித்தால் அவன் என்ன நினைப்பான்? ஆண்கள் ஆபாசமாக பேச ஆரம்பித்துத்தான் பெண்களின் மனநிலையை கணிக்கிறார்கள் என்று விபரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.இந்த மாதிரி நேரங்களில் ஒரு பெண் இறுக்கமாக இருக்கவேண்டும் என்பதைத்தான் சிரிச்சா போச்சு என்றார்களோ?

” சீறிவரும் பெண்ணை நம்பு ,சிரிக்கும் பெண்ணை நம்பாதே!” ஆட்டோவில் இருக்கும் பொன்மொழி.இதென்ன சமாச்சாரம்? ஆட்டோவில் போகும்போது அவன் பார்வையும்,நடவடிக்கையும் கொஞ்சம் சிரிப்பது போல் இருந்திருக்கும்.சிரித்துவிட்ட்தே என்று இவன் சந்தோஷப்பட்டு ஏதாவது சொல்ல,செருப்பு வந்து விழுந்திருக்கும்.அதனால் பொன்மொழி வந்து விட்ட்து.

அவர்களூடைய தாயும்,சகோதரிகளும் சிரிக்கவே மாட்டார்களா? வீட்டில் தடை போட்டிருந்தாலும் போட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.இன்னொரு சிரிப்பு இருக்கிறது.ஒரு பெண் அலுவலகத்துக்கு வராமலே இன்னொருவரை வருகைப்பதிவேட்டில் கையொப்பம் போடச்சொல்லிவிட்டார்.தாமதமாக வருவதற்காக! அதிகாரிக்கு தெரிந்து விட்ட்து.

பெண்ணை அழைத்து விசாரித்தபோது பெண் அதிகாரியை பார்த்து சிரித்தார்.அதிகாரி என்ன நினைத்தாலும் பெண்ணின் நோக்கம் சிநேக பாவம்தான்.எதிரே ஒரு பெண் சிரிக்கும்போது கோபம் மட்டுப்படும் என்று நினைப்பதுதான்.ஒருவேளை இதுதான் கள்ளச்சிரிப்பா? அதிகாரி கொஞ்சம் நல்ல டைப்பாகவும் இருக்கவேண்டும்.


பெண்கள் சந்தோஷமாக சிரிக்கும் வீடே தெய்வம் வாழும் வீடு என்று எனக்கு தோன்றும்.அத்தகைய குடும்பத்தில்தான் குழந்தைகள் நல்ல நிலைக்கு வருவார்கள்.முன்னேற்றமும் இருக்கும்.சிரிப்பு மனதில் உள்ள எல்லா குப்பைகளையும் அடித்துச்செல்லும் பெருவெள்ளம்.

கர்ப்பமான பின் வாயைத்திறக்காத கன்னிப்பெண்கள்-அதிர்ச்சி ரிப்போர்ட்


தெரிந்த மருத்துவர் ஒருவரை பார்க்கப் போயிருந்தேன்.வழக்கத்துக்கு மாறான கூட்டம்.அவரது துணைவியார் மகப்பேறு மருத்துவர்.அன்று வெளியூர் சென்றுவிட்டதால் பெண்களின் சாதாரண பிரச்சினைகளுக்கும் அவரே சேர்த்து பார்த்துக்கொண்டிருந்தார்.

என்னை பார்த்துவிட்டவர் அழைத்தார்." இவர்களிடம் கொஞ்சம் பேசிப்பார் 'என்றார்.கிராமத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள்.ஒரு இளம்பெண்ணும்,அவரது பெற்றோரும் இருந்தார்கள்.தாய் மட்டும் அதிக பதற்றத்துடன் காணப்பட்டார்.

மருத்துவர் உங்களிடம் பேசச் சொன்னார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு "என்ன பிரச்சினை?'' என்றேன்.தாய் ஆத்திரத்துடன் பேச ஆரம்பித்தார்.''வாயே திறக்க மாட்டேங்கிறா! இவ யார் தலமேலயாவதுதூங்கும்போது கல்ல தூக்கி போட்டுடுவா! நான் என்ன பாவம் பண்ணேனோ !ஏன் வயித்துல வந்து பொறந்திருக்கு!நாங்க வாழறதா?சாகறதா?எப்படியாவது கலைச்சிட சொல்லுங்க சார்!"
பெண் கர்ப்பமாக இருக்கிறார்.திருமணமாகவில்லை.பதினேழு,பதினெட்டு வயது இருக்கும்.சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள்.கருவை கலைப்பதற்காக வந்திருக்கிறார்கள்.எத்தனை மாதம் தெரியாது.அது ஸ்கேன் செய்து பார்த்துதான் முடிவு செய்யவேண்டியிருக்கும்.பெண் வாயை திறக்க வில்லை.

கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் தெரிந்தால் ஒருவேளை அவருக்கே திருமணம் செய்து வைத்து விடலாம்.சட்ட உதவியை நாடலாம்.ஆனால் அந்த பெண் சொல்லவிரும்பவில்லை.அதிகம் கவலையாக இருந்தது போல் தெரியவில்லை.


பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு நான் பேசிப்ப்பார்த்தேன்."என்னை எதுவும் கேட்கவேண்டாம் .எனக்கு எதுவும் தெரியாது! "என்றார்.'நீங்கள் சொல்லும் தகவல் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் ,வெளியே யாரிடமும் சொல்ல மாட்டோம்.உங்கள் பெற்றோருக்கு கூட சொல்ல மாட்டேன்' என்றேன்.மீண்டும் அவரது பதில் உறுதியாக இருந்தது."எனக்கு தெரியாது"

தோல்வியுடன் மருத்துவரை பார்த்து சொன்னேன்."சார் ,வேலைக்காகவில்லை." புன்னகையுடன் அவர் கூறியது,"அடிக்கடி இப்படி யாராவது வருவார்கள்.இங்கே கருக்கலைப்பு செய்வதில்லை! என்றாலும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இது போன்ற பலரும் வாயைத் திறப்பதில்லை என்பதுதான் முக்கியமான விஷயம்."

அவரே அடுத்துக் கூறினார் "இப்படி வந்த ஒரு பெண் எங்களிடம் மட்டும் உண்மையை கூறியபோது அதிர்ந்து போய்விட்டோம்.சமூகம் திருமண உறவை அனுமதிக்காத உறவினர்களால் ஏற்பட்ட கர்ப்பம் அது! இந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு நிலை இருக்கலாம்" என்றார்.கர்ப்பத்துக்கு காரணமானவர்களை திருமணம் செய்துகொள்ள முடியாது.அப்படிப்பட்ட உறவுகள்.

குழந்தைகள் நெருங்கிய உறவினர்கள் தெரிந்தவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாவது பல்வேறு ஆய்வுகளில் வெளிவந்த ஒன்றுதான்.கன்னிப் பெண்களுக்கும் இவை இருந்து கொண்டிருக்கிறது.சத்தமில்லாமல் கலைக்கப்பட்டுவிடும்!பெற்றோர்,பெண் மற்றும் அதற்கு காரணமானவன் தவிர சமூகத்துக்கு தெரிவதில்லை.

பக்கத்து வீட்டைப்பார்த்து பறக்க நினைக்கும் பெண்கள்.

தவறான எண்ணங்கள்,குழப்பங்கள்,கற்பனைகள் தனி மனிதனையும்,குடும்பங்களையும் பொசுக்கி விடுகிறது.கணவன் மனைவி பிரச்சினை ஒன்றை கவனியுங்கள்.

கணவர் தனியார் நிறுவனமொன்றில் நிரந்தர வேலை.மிக சாதாரண குடும்பம்.சொந்தவீடு இல்லை.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.ஒரு பெண் குழந்தை.தொடர்ந்து கணவன் மனைவிக்குள்புகைச்சல்கள்.பிறகு மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.பெண்ணின் தாய் தொலைபேசி மூலம் தினமும் காட்டமான வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டிருந்தார்.

கணவர் தனது நண்பர் ஒருவரை உதவிக்கு நாடினார்.அவர்,பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை தொடர்பு கொண்டு நேரில் வந்து பேசுமாறு கேட்டுக் கொண்டார்.கணவனின் நண்பன் மீது அந்த பெண்ணுக்கு ஓரளவு மரியாதைஇருக்கவே,தனது தாயுடன் நேரில் சந்தித்தார்.பிரச்சினை உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்.
பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைக்கு துணிஎடுத்தால்,சினிமாவுக்கு போனால் தானும் அதை உடனே செய்தாகவேண்டும் என்பது.சேமிப்பாக கணவர் சீட்டு கட்டஆரம்பிக்க,மனைவியோ பெரும் தொகைக்கு நகை சீட்டு கட்ட வேண்டும் என்கிறார்.இறுதியாக,நான் எது சொன்னாலும் இவர் கேட்பதில்லை.அதனால் அவருக்கு என்மீது அன்போ பாசமோ கிடையாது.


மனைவியின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.அலுவலக பணிபோதுமான நேரம் ஒதுக்கமுடியவில்லை.நம்முடைய மிகப்பெரிய பிரச்சினைஇதுதான்.நாம் சொல்கிறபடி நடந்தால்,பேசுவதற்கெல்லாம் தலையாட்டினால் மட்டுமே ஒருவரை நம்புகிறோம்.அவர்தான் நம்மை நேசிப்பதாக நினைக்கிறோம்.இருப்பதிலேயே மிகப் பெரிய முட்டாள்தனம் இது..

பல குடும்பங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாக இம்மாதிரி பிரச்சினைகள் இருக்கின்றன.மனைவிதான் அப்படி என்றில்லை.மற்ற பெண்களுடன் ஒப்பிடும் கணவன்களும் உண்டு.பொறாமை போன்ற விஷயங்கள் மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான்.உணர்ச்சிகளில் வாழாமல் சிந்திக்கத் துவங்குவதன் மூலம் இதை சமாளிக்க முடியும்.

மற்றவர்கள் பெருமை பேசிக்கொள்ளும்போது நமக்கும் ஆசை வருவது இயல்புதான்.அவர்களிடம் இல்லாத நல்ல விஷயங்கள் நம்மிடம் சில இருக்கலாம்.சில செயல்களுக்காக யாராவது நம்மை பாராட்டியிருக்கலாம்.அவற்றையெல்லாம் நினைவில் நிறுத்தி இப்படிப்பட்ட நேரங்களில் நாம் மனதை சந்தோஷப்படுத்திக்கொள்ளவேண்டும்.

ஒருவரிடம் பணம் இருக்கும்.ஆரோக்கியம் இருக்காது.உங்களிடம் சிறப்பான திறமைகள் ஏதாவது இருக்கும்,அவர்களிடம் இருக்காது.ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள்தான்.உணர்ந்து யோசித்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

ஆபாச இணையதளமும் ஒரு சாப்ட்வேர் இளைஞரும்

உறவினர் ஒருவரை பார்க்கவேண்டும்.செஞ்சிலுவை சங்கத்திற்கு வரச்சொல்லியிருந்தார்.உறுப்பினர்கள் கூட்ட்த்தில் இருந்த்தால் உடனே பார்க்கமுடியவில்லை.அறைக்கு வெளியே அமர்ந்திருந்தேன்.அருகில் ஒரு இளைஞன்.சுமார் இருபத்தைந்து வயது இருக்கும்.

பார்ப்பத்ற்கே கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தான்.ஏதோ கஷ்ட்த்தில் இருப்பது போல எனக்கு தோன்றியது.கைகளில் நடுக்கம்.அடிக்கடி அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன்.”சும்மா ஒரு ஃப்ரண்ட பார்க்க வந்தேன்” என்று சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் மீண்டும் வந்தவன் எனக்கு மூன்று இருக்கைகள் தள்ளி அமர்ந்தான்.நான் அந்த இளைஞனையே அடிக்கடி பார்க்க ஆரம்பித்தேன்.அங்கே பணியாற்றும் யாரோ ஒருவர் அவனை அழைத்துக்கொண்டு போனார்கள்.சற்று நேரத்தில் வெளியே வந்தவன் கிளம்பிச்சென்று விட்டான்.
எனக்கு ஆர்வம் குறையாத்தால் அந்த அறைக்குள் விசாரிக்கலாம் என்று சென்றேன்.உள்ளே எய்ட்ஸ் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த்து.”இது எய்ட்ஸ் நோய்க்கான ஆலோசனை மையம் சார்! என்ன வேண்டும்’’?என்றார்கள்.இல்லை,இப்போது ஒரு பையன் வந்து போனானே....


அதெல்லாம் உங்களுக்கு எதற்கு சார்? இப்படி வருபவர்களின் தகவல்களை வெளியிடுவதில்லை என்றார்கள்.நான் இன்னாருக்கு உறவு என்று அறிமுகப்படுத்திக்கொண்ட பின் அந்த இளைஞரின் விவரங்களை சொல்லாமல் பிரச்சினையை மட்டும் சொன்னார்கள்.

அவர் சாப்ட்வேரில் பணிபுரியும் இளைஞர்.ஆபாச இணைய தளங்களை அடிக்கடி பார்த்து வந்திருக்கிறார்.விளம்பரம் மூலமோ,எப்படியோ ஒரு பெண்ணுடன் சாட்டிங் செய்திருக்கிறார்.தொடர்ந்து அப்பெண் நகரில் ஒரு பெரிய ஹோட்டலை சொல்லி வரச்சொல்லியிருக்கிறார்.

பையன் சென்று காத்திருந்தால் அங்கே வந்து சந்தித்த்து ஒரு ஆண்.எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க இவன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை சொல்லியிருக்கிறார்.”இதெல்லாம் மிக்க் குறைவு தம்பி!’ இதற்கு வேறொரு இடம்தான் சரிப்படும் என்று அழைத்துச் சென்ற இடம் வேறு.

அந்த இளைஞனுக்கு பயம் தொற்றிக்கொண்ட்து.பால்வினை நோய்,எச்.அய்.வி.உள்ளிட்ட கிருமித்தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பயத்தில்தான் அங்கே ஆலோசனைக்கு வந்திருக்கிறான்.மூன்று மாதம் கழித்து பரிசோதித்தால் தான் தெரியும் என்று சில ஆலோசனைகளை கூறி அனுப்பியிருந்தார்கள்.கிருமித்தொற்று ஏற்பட்டால் மூன்று மாதம் கழித்தே பரிசோதனையில் தெரியும் என்றார்கள்.அதுவரை அந்த இளைஞன் மன நிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

காபி குடிப்பீங்களா?


கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அது.பேராசிரியர் ஒருவரது வீட்டில் கூடினார்கள்.ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருந்தார்கள்.தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.கிட்ட்த்தட்ட எல்லோரும் முணுமுணுத்தார்கள்.அவர்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்கள்.வாழ்க்கை எளிதாக இல்லை.

வேலை குடும்பம் என்று மனதில் ஏற்படும் இறுக்கத்தையும்,வலியையும் குறிப்பிட்டார்கள். டென்ஷன்,டென்ஷன் என்று குரல் கொடுத்தார்கள்.கல்லூரி வாழ்க்கை போன்ற வசந்தகாலத்தை அனுபவிக்கவே முடியவில்லை.இன்றைய அவசர வாழ்வின் பரிமாணங்களை பற்றி விவாதங்கள் போய்க்கொண்டிருந்த்து.பேராசிரியர் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.
மனதளவில் பழைய மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு காபி தரவேண்டுமென்று முடிவு செய்து அவரே தயாரிக்க கிளம்பினார்.மற்றவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்தார்கள்.பேராசிரியர் காபி தயாரித்து முடித்துவிட்டார்.வந்திருக்கும் அனைவருக்கும் வீட்டிலிருக்கும் காபி கப்,தம்ளர்கள் போதாது.

பேப்பர் கப்போ,பிளாஸ்டிக் கப்போ வாங்கிவரலாமென்றால் கடையும் வெகு தூரம்.வீட்டில் இருப்பதை வைத்தே சமாளித்து விடலாமென்று முடிவு செய்து விட்டார்.பீரோவில் இரண்டு வெள்ளித்தம்ளர்கள் இருந்த்து.சில கண்ணாடி தம்ளர்கள்,சில்வர்,மண் குவளை என்று விதம்விதமான கப்களையும்,தம்ளர்களையும் பிடித்து விட்டார்.ஒரு வழியாக வந்திருக்கும் அனைவருக்கும் ஏற்பாடு செய்தாகிவிட்ட்து.

காபியை கப்களிலும்,தம்ளர்களிலும் அவரே ஊற்றி அனைவரையும் எடுத்துக்கொள்ளச்சொன்னார்.மாணவர்களும் ஆளுக்கொன்றை எடுத்துக்கொண்டார்கள்.சிலர் காபி குடிக்கும் பழக்கம் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.அதனால் சில கப்களும்,தம்ளர்கள் மட்டும் டேபிளிலேயே இருந்த்து.”டேபிளில் மீதமிருக்கும் கப்களை கவனியுங்கள்’’ என்றார் பேராசிரியர்.

யாரும் எடுக்காத மிச்சமிருக்கும் குவளைகள் விலை குறைவானவை மற்றும் அழகில்லாதவை.பேராசிரியர் பேசினார்.”நான் கவனித்துக்கொண்டிருந்தேன்,முதலில் எடுக்க வந்தவர்கள் அதிக விலையுள்ள கப்களையும்,அழகானவற்றையும் எடுத்தார்கள்.அனைவரது கையும் அவற்றுக்குத்தான் நீண்டன! ஏன்? நீங்கள் குடிக்கப்போவது காபியத்தானே? கப்பையோ,தம்ளரையோ இல்லையே?

பெரும்பாலானவர்களுக்கு வரும் மன இறுக்கமும்,கவலைகளும் இந்த வகைதான்.காபியை மறந்து விட்டு கப்பை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.வாழ்க்கையை வாழ்வதை விட்டுவிட்டு வறட்டு கௌவரவத்துக்காக அவசியமில்லாத்தை தேடி டென்ஷன் ஆகிறீர்கள்.தூக்கம்கெட்டு தவிக்கிறீர்கள்.அப்புறம் மன அழுத்தம்,கவலை என்று போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

எளிதாக புரியும் விஷயம்தான்.கொஞ்சம் யோசித்தால் நாமும் சந்தோஷத்தை வரவழைத்துக்கொள்ளலாம்.கப்பை விட்டுவிட்டு நாம் காபியை கவனிப்போம்.(எனக்கு மெயிலில் வந்த்து)

கலங்கும் பெண்களால் உடையும் உறவுகள்.

காதலிலோ,குடும்பத்திலோ ஆண்,பெண் இருவருமே நம்பிக்கையும் பாதுகாப்பும் உணர வேண்டும்.இவற்றில் தவறினால் அந்த உறவு அதோகதிதான்.தான் தொடர்ந்து மதிக்கப்படுவோமா? என்ற கேள்வி எழுந்தவுடன் சந்தேகமும் அதைத் தொடர்ந்து உறவுகளில் விரிசலும் ஆரம்பித்துவிடுகிறது.

வேலைக்கு போன இட்த்தில் ஒரு பெண்ணை பார்த்தவுடன் பிடித்துப்போய் விட்ட்து அவனுக்கு! அந்த பெண்ணுக்கும்தான்.பார்வையில் ஆரம்பித்து புன்சிரிப்பாய் மலர்ந்து பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.ஒரு நாள் அவன் திருமணம்செய்து கொள்ளலாம் என்று கூறினான்.

அந்த பெண்ணுக்கு குழப்பம் அதிகமாகிவிட்ட்து.இம்மாதிரி நேரங்களில் தோழிகள்தான் பக்கபலம்.ஆண்களை எளிதில் நம்பி விடாதே! என்றார் தோழி.நல்ல வேலையில் இருக்கிறான்,இனிமையாக பழகுவான் என்பது தவிர வேறெதுவும் தெரியாது.தேர்வுகள் ஆரம்பமாகிவிட்ட்து.
அவனைத்தவிர்க்க ஆரம்பித்தாள்.வேறு எந்தெந்த ஆண்களுடனோ அதிகம் பேசிக்கொண்டிருந்தாள்.போன் செய்தால் வீட்டில் உள்ளவர்கள் எடுத்து என்ன வேண்டும் என்று முறைப்பாக கேட்டார்கள்.பாவம் இவன் அப்பாவி!கொஞ்ச நாள் கழித்து சொல்லியிருக்கலாமோ என்று நினைத்தான்.இவனுக்கும் குழப்பம் அதிகமாகி விட்ட்து.


சுருக்கமாக சொன்னால் பையனின் வீட்டில் திருமணத்திற்கு தீவிரமாக இருந்த்தால் பெற்றோர் பார்த்த பெண்ணை மண முடித்துவிட்டான்.நிச்சயமானவுடன் பெண்ணின் தோழி ஆத்திரமாக கேட்டார்”என்ன இப்படி செஞ்சிட்டீங்க?’’ அவன் பதில் சொல்லவில்லை.கொஞ்சம் இழுத்திருந்தால் பரவாயில்லை.அதிகமாக இழுத்தால் எத்தகைய உறவும் அறுந்துதான் போகும்.

சமூகத்தில் பெண்களின் தகுதிநிலையே இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.திருமணமாகி மணவாழ்க்கையில் சந்தோஷம் இழந்த பெண்களை பார்த்துவிட்டு கலங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.பார்த்தவையும் கேட்டவையும் அவர்களுக்கு அச்சத்தையும்,கலக்கத்தையும் தருகிறது.முடிவு எடுப்பதில்,நம்பிக்கை கொள்வதில் பெரும் குழப்பம்.

மேற்கண்ட பெண் திருமணமாகி போனால் கூட தான் எப்போதும் மதிக்கபடுவோமா என்ற சந்தேகத்திலேயே இருந்தால் சிக்கலான குடும்ப பிரச்சினைகளையே கொண்டுவரும்.கணவன் எப்போதும் தன்னை முக்கியமாக கருத வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் உத்திகள் விரும்பத்தகாத விளைவுகளையும் உருவாக்கலாம்.

கணவன் குடும்பம் தொடர்பான உறவுகள்,அவரது பெற்றோர்,சகோதரிகள் போன்றோரை அதிகம் கணவனுடன் நெருங்கமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.மாமியார் மருமகள் சண்டைக்கு வித்திடலாம்.(பெற்றோருக்கும் மகன் தங்களை மதிக்கமாட்டானோ என்ற எண்ணம் ஏற்படுவது வேறுவிஷயம்).பெண்ணின் தாய் வீட்டு உறவுகளுக்கு அதிகம் வரவேற்பு அளிக்கலாம்.


மிகச்சில சொந்தக்காலில் நிற்கும் பெண்களைத்தவிர இதெல்லாம் பொதுவானவை.பெண்ணுக்கு உரிய சமூக தகுதுநிலை கிடைத்தால் ஒழிய இவற்றை தவிர்ப்பது கஷ்டம்.

பத்தில் நான்கு பேர் உடலில் அபாய நோய்க்கிருமி.

மனிதரில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் அந்த நோய்க்கிருமி இந்தியாவில் நாற்பது சதவீதம் பேர் உடலில் இருக்கிறது.பேருந்தில்,ரயிலில் ,அல்லது கூட்டமான இடங்களில் நோயுள்ள ஒருவர் இருமும்போதோ ,தும்மும்போதோ நீங்கள் அதை வாங்கிக்கொள்கிறீர்கள்.உங்கள் உடலிலும் இருக்கலாம்.ஆனால் தெரியாது.உங்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறையும்போது இருமல் துவங்கும்

.நாற்பது சதவீதம் பேருக்கு இருந்தாலும் பத்து சதவீதம் நபர்களுக்கு மட்டும் நோய உண்டாகிறது.மற்றவர்களுக்கு கிருமி உடலில் இருந்தாலும் அது பாட்டுக்கு சமயம் வராதா(நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறையாதா) என்று சுற்றிக்கொண்டிருக்கும்.ஆம் காசநோய் தான்.இந்நோயுள்ள ஒருவர் பதினைந்து பேருக்காவது பரப்பிவிடுகிறார்.பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த தகவல் இருமிக்கொண்டிருப்பார்கள்.உடல் குறைந்துபோய் இருக்கும்.மேலும் இருக்கிறது.
முடி,நகம் தவிர இந்நோய் உடலின் எந்த உறுப்பையும் தாக்கும்.பொதுவாக மூன்று வாரங்களுக்கு மேல் இருமல்,உடல் எடை குறைதல்,மாலையில் காய்ச்சல் ,சளியில் ரத்தம்,பசியின்மை,போன்றவை இதன் அறிகுறிகள்.வெளிப்படையாக தெரிந்த இருமல், நுரையீரலில் ஏற்படும் காசநோய்.இதில் இரண்டு வகை இருக்கிறது.

வழக்கமாக சளி பரிசோதனை மூலம் கண்டறியப்படுவது.சிலருக்கு மைக்ராஸ்கோப்பில் பார்க்கும்போது சளியில் கிருமிகள் தெரியாது.ஆனால் அறிகுறிகள் இருக்கும்.இவர்களுக்கு எக்ஸ்ரே மூலம் உறுதி செய்வார்கள்.நுரையீரல் தவிர உடலில் மற்ற இடங்களில் ஏற்படும் காச நோய் இன்னொரு வகை. கழுத்துப்பகுதியில் கட்டி இருக்கும் ,பரிசோதனையில் காசநோய் என்று தெரியும்.


சிலருக்கு மூளையில்(meningitis),சிலருக்கு வயிற்றில் ,சிறுநீரகத்தில்,குடல்களில் எங்கு வேண்டுமானாலும் வரலாம்.இவர்களுக்கு இருமல் இருக்காது.உடல் எடை குறைவதும்,மாலை நேர காய்ச்சலும்,பசியின்மையும் இருக்கும்.இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.ஆறு முதல் ஒன்பது மாதங்கள் கூட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இதில்தான் பெரிய சிக்கல் .குடிப்பது,பக்க விளைவுகள் ,விழிப்புனர்வில்லாமல் ஒழுங்காக மருந்து சாப்பிடாமல் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இரண்டு மாதம் சாப்பிட்டால் ஓரளவு அறிகுறிகள் குறைந்துவிடும்.இருமல் இருக்காது.உடனே நிறுத்திவிடுவார்கள்.நோய் முழுமையாக குணமாகாமல் மீண்டும் மருத்துவமனை வருவார்கள்


.இவர்களில் சிலருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மருந்துக்கு பாக்டீரியாக்கள் பழகி விட்டிருக்கும்.ட்(resistance).கூட்டு மருந்து வேலை செய்யாது.இதை MDR TB (Multi drug resistant) என்கிறார்கள்.இந்தநிலை வந்தால் இரண்டு வருடம் மருந்துகள் சாப்பிடவேண்டும்.அதற்குள் அவர் எத்தனை பேருக்கு பரப்புவார் என்று தெரியாது. 

இந்தியா போன்ற சத்துக்குறைவால் வாடும் நாடுகளில் இந்நோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்.எச் .ஐ .வி. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால் அவர்களிடையே காசநோய் அதிகரித்து வருகிறது.இது மேலும் மேலும் சுமை.காச நோய் அறிகுறி உள்ள யாரையாவது மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தால் நீங்களும் நாட்டுக்கு நன்மை செய்தவர்தான் .கூடத்தில் யாராவது இருமும்போது ஜாக்கிரதையாக இருக்கலாம்.அவரை துணி வைத்து இரும சொல்லலாம்.

கற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை

கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமத்தில் நடந்த விஷயம் இது.உறவினர் பெண் ஒருவரை அவரது கணவர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கோயில் பூசாரி ஒருவர் இரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.அந்த பெண் சப்தமிட்டு தப்பித்து விட்டார்.

நல்ல வேளை அந்த பெண் கல்லாகபோக யாரும் சாபமிடவில்லை.காவல் நிலையத்தில்புகார் செய்தார்கள்.அதற்குப்பிறகு நடந்த சம்பவம்தான் பெண்ணின் சமூக தகுதி நிலையை நமக்கு உணர்த்தும் ஒன்று.ஆமாம் இந்தியா இது போன்ற கிராமங்களில்தான்வாழ்கிறது.

கிராமத்தில் பெரியவர்கள்,முக்கியஸ்தர்கள் எல்லாம் கூடி பஞ்சாயத்துபேசினார்கள்.சினிமாக்களில் வரும் பஞ்சாயத்து போலத்தான்! பூசாரிக்கு 42,000 ரூபாய் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.ச்சே இவ்வளுவுதானா? சரி என்ன இருந்தாலும் கோவில் பூசாரி இல்லையா?
போகட்டும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் தனது தொழிலை சமீப காலமாகவிட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.ஆனால் மேற்கண்ட விஷயம் கட்டப்பஞ்சாயத்து அல்ல.கிராமங்களில் மரபாக இருந்து வரும் ஒன்று தான்.நீதிமன்றத்தின் மிகப்பழைய வடிவம் இந்த பஞ்சாயத்துக்கள்.


கிராமங்களில் இரண்டு பேருக்கு அல்லது இரண்டு குடும்பத்துக்கு பிரச்சினை என்றால் அதற்கென்று உள்ள பெரியவரிடம் புகார் கொடுப்பார்.அவர் குறிப்பிட்ட நாளில் பஞ்சாயத்தை கூட்டுவார்.பக்கத்து கிராமங்களில் இருந்து கூட பெரிய மனிதர்கள் அழைக்கப்படுவார்கள்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்பார்கள்.ஒருவர் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது என்று அடிக்கடி யாராவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.ஆனாலும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.ஒரு வழியாக இரண்டு தரப்பும் உணர்ச்சியை கொட்டியிருப்பார்கள்.
தீர்ப்புக்கு இருதரப்பும் கட்டுப்படுவதாக உறுதியளிக்க வேண்டும்.சற்று நேரத்திற்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.அதன் பிறகு கொஞ்சம் பிகுபண்ணிக்கொண்டு முக்கியஸ்தர்கள் கொஞ்சம் தூரமாக போய் விவாதிப்பார்கள்.ஊர் மக்கள் ஆவலோடு காத்திருப்பார்கள்.பின்னர் தீர்ப்பு வெளியாகும்.தீர்ப்பைவிமசித்துக்கொண்டே ஆட்கள் கலைந்து செல்வார்கள்.

கிராமங்களில் வழங்கும் இந்த தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் கஷ்டம்.ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடவும்,ஒத்துழைப்பு இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.ஆனால் இன்றும்இப்படியெல்லாம் சாத்தியம் என்பதுதான் புரியவில்லை.