Thursday, November 24, 2011

அதிக திறமை ஆபத்தா?

அண்மையில் 'பன்முகமாக இருங்குங்கள்' என்ற கட்டுரையை விகடன் இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். இதற்கு விமர்சனம் செய்திருந்த பலர் அதிக திறமை (over skilled) ஆபத்தாக முடிந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள்.


உண்மையில் அதிக மற்றும் அதீத திறமை பல நேரங்களில் பல பணியாளர்களுக்கு நல்ல பெயரைத்தான் பெற்று தந்திருக்கிறது. அந்த நல்ல பெயர் என்பது உங்களைச் சார்ந்ததாகத்தான் இருக்கும்.
உதாரணத்துக்கு, அடுத்த வாரத்தில் அலுவலகத்துக்கு மூன்று தினங்கள் விடுமுறை இருக்கிற இரு தினங்களின் எல்லா வேலையையும் முடிக்க வேண்டும் என்கிற போது யார் தயவையையும் எதிர்பார்க்காமல், வேலைகளை வேகமாக முடித்து விடும் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எப்போதும் தனி மரியாதை, தனி சம்பள உயர்வுதான்.

இந்த பன்முக திறமை மற்றும் அதிக திறமையை வேலைக்கு சேர்ந்து, உங்களுக்கு என கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில் தனித் திறமையை காட்டி நல்ல பெயர் எடுப்பதுதான் நல்லது. இல்லை என்றால் அதிகப்பிரசங்கி என்கிற பெயர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பலர் இங்கே தான் மெகா தப்பு செய்துவிடுகிறார்கள்.

அதாவது, தாங்கள் எந்த வேலைக்கு எடுக்கப்பட்டிருக்கிறார்களோ, அதை செய்யாமல் இதர வேலைகளை செய்வதால் பல அதிகாரிகள் கோபம் கொள்கிறார்கள். அங்கேதான், சிக்கல் ஆரம்பிக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டுதான். அதிக திறமையை மற்ற பணிகளில் காட்ட வேண்டும்.

மேலும், புதிதாக ஓர் இடத்தில் வேலைக்கு சேரும் போது, என்ன வேலைக்கு தேர்ந்தெடுக்கிறார்களோ, அது தொடர்பான தனித் திறமைகளை முன் நிறுத்தி விவரங்களை சொன்னால் போதும். பல நேரங்களில் உங்களின் பன்முக திறமைகள் மற்றும் அதிக திறமைகளை நேர்முகத் தேர்வின் போது முழுமையாக வெளிப்படுத்தினால் வேலை கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.

உங்களிடம் நேர்முகத் தேர்வு நடத்துகிறவர், இவ்வளவு திறமையான நபர் வேலைக்கு வந்தால், தன் வேலை பாதிக்கப்படுமோ என்கிற பயத்தில் நல்ல திறமையான பணியாளர்களை தட்டி கழிக்கும் நிலை பரவலாக காணப்படுகிறது.


அதே நேரத்தில், அலுவலக அதிகாரியின் நேர்முகத் தேர்வு முடிந்து நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது நிர்வாக இயக்குநரின் நேர்முகத் தேர்வு என்கிறபோது, நீங்கள் உங்களின் பன்முகத் திறமை மற்றும் அதிக திறமையை காட்டத் தயங்க கூடாது. அந்த வகையில் உங்களுக்கு கேட்ட சம்பளம் அதை விட கூடுதலாக கூட கிடைகக் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.. அதிகப்படியான தகுதியையும் (Over qualification), அதிக திறமையையும் (over skilled) பலர் ஒன்றாக போட்டுக் குழப்பி கொள்வது..! 

முதலில் அதிகப்படியான தகுதியை பார்ப்போம். பல நேரங்களில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கவும் என்று விளம்பரத்தில் போட்டிருப்பார்கள். அந்த வேலைக்கு எம்.பில், பி.ஹெச்.டி. முடித்தவர்கள் கூட விண்ணப்பங்கள் அனுப்புவதை நடைமுறையில் பார்க்கிறோம். அது தவறு...


இது போன்று, பதவிக்கு தேவையில்லாத அதிகம் படித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்புவதை பல நிறுவனங்கள் தவிர்த்து விடுகின்றன. அப்படியே தெரியாமல் அழைப்பு அனுப்பினாலும், நேர்முகத் தேர்வு அறையில் அலுவக நிர்வாகி, பிளஸ்டூ படித்தவர்களுக்கான வேலைக்கு இரட்டை பட்டம் முடித்திருக்கும் நீங்கள் விண்ணப்பிக்க என்ன காரணம் என்ற கேள்வி வரும். அப்போது, 'வேறு எந்த வேலையும் கிடைக்கவிலலை' என்று ஒருவர் சொல்ல வேண்டி வரலாம். அப்போது அதிகாரிகள், இவர் படித்தப் படிப்புக்கும் திறமைக்கும் தொடர்பு இல்லாதவராக இருக்கிறார் என்று புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகும்.

அதிக திறமை என்ன என்று பார்ப்போம். ஒருவரை, ஆங்கிலத்திலிருந்து தெலுங்குக்கு மொழிப்பெயர்க்கும் வேலைக்கு அழைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர், ஆங்கிலத்திலிருந்து தமிழ், மலையாளம் போன்ற இதர மொழிகளுக்கும் மொழிப்பெயர்ப்பு திறமை உள்ளவர் என்றால் அது அதிக திறமையாக எடுத்துக் கொள்ளப்படும். வேலையில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும், இவர் ஒருவரை வைத்து அலுவலகம் பல மொழிப்பெயர்ப்புகளை செய்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அப்போது கூடுதல் சம்பளம் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

அதிக திறமையுடன் சிறப்பாக பணிபுரிந்து வெற்றி காண வாழ்த்துகள்..!

No comments:

Post a Comment