Monday, February 21, 2011

2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்?


கம்ப்யூட்டர் பயன்பாட்டு பிரிவில், இப்போது இன்டர்நெட் பிரவுசர்களுக் கிடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் பயனாளர்களின் மனதில் என்ன எதிர்பார்ப்பு உள்ளது என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. எந்த பிரவுசர் 2011 ஆம் ஆண்டில் மக்களிடையே பிரபலமாகும் என்று கணக்கெடுக்கப் பட்டது. அதில் கிடைத்த விபரங்களைப் பார்க்கும் முன், சென்ற சில மாதங்களில், ஒவ்வொரு பிரவுசரும் தங்களை எந்த பயன்பாட்டில் நிலை நிறுத்த, புதிய வசதிகளைத் தந்து மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று பார்க்கலாம்.
கூகுள் குரோம் பிரவுசரின் வேகம், கூடுதல் புதிய வசதிகள், புதிய பதிப்புகளை விரைவில் கொண்டு வருதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், இப்போதைய இணைய வரையறைகளை ஒட்டி இயங்குவதற்குத் தன்னை முழுமையாகத் தயார் செய்துள்ளது. வேகத்தைக் கூட்டுவதிலும் ஆர்வம் காட்டுவதுடன், யூசர் இன்டர்பேஸ் விஷயத்திலும் அக்கறை காட்டுகிறது.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரில், யூசர் இன்டர்பேஸ் முழுமையாக மாற்றப்படுகிறது. புதிய பதிப்புகளை உடனுக்குடன் கொண்டு வருகிறது. ஆப்பரா தொகுப்பு புதிய ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் அடிப்படையில் வேகமாக இயங்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது. 
சபாரி தொகுப்பில் புதிய வசதிகளும், எக்ஸ்டன்ஷன்களும் தரப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் அடிப்படையில் மக்கள் மனதில் வெற்றி பெற இருப்பதாக உள்ள பிரவுசர் எது என்று பார்ப்போமா!
1.கூகுள் குரோம் 47.27% (1,032 வாக்குகள்)
2. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.97% (174 வாக்குகள்)
3. மொஸில்லா பயர்பாக்ஸ் 36.92% (806)
4. ஆப்பரா 6.6% (144)
5.சபாரி 0.92% (20)
6. மற்றவை 0.32% (7)
இந்த அடிப்படையை மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் பிரவுசர் கணிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரவுசர்கள் மாற்றம் குறித்த செய்திகள், சோதனைத் தொகுப்புகளின் புதிய வசதிகள் எப்படி மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளன என்ற கணக்கினைக் காட்டுவதாகவே எண்ண வேண்டும். இதுவும் வாரா வாரம் மாறலாம். 


இணைந்த இமயங்கள்


மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக்கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும். இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கியாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே போல நோக்கியா மேப்ஸ் சேவையை மைக்ரோசாப்ட் பயன்படுத்தும். 20 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கை யில் நோக்கியா ஸ்மார்ட் போன்கள் உலகில் பயன்படுத்தப்படுகின்றன. அதிகமான எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் நிறுவனமாக, நோக்கியா இடம் பெற்றுள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் புதிய இலக்குகளில் வெற்றிகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை. ஒரு புதிய மொபைல் இயங்கு சூழ்நிலையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கிறது.
தற்போது நோக்கியா போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிம்பியன் மற்றும் மீகோ படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமக்கு என்ன வசதிகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1.எளிய வேகமான பயன்பாடு: பல அப்ளிகேஷன்கள் சிம்பியன் சிஸ்டத்தில் இயங்குவதை நாம் அனுபவித்து வருகிறோம். இவை விட்ஜெட் (Widget) என அழைக்கப் படுகின்றன. விண்டோஸ் மொபைல் இயக்கத்தில் உள்ள இந்த விட்ஜெட்டுகள், இன்ஸ்டால் செய்வதற்கும் இயக்குவதற்கும் எளிதானவை. இதனால் பயனாளர்கள் நிச்சயம் மற்றவற்றைக் காட்டிலும் இவற்றை அதிகம் விரும்புவார்கள்.
2. கேம்ஸ்: மொபைல் போனை விளையாட்டிற்கெனப் பயன்படுத்துபவர்களுக்கு, விண்டோஸ் மொபைல் போன் அதிக உற்சாகம் தரும் சாதனமாக இருக்கும். 
3. ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்: ஆபீஸ் அப்ளிகேஷன் எனக் கொண்டு வந்து, கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், நம் அன்றாட வாழ்க்கை முறையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்புகளாகும். எனவே இன்றைய கம்ப்யூட்டராக மாறிவரும் ஸ்மார்ட் போன்களில், விண்டோஸ் மொபைல் மூலம் இவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவதனை அனைவரும் விரும்புவார்கள். மைக்ரோசாப்ட் வேர்ட், பவர்பாய்ண்ட், எக்ஸெல் மற்றும் ஒன் நோட் ஆகிய அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு, நோக்கியா போன்களில் இனி இடம் பிடிக்கும். டாகுமெண்ட்களைப் படிப்பதற்கும், தயாரிப்பதற்கும் மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவதற்கும் யார் தான் ஆபீஸ் அப்ளிகேஷனை வேண்டாம் என்று சொல்வார்கள்!
4. மியூசிக்: ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளைத் தருவதில் மைக்ரோசாப்ட் தரும் தொழில் நுட்ப வசதிகளை எல்லாரும் அறிந்திருக்கிறோம். எனவே இந்த வகையிலும் விண்டோஸ் மொபைல் முதல் இடத்தைப் பெறும்.
5. இமெயில் பயன்பாடு: மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் சர்வர் மூலம் தங்கள் இமெயில் பரிமாற்றங்களை மேற்கொள்பவர் களுக்கு, விண்டோஸ் மொபைல் ஒரு வரப்பிரசாதமாக அமையும். 
6. இன்ஸ்டன்ட் மெசேஜ்: உடனடி செய்தி அனுப்பி பெறுதல், கான்பரன்ஸ் பயன்பாடு ஆகியவற்றிற்கு ஆபீஸ் கம்யூனிகேட்டர் மொபைல் கை கொடுக்கும்.
7. உலக மொழிகள் பயன்பாடு: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அனைத்து மொழிகளின் பயன்பாடு எளிதானதாக உள்ளது. இது தற்போது நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களுக்கும் நீட்டிக்கப்படும். 
8. இதர வசதிகள்: நோக்கியாவின் மேப்ஸ் இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேப்பிங் சர்வீசஸ் பிரிவின் ஓர் அங்கமாக இருக்கும். இது பிங் சர்ச் இஞ்சினில் இணைக்கப்படும். நோக்கியா தன் மொபைல்போன் மூலம், விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு கட்டணம் செலுத்தும் நெட்வொர்க் ஒன்றை இயக்கி வருகிறது. இனி இதன் மூலம் விண்டோஸ் மொபைல் கட்டண வசதிகள் விற்பனை செய்யப்படுவது எளிதாகும். 
ஸ்மார்ட் போன்களுடன் மற்ற வகை போன்களைக் கணக்கிட்டால், தற்போது மற்ற வகை போன்களே அதிகம் புழக்கத்தில் உள்ளன. உலக அளவில் சென்ற ஆண்டு இறுதியில் 48 கோடி ஸ்மார்ட் போன்களும், 330 கோடி மற்ற வகை போன்களும் இருந்தன. ஆனால் விண்டோஸ் போன்ற கூடுதல் வசதி உள்ள ஸ்மார்ட் போன்கள் வருகையில், வரும் 2015 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 140 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மற்ற வகை போன்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மைக்ரோசாப்ட் வழங்கும் விண்டோஸ் மொபைல், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐபோன் சிஸ்டங்களுக்கு நல்ல போட்டியாக இருப்பதால், ஏற்கனவே எச்.டி.சி., சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளன. இப்போது நோக்கியாவும் இந்த வரிசையில் பெரிய அளவில் சேர்ந்துள்ளது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் மோட்டாரோலா நிறுவனத்துடன் இதே போன்ற ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. ஆனால் அது வெற்றிகரமாகத் தொடரவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இனி மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங் களுக்கிடையே நடக்கும் பந்தயத்தில் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் மொபைல் 7 ஆகிய குதிரைகளே ஓடும். எது வெற்றி பெறுகிறது என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும். 


இன்டர்நெட் எக்ஸ்புவோரர் பதிப்பு 9 - புதிய கூடுதல் வசதிகள்

முழுமையாக வெளி வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இறுதிச் சோதனைத் தொகுப்பு அண்மையில் வெளி யானது. இதனை ஆங்கிலத்தில் Release Candidate என்று சொல்வார் கள். ஏற்கனவே சோதனைத் தொகுப்புகள் வந்த போது அவற்றைப் பயன்படுத்தி, அதில் காணப்பட்ட புதிய அம்சங்களை சென்ற செப்டம்பர் 27 மற்றும் ஜனவரி 10 கம்ப்யூட்டர் மலரில் பட்டியலிட்டி ருந்தோம். 
புதியதாக வெளிவந்திருக்கும் இந்த தொகுப்பினை அடுத்து புதிய தொகுப்பு இறுதியானதாகக் கிடைக்கும். எனவே பெரும்பாலும் இதில் உள்ள வசதிகளே அதில் இருக்கும். இந்த இறுதிச் சோதனைத் தொகுப்பில் பல புதிய கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம். அனைத்து வசதிகள் குறித்தும் நீங்கள் அறிய வேண்டும் என்றால், http://www.beautyoftheweb.com/#/ new_in_rc என்ற முகவரியில் உள்ள இணையதளத்தினைக் காணவும். 
1.முதலாவதாக, உங்கள் மனதில் எழும் கேள்வி - இதனை நான் என் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிப் பார்க்க வேண்டுமா என்பதுதான். நிச்சயமாக. நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாதவராக இருந்தாலும், இதில் உள்ள வசதிகள் குறித்து அறிய, இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். இது மிக மிக பாதுகாப்பான ஒரு பிரவுசராகும்.
2. இயங்கும் செயல்திறன் வேகம் கூட்டப்பட்டுள்ளது:இந்த வகையில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஜிமெயில் போன்ற அதிக தகவல்களைக் கொண்டுள்ள ஓர் இணைய தளத்துடன் பிரவுசர் இயங்குகையில் இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அதற்கேற்ற வகையில் திறன் கூட்டப்பட்டுள்ளது. 


3. மின் சக்தி பயன்பாட்டினை வரையறை செய்தல்:அனைத்து பிரவுசர்களும் இப்போது ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது சி.பி.யு வின் சக்தியை அதிகம் பயன்படுத்துகிறது. இந்த பயன்பாடு இப்போது பவர் செட்டிங்ஸ் மெனுவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், பேட்டரியில் நீங்கள் பிரவுசரை இயக்குகையில், சிபியுவின் சக்தி குறைவாகவே பயன்படுத்தும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. இதனால் பேட்டரியின் திறன் வீணாவது தடுக்கப்படுகிறது. இது உண்மையிலேயே புதியதொரு மாற்றம் தான்.
4. யூசர் இன்டர்பேஸ் மாற்றங்கள்: பயனாளருக்கும் பிரவுசருக்குமான இடைமுகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டேப் பாரினை, அட்ரஸ் பாருக்குக் கீழாக அமைக்கலாம். முன்பு அனைத்தும் ஒரே வரிசைய்ல் இருந்ததனால், டேப்கள் மிகவும் சிறிய பட்டன்களாக இருந்தன. இப்போது, டேப் பாரில் ரைட் கிளிக் செய்தால், அது தனி வரிசையாக இடம்பெறுகிறது. இரண்டு வரிசையாக இவை இடம் பெற்றாலும், மற்ற பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில், இவை குறைந்த இடமே எடுத்துக் கொள்கின்றன. பிக்ஸெல்பவர் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மெனு பாரினை உடனுடக்குடன் தேவைப்படும்போது தெரியும் வகையிலும் வைத்துக் கொள்ளலாம்; மறைத்துக் கொள்ளலாம்.
5. பின் செய்யப்படும் தளங்கள்: டாஸ்க் பாரில் ஒரு பட்டனில், எத்தனை தளங்களை வேண்டுமானாலும் இருத்தி வைத்துக் கொள்ளலாம். இதனால் நாம் மொத்தமாக சேர்த்துத் திறந்து பார்க்க விரும்பும் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை ஒரே கிளிக் மூலம் திறந்து பார்த்துக் கொள்ளலாம். 
6. பிளாஷ் மற்றும் விளம்பர தடை: இதில் புதிய ஆக்டிவ் எக்ஸ் பில்டரிங் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஷ் இயக்கம் மற்றும் விளம்பர தடைகள் இணைந்து தரப்பட்டுள்ளன. நீங்கள் பாதுகாப்பானது என நம்பும் தளங்களுக்கு மட்டும் ப்ளக் இன் புரோகிராம்களை இயக்குமாறு செய்திடலாம். மேலும் விளம்பரங்கள், அவற்றின் தன்மை உணரப்பட்டு தடை செய்யப்படுகின்றன. 
7. இயங்கும் இடம் அறிதல்: தங்களைப் பற்றிய எந்த தனி தகவலும் வெளியாகக் கூடாது என்று எண்ணுபவர்களுக்கு இந்த வசதி எரிச்சல் ஊட்டுவதாய் அமையும். ஆனால் இதில் சில குறிப்பிடத்தக்க வசதிகளும் உள்ளன. நீங்கள் பயணத்தில் இருக்கையில், லேப்டாப் பயன்படுத்து பவராக இருந்தால், சில இடங்கள் குறித்து அறிந்து கொள்ள இது உதவும். குறிப்பாக, கூகுள் மேப்ஸ் பயன்படுத்துகையில் இதன் செயல்பாடு நம் இணையப் பயன்பாட்டினை அர்த்தமுள்ளதாக அமைக்கும். ஆனால் இது குறித்து கவலைப்படவும் தேவையில்லை. நம் தனி நபர் தகவல்களை வெளியே விடாத வகையில் இதனை செட் செய்திடலாம். 
8. வெப் எம் வீடியோ: கூகுள் அண்மையில் தன் குரோம் பிரவுசரிலிருந்து எச். 264 வீடியோ தன்மையை எடுத்தது. ஆனால் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில், கூகுள் நிறுவனத்தின் வெப் எம் (WebM) வீடியோ பார்மட்டினை இணைத்துள்ளது. 
இந்த வசதிகள் குறித்து படித்தறிகையில் பல வாசகர்களுக்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது குறித்துப் பல சந்தேகங்கள் எழலாம். அவற்றில் சில கீழே தீர்க்கப்பட்டுள்ளன.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குமா? 
இயங்காது.
2. ஏற்கனவே ஒரு சோதனைத் தொகுப்பு ஒன்றைப் பதிந்து இயக்கி வருகிறேன். புதிய தொகுப்பினை, அதனை அழித்துவிட்டுப் பதிய வேண்டுமா? அதன் மேலாகவே பதியலாமா? அல்லது கூடுதலாகத் தனியே, வேறுஒரு ட்ரைவில் பதியலாமா?
பழைய சோதனைப் பதிப்பின் மேலேயே பதிந்து இயக்கலாம். 
3. விண்டோஸ் இயக்கத்தில் 32/64/128 பிட் இயக்கங்கள் என வேறுபட்ட இயக்கத் தொகுப்புகள் உள்ளன. இவை எல்லாவற்றிலும் பொதுவான ஒரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9 உள்ளதா?
உங்களுடைய விண்டோஸ் இயக்கம் எத்தனை பிட் இயக்கம் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற பிரவுசர் பதிப்பினையே பதிந்து இயக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, விண்டோஸ் 32 பிட் பதிப்பு இருந்தால், விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 32 மட்டுமே பதிந்து இயக்க வேண்டும். http://www.beaut yoftheweb.com/#/download என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால், உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பதியலாம்