சோல், தென் கொரியா: ஜி-மெயில் பாஸ்வேர்ட் திருட்டு வலைப்பின்னல் ஒன்று, எண்ணிக்கை சொல்ல முடியாத அளவில் தனிப்பட்ட ஜி-மெயில் அக்கவுன்ட்களைப் பாதித்திருப்பதை, ஜி-மெயில் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் பாதிப்பு இப்போது, மிகத் தீவிரமடைந்துள்ளது, அமெரிக்க அரசே நேரடியாக இதில் தலையிடும் அளவுக்கு!
குறிப்பிட்ட சில தனியார்களின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்களே திருடப்பட்டுள்ளன. ஆனால், பாஸ்வேர்ட் திருடப்பட்ட ஜி-மெயில்கள் எத்தனை என்ற விபரமோ, பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ, வெளியிடப்படவில்லை.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனியார்களில், தென் கொரியாவின் முக்கிய அரசு உயரதிகாரிகளும் அடங்குகின்றனர். இவர்களில் பலர், ராஜாங்க ரகசியங்களை அனுப்புவதற்கும் ஜி-மெயிலையே உபயோகித்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஜி-மெயில் திருட்டுப் பற்றிய தகவல் வெளியானவுடன் கலவரமடைந்துள்ள தென் கொரிய அரசு, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது. தென் கொரிய உயரதிகாரிகளின் எந்தெந்த ஜி-மெயில்களின் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டன என்ற விபரம் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று கோரியுள்ளது, தென் கொரிய அரசு.
ஆனால், அது உடனடியாகச் சாத்தியமில்லை எனக் கைவிரித்திருக்கின்றது ஜி-மெயில் நிர்வாகம்.
ஜி-மெயிலின் பாதுகாப்புப் பிரிவின் தொழில்நுட்ப டைரக்டர் எரிக் க்ரொஸ், “ஆசிய நாடுகளின் முக்கிய அதிகாரிகள் சிலரின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டுள்ள விஷயம் உண்மைதான். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தென் கொரிய அரசு அதிகாரிகள்தான்” என ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆசிய அரசு அதிகாரிகளைத் தவிர, சில அமெரிக்க அதிகாரிகள், சீன செயற்பாட்டாளர்கள் (சீன அரசுக்கு எதிரான ஆட்கள்), பத்திரிகையாளர்கள், ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்களும் திருடப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
ஆனால், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களும், ராணுவ அதிகாரிகளும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை வெளியிடவில்லை.
ஜி-மெயிலின் பாதுகாப்பு வளையங்களையெல்லாம் தாண்டிக் கில்லாடித்தனமாகச் செய்யப்பட்ட இந்தத் திருட்டு, சீனாவின் மாகாணமான ஜினானிலேயே தொடங்கப்பட்டுள்ளது என்பதை ஜி-மெயில் அறிந்திருக்கின்றது.
இந்தத் திருட்டில், சீன அரசின் கைகளும் நிச்சயமாக இருக்கும் என்றே, சந்தேகிக்கப்படுகிறது.
|