Tuesday, April 5, 2011

தமிழ் குரோம் Transliterate extension


அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்து வருகின்ற இணைய உலாவியாக Google Chrome உலாவியைச் சொல்ல முடியும். அதன் எளிமையான தோற்றம், வேகமான செயற்பாடு போன்றவை இதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கக்கூடும். Chrome உலாவியில் இயங்கும் தகவுள்ள பல உபயோகமுள்ள extensions நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை, இலகுவில் தமிழ் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் நிலையை Chrome browser இல் கொண்டுவர நான் ஒரு extension ஐ உருவாக்கியுள்ளேன். இந்த extension ஐ நீங்கள் உங்கள் Chrome உலாவியில் நிறுவி இலகுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தமிழ் குரோம் Transliterate என்ற extension ஐ install செய்ய Google Chrome Web Store இற்கு செல்ல வேண்டும். அதற்கான இணைப்பு இது. இந்த extension இயங்கும் முறையைச் சொல்லுவதாய் அமைந்த வீடியோ கீழே இணைத்துள்ளேன். உங்கள் எண்ணங்களை அழகு தமிழில் இலகுவாக இணையத்தில் பகிரலாமே!




நுட்பங்களின் அறுசுவை


கடந்த 2010 ஆம் ஆண்டு, தந்துவிட்ட தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் சாதனைகள், சவால்கள் என பல கோணங்களையும் கொண்டவை. பல இணையத்தளங்களும் நுட்பங்கள் சார்பான கடந்த வருடத்தின் போக்கைப் பற்றி, தங்கள் பார்வைகளை வெளியிட்டிருந்தது. அதில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த Infographics என்னைக் கவர்ந்தது. இதேவேளை, New Scientist சஞ்சிகையின் தொழில்நுட்பம் சார்பான 2010 இன் பார்வையும் பல முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தது. அவர்களின் 2010 இன் முக்கிய 10 தொழில்நுட்ப விடயங்களின் தொகுப்பு இங்கேயிருக்கிறது. இதேவேளை, புதுநுட்பம் அன்பு வாசகர்களாகிய உங்களுக்கு எமது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய வருடத்திலும் உங்கள் நுட்பங்கள் பற்றிய புரிதலை விரிவாக்குவதில் துணை நிற்போம் என்று கூறிக் கொள்கிறோம். பல புதிய விடயங்கள் புதுநுட்பத்தில் வரவிருக்கின்றது

3G: 4G – நான்காவது தலைமுறை கட்டமைப்பு


 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது
இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.
1G Network:

1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
2G Network:
2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
2.5G Network:
2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
3G Network:
2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
4G NETWORK
4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors):
  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV
1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
Mobile TV
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:((( 
[ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))] 


2.கட்டமைப்பு (Network)
2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்…LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி…ரயில் பாதை மட்டும் போதும்… ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).
3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!
தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு…:((( [நன்றி-லக்கிலுக்]. ஏதோ…. ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:) 
பி.கு: 
4G தொழில் நுட்பம் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத வேண்டும் என்ற முயற்சியில் எழுதிய பதிவு இது. புரிகிறதா, இல்லையா மற்றும் உங்கள் ஆலோசனைகளைக் கூறினால் தொலை தொடர்பு தொழில்நுட்பம் பற்றி வருங்காலத்தில் எழுத உதவியாக இருக்கும்.

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!



    "ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.
    முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.
    இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
    இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.
    இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
    இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.
    ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.
    அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
    அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .
    இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று அந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.
    Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.
    கம்பியற்ற இணைப்பு உங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!
    ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.
    என்ன தவறு ஏற்பட முடியும்?
    எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.
    கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.
    தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.
    உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு இயங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.
    இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?
  • ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.
  • உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.
  • பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.
  • MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.
  • தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்.ஐ.டி.)ஐ உடனடியாகமாற்றவும்.
  • தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.
  • திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.
  • உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.
  • உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.
    இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.
    என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்த தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?

கூகுளுக்குத் தமிழ் தெரியாது.



google tamil
ஆன்மிகம், ஆன்மீகம்.
சன்னதி, சன்னிதி.
கருப்பு, கறுப்பு
- இது போன்ற சொற்களில் எது சரி என்ற குழப்பம் வருகையில் பலரும் கூகுளில் இச்சொற்களைத் தேடி, கூடுதல் முடிவுகளைக் கொண்ட சொற்களைச் சரியெனத் தேர்கிறார்கள்.
ஆனால், இந்த வழிமுறை எப்போதும் சரியாக இருக்கத் தேவை இல்லை.
எடுத்துக்காட்டுக்கு,
முயற்சிக்கிறேன் என்று எழுதுவது தவறு. கூகுள் தேடலில் இதற்கு 15,900 முடிவுகள் கிடைக்கின்றன.
முயல்கிறேன் என்று எழுதுவது சரி. ஆனால், கூகுள் தேடலில் இதற்கு 9,300 முடிவுகள் தான் கிடைக்கின்றன.
இணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.
சென்ற பத்தியில் “இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது” என்பதில் “
இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம்
” என்பதை அடிக்கோடிட்டு மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ஒருங்குறியில் இல்லாத பல தமிழ் இணையத்தளங்களை கூகுள் திரட்டுவதில்லை. இன்னும் படிமங்களாகவே கூட தமிழ் எழுத்துக்களைக் காட்டும் வழக்கமும் இருக்கிறது. இவை போக, கூகுளால் அணுகித் திரட்டப்படாத பல தமிழ் இணையத்தளங்களும் இருக்கலாம். திரட்டப்பட்ட பக்கங்களில் இருந்து கூட எல்லா பக்கங்களையும் தேடல் வினவல்களுக்கு கூகுள் பயன்படுத்துவதில்லை. முக்கியமில்லாத பக்கங்கள், ஒரே போல் உள்ள பக்கங்களைத் தவிர்த்து விடுகிறது. இணையத்தில் உள்ள தமிழ் ஒலிப்பதிவுகளில் உள்ள பேச்சுக்களைப் புரிந்து கூகுளால் எழுத்துப்பெயர்க்க முடியாது.
கூகுள் முடிவுகளில் ஒரு சொல் அதிகம் தென்படுகிறது என்பதற்காகத் தமிழ் அச்சு ஊடகங்கள், நூல்கள், மக்கள் பேச்சு வழக்கிலும் அச்சொல் கூடுதலாகப் புழங்குகிறது என்று முடிவுக்கு வர இயலாது. இணையத்தில் முழுமையாக உள்ளடக்கங்களை ஒருங்குறியில் ஏற்றும் தமிழ் அச்சு ஊடகங்கள் குறைவே. தமிழ் மக்களின் வட்டாரப் பேச்சு வழக்குகளோ இன்னும் அச்சு வடிவிலேயே கூட முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மை மக்களின் பேச்சு வழக்கைக் கொச்சையாகக் கருதும் ஆதிக்கப் போக்கு அச்சு ஊடகங்கள் தத்தம் எழுத்து மொழித் தேர்வில் பக்கச் சாய்வுடன் செயல்படும் என்றும் உணரலாம். பேச்சு மொழி வேறாகவும், உரைநடை எழுத்து மொழி வேறாகவும் இருக்கும் தமிழில் இது முக்கியமான விசயமாகும். தமிழைப் பொருத்த வரை எழுத்து மொழி மட்டுமே தமிழின் அதிகாரப்பூர்வ ஆவணம் கிடையாது. கற்றறிந்த தமிழறிஞர்களே தெரியாமல் திணறும் பல கலைச்சொற்கள் மக்கள் வாழ்வில் இலகுவாகப் புழங்குகின்றன. எனவே பேச்சு மொழியின் திறத்தையும் தரத்தையும் குறைத்து மதிப்பிடலாகாது.
தற்போது நன்கு படித்து, கணினி, இணைய அணுக்கம், எழுதுவதற்கான ஓய்வு நேரம், ஆர்வம் கூடியவர்களே தமிழ் இணையத்தில் எழுதுகிறார்கள். மொத்த தமிழ் மக்கள் தொகையில் ஒரு வீதம் கூட இருக்க மாட்டார்கள். இந்த ஒரு வீதத்திற்குக் குறைவான மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வியல், வயது, கல்வி, தொழில் பின்புலங்களிலும் கூடுதல் ஒற்றுமைகளைக் காணலாம். கணிசமானவர்கள் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இளைஞர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள். பெண்கள் தொகை குறைவு. இவர்களின் எழுத்துகளிலும் தனித்துவமான, பாசாங்கில்லாத, வட்டார வழக்குகளைக் காண்பது அரிது. ஏற்கனவே வெகுமக்கள் ஊடகங்கள் பின்பற்றும் மொழி நடையை அறிந்தோ அறியாமலோ பின்பற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, பெரும்பான்மை தமிழ் மக்களின் பேச்சு, எழுத்து வழக்குகள் உள்ளது உள்ளபடி ஒலி, எழுத்து வடிவில் பதியப்பட்டு ஆயத்தக்க நிலைக்கு வரும் வரை, இந்த சொற்பத் தமிழ் இணைய மக்கள் தொகையை ஒட்டு மொத்த உலகத் தமிழ் மக்கள் தொகையின் சார்பாகப் பார்க்க இயலாது.
மேற்கண்ட சிந்தனைகள் யாவும் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்த ஒரு சுவையான உரையாடலை அடுத்து எழுந்தவை.
இராமனுசன் என்ற பெயரைக் காட்டிலும் இராமானுஜன் / இராமானுஜம் / ராமானுஜம் என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் அவையே சரி என்ற வாதம் ஒருவரால் முன்வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா என்ற பெயரைக் காட்டிலும் சிறீலங்கா என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் ஸ்ரீ என்ற எழுத்தை ஒழித்து சிறீ, சிரீ என்றே எழுதத் தொடங்குவோமா என்று எதிர்வாதம் வைத்தால் சரியாக இருக்குமோ

QUARKBASE - வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்).



quarkbase1குவார்க் பேஸ் (Quarkbase) என்ற பெயரில் ஒரு சர்ச் என்ஜின் உள்ளது. ஆனால இது வித்தியாசமானது. இதன் பின்னணியில் எந்த டேட்டா பேசும் கிடையாது.
இந்த சர்ச் என்ஜின் இல் சென்று உங்களுக்கு பிடித்தமான இணைய தளத்தின் பெயரை டைப் செய்து என்டர் அடித்து பாருங்கள், அப்போது இதன் அருமை தெரியும்.
அந்த இணைய தளத்தின் சிறிய போட்டோ காட்சி காட்டப்படும். மேலும், அந்த தளத்தின் உரிமையாளர் யார்? எந்த நிறுவனம் இதனை இணையத்தில் பதித்து தருகிறது? என்பது போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன.
நீங்கள் குறிப்பிட ஒரு இணைய தளத்தின் ரசிகரா, உடனே அதன் பெயரை போட்டு பாருங்கள், அதை பற்றிய தகவல்களை கண்டு மகிழுங்கள்.
உதாரணத்திற்கு கீழே:

 tamilmanam 1tamilmanam 2
tamilmanam 3

கம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா?





கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம்.
இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? என்று எப்படித் தெரிந்து கொள்வது?
PC Wizard என்ற இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறிது ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த புரோகிராம் பயன்படுகிறது. அவற்றின் செயல் திறன் பொதுவான இவற்றின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில் நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியில்லை என்று கண்டறிந்து இவற்றை எல்லாம் மாற்றிவிடுங்கள் என்று அட்வைஸ் தரும்.
அப்படியா சேதி! என்று இவற்றை எல்லாம் பார்த்த பிறகு அங்குள்ள Benchmarks என்ற பட்டனை அழுத்தவும். இது கீழாக இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கம்ப்யூட்டர் குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளலாம். பிசி விஸார்ட் புரோகிராமினை இயக்கிப் பார்த்து ரசித்துப் பாருங்கள்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்க…

சந்திரயான்: சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு.


நிலவைச் சுற்றும் சந்திரயான்
உளவிச் சென்று
நாசா வோடு வடதுருவத்தில்
ஒளிமறைவுக் குழியில்
பனிப் படிவைக் கண்டது !
நீரா அல்லது வாயுவா என்று
ஆராயப் போகுது
பாரதமும் நாசாவும் ஒன்றாக !
சந்திரனில் முத்திரை வைத்தது முன்பு
இந்திய மூவர்ணக் கொடி !
யந்திரத் திறமை காட்டும்
பந்தய மில்லை !
விந்தை புரிந்தது இந்தியா !
இரண்டாவது சந்திராயன்
மூன்றாண்டில் சென்று இறக்கும்
வாகனம், தளவுளவி ! அடுத்து
பாரத விண்வெளி விமானிகள் இயக்கும்
சீரான விண்கப்பல்
தாரணியைச் சுற்றி வரும் !
சந்திரனில் சாவடி அமைக்கும்
திட்ட முள்ளது ! விண்கோள்
செந்நிறக் கோளைச் சுற்றிவரும்
திட்டமும் உள்ளது !
பரிதியை உளவி ஆராயும்
எதிர்காலத் திட்டமும்
ஏட்டில் உள்ளது !


Fig. 1
Ice Deposit Discovered in Lunar polar Crater
"தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது. நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை. கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம். பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்."
ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)
"இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1 & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது. விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார். இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார். இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது. அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு."
ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.
“நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது. மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது. சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”
எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

Fig. 1A
Chandrayaan-1 Orbiting the Moon
“சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது. அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”
மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]
“சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப் பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி. அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”
எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]
“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”
டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

Fig. 1B
Bi-Static Experiment
இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் இணைந்து செய்த சோதனை
2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன. அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின ! முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான "எர்லாஞ்சர்" என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது ! அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி. அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் 'இரட்டை நிலைநோக்குச் சோதனை' (Bi-Static Experiment). நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள "நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்" (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன. இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் ! மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் 'புதைபட்ட பனிப்படிவுகள்' இருக்கலா மென்று தெரியவரும். இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !

Fig. 1C
Chandrayaan-1 & NASA LRO
Find Ice Deposit
ஒன்பது மாதங்களாய்ச் சந்திரயான்-1 நிறைவேற்றிய சாதனைகள்
அக்டோபர் 28 2008 முதல் ஆகஸ்டு 2009 வரைச் சந்தரயான்-1 நிலவை 3000 மேற்பட்ட சுற்றுக்கள் சுற்றி விட்டது. மேலும் சந்திரனுக்கு அருகே தணிவாக 60 மைல் (100 கி.மீ.) வட்ட வீதி உயரத்தில் பறந்து நிலவில் 70,000 படங்களை எடுத்து அனுப்பியதுடன் நிலவின் குழிகளையும் மலைகளையும் வியப்புறும் வண்ணம் படமெடுத்து விபரங்களைக் காட்டியுள்ளது. நிலவின் துருவப் பகுதிகளில் நிரந்தரமாய் மறைந்துள்ள குழிகளின் படங்களை எடுத்துள்ளது. அத்துடன் தளப் பரப்புகளை உளவி இரசாயன மற்றும் தாதுக்கள் இருக்கும் தகவலைக் கொடுத்துள்ளது. மே மாதம் 19, 2009 தேதிதான் சந்திரயான்-1 விண்கப்பலின் உயரம் 60 மைலிலிருந்து 120 மைல் வட்ட வீதிக்குத் (100 கி.மீ --> 200 கி.மீ) தள்ளப் பட்டது. நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றி 2009 ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஏவப் பட்டது. ஏப்ரல் 26, 2009 இல் சந்திரயான்-1 விண்மீனை ஒப்புநோக்கித் தன் இருப்பிடத்தைக் காட்டும் "தாரகை நோக்கிக்" (Star Sensor) கருவிப் பழுதாகி இன்னல் விளைவித்தது. இந்திய நிபுணர் துணைக்கோள் நேர்மைப்பாடுக் கருவியையும் ஏரியல் கம்பியையும் (Sensors of Gyroscopes & Antenna) பயன்படுத்திச் சந்திரயான் இருப்பிடத்தை அறிந்து கொண்டார். அந்த ஒரு பழுதைத் தவிர மற்ற கருவிகள் யாவும் இதுவரைச் செம்மையாக இயங்கி வந்துள்ளன.

Fig. 1D
Moon Map Showing Crater Erlanger
பனிப்படிவு இரட்டை நிலைநோக்குச் சோதனை (Bi-Static Experiment) புரிய இரண்டு விண்ணுளவிகள் தேவைப்படும். இரண்டு விண்ணுளவிகளும் நெருங்கிப் பறந்து வட்ட வீதிகளில் நிலவைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆகஸ்டு 20, 2009 ஆம் தேதி சந்திரயானும் நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றியும் (Lunar Reconnaissance Orbiter -LRO) 20 கிலோ மீடர் (12 மைல்) தூரத்தில் பறந்து செல்லக் கட்டுப்பாடு செய்யப்பட்டு நிலவின் துருவப் பகுதியில் எர்லாஞ்சர் குழியின் பனிப் படிவைக் கண்வைத்தன. அவற்றின் இரு உளவுக் கருவிகளும் (Mini Radio Frequency Instrument -Mini-RF) பனிப்படிவு இருப்பைக் கண்டு தமது ரேடார்க் (Synthetic Aperture Radars -SAR) கதிர்க் கற்றைகளை அனுப்பி அவற்றின் எதிரொலிப்பை உறிஞ்சின. தெறித்த சமிக்கைகளை உள்வாங்கிப் பூமியில் உள்ள கட்டுப்பாடு அரங்குகளுக்கு ஆராய விண்ணுளவிகள் அனுப்பி வைத்தன. அந்த பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும் என்று அறியப்படுகின்றது.

Fig. 1E
Chandrayaan-1 Mission
சந்திரனைச் சுற்றிவரும் முதல் இந்திய துணைக்கோள் !
2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது. பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது. சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி. முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியநைச் சுற்றி வர நழுவிச் சென்றன. இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம். இதற்கு முன்பு பன்முறைத் துணைக்கோள்களைப் "புவியிணைப்புச் சுற்றுவீதியில்" (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது ! இந்த சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது. ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன. ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

Fig. 1F
Crater Images of the Moon
விண்ணுளவியின் முக்கிய குறிப்பணி வெண்ணிலவின் மேற்தளத்தை ஆராய்வது. நிலவின் துருவப் பரப்பில் அடித்தள நீர்ப்பனி உள்ளதா என்று அறிவது. பூமியில் அரிதாக இருக்கும் ஹீலியம்-3 ஏகமூல வாயு (Helium-3 -An Isotope of Helium-4 Gas) இருப்பைக் கண்டறிவது. எதிர்கால அணுப்பிணைவுச் சக்தி உற்பத்திக்கு ஹீலியம்-3 வாயு எரிசக்தியாகப் பயன்படும் என்று நம்பப் படுகிறது. இந்தப் பேரிச்சை விண்வெளித் திட்டத்துக்கு இந்தியா 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) (2008 ஆகஸ்டு நாணய மதிப்பு) செலவு செய்கிறது !
சுமார் ஒன்றரை மீடர் சதுரப் பக்க வடிவான சந்திரயான் பூமியில் 1300 கிலோ கிராம் எடையும், நிலவில் வீதியில் சுற்றும் போது சுமார் பாதி எடையும் (590 கி.கிராம்) கொள்வது. அதைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் PSLV (Polar Satellite Launch Vehicle) 1995-2005 ஆண்டுகளில் 8 தடவைத் துணைக் கோள்களைப் பூமியைச் சுற்ற அனுப்பி அனுபவம் பெற்றது. அது 45 மீடர் (150 அடி) உயரம் உள்ளது. மேம்படுத்தப் பட்ட PSLV ராக்கெட் 316 டன் எடை கொண்டது. அது தூக்கிச் செல்லும் விண்ணுளவியை முதலில் பூமியைச் சுற்ற வைக்கும் போது (240 கி.மீடர் X 24000 கி.மீடர்) நீள்வட்ட வீதியில் சுற்றி வரும். முதலில் 1300 கிலோ கிராம் இருந்த துணைக்கோள் இப்போது 590 கி. கிரோம் எடையாகப் பாதியாகி விடும். காரணம் பூமியின் ஈர்ப்பாற்றல் உயரே போகப் போகக் குன்றுகிறது.

Fig. 1G
Indian Launching Rockets
சந்திரயான் விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள்கள்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவகம் படைத்த [Indian Space Research Organization (ISRO)] சந்திரயான்-1 விண்ணுளவி ஏழு விதமான உபகரணங்களை ஏந்திச் செல்கிறது. அதனில் இந்திய நிபுணர் ஆக்கிய 5 இந்தியக் கருவிகளும் அன்னிய நாடுகள் செய்த ஆறு கருவிகளும் அமைக்கப் பட்டுள்ளன. உபகரணங்களில் முக்கியமானவை இரண்டு : 700 வாட்ஸ் மின்சக்தி அளிக்கும் பரிதித் தட்டும் (Solar Panel) நிலவில் தள்ளபடும் உளவியும் (Moon Impact Probe).
சந்திரயான்-1 அனுப்பியதின் குறிக்கோள் :
1. சந்திரனின் தெரியும் முகத்தளம், மறைந்த பின்புறம் ஆகிய இரு தளப் பரப்புகளின் முப்புறப் படங்களைப் பதிவு செய்து (Three Dimensional Atlas) அனுப்புதல்.
2. சந்திர தளத்தின் இரசாயனத் தாதுக்கள் இருப்பு வரைப் படங்களைத் தயாரித்தல். (மெக்னீஸியம், அலுமினியம், சிலிகான், கால்சியம், இரும்பு, டிடானியம், ரேடான் வாயு, யுரேனியம், தோரியம்)
சந்திரயான்-1 துணைக்கோளில் உள்ள உளவுக் கருவிகள்
1. முதற் கருவி [Chandrayaan Energetic Neutral Analyser (CENA)]
2. 30 கிலோ கிராம் எடையுள்ள நிலவில் வீழும் உளவி [Moon Impact Probe (MIP)]. சந்திரனை 100 கி.மீடர் மைல் உயரத்தில் தாய்க் கப்பல் சுற்றி வரும் போது தளத்தில் தள்ளப்படும் உபகரணம் இது. தளத்தில் விழும் போது உளவி நிலா மண்டலத்தில் பரவிய நலிந்த வாயுக்களின் அளவைப் பதிவு செய்யும்.

Fig. 2
Chandrayaan-2 Spaceship
3. கதிரியக்கத் தாக்கமானி [Radiation Dose Monitor (RADOM)]
4. நிலவுத் தளப் பதிப்புக் காமிரா [Terrain Mapping Camera (TMC)]
5. நிலவுத் தாதுக்கள் பதிப்புமானி [Moon Mineralogy Mapper (M3)]
6. ஒளிக்கற்றை உறிஞ்சும் உயர் நுணுக்கக் காமிரா [Hyper Spectral Imaging Camera (HySI)]
7. மெக்னீஸியம், இரும்பு போன்ற பல்வேறு மூலகங்களின் செழிப்பைக் காணும் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [Chandrayaan -1 X-Ray Spectrometer (C1XS)]. இதன் மூலம் நிலவின் மூலத்தையும், தோற்றத்தையும் பற்றி எழும் வினாக்களுக்கு விடை கிடைக்கும். ஒரு காலத்தில் உருகிய தாதுக் கடல் நிலவில் இருந்ததா என்று அறிய உதவலாம். மெக்னீஸியம் இரும்பு இருப்பு வீதம் எத்தனை அளவு நிலவு உருகிய நிலையில் இருந்தது என்று விபரம் கூறும். மேலும் டிடேனியம் போன்ற அரிய உலோகம் கொண்ட பாறைகள் உள்ளனவா என்றும் அந்தக் கருவி சோதனை செய்யும்.
8. 700 வாட்ஸ் மின்சக்தி அளிக்கும் பரிதித் தட்டு [700 Watts Solar Panel]

Fig. 3
Chandrayaan-2
சந்திரயான் விண்ணுளவி புரியும் விஞ்ஞான ஆய்வுகள்
1. பூமியிலிருந்து நோக்குவோர் கண்ணுக்குப் புலப்படாத நிலவின் இருண்ட பின்புறத்தைச் சந்திரயான் விண்ணுளவி சுற்றிவரும் போது ஆராயும். சந்திரனின் பின்புறத்தில் உள்ள குழிகளின் எண்ணிக்கை அதிகம். முன்புறத்தில் இருப்பதை விட வேறான தளப்பண்பாடு கொண்டது பின்புறம்.
2. இருபுறத்திலும் உள்ள நிலவுச் சூழ்வெளியில் ஓர் முப்புற முகப்படத்தைத் (3D Atlas with Spatial & Altitude Resolusion of both side Moon) தயார் செய்யும்.
3. மாக்னீஷியம், அலுமினியம், ஸிலிகான், கால்சியம், இரும்பு, டிடானியம் போன்ற சிற்றளவு அணு எண் கொண்ட மூலகங்களையும், ரேடான், யுரேனியம், தோரியம் போன்ற உயர் அணு எண் கொண்ட கன மூலகங்களையும் தேடிப் பதிவு செய்யும்.
4. சந்திரனின் தோற்ற வரலாற்றை அறியவும் மேற்தள தட்டு இரசாயனப் பண்பாடுகளை உளவவும் தகவலைச் சேகரிக்கும்.

Fig. 4
Chandrayaan-2 Rover
இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்
இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது. அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது. முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும். தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும். தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார். 16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

Fig. 5
Chandrayaan-2 Mission
2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்). மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும். இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது. விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும்.
அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. "எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது," என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். "கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது," என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

Fig. 6
India’s Future Manned
Spaceship
தகவல்: Picture Credits :
The Hindu, ISRO & other Websites
1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
1A Stars & Planets By : Duncan John [2006]
1B. Astronomy Facts on File Dictionary (1986)
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4 Chennai Online News Service About Insat
4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India's Missile Program www.geocities.com/siafdu/kalam.html
14 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810231&format=html (இந்தியாவின் முதல் துணைக்கோள் சந்திரனை நோக்கிச் செல்கிறது)
15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)
16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)
17. Times Now India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]
18. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]
19 Cosmos Magazine The Science of Everything - India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]
20. http://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]
21. http://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]
22. Space Expolaration Chembers Encyclopedic Guides (1992
23. National Geographic -50 Years Exploring Space [November, 2008]
24. Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]
25. Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]
26 Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]
27. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]
28 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)
29 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)
30 Space Spin - LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)
31 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)
32 Hindustan Times - Indo-Asian News Service, Bangalore "India's Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)
33. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)
34 Indian Space Research Organization (ISRO) Press Release - ISRO--NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)