“எங்க காதலைக் கத்தரிக்காதீங்க!” என்று காதலர்கள் அவர்கள் பெற்றோர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்க, உடனே அப்பாமார்கள், “காதலாவது கத்தரிக்காயாவது,” என்று சொல்லியிருப்பார்கள். தமிழில் வங்கணம் என்ற சொல் இருக்கிறது அதற்கு நட்பு, காதல், கத்தரிச் செடி என்று ந.சி.கந்தையாப் பிள்ளை, (1950 edition ) தொகுத்த செந்தமிழ் அகராதியில் பொருள் கூறியிருக்கிறார்கள். இரட்டைக் கத்தரி காதல் சின்னம் போல இருப்பது கூட, ‘காதல் என்ன கத்தரிக்காயா?’ என்ற சொல்லுக்குக் காரணமாக இருக்கலாம்!
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது, ஆனால் தற்போது கத்தரிக்காய் மீது மக்களுக்கு திடீர் காதல் வந்துவிட்டது. ஏன் என்று பார்க்கலாம்.
இந்தக் கத்தரிக்காய்க் காதலைப் பற்றிச் சொல்லும் முன், உங்களுக்கு வழுதலை, வழுதுணங்காய், வழுதுணை பற்றியும் சொல்ல வேண்டும். பயப்படாதீர்கள்; வழுதுணங்காய், வழுதுணை, வழுதலை என்பவை கத்தரிக்காயின் தமிழ்ப் பெயர்கள். நம்புங்கள், சூடாமணி நிகண்டில், ‘வங்கமே வழுதலைப் பேர் வழுதுணை என்றுமாமே’ என்று வருகிறது. வழுக்கையாக இருப்பதால் அது வழுதலை என்று பெயர் பெற்றது என்று ஆராய்ச்சி செய்துள்ளார்கள். தமிழில் கத்தரிக்காய் பற்றி தெனாலி ராமன் கதை ஒன்று இருக்கிறது; ஹிந்தியில் பீர்பால். இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. ஆனால் ஔவையார் பாட்டி கத்தரிக்காய் வதக்கல் சாப்பிட்டிருக்கிறார்.
புல்வேளூர் பூதன் என்பவர் பாட்டிக்கு, பசி வேளையில், கத்தரிக்காய் வதக்கல் செய்து போட, அதைச் சாப்பிட்ட பாட்டி, ‘வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும்’ என்று வெண்பாவில் தான் என்னென்ன சாப்பிட்டார் என்று லிஸ்டே கொடுத்துவிட்டார். அடுத்த முறை புளித்த மோர்சாதத்துக்கு கத்தரிக்காய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வெண்பா எழுத வருகிறதா என்று பார்க்க வேண்டும்.
நாலடியாரில், ‘வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே’ என்று வருகிறது. ‘வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது’ என்று கத்தரிக்காயை விதைக்க பாகன் (பாகற்காய்) முளைத்தது என்ற சுவாரஸ்யமான பாடல் ஒன்று, திருமந்திரத்தில் வருகிறது.
கத்தரிக்காயில் பல ரகங்கள் உள்ளன. சாம்பாரில் போட்டுவிடுவதால் நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை. தமிழ்நாட்டிலேயே அண்ணாமலை, புளியம்பூ, வரிகத்தரி, பவானி, இளையம்பாடி,பொய்யூர், பூனைத்தலை, முள்ளு, தூக்கானம்பாளையம், சுக்காம்பார், அய்யம்பாளையம், வெள்ளைக் கத்தரிக்காய் என்று பலவகை இருக்கிறது.
பெங்களூரில் இரண்டு விதக் கத்தரிக்காய்; ஒன்று மெலிதாக, பச்சையாக ‘லாரல்’ மாதிரி இருக்கும். மற்றொன்று ‘ஹார்டி’ மாதிரி குண்டாக இருக்கும். இதை வெட்டினால் வெண்ணை மாதிரி இருக்கும். கால் மீது விழுந்தால் விரல் வீங்கும். (இவை சென்னையிலும் கிடைக்கும்.)
ஏன் பெரிதாக இருப்பதற்குப் பெயர் ‘பெங்களூர் கத்தரிக்காய்’ என்று என் மகளுக்கு தமிழ் சொல்லித்தரும் பக்கத்துவீட்டு நண்பரைக் கேட்டேன். அவர் குடமிளகாயைக் கூட நாங்கள் ‘பெங்களூர் மிளகாய்’ என்று தான் சொல்லுவோம் என்றார். பெரிதாக எது இருந்தாலும் அதற்கு முன் பெங்களூர் சேர்த்துவிடுவது தமிழ் மரபு போல!
வெள்ளைக் கத்தரிக்காய் கொஞ்சம் கடுக்கும், “ஏண்டா இதை வாங்கிண்டு வந்தே?” என்று எனக்கு அம்மாவிடம் திட்டும், “தளிகை பண்றப்போ துளியூண்டு சக்கரை போடு, கடுக்காம இருக்கும்” என்று என் அம்மாவுக்கு பாட்டியிடம் டிப்ஸும் கிடைக்கும். திருச்சி புத்தூர் மார்கெட்டில் ‘நாமம்’ கத்தரிக்காய் என்று ஒரு வகை; கத்தரிக்காயில் வெள்ளை கோடுகளுடன் கிடைக்கும்.
திருமண் (நாமம்) போட்ட வடகலை ஐயங்கார்கள் ‘அத்திகள்பே ரார்க்கிறலி வெண்கத் தாரி’ என்று வெள்ளைக் கத்தரியை விலக்கிவைக்க வேண்டும் என்று வேதாந்த தேசிகன் தன்னுடைய ‘ஆகார நியம’த்தில் கூறியுள்ளார்.. அவர் சொன்னது வெண் கத்தரி; ஆனால் இன்று எல்லா வகைக் கத்தரியும் உண்ணத் தக்கதல்ல என்று சிலர் நினைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை எக்பிளாண்ட் என்று கூறுவர். நேற்று தான் இதற்கு விடை கிடைத்தது (பார்க்க படம்).
தினமும் பல வகை காய்கறிகளைப் பார்க்கிறோம். திருச்சி மாம்பழச் சாலையில் ‘ஒட்டு’ மாம்பழம் என்று ஒரு வகை உண்டு. உங்களில் பலர் இந்த ஒட்டுச் செடிகளைப் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் அடுத்த முறை ஏதாவது நர்சரியில் பாருங்கள். இரண்டு செடிகளை லேசாக வெட்டிவிட்டு பாண்டேஜ் மாதிரி கட்டுப்போட்டு ஒட்டிவிடுவார்கள். ஒட்டப்பட்ட இடத்தில் வளரும் செடி இந்த இரண்டு வகையையும் சார்ந்து இருக்கும்.
பல வண்ணங்களில் பூக்கும் போகன்வில்லா; ஒரே செடியில் இரண்டு விதமான வண்ணப் பூக்களுக்கு எல்லாம் இந்த ஒட்டுதான் காரணம். அதே போல முருங்கையில் கூட ஒட்டு உண்டு.
சரி, இப்பொழுது ஒரு புளிய மரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் ஒரு கேரட் செடியை ஒட்ட முடியுமா? உடனே முடியாது என்று சொல்லிவிடுவீர்கள். ஏன் என்றால் இரண்டும் வெவ்வேறு வகை. ஒன்று மரம், மற்றொன்று செடி. ஆனால் மரத்திலிருந்து ஒரு ஜீனை எடுத்து செடியில் புகுத்தலாம். அட அப்படியா? எப்படி என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான உதாரணம் தருகிறேன்.
மின்மினிப் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். ராத்திரி வயல்வெளியில் மினுக் மினுக் என்று அலையும். அமெரிக்க விஞ்ஞானிகள் அந்தப் பூச்சிகளின் ஒரு ஜீனை எடுத்து புகையிலை செடிக்குள் செலுத்தியுள்ளார்கள். பிறகு ஒரு விதமான தண்ணீர் ஊற்றும் போது அந்தச் செடியை ஸ்பெஷலாகப் படம் பிடித்துள்ளார்கள். ‘அவதார்’ படத்தில் தாவரங்களிலிருந்து ஒளி வருவது போல், செடியின் பல திசுக்கள் (tissue) அதில் தெரிந்திருக்கிறது. இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1986. ஆக, இப்படி மரபணுவைச் செடிகளில் செலுத்துவதால் அதன் ஆதார குணம் மாறும் சாத்தியக்கூறு இருக்கிறது.
நாளைக்கே தவளையின் டி.என்.ஏவை தக்காளியில் புகுத்தினால், ரசத்துக்குள் தக்காளி தானாகவே குதித்துக்கொள்ளும் சாத்தியக்கூறு இருக்கிறது!.
மேலும் கட்டுரையைத் தொடர, செல்கள், ஜீன், டி.என்.ஏ, குரோமோசோம் என்று நாம் கேள்விப்பட்ட சில வார்த்தைகளை திரும்பவும் பார்த்துவிடலாம்.
நீங்கள் அடுத்த முறை கண்ணாடி முன் நின்றுகொண்டு உங்களைப் பார்க்கும் பொழுது உங்கள் உடலில், 10 டிரில்லியன் (1000000000000 ) உயிரணுக்களைப் (Cells) பார்க்கிறீர்கள் என்பதை நினைவுவைக்கவும். உங்கள் தசைகள், குடல், முடி, ஈரல் என்று அதில் மொத்தம் 200 வகை. பற்களில் உள்ள எனாமல், நீங்கள் பார்க்கும் கண் லென்ஸ் கூட ஒரு வகை உயிரணு தான்.
உடைந்த எலும்பு சரியாவதும், நம் உடலில் உள்ள பாகங்கள் வளர்வதும் இந்த செல் செய்யும் மாயம் தான். நம் ஒற்றைத் தலைமயிரின் விட்டத்தில் (diameter) பத்தில் ஒரு பாகம் தான் செல்லின் அளவு!, உங்கள் விரல் நுனியில் 2-3 பில்லியன் செல்கள் இருக்கும்!
எல்லா மனிதர்களின் செல்களிலும் டி.என்.ஏ (என்கிற டி ஆக்சிரிபோநூக்லியிக் அமிலம் deoxyribonucleic acid) இருக்கிறது. இது முறுக்கிவிட்ட நூலேணி போல் இருக்கும்; பிறந்தநாள் பார்ட்டியில் இருக்கும் சுருளான ஜிகினா காகிதம் மாதிரி.
இந்த நூலேணிப் படிகளில் விதவிதமான புரோட்டீன்களை எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது. அவை கிட்டத்தட்ட நம்முடைய ரகசியங்கள் என்று சொல்லலாம். இந்த ரகசியத்தைத் தான் ஜீன்(Gene) என்கிறார்கள். முக அமைப்பு, நிறம் போன்ற தகவல்கள் எல்லாம் இந்த ஜீன்களில் தான் இருக்கிறது. எல்லா மனிதர்களின் ஜீன்களும் 98-99% ஒரே மாதிரி தான் இருக்கும். மிச்சம் இருக்கும் 1-2% தான் என்னையும், இதைப் படிக்கும் உங்களையும் வேறுபடுத்துகிறது.
மேலே படத்தில் இருப்பது செல், இதில் நூடுல்ஸ் மாதிரி இருப்பது தான் டி.என்.ஏ. ஒரு முறை பார்த்துவிட்டு மேலே படியுங்கள்.
இந்த முறுக்கிக் கொண்டு இருக்கும் நூலேணியில் கொஞ்சம் ஏறிப் பார்க்கலாம். முதலில் டி.என்.ஏ என்ற கூட்டணு தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் (டூப்ளிகேட் செய்துகொள்ளும்) குணம் பெற்றது. ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி… இப்படிப் பிரதியெடுக்கும். என்று நீங்கள் இப்போது இதை படிக்கும்போது கூட அவை பிரதியெடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன..
நீங்கள் இந்த உலகத்தில் முதலில் ஒரு செல்லாக இருந்தீர்கள், பிறகு இந்த இரட்டிப்பு முறைத் தொடர் பிரதியெடுப்பினால் இன்று ஒரு மனிதனாக ஆகியுள்ளீர்கள். சரி இந்தப் பிரதியெடுப்பினால் எப்படி எனக்கு கண் காது மூக்கு எல்லாம் வந்தது என்று கேட்கிறீர்கள். டி.என்.ஏவில் விதவிதமான புரோட்டீன்கள் எப்படி உண்டாக்குவது என்ற குறிப்பு இருக்கும் என்று பார்த்தோம். கூடவே நம் செல்களில் என்னென்ன ரசாயன மாற்றங்கள் செய்ய வேண்டும், அவை எந்த அளவுக்கு வேண்டும் என்ற தகவல்கள், ஆணைகள் அதில் இருக்கிறது!
டி.என்.ஏவின் அடுத்த படிக்குச் செல்லாலாம்.
இந்தப் படத்தில் என்ன தெரிகிறது?. இரண்டு பக்கங்களிலும் நீல ரிப்பனும் இடையில் வண்ண வண்ணப் படிகளும் தெரிகிறதா? இந்தக் கூட்டமைப்புக்குப் பெயர் ந்யுக்ளியோ-டைடுகள் (nucleotides). படத்தை மற்றொரு முறை கவனியுங்கள், படிகளில் என்னென்ன வண்ணங்கள் இருக்கின்றன?. மஞ்சள், பச்சை, சிகப்பு, ஆரஞ்ச் என நான்கு வண்ணங்கள் இருப்பது தெரியும். இந்த நான்கு வண்ணங்களும் நான்கு வகையானவை. அவை என்னென்ன என்பதும் படத்தில் இருக்கிறது. வசதிக்காக, சுருக்கமாக A, T, C, G என்று வைத்துக்கொள்ளலாம். (மஞ்சள் – அடினைன், பச்சை – தயோமைன், ஆரஞ்ச் – சைடோசைன், சிகப்பு – குவானின் என்று பெயர்கள் ).
ஒவ்வொரு ந்யுக்ளியோடைடும் மூன்று பாகங்கள் கொண்டது – பாஸ்பேட் தொகுதி (phosphate group), சர்க்கரைத் தொகுதி (sugar group) மற்றும் நான்கு வித நைட்ரஜன் அடிப்படையில் ஏதாவது ஒன்றைக் கொண்டது (Nitrogen Base)
நான்கு வித நைட்ரஜன் தான் நாம் பார்க்கும் அந்த நான்கு வண்ண ஏணிப் படிகள். பக்கவாட்டில் நீல நிற ரிப்பன் மாதிரி இருப்பவை சர்க்கரை, பாஸ்பேட் ஆதாரக் கூட்டமைப்பு.
பள்ளியில் படித்த விஷயத்தை திரும்ப ஒரு முறை பார்க்கலாம். H2O என்றால் என்ன? – நீர். அதாவது (2)ஹைட்ரஜனுடன் (1)ஆக்ஸிஜனும் கூட்டு சேர்ந்தால் கிடைப்பது நீரின் மூலக்கூறு (Water Molecule)
படத்தை நன்றாக கவனித்தால், ஒரு மஞ்சள் (அடினைன்) பச்சையுடன் (தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (குவானின்) ஆரஞ்சுடன் (சைடோசைன்) சேருகிறது. இந்த நூலேணியை நடுவில் வெட்டினால் அவை இரண்டாகப் பிரிந்துவிடும். சரியான ஜோடி கிடைக்கும் போது திரும்ப ஒட்டிக்கொள்ளும். யார் உடன் யார் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்ற தகவல் பத்திரமாக அதனுள்ளேயே இருக்கிறது!
மனிதனாக இருந்தாலும், வெண்டைக்காயாக இருந்தாலும் டி.என்.ஏ ஒன்று தான் – அவை தன்னைத் தானே இரட்டிப்பு செய்துகொள்கிறது. தேவையான புரேட்டீன்களை உற்பத்தி செய்கிறது. என்ன விதமான புரோட்டீன் தேவை என்ற தகவல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பல ஜீன்களின் கூட்டுச் சேர்க்கை தான் உயிர். உதாரணமாக சோளத்தில் 2,50,000 விதமான ஜீன்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். டி.என்.ஏ முறுக்கு ஏணியில் எல்லா ஜீன்களும் வரிசையாக டி.என்.ஏ மூலக்கூறுகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மூலக்கூறுகள் பல்வேறு தொகுப்பாக, குரோமோசோம்களாக இருக்கின்றன.
மனிதனின் டி.என்.ஏவை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாம். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஏணி போல அடுக்கி வைத்த புத்தகங்களை பார்த்திருப்பீர்கள். இதே மாதிரி 1000 டெலிபோன் டைரக்டரியை அடுக்கி வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த அளவிற்கு இருக்கும் மனிதனின் ஜீன்கள்! என்ன ஒன்று, அந்த புத்தங்களில் பெயர்களுக்கு பதில் எல்லாம் A,C,T,G என்ற எழுத்து தான் இருக்கும். நமக்கு தலை கால் புரியாது. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கூட்டணுவைக் குறிக்க்கும். இந்த எழுத்தை எல்லாம் 46 பாகங்கங்களாக பிரித்திருக்கிறார்கள். பாகங்களுக்கு பெயர் குரோமோசோம். அப்பாவிடமிருந்து 23; அம்மாவிடமிருந்து இன்னொரு 23!. ஆக மொத்தம் 46. இதில் உங்க அம்மா வழி, அப்பா வழி தாத்தா பாட்டி என்று எல்லாம் கலந்து இருக்கும். எல்லம் பிரதியெடுப்பதின் பலன்!. “அப்படியே மாமாவை உரிச்சு வெச்சிருக்கான்” என்பதன் ரகசியம் இது தான்!
ஒரு செடியில் இருக்கும் செல்லை எடுத்துப் பார்த்தால் இந்த குரோம்சோம் காப்பி அதில் பரவி இருக்கும்.அதே போல மனிதனோ, மிருகமோ, செடியோ உள்ளே சென்று பார்த்தால் எல்லா டி.என்.ஏவும் ஒன்று தான். இதனால் தான் ஒரு தவளையின் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் வெட்டி ஒட்டலாம். எந்த விதமான புரோட்டீன் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற தகவல் அதில் இருக்கும். இந்த மாதிரி இரு வேறு விதமான டி.என்.ஏ சேரும் போது அந்தத் தக்காளியில் என்ன விதமான ரசாயன மாற்றம் வரும் என்று யாரும் அனுமானிக்க முடியாது. (அதுசரி, இப்படிச் செய்தால் அந்தத் தக்காளி வெஜ்ஜா நான்-வெஜ்ஜா?)
தென்னை மர ஓலையை இரண்டாகப் பிரிப்பது மாதிரி டி.என்.ஏ-வைப் பிரிக்கலாம் என்று பார்த்தோம். மிக நுட்பமான மைக்ராஸ்கோப் மூலமும், மைக்ராஸ்கோப் சர்ஜிக்கல் உபகரணம் கொண்டும் இந்த ஜீன்களை இரண்டாக வெட்டி, இன்னொரு ஜீனுடன் சேர்க்கிறார்கள். இதைத் தான் ஜெனட்டிக் எஞ்சினியரிங் என்று சொல்லுகிறார்கள். சுருக்கமாக GE.
எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன். அதற்கு முன் பிளாஸ்மிட் (Plasmid) என்ற ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நூல் ஏணி போல் இல்லாமல் வட்ட வடிவமாக உள்ள டி.என்.ஏ. தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்த ஸ்பெஷல் டி.என்.ஏ. ஒரு டி.என்.ஏவை வெட்டி மற்றொன்றுடன் எப்படி ஒட்ட வேண்டும் என்பதை சமையல் குறிப்பு போலத் தரலாம்.
1. முதலில் பிளாஸ்மிட் டி.என்.ஏவை எடுத்துக்கொண்டு ஒரு பகுதியை வெட்டிஎடுத்துவிடுங்கள்.
2. வெட்டப்பட்ட இடத்தில் வேறு ஒரு டி.என்.ஏவின் பகுதியைப் ஒட்டவைத்துவிடுங்கள்.
3. இந்த ஒட்டப்பட்ட புதிய டி.என்.ஏவை செல்லுக்குள் புகுத்திவிடுங்கள்.
4. புகுத்தப்பட்ட டி.என்.ஏ தன்னைத் தானே பிரதியெடுக்கத் தொடங்கும்.
5. புதிய வகை டி.என்.ஏ தயார்.
பிளாஸ்மிட் டி.என்.ஏவை வெக்டர்(Vector) என்பர். புகுத்தபட்ட டி.என்.ஏவை டோனர் (Donor) என்பர். வெக்டர் என்ன வகையான செல்களோ, அங்கே தான் இந்த மாற்றப்பட்ட டி.என்.ஏவை உற்பத்தி செய்வார்கள்.
உங்கள் வீட்டில் நீங்கள் தான் மார்க்கெட் போய் காய்கறிகளை வாங்குவீர்களா? கத்தரிக்காய் வாங்கும்போது, அதில் பூச்சி இருக்கிறதா என்று பார்த்து வாங்குவீர்கள் தானே? நான் எவ்வளவுதான் பார்த்துப் வாங்கி வந்தாலும், வீட்டில் வந்து அதை வெட்டும்போது, மனைவியிடம் திட்டு நிச்சயம். பல கத்தரிக்காய்கள் உள்ளே சொத்தையாக இருப்பதைப் பார்க்கலாம். இனிமேல் இந்தப் பிரச்சனை இருக்காது. வந்துவிட்டது மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்- BT-Brinjal!
மண்ணிலுள்ள ஒரு வகை நுண்ணுயிரின்(பாக்டீரியா) பெயர் ‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ (Bacillus Thuringiensis – BT) சுருக்கமாக ‘பி.டி’ (BT). இந்த பாக்டீரியாவில் இருக்கும் நச்சுத் தன்மை கொண்ட டி.என்.ஏ, பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது என்று கண்டுபிடித்துள்ளார்கள். முதலில் இதை பருத்திச் செடிகளில் சோதித்துப் பார்த்து, அதில் வெற்றி பெறவே அடுத்தது கத்தரிக்காய் பக்கம் வந்துள்ளார்கள்.
இந்த பி.டி நுண்ணுயிரின் நச்சுத் தன்மையை எடுத்து கத்தரிக்காய்ச் செடிகளிலுள்ள மரபணுக்களில் செலுத்துவதால், கத்தரிக்காய்ச் செடிகள் பூச்சிகளிடமிருந்து தன்னைத் தானே காத்துக்கொள்ளும். மின்மினி பூச்சியிலிருந்து எடுத்த டி.என்.ஏவை புகையிலைச் செடியில் புகுத்தினார்கள் அல்லவா அதே போலத் தான் இதுவும். இதிலிருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு கத்தரிச் செடிகள் சாகுபடி செய்தால் எல்லாக் கத்தரிக்காய்களும் இனி பூச்சியில்லாமல் இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு கத்தரிக்காய் வாங்கலாம். நச்சுத் தன்மை உடைய மரபணுவிற்குப் பெயர் cry1Ac.
இன்னும் கொஞ்ச விஷயம் இருக்கு. ஒரு நட்டும் போல்ட்டும் எப்படி வேலை செய்கிறது? நட்டில் இருக்கும் மரையும் போல்ட்டில் இருக்கும் மரையும் வேறு வேறு மாதிரி இருந்தால் தான் இரண்டும் ஒன்றுசேரும். அதே போல் தான் டி.என்.ஏவிலும். நான்கு வண்ண ஏணியைக் கொஞ்சம் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள் – மஞ்சள் ( A-அடினைன் ) பச்சையுடன் (T-தயோமைன்) சேரும். அதே மாதிரி சிகப்பு (G-குவானின்) ஆரஞ்சுடன் (C-சைடோசைன்) சேருகிறது என்று பார்த்தோம். ஜீன் என்பது இந்த நான்கு A, T, G, C என்ற எழுத்துக்களால் ஆன பெரிய புத்தகம் மாதிரி என்று சொல்லுவார்கள். அதில் இந்த CTTAAG என்ற வரிசை முக்கியமானது. இதை EcoR1 (eco R one) என்று சொல்லுவார்கள். CTTAAG என்ற வரிசையை திருப்பி எழுதினால் GAATTC என்று வரும். இவை இரண்டையும் சேர்ந்த்து எழுதினால் கிடைப்பது ஒரு பாலிண்ட்ரோம்.
மஹாபாரதத்தில் ஜராசந்தன் கதை பார்க்கலாம். ஜராசந்தனுக்கும் பீமனுக்கும் கடுமையான சண்டை. ஜராசந்தனை தென்னை ஓலையை கிழிப்பது போல இரண்டாக கிழித்து போடுகிறான் பீமன். ஆனால் மாயக்காரனான ஜராசந்தன் பிரித்த உடல் இரண்டும் மீண்டும் ஒட்டிக்கொண்டு உயிர் பெற்று விடுகிறான். பீமனுக்கு என்ன செய்வது என்று தெரியாது நிற்கும் போது கண்ணன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து மற்றி போடும் படி பீமனுக்கு சொல்கிறார். அதன் படி பீமன் ஜராசந்தனை கிழித்து மாற்றி போட ஜராசந்தன் அழிகிறான் இப்ப இந்த வரிசையை பாருங்கள்.
C – G
T – A
T – A
A – T
A – T
G – C
இதை இரண்டாக வெட்டி பீமன் ஜராசந்தனை போட்ட மாதிரி போட்டால் மாற்றி போட்டால் நட் போல்ட் போல ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். படத்தில், “புகுத்தப்பட வேண்டிய டி.என்.ஏ” என்ற இடத்தில் cry1Ac என்று போட்டுப் பாருங்கள், எல்லாம் புரியும்!
இன்னும் கொஞ்ச நாளில் ‘மாம்பழத்து வண்டு…’ என்ற பாடலை யாரும் பாட முடியாது. இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு என் மனைவியிடம் காண்பித்தேன். படித்துமுடித்தவுடன்,
படித்துமுடித்தவுடன் “அடுத்த தடவை கத்தரிக்கா வாங்கிண்டு வரும் போது சொத்தையா பார்த்து வாங்கிண்டு வாங்க” என்றாள்.