Tuesday, June 21, 2011

முதலில் 25 லட்சம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன்: 2 வருட 'கேரண்டி'!

தமிழகத்தில் முதல் கட்டமாக 25 லட்சம் குடும்பங்களுக்கு 2 வருட உத்தரவாதத்துடன் கூடிய மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் இலவசமாக வினியோகிக்கப்படவுள்ளன. இவற்றைத் தயாரித்து வழங்குவது குறித்து இவற்றின் தயாரிப்பாளர்களுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தி்ல் ஏழை குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. தேர்தலில் வென்றவுடன் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான உத்தரவில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இத் திட்டம் செப்டம்பர் 15ம் முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து முதற்கட்டமாக 25 லட்சம் மிக்சிகள், 25 லட்சம் கிரைண்டர்கள், 25 லட்சம் மின் விசிறிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மிக்சிகள் வாங்க ரூ.500 கோடியும், கிரைண்டர்கள் வாங்க ரூ.600 கோடியும், மின் விசிறிகள் வாங்க ரூ. 250 கோடியும் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தயாரித்து வழங்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு டெண்டர்களை சமர்பித்துள்ளன. இந்த டெண்டர்கள் ஜூலை 11ம் திறக்கப்பட உள்ளன.

இதற்கிடையே கிரைண்டர், மிக்சி, பேன் தயாரிப்பு நிறுவனங்களுடன் அரசு இன்று ஆலோசனை நடத்தியது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் வீரசண்முகமணி தலைமையிலான அதிகாரிகளும் நிறுவனங்களின் அதிபர்களும் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மிக்சியுடன் 2 ஜார்கள் வழங்கப்பட வேண்டும், இதில் ஒரு ஜார் 1 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், மற்ற ஜார் 400 மில்லி கொள்ளளவு கொண்டதாகவும் இருக்க வேண்டும், இந்த ஜார்கள் தரமான ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட வேண்டும், மிக்சியின் திறன் 550 வாட் இருக்க வேண்டும் என மிக்சியின் தரத்தை உறுதிப்படுத்த தமிழக அரசு விதிமுறைகளை முன் வைத்துள்ளது.

அதே போல கிரைண்டர் டேபிள் டாப் வகையிலானதாக இருக்க வேண்டும், 2 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகவும், டிரம் தரமான ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், இதன் திறன் 150 வாட் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

மின் விசிறி டேபிள்பேனாக வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் 2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

இன்றைய கூட்டத்தில் மிக்சி மற்றும் மின் விசிறிக்கு டெல்லி, மும்பை, குர்காவ்ன் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். 
கிரைண்டருக்கு கோவை பகுதியைச் சேர்ந்த நிறுவன அதிபர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

இலவசம்..புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன:

இந் நிலையில் கிரைண்டர், மிக்சி, மின் விசிறி ஆகியவை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க வட்ட வழங்கல் அதிகாரிகள் அலுவலகம், மண்டல அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 2,100 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து ரேஷன் கார்டுகள் வழங்குவதை முறைப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவை ரேசன் கார்டுகள் உள்ள 1 கோடியே 83 லட்சம் குடும்பத்தினருக்கு கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment