டெல்லி: தன்னுடைய அலுவலகத்தில் ரகசிய மைக்குகள், கேமராக்கள் பொறுத்தப்பட்டு உளவு பார்க்கப்பட்டு வருவதாகவும், அது குறித்து ரகசிய விசாரணைக்கு உத்தரவிடுமாறும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தியில், கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியிருந்தார். அதில், எனது அலுவலகத்தை உளவு பார்க்க முயற்சி நடந்துள்ளது. 16 இடங்களில் கேமரா அல்லது மைக்குகளை ஒட்ட முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதைச் செய்தது யார் என்பது குறித்து ரகசியமாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
டெல்லி நாடாளுமன்ற கட்டடத்தின் நார்த் பிளாக்கில் உள்ள நிதியமைச்சக பிரிவில் உள்ள பிரணாப் அமரும் அலுவலக அறை, அவரது தனி உதவியாளரின் சேம்பர், அவரது செயலாளரின் அறை, 2 கான்பரன்ஸ் அறைகள் ஆகியவற்றி்ல் உளவு முயற்சி நடந்துள்ளதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் இந்த 16 இடங்களிலும் மைக்ரோபோன்களோ அல்லது கேமராக்களோ சிக்கவில்லை என்றும், அவற்றைப் பொறுத்த தடவப்பட்டிருந்த 'கம்' தான் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பிரணாப் தனது கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி நிதித்துறை அமைச்சகத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலெக்ட்ரானிக் உளவு பார்க்கும் முயற்சிகள் ஏதும் நடக்கிறதா என்பது குறித்து தனியார் நிறுவனத்தின் உதவியோடு மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு நடத்தப்பட்டபோது தான் அந்த அலுவலகத்தை உளவு பார்க்க முயற்சிகள் நடந்தது தெரியவந்ததாகவும், இதையடுத்தே பிரணாப் முகர்ஜி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதாகவும் தெரிகிறது.
இந் நிலையில் இந்த செய்தி குறித்து இன்று நிருபர்களிடம் பேசிய பிரணாப், இது குறித்து மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. முழு அளவில் எனது அலுவலகத்தில் சோதனை நடத்திவிட்டு, எந்த வகையிலும் அலுவலகம் உளவு பார்க்கப்படவில்லை என்று கூறிவிட்டது என்றார்.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் கூறுகையில், கம் ஒட்டப்பட்டிருந்த இடங்களில் சிறிய துளைகளும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த இடங்களில் கேமராக்கள் அல்லது ரகசிய மைக்ரோபோன்கள் வைக்கப்பட்டு, பின்னர் அவை அகற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றனர்.
|
No comments:
Post a Comment