கேரளாவில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க குறைந்த மின்சாரம் மூலம் அதிகளவில் வெளிச்சம் தரும் சிஎப்எல் பல்புகள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
களியக்காவிளை அருகேயுள்ள கேரள மாநிலப் பகுதியான பாறசாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 4 இடங்களில் பாறசாலை மின்வாரிய அலுவலகம் மூலம் தற்போது சிஎப்எல் பல்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொதுமக்களிடம் இருந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 60 வாட்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட திறனுள்ள பல்புகளில் இரண்டைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக 20 வாட்ஸ் அளவிலான சிஎப்எல் பல்புகள் இரண்டு இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் கேரளத்தில் நாள் ஒன்றுக்கு பல நூறு மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு பெருமளவு குறையும் என்றும் கேரள மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கேரளத்தின் பல பகுதிகளில் தெருவிளக்குகளில் சூரிய சக்தி விளக்குகளைப் பொருத்தியும் மின் சிக்கனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரக் கிராமங்களிலும், பல்வேறு ஊராட்சிப் பகுதிகளிலும் இந்த சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகளின் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால் பல விளக்குகள் தற்போது இயங்குவதில்லை.
தமிழகத்தில் 2.7 கோடி மின்நுகர்வோர்கள் உள்ளனர். ஒரு நாள் மின்தேவை 10,500 மெகாவாட்டாக உள்ளது. ஆனால், தேவையான அளவுக்கு மின் உற்பத்தி இல்லாததால் வரும் கோடையில் கடந்த ஆண்டுகளைப் போல, மேலும் சில மணிநேரம் மின்தடை அதிகரிக்கப்படக்கூடும்.
கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்பதால், தற்போது அமலில் உள்ள இரண்டு மணி நேர மின்வெட்டு மே மாதம் வரை தொடரும் என மாநில மின்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் உள்பட தமிழக மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, மக்கள் நலனில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது.
ஆனால், குறைந்த அளவு மின்சாரம் மூலம் அதிகளவில் வெளிச்சம் தரும் சிஎப்எல் மின் விளக்குகளை அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கி, மின்சிக்கனத்தில் பிற மாநிலங்களுக்கு கேரள மாநில அரசு வழிகாட்டியுள்ளது.
|
No comments:
Post a Comment