அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் படி உடலின் எந்த ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனுடைய வெளிப்பாடு முகத்தில்தான் தெரியவரும்.
ஒரு சில கைதேர்ந்த மருத்துவர்களும், ஆன்மீக சான்றோர்களும் ஒரு மனிதனின் முகத்தை வைத்தே அவன் உடலுக்கு என்ன பாதிப்பு, மனதிற்கு என்ன பாதிப்பு என்பதை அறிந்துகொள்வார்கள்.
இன்றைய சூழ்நிலையில் அவசரம் என்ற ஒரு நோய் நம்மை ஆட்டிப்படைக்கிறது. மனதிற்கு ஏற்றவாறு உடலும் ஒத்துழைக்க வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இதனால் இவர்களது உடல்நிலை பாதிக்கப்படுகிறது. 40 வயதிலேயே 60 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என பல நோய்களால் அவதியுறுகின்றனர்.
முகம் பிரகாசமாகத் தோன்றினால்தான் அவன் ஆரோக்கியமுள்ள மனிதனாக இருக்க முடியும். முகத்தையும், சருமத்தையும் பாதுகாக்க இதோ உங்களுக்கு சில எளிய இயற்கை மருத்துவ ஆலோசனைகள்.
முகம் பளபளக்க:
குளிர்ந்த நீர் - 1/2 டம்ளர்
பசும் பால் - 50 மி.லி.
இரண்டையும் ஒன்றாக கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் பூசவும். அரைமணி நேரம் சென்றதும் முகத்தை நன்றாக மென்மையாக கழுவவும். சோப், கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. பருத்தியினால் ஆன துண்டை வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளக்கும்.
முகத்தில் தோன்றும் கருமை நிறம் நீங்க:
முகத்தில் ஆங்காங்கே கருமை படர்ந்து இருக்கும். இதனை மங்கு என்பார்கள். இந்த கருமை நிறத்தை போக்க,
பசும்பால் - 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.
முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்க:
பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க குப்பைமேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் அரைத்து இரவில் படுக்கைக்கு செல்லும்முன் முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
கண்கள் குளிர்ச்சியடைய:
உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.
தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.
தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும்.
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.
இளநரை மாற:
சிலருக்கு இளம் வயதிலேயே ஆங்காங்கே வெள்ளை முடி தோன்றுவது இயல்பாகிவிட்டது. இதற்கு நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும்.
உடல் பருமன் குறைய:
உணவில் புளிப்பான பதார்த்தங்களான புளித்த தயிர், புளிக்குழம்பு, தக்காளி, எலுமிச்சம் பழம், புளித்த திராட்சை போன்றவற்றை தவிர்த்து வந்தால் நாளடைவில் உடலில் இருக்கும் தேவையற்ற சதை நீங்கிவிடும். உடல் பருமன் குறையும்.