செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், 'ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?' என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
* கறுப்பாக இருந்தாலும் 'களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது. முகம் களையாக இருப்பதும் அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாக-வசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. அந்தவகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்
.* பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.
* கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
* வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும். அத்துடன், புன்சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட, கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.
* வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.
* சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கறுப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். பிறக்கும்போதே கறுப்பானவர்கள் ஒரு சில முறைகளால் லேசாக சிவப்பாக ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம்.
* சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் - அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.
* கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.
நீங்களும் கறுப்பான தேகம் கொண்டவர் என்றால் - உங்களிடம் அதுபற்றிய தாழ்வு மனப்பான்மை இருந்தால் இன்றே மறந்துவிடுங்கள். கறுப்பே சிறந்த அழகு
|
No comments:
Post a Comment