தமிழகத்தின் நேர்மையான சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுள் உமாசங்கரும் ஒருவர் உமாசங்கரின் நேர்மையை தமிழகத்தில் எல்லா பத்திரிகைகளும் பல சமயங்களில் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆட்சியாளர்களின் அடிவருடியாக இல்லாமல் மக்களுக்காக அரசுப் பதவியை முழுமையாக பயன்படுத்த நினைத்தவர்களின் உமாசங்கரும் ஒருவர். கடந்த கால ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் அஞ்சாமல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மேலிடத்தின் எதிர்ப்பை சமாதித்தவர்.
இப்போது கருணாநிதி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் தினகரன் நாழிதள் வெளியிட்ட கருத்துக்கணிப்பால் கருணாநிதி குடும்பத்தினருக்குள் பூசல் வெடித்தது. கலாநிதிமாறன் குடும்பத்தினருக்கு எதிராக மதுரையில் போர்க்கொடி தூக்கிய மு.க.அழகிரி தினகரன் அலுவலத்தை தீயிட்டுக் கொளுத்தி மூன்று ஊழியர்களையும் கொலை செய்தார். ஆனால் அது சாதாரண கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.
கொலையாளிகள் அடுத்த சில மாதங்களிலேயே விடுதலையாகிவிட்டார்கள். பின்னர் பூசல்கள் சரி செய்யப்பட்டு மறுபடியும் கருணாநிதி குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது. பின்னர் கொல்லபப்ட்ட மூன்று ஊழியர்கள் குடும்பம் உயிரை இழந்து வாட விடுதலை செய்யப்பட்ட கொலையாளிகளுக்கு மதுரை மாவட்ட விவாசயத்துறையில் வாரியப் பதவியும் கட்சிப்பதவியும் வழங்கப்பட்டு இப்போது அந்த அரசியல் ரௌடிகள் அரசியல் வாதிகளாக மக்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இது கருணாநிதி குடும்ப வாரிசு அரசியல், சர்வாதிகார ஆட்சிக்கு ஒரு சின்ன எடுத்துக் காட்டு.
இந்நிலையில் கருணாநிதி குடும்பத்திலிருந்து மாறன் சகோதர்கள் பிரிந்ததும் சொத்து பங்கிடப்பட்டு எல்லோருக்கும் சேர வேண்டிய பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டதோடு திமுகவுக்குச் சொந்தமான அறிவாலயத்திலிருந்தும் மாறன் சகோதர்களுக்குச் சொந்தமான சன் டிவி வெளியேறியது. இதுவரை தனக்கு ஆதர்வாக இருந்த சன் டிவி கை மீறிச் செல்கிறதே என்று கவலையடைந்த கருணாநிதி சன் தொலைக்காட்சியை முடக்க அரசு கேபிள் நிறுவனம் தொடங்கபப்ட போவதாக அதிகார பூர்வ ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.
அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு பொறுப்பதிகாரியாக உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நியமிக்கப்பட்டார். குடும்பப் பகையானாலும் அரசு கேபிள் கார்ப்பரேஷனை எல்லா தரப்பினரும் ஆதரித்தனர். அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட உமாசங்கர் இயல்பிலேயே நேர்மையான அதிகாரி என்பதால் அரசு கேபிள் நிறுவனத்தை முடக்க நினைத்த சன் குழுமத்திற்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் ( மாறன் சகோதர்களுக்குச் சொந்தமானது) நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தார். இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாசங்கர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம்.
-தமிழ்நாடு-
பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 1991-ம் ஆண்டு பதவியேற்றேன். பதவி ஏற்றது முதல் எந்தவித புகாருக்கும் ஆளாகாமல் நேர்மையாகப் பணியாற்றி வருகிறேன். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக 2008, அக்டோபர் 30-ம் தேதி நியமிக்கப்பட்டேன். சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் டி.வி. நிறுவனம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை முடக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டது.இந்த முயற்சிகளில் இருந்து அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டேன். சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்.சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்குவதுடன், அமைச்சர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தேன். இதையடுத்து, சிறுசேமிப்புகள் துறை ஆணையராக நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டேன். இப்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயலிழந்து காணப்படுகிறது.சுமங்கலி கேபிள் நிறுவனத்தை தேசியமயமாக்க வேண்டும் என்ற பரிந்துரைத்த காரணத்தால், என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
சட்ட விரோதமான இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தடை விதித்தது.இதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதால் அவ்வப்போது எனது சொத்து விவரங்களை அரசிடம் சமர்ப்பித்து வருகிறேன். என் மீது விசாரணை நடத்துவதற்கு சட்டப்படி அனுமதியும் பெறப்படவில்லை.நேர்மையாகவும், பொதுமக்களுக்கு நன்மை தரும் வகையிலும் செயல்பட்டதால் என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஊழல்வாதிகளையும், அதிகாரம் மிக்கவர்களையும் காப்பாற்றும் அரசு, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததால் என்னை பழிவாங்குகிறது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக போதுமான ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், விசாரணை என்ற பெயரில் என் மீதும், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மீது போலீஸôரை ஏவி விட முடியாது. ” என்று தனது மனுவில் கூறியுள்ளார் உமாசங்கர்.
கருணாநிதி குடும்ப நலனுக்காக பழி வாங்கப்படுகிறார் உமாசங்கர் .
அரசு கேபிள் கார்ப்பரேஷன் என்பது ஒரு அரசு நிறுவனம் அந்த நிறுவனத்திற்கு தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்ற உமாசங்கர் ஒரு அரசு ஊழியர். அரசு நிறுவனத்தை முடக்க நினைக்கும் தனியார் முதலாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்த நினைத்த உமாசங்கர் மக்களுக்கு உண்மையாக இருந்த நேர்மையான அதிகாரி.
இந்த அதிகாரிதான் இன்று கருணாநிதி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். கருணாநிதி மாறன் குடும்பத்தினருக்கிடையிலான வாரிசு அதிகாரப் போட்டியால் உருவான பிளவு ஒரு கட்டத்தில் சரி செய்யப்பட்டது. மீண்டும் திமுகவிலும் குடும்பத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாறன் சகோதர்களுக்கு மீண்டும் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியும் கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டது.
மீண்டும் தன் குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டதாலும் தானும் கலைஞர் டிவி என்னும் ஒரு தனியார் தொலைக்காட்சிக் குழுமத்தை துவங்கி விட்டதாலும் அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கு அவசியமில்லாமல் போக கருணாநிதி துவங்கிய அரசு கேபிள் கார்ப்பரேஷனை அவரே குப்பையில் தூக்கிப் போட்டார்.ஆனால் அரசு கேபிள் கார்ப்பரேஷனின் அதிகாரியாக செயல்பட்டு நேர்மையாக நடவடிக்கைகள் எடுத்த உமசாங்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருகிறது மாறனின் குடும்பம்.
கருணாநிதியும் இதைக் கண்டு கொள்ளாத நிலையில் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கருணாநிதியும் அவரது குடும்ப ஊடகங்களும் தன்னை பழிவாங்கிடும் என்னும் அச்சத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார் உமாசங்கர். கருணாநிதியின் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் பலியான இந்த அதிகாரிக்கு நீதி கிடைக்குமா?
|