Wednesday, December 7, 2011

உதவியாளர் சுருட்டிய கோடிகள்: ‘‘ராஜாத்தி வீட்டில் கால் வைக்க மாட்டேன்!’’ உள்ளம் குமுறிய கலைஞர்


‘‘தி.மு.கழகம் ஏழைகளுடைய இயக்கம். இந்த மேடையில் எனக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் பொன்னாலான வரவேற்பு பத்திரங்களை தந்தார் அமைச்சர் பொன்முடி. நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அது வெறும் தங்கமாக இருந்தால், வாங்கிய வேகத்திலேயே வீசியிருப்பேன். அதில், பெரியார் உருவமும் அண்ணா உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன. 

தங்கம் என்று எறிந்தால், தங்கத்தைவிட நாம் அதிகமாக நேசித்த சிங்கங்கள் பெரியாரையும், அண்ணாவையும் தூக்கி எறிந்ததாக ஆகிவிடும்’’& இது கலைஞரின் பேச்சு. எங்கே? மார்ச் 7-&ம் தேதி விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில்! அதே மேடையில், ‘‘நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, அப்படித்தான் மக்களும் நம்மைப் பார்த்து நடந்து கொள்வார்கள். நாம் ஏழ்மையிலிருந்து விடுபடவேண்டும் என்று எண்ணுகிறோம் என்றால், அதே நேரத்தில் அந்த மக்களையும் ஏழ்மையிலிருந்து விடுவிப்பவர்களாக இருக்கவேண்டும். அந்த சபதத்தை மேற்கொள்ள வேண்டும்.
இதைப் பற்றி அண்ணா ஒரு திரைப்படத்தில் வசனம் எழுதியிருந்தார். ‘பணம், பணம் என்று அலைகிறாயே, உன்னுடைய வீட்டிலே என்ன அரிசி? வெள்ளியால் அரிசியா? மரகதத்தால் குழம்பா? ஏழைக்குக் கிடைக்கிற அந்த அரிசிதான் பணக்காரர்களுக்கும். தங்கத்தை உட்கொண்டால் ஜீரணமாகாது. வைரத்தை சாப்பிட்டால், மறுநாள் ஆளே இருக்கமாட்டான். தங்கம், வைரம் எல்லாம் கண்ணுக்கு, காட்சிக்கு அதிசயம் தருவது. வாழ்க்கைக்கு உதவாது. உண்மையான வாழ்க்கை, மக்களை வாழ வைக்கின்ற மனத்திண்மை-யான வாழ்க்கை. பணத்தை, பொருளை, வைரத்தை, நகை நட்டுகளை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்பார் அண்ணா. அண்ணாவைப்போல, ஒரு வேட்டி, ஒரு துண்டோடு வாழ்ந்தாரே. சட்டையைக் கூட மாட்டத் தெரியாமல் பொத்தானைக்கூட மாத்திப் போட்டுக் கொள்வாரே அப்படிப்பட்ட எளிமைதான் நமக்குத் தேவை’’ என்று விளாசியிருக்கிறார் கலைஞர். கலைஞரின் பேச்சு, பொன்முடியை ரொம்பவே காயப்படுத்தி இருக்குமே என்று கட்சிக்காரர்கள் வருத்தப்பட்டார்கள். அப்படி வருத்தப்பட்டாரா பொன்முடி என்று நாமும் அப்பாவியாக விசாரித்தோம். 

கலைஞரின் பேச்சு சில நேரங்களில் பூடகமாக இருக்கும். சில விஷயங்களை பொருத்திப் பார்த்தால்தான் புரியும். கடந்த பிப்.14&ம் தேதி சங்கத் தமிழ் பேரவை நடத்திய விழாவில்கூட, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கலைஞர் சிலையை, கலைஞருக்கே பரிசளித்தார் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன். அச்சிலை, இன்றும் கோபாலபுரம் வீட்டில் லிஃப்ட் அருகே அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அப்படியானால், ஜெகத்துக்கு ஒரு நியாயம், பொன்முடிக்கு ஒரு நியாயம் என்று இருக்க முடியாது. ஆக, விழுப்புரத்தில் அவர் பேசியது, பொன்முடிக்காக அல்ல. 

தனது துணைவியார் ராஜாத்தியம்மாளை கண்டிக்கும் விதத்திலேயே கலைஞர் அப்படிப் பேசியிருக்கிறார் என்று அறிவாலய வட்டாரத்தில் சொல்லியபோதுதான், அந்த விவரங்கள், விபரீதங்கள் தெரிய வந்தன. ராஜாத்தியம்மாளுடன் லேசான மனவருத்தம் என்று கடந்த இதழிலேயே குறிப்பிட்டிருந்தோம். அதாவது பிப்.28-ம் தேதியிலிருந்து, ராஜாத்தியம்மாள் வசிக்கும் சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு கலைஞர் செல்லவில்லை. கோபாலபுரத்திலேயே இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன் பின்னணி அன்றைய நிலவரப்படி பெரிய அளவில் யாருக்குமே தெரியவில்லை.

ஆனால், விழுப்புரம் பேச்சு, குடும்பத்தில் விவகாரமாகிப் போச்சு என்று கட்சிக்காரர்கள் முணுமுணுத்த போதுதான், அத்தனை விவரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழுந்தன.

ராஜாத்தியம்மாள் பெயரைச் சொல்லி அவரது வீட்டில் இருக்கும் டெலிபோன் ஆபரேட்டர் சரவணன், ஆடிட்டர் ரத்தினம் இவர்கள் பல கட்டப்பஞ்சாயத்து, நில விவகாரம், பணி மாறுதல்கள், கட்டடங்களை வாங்கி கைமாற்றுவதில் ஈடுபடுகிறார்கள் என்று அரசல் புரசலாக கலைஞரின் காதுக்கு வந்துவிட்டது. இதுதான் ராஜாத்தியம்மாளுடன் கலைஞருக்கு வந்த முதல் மோதல். சமீபத்தில் கோவை செல்வதாக கலைஞரிடம் சொல்லிவிட்டு சென்ற ராஜாத்தி, அங்கு செல்லாமல் திருச்சிக்கு சென்றாராம். 

அப்போது அவருடன் சென்ற ஆடிட்டர் சீனிவாசன் ரத்தினம் மூலமாக நடந்தேறிய சில சொத்து பரிமாற்றங்களைக் கேள்விப்பட்டு கோபம் காட்டி இருக்கிறார் கலைஞர். இதையடுத்துதான், ‘அவனுங்க, இங்க இருக்கற வரைக்கும் நான் வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு கிளம்பியவர்தான் கலைஞர் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தினர். 

அந்த இரண்டு பேருக்காகவா ராஜாத்தியம்மாளிடம் சண்டை போட்டார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்தக் கேள்வியை, நமக்குத் தெரிந்த தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரிடம் முன் வைத்தோம்.

‘‘எதைச் சொல்வது? எதை விடுவது? கலைஞர், தனது குடும்பத்தில் நடக்கும் பதவிப் போட்டியை ரசிக்கவில்லை. இந்த நேரத்தில் சி.ஐ.டி. காலனியின் பெயரைச் சொல்லி பல கோடிகள் மதிப்பிலான நிலங்களை வாங்கிப் போட்ட விவகாரம் சுற்றிச் சுற்றி வந்தது.

குறிப்பாக, சி.ஐ.டி. காலனி வீட்டில் வேலை செய்யும் சரவணன், ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமானதாகச் சொல்லப்படும் ‘வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ்’ என்ற நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பதாக விசிட்டிங் கார்டு அடித்து வைத்திருக்கிறார். அந்த அடையாளத்துடன் பெரிய அதிகாரிகளை அணுகி சாதித்த காரியங்கள், அவரது பெயரில் இருக்கும் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பற்றிய அத்தனை விவரங்களும் கலைஞரிடம் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கொடுத்தவர் மிக முக்கியமான அதிகாரி. இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரித்து ஆதாரத்துடன் அறிக்கை தருமாறு, அவருக்கு உத்தரவிட்டிருந்ததே கலைஞர்தான்.

அந்த அறிக்கையில் கிடைத்த தகவல்களை கண்டு அதிர்ச்சியடைந்தார் கலைஞர். ‘ராஜாத்தியம்மாளின் பினாமி’ என்று கூறிக்கொண்டு சரவணன் நடத்திய விவகாரங்கள் ரொம்பவே அவருக்கு ஆத்திரமூட்டியிருக்கிறது. குறிப்பாக, சரவணன் தொடர்பாக பெரிய இடத்து தொழிலதிபர் ஒருவர் நேரடியாக கலைஞரிடமும், துணை முதல்வரிடமும் புகார் அளித்துவிட்டார். அதுதான் சரவணன் விஷயத்திற்கு பிள்ளையார் சுழி.

கிருஷ்ணா ரெட்டி என்பவர், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் 33 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்க ஒப்பந்தம் போட்டார். அந்த நேரத்தில், கிண்டியில் தனியார் நிறுவனத்தை நடத்திய முஸ்லிம் பிரமுகர், குரோம்பேட்டை நிலத்தை இரவோடு இரவாக ஆக்கிமிரத்துக் கொண்டார். இது தொடர்பாக, கிருஷ்ணா ரெட்டி புறநகர் போலீஸில் புகார் கொடுக்க, அங்கே சரவணனும், ஆடிட்டர் சீனிவாசன் ரத்தினமும் வந்தனர்.

‘இது ராஜாத்தியம்மாளின் இடம். இங்கே யாரும் தலையிட வேண்டாம்’ என்று போலீஸுக்கு சொல்ல, சத்தம் போடாமல் போலீஸார் ஒதுங்கிக் கொண்டனர். இந்த நேரத்தில், அந்த நிலத்தை வங்கி ஏலத்திலிருந்து 15 லட்ச ரூபாய்க்கு எடுத்துவிட்டதாக சரவணன், கிருஷ்ணா ரெட்டியிடம் தெரிவிக்க... பிரச்னை விஸ்வரூபமாகிவிட்டது. இந்த இடத்தைத் திரும்பத் தரவேண்டும் என்றால், பத்துக் கோடி ரூபாய் வேண்டும் என்று சரவணன் பேரம் பேசி, முன் பணமாக 50 லட்ச ரூபாய் வாங்கிவிட்டதாக கிருஷ்ணா ரெட்டி புகார் அனுப்பிவிட்டார்.

அடுத்து, வேலூரில் இருக்கும் தனியார் பல்கலைக்கழகத்திற்கு அரசு நிலம் ஒப்படைத்த விவகாரம் முடிந்ததும், அப்பல்கலைக்கழகத்தினருக்கு போன் செய்து ‘அம்மா 15 கோடி ரூபாய் கேட்கிறார்கள்’ என்று சரவணன் சொல்ல, அதுவும் கலைஞர் காதுக்குப் போய்விட்டது.

இதன் பின்புதான் கலைஞர் கடும் கோபமானார். இது தொடர்பாக பிப்.28-ம் தேதி ராஜாத்தியம்மாளிடம் கொஞ்சம் கடுமையாகவே விசாரித்திருக்கிறார். ‘உன் பெயரைச் சொல்லி சரவணன், பினாமி போல நடந்துகொள்கிறான். அவனை வீட்டை விட்டு துரத்து’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டார் கலைஞர். இது கோபாலபுரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவே தெரியாது. 

மார்ச் 2&ம் தேதியன்று பத்திரிகையாளர் சோலை எழுதிய ‘ஸ்டாலின்’ நூல் வெளியீட்டு விழா முடிந்த இரவுதான், கோபாலபுரத்தில் உள்ளவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. அன்று இரவு திருச்சிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்படத் தயாராக இருந்தார் கலைஞர். அப்போது, கோபாலபுரத்துக்குச் சென்ற கனிமொழி, அழுதபடியே சி.ஐ.டி. காலனிக்கு வந்துவிட்டுச் செல்லுமாறு கூப்பிட்டபோதுதான், ஏதோ நடந்திருக்கிறது என்பது கட்சி சீனியர்களுக்குத் தெரிந்தது. அன்று இரவு சில சீனியர் சகாக்களிடம் கலைஞர் சொன்ன வார்த்தை, ‘‘அந்த வீட்டில் கால் வைக்க மாட்டேன்’ என்பதுதான்’’ என்றார் அந்தக் கட்சி நிர்வாகி.

இது போதாதா நமக்கு? அதற்கு மேல் என்ன நடந்தது என்று இங்கேயும் அங்கேயும் பேசிப் பேசி வாங்கிய தகவல்கள் அனைத்தும் கனன்று கொண்டிருக்கும் நெருப்பாகவே இருக்கிறது. அதை நீரை ஊற்றி இப்போதைக்கு அணைக்கவே முடியாது போலிருக்கிறது.

தனது மனைவியின் பெயரைச் சொல்லி, பல அதிகாரிகளையும் தொழிலதிபர்களையும் மிரட்டி காரியங்கள் சாதித்திருப்பதையும், அந்த நபருக்குத் தன் உறவுகளே ஊக்கம் கொடுத்ததையும் கண்டித்து தான் விழுப்புரத்தில் விளாசித் தள்ளியிருப்பதும் தெரிந்தது.

சி.ஐ.டி.காலனியின் பினாமி என்று சொல்லிக்கொண்ட சரவணன், முதலில் அந்த வீட்டின் டெலிபோன் ஆபரேட்டராகப் பணியில் சேர்ந்தவர். பின்பு, ஆடிட்டர் சீனிவாச ரத்தினத்துடன் சேர்ந்து ராஜாத்தியம்மாளுக்குத் தெரியாமல் பல வேலைகளைச் செய்துகொண்டு பணம், வீடு, நிலம் என்று வாரி குவித்துவிட்டதாக, உளவுத்துறை கண்டுபிடித்து விலாவாரியாக ஆதாரங்களுடன் கொடுத்த விஷயத்தைப் பார்த்து ராஜாத்தியம்மாளே கொந்தளித்துவிட்டாராம். தனது பெயரைச் சொல்லி மோசடி செய்ததாகச் சொல்லப்படும் சரவணனை, ராஜாத்தியம்மாள் அனுப்பிவிட்டார் என்று சி.ஐ.டி. காலனி வட்டாரம் சொல்கிறது.

சரவணன் மீது மட்டும் 130 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளதாம். எந்தச் சொத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை. அத்தனையும் ‘பவர்’ அதிகாரம் மட்டுமே சரவணன் பெயரில் எழுதித் தரப்பட்டிருக்கிறது. இதுதவிர, கலைஞர் கைது செய்யப்பட்ட போது, முரசொலி மாறனிடம் அடாவடியாக நடந்து கொண்ட போலீஸ் அதிகாரி, தற்போது கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கிறார். ஐ.ஜி.யாக இருந்த அவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு தரப்பட்டது. அதற்கு 50 லகரம் வாங்கப்பட்டிருக்கிறது. அவரது பதவி உயர்வை தடுக்காமல் இருக்கவும், அவருக்கு நல்ல பதவி வாங்கித் தருவதாகவும் சொல்லி, அப்பணம் கைமாறி இருக்கிறது.

உள்ளபடியே, அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், ஏற்கெனவே அவர் டம்மியாக இருக்கும் அதே இடத்தில் அவரை நியமித்திருந்தார்கள். இதில் கொதித்துப் போன அந்த அதிகாரி, தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாகப் புலம்ப, இந்தச் செய்தியும் கலைஞரின் காதுக்கு வந்திருக்கிறது. இதில் ராஜாத்தியம்மாள் பெயரைச் சொல்லி, அவரது ஆட்களில் ஒருவர் பலன் அடைந்திருப்பதை உளவுத்துறையின் அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

இப்படி, பல விவகாரங்களை அலசி ஆராய்ந்திருக்கும் அந்த அறிக்கையில் இருக்கும் சில விவகாரங்கள் கலைஞரை உச்சபட்ச கோபத்தில் தள்ளிவிட்டிருப்பதாக அறிவாலய வட்டாரம் சொல்கிறது. அவரிடம் நெருங்கவே எல்லோரும் அச்சப்படுகிறார்கள். தனது பாரத்தை இறக்கி வைக்க முடியாமல் தவித்து வருகிறார் கலைஞர் என்கிறது அறிவாலய வட்டாரம்.

கலைஞரை நெருங்கி இருந்தவர்கள் ஆற்காட்டாரும், துரைமுருகனும்தான். இம் மாதிரி இக்கட்டான நேரங்களில், அது குடும்பப் பிரச்னையாக இருந்தாலும் ஆற்காட்டார் துணிந்து கலைஞரிடம் பேசி, அவரது மனக்குறையை ஆற்றிவிடுவார். சில நேரங்களில் குடும்பத்-தினரிடையேயும் பேசி சரிசெய்வார். அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால், அந்தச் செயலை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பவர் துரைமுருகன்தான். அவரும் கலைஞரிடம் பழைய வேகத்தில் பேசும் நிலையில் இல்லை என்கிறார்கள்.

சரவணன் செய்த விஷயங்களால், ராஜாத்தியம்மாளின் மீது கோபப்பட்டு கலைஞர் சி.ஐ.டி. காலனிக்குச் சென்று இரண்டு வாரங்கள் நெருங்கப் போகிறது. இதுவரை கலைஞர் அப்படி இருந்ததே இல்லையாம். குறைந்தபட்சம் இரண்டு, மூன்று நாட்கள் சி.ஐ.டி. காலனிக்குப் போகாமல் இருந்திருக்கிறார் கலைஞர். ‘அவரைப் பார்க்க வருகிறேன்’ என்று ராஜாத்தியம்மாள் கிளம்பினால், அடுத்த சில மணி நேரத்தில், கலைஞரே அங்கு சென்றுவிடுவாராம்.

ஆனால், இம்முறை கலைஞரின் உறுதியும், விடாப்பிடியும் கடுமையாகவே இருக்கிறது. சி.ஐ.டி. காலனியிலிருந்து எந்த உதவி கேட்டு வந்தாலும், தனக்குத் தெரியாமல் செய்ய வேண்டாம் என்று தனது செயலாளர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் கலைஞர். அடுத்து, தனது பாதுகாவலர்களில் மிக முக்கியமானவரான பாண்டியனையும் அங்கே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம்விட, சி.ஐ.டி. காலனிக்கு போலீஸ் பாதுகாப்பையும் குறைத்துவிடுமாறு கலைஞர் கூறியிருப்பதுதான் தி.மு.க.வின் முக்கியத் தலைகளை புருவம் உயரச் செய்திருக்கிறது.

இது தொடர்பாக சி.ஐ.டி. காலனி வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. புதிய சட்டமன்ற வளாகம் கட்டி, திறப்பதில் கலைஞர் பிசியாக இருக்கிறார். மற்றபடி பத்திரிகைகளில் வரும் செய்திகள்போல எதுவுமே இல்லை. அப்படியே மனஸ்தாபம் இருந்தாலும். கலைஞர் எப்போதும் குடும்ப உறவுகளை கட்டிக்காப்பார்’’ என்று நம்பிக்கை வார்த்தைகள் வருகின்றன.

புதிய சட்டமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் ராஜாத்தியம்மாள் கலந்துகொள்வாரா? என்பதுதான் அடுத்த கேள்வி. அப்போது எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கத்தானே போகிறது!





காத்திருக்கும் கனிமொழி!
விமர்சனங்களை தடுக்கும் வகையில் தானே கவனமாகச் செயல்பட்டுவரும் நிலையில், இப்படி வில்லங்கத் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, பல கோடிகள் சுருட்ட சரவணனை அனுமதித்த கோபம் கலைஞருக்கு. தன்னை மீறி நடந்த, தனக்குத் தெரியாமல் நடந்த சில விஷயங்களுக்காக இவ்வளவு கடுமையும், வெறுப்பும் காட்டுவது எந்த வகையில் நியாயம்? என்பது ராஜாத்தியம்மாளின் மனநிலை.

இந்த இருவருக்கும் இடையில் இருந்து ரொம்பவே மனம் நொந்திருப்பவர் கனிமொழிதான். எத்தனை பிஸிக்கும் இடையிலும் கனிமொழியுடனும், பேரன் ஆதித்யாவுடனும் அளவளாவுவதை வழக்கமாகக் கொண்ட கலைஞர், இந்த ஊடல் காலத்தில் தன்னுடனும் தூரம் காட்டுவதுதான் கனிமொழியின் கவலைக்குக் காரணம்.

இன்னும் சில சந்திப்புகளில் பேசித் தீர்த்துவிடக்கூடிய இந்தப் பிரச்னையை, இன்னும் ஊதிப் பெரிதாக்கும் வகையில் கலைஞரின் குடும்பத்திற்குள்ளேயே சிலர் முயற்சிக்கிறார்கள். அதன் மூலம் நிரந்தரமாகத் தங்கள் குடும்பத்தைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று வரும் செய்திகளும் கனிமொழியின் வேதனையைக் கூட்டியிருக்கின்றன.

இத்தனை வேதனைக்கு இடையிலும், ‘‘இன்னும் ஓரிரு நாட்களில் அப்பா எங்கள் வீட்டுக்கு வருவார். இப்போது எட்டி நின்று வேடிக்கை பார்ப்பவர்களின் முகத்தை நானும் பார்க்கத்தானே போகிறேன்’’ என்று தைரியம் கலந்த தெளிவுடன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம் கனிமொழி.

நல்லது நடக்க வேண்டும். அது விரைந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இரண்டு குடும்பங்களின் மீது மட்டுமின்றி, கலைஞர் மீதும் பற்று வைத்துள்ள தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர்.

No comments:

Post a Comment