தாய்மைக்கு வில்லனாக இருப்பது, `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்'. இதனை பி.சி.ஓ.டி. என்பார்கள். இந்திய பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. சினைப்பையில், நீர் கோர்த்த பருக்கள் தோன்றுவதையே பி.சி.ஓ.டி. என்கிறோம்.
நீர்கோர்த்த அந்த பருக்கள் புற்றுநோய் கட்டிகளாக மாறாது.
இந்த பாதிப்பு கொண்ட பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும். பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் தோன்றும். பி.சி.ஓ.டி. பாதிப்பு கொண்டவர்களுக்கு மாத விலக்கு சிக்கல் ஏற்படும். முகப்பரு தோன்றும். உடல் குண்டாகும். முகம், வயிறு, மார்புப் பகுதியில் முடி வளரும்.
அவர்களது உடலில் ஆண்களுக்கான டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் பெருமளவு சுரப்பதே இத்தகைய முரண்பாடுகளுக்கான காரணமாகும். இவர்களுக்கு பெண்களுக்குரிய ஹார்மோனை சுரக்கவேண்டிய சினைப்பையும், பிட்யூட்டரி சுரப்பியும், அதனை சரிவர சுரக்காத நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு மாதவிலக்கு நெருக்கடி தோன்றும்.
பெண்களின் இனப்பெருக்க உறுப்பு சுரப்பிகள் ஜெல்லி போன்ற திரவத்தை சுரக்கிறது. அதை `செர்விக்கல் மியூக்கஸ்' என்கிறோம். கணவரின் உயிரணு நீந்தி வேகமாகச் செல்ல துணைபுரிவது இந்த திரவத்தின் வேலை. இது கெட்டியாகி விட்டாலோ, தேவையான அளவு இல்லாவிட்டாலோ தாய்மைக்கு தடை ஏற்படும்.
ஆண்களின் செக்ஸ் பலவீனமும் பெண்கள் தாய்மையடைவதற்கு தடையாகிறது. சிலருக்கு கிளன்டிடா போன்ற கிருமித்தொற்றுகள் பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும். சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை பெறாவிட்டால், செக்ஸ் செயல்பாட்டில் ஈடுபடும்போது வலி தோன்றும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும், சில வகை ஆன்டிபயோடிக் மருந்துகளை தேவையில்லாமல் சாப்பிடும்போதும், அதிக நேரம் ஈரத்தன்மையோடு இருக்கும்போதும் இந்த கிருமித்தொற்று ஏற்படும். பெண்கள் பிறப்பு உறுப்பை இறுக்கமாக்கும் `வெஜைனெஸ்மாஸ்' நோய் ஏற்பட்டிருந்தாலோ, செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, செக்சை அருவறுப்பு நிறைந்ததாக கருதினாலோ அதற்கான சிகிச்சைகளை பெற்று, தீர்வு தேடிக்கொள்ள வேண்டும்.
தினசரி வாழ்க்கையில் ஏற்படும் மனஅழுத்தம், மனதுக்கு பிடிக்காத இணையுடன் வாழுதல், தம்பதிகளில் யாராவது ஒருவரிடம் இன்னொருவருக்கு பிடிக்காத பழக்கவழக்கங்கள் இருத்தல் போன்றவைகளும் செக்ஸ்க்கு வில்லனாக அமைந்து, தாம்பத்ய வாழ்க்கைக்கும், தாய்மைக்கும் தடையாகி விடும்.
- டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.
|
No comments:
Post a Comment