சிக்கன நடவடிக்கை காரணமாக வரும் பொங்கல் பண்டிகையின்போது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் இலவச பொருள்கள் வழங்கப்படாது என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, சர்க்கரைப் பொங்கல் வைப்பதற்குத் தேவைப்படும் பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் கடந்த திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்டது.
2009-ம் ஆண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு ரூ.80 கோடி செலவிடப்பட்டது. பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசிப்பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை சிறிய பாக்கெட்டுகளில் வழங்கப்பட்டன.
அப்போது, ஜனவரி 1-ம் தேதி முதல் பொங்கல் பண்டிகை வரை இந்த இலவச பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல இடங்களில் முறையாகக் கொடுக்கப்படாத காரணத்தால் பொருள்கள் வீணாகின.
2010-ல் பொங்கல் இலவச பொருள்கள் வழங்கப்படவில்லை. எனினும், 2011-ல் அந்தப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சிக்கன நடவடிக்கை: இந்த நிலையில், பொங்கல் இலவச பொருள்களை வழங்குவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரிசி பெறத் தகுதியான அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது.
சிறப்பு பொது விநியோகத் திட்டம், இலவச அரிசி, விலைக் கட்டுப்பாட்டு நிதியம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் உணவுத் துறைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.4,500 கோடி வரை செலவிடப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருள்களை இலவசமாக வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் கூடுதலாக செலவாகும்.
பெரும் நிதிச் சுமையை அரசு சந்தித்து வருவதால், வரும் பொங்கல் விழாவையொட்டி இலவச பொருள்கள் வழங்கப்படவில்லை என தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது
|
No comments:
Post a Comment