தமிழ்நாட்டில் இன்று பேராசைக்காரர்கள் யாரென்று பார்த்தால் – இவர்கள் தான். இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும். மகனை அரசியலில் இறக்கி பெரிய ஆளாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் தந்தையர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கலைஞர், மருத்துவர் ராமதாசு வரிசையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும் வருகிறார்.
“அரசியலில் குதிக்க – அதற்கான தகுதி, ஆளுமை போன்றவை இருக்கிறதா” என்றெல்லாம் யாரும் கேட்கக்கூடாது. கேட்கவும் முடியாது. பிள்ளை “ஆசைப்பட்டு விட்டால்” நிறைவேற்றுவது தானே பெற்றவர்களின் கடமை. அதை தான் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்கிறார். கிட்டத்தட்ட விஜய்யின் கொள்கை பரப்பு பீரங்கி போல செயல்பட துவங்கிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர் என்று தான் சொல்ல வேண்டும்.
முன்பெல்லாம் பணம் படைத்தோர் – பணம் கொடுத்து, திரைப்படங்களில் கதாநாயகனாக ஆனார்கள். கதாநாயகனாக ஆனப்பின் – விஜயை போல “முதல்வர் கனவு” காண விரும்புகிறார்கள். “வருங்கால முதல்வர் விஜயாம்” கோஷமிடுகிறார்கள். காதில் ஆசிட்டை ஊற்றியது போல் எரிகிறது. ரஜினியை உசுப்பேத்த முடியாமல் ஓய்ந்தவர்கள்… இப்போது விஜயை. விஜ்ய்க்கு எல்லா கனவும் உண்டு. ரஜினியை போல விஜய் என்ன சாமியாரா?
“தன் படத்துல நடிச்ச விஜய்காந்தே அரசியல்ல இறங்கி எதிர்க்கட்சி தலைவராகும் போது – தம் பிள்ளையால் ஜெயிக்க முடியாதா” என்று பாசிட்டிவ்வா சிந்திக்கிறார் போலும் எஸ்.ஏ.சி. அ.தி.மு.க வின் தேர்தல் கூட்டணியில் இன்னும் வெளியேறாமல் இருப்பவர்கள் இரண்டே பேர். ஒருவர் – குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் மற்றது இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கமாம். கலைஞர் அடிக்கிற ஆப்பிலிருந்து கூட தப்பி விடலாம். ஜெ அடிக்க போகிற ஆப்பிலிருந்து தப்பவே முடியாது என்பதை உணரவில்லை போலும்.
எந்த திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்ளாத முதல்வராக ஜெயலலிதா. சினிமாகாரர்களை தூர வைக்கும் முதல்வர் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக சென்று, பூச்செண்டு கொடுத்து விட்டு பிரஸ்மீட்டில் பேசுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். “உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவை ஆதரிப்பதாக” தெரிவித்தார். சினிமாகாரர்களை எரிச்சலுடன் சாடும் பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சியையும் அந்த பிரஸ் மீட்டில் பார்க்க முடிந்தது. சினிமாகாரர்கள் என்றால் சும்மாவா? பா.ம.க.,வுக்கு தலைமுறையை தாண்டி – சினிமாவிலிருந்து எதிரிகள் முளைத்து கொண்டே இருக்கிறார்கள்.
தமிழர்களுக்கு சேவகம் செய்ய போவதாக சொல்லும் நடிகரின் தமிழர்களின் மீதானபற்றை பார்ப்போமா? ஆயிரக்கணக்கான ஏழை தமிழ் பொற்கொல்லர்களின் வயிற்றில் அடித்து தன் உடம்பை வளர்க்கும் கேரள ஆலுக்காஸ்களின் (இங்கே) நிரந்தர விளம்பர நடிகராக விஜய். பகட்டின் ஒளிக்கு பின்னால் கவிந்துள்ள இருட்டில் சிக்கி, சின்னாபின்னமாகி வாழவே போராடும் நம் மக்களை தெரிந்து கொள்ளாமல் – கோடிகளை மலையாளிகளிடம் பெற்று கொண்டு தமிழர்களை உய்விக்க இயக்கம் தொடங்க போகிறாராம். நல்ல கூத்து.
பிறந்த நாளுக்கு நான்கு தையல் மிஷின்களை கொடுத்து விட்டு, கொடுப்பது போல போட்டோவும் எடுத்து கொண்டால் – கிழவியை கட்டி பிடிப்பது போன்று போஸ்டர் அடித்தால் – அரசியலில் பெரிய ஆளாக வந்துவிடலாம் என்று நினைப்பு போலும். எந்த தகுதியில் அண்ணா வந்தது உங்களுக்கு அரசியல் ஆசை. இளைய தளபதி விஜய் கடந்து வந்த அரசியல் பாதையை பார்ப்போமா? புதுசாய் கட்சி ஆரம்பிக்கிற ரிஸ்க்கான வேலையையெல்லாம் செய்ய விரும்பவில்லை.
“சிவாஜி போல, பாக்யராஜ் டி.ராஜேந்தரை போல” கட்சி ஆரம்பித்து – “கடை விரித்தேன். கொள்வாரில்லை” என்று போணியாகமல் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வது. அதனால் எப்பாடுபட்டாவது காங்கிரஸில் தன்னை இணைத்து கொள்ள விரும்பி, டெல்லி வரை போய் ராகுல்காந்தியை பார்த்தார் விஜய். “ஏற்கனவே கட்சில இருக்கிற கோஷ்டி பத்தாதுன்னு நீங்க வேற புதுசா”… என்று இழுத்திருக்கிறார் ராகுல்காந்தி.
தொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை நிறைய இருந்தால் – அது தான் நிலை. விஜய் தனது ஆசைகளை விரிவாக சொல்ல, “காங்கிரஸ்ல போஸ்டர் ஒட்ட ஆள் இல்ல. ஆனா போஸ்டிங் கேட்டு மட்டும் வந்துடுறாங்க” என்று ராகுல்காந்தி அலுத்து கொள்ள – முகத்தை துடைத்து கொண்டே வெளியேறினார் விஜய். “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்றார் மீசையில் ஒட்டிய மண்ணை தட்டி விட்டவாறே.
“காவலன்” படத்திற்காக ஜெயலலிதாவிடம் ஒட்டி கொண்டவர்கள் – சட்டசபை தேர்தல் வெற்றியில் தங்களின் பங்கும் மிக பெரிய அளவு இருந்ததாக பேசி கொள்கிறார்கள். “நினைப்பு பிழைப்பை கெடுக்கட்டும். அவர்களின் அரசியல் கனவை கலைக்கட்டும்”.
|
No comments:
Post a Comment