7 ஆம் ஆறிவு சினிமா பற்றி வரும் கடுமையான விமர்சனங்கள், அந்த படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 7 ம் அறிவு, ஒரு அபத்தமான கதையை வைத்து எடுக்கப் பட்டுள்ளமை அவர்களுக்கே தெரிகின்றது. அதனால் இப்போது, படத்திலே வரும் ஈழ ஆதரவு வசனங்களை மேற்கோள் காட்டி ஆதரவு தேடுகின்றனர். "தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக" ஜெயலலிதாவை ஆதரிக்குமாறு கோரியவர்கள் தான், இந்த நியாயத்தையும் முன் வைக்கிறார்கள். ஜெயலலிதா முதல் முருகதாஸ் வரை, சில வசனங்களை மட்டுமே பேசி தமிழனை ஏய்க்கலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை ஓட்டுகளையும், முருகதாசுக்கு பெட்டி நிறைய பணத்தையும் அள்ளிக் கொடுப்பதற்கு, குறிப்பிட்ட சில வசனங்களே போதும். இதெல்லாம் ஈழப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து நடந்து வரும் கூத்துகள் தான். ஈழத்தில் தமிழன் செத்துக் கொண்டிருப்பான். தமிழகத்தில் அதைக் காட்டியே பிழைப்பு அரசியல் நடத்துவார்கள். 7 ஆம் அறிவு சினிமாவும், ஈழத் தமிழரின் பிணங்களைக் காட்டி காசு வசூல் பண்ணுகின்றது.
சில வருடங்களுக்கு முன்னர் பகத் சிங் பற்றிய திரைப்படம் வெளியானது. அன்றிலிருந்து சீக்கிய தேசியவாதிகள், பகத்சிங்கை தமது நாயகனாக தூக்கிப் பிடிக்கின்றனர். பல வரலாற்று நாயகர்களின் பாத்திரம், அவர்களின் கொள்கைகளுக்கு முரணாக திரிபுபடுத்துவது உலகெங்கும் நடப்பது தான். இந்து மத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ராஜராஜ சோழன், தமிழ் தேசியவாதிகளால் மாபெரும் தமிழனாக புகழப் படுகிறான். போதி தர்மர், பௌத்த மதத்தை பரப்பிய மதகுரு என்ற உண்மை மறைக்கப் பட்டு வருகின்றது. 7 ஆம் அறிவு என்ற ஜனரஞ்சக சினிமாவின் புண்ணியத்தால், "ஒரு வீரத் தமிழனாக" மறு அவதாரம் எடுத்துள்ளார். தமிழர்கள் மறந்து விட்ட போதி தர்மனை அறிமுகப் படுத்தக் கிளம்பிய சினிமா, அந்த மகானின் வரலாற்றை திரிபு படுத்த வேண்டிய அவசியம் என்ன? வரலாற்றையும், நிகழ்கால கற்பனைக் கதையையும் கலந்து தயாரிப்பது சினிமாவில் வழமையானது தான். Davinci code என்ற ஆங்கிலத் திரைப்படம் கூட, அவ்வாறான கதை தான். அதிலே, வரலாற்றுக்கு இசைவாக நிகழ்கால கற்பனையை அமைத்திருப்பார்கள். ஆனால், 7 ம் அறிவு கூறும் 6 ம் நூற்றாண்டு வரலாற்றுக்கும், நிகழ்கால சம்பவங்களுக்கும் இடையில் எந்த வித தொடர்புமில்லை.
இயேசு பிறந்த பெத்தலஹெமில், இன்றைக்கு வாழும் மக்கள் எல்லோரும் அரபு மொழி பேசுகின்றனர். அதற்காக "இயேசு கிறிஸ்து ஒரு அரேபியன்" என்று அழைக்க முடியுமா? ஏழாம் அறிவு எனும் திரைப்படம், "போதி தர்மர் ஒரு தமிழன்" என்பதால், தமிழர்கள் எல்லோரும் பெருமைப் பட வேண்டுமென்கிறது. போதி தர்மன் என்ற புத்த பிக்குவின் பௌத்த மதப் பின்னணியை மறைத்து, அவனை ஒரு தமிழனாக மட்டும் பார்க்க வேண்டும் என்று கோருகின்றது. மதத்தை விட, மொழியே முக்கியம் என்று கருதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கு, போதி தர்மன் ஒரு தமிழ்- பௌத்தன் என்பதை ஏற்றுக் கொள்ள தயக்கம் ஏன்? தமிழ் இன உணர்வு என்ற போர்வையின் கீழ் மறைந்திருக்கும், இந்து மத உணர்வு இங்கே வெளிப்படுகின்றது.
போதி தர்மரை தமது காவிய நாயகனாக கொண்டாடத் தொடங்கியிருக்கும் தமிழ் உணர்வாளர்கள்,அவர் ஒரு "தமிழ் பௌத்த பிக்கு" என்ற உண்மையை கூறுவதில்லை. ஏழாம் அறிவு திரைப்படமும் இந்த தகவலை வேண்டுமென்றே மறைத்துள்ளது. போதி தர்மர் பௌத்த மதத்தை சேர்ந்த மாமேதை என்பதாலும், சீனாவில் பௌத்த மத பிரசங்கம் செய்ததாலும் தான் உலகப் புகழ் பெற்றார். பௌத்த மதத்தின் ஒரு கிளையான, ஜென் (Zen) பிரிவை தோற்றுவித்தவரும் அவரே. இன்றைக்கும் சீனா, ஜப்பான் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் ஜென் பௌத்தர்கள் போதி தர்மரின் தத்துவ போதனைகளை கற்கின்றனர். 7 ஆம் அறிவு திரைப்படம், தமிழர்களுக்கு போதி தர்மரை அறிமுகப் படுத்துவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே, மேற்கத்திய நாடுகளில் நன்கு அறிமுகமானவர்.
போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும், அவரின் போதனைகள் அடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இந்த நூல்கள் யாவும், மேலைத்தேய நகரங்களில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. சீனாவில் மட்டுமல்ல, மேலைத்தேய நாடுகளில் கூட, தலைசிறந்த தத்துவ அறிஞராக போற்றப்படும் போதி தர்மரை, ஏழாம் அறிவு திரைப்படம் அவமானப் படுத்தியுள்ளது. போதி தர்மரை குங்பூ ஆசிரியராகவும், சித்த வைத்தியராகவும் மட்டும் காட்டுகின்றது. போதி தர்மரின் போதனைகளை தேடிப் படிக்கும் தமிழன் அறிவாளியாகி விடுவான். அதன் பிறகு, ஒரு மாமேதையை தமிழகம் மறந்த காரணம் என்ன என்று ஆராயத் தொடங்கி விடுவான். அதற்கு இடம் கொடுக்கலாமா? தமிழனின் ஆறாவது அறிவை மழுங்கடிப்பது தானே, ஏழாவது அறிவு தயாரித்தவர்களின் நோக்கம்? புத்திசாலித் தமிழன் ஆபத்தானவன். அதனால், சிந்திக்கும் திறனன்ற "வீரத் தமிழன்" தான் அவர்களுக்கு தேவை.
"போதி தர்மரை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்?" இந்தக் கேள்வியை ஒரு ஆவணப் படத்தில் வருவது போன்று, திரைப் படத்தில் கேட்கின்றார்கள். தமிழர்கள் எல்லோரும் தெரியாது என்று கையை விரிக்கிறார்கள். அதே நேரம், சீனர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. அதிலும் "ஒ யா.. குங்பூ மாஸ்டர்" போன்ற பதில்களை மட்டும் பதிவு செய்கிறார்கள். மேற்கொண்டு பேசுவதற்கு சீனர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. அதற்கு இடம் கொடுத்தால், சீனர்களை தமிழர்களை அழிக்க தேடி வரும் வில்லன்களாக காட்ட முடியுமா? விசாரணையை அத்துடன் நிறுத்திக் கொண்டு, சூர்யாவின் சர்க்கஸ் வித்தை, ஸ்ருதிஹாசனின் மரபியல் ஆராய்ச்சி என்று கதை நகருகின்றது.
சரி, அவர்கள் தான் விசாரிக்கவில்லை, ஒரு சராசரித் தமிழனுக்கு தேடல் இருக்காதா? அந்த அளவுக்கு தமிழன் புத்திசாலி இல்லை என்று தெரியாமலா, முருகதாஸ் ஏழாம் அறிவு படம் எடுத்திருப்பார்? முதலில், போதி தர்மர் காஞ்சிபுரத்தில் பிறந்தார் என்ற ஒற்றைத் தகவலை வைத்தே, அவரை தமிழன் என்று டைரக்டரால் நம்ப வைக்க முடிந்திருக்கிறது. போதி தர்மர், பௌத்தராக மதம் மாறிய பிராமணர் என்று, அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "பார்ப்பனர்கள் என்போர் வடக்கே இருந்து வந்த ஆரியர்கள்," என்ற திராவிட கற்பிதங்களினால் உருவான தமிழ் தேசியம், பிராமண போதி தர்மரை தமிழர் என்று நம்புவது எங்கேயோ இடிக்கிறது. ஏழாம் அறிவு திரைப்படம் கூறுவது போல, "போதி தர்மர் ஒரு பல்லவ இளவரசர்" என்ற கூற்று எங்கேயும் நிரூபிக்கப் படவில்லை. இதனை வெறுமனே சினிமாக்காரர்களின் வரலாற்றுத் திரிபாக மட்டும் கருத முடியாது. ஆக்கிரமிப்பாளர்கள் திணிக்கும் ஆதிக்க அரசியலும் அதனுள் அடங்கியுள்ளது.
ஏழாம் அறிவு திரைப்படத்தில், போதி தர்மரின் மரபணு கொடுத்து உயிர்ப்பிக்கப் பட்ட கதாநாயகன் பேசும் வசனம் ஒன்று : "மதமாற்றம், இனமாற்றம் காரணமாக தமிழர்கள் தமது அறிவியல் செல்வத்தை இழந்து விட்டார்கள்." போதி தர்மர் காலத்து அறிவியல் பிறகு எப்படி காணாமல் போனது? அதனை யார் அழித்தார்கள்? தமிழர்களை யார் மதமாற்றம், இனமாற்றம் செய்தார்கள்? மரபணுவால் உயிர்ப்பிக்கப் பட்ட போதி தர்மரின் மறு அவதாரத்திற்கு இந்த உண்மைகள் தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கின்றது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் புத்த மதம் பரவியிருந்தது.
தமிழகத்தில் பௌத்தமும், சமணமும் பெரும்பான்மை தமிழ் மக்களின் மதங்களாக இருந்தன. தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் தவிர்த்து மற்ற நான்கும் பௌத்த மதப் பின்னணியில் எழுதப் பட்டுள்ளன. ஐரோப்பியர்கள் வானாந்தரங்களில் வாழ்ந்த காலத்தில், பீகாரில், நாலந்தா பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருந்தது. (கி.மு. 5 - கி.பி. 1193) அதில் கல்வி கற்பதற்கு சீனாவில் இருந்தும் மாணவர்கள் வந்தனர். ஏழாம் அறிவு திரைப்படத்தில் காட்டப்படும் காஞ்சிபுரம் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, நாலந்தா பல்கலைக்கழகமும் பௌத்த மத மேற்படிப்புக்காக உருவாக்கப் பட்டவை. அங்கே அறிவியல் பாடங்களும் போதிக்கப் பட்டன.
வடக்கே இஸ்லாமியரான துருக்கிய இனத்தவர்களின் படையெடுப்பினால், நாலந்தா பல்கலைக்கழகமும் அதன் அறிவியல் செல்வங்களும் அழிக்கப் பட்டன. தெற்கில், இந்துக்களான பல்லவர்களின் படையெடுப்பினால் காஞ்சிபுரத்தின் அறிவுச் செல்வங்கள் அழிக்கப் பட்டன. பல்லவர்கள் பௌத்த, சமண மடாலயங்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். சமணக் கோயில்களும், பௌத்த விகாரைகளும் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டன. பௌத்த, சமண மதங்களை சேர்ந்த தமிழர்கள், பலவந்தமாக இந்துக்களாக மதமாற்றம் செய்யப் பட்டனர். மதம் மாற மறுத்தவர்கள் படுகொலை செய்யப் பட்டனர்.
சைவ மத நாயன்மார்களான சம்பந்தரும், சுந்தரரும், திருநாவுக்கரசரும் கட்டாய மதமாற்றத்திலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்கள். தமிழ் பேசும் பௌத்தர்களையும், சமணர்களையும் கழுவேற்றிக் கொன்ற கதைகளை தேவாரங்களிலும் பாடி வைத்துள்ளனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் பல்லவர் காலத்தில் நடந்தேறின. தமிழர்கள் தமது தொன்மையான அறிவியலை இழந்த வரலாறு இது தான். காஞ்சிபுரத்தில் பௌத்த மத தமிழர்கள் வளர்த்த அறிவுச் செல்வத்தை அழித்த பல்லவ அரச வம்சம்சத்தில், போதி தர்மர் எப்படிப் பிறந்திருக்க முடியும்? இது ஒரு மாபெரும் வரலாற்று மோசடி அல்லவா? தமிழர்களின் எதிரிகளை நல்லவர்களாக காட்டுவதற்காக வரலாற்றை திரிக்கும் ஏழாம் அறிவு, ஈழத் தமிழர்களுக்காக உருகுகிறது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை தான் ஞாபகம் வருகின்றது.
டாவின்சி கோட் திரைப்படம் எடுத்தவர்கள், கிறிஸ்தவ நாட்டை சேர்ந்தவர்கள். அதன் பெரும்பான்மையான பார்வையாளர்களும் கிறிஸ்தவர்கள் தான். இயேசுவின் புதல்வி பற்றி கற்பனை கலந்து படம் தயாரிக்கும் தைரியம் அவர்களுக்கு இருந்தது. டாவின்சி கோட் தயாரித்தவர்கள் நினைத்திருந்தால், நிகழ்கால அரசியளுக்கேற்றவாறு முஸ்லிம்களை வில்லன்களாக காட்டியிருக்கலாம். ஆனால், அந்த திரைப்படத்தின் வில்லன்கள் கிறிஸ்தவ திருச்சபையை சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ கடும்போக்காளர்களின் எதிர்ப்பை மீறி, திரைப்படத்தை வெளியிட்டார்கள். ஏழாம் அறிவு தயாரித்தவர்களுக்கு, அந்த தைரியம் கிடையாது. மரபணு கொடுத்து உயிர்ப்பித்த நவீன போதி தர்மன் யாரை பழிவாங்கத் துடித்திருப்பார்? தமிழ்நாட்டில் பல்லவர்களின் வாரிசுகளை தேடிச் சென்று வேட்டையாடியிருப்பார். போதி தர்மன் எதற்காக, தனக்கு இன்றைக்கும் தெய்வ ஸ்தானம் வழங்கி கௌரவிக்கும் சீனர்களுடன் முரண்பட வேண்டும்?
திரைப்படத்தில் சீன வில்லனின் ஹிப்னோடிச வித்தைகளை கண்டு வியந்த சூர்யாவுக்கு, சுருதிஹாசன் கூறுவார்: "இதுவும் தமிழர்களின் நோக்குவர்மம் கலை. போதிதர்மரால் கொண்டு செல்லப்பட்டது." இதைக் கேட்ட சூர்யா: "எப்பேர்ப்பட்ட துரோகம்" என்று கொதிப்பார். யார் யாருக்கு துரோகம் செய்தார்கள், என்பது மரபணுவால் உயிர்ப்பிக்கப்பட்டவருக்கு தெரியாதா? களரி (குங்பூ), நோக்குவர்மம் (ஹிப்னோடிசம்) போன்ற தமிழரின் தொன்மையான கலைகள், இந்து மன்னர்களான பல்லவர்களின் காலத்தில் தானே புறக்கணிக்கப் பட்டன? அதனால் தானே, இன்றுள்ள தமிழர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை? அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், போதி தர்மர் சொல்லிக் கொடுத்த கலைகளை சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையில்லையா? போதி தர்மர் தென்னிந்தியாவில் இருந்து வந்த பௌத்த துறவி என்பதை, சீனர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை.
போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் சீனத் திரைப்படத்தை இணையத்திலேயே பார்வையிடலாம்.(Bodhidharma - The Master of Zen) சீனத் திரைப்படத்தில், தென்னிந்தியாவில் இருந்து வந்த போதி தர்மர், தியானத்தையும், குங்க்பூ தற்காப்புக் கலையையும் போதிப்பது விபரமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இதற்கு மாறாக, ஏழாம் அறிவு என்ற தமிழ்த் திரைப்படம், போதி தர்மரின் வரலாற்றைத் திரித்து அவரை அவமதிக்கிறது. சுருக்கமாக சொன்னால், "தமிழனுக்கு துரோகமிழைக்கும் தமிழனை வீரனாகக் காட்டுவது" தான் ஏழாம் அறிவின் திரைக்கதை.
ஏழாம் அறிவு திரைப்படத்தின் இறுதியில், சூர்யா தமிழனின் உணர்வைத் தூண்டும் வசனங்களை அடுக்குவார். யாழ்ப்பாண நூலகத்தை எரித்ததால், தமிழர்களின் அறிவுடைமை இழக்கப் பட்டது. உண்மை தான். ஆனால், போதி தர்மனுக்கு, 6 ம் நூற்றாண்டில் தான் படித்த காஞ்சிபுரம் நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு தெரியவில்லை. யாழ்ப்பாண நூலகத்தை எரித்த சிங்கள இனவெறியர்களினதும், காஞ்சிபுரம் நூலகத்தை எரித்த இந்து மதவெறியர்களினதும் நோக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது. ஏழாம் அறிவு எடுப்பதற்கு முன்னர், போதி தர்மனை பற்றி ஆராய்ச்சி செய்த டைரக்டர் முருகதாசுக்கு இது தெரியாமல் இருக்க முடியாது. அதையெல்லாம் சொன்னால், தணிக்கைக் குழுவினர் கத்திரிக்கோல் போட்டு விடுவார்களா? "பக்கத்து நாட்டில் தமிழனை அழித்த ஒன்பது நாடுகளின் துரோகம்" பற்றி சொல்லத் தெரிந்தவர்களுக்கு, தைரியமாக அந்த நாடுகளை பெயரிடத் தெரியவில்லை. வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் களத்தில் நின்றுள்ளனர். செய்மதிப் படங்களை வழங்கியுள்ளனர். ஈழத் தமிழர்கள் இந்தியாவை தமது தாய்நாடு போன்று நம்பினார்கள். ஒருவர் எமது நம்பிக்கைக்கு எதிராக நடப்பது தான் துரோகம்.
ஏழாம் அறிவு, இந்திய அரசு மீதான விமர்சனங்களை கவனமாகத் தவிர்க்கின்றது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஈழப்போரை ஆரம்பித்து வைத்ததும், முப்பது வருடங்களின் பின்னர் அதனை முடித்து வைத்ததும் இந்தியா தான். "இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்பதாலும், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தொப்புள்கொடி உறவுகளாலும்," இந்தியா தமது பக்கம் நிற்கும் என்று ஈழத்தமிழர்கள் நம்பினார்கள். உண்மையில், இந்திய மேலாதிக்க நலன்களுக்காக, ஈழத்தமிழர்கள் பொம்மைகளாக ஆட்டி வைக்கப் பட்டனர். சீனாவுடனான வர்த்தகப் போட்டியில், ஈழத்தமிழர்களை இந்தியா சார்பானவர்களாக தொடர்ந்து வைத்திருக்கவே விரும்புகின்றது. தமிழகத்தில் சில அதிரடி அரசியல்வாதிகளும், திரையுலக பிரமுகர்களும் பொம்மலாட்டக் காரர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
ஹாலிவூட்டில் அரசியல் கலந்த ஜனரஞ்சக திரைப் படங்கள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையுடன் எடுக்கப் படுவது இரகசியமல்ல. ஏழாம் அறிவு புகட்டும் தமிழ் இனவுணர்வு சாயம் படத்திலேயே வெளுத்து விடுகின்றது. புத்தரை விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றாக திணிக்கத் தெரிந்த இந்து மதமல்லவா? போதி தர்மரை காட்டி, தமிழனின் மூளைக்குள் இந்துத்துவா சிந்தனை திணிக்கப் படுகின்றது. ஏழாம் அறிவு வெறும் பொழுதுபோக்குப் படமல்ல. திரைப்படத்தைப் பார்க்கும் கோடிக்கணக்கான தமிழர்களை வசியப்படுத்தி, இந்திய மேலாதிக்க திட்டங்களுக்கு ஆதரவாக வென்றெடுக்கும் உள்நோக்கம் கொண்டது. அது தான் "நோக்கு வர்மம்". ஒரு திரைப்படம் மூலம், தமிழர்களின் கண்களைக் கட்டும் கண்கட்டி வித்தை.
|