Saturday, April 9, 2011

நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்…




வேலைக்குச் சேர்ந்தவுடன் சிறிது காலத்துக்கு ஜாலியான செலவுகள்… அப்புறம் திருமணச் செலவு.. அடுத்து பிள்ளைகள் வளர்ப்பு, படிப்பு, கல்யாணச் செலவுகள்… கூடவே இதுபோன்ற செலவுகளுக்காக வாங்கிய கடன்கள் வேறு… இப்படி அடுத்தடுத்த செலவுகளில் சிக்கியே மாதச் சம்பளக்காரர்களின் வாழ்க்கையும் தொலைந்துவிடுகிறது. ஒருநாள் ரிட்டயர்மென்ட் என்று வரும்போது சம்பளம் நின்று போகும்.. ஆனால், அன்றாடம் செய்து வந்த செலவுகள் மட்டும் இன்னும் பன்மடங்காகப் பெருகி நம்முன் வந்து நிற்கும்.

ஒரு சின்ன உதாரணம் பார்ப் போமா? இன்றைக்கு 100 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு இருமல் மருந்து 30 ஆண்டுகள் கழித்து 1,000 ரூபாயாக இருக்கும். அப்போதுதான் பலரும், ஆஹா… நம் கடைசிக் காலத்துக்கு என எதுவும் சேர்க்காமல் விட்டு விட்டோமே என்று கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.

தேவை திட்டமிடல்..!

இந்தக் கவலையைத் தவிர்க்க அவர்கள் செய்திருக்க வேண்டியது ஒரு சிறிய திட்டமிடல்தான். இந்தத் திட்டமிடல் அவரவர் வயதுக்கு தகுந்தமாதிரி இருக்க வேண்டும். ஒருவர் வேலைக்குச் சேர்ந்து கல்யாணமான நிலையில் அவரது 30-வது வயதில் ஓய்வு காலத்துக்கான முதலீட்டைத் தொடங்கி இருந்தால் அதற்கு மாதாமாதம் குறைவான தொகையே போதுமானதாக இருக்கும். இதுவே 50 வயதில் ரிட்டயர்மென்டுக்காக முதலீடு செய்ய ஆரம்பித்தால்? 10 ஆண்டுகள்தான் பாக்கி இருக்கும் நிலையில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்தப் பெரும் தொகையை பார்த்தே பலரும், விதி விட்ட வழியில் வாழ்க்கை போகட்டும் என்று இருந்துவிடுகிறார்கள். இதுவும் மிகப் பெரிய தவறு! 30 வயதில் பொதுவான தேவைகளை விட லைஃப் ஸ்டைல் தேவைகள் அதிகமாக இருக்கும். அதாவது, பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள், ஓட்டல் சாப்பாடு போன்ற செலவுகள் அதிகமாக இருக்கும். சிலர் வாகனம் (பைக்/கார்), வீடு போன்றவற்றை வாங்குவார்கள். இதற்காக கடன் வாங்குவார்கள். நிறைய பணம் இ.எம்.ஐ.

கட்டவே சரியாகப் போகும். கூடவே அதி அத்தியாவசியமான ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீடுகளுக்கான பிரீமியச் செலவும் இருக்கிறது. இந்தச் செலவுகளுக்கே அவர்கள் வருமானத்தின் பெரும்பகுதி போய்விடுவது உண்மைதான். என்றாலும், இளைமைப் பருவம் தொட்டே ஓய்வு காலத்துக்கான முதலீட்டையும் தொடங்குவது கட்டாயத்திலும் கட்டாயம்.

30 வயதானவர்களுக்கான முதலீடு!

சுகமான ஓய்வு காலத்துக்கு எந்த வயதினர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செந்திலுக்கு இப்போது வயது 30. வேலைக்குச் சேர்ந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும் அவருக்கு, நிறைய செலவுகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் பிடித்தம் போக மாதம் கையில் 21,500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, மகன் விக்ரமின் படிப்பு, சொந்த வீடுகட்ட வாங்கிய ஹோம் லோனுக்கான இ.எம்.ஐ. – இவற்றை எல்லாம் தாண்டித்தான் செந்தில் தன் ஓய்வு காலத்துக்கு சேமிக்க வேண்டியிருக்கிறது. செந்திலின் இன்றைய லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அதுபோலவே பணி ஓய்வின் போதும் இருந்தால்தான் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.

செந்தில் தன் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் மாதத்துக்கு 15,300 செலவு செய்கிறார். ஆண்டுக்கு சுமார் 7% பணவீக்க விகிதம் என்று எடுத்துக் கொண்டால் 30 ஆண்டுகள் கழித்து அவர் பணி ஓய்வு பெறும் போது ஒரு மாதத்துக்கு 1,16,468 ரூபாய் இருந்தால்தான் சாமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால், அவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.75 கோடியை தொகுப்பு நிதியாக கையில் வைத்திருக்க வேண்டும்!

இவ்வளவு பெரிய தொகையை ஈட்ட என்ன செய்வது என்று மலைக்க வேண்டியதில்லை. இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 5,000 முதலீடு செய்து வரவேண்டும்.

40 வயதானவர்களுக்கான முதலீடு!

இந்தப் பிரிவில் இருப்பவர்களுக்கு 40 வயதான முத்துவை ஒர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள். பணி ஓய்வுக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம்

22,000 என்றால், 20 ஆண்டுகள் கழித்து (7% பணவீக்கம்) 85,133 இருந்தால்தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.27 கோடி தொகுப்பு நிதியை கையில் வைத்திருக்கவேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம்தோறும் தொடர்ந்து 12,909 முதலீடு செய்ய வேண்டும்.

50 வயதானவர்களுக்கான முதலீடு!

இந்த வயதுள்ளவர்களுக்கு 50 வயதுள்ள ராமகிருஷ்ணனை உதாரணமாக எடுத்துக்கொள் வோம். அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். பணி ஓய்வுக்கு இன்னும் 10 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம் 25,000 என்றால், 10 ஆண்டு கழித்து (7% பணவீக்கம்) 49,179 இருந்தால் தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம் தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவரிடம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம்73.77 லட்சம் தொகுப்பு நிதி கையில் இருக்க வேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம் தோறும் தொடர்ந்து 32,068 முதலீடு செய்ய வேண்டும்.

ஓய்வூதியத் தொகுப்பை அடைய முதலீட்டுத் திட்டங்கள்!

இங்கே காட்டப்பட்டுள்ள உதாரணங்களில் முதலீடு செய்தால் சுமார் 12% வருமானம் கிடைக்குமென எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பரிந்துரை செய்கிறேன்.

30+ வயதானவர்களுக்கு..!

இந்த வயதினருக்கு ஓய்வு பெற நீண்ட காலம் இருக்கிறது என்பதால் இவர்கள் தங்களின் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகமாகச் செய்யலாம். இவர்கள் 70% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், 30% தொகையை பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் (எஃப்.எம்.பி) முதலீடு செய்யலாம். எஃப்.எம்.பி. என்பது குறிப்பிட்ட முதிர்வு காலத்தைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட். இதில் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டில் எஃப்.டி.யோடு ஒப்பிடும்போது வரிக்கு பிந்தைய நிலையில் லாபகரமாக இருக்கும்.



40+ வயதானவர்களுக்கு..!

இந்த வயதினருக்கு ஓய்வு பெற 20 ஆண்டு காலம் இருக்கிறது. இவர்கள் 60-65% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் முதலீடு செய்யலாம்.




50+ வயதானவர்களுக்கு..!

இந்த வயதினருக்கு ஓய்வு பெற 10 ஆண்டுகள்தான் இருக்கிறது. இவர்கள் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. 50-65% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் முதலீடு செய்யலாம்.



இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஃபண்டில், தங்களின் வசதிக்கு ஏற்ப முதலீட்டைப் பிரித்து செய்து வரவும். 30+ வயதுக்காரர்கள், 40 வயதாகும் போது தங்களின் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டு களில் குறைத்து கடன் சார்ந்த திட்டங்களில் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதே போல் மற்ற வயதினரும் வயதாக வயதாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டைக் குறைத்தும், கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்தும் வரவேண்டும். மேலும், ஓய்வு காலத்துக்கு 3-5 ஆண்டுகளுக்கு முன் முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஈக்விட்டி ஃபண்டுகளில் இருந்து அதிக ரிஸ்க் இல்லாத எஃப்.டி. போன்ற திட்டங்களுக்கு மாற்றுவது பாதுகாப்பானது.

இளம் வயதிலே ஆரம்பியுங்கள்..!

ஓய்வு காலமும் உல்லாச காலமாக இருக்க வேண்டும் என்றால் இளம் வயதில் இருந்தே முதலீட்டை ஆரம்பிப்பதுதான் நல்லது. ரிட்டயர் ஆகும் போது 1 கோடி கையில் இருக்க வேண்டும் என்றால் (மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆண்டுக் கணக்கில் 12 சதவிகிதம் வருமானம் கிடைத்தால்) 30 வயதுக்காரர் மாதம் சுமார் 2,860-ம் 40 வயதுக்காரர் 10,109-ம் 50 வயதுக்காரர் 43,470-ம் சேமித்தால் போதும். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இடையே வித்தியாசப்படும் தொகை மலைக்கும் மடுவுக்கும் உள்ளதைப் பார்த்தாலே ‘இளமையில் சேமி’

என்பதன் அர்த்தம் புரியும்.

நம் பணத்தின் கதை! – வரலாறு!




நீண்ட நெடிய இந்திய வரலாறில் பல நூறு ஆண்டுகளாகவே நாணயங்கள் புழங்கி வந்திருக்கின்றன.

என்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகே நாணயங்களின் அதிகாரப்பூர்வ மான வரலாறு தொடங்குகிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம், நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வந்தார். 1790-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் அப்போதைய தலைநகரான கொல்கத்தாவில் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. என்றாலும், நாணயத் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்ததால், 1815-ல் மும்பை மாகாண பிரிட்டிஷ் ஆளுநர் ஒருவர் மும்பையில் நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றைத் தொடங்கினார். 1984-ல் டெல்லி அருகே நொய்டாவில் புதிய நாணய ஆலை ஒன்றும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆலைகள் மூலம் ஓர் ஆண்டுக்கு சுமார் அறுபது லட்சம் நாணயங்கள் உற்பத்தியாகிறது.

நமது நாணயத்தின் கதை இப்படி என்றால் பணத்தின் வரலாறு வேறு மாதிரி. ஆரம்ப காலத்தில் ரூபாய் நோட்டை (1770 – 1832 காலகட்டத்தில்) பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான் வெளியிட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து பணத்தை அச்சிட்டு இங்கே கொண்டு வந்து கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 10, 20, 50, 100, 1,000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் விக்டோரியா மகாராணியின் பெயரில் வெளியிடப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியாக வெட்டப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதைக் கொண்டு போய் கொடுத்தால், மீதிப் பணத்தை கொடுக்கும் விநோதமான வழக்கம் அப்போது இருந்தது.

1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. ஆனால் சில காரணங்களால் 1926-ல் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. 1935-ல் கரன்சி பொறுப்பு அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு கரன்சியை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் கரன்சி வெளியிடப்பட்டது.


வட இந்தியாவில் நமக்கு எந்த ஊரை பற்றி தெரியுமோ இல்லையோ, நாசிக் பற்றி நிச்சயம் தெரியும்.









காரணம், இங்குதான் நமது ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இங்கிலாந்திலிருந்து கரன்சி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அவை கப்பல் மூலமாக இங்கு கொண்டு வரப்பட்டன. இது நேரம் பிடிக்கும் விஷயமாக இருந்ததால், 1925-ல் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் ஒரு பிரின்டிங் பிரஸை அமைத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். முதலில் இங்கே தபால்தலைகள் மட்டுமே அச்சடிக் கப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் வேலை தொடங்கியது. இன்று வரை இங்கு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

ஆனால் இந்தியப் பொருளாதாரம் வளர வளர, பணத்தின் தேவை அதிகரித்ததாலும் வங்கிகளின் எண்ணிக்கை பெருகியதாலும் மேலும் சில இடங்களில் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் பிரின்டிங் பிரஸ்களைத் தொடங்கியது நமது மத்திய அரசாங்கம். 1974-ல் மத்தியப் பிரதேசம் தேவாஸில் ஒரு அச்சகம் தொடங்கப்பட்டது.இந்த இரண்டு ஆலைகளும் எஸ்.பி.எம்.சி.ஐ.எல். [Security Printing and Minting Corporation of India Limited] நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.

இவை தவிர, ஆர்.பி.ஐ. தனியாக பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (Bharatiya Reserve Bank Note Mudran Private Limited) என்கிற பொது நிறுவனத்தை 90-களில் தொடங்கியது. இந்த நிறுவனம் மைசூரிலும் மேற்கு வங்காளம் சல்பானியிலும் கரன்சி மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட ஆவணங் களை அச்சடித்து வருகிறது.

இங்க் பேப்பர் சேஃப்டி

கரன்சி தயாரிக்கும் பிரின்டிங் பிரஸுக்குத் தேவையான பேப்பர்கள், இங்க் போன்றவை தயார் செய்ய மத்தியப்பிரதேசத்தில் இரண்டு ஆலைகளை நடத்தி வருகிறது மத்திய அரசு. ஹோசங்காபாத்தில் பேப்பர் மில், தேவாஸில் சென்சிட்டிவ்வான இங்க் தயாரிக்கும் ஆலை நடத்தப்பட்டு வருகிறது. கரன்சிகளின் ரகசியங்கள் கருதியே இப்படி ஒரு ஏற்பாடு.

கரன்சி ஆர்டர்

கரன்சிகளை எவ்வளவு அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படி பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ஆர்.பி.ஐ.தான் இந்த நிறுவனங்களுக்குச் சொல்கிறது. இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் ஆர்டர்கள் இந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கின்றன. சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் பிரின்டிங் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

பத்தாயிரம் ரூபாய் நோட்டு வரை அச்சடிக்க ஆர்.பி.ஐ.க்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டுமே அச்சடிக்கிறது.

கரன்சி விநியோகம்

ஆர்.பி.ஐ. கொச்சி உட்பட பத்தொன்பது இடங்களில் தனது கரன்சி கருவூலங்களை [chest] வைத்துள்ளது. இங்கிருந்துதான் கரன்சி நோட்டுகள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர, எஸ்.பி.ஐ. உள்பட தேசியமயமாக் கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் 4,200 கிளைக் கருவூலங்கள் வழியாகவும் கரன்சி நோட்டுகள் விநியோகம் செய்யப் படுகின்றன. போலியில்லாத ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பு ஆர்.பி.ஐ.யையே சாரும்.

பிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்


டம்பில் தெம்பு இருக்கும் வரை உழைக்கிறீர்கள்; சம்பாதிக்கிறீர்கள்; சாப்பிடுகிறீர்கள். ஓய்ந்து போய் உட்காரும் காலத்துக்கு என்ன சேர்த்து வைக்கிறீர்கள்…? மாதச் சம்பளம் வாங்கும் நூறு பேரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், முக்கால்வாசிப் பேர்களிடம், ”விக்கிற விலைவாசியில என்னத்தைச் சேர்த்து வைக்கிறது?!” என்கிற புலம்பல்தான் பதிலாகக் கிடைக்கும். இன்றல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன்பும் இப்படித்தான் நிலைமை இருந்தது. இதை உணர்ந்த அரசாங்கம், தொழிலாளர் மற்றும் ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக கொண்டுவந்த திட்டம்தான் பிராவிடண்ட் ஃபண்ட் என்கிற தொழிலாளர் சேமநல நிதி. இது 1952-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் இதனோடு சேர்த்து செயல்படுத்தி வருகிறது அரசாங்கம்.
எவ்வளவு பிடிப்பார்கள்?
இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்த முதல் மாதமே பி.எஃப் பிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பொதுவாக, ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% பி.எஃப்.-ஆக பிடிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் போடும். இது தவிர, பணியாளர் விருப்பப்பட்டால் இன்னொரு 12% தொகையை கூடுதலாக பி.எஃப். கணக்கில் பிடிக்கச் சொல்லாம். ஆனால், இந்தத் தொகைக்கு இணையாக நிறுவனம் எந்தத் தொகையும் செலுத்தாது.
தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12% மற்றும் தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு தற்போது 8.5% வட்டி தரப்படுகிறது. இன்றைய தேதியில் 6,500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு பி.எஃப். கட்டாயம் பிடிக்க வேண்டும் என்பது சட்டம்.
எப்போது பென்ஷன் கிடைக்கும்..?

பொதுவாக, 58-வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஓய்வூதியம் பெறலாம். அப்படியில்லாமல், 10 வருடம் திட்டத்திலிருந்து 50-வது வயதில் பணியில் இருந்து விலகினாலும் முன்கூட்டியே ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. 58-வது வயதில் வர இருக்கும் பென்ஷனில் வருடத்துக்கு 4% குறைத்துக் கொண்டுதான் பென்ஷன் பெறலாம்.
இதில் உறுப்பினராக இருப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இது கணவன்/மனைவிக்கு செல்லும். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். இது கணவன்/மனைவியிடமே வழங்கப்படும். பிள்ளைகளுக்கான பென்ஷன் அவர்களின் 25 வயது வரை வழங்கப்படுகிறது. மணமான மகள்களுக்கும் 25 வயது வரை பென்ஷன் கிடைக்கும்.
கடைசி 12 மாதங்களில் வாங்கிய சம்பளம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்திற்கு பணம் செலுத்திய காலம் போன்றவற்றின் அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலபதிர்கள் ஓய்வூதியத் தொகையை செலுத்தவில்லை என்றாலும் ஓய்வூதியத்துக்கான உத்தரவாதத்தை அரசு அளிக்கிறது. பென்ஷனுக்கு அடிப்படை வரம்புக்கு உட்பட்டு வரி கட்ட வேண்டி வரும்.
பத்தாண்டுக்கும் குறைவான பணிக் காலத்துடன் ஒரு நிறுவனத்திலிருந்து விலகும் போது, சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். வேறு ஏதாவது நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் பொழுது இதைத் தொடர்ந்து கொள்ளலாம். இந்தச் சான்றிதழ் வைத்திருக்கும் நபர் 58 வயது பூர்த்தியாகும் முன்பே மரணம் அடைந்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு பணிக் காலத்தைக் கணக்கில் கொள்ளாமலேயே ஓய்வூதியம் வழங்கப்படும்.
பி.எஃப் திட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். இதற்கு என தனியாக ஊழியரின் கணக்கில் பணம் எதுவும் பிடிக்கப்படுவதில்லை. இதற்கான பங்களிப்பாக தொழிலதிபர்கள், ஊழியர்களின் மொத்தச் சம்பளத்தில் 0.5 சதவிகிதம் செலுத்த வேண்டும். இதன் மூலம் பணியில் இருக்கும் போது இறந்தால் அவரது குடும்பத்துக்கு 1,00,000 ரூபாய் வரை காப்பீடுத் தொகையாக வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளை தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு எடுப்பதை ஊக்கப்படுத்த 2008-ல் நடவடிக்கை எடுத்தது அரசு. அதாவது, மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு எடுத்தால் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பி.எஃப். சந்தா தொகையை மூன்று வருடங்களுக்கு அரசே செலுத்தும். இதற்காக 11-ம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2007-12) ரூ.1,800 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசாங்கம்.
சுய தொழில் செய்பவர்கள், தனியார் நிறுவனங்களில் பி.எஃப். பிடிக்கப்படாதவர்கள் பயன் அடையும் விதமாக கொண்டு வரப்பட்டதுதான் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட். இதில், ஏற்கெனவே அலுவலகத்தில் பி.எஃப். பிடிக்கப்படுபவர்களும் சேரலாம். இந்தக் கணக்கை தபால் அலுவலகம் மற்றும் முன்னணி வங்கிகளில் தொடங்கும் வசதி இருக்கிறது. 15 வருட திட்டமான இதில் ஓராண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரை முதலீடு செய்து வரிச்சலுகை பெறலாம். ஆண்டுக்கு 8% கூட்டு வட்டி வழங்கப்படும். கடன் பெறும் வசதியும் உள்ளது. பணம் கட்ட ஆரம்பித்து மூன்றாவது ஆண்டுத் தொடக்கத்தில் இருக்கும் தொகையில் 25% வரை கடன் பெறும் வசதி உள்ளது. 16-வது நிதியாண்டில் முடித்துக் கொள்ளலாம். ஆனால், பணம் செலுத்தாமல் மேலும் 5 வருடங்களுக்கு முதலீட்டைத் தொடரும் வசதியும் உள்ளது
”பிராவிடண்ட் ஃபண்ட் என்பது மக்க ளுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கியமானது. இது பற்றிய விழிப்புணர்வு தொழில் நிறுவனங்களுக்கு வந்துவிட்டது. ஆனால், இதை பணியாளர்கள் சரியாகப் பயன்படுத்தாமல் உள்ளனர். மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. தற்போது நம் உடம்பில் நன்றாகவே தெம்பு இருக்கிறது. அதிகமாக பணம் சம்பாதிக்க முடிகிறது. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், எப்போதுமே அப்படி இருக்காது. அது போன்றவர்களுக்கு கை கொடுக்கும் திட்டம்தான் பி.எஃப்.
ஒரு வேலையில் சில காலம் இருந்து விட்டு வேறு நிறுவனத்துக்கு மாறுவார்கள். அப்போது, ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டிருக்கும் பி.எஃப். கணக்கைத் தொடர மாட்டார்கள். புதிய நிறுவனத்தில் புதிய பி.எஃப். கணக்கை ஆரம்பித்து முதலில் உள்ள சர்வீஸை விட்டுவிடுவார்கள். இது மிகப் பெரிய தவறு..! இப்படி பல கம்பெனிகள் மாறுபவர்களுக்கு கடைசியில் ஓய்வூதியம் பெறுவதற்கான பத்து ஆண்டு சர்வீஸ் இல்லாமலே போய்விடும். பி.எஃப். திட்டத்தில் தற்போது ஏராளமான சலுகைகளை அரசு செய்து கொடுத்திருக்கிறது. பழைய நிறுவனத்தின் பி.எஃப். கணக்கை புதிய நிறுவனத்தில் தொடர, புதிய நிறுவனத்திடம் பழைய நிறுவனத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பி.எஃப். எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். மேலும், இந்தப் பணத்தை இடையில் எடுக்காமல் கடைசி வரைக்கும் வைத்திருந்தால் முதுமைக் காலம் சந்தோஷமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.”
பணி மாறும் போது ஏற்கனவே உள்ள கணக்கில் இருக்கும் தொகையை புதிய கணக்கிற்கு 30 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம். தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் ஃபார்ம் 13 என்ற விண்ணப்பத்தில் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்தில் கொடுத்த வருங்கால வைப்பு நிதி எண்ணை நிரப்பிக் கொடுத்தால் போதும். பி.எஃப். சான்றிதழ் வைத்திருந்தால் அதன் நகலை இணைத்து பழைய கணக்கை இணைத்துக் கொள்ளலாம்.

ஹாபியிலும் காசு பார்க்கலாம்!


னிதர்கள் எத்தனை விதமோ, அத்தனைவிதமாக இருக்கிறது அவர்களின் பொழுதுபோக்குகளும்..! பாட்டுக் கேட்பது, டி.வி பார்ப்பது, எதையாவது விளையாடுவது என்று ஆளுக்கு ஆள் சில வழக்கத்தை ஹாபியாக வைத்திருப்பார்கள். சிலர், பொழுதுபோக்குவதிலும் காசு பார்க்கிறார்கள். ஹாபியிலும் காசு கிடைக்குமா..?
‘‘ஏன் கிடைக்காது? ஹாபியாக ஸ்டாம்ப் சேகரிக்க ஆரம்பித்த என்னிடம் இப்போது இருக்கும் கலெக்ஷனின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்’’ என்கிறார் சென்னையில் ஸ்பென்ஸர் பிளாஸாவை ஒட்டிய நடைபாதையில் கடை போட்டிருக்கும் சீதா ராமன். பழங்கால நாணயங்கள், கரன்ஸிகள், அரிய ஸ்டாம்ப்கள் என்று விதவிதமாகச் சேகரித்து வைத்திருக்கிறார்
.
“ஸ்டாம்ப்கள் சேர்ப்பது, எட்டு வயதில் விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம். ஒருகட்டத்தில் வீட்டை அடைக்கும் அளவுக்கு ஸ்டாம்ப்கள் குவிந்துவிட்டன. என்ன செய்ய லாம்..? என்று யோசித்தபோது, அதைக் காசுகொடுத்து வாங்கிக்கொள்ள ஆட்கள் இருப்பது தெரிந்தது. கொஞ்சத்தை விற்றுவிடலாம் என்று தீர்மானித்தேன். அதில் கிடைத்த காசைப் பார்த்ததும், அதையே தொழிலாக்கி விட்டேன்.
இப்போது என்னிடம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், ஸ்டாம்ப்கள் இருக்கின் றன. மராட்டிய மன்னர் வீர சிவாஜி காலத்து தங்க நாணயத்தின் இன்றைய விலை, இரண்டு லட்சம் ரூபாய் வரை போகிறது. மற்றபடி ரூபாய் 25, 50 மதிப்பிலான நாணயங்கள் இருக்கின்றன. ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு விலை போகிற ஸ்டாம்ப்களும் என்னிடம் இருக்கின்றன’’ என்றார் சீதாராமன்.
பழைய நாணயங்களைத் தேடிப்போய் மூர்மார்கெட்டில் மொத்தமாக வாங்கு கிறார். இதுதவிர, தங்களிடமுள்ள பழைய நாணயங்கள், ஸ்டாம்ப்களை விற்க வருபவர்களிடமும் வாங்கிக் கொள்கிறார். உள்நாடு, வெளிநாடு என்று கிட்டத்தட்ட ஐம்பது பேர் இவருடைய நிரந்தர வாடிக்கையாளர்கள். இதில் எப்படியும் ஐந்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் மாத வருமானம் வருகிறதாம்.
சின்னத்திரை பிரபலம் மோகன்ராம் அரிய தபால்தலைகளைச் சேகரித்து வருகிறார். ‘‘நடிகை மர்லின் மன்றோ தபால்தலையை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள தகவலறிந்து, சினிமாத்துறை கலைஞர்கள் தொடர்பான தபால்தலைகளின் மீது தீராத காதல்! அங்கே ஆரம்பித்து, எட்டு வருடமாக தீவிர ஸ்டாம்ப் சேகரிப்பில் இறங்கி இருக்கிறேன். உலக சினிமாவின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையிலான தபால்தலைகள் ஆயிரத்துக்கும்மேல் என்னிடம் இருக்கின்றன.
என் கலெக்ஷனில் இருப்பவை எல்லாமே முத்திரை குத்தப்படாத புதிய ஸ்டாம்ப் கள்தான்! முத்திரை குத்தப்பட்டது எனில், கவரோடு இருந்தால்தான் மதிப்பு. நடிகர் சுனில்தத், என் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய கடிதத்தில் சுனில்தத்தின் மனைவி நர்கீஸ் படம் போட்ட ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு இருந்தது. என்ன சுவாரஸ்யம் பாருங்கள்…’’ என்று சிலாகித்தார். இவர் ‘உலக சினிமா’ பற்றிய அஞ்சல்தலை கண்காட்சி வைத்து, அதற்கு விருதும் வாங்கியிருக்கிறார்.
‘‘ஸ்டாம்ப்தானே என்று அலட்சியமாக நினைக்க வேண்டாம். சின்னதாகச் சேர்த்துவைத்தால், பிற்காலத் தில் நல்ல மதிப்பு கிடைக்கும்’’ என்பது இவரது வாதம். இதற்காக, மோகன்ராம் தன் மாத பட்ஜெட்டில் ரூபாய் 500 வரை ஒதுக்கிறார்.
‘‘போஸ்ட் ஆபீஸ்களில் தபால்தலை வாங்கும்போது, தவறாக அச்சிடப்பட்ட ஸ்டாம்ப் ஏதாவது கிடைத்தால், அவசரப்பட்டு வேகத்தோடு அதைத் திருப்பிக் கொடுத்துவிடாதீர்கள். அது, ஜாக்பாட்! ஸ்டாம்ப் சேகரிப்போர் மத்தியில் ஆயிரக் கணக்கில்… ஏன் லட்சக்கணக்கில்கூட விலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் தபால்தலைகள் சேகரித்து வரும் விக்டர்.
‘‘என்னிடம் இரண்டு லட்சம் ஸ்டாம்ப்கள் இருக்கின்றன. சுமார் 70 நாடுகளில் எனக்கு பேனா நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இந்திய தபால்தலைகளை அனுப்பி, பதிலுக்கு அவர்கள் நாட்டின் தபால்தலைகளை வாங்கிச் சேகரிப்பேன். அப்படி விளையாட்டாகச் சேர்க்க ஆரம்பித்து, இந்த அளவுக்கு வந்திருக்கிறேன். அன்றைக்கு குறைந்த முதலீட்டில் சேர்த்த ஸ்டாம்புகளை விற்பதன் மூலம், இன்று எனக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் வருமானம் வருகிறது’’ என்கிறார் விக்டர்.
ஸ்டாம்ப் சேகரிப்பவர்களுக்கு வழிகாட்டுகிறது, சென்னையில் உள்ள தென்னிந்திய தபால்தலை சேகரிப்போர் சங்கம். இதுபோன்ற அமைப்புகள் பல முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன.
பழங்கால நாணயங்கள் சேகரிப்பவர்களும் நல்ல லாபம் பார்ப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். ‘மெட்ராஸ் காயின்ஸ் சொசைட்டி’யின் முன்னாள் பொருளாளரும் தற்போதைய கமிட்டி உறுப்பினரு மான சங்கரன்ராமன், நீண்ட ஆண்டுகளாக இதுபோன்று நாணயங்களைச் சேகரித்து வருகிறார். அவரைச் சந்தித்தோம்,
‘‘பல்லவர் கால நாணயங்களைத் தேடிப்பிடித்து சேகரித்து வருகிறேன். இந்த பழங்கால நாணயங்களைச் சுற்றி, உலக அளவில் அமோக வர்த்தகம் நடந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இவற்றை வாங்கி விற்கும் டீலர்களே 50-க்கும் மேல் இருக்கிறார்கள். சேகரிப்பவர்கள் எண்ணிக்கையோ பல ஆயிரம். எங்கள் சொசைட்டியில் மட்டும் 400 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அரிய நாணயங்களைச் சேர்ப்பது ஒரு சிறந்த முதலீடாக இருக்கிறது’’ என்றவர்,
‘‘1803-ல் சென்னை மாகாணத்தில் ‘அஞ்சு பணம்’ நாணயங்கள் 100 மட்டுமே அச்சிடப்பட்டன. இதன் இப்போதைய சர்வதேச சந்தை மதிப்பு 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல். 1,300 வருடங்களுக்கு முந்தைய பல்லவர்கால காசு ஐந்து ஆண்டுக்கு முன் 200 ரூபாய்க்கு போனது. இன்றைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பதில்லை’’ என்றார் சங்கரன்ராமன்.
சென்னை, ஸ்பென்ஸர் பிளாஸாவில் ‘கலெக்டர்ஸ் பேரடைஸ்’ என்ற பெயரில் பழங்கால கலைப் பொருட்களை விற்பனை செய்துவரும் அஜித் ஜெயின், ‘‘பழங்கால சுவர்க் கடிகாரங்கள், வாட்ச்கள், பேனாக்கள் போன்றவை நன்றாக இயங்கும் கண்டிஷனில் வைத்திருந்தால், அதற்கு நல்ல மரியாதை இருக்கிறது.
ஒருவேளை இயங்காத நிலையில் இருந்தாலும், அதைச் சீர்செய்து புதுப்பிக்கத்தனியே வல்லுநர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்போடுதான் இந்த வியாபாரம் நடக்கிறது. செலவு மற்றும் சீர் செய்யும் காலத்துக்கு ஏற்பவும், கடிகாரங்களில் உள்ள சிறப்பு அம்சங்களுக்கு ஏற்பவும் விலை நிர்ணயம் செய்வோம்’’ என்றார்.
ஓலைச்சுவடி, போஸ்ட் கார்ட், தீப்பெட்டி அட்டை, பழைய கிராமபோன், கிரெடிட் கார்ட், திருமண அழைப்பிதழ், விதவிதமான கண்ணாடிப் பொருட்கள், பதக்கம், பேனா, ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், பத்திரம்(ஸ்டாம்ப் பேப்பர்), முத்திரை மோதிரம், தவளை, கரடி போன்ற ஒரே வகையான விளையாட்டு பொம்மைகள், புத்தகம், கேமரா, சிகரெட் லைட்டர், கம்மல், மூக்குத்தி, வளையல், சுவர்க்கடிகாரம், கைக்கடிகாரம், டெலிபோன், டேபிள் வெயிட், காலணி, சிப்பி, சென்ட் பாட்டில்… இப்படி நீள்கிறது சேகரிப்புப் பொருட்களின் பட்டியல்.
தங்கள் ரசனைக்கு ஏற்ப அறை முழுக்க ஏதாவது ஒரு பொருளைச் சேகரித்து அழகு பார்ப்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இன்று வெளிநபர்களுக்கு வேலையற்ற வேலையாகவும் தெரியும் இந்த ஜாலி ஹாபி, எதிர்காலத்தில் விழி விரிய வைக்கும் சேமிப்பாக மாறிவிடும்.
எந்தப் பொருளையும் அதற்கு எதிர்காலத்தில் என்ன மதிப்பு இருக்கும் என்பதைக் கணித்துச் சேர்ப்பது நல்லது. அதேநேரத்தில், பொழுதுபோக்காக, சந்தோஷத்துக்காக சேர்ப்பவர் எனில் இது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
இந்த ஹாபிகள் மூலம் மனதுக்குள் குதூகலம் வரும் அதேநேரம், காசும் கிடைக்கிறது என்பது குஷியான விஷயம்தானே!
ரிலீஸ் லாபம்!
ரு தலைவரின் நினைவாக புதிதாக வெளியிடப் படும் ஸ்டாம்போ, நாணயமோ மீண்டும் அச்சிடப் படுவதில்லை. அதனால், வெளியிடப்படும்போதே, வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவற்றின் மதிப்பு எப்போதும் ஏறுமுகம்தான். உதாரணத்துக்கு… இந்திரா காந்தி, காமராஜர் உருவம் பதித்த நாணயங் களைக் குறிப்பிடலாம். இந்திராகாந்தி உருவம் கொண்ட 5, 10, 20, 100 ரூபாய் நாணய செட்டின் மதிப்பு இப்போது கிட்டத்தட்ட 3,500 ரூபாய் வரை இருக்கிறதாம். இதேபோன்று ‘காமராஜர் காயின் செட்’டின் மதிப்பு 1,000 ரூபாய்.
ஸ்டாம்புக்கும் முன்பதிவு!
பூடான் நாடு விதவிதமான அழகிய ஸ்டாம்ப்களை வெளியிட்டு, அதிக அந்நியச் செலாவணியைச் சம்பாதித்து வருகிறது. ஸ்டாம்ப் வெளியிடும்முன் ‘இதுபோன்ற ஸ்டாம்ப்களை வெளியிடப் போகிறோம். ஸ்டாம்ப் டீலர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்’ என்று பரவலாக விளம்பரம் செய்கிறது. இதன்மூலம், அந்தநாடு அதிக ஸ்டாம்ப்களை வெளியிட்டு, லாபம் பார்க்கிறது. இந்த ஸ்டாம்ப்களை வாங்குவதற்காக இந்தியாவையைச் சேர்ந்த முன்னணி டீலர்கள், பூடானுக்கு விமானத்தில் பறக்கிறார்கள் என்பது புருவம் உயர்த்த வைக்கும் ஒரு தகவல்!
‘சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘பாபா’ ரஜினிகாந்த் பட விளம்பரத்தோடு வந்த 25 பைசா போஸ்ட் கார்டின் இன்றைய மதிப்பு, 5 ரூபாய். ‘1948-ல் வெளியான பத்து ரூபாய் காந்தி தபால்தலையின் இன்றைய மதிப்பு 1,500 ரூபாய்க்கு மேல்’ என்று மார்க்கெட்டில் சொல்கிறார்கள்!
எப்படி சேமிக்கலாம்?
பால்தலைகள் புதிகாக வெளியிடப்படும்போது அவற்றை வாங்கிச் சேர்க்கலாம். முக்கிய நகரங்களிலுள்ள தலைமை தபால் அலுவலகங்களில் தபால்தலை சேகரிப்புக்கு என்று தனிப்பிரிவு இருக்கிறது. இங்கு முன்பணம் கட்டி உறுப்பினராக சேரும்பட்சத்தில், புதிதாக வெளியிடப்படும் தபால்தலைகள் வீடு தேடி வந்துவிடும். வங்கிகள், பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்து, முத்திரை குத்தப்பட்ட அந்நிய நாட்டு ஸ்டாம்ப்களை வாங்கிச் சேகரிக்கலாம். சக சேகரிப்பாளர்களிடம் விலைக்குக் கிடைக்கும் ஸ்டாம்ப்களை வாங்கலாம்.
நாணயங்களைப் பொறுத்தவரை தாமிரபரணி, வைகை, அமராவதி, பெண்ணையாறு, காவிரி போன்ற ஆற்றுப் படுகைகளில் பழங்கால நாணயங்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றைத் தோண்டி எடுக்கும் ஆட்களிடம் கேட்டுப் பெறலாம்.
திருப்பதி கோயில் உண்டியலில் விழும் பழங்கால தாமிர நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் ஏலம் விடப் படுகின்றன. அண்மையில்கூட, 7 டன் எடையுள்ள நாணயங் கள் ஏலம் விடப்பட்டன. இதை டீலர்கள் வாங்கி, மதிப்பு கூடிய நாணயங்களைத் தனியே பிரித்து, நல்ல விலைக்கு விற்று காசு பார்க்கிறார்கள். இதேபோல், மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட கோயில் உண்டியல்களில் விழும் வெளிநாட்டு நாணயங்களை யும் வாங்கி டீலர்கள் விற்று வருகிறார்கள்.
பொதுவாக, இவ்விதமாகச் சேகரிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சந்தித்து சேகரிப்புகளை பரிமாறிக் கொள்வதோடு… விற்பனையும் செய்து கொள்கி றார்கள்