Saturday, April 9, 2011

பிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்


டம்பில் தெம்பு இருக்கும் வரை உழைக்கிறீர்கள்; சம்பாதிக்கிறீர்கள்; சாப்பிடுகிறீர்கள். ஓய்ந்து போய் உட்காரும் காலத்துக்கு என்ன சேர்த்து வைக்கிறீர்கள்…? மாதச் சம்பளம் வாங்கும் நூறு பேரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், முக்கால்வாசிப் பேர்களிடம், ”விக்கிற விலைவாசியில என்னத்தைச் சேர்த்து வைக்கிறது?!” என்கிற புலம்பல்தான் பதிலாகக் கிடைக்கும். இன்றல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன்பும் இப்படித்தான் நிலைமை இருந்தது. இதை உணர்ந்த அரசாங்கம், தொழிலாளர் மற்றும் ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக கொண்டுவந்த திட்டம்தான் பிராவிடண்ட் ஃபண்ட் என்கிற தொழிலாளர் சேமநல நிதி. இது 1952-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1971 முதல் ஓய்வூதியத் திட்டத்தையும் இதனோடு சேர்த்து செயல்படுத்தி வருகிறது அரசாங்கம்.
எவ்வளவு பிடிப்பார்கள்?
இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்த முதல் மாதமே பி.எஃப் பிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பொதுவாக, ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12% பி.எஃப்.-ஆக பிடிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் போடும். இது தவிர, பணியாளர் விருப்பப்பட்டால் இன்னொரு 12% தொகையை கூடுதலாக பி.எஃப். கணக்கில் பிடிக்கச் சொல்லாம். ஆனால், இந்தத் தொகைக்கு இணையாக நிறுவனம் எந்தத் தொகையும் செலுத்தாது.
தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12% மற்றும் தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்வூதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு தற்போது 8.5% வட்டி தரப்படுகிறது. இன்றைய தேதியில் 6,500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு பி.எஃப். கட்டாயம் பிடிக்க வேண்டும் என்பது சட்டம்.
எப்போது பென்ஷன் கிடைக்கும்..?

பொதுவாக, 58-வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஓய்வூதியம் பெறலாம். அப்படியில்லாமல், 10 வருடம் திட்டத்திலிருந்து 50-வது வயதில் பணியில் இருந்து விலகினாலும் முன்கூட்டியே ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. 58-வது வயதில் வர இருக்கும் பென்ஷனில் வருடத்துக்கு 4% குறைத்துக் கொண்டுதான் பென்ஷன் பெறலாம்.
இதில் உறுப்பினராக இருப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இது கணவன்/மனைவிக்கு செல்லும். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும். இது கணவன்/மனைவியிடமே வழங்கப்படும். பிள்ளைகளுக்கான பென்ஷன் அவர்களின் 25 வயது வரை வழங்கப்படுகிறது. மணமான மகள்களுக்கும் 25 வயது வரை பென்ஷன் கிடைக்கும்.
கடைசி 12 மாதங்களில் வாங்கிய சம்பளம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் திட்டத்திற்கு பணம் செலுத்திய காலம் போன்றவற்றின் அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலபதிர்கள் ஓய்வூதியத் தொகையை செலுத்தவில்லை என்றாலும் ஓய்வூதியத்துக்கான உத்தரவாதத்தை அரசு அளிக்கிறது. பென்ஷனுக்கு அடிப்படை வரம்புக்கு உட்பட்டு வரி கட்ட வேண்டி வரும்.
பத்தாண்டுக்கும் குறைவான பணிக் காலத்துடன் ஒரு நிறுவனத்திலிருந்து விலகும் போது, சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். வேறு ஏதாவது நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் பொழுது இதைத் தொடர்ந்து கொள்ளலாம். இந்தச் சான்றிதழ் வைத்திருக்கும் நபர் 58 வயது பூர்த்தியாகும் முன்பே மரணம் அடைந்துவிட்டால் அவரது குடும்பத்தினருக்கு பணிக் காலத்தைக் கணக்கில் கொள்ளாமலேயே ஓய்வூதியம் வழங்கப்படும்.
பி.எஃப் திட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். இதற்கு என தனியாக ஊழியரின் கணக்கில் பணம் எதுவும் பிடிக்கப்படுவதில்லை. இதற்கான பங்களிப்பாக தொழிலதிபர்கள், ஊழியர்களின் மொத்தச் சம்பளத்தில் 0.5 சதவிகிதம் செலுத்த வேண்டும். இதன் மூலம் பணியில் இருக்கும் போது இறந்தால் அவரது குடும்பத்துக்கு 1,00,000 ரூபாய் வரை காப்பீடுத் தொகையாக வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளை தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு எடுப்பதை ஊக்கப்படுத்த 2008-ல் நடவடிக்கை எடுத்தது அரசு. அதாவது, மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு எடுத்தால் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பி.எஃப். சந்தா தொகையை மூன்று வருடங்களுக்கு அரசே செலுத்தும். இதற்காக 11-ம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2007-12) ரூ.1,800 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசாங்கம்.
சுய தொழில் செய்பவர்கள், தனியார் நிறுவனங்களில் பி.எஃப். பிடிக்கப்படாதவர்கள் பயன் அடையும் விதமாக கொண்டு வரப்பட்டதுதான் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட். இதில், ஏற்கெனவே அலுவலகத்தில் பி.எஃப். பிடிக்கப்படுபவர்களும் சேரலாம். இந்தக் கணக்கை தபால் அலுவலகம் மற்றும் முன்னணி வங்கிகளில் தொடங்கும் வசதி இருக்கிறது. 15 வருட திட்டமான இதில் ஓராண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரை முதலீடு செய்து வரிச்சலுகை பெறலாம். ஆண்டுக்கு 8% கூட்டு வட்டி வழங்கப்படும். கடன் பெறும் வசதியும் உள்ளது. பணம் கட்ட ஆரம்பித்து மூன்றாவது ஆண்டுத் தொடக்கத்தில் இருக்கும் தொகையில் 25% வரை கடன் பெறும் வசதி உள்ளது. 16-வது நிதியாண்டில் முடித்துக் கொள்ளலாம். ஆனால், பணம் செலுத்தாமல் மேலும் 5 வருடங்களுக்கு முதலீட்டைத் தொடரும் வசதியும் உள்ளது
”பிராவிடண்ட் ஃபண்ட் என்பது மக்க ளுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கியமானது. இது பற்றிய விழிப்புணர்வு தொழில் நிறுவனங்களுக்கு வந்துவிட்டது. ஆனால், இதை பணியாளர்கள் சரியாகப் பயன்படுத்தாமல் உள்ளனர். மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. தற்போது நம் உடம்பில் நன்றாகவே தெம்பு இருக்கிறது. அதிகமாக பணம் சம்பாதிக்க முடிகிறது. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், எப்போதுமே அப்படி இருக்காது. அது போன்றவர்களுக்கு கை கொடுக்கும் திட்டம்தான் பி.எஃப்.
ஒரு வேலையில் சில காலம் இருந்து விட்டு வேறு நிறுவனத்துக்கு மாறுவார்கள். அப்போது, ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டிருக்கும் பி.எஃப். கணக்கைத் தொடர மாட்டார்கள். புதிய நிறுவனத்தில் புதிய பி.எஃப். கணக்கை ஆரம்பித்து முதலில் உள்ள சர்வீஸை விட்டுவிடுவார்கள். இது மிகப் பெரிய தவறு..! இப்படி பல கம்பெனிகள் மாறுபவர்களுக்கு கடைசியில் ஓய்வூதியம் பெறுவதற்கான பத்து ஆண்டு சர்வீஸ் இல்லாமலே போய்விடும். பி.எஃப். திட்டத்தில் தற்போது ஏராளமான சலுகைகளை அரசு செய்து கொடுத்திருக்கிறது. பழைய நிறுவனத்தின் பி.எஃப். கணக்கை புதிய நிறுவனத்தில் தொடர, புதிய நிறுவனத்திடம் பழைய நிறுவனத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பி.எஃப். எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். மேலும், இந்தப் பணத்தை இடையில் எடுக்காமல் கடைசி வரைக்கும் வைத்திருந்தால் முதுமைக் காலம் சந்தோஷமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.”
பணி மாறும் போது ஏற்கனவே உள்ள கணக்கில் இருக்கும் தொகையை புதிய கணக்கிற்கு 30 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம். தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் ஃபார்ம் 13 என்ற விண்ணப்பத்தில் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்தில் கொடுத்த வருங்கால வைப்பு நிதி எண்ணை நிரப்பிக் கொடுத்தால் போதும். பி.எஃப். சான்றிதழ் வைத்திருந்தால் அதன் நகலை இணைத்து பழைய கணக்கை இணைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment