Saturday, April 9, 2011

சுருட்டக்கூடிய டி.வி.!


டி.வி.யை பாயைப் போல சுருட்ட முடியுமா என்று கேட்டால், `இதென்ன அபத்தமான கேள்வி?’ என்பீர்கள். ஆனால் அப்படி சுருட்டி வைக்கக்கூடிய டி.வி. சந்தைக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பின்லாந்து நாட்டின் `மில்லேனியம் டெக்னாலஜி பிரைஸ்’, புதிய கண்டுபிடிப்புக்கான `நோபல் பரிசாக’க் கருதப்படுகிறது. அந்த விழாவுக்கு அழைக்கப்பட்டுச் சென்றார் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரண்ட். அங்குதான் அவர், சுருட்டக்கூடிய தொலைக்காட்சி பற்றிய விவரத்தைத் தெரிவித்தார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சியின் மூலம், அம்மாதிரியான தொலைக்காட்சி விரைவில் சாத்தியம் ஆகும் என்கிறார் இவர்.
“பிளாஸ்டிக் மின்னணுப் பொருட்கள் தற்போது முக்கியமான ஆய்வு விஷயங்களாக அமைந்திருக்கின்றன. வருங்காலத்தில் இத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறுவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நவீன `எம்பி3 பிளேயர்களிலும்’, நவீன செல்போன்களிலும் ஏற்கனவே ஒளி உமிழும் `ஆர்கானிக் டையோடுகள்’ பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைக் கொண்டு, சுவரில் ஒட்டக்கூடிய டி.வி.யை தயாரிக்கலாம். குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்தும் விளக்குகளையும் உருவாக்கலாம்” என்கிறார் ரிச்சர்ட்.
இந்த சுருட்டக்கூடிய தொலைக்காட்சி, மிக மெல்லியதாக இருப்பது, குறைந்த மின்சக்தியைப் பயன்படுத்துவதோடு அல்லாமல், அவற்றின் படக் காட்சிகள் பிரகாசமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என்றும் ரிச்சர்ட் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment