Saturday, April 9, 2011

அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா!


>தினமும் இதே சாம்பாரும் சட்னியும்தானா? வாய்க்கு ருசியா ஒரு குருமா, ஒரு கிரேவி… ஒண்ணு கிடையாது நம்ம வீட்டுல!’’ என்று உங்கள் இல்லத்தரசரோ, அருமைப் பிள்ளையோ அலுத்துக்கொள்ள…
‘‘நான் எங்கே போவேன் மசாலாவுக்கும், கிரேவிக்கும்! இது என்ன ஹோட்டலா?’’ என்று அங்கலாய்க்கிறீர்களா?
தூக்கியெறியுங்கள், உங்கள் கவலையை! ஹோட்டல் சுவையைவிடவும் பிரமாதமான கைப்பக்குவத்தில் எல்லா சைட் டிஷ்களையும் நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.
இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, ப்ரெட், பூரி, நாண், பரோட்டா, சாதம் என்று அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள ஏற்ற ருசியான முப்பது வகை மசாலா – குருமாக்கள் செய்யும் விதத்தைக் கற்றுத் தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். இவை எல்லாமே குறைந்த விலையில் சுலபமாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் செய்யக்கூடிய ஐட்டங்கள் என்பது கூடுதல் சிறப்பு! செய்து, பரிமாறுங்கள்! அப்புறம் பாருங்கள்… வீட்டில் உங்களுக்குக் கிடைக்கும் அமோக பாராட்டை!
ணமணக்கும் மசாலா ஐட்டங்கள் தயாரிப்பில், கரம் மசாலா பொடி மற்றும் கறி மசாலா பொடி உதவிக்கரம் நீட்டுகின்றன. இந்த இணைப்பிதழில் அணிவகுக்கும் மசாலா செய்முறைகளில் இது பற்றிய குறிப்புகள் வரும். கரம் மசாலா பொடியும் கறி மசால் பொடியும் தயாரிப்பது எப்படி என்பது மட்டும் இங்கே…

பனீர் பட்டர் மசாலா! கரம் மசாலா பொடி: இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத்தான் இப்படி!
செய்முறை: லவங்கம் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், பட்டை – 4, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்… இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!
கறி மசாலா பொடி: இதை, மற்ற பொடிகளைப் போல மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.
செய்முறை: காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் – 1 கப், தனியா – அரை கப், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 2 டேபிள் ஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 5. இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அரைத்தால் கறி மசாலா ரெடி!
தேவையானவை:
பனீர் – 200 கிராம், பெரிய வெங்காயம் -3, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ஃப்ரெஷ் க்ரீம்!), காய்ந்த வெந்தயக் கீரை – 2 டீஸ்பூன்.
செய்முறை:
பனீரை சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள். இப்போது, வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள். அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வையுங்கள். வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள். கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள். ஃப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.
குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பனீர் பட்டர் மசாலா!
செட்டி நாடு குருமா!தேவையானவை:
கத்தரிக்காய் – 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை — சிறிதளவு, பூண்டு – 2 பல்.
தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:
முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள். பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.
மட்டர் பனீர் மசாலா!தேவையானவை:
பட்டாணி -1 கப், பனீர் -200 கிராம், பெ. வெங்காயம்-3, தக்காளி – 5, இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, முந்திரி அரைத்த விழுது – தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை:
பட்டாணியை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு நன்றாகக் காய விடுங்கள். அதில், வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள். அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள். கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள். அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!
வெஜிடபிள் குருமா!தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5.
செய்முறை: காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!
குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.
பீஸ் மசாலா!தேவையானவை:
பட்டாணி – 1 கப், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 3, புளிக்காத தயிர் – கால் கப், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு.
செய்முறை:
பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, ஆறவைத்து அரைத்தெடுங்கள்.
இப்போது, வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.
புதினா குருமா!தேவையானவை:
பச்சை பட்டாணி – 1 கப், பெரிய வெங்காயம் – 2.
தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா – 1 கட்டு, தேங்காய்த்துருவல் – 1 கப், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 5, சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 6, பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!
பெப்பர் பீஸ் மசாலா!தேவையானவை:
பட்டாணி – 2 கப், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – கைப்பிடியளவு, உப்பு – சிறிதளவு.
வறுத்துப் பொடிக்க: மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன்.
செய்முறை:
பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், அதுதான்… ‘பிரமாதம்’ என்று சொல்லவைக்கும் பெப்பர் பீஸ் மசாலா!
தக்காளி குருமா!தேவையானவை:
பெ. வெங்காயம் – 3, தக்காளி – 6 முதல் 8 வரை, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 கப், கசகசா – 1 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை – சிறிது.
அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 6, பட்டை, லவங்கம் – தலா 1, சோம்பு – கால் டீஸ்பூன், மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
தளதள தக்காளி குருமா மணமணக்கும்!
கோபி மசாலா!தேவையானவை:
காலிஃப்ளவர் – சிறிய பூவாக 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
தாளிக்க: பட்டை – 1, சீரகம் – அரை டீஸ்பூன்.
அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 6 பல், மிளகாய்த் தூள், கசகசா – தலா 2 டீஸ்பூன், தனியா தூள், மிளகு – தலா 1 டீஸ்பூன், சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 8.
செய்முறை:
காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேருங்கள். அதில், பத்து நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு, வெளியில் எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி, நிறம் மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
கலக்கல் கோபி மசாலா நிமிஷத்தில் தயார்!
மசாலா குருமா!தேவையானவை:
விரும்புகிற காய் (கலந்ததாகவோ, தனியாகவோ) நறுக்கியது – 2 கப், வெங்காயம் – 3, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு. தாளிக்க: சோம்பு – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.
மசாலா, குருமா… இரண்டின் சுவையையும் அனுபவியுங்கள்.
ஆலு மசாலா!தேவையானவை: உருளைக் கிழங்கு – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள், சீரகத் தூள் – தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் அல்லது மாங்காய் (அம்சூர்) தூள் – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை:
உருளைக் கிழங்கை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்குங்கள். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு துண்டுகள், உப்பு சேர்த்து, தீயை மிதமாக வைத்து நன்கு வதக்குங்கள். கிழங்கு முக்கால் பதம் வெந்ததும், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு அல்லது மாங்காய்த் தூள் சேர்த்து, கிழங்கு நன்கு வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
ஆளையே அள்ளும் இந்த ஆலு மசாலா!
ஈஸி குருமா!தேவையானவை:
நீங்கள் விரும்புகிற காய்கறிகள் – 2 கப், பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், இஞ்சி – 1 சிறிய துண்டு, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 4, சோம்பு – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, கசகசா – 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை 5 நிமிடம் வதக்கி, இறக்கி, ஆறவிட்டு நைஸாக அரையுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த காய்கறிகள், அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சொல்ல மட்டுமல்ல… செய்வதற்கும் ரொம்ப ஈஸி இந்த குருமா! குறிப்பு: இந்த குருமாவில் மீல்மேக்கர் சேர்க்க விரும்புகிறீர்களா? மீல்மேக்கர் உருண்டைகளை, கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து, பிறகு அவற்றைப் பச்சைத் தண்ணீரில் போட்டு 2 முறை கழுவி, 2 துண்டுகளாக்குங்கள். வெங்காயத்தை வதக்கும்போதே, இவற்றையும் சேர்த்து வதக்கி, சேர்த்துக் கொள்ளவேண்டியதுதான்.
தம் ஆலு!தேவையானவை:
உருளைக்கிழங்கு – அரை கிலோ, பெ. வெங்காயம் – 3, தக்காளி – 3, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், தக்காளி – 3, எண்ணெய், உப்பு – தேவைக்கு.
பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4, மிளகு, தனியா – தலா 2 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பட்டை, ஏலக்காய் – தலா 1.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சற்றே பெரிய துண்டுகள் ஆக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய துண்டுகளைப் பொரித்தெடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்து, பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள்.
இப்போது, மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அதில் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள், பொடித்து வைத்துள்ள பொடி தூவி, தக்காளி, தேவையான உப்பு, தயிர் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள்.
உருளைக்கிழங்கு ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆகிவிடும் இந்த தம் ஆலு!
குறிப்பு: தக்காளி விருப்பமில்லாதவர்கள், மாங்காய்த் தூள் ஒரு டீ ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.
பூண்டு இல்லாத குருமா!தேவையானவை:
நீங்கள் விரும்பும் காய்கறிகள் (நறுக்கியது) – 2 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், முந்திரிப்பருப்பு – 6, உப்பு – தேவைக்கு.
அரைக்க: சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 அல்லது 5, இஞ்சி – 1 துண்டு, மல்லித்தழை – ஒரு கைப்பிடி.
தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவலையும் முந்திரியையும் அரைத்துத் தனியே வையுங்கள். பிறகு, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரையுங்கள்.
இப்போது, எண்ணெய், நெய் இரண்டையும் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் தேங்காய் விழுது, வேகவைத்த காய்கறி சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
பூண்டு விரும்பாதவர்களுக்கான ஸ்பெஷல் குருமா இது!
சன்னா மசாலா!தேவையானவை:
சன்னா – 1 கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டு – 2 பல், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை:
சன்னாவை 6 முதல் 8 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதனுடன் தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். இதனுடன் தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்கி, இறக்கி ஆறவிட்டு, எல்லாவற்றையும் நைஸாக அரைத்தெடுங்கள்.
இப்போது வெந்த சன்னாவுடன் அரைத்த விழுதை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
அட… ஹோட்டல் சுவையை மிஞ்சும் சன்னா மசாலா தயார்!
சிம்பிள் ஆலு மசாலா!தேவையானவை:
உருளைக்கிழங்கு – அரை கிலோ, சின்ன வெங்காயம் – கால் கிலோ, பூண்டு – 15 பல், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் – 2 கப், உப்பு – தேவைக்கு.
தாளிக்க: சோம்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
உருளைக் கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, சீரகம், சோம்பு தாளியுங்கள். இதில், உரித்துவைத்துள்ள வெங்காயம், பூண்டைப் போட்டு 5 நிமிடம் வதக்குங்கள். பின்னர், இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நடுத்தரத் தீயில் கிழங்கு அரைப்பதமாக வேகும்வரை வதக்குங்கள். இதனுடன், மிளகாய்த் தூள், தனியா தூள், தேங்காய்ப் பால் சேர்த்து, கெட்டியாகும்வரை கிளறி, பச்சை வாசனை போனதும் இறக்குங்கள்.
பெயர்தான் ‘சிம்பிளே’ தவிர, சுவையில் கில்லாடி இந்த ஆலு மசாலா!
சன்னா கிரேவி!தேவையானவை:
சன்னா – 1 கப், புளிக் கரைசல் – 1 டேபிள் ஸ்பூன், உ. கிழங்கு – 1, வெல்லத்தூள் – 2 டீஸ்பூன், ப. மிளகாய் – 2, பெ.வெங்காயம் – 2, பிரிஞ்சி இலை -1, எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், தக்காளி-3, உப்பு – தேவைக்கு.
அரைக்க: பெ.வெங்காயம் (சிறியதாக) – 2, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 6, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.
செய்முறை:
சன்னாவை 7 மணி நேரத்துக்கு ஊறவையுங்கள். பிறகு, அதை உப்பு சேர்த்து வேகவையுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நடுத்தரமான துண்டுகளாக்குங்கள். ப. மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். தக்காளியை தனியே அரைத்தெடுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலை, ப.மிளகாய் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுதைப் போட்டு, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் அரைத்த தக்காளி, புளிக்கரைசல், வெல்லத் தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், வேகவைத்த சன்னாவையும் உ.கிழங்கையும் சேர்த்து, 5 நிமிடம் கிளறி, இறக்குங்கள்.
இந்த சன்னா கிரேவி, குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
கலர்ஃபுல் மசாலா!தேவையானவை:
காய்கறி கலவை (கேரட், பட்டாணி, பீன்ஸ், பனீர்… சிறு துண்டுகளாக நறுக்கியது) – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 4, மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைக்கு.
செய்முறை:
காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக மீண்டும் வதக்குங்கள். கடைசியில், வேகவைத்த காய்கறி, தேங்காய்ப் பால் சேர்த்து, விடாமல் கிளறி, 2 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள் (கிளறாமல் இருந்தால், தேங்காய்ப் பால் திரிந்துவிடலாம்).
காய்கறி கலவையால் பார்க்கவும் அழகாக இருப்பதால்தான், இதற்கு பெயர் கலர்ஃபுல் மசாலா!
தக்காளி மசாலா!தேவையானவை:
பெ. வெங்காயம் – 4, தக்காளி – 8, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், பூண்டு – 15 பல், கறி மசாலா தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, வெந்தயம் – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
அரைக்க: தேங்காய்த் துருவல்-2 டேபிள் ஸ்பூன், கசகசா – 2 டீஸ்பூன்.
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சோம்பு, வெங்காயம், பூண்டு, ம.தூள் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். இதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, கறி மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போக வதங்கி, தக்காளி கரைந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, கறிவேப்பிலை தூவி, கெட்டியாகும்வரை கிளறுங்கள். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி, பரிமாறுங்கள். சுவையில் இந்த தக்காளி மசாலா, ‘டக்கரான’ மசாலாதா¡!
சுரைக்காய் மசாலா!தேவையானவை:
சுரைக்காய் – 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பால் – அரை கப், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை:
சுரைக்காயைத் தோல் சீவி, நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள்.
அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, வெந்தயம், சீரகத்தைத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், இதனுடன் சுரைக்காய்த் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போனதும் பாலையும், கறிவேப்பிலையையும் சேர்த்துக் கிளறுங்கள். சுருண்டு, கெட்டியாகும்வரை கிளறி இறக்குங்கள்.
நாவுக்கு ‘சுள்ளென்று’ இருக்கும், இந்த சுரைக்காய் மசாலா!
தால் மக்கானி!தேவையானவை:
கறுப்பு முழு உளுந்து- 1கப், பெ.வெங்காயம்-1, தக்காளி-3, இஞ்சி, பூண்டு விழுது -2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பட்டை – 1 துண்டு, சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.
செய்முறை:
உளுந்தை நன்கு கழுவி, சுமார் 7 மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய தண்ணீருடன் சேர்த்து, உளுந்தை குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் வைத்து இறக்குங்கள் (உளுந்து நன்கு குழையவில்லையெனில், மீண்டும் 2 விசில் வைத்து இறக்கலாம்). வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் தக்காளி, தேவையான உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். நன்கு வதங்கியதும், வேகவைத்த பருப்பை இதில் சேர்த்து, நன்கு கொதிக்கவிடுங்கள்.
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயை உருக்கி, அதில் பட்டை, சீரகம் தாளித்து, பருப்பில் சேருங்கள். நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். மீதம் உள்ள வெண்ணெயை மேலாக தூவினாற்போல் வைத்துப் பரிமாறுங்கள்.
மேலும் ருசிக்கு, ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கலாம்.
டபுள் பீன்ஸ் மசாலா!தேவையானவை:
டபுள் பீன்ஸ் – அரை கிலோ, பட்டாணி – அரை கப், பெ.வெங்காயம் – 2, தக்காளி – 3, வெள்ளரி விதை (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 4.
தாளிக்க: எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
டபுள் பீன்ஸை தோல் உரித்து, பட்டாணியுடன் சேர்த்து, உப்புப் போட்டு வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரைத்தெடுங்கள். வெள்ளரி விதையைத் தனியாக அரையுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து, வதக்குங்கள். நன்கு வதங்கியதும், அத்துடன் தக்காளியையும் அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். இதனுடன், வெந்த டபுள் பீன்ஸ், மற்றும் பட்டாணியை அவற்றை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து, தண்ணீர் வற்றி, சுருண்டு வரும் வரையில் கிளறி, வெள்ளரி விதை விழுதைச் சேர்த்து இறக்குங்கள்.
ராஜ்மா மசாலா!தேவையானவை:
ராஜ்மா பயறு – 1 கப், தக்காளி – 5, மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.
அரைக்க: பெ. வெங்காயம் – 3, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல்.
தாளிக்க: சீரகம் – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பட்டை – 1, நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
ராஜ்மா பயறை, சுமார் 7 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, அதை உப்பு சேர்த்து, குக்கரில் 5 முதல் 6 விசில் வரும்வரை வைத்து இறக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரையுங்கள். தக்காளியை நறுக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக, எண்ணெயைக் காயவைத்து, அதில் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, கூடவே அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறுங்கள். அதில் மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி, நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்குங்கள். கடைசியாக, அதனுடன் வேகவைத்த ராஜ்மா, சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
கோஸ் குருமா!தேவையானவை:
முட்டைகோஸ் – கால் கிலோ, பெ. வெங்காயம்-1, தக்காளி-2, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.
தாளிக்க: பட்டை, ஏலக்காய், லவங்கம் – தலா 1, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: பச்சை மிளகாய் – 4, சோம்பு – 1 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், பூண்டு – 1 பல்.
செய்முறை:
முட்டைகோஸ் இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்குங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக் கடலையையும் அரைத்துத் தனியே வையுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து விழுதாக்குங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், கோஸ், சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். பின்னர் தக்காளி சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
தக்காளி தால்!தேவையானவை:
மசூர் தால் – 1 கப், தக்காளி – 4, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு, மல்லித்தழை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவையுங்கள். தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். இதனுடன், தக்காளி, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, இதை அப்படியே பருப்பில் சேருங்கள். இதில் தேவையான உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். கடைசியாக, எலுமிச்சைச் சாறு, மல்லித்தழை சேர்த்துப் பரிமாறுங்கள்.
குறிப்பு: தாளிக்கும்போது, எண்ணெயைக் குறைத்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், ருசியும் மணமும் அதிகரிக்கும்.
முந்திரி மசாலா!தேவையானவை:
முந்திரிப் பருப்பு – 100 கிராம், பச்சைப் பட்டாணி – அரை கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 2, கரம் மசாலா தூள் -அரை டீஸ்பூன், தேங்காய்ப் பால்-ஒன்றரை கப், உப்பு-தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
அரைக்க: மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல் (இதைத் தனியே அரையுங்கள்).
முந்திரிப்பருப்பு – 6, வெள்ளரி விதை – 2 டீஸ்பூன், கசகசா – 1 டீஸ்பூன் (இதைத் தனியே அரையுங்கள்).
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, அதில் வெங்காயம், ப.பட்டாணியைப் போட்டு வதக்கி, முந்திரியையும் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். இதனுடன் தக்காளி, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். அடுத்து, அதனுடன் அரைத்த முந்திரி விழுதையும் தேங்காய்ப் பாலையும் சேருங்கள். இந்தக் கலவை சற்றுக் கெட்டியாகும் வரை விடாமல் கிளறி, கொதிக்கவிடுங்கள். கடைசியில், கரம் மசாலா தூளைத் தூவி இறக்குங்கள்.
மொகலாய பாணி மசாலாவான இது விருந்துகளுக்கு ஏற்றது!
தால் பனீர் மசாலா!தேவையானவை:
பாசிப்பருப்பு – 1 கப், பனீர் – 200 கிராம், தக்காளி – 3, இஞ்சி – 1 துண்டு, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவையுங்கள். பனீர், தக்காளியை சிறு துண்டுகளாக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க கூறியவற்றைத் தாளியுங்கள். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, மேலும் 2 நிமிடம் வதக்குங்கள். இதனுடன் பனீர், வேகவைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, இறக்குங்கள். மல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறுங்கள்.
பலாக்காய் சொதி!தேவையானவை:
பிஞ்சு பலாக்காய் – 1, பெ. வெங்காயம் – 2, தக்காளி – 2, உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.
அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், பச்சை மிளகாய் – 3, சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6, பூண்டு – 1 பல், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
பலாக்காயை தோல் நீக்கி, உள்ளே இருக்கும் நடுப்பகுதி, பால் ஆகியவற்றை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.
பலாக்காயுடன் சிறிது உப்பும் ஒரு கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்குங்கள். பிரஷர் அடங்கியதும் திறந்து, பலாக்காயைத் தண்ணீர் வடித்து, எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை 2 நிமிடம் வதக்கி, ஆறவைத்து, நைஸாக அரைத்தெடுங்கள்.
அடுத்து, மீதமுள்ள எண்ணெயைக் காயவைத்து, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் தக்காளியைச் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி, அரைத்த விழுதையும் சேருங்கள். இதில், தேவையான தண்ணீர், வேகவைத்து எடுத்த பலாக்காய் துண்டுகள் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
செட்டிநாட்டு ஸ்பெஷலான இது, டிபன் அயிட்டங்களுக்கு மட்டுமல்ல, சாதத்துக்கும் ஏற்றது!
பெப்பர் கோபி!தேவையானவை: காலிஃப்ளவர் – சிறியதாக 1, பெ.வெங்காயம் – 2, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிதளவு, உப்பு-தேவைக்கு, எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்.
வறுத்து பொடிக்க: மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 10 இலை.
செய்முறை:
காலிஃப்ளவரை பக்குப்படுத்தி, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். மிளகு, சோம்பு, கறிவேப்பிலையை வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இதனுடன் மஞ்சள் தூள், காலிஃப்ளவர் சேர்த்து தீயை மிதமாக வைத்து வதக்குங்கள். இதனுடன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். இதை மூடிவைத்து அவ்வப்போது திறந்து கிளறுங்கள். பச்சை வாசனை போய், காலிஃப்ளவர் நன்கு வெந்ததும், மூடியை எடுத்துவிட்டு, நன்கு சேர்ந்து வரும்வரை கிளறுங்கள். இதனுடன் வறுத்து அரைத்த பொடியைத் தூவி, கிளறி இறக்குங்கள்.
சுவையில் சூப்பராக இருக்கும் இந்த பெப்பர் கோபி!
கீரை சன்னா மசாலா!தேவையானவை:
சன்னா – 1 கப், சுக்காங்கீரை (மார்க்கெட்டில் கிடைக்கும்) – 1 கட்டு, தக்காளி-3, மிளகாய்த் தூள்-2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன், உப்பு -தேவைக்கு, எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்.
தாளிக்க: சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை – 1, பூண்டு – 8 பல், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
சன்னாவை சுமார் 7 மணி நேரம் நன்கு ஊறவிட்டு, உப்பு சேர்த்து வேகவையுங்கள். அரை கப் தண்ணீர் அளவுக்கு சன்னாவுடன் வைத்துவிட்டு, மீதியை வடித்துவிடுங்கள். கீரையை அலசி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்குங்கள். தக்காளியை கொஞ்சம் பெரிதாகவே வெட்டுங்கள்.
அடுத்து, எண்ணெயைக் காயவைத்து, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்குங்கள். தக்காளி வெந்ததும், அதில் பொடியாக நறுக்கிய கீரை, வேகவைத்த சன்னா (தண்ணீருடன்) சேர்த்து, நன்கு கொதிக்க விடுங்கள். மற்றொரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைத் தாளித்து, மசாலாவில் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள் (சுக்காங்கீரைக்குப் பதில் அரைக்கீரை, புளிச்ச கீரையையும் உபயோகிக்கலாம்). பிரெட், சப்பாத்திக்கு சத்தான சைட் டிஷ் இது!
————————————————
தொகுப்பு: பிரேமாநாராயணன்                               படங்கள்: பொன்.காசிராஜன்
_____________________________________________________
நன்றி:-சமையல் திலகம் ரேவதி சண்முகம்
நன்றி:-அ.வி
மற்ற சமையல் படைப்புக்கள்
அட்டகாசமான சுவையில் 30 நாள்… 30 மசாலா குருமா! – ரேவதி சண்முகம்
30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க! – ரேவதி சண்முகம்.
30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்டையும் குறைக்கலாம்.- கா.கதிரவன்
கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்!-சமந்தகமணி
30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் – சமையல் திலகம் ரேவதி சண்முகம்
PART-1 கிராமத்து கைமணம்! சோளச்சோறு சுக்கு மோர்க்குழம்பு கொள்ளு துவையல் – ரேவதி சண்முகம்
PART-2 கிராமத்து கைமணம்! நவதான்ய உருண்டை கம்புரொட்டி எள்ளுப்பொடி காராமணி கீரைத்தண்டு குழம்பு- ரேவதி சண்முகம்
PART-3 கிராமத்து கைமணம்! மாங்காய் பாசிப் பருப்பு பச்சடி பால் கொழுக்கட்டை காப்பரிசி – ரேவதி சண்முகம்
PART-4 கிராமத்து கைமணம்! முள் முருங்கை அடை, பாசிப்பருப்பு சீயம், சீம்பால் திரட்டு- ரேவதி சண்முகம்
PART-5 கிராமத்து கைமணம்! மரவள்ளிக் கிழங்கு புட்டு, தட்டைப் பயிறு அடை,கருப்பட்டி பணியாரம், உளுந்து பலகாரம் – ரேவதி சண்முகம்
பகுதி-06 கிராமத்து கைமணம்! பருப்பிட்ட பணியாரம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு சீயம், புழுங்கல் அரிசி கொழுக்கட்டை, பப்பாளிக்காய் வடை
பகுதி-07 கிராமத்து கைமணம் நவரத்தின குருமா, கருப்பட்டி ஆப்பம், ஜவ்வரிசி பொரி, நீர் கொழுக்கட்டை

பகுதி-08 கிராமத்து கைமணம் பூண்டு கஞ்சி, மரவள்ளிக் கிழங்கு கார பணியாரம், உளுந்து களி
பகுதி-09 கிராமத்து கைமணம் பச்சை மொச்சை-பரங்கிக் குழம்பு பிரண்டை துவையல் வெந்தய இட்லி  துருவல் சேனை புளிப்பொரியல்
30 வகை எண்ணெய் இல்லாத சமையல் – சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்
30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
நோன்புக் கஞ்சி செய்முறை
ஆசை ஆசையாய் 30 வகை தோசை – கருப்பட்டி முதல் ஓட்ஸ் வரை
30 வகை தொக்கு! – சமையல் திலகம் ரேவதி சண்முகம்

No comments:

Post a Comment