Saturday, April 9, 2011

கூந்தலின் ஜீவன்!


குழாயில் தண்ணீர் வராதது, டீன் ஏஜ் பையன் சொன்ன பேச்சு கேட்காதது போல முடி கொட்டுவதும் நிரந்தரக் கவலையாகி விட்டது. ‘அந்தக் காலத்துலயெல்லாம் இப்போ இருக்கிற மாதிரி ரெண்டு மடங்கு முடி ஒரு சடைக்கு மட்டும் இருக்கும்‘ என்று வருந்துகிற பலரும் ‘ஏன் இப்படியாச்சு?’ என்று யோசிக்கிறோமா?
‘‘யோசிப்பது மட்டுமல்ல.. கொட்டுவதற் குத் தடை போடுவதும் அவசியம்‘‘ என்கிறார் ரம்யா’ஸ் பியூட்டி பார்லர் வைத்திருக்கிற சந்தியா செல்வி. அவர் தருகிற கூந்தல் டிப்ஸ்களைப் பார்க்கலாமா?
‘பொடுகு, பேன், செம்பட்டை, முடி உதிர்தல், வறண்ட கூந்தல்’ என்று ஒவ்வொன்றுக்குமான ஸ்பெஷலிஸ்ட் கூந்தல் பராமரிப்புப் பொருள்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. மருத்துவர் அல்லது தகுந்த அழகுக் கலை நிபுணரின் அறிவுரையில் இவற்றை உபயோகிக்கலாம்தான். ஆனால், விளம்பரத்தில் மயங்கி மாற்றிக் கொண்டே இருந்தாலோ, உங்கள் கூந்தலுக்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்து விட்டாலோ பிரச்னைதான். எனவே, தரமான ஷாம்புவுக்கு முதலில் மாறுங்கள்.
உணவில் தொடங்குகிறது கூந்தல் ஆரோக்கிய ரகசியம். கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், புரதச் சத்துள்ள பொருட்கள் இவற்றைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதோடுகூட, வீட்டில் இருக்கிற பொருள்களை வைத்து கூந்தலைப் பராமரிப்பது பற்றிப் பார்க்கலாம்.
சாதாரணமானது, எண்ணெய்ப் பசை கொண்டது, வறண்டது, இரண்டும் கலந்தது என்று தலைமுடி நான்கு வகைப்படும்.
வேர்க்காலில் தொடங்கி அடிமுடிவரை பளபளவென்று ஆரோக்கியமாக இருப்பதுதான் சாதாரண கூந்தல். மற்றவர்கள் பொறாமைப்படும்படியான கூந்தல் கொண்ட நீங்கள் வாரம் ஒருமுறை அதற்கு எண்ணெய் மசாஜ் செய்யவேண்டும். பிறகு, முட்டையின் வெள்ளைக்கருவு டன் ஒரு எலுமிச்சை பிழிந்து வேர்க்கால் தொடங்கி அடி முடி வரை தடவி அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளித்து வந்தாலே விளம்பரக் கூந்தலாய் மின்னும்.
தலைக்குக் குளித்த அன்று புஸ்புஸ்ஸென்று அழகாக இருக்கும். மறுநாளே ஒரு லிட்டர் எண்ணெயைத் தலையில் கவிழ்த்தியதுபோல பிசுக்பிசுக்காகிவிடும். இதுதான் எண்ணெய்ப்பசை கூந்தல்.
சீயக்காய் அரை கிலோ, புங்கங்காய் 100 கிராம், பச்சைப் பயறு 100 கிராம், வெந்தயம் கைப்பிடி அளவு, பச்சரிசி 2 கைப்பிடி அளவு எடுத்து, அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாக உபயோகித்து வந்தால் கூந்தல் அலை மாதிரி அசைந்தாடும்.
ஜீவனே இல்லாமல் வறண்டுபோய் வெடிப்பு வெடிப் பாக இருப்பதுதான் வறண்ட கூந்தல். இயல்பாகவே தலைப்பகுதியில் எண்ணெய்ச் சுரப்பு குறைவாக இருக்கும் உங்களுக்கு. பராமரிக் காமலும் விட்டால் அவ்வளவுதான். நீங்கள் வாரம் ஒருமுறையாவது ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். முந்தின நாள் இரவே வேர்க்கால் முதல் அடிமுடி வரை எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங் கள். அடிமுடியில் அதிக எண்ணெய் தடவுங்கள். மறுநாள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்து மசாஜ் செய்து, பிறகு குளியுங்கள் (முட்டையின் மஞ்சள் கரு உங்கள் கூந்தலுக்கு அற்புதமான மருந்து. கூந்தலை அலசிய பிறகும் முட்டை வாசனை வருவது பற்றிக் கவலை இல்லையெனில், மஞ்சள் கரு உபயோகிக்கலாம்.).
தலைப் பகுதியில் எண்ணெய்ப் பசையுடனும் கீழே செல்லச்செல்ல வறண்டும் இருப்பது இரண்டும் கலந்த கூந்தல். கூந்தலின் அடிப்பகுதிக்கு மட்டும் நிறைய எண்ணெய் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளியுங்கள். தலையை நன்றாக அலசிய பிறகு, கடைசி மக் தண்ணீரில் ஒரு எலுமிச்சை அல்லது கொஞ்சம் வினிகர் சேர்த்து அந்தத் தண்ணீரை அப்படியே தலையில் ஊற்றி விட்டு வெளியே வாருங்கள். தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் இதை மறக்காமல் செய்வதுதான் உங்களுக்கான பராமரிப்பு.
மசாஜ் எப்படிச் செய்வது என்று பார்க்கலாமா?
பஞ்சில் எண்ணெயை நனைத்து, கூந்தலை வகிர்ந்து தடவுங்கள். இதை தலை முழுக்கச் செய்யுங்கள்
விரல் நுனிகளில் எண்ணெய் தொட்டு தலை முழுக்கவும் வட்ட வட்டமாக கடிகாரச் சுற்றிலும், எதிர்த்திசையிலும் லேசாக அழுத்தம் கொடுத்தபடி தடவுங்கள்
கோதுங்கள்.
இரு கைகளாலும், தலை முழுக்க மென்மையாகக் குத்துங்கள்.
தலை முழுக்க எண்ணெய் தேய்த்த பிறகு, முறுக்கிக் கொண்டையாகப் போடுங்கள். மசாஜ் ஓவர்.
அட.. ரொம்ப சுலபமான வேலையாச்சே என்கிறீர்களா?
————————————————————–

No comments:

Post a Comment