சைக்கோ தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. போகிறபோக்கில் பொதுக் கிணற்றில் விஷத்தைக் கலப்பது, ரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது என எந்த எல்லைக்கும் போவார்கள். விஞ்ஞானம் வேறு வளர்ந்துவிட்டதா? உட்கார்ந்த இடத்தில் இருந்தே சகலக் கலகமும் நடக்கிறது!
சைக்கோ நோயாளிகளின் கையில் இருந்த சைபர் அட்டாக் என்ற ஆயுதத்தை ஒரு சில அரசாங்கங்களே கையில் எடுக்கும் விபரீதமும் இருக்கிறது. கடல் படை, விமானப் படை, காலாட் படை பட்டியலில் சில நாடுகள் கம்ப்யூட்டர் அட்டாக்கையும் ஒரு தனிப் படையாகத் சேர்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. உதாரணம், சீனாவில் கூகுள் படும் பாடு. ‘சென்ஸார்’ என்ற பெயரில் அரசுக்கு எதிரான வார்த்தைகளைக்கூட காட்டக் கூடாது என்று சீன அரசு கூகுளைத் துவக்கத்தில் இருந்தே குட்டிக்கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் சீனா, மனித உரிமை ஆர்வலர்களின் இ-மெயிலை உளவுபார்க்கத் தொடங்க, பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்தது கூகுள்.
ஒரு நாட்டின் அரசாகவே இருந்தாலும் சரி, தங்களின்வாடிக்கையாளர்கள் அனுப்பும் அல்லது பெறும் கடிதங்களை உளவுபார்ப்பதைச் சகித்துக்கொள்ள முடியாது என்று சொல்லி, கூகுள் சீனாவில் இருந்து வெளியேறிவிட்டது. கூகுள் தரப்பு நியாயங்களை ஏ
ற்றுக்கொண்ட அமெரிக்கா, சீனாவின் கட்டுப்பாடுகளையும் செயல்களையும் ‘புதிய பெர்லின் சுவர்’ என்று வர்ணித்துக் கண்டனம் செய்தது. சீனாவில் இருந்து வெளியேறிவிட்டாலும் சீன மொழி பேசும் தனது வாடிக்கையாளர்களுக்காக சீன அரசின் கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத ஹாங்காங்கில் இருந்தபடி கூகுள் இப்போது செயல்படுகிறது. ஆனால், சீனாவுக்குள் இப்போது யாரும் கூகுளைப் பயன்படுத்த முடியாதபடி சீன அரசு அட்டாக் பாண்டியாக மாறி அதைத் தடுத்துவிட்டது!
|
No comments:
Post a Comment