இப்பதான் சார் பரபரப்பாவும் அதே சமயம் ரிலாக்ஸ்டாவும் இருக்கேன்!'' - உள்ளபடியே குரலில் நிம்மதி தொனிக்கப் பேசுகிறார் பிரசாந்த். 'மம்பட்டியான்’ படத்துக்காகத் தானே வடிவமைத்த இணையதளத்தில் தகவல்களை அப்டேட் செய்தபடியே பேசுகிறார்.
'' 'மலையூர் மம்பட்டியான்’ படத்தை ரீ-மேக் பண்ண வேண்டிய அவசியம் என்ன?''
'' 'பொன்னர்- சங்கர்’ படம்தான் காரணம்! அந்தப் படத்துக்காக மலை, காடு, கோட்டை, அருவினு கேமராவோ மனுசனோ எட்டிப் பார்க்காத காடுகள், மலைக் கிராமங்கள்னு சுத்தித் திரிஞ்சேன். 'நீ கொடுத்துவெச்ச வன்டா. நான் 'மலையூர் மம்பட்டியான்’ பண்றப்ப மலையூர் மலைக் கிராமத்துக்குக் கூடப் போக முடியலை’னு சொன்னார் அப்பா. அப்போதான், 'பொன்னர் சங்கருக்காக நாலு வருஷம் காடு கரைனு சுத்தின அனுபவம் இருக்கு. நாம ஏன் 'மலையூர் மம்பட்டியானை’த் திரும்ப எடுக்கக் கூடாது?’னு கேட்டேன். 'கரெக்ட்’னு ஒரு வார்த்தை மட்டும் சொன்னவர், அடுத்த வார்த்தையில் இருந்து மம்பட்டியான்பத்தி மட்டுமே பேசிட்டு இருந்தார்!''
''கிட்டத்தட்ட பதினோரு மாசம் கழிச்சு வடிவேலு நடிச்சு வெளிவரப்போற படம் மம்பட்டியான்... ஸ்பெஷல் சரக்கு எதுவும் வெச்சிருக்கீங்களா?''
''எங்க காம்பினேஷன்ல வந்த 'வின்னர்’தான் இப்பவும் எல்லா சேனல்லயும் ஓடிட்டே இருக்கு. 'மம்பட்டியான்’ல படம் முழுக்க என்னோடு வடிவேலு வருவார். இத்தனை நாள் இடைவேளைக்கும் சேர்த்து அன்லிமிடெட் ஃபுல் மீல்ஸ் விருந்து வெச்சிருக்கார் மனுஷன். 'சிங்கம்தான்யா’னு வாய்விட்டுப் பாராட்டுற அளவுக்கு ஏகப் பட்ட மாடுலேஷன்ல மிரட்டி எடுத்திருக்கார். அவருடன், பிரகாஷ்ராஜ், மீரா ஜாஸ்மின்னு படம் முழுக்க பவர் பெர்ஃபார் மர்ஸ்தான்!''
''மலையூர் மக்களோட நிலைமை இப்ப முன்னேறி இருக்கா?''
''அப்படியேதான் இருக்கு. அந்த மலைக் காட்டுல ஒவ்வொரு நாளையும் அவ்வளவு சிரமத்தோட கழிக்கிறாங்க. நல்லது கெட்டதுக்கு மலையில இருந்து கீழே மூணு கிலோ மீட்டர் காடு, மலைனு கடந்து நடந்து வரணும். நடந்து நடந்தே உருவான கால்தடம்தான் அவங்களுக்குப் பாதை. லேசா மழை பெய்ஞ்சா... அதுவும் காலி. மம்பட்டியானை இன்னமும் தங்களோட தெய்வமாத்தான் வணங்குறாங்க. பழைய கருங்கல் வீட்லதான் குடியிருக்காங்க. ஆனா, ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் அவ்வளவு அன்பு இருக்கு. அந்த மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது உதவி பண்ணினா... நல்லா இருக்கும்!''
''ஊருக்கு முன்னாடி ஐஸ்வர்யா ராய்கூட நடிச்சீங்க, கேரியர் ஆரம்பத்துலயே மணிரத்னம், ஷங்கர்னு மாஸ் இயக்குநர்கள் படத்தில் நடிச்சீங்க. ஆனா, இப்ப அப்பா டைரக்ஷன்ல மட்டுமே நடிச்சுட்டு இருக்கீங்க...''
''சினிமாவுக்கு என்னைக் கைப் பிடிச்சு அழைச்சுட்டு வந்தவர் அவர்தானே! 'நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ணிக்கூடத் தொலைச்சிருக்கலாம். உன் பெர்சனல் வாழ்க்கையை நானே சிதைச்சுட்டேன்டா!’னு அப்பா சமயங்களில் கலங்குவார். ஒவ்வொருத் தருக்கும் அவங்க அப்பா ஸ்பெஷல்தான். ஆனா, இப்போ வரை எந்த முடிவாக இருந்தாலும், என்னை மனசுல வெச்சே எடுக்கும் என் அப்பா எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இவ்வளவு எனர்ஜெட்டிக்கான மனுஷனோட வேலை பார்ப்பதே திருப்தியா இருக்கு!''
''பெர்சனல் வாழ்க்கை எப்படி இருக்கு? அடுத்த கல்யாணம்பத்தி யோசிச்சீங்களா?''
''சார், எனக்குக் கல்யாணமே ஆகலை! ஆமாம்... இப்பவும் நான் பேச்சுலர்தான். சென்னை ஹைகோர்ட் வெப்சைட் போய் என் வழக்கின் தீர்ப்பு நகலைப் படிச்சுப் பாருங்க. ஒரு ஆண் எப்படி அப்பட்டமா ஏமாற்றப்பட்டான்னு அந்தத் தீர்ப்பு சொல்லும். எனக்கு நடந்தது கல்யாணமே கிடையாதுனு தெளிவாச் சொல்லிட்டாங்க. இப்போதைக்கு சினிமாவோட மட்டுமே குடும்பம் நடத்தலாம்னு இருக்கேன். முன்பைவிட இப்பத்தான் பெண்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் ஏற்பட்டுஇருக்கு. ஏன்னா, அவங்க நினைச்சா ஒருத்தனைத் தலை நிமிர்ந்து வாழவைக்கவும் முடியும்... தலை கீழாப் புரட்டிப் போடவும் முடியும்!'' -கலகலவெனச் சிரிக்கிறார் பிரசாந்த்.
|
No comments:
Post a Comment