ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராம்நாத்சாய் கால்டின். இவர்கள் 2 பேரும் ரெயில்வே தண்டவாளத்தில் இரும்பு கிளிப்புகளைப் பொருத்துவதற்காக காண்டிராக்டு எடுத்துள்ள காண்டிராக்டரிடம் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர்.
கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் ரெயில் தண்டவாளத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் மேஸ்திரி அமர்தீப் என்பவரின் செல்போன் காணாமல் போனது.
இதை ராம்நாத்சாய் திருடியதாக அமர்தீப்பிடம் கால்டின் கூறி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே விரோதம் இருந்து வந்தது. கடந்த 7.8.2008 அன்று அவர்கள் அனைவரும் வேலை முடிந்து உச்சிப்புளி ரெயில் நிலையத்தில் படுத்து தூங்கினர்.
செல்போன் திருடியதைக் காட்டிக்கொடுத்ததால் ஆத்திரத்தில் இருந்த ராம்நாத்சாய், நள்ளிரவில் சம்மட்டியால் கால்டினைத் தலையில் தாக்கி விட்டு தப்பித்து விட்டார். பலத்த காயம் அடைந்த கால்டின் மதுரை பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 10.8.2008 அன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதுகுறித்து உச்சிப்புளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராம்நாத்சாயைக் கைது செய்தனர். வழக்கை விசாரித்த ராமநாதபுரம் விரைவு நீதிமன்றம் ராம்நாத்சாய்க்கு ஆயுள்தண்டனை விதித்து 17.6.2010 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராம்நாத்சாய் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன் எஸ்.நாகமுத்து ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது: "நள்ளிரவு நேரத்தில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் காவல்துறை தரப்பு சாட்சிகளான மன்சி தேசிங்தந்து ஆகியோர் சிறுநீர் கழிக்க எழுந்து சென்றதாகவும் பின்னர் சிறிது நேரம் பிளாட்பாரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் கூறுவது நம்பும்படியாக இல்லை.
சம்மட்டியால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் கால்டினை மனுதாரர் தாக்கி உள்ளார். கால்டினைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மனுதாரர் தாக்கியதாக தெரியவில்லை. எனவே அவருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள்தண்டனை 5 ஆண்டு தண்டனையாக குறைக்கப்படுகிறது." இவ்வாறு தீர்ப்பில் கூறபபட்டுள்ளது.
|
No comments:
Post a Comment