இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் எவரும் எந்த மதத்தையும் தழுவ உரிமை இருக்கிறது. இருந்தபோதிலும்... பெரியாரது பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரோடு பழகி, கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பெரியாரிய கருத்துக்களை பரப்பி வந்த பெரியார்தாசன், சிலகாலமாகப் புத்த தத்துவங்களில் இயங்கினார். இப்போது சவுதி அரேபியா சென்று அப்துல்லா என பெயர் மாற்றி... இஸ்லாமியராகவும் மாறிவிட்டார் என்ற செய்தி, பெரியார்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரியாரிய அமைப்புகளோடு கடந்த சில ஆண்டுகளாகத் தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டாலும்... பெரியார்தாசன் என்ற பெயரை வைத்திருந்தவர், திடீரென அப்துல்லா ஆனது எப்படி?
சவுதி அரேபியாவிலிருந்து விமானம் மூலம் அப்துல்லாவாக சென்னை திரும்பிய சில மணிநேரங்களில் திருவேற்காட்டிலுள்ள அவரது வீட்டில் பெரியார்தாசனை சந்தித்தோம்.
வந்துகொண்டிருந்த மொபைல் அழைப்பு களுக்கெல்லாம்... ‘அஸ்ஸலாம் அலைக்கும்’ என ஆரம்பித்து ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்லி விடை கொடுத்துக் கொண்டிருந்தார் அப்துல்லா.
பெரியார்வாதியாகக் கருதப்படும் நீங்கள் எப்படி..?
45 வருடங்களாக பெரியாரைக் கற்றவன் நான். கடவுள் மறுப்பு, சாதிமத ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு, சுதந்திரத் தமிழ்நாடு, சுரண்டல் ஒழிப்பு போன்ற பெரியாரியக் கொள்கைகளைப் பரப்ப என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அதிலும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு என் பால்ய நண்பர் சிராஜுதினை சந்தித்தபோது... ‘நீ இறை மறுப்பாளனாகப் பிறக்கவில்லை. இறக்கும்போது இறை மறுப்பாளனாக இறக்கக் கூடாது’ என்றார். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக இஸ்லாமிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். பெரியாரது கொள்கையில் இறை மறுப்பு என்பதை மட்டும் கைவிட்டு ஏக இறைவனை ஏற்றுக்கொண்டேன். திடீரென ஏற்றுக்கொள்ளவில்லை. பத்து வருடங்கள் படித்த பிறகுதான் தெளிந்து ஏற்றுக்கொண்டேன்.
அப்படியானால் பெரியாரின் மத ஒழிப்பை தாங்கள் பின்பற்றவில்லையா?
இஸ்லாம் ஒரு மதமே அல்ல. அது உலக மக்களை சமத்துவப்படுத்த எழுந்த ஓர் இயக்கம். அதை நான் மதமாகப் பார்க்கவில்லை. பெரியார் கூட ‘இழிவு நீக்க இஸ்லாம் மருந்து’ என சொல்லியிருக்கிறார்.
மூட நம்பிக்கை ஒழிப்பில் இன்னும் உறுதியாக இருப்பதாகச் சொல்கிறீர்கள். இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளே இல்லையா?
நான் பரம்பரை இஸ்லாமியனை விட அதிகம் படித்த இஸ்லாமியன். குர்ஆனில் இறைவன் எந்த மூடநம்பிக்கையையும் வலியுறுத்தவில்லை. ஆனாலும் தர்கா வழிபாடு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு ரத்தம் கொட்டுவது என இஸ்லாத்துக்குள் சில மூட நம்பிக்கைகள் ஊடுருவியிருக்கின்றன. இதை இறைவனுக்கு இணை வைத்தல் என்று சொல்லலாம். அதாவது இறைவன் ஒருவனே. அவனுக்கு இணையாக யாரையும் வழிபட்டால் அது மூட நம்பிக்கை.
நாகூர் தர்காவில் நிறையப் பேர் சென்று வருகிறார்கள். அங்கே சென்றால் சுத்தமாகிவிடலாம் என்கிறார்கள். ஆனால் அதற்குள் சென்று வந்தால் அசுத்தமாகத்தான் ஆகமுடியும். இறந்த ஒருவரை இறைவனுக்கு ஈடாக வழிபடுவது இஸ்லாத்படி தவறு. ஆனால், தர்காக்களில் அது மட்டுமல்ல, அதன் அடிப்படையில் நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கின்றன.
ஒரு கோழியை ஒருவர் நூறு ரூபாய்க்கு வாங்கி நாகூர் தர்காவில் கொண்டு வந்து பறக்கவிடுகிறார். அது கீழே இறங்கியதும் அதைப் பிடித்து இன்னொரு பக்தருக்கு விற்றால் அது புண்ணியமாம். அதனால் பலரும் அந்தக் கோழியைப் பிடித்து ஒவ்வொரு முறையும் விலையை ஏற்றி விற்பார்கள். காலையில் நூறு ரூபாய்க்கு விற்ற அந்தக் கோழி, மாலையில் ஒரு லட்ச ரூபாய்க்குக் கூட விற்கும். இது மூட நம்பிக்கை. இதை எதிர்த்து நான் பேசுவேன்.
அதேபோல, ஏர்வாடி தர்காவில் கொண்டுபோய் விட்டால் பைத்தியம் தெளியும் என்கிறார்கள். அங்கே கொண்டுபோய் விட்டால்தான் பைத்தியம் பிடிக்கும். நான் அடையாள இஸ்லாமியன் அல்ல... அல்லாவை உணர்ந்த இஸ்லாமியன்.
பெண்களுக்கான பர்தா போன்ற உடைக் கட்டுப்பாடுகள் பற்றி தங்கள் கருத்து?
அரேபியாவில் அடிக்கடி வலுவான புழுதிப் புயல்கள் ஏற்படும். அதைத் தடுப்பதற்காக அங்கே ஆண்கள்கூட முகத்தை மூடும்படிதான் உடை அணிகிறார்கள். அதை இங்கே பெண்கள் தொடர்கிறார்கள். இதை ஏன் குறை சொல்லவேண்டும்? அது அவர்களின் விருப்பம். சுடிதார் அணியக் கூடாது என யாரையும் நாம் கட்டாயப்படுத்த முடியுமா? அதுபோலத்தான் இதுவும்.
உலக மக்களை எல்லாம் சமத்துவப்படுத்த எழுந்த இயக்கம் இஸ்லாம் என்கிறீர்கள். அப்படியானால், சவுதி போய் இஸ்லாமைத் தழுவ வேண்டிய அவசியம் என்ன? இதுவே ஒரு மூடநம்பிக்கைதானே?
எனக்கு வசதி இருந்தது நான் போனேன். உனக்கென்ன? ரயில்ல ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் எடுக்க முடியறவன், அதுல போறான். காசு இல்லாதவன் செகண்ட் கிளாஸ்ல போறான். என்கிட்ட காசு இருந்தது அதனால போனேன்.
பொதுவாகவே பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும், மூளைச் சலவை காரணமாகவும்தானே தமிழ்நாட்டில் மத மாற்றம் நடக்கிறது...
எந்தப் பொருளாதார ஆசையையும் யாராலும் எனக்குக் காட்டமுடியாது. இந்துமதத்தை எதிர்த்துப் பேசினேன்... கிறிஸ்தவர்களையும் எதிர்த்துப் பிரசாரம் செய்திருக்கிறேன். அந்த மதங்களில் எல்லாம் கடவுள் சொன்னதாக வேறொருவர்தான் சொல்லுவார். ஆனால், இஸ்லாத்தில்தான் கடவுளே வேதத்தைச் சொல்கிறார். அதைப் படித்து தெளிந்து... என் சொந்த செலவில் பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட் எடுத்து சவுதி சென்றேன். கருத்துகளால் ஈர்க்கப்பட்டு வந்தவன் நான். இத்தனை வருடமாகப் பகுத்தறிவு பிரசாரம் செய்தோமே... என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படவில்லையா?
பெரியாரோடு இருந்த நாத்திக பாலசுப்பிரமணி என்ற சிறந்த பேச்சாளர், ‘இந்தி’ எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்றார். சிறையில் எப்படியோ ‘திருவாசகம்’ படித்த அவர், வெளியே வரும்போது, ‘திருவாசக’ பாலசுப்பிரமணி என மாறி ஆத்திகராகிவிட்டார். இதுபற்றி தோழர்கள் பெரியாரிடம் கேட்டபோது... ‘விடு, சுய-மரியாதைக்காரன் எங்கே இருந்தாலும் சுத்தமாக இருப்பான்’ என பதில் சொன்னார். அதை நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை.
சவுதியிலிருந்து அளித்த இணையப் பேட்டியில் ‘ஜிகாத்’துக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறீர்களே?
இறைவனுக்கு இணையாக வைத்து வழிபடும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதுதான் ‘ஜிகாத்’.
தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கங்கள் தோற்றுவிட்டனவா?
தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கங்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். என்னை அழைத்துச் சென்று அதில் சேர்த்துவிடுங்களேன்!
|
No comments:
Post a Comment