மகிழ்ச்சியும், துக்கமும் இணைந்ததுதான் வாழ்க்கை. இதனை உணர்ந்து கொள்பவர்களின் பயணம் தெளிந்த நீரோடையாக நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் எதற்கெடுத்தாலும் கண்டிசன் போடும் இன்றைய இளம் தலைமுறையினர்தான் செய்வதறியாது தடுமாறி நிற்கின்றனர். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது வாழ்க்கைக்கான வெற்றியின் ரகசியம்.
புனிதமான பந்தம்
சீர்வரிசையும், வரதட்சணையும் கொடுத்துதான் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இது பண்டமாற்று வியாபாரமல்ல. புனிதமான உறவின் தொடக்கம் என்பதை இருவருமே புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்குமே ஆசைகள், லட்சியங்கள் இருப்பது போல நம்மை திருமணம் செய்துகொண்டவருக்கும் கனவுகள் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனை சிதைத்து விடவும் கூடாது. திருமணத்திற்கு முன்பே சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.
எல்லையற்ற அன்பு
வாழ்க்கைத்துணையை கரம் பற்றிய நிமிடத்திலேயே இருவரும் ஒருவருக்கொருவர் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். எந்த சூழ்நிலையிலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்ற உறுதிமொழியே தடுமாற்றம் இன்றி பயணம் செல்ல வழிவகுக்கும்.
மகிழ்ச்சியுடன் தொடங்கும் மணவாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக இருப்பது என்பது மணமக்களின் கைகளில்தான் உள்ளது. வெவ்வேறு பழக்க வழக்கங்கள் உள்ள குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து எல்லையற்ற அன்பு பாராட்டுங்கள்.
நம்பிக்கைதான் எல்லாமே
மணவாழ்க்கையில் ஒன்றாக இணைந்த இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் வாழத் தொடங்கவேண்டும். ஏனென்றால் நம்பிக்கைதான் வாழ்க்கையின் அச்சாணி. தாம்பத்யத்தில் இருவரின் உடலும் சங்கமிப்பது போல லட்சியப்பயணத்தில் தடையாக நில்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.
யாதார்த்தமாய் வாழுங்கள்
சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.சின்னச்சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும்.
சிறு சிறு கருத்து வேற்றுமையின்போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன்’ என்று உறுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்துவிடும்.
அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
திருமணம் முடிந்ததும் கணவனோ, மனைவியோ இருவருமே ஒருவரைப் பற்றி ஒருவர் ஆராயத் தொடங்கக் கூடாது. ஏனென்றால் உறவுப்பாலம் சிதைவதற்கான முதல் வித்து இதில்தான் தொடங்குகிறது.
இருவருமே வெவ்வேறு சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் அவரவரின் குறை நிறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். யாரும் யாருக்காகவும் மாறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காலச் சூழலில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும்.
|
No comments:
Post a Comment