Sunday, June 12, 2011

அவளுடைய அங்க அமைவுகளும், அசைவுகளும்

எனக்கு அவளால் இப்படி ஒரு அசிங்கம் நேரும் என நான் கனவிலும் நினைக்கவில்லை .தனி மனித ஒழுக்கத்திலும் உடல் தூய்மையிலும் அனைவராலும் மதிக்கப்பட்ட என்னை ஒரே நிமிடத்தில் ஊரார் சிரிக்க வைத்து விட்டாள்.

அவள் பெயர் வடிவுக்கரசி .அவள் நிறமோ கருப்புதான் .ஆனால் அவள் உடலின் வளைவு நெளிவுகளாலும் இயற்கையாய் அமைந்த மேடு பள்ளங்களாலும் யாரையும் ஒரே நிமிடத்தில் கவிழ்த்தும் வல்லமை படைத்தவள் .அவள் முகத்தில் நமது முகத்தை பார்க்கலாம் அவள் முகம் அப்படி ஒரு பளபளப்பு .

 
 எனக்கோ பெண்களை கண்டாலே அலர்ஜி .இவள் கடந்த சிலநாட்களாகவே எனது தெருவில் அடிக்கடி முகம் காட்டிக்கொண்டிருந்தாள் .இவள் தோற்றத்தை பார்த்ததுமே எனக்கு ஒரு இனம்புரியாத உணர்ச்சி மேலிட்டது .

எனக்கும் கிட்டத்தட்ட திருமண வயதாகிவிட்டது .எனது அழகை கண்டு பல பெண்கள் எனக்கு தூண்டில் போட்டிருக்கிறார்கள் .ஆனால் நான் ஒழுக்கமாக வளர்ந்து விட்ட காரணத்தால் எந்த பெண்ணிடமும் நான் சிக்கவில்ல .

ஆனால் இவளிடம் எங்கே நாம் சிக்கி அசிங்கப்பட்டுவிடுவோமோ என்று ஆரம்பத்திலிருந்தே எனக்குள் ஓர் உணர்வு இருந்து கொண்டிருந்தது .இதற்கு காரணம் அவளுடைய அங்க அமைவுகளும் அசைவுகளும்தான்.
அவள் அடிக்கடி குறுகலாக அமைந்திருந்த எங்கள் தெருவில் என்னை குறுக்கிட்டு கொண்டிருந்தாள் .நான் அவளை கண்டு ஒதுங்கி செல்வேன் ஆனால் அவளோ லேசாக என்னை பார்த்து சிரித்துவிட்டு உரசிச் செல்வாள் .நாளாக நாளாக தெருவில் அவள் அடிக்கடி தென் பட்டாள்.


மெதுவாக உரசி உரசி சென்று கொண்டிருந்த வடிவுக்கரசி ஒரு நாள் எனக்கெதிரே வந்து என் மீது பலமாக இடித்து விட்டாள் .நான் ஒரு கணம் தடுமாறி அவள் மேல் சாய்ந்துவிடப்பார்த்தேன்.ஆனால் சுதாகரித்துக்கொண்டு நான் விலகி விட்டேன் .


அவள் மேல் எனக்கு ஆத்திரமாக வந்தது .இருந்தாலும் அவள் மேல் இடித்ததில் என் தவறும் உள்ளது .நான் கவனமாக நடந்து வந்து கொண்டிருந்தால் அவள் மீது இடித்திருக்க மாட்டேன்.


ஆனால் இவளை இப்படியே நமது தெருவில் நடமாட விட்டால் ஒரு நாள் அவள் கண்டிப்பாக நம்மை அசிங்கப்படுத்தாமல் விடமாட்டாள் என்று எண்ணி தெருவில் வசிக்கும் சில பெரியவர்களிடம் அவள் என்னிடம் தவறுதலாக நடக்க முயற்ச்சிப்பது குறித்து புகார் செய்தேன் .ஆனால் அவர்களோ எனது கருத்துக்கு சிறிதும் செவி சாய்க்க வில்லை .நீ தெருவில் கவனமாக நடந்தால் அவள் எப்படி உன்னை தொட முடியும் தவறு உன் மீதுதான் என்று என்னை குற்றம் சாட்டினார்கள் .


நானும் அதன் பின்னர் கவனமாகவே தெருவில் நடக்க ஆரம்பித்தேன் அவளும் தெருவில் வந்து சென்று கொண்டேதான் இருந்தாள்.ஒரு வாரமாக எந்த தொந்தரவும் இல்லை . 


நேற்று மாலை சுமார் 6.45 மணி இருக்கும் .மாலை கருக்கல் நேரம் .அலுவலகத்திலிருந்து களைப்புடன் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தேன் .ஒரு வாரமாக என்னை உரசாமல் இருந்த அவள் மொத்த வெறியையும் அடக்கி வைத்துக்கொண்டு இருந்திருக்கிறாள் . 


திடீரென என் மீது பாய்ந்து என்னை கட்டித் தழுவிக்கொண்டாள்.அப்படியே நடுத்தெருவில் என்னை படுக்க வைத்து அய்யய்யோ இதற்கு மேல் சொல்ல எனக்கு நா கூசுகிறது .


தெருவில் அனைவரும் இதை பார்த்தவுடன் சிரியோ சிரி என்று கை கொட்டி சிரித்தார்கள் .நான் இது நாள் வரையிலும் சுத்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேனல்லவா அதனால் தான் அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி .


எப்படியோ அவளிடம் இருந்து மீண்டு வாயில் வந்தபடியெல்லாம் அவளை திட்டி விட்டு வீடு வந்து சேர்ந்தேன் .வீடு வந்ததும் நன்றாக குளித்துவிட்டு கட்டிலில் போய் சாய்ந்தேன் .இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை .ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் முடிவு செய்து விட்டேன் .அவளை இனி நம் தெருவில் வர விடக்கூடாது .இதற்கு ஒரே தீர்வு தெருவில் பாதாள சாக்கடை அமைப்பதுதான் .என்ன அன்பர்களே திடீரென கதை தடம் மாறியது போல் தெரிகிறதா .நான் இந்த கதையில் வடிவுக்கரசி என குறிப்பிட்டது எங்கள் தெருவில் செல்லும் சாக்கடையைத்தான்.

No comments:

Post a Comment