மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விபத்துக்குள்ளாகி, படுக்கையில் கிடக்கும் 33 வயது மகனுக்கு, அவரது தாய் ஆறு ஆண்டுகளாக சோறு ஊட்டி வருகிறார்.
கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். ஆறு ஆண்டுகளுக்கு முன் வைகையில் குளிக்கச் சென்றார். அப்போது, அவர் அருகில் பாம்பை விரட்டிக் கொண்டு ஒரு கூட்டம் ஓடி வந்தது. இதனால் நிலை தடுமாறி தலை குப்புற தண்ணீரில் விழுந்தார். சற்று நேரத்தில் அவரது கை, கால்கள் செயலற்றுப் போனது. உடன் சென்ற நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.முதுகுத் தண்டுவட நரம்பிலும், கழுத்து எலும்பிலும் அடிபட்ட அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனாலும் பலன் இல்லை. பல மாற்று வைத்திய முறைகளினாலும் பணம் கரைந்ததே தவிர, கை, கால் அசைவுகள் வரவில்லை.
ஜெகதீஷ், ""நானும் மற்றவர்களைப் போல் வேலைக்குச் சென்று, அம்மாவை பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால், என்னுடைய கடமைகளை முடிக்கவே என்னால் முடியவில்லை. அது தான் வருத்தமாக உள்ளது,'' என்கிறார்.
காலைக்கடன் முதல் அத்தனை வேலைக்கும் தன் தாயையே இவர் நம்பியுள்ளார். படுக்கையில் இருந்தாலும் மற்றவர்களை போல் ஜெகதீஷ் உற்சாக மனநிலையில் உள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அவரது தந்தை மாரிச்சாமி விபத்தில் பலியானார். இது, ஜெகதீஷ் குடும்பத்தினரை மேலும் சோகமாக்கியுள்ளது. பிளஸ் 2 படித்துள்ள ஜெகதீஷ், விபத்து நடப்பதற்கு முன், ராணுவத்தில் சேர விரும்பினார்.
உசிலம்பட்டியில் ஊர்காவல் படையிலும் பணியாற்றியுள்ளார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என விரும்பிய அவர், இன்று கால் அசைவுகளின்றி இருப்பதை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.இவருடைய நோயை சவாலாக ஏற்று ஏதாவது மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வந்தால், இவருக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்கும். உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் 98947 48763 என்ற எண்ணில் அழைக்கலாம்.
|
No comments:
Post a Comment