Showing posts with label சம்பவம். Show all posts
Showing posts with label சம்பவம். Show all posts

Tuesday, June 21, 2011

இதயத்தைப் பறி கொடுத்த மாணவி

ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் கொடுத்த போர்ட்டர் மீது ஒரு தலைக் காதல் கொண்ட கல்லூரி மாணவி, வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறேன், ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டதால் அந்த போர்ட்டர் அதிர்ச்சியாகி போலீஸாரிடம் முறையிட்ட கதை திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழைத் தம்பதியின் மகள் ரஞ்சிதா. 19 வயதான இவர்தான் அந்த வீட்டில் முதல் முதலில் பிளஸ்டூ பாஸ் செய்தவர். தற்போது திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

தினசரி மணப்பாறையிலிருந்து ரயில் மூலம் திருச்சி வந்து கல்லூரிக்குப் போய் விட்டு மாலையில் ஊர் திரும்புவார் ரஞ்சிதா. 

அவருக்கு கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த, திருச்சி ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணியாற்றும் ஒருவர், ஒரு நாள் ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுத்தார். இதில் அவர்களுக்குள் நட்பு ஏற்படவே, தினசரி அவர் ரஞ்சிதாவுக்கு துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.

தன் மீது அந்த போர்ட்டருக்கு தனிப் பிரியம் ஏற்பட்டதாக உணர்ந்த அந்தப் பெண், போர்ட்டரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இது போர்ட்டருக்குத் தெரியாது. 

தினசரி அந்த போர்ட்டரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ரஞ்சிதாவால். அவர் ஒரு நாள் வராவிட்டாலும் கூட மனசு ஒரு மாதிரி ஆகி விடுமாம். இந்த நிலையில், ரஞ்சிதா ஏழைப் பெண் என்பதால் அவ்வப்போது பேனா உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுப்பார் அந்த போர்ட்டர். இதை காதல் பரிசாக நினைத்துக் கொண்ட ரஞ்சிதா, போர்ட்டர் மீதான காதலை வலுவாக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் போர்ட்டரைப் பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூற அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நான் உங்களைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். வீட்டை விட்டு வந்து விடுகிறேன். நாம் ஓடிப் போய் விடலாம் என்று கூற போர்ட்டருக்கு பெரும் அதிர்ச்சியாகி விட்டது.

இப்படிச் சொல்லிய அடுத்த நாள் இரவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து போர்ட்டருக்குப் போன் செய்து நான் வந்து விட்டேன் என்று அவர் கூற போர்ட்டர் விரைந்து வந்து தனது நிலையைக் கூறியுள்ளார். நான் ஒருபோதும் உன்னைக் காதலிக்கவில்லை என்று விளக்கியுள்ளார். இதைக் கேட்டதும் ரஞ்சிதா அழ ஆரம்பித்து விட்டார்.

இதைப் பார்த்த மகளிர் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து என்ன ஏது என்று விசாரித்துள்ளனர். போர்ட்டர் நடந்ததை விளக்கிக் கூற ரஞ்சிதாவின் ஒரு தலைக் காதல் குறித்து போலீஸாருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து ரஞ்சிதாவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்து பெற்றோரை வரவழைத்தனர். அவர்களும் அழுதபடி ஓடி வந்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து ரஞ்சிதாவுக்கு போலீஸார் புத்திமதி கூறினர். இதையடுத்து தனது பெற்றோருடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

14 வயது மாணவி கற்பழிப்பு: குமரி அதிகாரிகள் பட்டியல் தயார்-அதிகாரிகள் தலைமறைவு

14 வயது மாணவி பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட குமரி மாவட்ட அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதில் கைது நடவடிக்கை இருக்கும் என்பதால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் தலைமறைவாகி உள்ளனர். 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 14 வயது மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் எர்ணாகுளம் குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேநதிரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. சுமார் 100 பேர் வரை மாணவியை பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசார் பட்டியல் தயாரித்துள்ளனர்.

இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குமரி மாவட்டம் பளுகல் பகுதியைச் சேர்ந்த கான்டிராக்டர் மணிகண்டனும் ஒருவர் ஆவார். அவர் தற்போது கேரள மாநிலம் அலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கேரள தனிப்படை போலீசுக்கு கிடைத்துள்ளது. மாணவியை தான் மட்டும் பலாத்காரம் செய்ததோடு தன்னோடு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் பலருக்கும் மணிகண்டன் சப்ளை செய்துள்ளார்.

ஒரு நாளைக்கு ரூ. 45 ஆயிரம் வீதம் மாணவியின் தந்தை சுதீருக்கு கொடுத்து விட்டு மாணவியை மணிகண்டன் குமரி-கேரள எல்லையான கார்கோணத்தில் அமைந்துள்ள தனது சொகுசு பங்களாவுக்கு அழைத்து வந்துள்ளார். இந்த சொகுசு பங்களாவில் வைத்துதான் முக்கிய அதிகாரிகளு்ம் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த அதிகாரிகள் பட்டியலில் காவல் துறை அதிகாரிகள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணி துறையினரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் மொத்தம் 70 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமரி மாவட்ட அதிகாரிகள் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் 2 நாளில் விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை தனிப்படை போலீசார் அளிக்க உள்ளனர். அதில் இடம் பெற்றுள்ளவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் பலர் தலைமறைவாகிவிட்டனர்.

Monday, June 20, 2011

சந்தேகம் கேட்டதால் ஆசிரியர்கள் மிரட்டல்: 7 பக்கத்தில் கடிதம் எழுதிவிட்டு மாணவர் தற்கொலை

கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவரை ஆசிரியர்கள் திட்டி, மிரட்டியதால், மனமுடைந்த மாணவர், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸாருக்கு தெரியாமல் மாணவன் பிணம் எரிக்கப்பட்ட நிலையில், பள்ளி ஆசிரியர்கள் மிரட்டியது குறித்து, இறந்த மாணவர் எழுதிய ஏழு பக்க கடிதம் சிக்கியுள்ளது. சம்பவம் குறித்து, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம், நிலவாரப்பட்டி இருசாயி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் - விமலா தம்பதியின் இரண்டாவது மகன் சீனிவாசன் (18). இவர், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 கணக்கு பிரிவில் படித்து வந்தார். 

நேற்று முன்தினம் சனிக்கிழமை சீனிவாசன் பெற்றோர், அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வெளியில் சென்றனர். வீட்டில் சீனிவாசன் மட்டும் தனியாக இருந்துள்ளார். மதியம் 2.30 மணிக்கு வீடு திரும்பிய தாய் விமலா, வீடு திறந்து கிடப்பதை கண்டு, உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டு உத்தரத்தில் சேலையில் தூக்கு போட்டு சீனிவாசன் தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், மாலை 5 மணிக்கு நிலவாரப்பட்டி மயானத்தில் மாணவன் சீனிவாசன் உடலை எரித்து விட்டனர். நேற்று, சக மாணவ, மாணவியர் மற்றும் உறவினர்கள், சீனிவாசனின் ஸ்கூல் பேக், பெட்டி ஆகியவற்றை திறந்து பார்த்தபோது, இறக்கும் முன் சீனிவாசன் எழுதிய ஏழு பக்க கடிதம் கிடைத்தது. 

அக்கடிதத்தில், "என் சாவுக்கு, என் பெற்றோரோ, என் குடும்ப உறவினர்களோ காரணம் இல்லை. என் முடிவை எழுதியவர்கள், நான் பயிலும் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். கணித ஆசிரியர் செந்தில், இயற்பியல் ஆசிரியர், வேதியியல் ஆசிரியர், தமிழ் ஐயா ராமலிங்கம் என, எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் மாணவர் எழுதியிருப்பதாவது: நான் 10ம் வகுப்பு வரை, தாசநாயகன்பட்டி அரசு பள்ளியில் படித்து வந்தேன். மேல்நிலைக் கல்வியை பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தேன். அரசு பள்ளி என்றால், அனைவருக்கும் அலட்சியம் தான். நான், 12ம் வகுப்புக்கு சென்று மூன்று நாட்கள் தான் ஆகிறது. எங்கள் கணக்கு ஆசிரியர் நடத்தும் பாடம் எங்களுக்கு புரியாது. இவர் தான் எங்களுக்கு, 11ம் வகுப்புக்கும் கணக்கு பாடம் நடத்தினார். 

அப்போது இருந்தே எங்களுக்கு புரியும்படி மெதுவாக நடத்தவும் என, பல முறை கேட்டு வந்தோம். பல முறை கேட்டும், அவர் சரியாகவே நடத்தவில்லை. கடந்த 16ம் தேதி நடத்திய கணக்கு பாடம் எங்களுக்கு புரியவே இல்லை. கணக்கை புரியும்படி நடத்தும்படி கேட்டதால், என்னை முறைத்துவிட்டு போர்டில் இருப்பதை எழுது என, சொல்லி விட்டு சென்றார். கணக்கு பாடத்தை புரியும்படி, மெதுவாக நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுக்க, வகுப்பு மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினேன். மாலை பள்ளி முடிந்து நண்பன் ஜீவாவும், நானும் வந்து கொண்டிருந்தோம். 

அப்போது, வேதியியல் ஆசிரியர் என்னை அழைத்து, "படிக்க வந்தா, படிக்கிற வேலையை மட்டும் பார். தேவையில்லாத வேலையை பார்க்காதே' என, கோபமாக திட்டினார். "நீ உன் வகுப்பில் எல்லோர் முன்னாடியும், கணக்கு புரியவில்லை என, சொன்னியாமே; என் வகுப்பில் அப்படி செல்லிப் பார்; என்ன நடக்கும் பார்' என, மிரட்டினார். "கணக்கு நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடாதா? எங்கள் வகுப்பில் உள்ள அனைவருக்கும் கணக்கு புரியவில்லை' என, கூறினேன். அடுத்த நாள், 17ம் தேதி மதியம் கம்ப்யூட்டர் ஆசிரியர் என்னை அழைத்து, "கையெழுத்து ரிப்போர்ட் வாங்கி இருக்கியாமே; வகுப்பு ஆசிரியரான என்னிடம் ஏன் சொல்லவில்லை' என, கேட்டார். அப்போது, இயற்பியல் ஆசிரியர், "நீ என்ன பெரிய இவனா? மூடிக்கிட்டு உக்காந்து டெஸ்ட் எழுது' என, திட்டினார். பின்னால் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், "நீ என்ன பெரிய ரவுடியா? இது என்ன காலேஜா? இது அரசு பள்ளி. உன்னை பள்ளியில் சேர்த்து கொண்டதே பெரிசு. இந்த லட்சணத்தில் நீ இப்படி ரவுடித்தனம் பண்ற. உனக்கு புரியவில்லை என்றால், "டிசி' வாங்கிக் கொண்டு உனக்கு பிடித்த வாத்தியார் இருக்கிற பள்ளிக்கு சென்று படி' என்றார். "நான் கையெழுத்து வாங்கியதை, ஹெச்.எம்.,மிடம் கொடுக்கலாமா?' என, கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம் கேட்டேன். ஆனால், அவரோ எல்லா ஆசிரியரிடமும் சொல்லி, திட்டு வாங்கி வைத்து விட்டார். 

மாலை 3.30 மணிக்கு தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு, வீட்டுக்கு வந்து கடிதத்தை எழுதுகிறேன். என் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால், என்னை நினைத்து அப்பா, அம்மா அழக்கூடாது. இனி, மனித பிறவி எனக்கு வேண்டாம் என, வேண்டுகிறேன். அரசுப் பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் மேம்படுத்தவும், சிறப்பான கல்வி அளிக்க வேண்டும் என, கல்வி அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன். என் மரணம் மூலம் அரசு பள்ளியில் சிறு மாற்றம் ஏற்படாதா?, இனி என் மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்க போகிறார்களோ தெரியவில்லை. திறமையான ஆசிரியர்கள் நிறைய பேர், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மேல்நிலை வகுப்புக்கு தகுதியான ஆசிரியர்களை போட வேண்டும். இதற்கு முதலமைச்சர் நிரந்தர தீர்வு காண வேண்டும். இக்கடிதத்தை, சி.இ.ஓ.,விடம் ஒப்படைக்கவும். என மரணத்துக்கு பிறகு சட்டம், தன் கடமையை செய்ய வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த கடித விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார், தற்கொலை செய்து கொண்ட மாணவன் சீனிவாசன் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், மல்லூர் போலீஸில் புகார் செய்ய மாணவனின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது. நேற்று, இரவு 8 மணிக்கு, மகன் மரணத்திற்கு காரணமான, பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சீனிவாசனின் தந்தை சேகர், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரனிடம், சீனிவாசன் எழுதி வைத்திருந்த, 7பக்க கடிதத்தையும், இணைத்து புகார் செய்தார். இது குறித்து போலீஸார் கூறியதாவது: போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மாணவன் சீனிவாசன் உடலை எரித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இறப்பதற்கு முன் சீனிவாசன் எழுதி வைத்த கடித்தை, அரசு தரப்பு வக்கீல்களிடம் காட்டி, அவர்கள் தரும் ஆலேசானைபடி ஆசிரியர்களிடம் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Sunday, June 19, 2011

அவளும், அவள் காதலனும் பேச என் அலுவலகத்தை தான் பயன்படுத்துகின்றனர்;

நான், பி.பி.ஏ., படித்து முடித்தவன்; வயது 28. மொத்த மருந்துகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில், பொறுப்பாளா ராக பணிபுரிகிறேன். நான் பணிபுரியும் அலுவலகத்தில், நான் மட்டும் தனியாக பணிபுரிகிறேன். என் நிறுவனத்தின் மேலிடம் சென்னையில் உள்ளது.

நான் கல்லூரி படிக்கும் நாட்களில், என்னுடன் படித்த பெண்களிடம், அதிகம் பழகாதவன்; ஆகவே, எனக்கு பெண்களிடம் பழகிய அனுபவம் இல்லை. நான், என் பணி நிமித்தமாக, சில மருந்துக் கடைகளுக்கு செல்ல வேண்டும். அப்படி தான், என் அலுவலகத்திற்கு சற்று தொலைவில் உள்ள மருந்துக் கடைக்கு, பணிகள் இல்லாத நேரத்தில் சென்று பேசிக் கொண்டிருப்பேன்; அதன் உரிமையாளரும் எனக்கு நல்ல நண்பர். இதுவரை, நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு பெண்களிடம் எப்போதும் மரியாதை உண்டு. அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கண்டு, வருந்துவேன்.

அந்த மருந்துக் கடையில், ஏப்ரல் மாதம், ஒரு பெண் வேலைக்கு சேர்ந்தாள்; அப்பெண்ணின் வயது 18. ஆரம்பத்தில், அவளிடம் நான் பழகவில்லை; அவளாக வந்து என்னிடம் முதலில் பேசினாள். என்னை, தன் சொந்த அண்ணனாக நினைப்பதாகவும் கூறினாள். நான் யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பதால், என் குணம் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆகையால், அண்ணனாக நான் ஏற்றுக் கொண்டேன் என்று கூறினாள்; நானும் சரி என்று, என் சொந்த தங்கையாக நினைத்து பழகினேன்.

அவள், என்னிடம் பழகிய சில காலங்களில், நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறி, அவரை எனக்கு அறிமுகபடுத்தினாள். நான், அவருடன் நன்றாக பழகினேன். அவர்கள் திருமணம் முடிந்தவுடனும், எப்பவும் நான் அவர்களுடன் தான் இருக்க வேண்டும் என்று இருவரும் கூறினர். அம்மா... நான் ஒரு புற்று நோயாளி என்று அவர்களுக்கு தெரியும். என்னுடன் மிகவும் பாசமாக பழகினர். என்னை அவர்களுடன் வைத்து பார்த்துக் கொள்வதாக கூறினர். நானும், ஒரு பெண் இந்த அளவுக்கு என் மீதும் பாசம் வைத்து பேசுகிறாளே என்று, அவள் மீது அளவு கடந்த அன்பு வைத்தேன்.

மேலும், இருவருக்கும் என்னாலான பண உதவிகளை செய்தேன். எல்லாம் நான் தங்கையாக நினைத்த பெண்ணின் சந்தோஷத்திற்காக. அவளின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. அவளால் பட்டபடிப்பு படிக்க இயலவில்லை என்பதை அறிந்து, தொலை தொடர்பு கல்வி வாயிலாக படிக்க வைத்தேன். இப்போது, முதலாம் ஆண்டு படிக்கிறாள். மே<<லும், சில நேரங்களில் அவளுடைய காதலனும், அவளும் மனம் விட்டு பேச, என் அ<லுவலகத்தை பயன்படுத்தினர்; நான் அதற்கு அனுமதித்தேன். என் மீது பாசமாக உள்ள தங்கை இருக்கிறாள் என்று, என் நாட்கள் சந்தோஷமாக சென்றன.

ஒரு முறை, என் தாய்க்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. அப்போது, என் தங்கையிடம், "என் தாய்க்கு <உடல் நலம் சரி இல்லை. அவரிடம், ஆறுதலாக சில வார்த்தைகள் போனில் பேசு...' என்று கூறினேன். ஏனெனில், என் தாயிடம் நான் ஏற்கனவே எனக்கு இப்படி ஒரு பாசமான தங்கை கிடைத்துள்ளது பற்றி கூறி இருந்தேன். ஆகையால், அவளை என் தாயிடம் பேச வேண்டும் என்று கூறினேன்; அவள் அதை மறுத்து விட்டாள். நான் அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தற்போது, அந்த மருந்துக் கடையில், ஒரு பையன் வேலைக்கு சேர்ந்தான். சில நாட்கள் பழகிய பின், அந்த பையனை தன் புதிய அண்ணனாக வரித்துக் கொண்டாள். அவளுக்கு எதாவது உதவி தேவைப்பட்டால், என்னிடம் நன்றாக பேசுகிறாள்; நானும் செய்வேன். தற்போது பண உதவி செய்கிறேன். ஆனால், மற்ற நேரங்களில் என்னிடம் பழைய மாதிரி பழக மறுக்கிறாள். அவனிடம் அதிக நேரம் பேசுகிறாள்.

என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டாள். அதற்கு நான் காரணம் கேட்டதற்கு, "கடையில் உங்களிடம் பேசினால் மற்றவர்கள் தவறாக நினைத்து கொள்கின்றனர்...' என்று கூறினாள்; எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. அவள் ஒருவரை காதலிக்கிறாள் என்று, அவள் கடையில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், அவள் இப்போது என்னை வெறுப்பவளாக நடந்து கொள்கிறாள். நான், அவளிடம் ஒரு அண்ணனாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன், நான் அலுவலக பிரச்னையில் சற்று சோகமாக இருந்தேன். அப்போது அவள் என்னை, ஏன் என்று கூட கேட்கவில்லை. அந்த பையனிடம் சிரித்து பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அம்மா. அவள் சந்தோஷம் தான் முக்கியம் என்று நான் எதுவும் பேசுவதில்லை.

ஆனால் அவளும், அவள் காதலனும் பேச என் அலுவலகத்தை தான் பயன்படுத்துகின்றனர்; நானும் எதுவும் சொல்வதில்லை. என் தங்கை என்னுடன் பேசாததால் என் மனம் கஷ்டப் படுகிறது அம்மா. என் மனக் கஷ்டத்திற்கு தங்களின் ஆலோசனை அவசியம் வேண்டும். ஒரு பெண்ணின் மனநிலையை என்னால் உணர முடியவில்லை. அவள் உண்மையாக அண்ணனாக என்னுடன் பழகுகிறாளா அல்லது அவர்களின் சுயநலத்திற்கு என்னை பயன்படுத்துகின்றனரா என்று, எனக்கு தெரியவில்லை.

அவள் என்ன செய்தாலும், அவளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டுமா அல்லது அவர்களை விட்டு பிரிந்து விடவா?


நீ மருந்துகள் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தில் பொறுப்பாளராய் பணிபுரியும் இளைஞன். நண்பரின் கடையில் பணி சேர்ந்த ஒருத்தி, உன்னை அண்ணனாக ஸ்வீகரித்துக் கொண்டாள்; அவளை நீ தங்கையாக ஸ்வீகரித்துக் கொண்டாய். தொடர்ந்து அவளுக்கு பலவிதங்களில் உதவி செய்தாய். அவளும், அவளுடைய காதலனும் உன்னுடைய பணி இடத்தில் சந்தித்து பேச உதவினாய். தற்சமயம், புதிதாக மருந்துக் கடையில் பணி சேர்ந்த இளைஞனை, அண்ணன் என்று கூப்பிடுகிறாள். தொடர்ந்து உன்னிடம் உதவிகள் பெற்று வந்தாலும், உன்னை உதாசீனப்படுத்து கிறாள். அடுத்து என்ன செய்வது என்று கேட்டிருக்கிறாய்.

உன்னுடைய நான்கு பக்க கடிதத்தில் போகிற போக்கில், "நான் புற்று நோயாளி...' என்றிருக்கிறாய். உண்மையில், நீ புற்றுநோயால் பாதிக்கபட்டவனா அல்லது மனநல ஆலோசகரின் இரக்கத்தைப் பெற பொய் சொல்லி இருக்கிறாயா? உனக்கு புற்றுநோய் இருப்பது உண்மையானால், நீ எவ்வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாய், அதற்கு என்ன வகை சிகிச்சைகள், எந்த மருந்துவ மனையில் மேற் கொண்டு வருகிறாய், உனக்கு எத்தனை ஆண்டுகளாக புற்றுநோய் இருக்கிறது என்ற விவரங்களை தெரிவித்திருப்பாயே... நீ செயின் ஸ்மோக்கரா, பான் பராக் போடுபவனா தெரியவில்லையே.

நண்பரின் மருத்துக் கடைக்கு வேலைக்கு வந்த பெண், உன்னையும், உன்னுடைய குணாதிசயத்தையும் நோட்டமிட்டு இருக்கிறாள். உன்னிடம் பணம் இருக்கிறது, ஆனால், நீ காதலுக்கு பயன்பட மாட்டாய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள். அவளோ பரம ஏழை. "அண்ணன், அண்ணன்...' என்றழைத்து, உன்னிடம் பண உதவி பெற்றிருக்கிறாள். தொலைதூர கல்வி செலவை செய்ய வைத்திருக்கிறாள். உச்சக்கட்டமாக காதல் செய்ய உன் அ<லுவலக இடத்தை பயன்படுத்தி இருக்கிறாள்.
நீ அவளை உண்மையில் தங்கையாக நினைக்கவில்லை. ரகசியமாக உனக்கு அவள் மேல் காதல் அல்லது காமம் உண்டு. உன் கூச்ச சுபாவம் வாய் விட்டு சொல்ல தயங்குகிறது.
உண்மையில், நீ அவளை தங்கையாக நினைத்திருந்தால், அவர்கள் காதல் செய்ய அலுவலகத்தை கொடுத்திருக்க மாட்டாய். அதற்கு பதிலாக, "திருமணமாகும் வரை தள்ளி நில்லுங்கள்; எல்லை மீறாதீர்கள்...' என அறிவுரை கூறி, அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பாய்.

உன்னுடைய அம்மாவுக்கு, சம்பிரதாயத்துக்கு கூட தொலைபேசியில் ஆறுதல் சொல்ல விரும்பாத அந்தப் பெண், மகா கெட்டிக்காரி. அன்பு வார்த்தைகளுக்கு பண்டமாற்றாய் பணம் விரும்புகிறாள் அந்த பெண்.

உனக்கு, அவளின் தங்கை நாடகம் தெரிந்து விட்டது. இனி, உதவ யோசிப்பாய். அடுத்து பணமுள்ள ஒரு இளிச்சவாயன் வந்து விட்டான். அவனை, அண்ணன் என்றழைத்து பணம் கறப்போம் என்றிருக்கிறாள் உன் போலி தங்கை.

இன்னொருவனை அண்ணன் என்று அவள் கூப்பிடுவதில் உனக்கேன் பொறாமை கொப்பளிக்கிறது? ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு காதலன் தான் இருக்க வேண்டும். ஆயிரம் உடன் பிறவா அண்ணன்கள் இருக்கலாம் என்ற சகிப்புத் தன்மை உனக்கேன் வரவில்லை?

உலகில் உடன்பிறந்தோரை தவிர , வேறு யாரையும் மனித மனம் அண்ணன் - தங்கையாக பாவிக்காது. அப்படி பாவித்தால், அது சுயநலம் கூடிய வெளிவேஷம்.
கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களை, "பாய் பிரண்ட்' என்ற போர்வையில், சகல விதங்களிலும் சுரண்டிவிட்டு, படிப்பு முடிந்தபின், "டாட்டா' காண்பித்து விட்டு போய் விடுகின்றனர் பெண்கள். சித்தப்பா பையன் அல்லது பெரியப்பா பையன் என வெளியில் உறவைக் காட்டிக் கொண்டே, உள்ளுக்குள் அந்த ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர் சில பெண்கள். மகளுடன் படிக்கும், டீன்-ஏஜ் பெண்களை மகள் என்று அழைத்துக் கொண்டே எல்லை மீறுகின்றனர் சில அப்பா கிழங்கள்.

உலகம் ஒரு நாடக மேடை; நாம் அதில் நடிகர்கள். புரிகிறதா உன்னுடைய விஷயத்தில் நீயும் நடித்திருக்கிறாய், அவளும் நடித்திருக்கிறாள். மன்னிக்கப்பட வேண்டியது அவள்தான். அவளுக்கு வயது 18, உனக்கு 28. இந்த நாடகத்துக்கு முதல் நாளே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும் நீ. 

இனி, என்ன செய்ய வேண்டும் என்கிறாயா?

அவளை தங்கை என கூப்பிடாதே. அண்ணன் என உன்னை அழைக்க அனுமதிக்காதே. அவளிடமிருந்து விலகி நில். வலிய வந்து பேசினால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல். மிகவும் தொந்தரவு கொடுத்தால், "நம் உறவை பிறர் சந்தேகிக்கின்றனர்; என்னுடன் அதிகம் பேசாதே...' என்று சொல்.
புற்றுநோய் இப்போது குணப்படுத்தக் கூடிய நோய்தான். தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் குணமாகும். பின், உனக்கேற்ற பெண்ணாய் பார்த்து மணமுடித்து, வாழ்க்கையில் செட்டில் ஆகு.
முடிந்தால் அலுவலகத்தின் வேறொரு கிளைக்கு நீ மாறு. நிஜ அண்ணன் - தங்கைகள் மலையாடுகள் போல முட்டி மோதிக் கொள் கின்றனர். எனக்கு தெரிந்த குடும்பத்தில் பேராசைக்கார அண்ணனின் மீது, நான்கு தங்கைகள் சிவில் வழக்கு போட்டு, "நீயா, நானா என்று ஒருகை பார்த்து விடுவோம்...' என, போராடிக் கொண்டிருக் கின்றனர்.

பணம் சார்ந்த உலகில் நட்பாவது, பாசமாவது? மனித உறவுகளை பணம், புகழ், பதவி, அதிகாரம் விழுங்கி ஏப்பமிட்டு நீண்ட நாட்கள் ஆகின்றன

Saturday, June 18, 2011

என்னங்க இது... சகுனமே சரியில்லை

என் நண்பரின் மகளுக்கு, உற்றார் உறவினர் முன்னிலை யில், ஒரு கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாள் நட்சத்திரம் குறித்து, பத்திரிகை எழுதி, தட்டில் வைத்து, சம்பந்திகள் இருவரும் தட்டுக்களை மாற்றிக் கொள்ளும்போது, மின்வெட்டு ஏற்பட்டு, கோவிலே இருளில் மூழ்கிப் போனது.

நண்பரோ, "என்னங்க இது... சகுனமே சரியில்லை. ஆண்டவனே இந்த சம்பந்தத்தைத் தடுக்கிற மாதிரி இருக்கே! இதையும் மீறி, இந்தப் பெண்ணை மருமகளா கொண்டு வந்தா குடும்பம் விளங்குமா?' என்று தரகரின் காதில் கிசுகிசுக்க, அது, பெண்ணின் தகப்பனாருக்கு எட்டியது.

அவரோ, "இந்த மின் வெட்டுங்கறது நானோ, நீங்களோ செய்யலீங்க சம்பந்தி. மின் பற்றாக்குறையால், நாளொன்றுக்கு ரெண்டு, மூணு முறை இந்த மின்வெட்டை அரசாங்கம் நிகழ்த்துது. வெற்றிலைப் பாக்குத் தட்டை மாத்தறப்ப நிகழ்ந்த மின் வெட்டுங்கறது, ஏதோ காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதைதான். நீங்க உங்கப் பையனோட வாழ்க்கையைப் பார்க்கறப்ப, நான் உங்களை விட, என் பெண்ணோட வாழ்க்கையைப் பார்ப்பேன்ல... என்னைப் பொறுத்தவரையில், மின் வெட்டுங்கறது சமுதாய நிகழ்வு தானே ஒழிய, அது, அபசகுனம் இல்லை. 

வேணும்னா ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டைப் பத்த வெச்சு, அதன் வெளிச்சத்துல தட்டை மாத்திக்கலாமே...' என்று விளக்கம் சொல்ல, நண்பரது அறியாமை நீங்கி, பகுத்தறிவு வெளிச்சம் வந்ததும், அந்த விழா மீண்டும் களை கட்டியது.

Sunday, June 12, 2011

33 வயது மகனுக்கு படுக்கையில் சோறு ஊட்டும் தாய் : 6 ஆண்டுகளாக தீராத ஒரு மருத்துவ போராட்டம்



மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விபத்துக்குள்ளாகி, படுக்கையில் கிடக்கும் 33 வயது மகனுக்கு, அவரது தாய் ஆறு ஆண்டுகளாக சோறு ஊட்டி வருகிறார்.


கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். ஆறு ஆண்டுகளுக்கு முன் வைகையில் குளிக்கச் சென்றார். அப்போது, அவர் அருகில் பாம்பை விரட்டிக் கொண்டு ஒரு கூட்டம் ஓடி வந்தது. இதனால் நிலை தடுமாறி தலை குப்புற தண்ணீரில் விழுந்தார். சற்று நேரத்தில் அவரது கை, கால்கள் செயலற்றுப் போனது. உடன் சென்ற நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.முதுகுத் தண்டுவட நரம்பிலும், கழுத்து எலும்பிலும் அடிபட்ட அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனாலும் பலன் இல்லை. பல மாற்று வைத்திய முறைகளினாலும் பணம் கரைந்ததே தவிர, கை, கால் அசைவுகள் வரவில்லை.

ஜெகதீஷ், ""நானும் மற்றவர்களைப் போல் வேலைக்குச் சென்று, அம்மாவை பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால், என்னுடைய கடமைகளை முடிக்கவே என்னால் முடியவில்லை. அது தான் வருத்தமாக உள்ளது,'' என்கிறார்.


காலைக்கடன் முதல் அத்தனை வேலைக்கும் தன் தாயையே இவர் நம்பியுள்ளார். படுக்கையில் இருந்தாலும் மற்றவர்களை போல் ஜெகதீஷ் உற்சாக மனநிலையில் உள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அவரது தந்தை மாரிச்சாமி விபத்தில் பலியானார். இது, ஜெகதீஷ் குடும்பத்தினரை மேலும் சோகமாக்கியுள்ளது. பிளஸ் 2 படித்துள்ள ஜெகதீஷ், விபத்து நடப்பதற்கு முன், ராணுவத்தில் சேர விரும்பினார்.


உசிலம்பட்டியில் ஊர்காவல் படையிலும் பணியாற்றியுள்ளார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என விரும்பிய அவர், இன்று கால் அசைவுகளின்றி இருப்பதை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.இவருடைய நோயை சவாலாக ஏற்று ஏதாவது மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வந்தால், இவருக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்கும். உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் 98947 48763 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Friday, June 10, 2011

காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன்

காதல் மனைவியின் இரண்டாவது திருமண வரவேற்பில் கலந்து கொண்ட முதல் கணவனின் கண்களை பெண்ணின் அண்ணன் கைகளால் தோண்டி எடுத்த கொடூரச் செயல் கர்நாடகத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியாவைச் சேர்ந்தவர் ரகு (24), ஜிம் இன்ஸ்ட்ரக்டர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுஷாவை (23) காதலித்தார். ரகுவிடம் வசதியில்லை என்ற காரணத்தால் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள அனுஷா வீட்டில் மறுத்தனர். இந்நிலையில் ரகுவும், அனுஷாவும் வீட்டைவிட்டு ஓடிப்போய் தர்மஸ்தலாவில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஊர் திரும்பியவுடன் அனுஷா குடும்பத்தார் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். ரகுவையும் நைய்யப் புடைத்தனர். அனுஷாவுடன் சேர ரகு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. ஒரு முறை 30 பேர் கொண்ட கும்பல் அவரைக் கொலை செய்ய முயன்றது. ஆனால் ரகு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இனியும் அனுஷாவுடன் சேர்வோம் என்ற நம்பிக்கையை இழந்த ரகு தனது தாயுடன் பெங்களூருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுஷா வீட்டில் உள்ளவர்கள் ரகுவை செல்போனில் தொடர்பு கொண்டனர். அனுஷாவுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும், கடைசியாக ஒரு முறை வந்த பார்க்குமாறும் நல்லவிதமாக பேசியுள்ளனர்.

இதை நம்பி ரகு தனது நண்பர்கள் ராமு, நிதேஷ், கிஷோர் ஆகியோருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணத்தில் கலந்து கொள்ள சென்னபட்டனா சென்றார். அவர்கள் புது மணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

பின்னர் தான் தங்களுக்கு வலைலவிரிக்கப்பட்டதையே அவர்கள் உணர்ந்தனர். அந்த 4 பேரையும் அனுஷா அண்ணன் அன்ஜன் கௌடாவின் ஆட்கள் தாக்கினர். ரகுவையும், ராமுவையும் ஆட்டோவில் ஏற்றி ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு சென்றனர்.

அங்கு அன்ஜன் கௌடா இனி என் தங்கையின் மீது உன் பார்வை படக்கூடாது என்று கூறி ரகுவின் இரண்டு கண்களை பிடுங்கி எடுத்துள்ளார்.

ரகுவை போலீசார் பெங்களூரில் உள்ள நாராயண நேத்ராலயாவில் சேர்த்தனர். அந்த மருத்துவமனையின் சேர்மன் புஜங்செட்டி ரகுவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டார்.

ரகுவின் வலது கண் 100 சதவீதமும், இடது கண் 95 சதவீதமும் சேதமடைந்துவிட்டது. இதனால் அவருக்கு பார்வை

திறன் இருக்காது என்று புஜங்செட்டி தெரிவித்தார்.




ராம்நகர் தனிப்படை அனுஷாவின் மாமாவை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அன்ஜன் உள்ளிட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.