நான், பி.பி.ஏ., படித்து முடித்தவன்; வயது 28. மொத்த மருந்துகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில், பொறுப்பாளா ராக பணிபுரிகிறேன். நான் பணிபுரியும் அலுவலகத்தில், நான் மட்டும் தனியாக பணிபுரிகிறேன். என் நிறுவனத்தின் மேலிடம் சென்னையில் உள்ளது.
நான் கல்லூரி படிக்கும் நாட்களில், என்னுடன் படித்த பெண்களிடம், அதிகம் பழகாதவன்; ஆகவே, எனக்கு பெண்களிடம் பழகிய அனுபவம் இல்லை. நான், என் பணி நிமித்தமாக, சில மருந்துக் கடைகளுக்கு செல்ல வேண்டும். அப்படி தான், என் அலுவலகத்திற்கு சற்று தொலைவில் உள்ள மருந்துக் கடைக்கு, பணிகள் இல்லாத நேரத்தில் சென்று பேசிக் கொண்டிருப்பேன்; அதன் உரிமையாளரும் எனக்கு நல்ல நண்பர். இதுவரை, நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு பெண்களிடம் எப்போதும் மரியாதை உண்டு. அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கண்டு, வருந்துவேன்.
அந்த மருந்துக் கடையில், ஏப்ரல் மாதம், ஒரு பெண் வேலைக்கு சேர்ந்தாள்; அப்பெண்ணின் வயது 18. ஆரம்பத்தில், அவளிடம் நான் பழகவில்லை; அவளாக வந்து என்னிடம் முதலில் பேசினாள். என்னை, தன் சொந்த அண்ணனாக நினைப்பதாகவும் கூறினாள். நான் யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பதால், என் குணம் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆகையால், அண்ணனாக நான் ஏற்றுக் கொண்டேன் என்று கூறினாள்; நானும் சரி என்று, என் சொந்த தங்கையாக நினைத்து பழகினேன்.
அவள், என்னிடம் பழகிய சில காலங்களில், நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறி, அவரை எனக்கு அறிமுகபடுத்தினாள். நான், அவருடன் நன்றாக பழகினேன். அவர்கள் திருமணம் முடிந்தவுடனும், எப்பவும் நான் அவர்களுடன் தான் இருக்க வேண்டும் என்று இருவரும் கூறினர். அம்மா... நான் ஒரு புற்று நோயாளி என்று அவர்களுக்கு தெரியும். என்னுடன் மிகவும் பாசமாக பழகினர். என்னை அவர்களுடன் வைத்து பார்த்துக் கொள்வதாக கூறினர். நானும், ஒரு பெண் இந்த அளவுக்கு என் மீதும் பாசம் வைத்து பேசுகிறாளே என்று, அவள் மீது அளவு கடந்த அன்பு வைத்தேன்.
மேலும், இருவருக்கும் என்னாலான பண உதவிகளை செய்தேன். எல்லாம் நான் தங்கையாக நினைத்த பெண்ணின் சந்தோஷத்திற்காக. அவளின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. அவளால் பட்டபடிப்பு படிக்க இயலவில்லை என்பதை அறிந்து, தொலை தொடர்பு கல்வி வாயிலாக படிக்க வைத்தேன். இப்போது, முதலாம் ஆண்டு படிக்கிறாள். மே<<லும், சில நேரங்களில் அவளுடைய காதலனும், அவளும் மனம் விட்டு பேச, என் அ<லுவலகத்தை பயன்படுத்தினர்; நான் அதற்கு அனுமதித்தேன். என் மீது பாசமாக உள்ள தங்கை இருக்கிறாள் என்று, என் நாட்கள் சந்தோஷமாக சென்றன.
ஒரு முறை, என் தாய்க்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. அப்போது, என் தங்கையிடம், "என் தாய்க்கு <உடல் நலம் சரி இல்லை. அவரிடம், ஆறுதலாக சில வார்த்தைகள் போனில் பேசு...' என்று கூறினேன். ஏனெனில், என் தாயிடம் நான் ஏற்கனவே எனக்கு இப்படி ஒரு பாசமான தங்கை கிடைத்துள்ளது பற்றி கூறி இருந்தேன். ஆகையால், அவளை என் தாயிடம் பேச வேண்டும் என்று கூறினேன்; அவள் அதை மறுத்து விட்டாள். நான் அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போது, அந்த மருந்துக் கடையில், ஒரு பையன் வேலைக்கு சேர்ந்தான். சில நாட்கள் பழகிய பின், அந்த பையனை தன் புதிய அண்ணனாக வரித்துக் கொண்டாள். அவளுக்கு எதாவது உதவி தேவைப்பட்டால், என்னிடம் நன்றாக பேசுகிறாள்; நானும் செய்வேன். தற்போது பண உதவி செய்கிறேன். ஆனால், மற்ற நேரங்களில் என்னிடம் பழைய மாதிரி பழக மறுக்கிறாள். அவனிடம் அதிக நேரம் பேசுகிறாள்.
என்னுடன் பேசுவதை குறைத்துக் கொண்டாள். அதற்கு நான் காரணம் கேட்டதற்கு, "கடையில் உங்களிடம் பேசினால் மற்றவர்கள் தவறாக நினைத்து கொள்கின்றனர்...' என்று கூறினாள்; எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. அவள் ஒருவரை காதலிக்கிறாள் என்று, அவள் கடையில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால், அவள் இப்போது என்னை வெறுப்பவளாக நடந்து கொள்கிறாள். நான், அவளிடம் ஒரு அண்ணனாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன், நான் அலுவலக பிரச்னையில் சற்று சோகமாக இருந்தேன். அப்போது அவள் என்னை, ஏன் என்று கூட கேட்கவில்லை. அந்த பையனிடம் சிரித்து பேசிக் கொண்டு தான் இருக்கிறாள். அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அம்மா. அவள் சந்தோஷம் தான் முக்கியம் என்று நான் எதுவும் பேசுவதில்லை.
ஆனால் அவளும், அவள் காதலனும் பேச என் அலுவலகத்தை தான் பயன்படுத்துகின்றனர்; நானும் எதுவும் சொல்வதில்லை. என் தங்கை என்னுடன் பேசாததால் என் மனம் கஷ்டப் படுகிறது அம்மா. என் மனக் கஷ்டத்திற்கு தங்களின் ஆலோசனை அவசியம் வேண்டும். ஒரு பெண்ணின் மனநிலையை என்னால் உணர முடியவில்லை. அவள் உண்மையாக அண்ணனாக என்னுடன் பழகுகிறாளா அல்லது அவர்களின் சுயநலத்திற்கு என்னை பயன்படுத்துகின்றனரா என்று, எனக்கு தெரியவில்லை.
அவள் என்ன செய்தாலும், அவளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டுமா அல்லது அவர்களை விட்டு பிரிந்து விடவா?
நீ மருந்துகள் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்தில் பொறுப்பாளராய் பணிபுரியும் இளைஞன். நண்பரின் கடையில் பணி சேர்ந்த ஒருத்தி, உன்னை அண்ணனாக ஸ்வீகரித்துக் கொண்டாள்; அவளை நீ தங்கையாக ஸ்வீகரித்துக் கொண்டாய். தொடர்ந்து அவளுக்கு பலவிதங்களில் உதவி செய்தாய். அவளும், அவளுடைய காதலனும் உன்னுடைய பணி இடத்தில் சந்தித்து பேச உதவினாய். தற்சமயம், புதிதாக மருந்துக் கடையில் பணி சேர்ந்த இளைஞனை, அண்ணன் என்று கூப்பிடுகிறாள். தொடர்ந்து உன்னிடம் உதவிகள் பெற்று வந்தாலும், உன்னை உதாசீனப்படுத்து கிறாள். அடுத்து என்ன செய்வது என்று கேட்டிருக்கிறாய்.
உன்னுடைய நான்கு பக்க கடிதத்தில் போகிற போக்கில், "நான் புற்று நோயாளி...' என்றிருக்கிறாய். உண்மையில், நீ புற்றுநோயால் பாதிக்கபட்டவனா அல்லது மனநல ஆலோசகரின் இரக்கத்தைப் பெற பொய் சொல்லி இருக்கிறாயா? உனக்கு புற்றுநோய் இருப்பது உண்மையானால், நீ எவ்வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாய், அதற்கு என்ன வகை சிகிச்சைகள், எந்த மருந்துவ மனையில் மேற் கொண்டு வருகிறாய், உனக்கு எத்தனை ஆண்டுகளாக புற்றுநோய் இருக்கிறது என்ற விவரங்களை தெரிவித்திருப்பாயே... நீ செயின் ஸ்மோக்கரா, பான் பராக் போடுபவனா தெரியவில்லையே.
நண்பரின் மருத்துக் கடைக்கு வேலைக்கு வந்த பெண், உன்னையும், உன்னுடைய குணாதிசயத்தையும் நோட்டமிட்டு இருக்கிறாள். உன்னிடம் பணம் இருக்கிறது, ஆனால், நீ காதலுக்கு பயன்பட மாட்டாய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாள். அவளோ பரம ஏழை. "அண்ணன், அண்ணன்...' என்றழைத்து, உன்னிடம் பண உதவி பெற்றிருக்கிறாள். தொலைதூர கல்வி செலவை செய்ய வைத்திருக்கிறாள். உச்சக்கட்டமாக காதல் செய்ய உன் அ<லுவலக இடத்தை பயன்படுத்தி இருக்கிறாள்.
நீ அவளை உண்மையில் தங்கையாக நினைக்கவில்லை. ரகசியமாக உனக்கு அவள் மேல் காதல் அல்லது காமம் உண்டு. உன் கூச்ச சுபாவம் வாய் விட்டு சொல்ல தயங்குகிறது.
உண்மையில், நீ அவளை தங்கையாக நினைத்திருந்தால், அவர்கள் காதல் செய்ய அலுவலகத்தை கொடுத்திருக்க மாட்டாய். அதற்கு பதிலாக, "திருமணமாகும் வரை தள்ளி நில்லுங்கள்; எல்லை மீறாதீர்கள்...' என அறிவுரை கூறி, அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பாய்.
உன்னுடைய அம்மாவுக்கு, சம்பிரதாயத்துக்கு கூட தொலைபேசியில் ஆறுதல் சொல்ல விரும்பாத அந்தப் பெண், மகா கெட்டிக்காரி. அன்பு வார்த்தைகளுக்கு பண்டமாற்றாய் பணம் விரும்புகிறாள் அந்த பெண்.
உனக்கு, அவளின் தங்கை நாடகம் தெரிந்து விட்டது. இனி, உதவ யோசிப்பாய். அடுத்து பணமுள்ள ஒரு இளிச்சவாயன் வந்து விட்டான். அவனை, அண்ணன் என்றழைத்து பணம் கறப்போம் என்றிருக்கிறாள் உன் போலி தங்கை.
இன்னொருவனை அண்ணன் என்று அவள் கூப்பிடுவதில் உனக்கேன் பொறாமை கொப்பளிக்கிறது? ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு காதலன் தான் இருக்க வேண்டும். ஆயிரம் உடன் பிறவா அண்ணன்கள் இருக்கலாம் என்ற சகிப்புத் தன்மை உனக்கேன் வரவில்லை?
உலகில் உடன்பிறந்தோரை தவிர , வேறு யாரையும் மனித மனம் அண்ணன் - தங்கையாக பாவிக்காது. அப்படி பாவித்தால், அது சுயநலம் கூடிய வெளிவேஷம்.
கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களை, "பாய் பிரண்ட்' என்ற போர்வையில், சகல விதங்களிலும் சுரண்டிவிட்டு, படிப்பு முடிந்தபின், "டாட்டா' காண்பித்து விட்டு போய் விடுகின்றனர் பெண்கள். சித்தப்பா பையன் அல்லது பெரியப்பா பையன் என வெளியில் உறவைக் காட்டிக் கொண்டே, உள்ளுக்குள் அந்த ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர் சில பெண்கள். மகளுடன் படிக்கும், டீன்-ஏஜ் பெண்களை மகள் என்று அழைத்துக் கொண்டே எல்லை மீறுகின்றனர் சில அப்பா கிழங்கள்.
உலகம் ஒரு நாடக மேடை; நாம் அதில் நடிகர்கள். புரிகிறதா உன்னுடைய விஷயத்தில் நீயும் நடித்திருக்கிறாய், அவளும் நடித்திருக்கிறாள். மன்னிக்கப்பட வேண்டியது அவள்தான். அவளுக்கு வயது 18, உனக்கு 28. இந்த நாடகத்துக்கு முதல் நாளே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும் நீ.
இனி, என்ன செய்ய வேண்டும் என்கிறாயா?
அவளை தங்கை என கூப்பிடாதே. அண்ணன் என உன்னை அழைக்க அனுமதிக்காதே. அவளிடமிருந்து விலகி நில். வலிய வந்து பேசினால் ஒற்றை வார்த்தையில் பதில் சொல். மிகவும் தொந்தரவு கொடுத்தால், "நம் உறவை பிறர் சந்தேகிக்கின்றனர்; என்னுடன் அதிகம் பேசாதே...' என்று சொல்.
புற்றுநோய் இப்போது குணப்படுத்தக் கூடிய நோய்தான். தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் குணமாகும். பின், உனக்கேற்ற பெண்ணாய் பார்த்து மணமுடித்து, வாழ்க்கையில் செட்டில் ஆகு.
முடிந்தால் அலுவலகத்தின் வேறொரு கிளைக்கு நீ மாறு. நிஜ அண்ணன் - தங்கைகள் மலையாடுகள் போல முட்டி மோதிக் கொள் கின்றனர். எனக்கு தெரிந்த குடும்பத்தில் பேராசைக்கார அண்ணனின் மீது, நான்கு தங்கைகள் சிவில் வழக்கு போட்டு, "நீயா, நானா என்று ஒருகை பார்த்து விடுவோம்...' என, போராடிக் கொண்டிருக் கின்றனர்.
பணம் சார்ந்த உலகில் நட்பாவது, பாசமாவது? மனித உறவுகளை பணம், புகழ், பதவி, அதிகாரம் விழுங்கி ஏப்பமிட்டு நீண்ட நாட்கள் ஆகின்றன
|
No comments:
Post a Comment